Loading

பிறை 4

 

இரவிலும் கூட அந்த காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. பிணவறையிலிருந்து இறந்தவரின் உடல் காணாமல் போனதிலிருந்து மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாக அனைவரும் முடுக்கி விட்டது போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஒருவழியாக, அந்த மருத்துவமனை வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு, பல மணி நேரங்களுக்கு பின்னர், உடலை கடத்திச் சென்ற வாகனத்தை கண்டுபிடித்திருந்தனர் காவலர்கள்.

 

அதனுடன், அந்த வாகனம் சென்ற வழித்தடத்தையும் ஓரளவு கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், இப்போதைய பிரச்சனை என்னவென்றால், அங்கு கடும்மழை பெய்து கொண்டிருந்தது.

 

மேலும், அந்த வாகனம் சென்ற பாதையில் வெள்ள எச்சரிக்கை வேறு விடப்பட்டிருந்ததால், இந்த இரவு நேரத்தில் அங்கு செல்வது ஆபத்து என்று தோன்றியது சர்வஜனனுக்கு.

 

வேறு வழியில்லாததால், அடுத்த நாள் காலை அங்கு செல்வது என்று முடிவு செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், அந்த காவல்நிலையத்திற்கு மழையில் முழுவதுமாக நனைந்தபடி ஒரு பெண் ஓடி வந்தாள்.

 

அவளின் தோற்றமே அவள் பெரும் பதட்டத்தில் இருப்பதாக கூற, சர்வஜனன் அங்கிருந்த பெண் காவலரை அனுப்பி அப்பெண்ணை சமன்படுத்தக் கூறினான்.

 

அந்த பெண் காவலர் கொடுத்த தண்ணீரைக் கூட வாங்காமல், அங்கிருந்த காவலரிடம், “சார் சார், என் புருஷன் என்னை அடிச்சு போட்டுட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க.” என்று கண்ணீர் வடிக்க, அங்கிருந்தவர்களோ அவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்தனர்.

 

அப்போது அங்கு வந்த பழனியப்பன், “அட நீதானம்மா போன மாசம் வந்து உன் புருஷனை காணோம்னு கம்பலைன்ட் பண்ண. அப்பறம் கொஞ்ச நாள்ல உன் புருஷன் கிடைச்சுட்டான்னு வேற சொன்னியே.” என்றார்.

 

“சார், ஆமா சார். காணாம போன கொஞ்ச நாள்லயே கிடைச்சுட்டார் தான். ஆனா, அதுக்கப்பறம் அவரோட பிஹேவியர்ல ரொம்ப மாற்றம் தெரிஞ்சுது. எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது, எப்போவும் சிடுசிடுன்னு இருக்குறதுன்னு ரொம்ப மாறிட்டாரு. இவ்ளோ ஏன், அடிக்கடி உறுமிட்டு மிருகம் மாதிரி தான் இருந்தாரு. நாங்களும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். அப்படியும் ஒன்னும் சரியாகல. அக்கம்பக்கத்துல இருக்கவங்க தர்காக்கு போய் மந்திரிக்க சொல்ல, இன்னைக்கு அங்க போற வழில, என்னை அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டாரு.” என்று கூறி முடித்தாள்.

 

அவள் கூறியதற்கேற்ப, அவளின் நெற்றியில் லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது.

 

“சார் பிளீஸ் சார், அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க. அவரு அவராவே இல்ல. எங்க போனாருன்னும் தெரியல.” என்று அந்த பெண் கதற, சர்வஜனனோ அவள் கூறிய ‘மிருகம் மாதிரி தான் இருந்தாரு’ என்ற வாக்கியத்திலேயே தேங்கி நின்றான்.

 

பழனியப்பனோ, “இங்க பாரும்மா, மழை அடிச்சு ஊத்திட்டு இருக்கு. இந்த நேரத்துல வெளிய போய் தேடவெல்லாம் முடியாது மா.” என்று கூற, அதற்கு அந்த பெண் அழுதே கரைந்தாள்.

