Loading

பிறை 5

 

சஷாவில் சர்வஜனனைக் கண்டதுமே சஞ்சீவனிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனுடன், அவனும் தன்னைப் பற்றி நினைத்திருப்பானோ என்ற குறுகுறுப்பும் மனதிற்குள் எழுந்தது.

 

அதே சிந்தனையுடன் அவர்கள் கேட்ட காஃபி மோச்சாவை தயாரித்து அவர்களின் மேஜைக்கு அருகே செல்ல, அப்போது தான் சர்வஜனனின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தைக் கண்டாள்.

 

அனிச்சையாக மனதிற்குள் பல காட்சிகள் விரிய, அவளே அறியாமல் தான், “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று கூறியிருந்தாள்.

 

அதைக் கூறிய மறுநொடி, தானா அப்படி கூறினோம் என்ற சிந்தனைக்குட்பட்டவளிற்கு அதற்கான அவகாசம் கிடைக்காமல் போனது, திடீரென்று ஏற்பட்ட வலியினால்.

 

அவளே மறந்திருந்த முதுகிலிருந்த தழும்பு சுருக்கென்று வலிக்க, அதை தாங்க முடியாமல் கத்திவிட்டாள்.

 

ஆனால், இப்போது வரை அவள் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், சர்வஜனன் அவளை நெருங்கும் சமயம் மட்டும் அந்த வலி எப்படி மாயமாக மறைந்து விடுகிறது என்பது தான்.

 

இப்படி பல குழப்பங்கள் மனதிற்குள் எழ, முதுகுவலியும் சேர்ந்து கொள்ள, அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாக, பிரத்யூஷா வெளியே சென்றிருப்பதால், ஸ்டெஃபியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்.

 

அப்போதும் ஸ்டெஃபி, “சஞ்சுக்கா, பிரத்யூக்கா வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். அவங்களே உங்களை வண்டியில டிராப் பண்ணிடுவாங்கல. இப்போ நீங்களா எப்படி போவீங்க? அதுவும் பார்க்கவே ரொம்ப டையர்ட்டா இருக்கீங்க.” என்று கூற, “இல்ல ஸ்டெஃபி, ஐ கேன் மேனேஜ். பிரத்யூ எப்போ வருவான்னு வேற தெரியல. இப்போ கால் பண்ணா, அவளையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். வெளிய ஆட்டோ பிடிச்சு நான் போயிக்குறேன். இங்க நீங்க ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கீங்க. சோ, கேர்ஃபுல்லா இருங்க.” என்று அறிவுரை வழங்கிவிட்டே சென்றாள்.

 

தான் சொன்னபடியே ஆட்டோவிற்காக காத்திருந்தபோது தான் மீண்டும் சர்வஜனனை சந்திக்க நேர்ந்தது. கூடவே, அவன் பெயர் தனக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியும் எழுந்தது.

 

சரியாக அதே சமயம் ஆட்டோவும் வந்ததால், அந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு பயணத்தை துவங்கினாள்.

 

முதலில் வீட்டிற்கே சென்று விடலாம் என்று எண்ணியவள், முதுகில் வலி சற்று அதிகரிக்க, செல்லும் வழியில் இருக்கும் சிறிய மருத்துவமனையிலேயே இறங்கி விட்டாள்.

 

அங்கு மருத்துவர் கேட்ட, “எப்படி இப்படி அடிப்பட்டுருக்கு?” என்ற கேள்விக்கு, “தெரியல!” என்ற அரிய பதிலைக் கூறி, அவரின் ஒரு மாதிரியான பார்வையை வாங்கிக் கொண்டதெல்லாம் தனி கதை!

 

அங்கிருந்து வெளிவந்தவள், திரும்பவும் ஆட்டோவிற்காக காத்திருக்க வேண்டுமா என்று மலைத்து, பின்னர் சிறிது தூரம் தானே, நடந்தே சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்.

 

அது மதிய நேரம் என்பதால் ஆளரவமின்றி வெறிச்சோடி இருந்தது அவள் செல்லும் பாதை. சில நிமிடங்கள் தான் நடந்திருப்பாள், அதற்குள் கண்கள் இருட்டிக் கொண்டு வர, பொத்தென்று அதே இடத்தில் மயங்கி விழுந்தாள்.