 

அதில் சுயத்திற்கு வந்த சர்வஜனன், “பழனி சார், அவங்ககிட்ட கம்ப்லைன்ட் எழுதி வாங்கிக்கோங்க. அண்ட் அவங்க காயத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கொடுங்க.” என்றவன், அப்பெண்ணை நோக்கி திரும்பி, “நாளைக்கு காலைல உங்க ஹஸ்பண்ட்டை தேடச் சொல்றேன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று எதிரிலிருப்பவர் மறுக்க முடியாத குரலில் கூறிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

 

அந்த இரவு முழுவதும், காலையில் பார்த்த காலடித்தடங்களும், சற்று முன்னர் அப்பெண் கூறிய ‘மிருகம் மாதிரி இருந்தாரு’ என்பதுமே அவன் மனதை அலைகளித்துக் கொண்டிருந்தன.

 

தான் ஒருத்தியின் கனவில் வந்து அவளை தொல்லை செய்வதை அறியாமல், இதிலேயே உழல, அவன் உறக்கமும் தொலைந்து போனது.

 

******

 

அடுத்த நாள் காலை, ஒரு குழுவினரை அந்த பெண்ணின் கணவனைத் தேட அனுப்பியவன், தானும் இன்னும் சில காவலர்களுடன், இறந்தவரின் உடலை கடத்திச்சென்ற வாகனத்தின் தடத்தை தொடர்ந்து சென்றான்.

 

முதல் நாள் பெய்த மழையில், அந்த வாகனம் இறுதியாக இருந்ததாக சொல்லப்பட்ட இடம் முற்றிலும் மாறிப்போயிருந்தது.

 

ஆங்காங்கு மரங்கள் கீழே சாய்ந்திருக்க, சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டிருந்தது. சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் கண்களுக்கு நேரே இருப்பதை தேடவே சிரமமாக இருக்கும்போது, அந்த வாகனம் எங்கு சென்றது என்று தெரியாமல் தேடுவது அத்தனை எளிதான காரியம் அல்லவே.

 

ஆயினும் அந்த காவலர்களை ஒவ்வொரு திசையில் தேட அனுப்பியவன் தானும் ஒரு பக்கம் தேடினான். ஒரு மணி நேர தேடுத்தலுக்கு பலன் என்னவோ பூஜ்யம் தான்.

 

இன்னும் ஒரு இடம் மட்டுமே பாக்கியிருக்க, அந்த இடமோ சிறு செடிகளாலும் புதர்களாலும் மண்டிக்கிடந்தது. எதன் வேர் எதில் சிக்கியிருக்கிறது என்று அறிய முடியாத வண்ணம் மொத்தமாக கலைந்திருந்தது.

 

“சார், இதை கிளியர் பண்ணிட்டு தான் ப்ரோஸீட் பண்ண முடியும்.” என்று சரவணன் கூற, “சீக்கிரம் கிளியர் பண்ண சொல்லுங்க.” என்றான் சர்வஜனன்.

 

அந்த நேரத்தில் மற்றொரு குழுவினருக்கு அழைத்தவன், அவர்களின் தேடுதல் வேட்டை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கேட்டான்.

 

“சார், நாங்க தேடிட்டு தான் இருக்கோம். நேத்து பெஞ்ச பேய் மழைல வழியெல்லாம் சகதியாக இருக்கு சார். சோ, தேடுறது கொஞ்சம் டிலே ஆகுது சார்.” என்ற பதிலே கிடைத்தது.

 

“ப்ச், இந்த மழையினால ஒரு காரியமும் நடக்க மாட்டிங்குது.” என்று முணுமுணுத்தவனுக்கு அடுத்த அழைப்பு மேலிடத்திலிருந்து வந்தது.

 

அவர்களுக்கும் தகுந்த காரணத்தை சொல்லி சமாளித்தவன், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டிக்க, அதற்கென காத்திருந்ததை போல அடுத்த அழைப்பு வந்தது.