 

*****

 

ரோஹித்தை சஷாவிலிருந்து நேரே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சர்வஜனன். ஒரு அறையை ரோஹித்திற்கு தந்துவிட்டு, தானும் தன் அறைக்கு குளிக்கச் சென்றான்.

 

குளியலறை கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே தன் தாடியை ட்ரிம் செய்து கொண்டிருக்க, சட்டென்று அவன் முகம் மறைந்து அவள் முகம் கண்ணாடியில் தெரிய, அவன் கைகளோ அந்தரத்தில் மிதந்தன.

 

ஒரேயொரு நொடி அந்த காட்சிப்பிழையில் மயங்கியவன், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டான்.

 

‘இவ்ளோ நாள் ஸ்டெடியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் தடுமாறுற?’ என்று தன்னையே திட்டிக்கொண்டு, அவள் நினைவை முயன்று ஒதுக்கினான் சர்வஜனன்.

 

அதன்பிறகு எல்லாமே வேகம் தான். எப்போதும் இல்லாத வகையில் சோம்பிய உடலை விரட்டி, தன் பணியை முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளிவந்தான் அவன்.

 

அங்கு ரோஹித் அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன், சமையலறைக்கு சென்று இருவருக்குமான உணவை தயாரிக்க ஆரம்பித்தான்.

 

சிறிது நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்ட ரோஹித், “உஃப் ஒருநாள் ஊர்ல இல்லைன்னா கூட, எல்லாருக்கும் போன்ல அட்டெண்டன்ஸ் போட வேண்டியதா இருக்கு!” என்று அலுத்துக் கொள்ள, “ரோஷினி கிட்ட பேசுனியா?” என்றான் சர்வஜனன்.

 

“உன் தங்கச்சி கிட்ட பேசாமையா? அவளுக்கு தான் ஃபர்ஸ்ட் காலே! இதுல மேடமுக்கு நான் ரீச்சானவுடனே கால் பண்ணலன்னு கோபம் வேற! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் எது ஒத்துப்போகுதோ இல்லையோ, இந்த கோபம் மட்டும் நல்லா ஒத்துப்போகுது!” என்றான் ரோஹித்.

 

 

அதன்பின்னர், சாதாரணமாக அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது. இருவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “சர்வா, இனி என்ன ஸ்டெப் எடுக்கப்போற?” என்று வினவினான் ரோஹித்.

 

“அந்த பொண்ணோட ஹஸ்பண்டை தேடுறதை தீவிரப்படுத்தணும். அவரு கிடைச்சுட்டா, மேபி இந்த கேஸ்லயும் பிரேக்த்ரூ கிடைக்கும். மீன்வைல், அந்த பாடியையும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணனும். பட் என்னோட இன்டியூஷன் படி, அந்த பாடி இனிமே கிடைக்குறது கஷ்டம் தான். ஹ்ம்ம், லெட்ஸ் ஸீ…” என்றான் சர்வஜனன்.

 

“இது லாங் பிராசஸா இருக்கும் போலயே சர்வா. அதுவரை உன்னோட ஹையர் அஃபிஸியல்ஸ் சும்மா இருப்பாங்களா என்ன? அவங்க சும்மா இருந்தாலும், மீடியா, புதுசா முளைச்ச யூட்யூப் சேனல்ஸ் – இவங்க சும்மா இருப்பாங்களா என்ன? ஏற்கனவே, ‘பாடியை காணோம்’னு அவங்க இஷ்டத்துக்கு கதையளந்துட்டு இருக்காங்க.” என்றான் ரோஹித்.

 

“ம்ம்ம், இதைப் பத்தி ஹையர் அஃபிஸியல்ஸுக்கு முதல்ல ரிப்போர்ட் பண்ணனும். அவங்க புரிஞ்சுகிட்டா சரி. இல்லன்னா, ஸ்பீட்டா கேஸை சால்வ் பண்ற யாரையாவது கொண்டு வந்து முடிச்சுக்கட்டும். அது அவங்க இஷ்டம். அப்பறம் அந்த மீடியா, யூட்யூப் சேனல்ஸ் எல்லாம்… ஐ டோன்ட் கேர் அபவுட் தி **** தே ஸ்ப்ரெட்.” என்று அழுத்தமாக கூறியவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட, ‘இவன் என்ன டிசைன்’ என்று நினைத்துக் கொண்டிருந்தான் ரோஹித்.

 

*****

 

சஞ்சீவனிக்கு லேசாக விழிப்பு தட்ட, மெதுவாக விழிகளை திறந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. தெரியாத இடம், குழப்பமான மனநிலை என்று விழி பிதுங்கியவளுக்கு மேலும் பதட்டத்தை உண்டு செய்தது அவள் இருந்த நிலை.

 

மேலாடை கழட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டிருப்பதை கண்டவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருக்க, இது மீண்டும் ஒரு கனவோ என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டாள் சஞ்சீவனி.

 

தலையை கையால் தாங்கியபடி பரிதாபமாக இருந்தவளின் தோற்றமே அங்கிருந்த பெண்மணிக்கு அவளின் சிந்தனையை தெளிவாக கூற, “பயப்படாத மா. உன் முதுகுல இருக்க காயத்துக்கு மருந்து போட்டு, அது ஒட்டாம இருக்க உன் துணியை நான் தான் கழட்டுனேன்.” என்றார் அவர்.

 

திடீரென்று கேட்ட சத்தம் கூட அந்நிலையில் அவளுக்கு பயத்தை விளைவிக்க, அவளருகே வந்து மெதுவாக அவளின் தலையை தடவினார் அந்த வயதான பெண்.

 

சற்று நேர ஆசுவாசத்திற்கு பிறகு சுயத்தை அடைந்த சஞ்சீவனி, அந்த பெண்ணை நோக்கி, “நீங்க… இல்ல நான்… எப்படி இங்க வந்தேன்?” என்று தெளிவற்ற குரலில் வினவினாள்.

 

“மெயின் ரோட்டுல நடந்து வரப்போ நீ மயக்கம் போட்டு விழுறதை பார்த்தேன். அதான் எனக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரனை கூப்பிட்டு உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.” என்றார் அவர்.

 

தனக்கு உதவி செய்தவரிடம் நன்றியை கூறியவள், அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவளை தடுத்த அந்த பெரியவர், “எழுந்ததும் உடனே கிளம்புனா, திரும்ப தலை சுத்தும். தொண்டைக்கு இதமா கொஞ்சம் காப்பியை குடிச்சுட்டு போ மா.” என்று கூற, அதை மறுக்க முடியாமல் அந்த பெரியவரின் பின்னே சமையலறைக்கு சென்றாள் சஞ்சீவனி.

 

குளம்பி தயாரிக்கும் அந்த சில மணித்துளிகளிலேயே, அந்த பெரியவரைப் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டாள் சஞ்சீவனி.

 

அவரின் பெயர் பொன்னம்மா. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரை இழந்தவர். பெற்ற பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்க, இவரோ தாய்நாட்டை விட்டு செல்ல விரும்பாதவராக, இதே ஊரிலேயே அருகிலிருக்கும் எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து தன் வாழ்நாளை கழிக்கிறார்.

 

“ஏன் பாட்டி, நீங்க உங்க பசங்க கூட ஃபாரினுக்கு போய் ஜம்முன்னு இருக்குறதை விட்டுட்டு இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க?” என்று அவர் தந்த குளம்பியை வாங்கிக்கொண்டு அவள் வினவ, அவரோ சிரித்தவாறு, “பிறந்த மண்ணை விட்டு போக மனசு இடம் கொடுக்க மாட்டிங்குதே! அதுவுமில்லாம, இங்க எனக்கு இன்னும் சில வேலைகள் இருக்கு.” என்றார்.

 

அவர் கூறியதில் கவனமில்லாமல் அவர் கொடுத்த குளம்பியை ருசி பார்த்தவள், “சூப்பர் டேஸ்ட் பாட்டி. நாங்க கூட டவுன்ல ஒரு காஃபி ஷாப் வச்சுருக்கோம். அடுத்த முறை டவுனுக்கு வரப்போ நீங்க கண்டிப்பா வரணும்.” என்று அழைப்பும் விடுத்தாள்.