 

சிறு எரிச்சலில் யார் அழைப்பது என்று பார்க்க, அதில் ரோஹித்தின் பெயரைப் பார்த்ததும் தான், அவனை வரச்சொல்லியது நினைவிற்கு வந்தது.

 

அதில் தன்னையே நொந்து கொண்டு அழைப்பை ஏற்க, மறுபுறத்திலோ, “சர்வா, எங்க இருக்க? நான் இங்க உன் ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். உன்னைக் கேட்டப்போ நீ இங்க இல்லன்னு சொன்னாங்க.” என்றான் ரோஹித்.

 

“நான் இங்க ஸ்பாட்டுக்கு வந்துருக்கேன் ரோஹித்.” என்று சர்வஜனன் கூற, “நான் வேணும்னா அங்க வரவா?” என்றான் ரோஹித்.

 

“இல்லல்ல, இப்போ நான் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டேன். நீ அங்கயே இரு.” என்ற சர்வஜனன் காவல்நிலையம் நோக்கி விரைந்தான்.

 

*****

 

ஓவியம் வரைந்தபடி அப்படியே உறங்கியிருந்த சஞ்சீவனியை உலுக்கி எழுப்பினாள் பிரத்யூஷா.

 

“இங்க எப்போ வந்து தூங்குன சஞ்சு? ஆமா, நேத்து நீ கத்தவே இல்லயா என்ன? நான் இடையில முழிச்ச மாதிரி இல்லையே!” என்றாள் பிரத்யூஷா.

 

அவள் அப்படி கேட்டதும், அந்த கனவு நினைவுக்கு வர, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் சஞ்சீவனி.

 

தான் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் ஏதோ மந்திரித்து விட்டதை போல அமர்ந்திருந்தவளைக் கண்ட பிரத்யூஷாவோ, ‘கண்டிப்பா இவளை இந்த வீகெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயே ஆகணும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

“ஹே சஞ்சு, என்ன இப்படியே உட்கார்ந்து இன்னைக்கு வேலைக்கு மட்டம் போட்டுடலாம்னு நினைப்போ? ஒழுங்கா போய் குளிச்சுட்டு வா.” என்று சமையலறை நோக்கி சென்று விட்டாள் பிரத்யூஷா.

 

சஞ்சீவனியும் தன்மீது கிடக்கும் ஓவியத்தாள்களை எடுத்து வைக்கும்போது தான் அதை கவனித்தாள். அவளின் கைவண்ணத்தில், அவனின் படம்! அச்சில் வார்த்ததை போல அத்தனை அழகாக இருந்தது.

 

அவனின் காந்தக்கண்களிலிருந்து, கழுத்திலிருக்கும் சிறு மச்சம் வரை அத்தனையும் தெளிவாக இருக்க, சஞ்சீவனிக்கே அதைக் கண்டு ஆச்சரியம் தான்.

 

‘அவனை இவ்ளோ கவனிச்சுருக்கேனா?’ என்று அவள் நினைக்கும்போதே சமையலறையிலிருந்து பிரத்யூஷாவின் குரல் கேட்க, வேகவேகமாக அந்த தாள்களை தன் அலமாரியில் ஒளித்து வைத்தாள்.

 

மனதிற்குள், ‘நல்லவேளை, கனவுல வந்த எல்லாத்தையும் வரைஞ்சு வைக்கல!’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

*****

 

காவல்நிலையத்திற்கு வந்த சர்வஜனனை ஆரத்தழுவி வரவேற்றான் ரோஹித்.

 

சர்வஜனனுக்கும் நண்பனைக் கண்டதும் அத்தனை நேரமிருந்த எரிச்சல் மனநிலை மாறியிருந்தது.