 

அதற்கு மையமாக தலையசைத்த பாட்டியோ, “உன் வீடு எங்க இருக்கு? இந்நேரம் போனா, உன் வீட்டுல ஆளுங்க இருப்பாங்களா?” என்று வினவ, அவளும் அக்கேள்வியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, “அச்சோ, என்னைப் பத்தி சொல்லவே இல்ல பாருங்க. என் பேரு சஞ்சீவனி. இங்கயிருந்து ஒரு பத்து நிமிஷ நடையில தான் என் வீடு இருக்கு. எனக்கு அப்பா அம்மா இல்ல. நானும் என் ஃபிரெண்டும் தான் அந்த வீட்டுல இருக்கோம். நான் சொன்னேன்ல, அந்த கஃபே கூட நானும் அவளும் சேர்ந்து பார்த்துக்குறோம்.” என்று தன்னைப் பற்றி அனைத்தையும் அந்த பாட்டியிடம் ஒப்பித்தாள்.

 

“ஓஹோ, ஆமா உன் பிறந்தநாள் என்னைக்கு?” என்று பொன்னம்மா வினவ, அப்போது தான் சற்று சுதாரித்த சஞ்சீவனி, “அது… அது எனக்கு தெரியல பாட்டி. அனாதை ஆசிரமத்துல தான வளர்ந்தேன். அவங்களுக்கே நான் பிறந்த தேதி எதுவும் தெரியாதப்போ, எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

 

ஆனால், சஞ்சீவனிக்கு தேதி தெரிந்தே இருந்தது. அவளை கண்டெடுக்கும்போதே அவளுடன் இருந்த சிறு குறிப்பையும் சேர்த்தே எடுத்திருந்தனர். அதில் அவளின் பெயர், பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் என அனைத்தும் இருக்க, அதை அவள் புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் அந்த ஆசிரமத்தின் நிர்வாகி அவளிடம் பகிர்ந்திருந்தார்.

 

அதைக் கேள்விப்பட்டதும் ஏகப்பட்ட கேள்விகள் மனதில் எழுந்தாலும், அவற்றை எல்லாம் தேவையற்றவை என்று மனதின் அடியாழத்தில் புதைத்திருந்தாள்.

 

அதே யோசனையில் இருந்தவளை கலைத்த பொன்னம்மா, ஏதோ வினவ, இனிமேல் அங்கிருக்க வேண்டாம் என்று எண்ணியவளாக, “பாட்டி, என் ஃபிரெண்டு வர நேரமாச்சு. சாவியும் என்கிட்ட இருக்கு. சோ, நான் கிளம்புறேன்.” என்று வேகவேகமாக கிளம்ப எத்தனித்தாள்.

 

அவள் எதிர்பார்க்காத சமயம், அவளின் கையை இறுக்க பற்றிய பொன்னம்மா, “உன் பிறந்தநாள் ஃபிப்ரவரி பத்தொன்பதாம் தேதி. உன் ராசி கும்பம், உன் நட்சத்திரம் சதயம். நீ எப்படி பிறந்த தெரியுமா? இறந்துபோன உன் அம்மா வயித்தை வெட்டி உன்னை வெளிய எடுத்தாங்க.” என்று கூற, சஞ்சீவனியோ அதிர்ச்சியில் சிலையாகவே மாறிவிட்டாளோ என்று எண்ணும் அளவிற்கு ஒரு அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள்.

 

அவள் உடல் அசையவில்லை என்றாலும் மனமோ பல மண்டலங்களை நொடியினில் கடந்து விடும் வேகத்தில், பல நினைவுக் குவியல்களால் ஆட்கொள்ளப்பட்டாள்.

 

அந்த சமயம், அவளின் முதுகில் உள்ள தழும்பு பொன்னிற வெளிச்சத்தை கக்க, லேசான வலியும் உண்டானது.

 

மூளை, மனம், உடல் என அனைத்தும் வெவ்வேறு திசைகளில் இழுபடுவது போலிருக்க, அதன் காரணமாக தலை சுற்றி, கால்கள் தள்ளாடி, அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள்.

 

அவள் சமன்பட சிறிது அவகாசத்தை கொடுத்தவராக தள்ளி நின்ற பொன்னம்மா, சில நிமிடங்கள் கழித்து அவளிடம் தண்ணீர் குவளையை நீட்டினார்.

 

அதை வாங்க தயங்கிய சஞ்சீவனியை நோக்கி லேசான புன்னகையை சிந்திய பொன்னம்மா, “பயப்படாத சஞ்சீவனி. அம்மா வயித்துலயிருந்து என் கையால முதன்முதலா தூக்குன பிள்ளையை நான் எதுவும் செஞ்சுட மாட்டேன்.” என்று கூற, அடுத்த அதிர்ச்சி அவளுக்கு.