 

“எப்படி இருக்க ரோஹித்? ரோஷினி எப்படி இருக்கா? என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துருக்க?” என்று கேள்விகளை அடுக்க, “அட மெதுவா கேளு  சர்வா. நான், உன் தங்கச்சி, அவ வயித்துல இருக்க உன் மருமகன் ஆர் மருமகள் எல்லாரும் நலம். இவ்ளோ சீக்கிரம் கிளம்புனதால தான் வர முடிஞ்சுது. இல்லன்னா உன் தங்கச்சி கிளம்ப விடுவாளா?” என்று சிரித்தபடி கூறினான் ரோஹித்.

 

“ஹ்ம்ம், அவகிட்ட இங்க இப்போ வரவேண்டாம்னு சொல்லிட்டியா? என்ன சொன்னா?” என்று சர்வஜனன் விசாரிக்க, “நீ கொஞ்ச நாள் டெல்லிக்கு போறன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் சர்வா. யப்பா, எவ்ளோ கேள்வி கேட்குறா? போலீஸ்காரனோட தங்கச்சின்னா இப்படியா? அவகிட்ட அப்பாவியா சிக்கிக்கிட்ட என் நிலைமை தான் மோசம் போ.” என்று விளையாட்டாக பேசினான் ரோஹித்.

 

அதைக்கேட்டு சர்வஜனன் சிரிக்க, இருவரையும் காணாததை கண்டது போல அந்த காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை, மருந்துக்கு கூட சிரிக்கவே செய்யாத சர்வஜனன் வாய்விட்டு சிரித்தான் என்றால், அதை வியந்து பார்க்கத்தானே செய்வார்கள். அதை சர்வஜனனும் கவனித்திருந்தான்.

 

“சரி வா நாம பக்கத்துல இருக்க கஃபே போய் பேசலாம்.” என்று சர்வஜனன் கூற, ரோஹித்தும் அவன் பின்னே சென்றான்.

 

சர்வஜனனின் கால்கள் அனிச்சையாக சஷாவிற்குள் நுழைந்தன. அப்போது கூட அவனுக்கு சஞ்சீவனியைப் பற்றிய நினைவு எழவில்லை.

 

ஆனால், அவன் உள்ளே நுழைவதைக் கண்டவளுக்கோ தானாகவே முகம் சிவக்க ஆரம்பித்தது.

 

“இவனுக்கு இங்க வரதுக்கு வேற டைமிங்கே கிடைக்காதோ? இந்நேரம் பார்த்து மத்த மூணு பேரும் மெட்டிரியல்ஸ் வாங்கன்னு வெளிய போயிட்டாங்க.” என்று முணுமுணுத்தவளை சுயத்திற்கு அழைத்து வந்தது, “டூ கஃபே மோச்சா.” என்ற குரல், இம்முறை சர்வஜனனுடன் வந்தவனின் (ரோஹித்) குரல்.

 

அதற்கு தலையசைத்தவளின் கண்களோ சர்வஜனனை தான் தேடின. அதை ஒரு மாதிரி பார்த்த ரோஹித்தோ எதுவும் கூறாமல், அவர்களுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த சர்வஜனனுக்கு எதிர்த்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அப்போது தானே அங்கு நடக்கும் நாடகத்தை பார்க்க இயலும்!

 

தேடியவனை கண்டுகொண்ட மகிழ்ச்சியோ என்னவோ, அவளின் கரங்கள் பரபரவென்று வேலைகளை பார்க்க ஆரம்பித்தன.

 

ரோஹித்தின் பார்வையோ சந்தேகமாக சர்வஜனனை நோக்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் பார்க்கும் வழக்குகளை பற்றி கூற ஆரம்பித்தான்.

 

நண்பர்களுக்கு இடையில் இது வழக்கமான ஒன்றென்பதால், ரோஹித்தும் மற்றவை மறந்து நண்பனின் பேச்சை கவனிக்கலானான்.

 

சர்வஜனன் தனக்கு தோன்றிய அனைத்தையும் கூறி முடித்து ரோஹித்தை பார்க்க, “அப்போ ரெண்டு கேஸுக்கும் சம்பந்தம் இருக்கும்னு. நினைக்குறியா சர்வா?” என்றான் ரோஹித்.

 

“என் இன்ட்யூஷன் சரின்னா, கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. அதுவும் அந்த பொண்ணு சொன்ன ‘மிருகம்’ங்கிற வார்த்தையும் அந்த காலடித்தடமும்… ஏதோ கனெக்ஷன் கண்டிப்பா இருக்கு.” என்று கூறிய சர்வஜனன், தன் அலைபேசியிலிருந்த காலடித்தடத்தின் புகைப்படத்தை திறந்து மேஜையின் மீது வைத்தான்.

 

சில நொடிகள் அதை உற்றுப்பார்த்த ரோஹித்தோ, “இப்போ நீ என்ன சொல்ல வர சர்வா? இது…” என்று இழுக்க, “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று அவர்களின் அருகிலிருந்து குரல் வந்தது.

 

அதில் இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு இவர்களுக்கான பானத்துடன் நின்றிருந்தாள் சஞ்சீவனி.

 

அவளைக் கண்டதும் தான் அவளின் நினைவே எழுந்தது சர்வஜனனுக்கு. அதில் தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருக்க, பதில் பார்வை தர வேண்டியவளோ, பார்வை முழுவதையும் அந்த காலடித்தடத்திலேயே பதித்திருந்தாள்.

 

அங்கு நடக்கும் நாடகத்தை சில நொடிகள் மௌனமாக பார்த்த ரோஹித் அதற்கு மேல் முடியாதவனாக, “க்கும் க்கும்” என்று செறுமி இருவரையும் சுயத்திற்கு அழைத்து வந்தான்.

 

அப்போது சஞ்சீவனிக்கு முதுகில் ஏற்பட்டிருந்த தழும்பில் வலியெடுக்க, ஆவென்று கத்தியிருந்தாள்.

 

திடீரென்று அவள் கத்துவாள் என்று எதிர்பார்க்காத ஆண்கள் இருவரும் முதலில் அதிர, சர்வஜனன் தான் முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்.

 

அவன் கைப்பட்டதும் என்ன மாயமோ மந்திரமோ, அந்த வலி நின்றிருக்க, வலி இல்லையென்றாலும் நடக்கும் நிகழ்வுகளின் தாக்கத்தால் பெண்ணவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

 

“ஈஸி ஈஸி மிஸ். எங்கயும் அடிப்பட்டுருக்கா உங்களுக்கு?” என்று சர்வஜனன் வினவ, அவனிடமிருந்து அப்படி ஒரு தொனியை இதுவரை பார்த்திராத ரோஹித்தே வாயில் கைவைத்து வியப்பை அடக்க வேண்டியிருந்தது.

 

சஞ்சீவனியோ அதை கருத்தில் கொள்ளும் நிலையிலேயே இல்லையே. சூரியனை மறைக்கும் கருமேங்கள் போல, பெரும் குழப்பங்கள் அவளின் மனதை ஆக்கிரமிக்க, ஒருவித தடுமாற்றத்துடனே இருந்தாள்.

 

அவளை கைத்தாங்கலாக பற்றியிருந்த சர்வஜனனும் அவளின் நடுக்கத்தை உணர்ந்து தன் பிடியை அழுத்தமாக்க, அப்போது தான் அவன் கைகளுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள் சஞ்சீவனி.

 

சரியாக அதே சமயம், அந்த கனவும் மனக்கண்ணில் வந்து போக, அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.

 

“சாரி…” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூறியவள், சர்வஜனன் பக்கம் திரும்பி, அவனை நேராக பார்க்காமல், இமையை தாழ்த்தியபடி, “தேங்க்ஸ்…” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அவள் சென்றதும் தன்னிலை அடைந்த சர்வஜனன் நண்பனை பார்க்க, அவனோ ‘என்னடா நடக்குது இங்க? நானும் இங்க தானடா இருக்கேன்.’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சர்வஜனனுக்கு அவனின் பார்வை புரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “நீயும் அது வேர்உல்ஃபா இருக்கும்னு நினைக்குறியா ரோஹித்?” என்று வினவினான்.