 

அப்போதும் தண்ணீரை வாங்காமல், “நீங்க… நீங்க..?” என்று அவள் வார்த்தைகள் வராமல் திணற, “முதல்ல தண்ணீரை குடி. நீ யாரு, உன் பிறப்புக்கான நோக்கம் என்னன்னு எல்லாத்தையும் சொல்லத்தான் நான் இருக்கேன், இந்த உசுரை கையில பிடிச்சுக்கிட்டு.” என்றார்.

 

இத்தனை வருடங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த தன்னைச் சுற்றி இப்போது ஏதோ மாயவலை பின்னப்படுவது போலிருந்தது சஞ்சீவனிக்கு. பொன்னம்மா பாட்டி அவளிடம் எதையோ பெரிதாக சொல்லப் போகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து போனது அவளுக்கு. மெல்ல மனதை அதற்கு தயார்படுத்தியவள், இம்முறை அவர் நீட்டிய குவளையையும் வாங்கிக் கொண்டாள்.

 

பொன்னம்மா ஒரு பெருமூச்சு விட்டவராக, “நீ ஒரு வேடகுலத்தை சேர்ந்தவ.” என்று கூற, “ஹண்டரா?” என்று புருவம் சுருக்கினாள் சஞ்சீவனி.

 

“ஹ்ம்ம், சாதாரண ஹண்டர் இல்ல, ஓநாய் மனிதர்களை வேட்டையாடும் வேர்உல்ஃப் ஹண்டர்!” என்று அவர் கூற, இம்முறை தலையோடு உடலும் சுற்ற கீழே விழுந்தாள் சஞ்சீவனி.

 

*****

 

“பாஸ், போலீஸோட விசாரணை எந்தளவு இருக்குன்னு ஊருக்குள்ள விசாரிக்கிறப்போ, நாங்க வேறொன்னை கவனிச்சோம்.” என்று அலைபேசியில் மறுமுனையிலிருந்து பேசியவன் விஷயத்தை சொல்ல தயங்க, “லுக், எனக்கு இப்படி பார்ட் பார்ட்டா கதை மாதிரி கேட்குற அளவுக்கு பொறுமையும் இல்ல, டைமும் இல்ல. சோ, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி!” என்று கர்ஜித்தான் அந்த பாஸ்.

 

“அது வந்து பாஸ்… நாங்க வழியில… ஹண்ட்ரை பார்த்தோம்…” என்று அவன் கூற, “வாட் ஹண்டரா?” என்று வினவினான் பாஸ்.

 

பாஸின் குரல் தன்னை நம்பாததை போலிருக்க, தன்னை நிரூபிக்க வேண்டி, “ஆமா பாஸ், அவங்க முதுகுல ஹண்டருக்கான டேட்டூ கோல்டன் கலர்ல ஒளிர்ந்ததை பார்த்தோம்.” என்றான்.

 

சில மணித்துளிகள் மறுபுறம் அமைதியாக இருக்க, அந்த அமைதியே அவனுக்கு பீதியை கிளப்பியது.

 

“பாஸ்…” என்று பயத்திலேயே அவன் விளிக்க, “க்கும், இவ்ளோ வருஷமா நமக்கு பயந்து ஒளிஞ்சுட்டு இருந்த இனம் இப்போ வெளிய வருதா. ஹாஹா, வரட்டும் வரட்டும், முன்ன எப்படி அவங்களை பயமுறுத்தி ஓடி ஒளிய வச்சோமோ, அதையே திரும்ப செய்ய வேண்டியது தான். இவங்களை அப்பறமா கவனிச்சுக்கலாம். நீங்க நான் சொன்ன வேலையை மட்டும் பாருங்க போதும்!” என்று கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தான் அந்த பாஸ்.

 

என்னதான் அடியாளிடம் அப்படி கூறிவிட்டாலும், உள்ளுக்குள், ‘இவ்ளோ வருஷம் இல்லாம, இப்போ ஏன்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

 

“ஹ்ம்ம், இவங்களுக்கும் சேர்த்து ஸ்கெட்ச் போட்டுட வேண்டியது தான்!” என்று முணுமுணுத்தவனை அடுத்த வேலை அழைக்க, அதை பார்க்கச் சென்றான்.

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்