 

“நான் நினைக்குறது இருக்கட்டும். நீ ஏதாவது யோசிச்சு வச்சுருப்பியே, அதை சொல்லு!” என்றான் ரோஹித்.

 

“வேர்உல்ஃப் ஒரு அர்பன் லெஜன்ட் மாதிரி தான். அது உண்மையா இருக்கும்னு எனக்கு தோணல. ஆனா, அதையே ஏன் ஆர்ட்டிஃபிஸியலா ட்ரை பண்ணக் கூடாது?” என்றான் சர்வஜனன்.

 

“ம்ம்ம் பாசிபில் தான். இப்போ தான் கண்டதையும் ஆராய்ச்சிங்கிற பேர்ல பண்ணி மனுஷனை கொஞ்சம் கொஞ்சமா மிருகமாக்க ட்ரை பண்றாங்களே!” என்றான் ரோஹித்.

 

“ஹ்ம்ம், இது ரொம்ப டேஞ்சரஸ் கேஸ். சீக்கிரம் அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்கணும்.” என்றான் சர்வஜனன்.

 

“அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்குறது இருக்கட்டும், இங்க என்ன நடக்குது இன்ஸ்பெக்டர் சார்? அந்த பொண்ணு நம்ம வந்ததுலயிருந்து உன்னை தேடுது, நீயென்னனா, அந்த பொண்ணு கத்துனதும் உருகுற!” என்றான்.

 

ஒருமுறை அவள் எப்போதும் நின்றிருக்கும் இடத்தை பார்த்தவன், அது வெறுமையாக இருக்க, ஒரு பெருமூச்சுடன் திரும்பி, “நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்ல. இப்போ இருக்க சூழ்நிலைல இருக்கவும் கூடாது.” என்றவன் மேஜையிலிருந்து கிளம்பி கவுண்டரை நோக்கி நடந்தான்.

 

அங்கு ஸ்டெஃபி நின்றிருக்க, அவளிடம் தொகையை செலுத்திவிட்டு, கண்களில் சஞ்சீவனியை தேடியபடி வெளியே வந்தான்.

 

அங்கு ஓரமாக நின்றிருந்த சஞ்சீவனியை நோக்கி நடந்தவன், “ச…ஞ்…சீ…வ…னி…” என்று பெயருக்கு வலிக்காத வண்ணம் அழைக்க, அத்தனை நேரம் வலியுடன் போராடிக் கொண்டிருந்தவள், பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

 

“ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவன் வினவ, வலி இல்லாததை வியப்பாக உணர்ந்தவள், அதே நிலையில் தலையை மட்டும் அசைத்தாள்.

 

“ஓகே டேக் கேர்.” என்றவன் அவளிடம் விடைபெற, அவளோ ஆச்சரியத்தில் அதே இடத்தில் நின்று விட்டாள்.

 

“அந்த பொண்ணு பேரு சஞ்சீவனியா டா? நல்ல பேர்ல.” என்று ரோஹித் வினவ, அப்போது தான் தனக்கு எப்படி அவளின் பெயர் தெரிந்தது என்ற கேள்வி சர்வஜனனுக்கு எழுந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த கேள்வியே காதில் விழாததை போல சென்று விட்டான்.

 

“ஹ்ம்ம், இவன்கிட்ட ஒரு பதிலை வாங்கிட முடியுமா?” என்று பெருமூச்சு விட்டபடி அவனைத் தொடர்ந்தான் ரோஹித்.

 

இவர்களின் பேச்சு சஞ்சீவனியின் செவியிலும் விழுந்தது.

 

‘ஆமா, எப்படி அவங்களுக்கு என் பேரு தெரியும்?’ என்று அவள் யோசிக்க, ‘உனக்கு எப்படி அவரோட பேரு தெரியுமோ அப்படி தான்!’ என்று பதில் கொடுத்தது அவளின் மனசாட்சி!

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்