Loading

நிறம் 18

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு…

 

அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு ஸ்வரூபன் அவர்களது கல்லூரியிலேயே படிக்க, தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷ்யாம் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை அரசறிவியல் பிரிவில் சேர, நண்பனை தொடர்ந்து அகிலும் அதே பிரிவில் சேர்ந்து கொண்டான்.

 

தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஷ்யாமை அந்த கல்லூரியின் பெண்கள் கூட்டம் பின்தொடராமல் இருந்தால் தான் அதிசயம். அதிலும், போலீஸ் வேலைக்காக அப்போதே உடலில் கவனம் செலுத்தியதால், அந்த கல்லூரியின் ஹீரோவாகிப் போனான் ஷ்யாம்.

 

அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலும், தேர்வுகளிலும் தான் இருந்தது. ஆனால், அதை கலைக்கும் வண்ணம், அவனை சுற்றி வரும் பெண்களை கண்டு வெறுத்து தான் போனது ஷ்யாமிற்கு.

 

முதலில் சொல்லிப் பார்த்தவன், ‘அதற்கெல்லாம் அடங்குவோமா’ என்று பின்வந்தவர்களை முறைத்தே தள்ளி வைத்தான்.

 

ஒருமுறை, “அடப்பாவி, அந்த பொண்ணு உன்னை பார்க்க வந்துச்சான்னே தெரியாம எதுக்கு டா துரத்துற? ஒருவேளை, என்னைக் கூட பார்க்க வந்துருக்கலாம்ல.” என்று அகில் கேட்டிருக்க, அவனையும் முறைத்த ஷ்யாம், “உன் அத்தை பொண்ணு கிட்ட நீ இப்போ சொன்னதை சொல்லவா?” என்று அவனை அடக்கியிருந்தான்.

 

இப்படி பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் ஹீரோவான ஷ்யாமே ஒருத்தியை ‘யாரு டா இந்த பொண்ணு’ என்று பார்க்க வைத்த பெருமை ஷர்மிளாவையே சேரும்.

 

ஷ்யாம் இறுதி ஆண்டு படிக்கும் வேளையில், அந்த கல்லூரிக்கு படிக்க வந்தவள் தான் ஷர்மிளா. இளங்கலை இதழியல் பிரிவில் சேர்ந்திருந்தாள்.

 

‘ராகிங்’ என்று பெரிய அளவில் இல்லை என்றாலும், ஆங்காங்கே சிறு குழுக்களாக, புதிதாக வந்திருந்தவர்களை இழுத்து வைத்து பேசியபடி இருந்தனர் அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்.

 

அப்படி தான் அகில், ஷ்யாம் மற்றும் அவர்களின் நண்பர்களும் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர். புதிதாக வருபவர்களிடம் பேசி, கேலி கிண்டல் செய்யலாம் என்று கூறிய அகிலை தன் பார்வையால் தடுத்திருந்தான் ஷ்யாம்.

 

“இப்படி சும்மா பார்க்க, எதுக்கு டா இங்க உட்காரணும்?” என்று அகில் முனகிக் கொண்டிருக்க, அவன் பொறுமலை தடுக்க என்றே அங்கு வந்து நின்றாள் ஷர்மிளா.

 

வெள்ளையும், இளநீலமும் கலந்த குர்தியும், காற்றில் ஆடும் போனி டெயிலும், குறும்பு பார்வையை மறைக்க முயன்று தோற்று போன கண்ணாடியும், பார்த்தாலே ஒட்டிக் கொள்ளும் பளிச் சிரிப்பும் என்று நின்றவளை மற்றவர்கள் ஆர்வமாக பார்த்தாலும், ஷ்யாமோ ஒருநொடிக்கும் குறைவான நேரத்தில் அளவிடும் பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

 

ஷர்மிளா அவனின் உதாசீனத்தை கருத்தில் கொள்ளாமல், அவனை ரகசியமாக பார்த்தபடி, அனைவருக்கும் ஒரு ‘ஹாய்’யை கூற, மற்றவர்களோ அவளிற்கு பதில் கூறாமல் ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.

 

“என்ன ப்ரோ, ஒன்லி லுக்கிங்கா ராகிங்லாம் இல்லையா?” என்று ஷர்மிளா வினவ, மற்றவர்கள் அவளை ‘பே’வென பார்த்தனர்.

 

அகிலோ, “ஏய் இந்தாம்மா, நீ பாட்டுக்கு வந்த, ராகிங் இல்லையான்னு கேட்குற? உண்மையை சொல்லு, நீ ‘ஆன்டி-ராகிங் கமிட்டி’யை சேர்ந்தவ தான?” என்று கேட்க, “அட என்ன ப்ரோ நீங்க, என்னை பார்த்தா அப்படியா தெரியுது? நானே ஒரு இன்னொசென்ட் பொண்ணு ப்ரோ. நானா வந்து உங்ககிட்ட இன்ட்ரோ கொடுத்தா, நீங்க விட்டுடுவீங்கன்னு ஒரு நம்பிக்கைல வந்தேன்.” என்றவளின் பார்வை அவ்வபோது ஷ்யாமை தழுவியதை அனைவரும் கண்டு கொண்டு தான் இருந்தனர்.

 

“ஆஹான், இன்னொசெண்டு… நீ? நம்பிட்டேன் நம்பிட்டேன்! சரி, இந்த இன்னொசென்ட் பொண்ணோட பேரு என்னவோ?” என்று அகில் வினவ, அங்கு ஒரு குட்டி அறிமுக படலம் நடந்தேறியது.

 

அனைவரிடமும் கை குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டவள், இறுதியாக ஷ்யாமிடம் செல்ல, அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனோ, “அகிலா, அந்த பொண்ணை நிறுத்து டா. பாவம் திட்டு வாங்க போகுது.” என்றான்.

 

“க்கும், யாரு பாவம்னு வெயிட் பண்ணி பார்ப்போம். எனக்கென்னவோ இன்னைக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் ஸீன் இருக்கும்னு தோணுது.” என்றான் அகில்.

 

“ஹாய் சீனியர். என் பேரு ஷர்மிளா.” என்று அவள் கூற, ஷ்யாமோ அவளை ‘இருந்துட்டு போ’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

 

அதில் கடுப்பான ஷர்மிளாவோ, “ஒருத்தர் பேரு சொல்லி இண்ட்ரோ கொடுத்தா, திரும்ப பேர் சொல்லணும்னு கூடவா தெரியாது?” என்று கேட்க, ஷ்யாமோ, “எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.” என்று கூறினான்.

 

“இப்போ என்ன லவ் பண்ணலாம்னா கூப்பிட்டேன். இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றீங்க!” என்று ஷர்மிளா கேட்க, ஒருநொடி அந்த இடமே அமைதியாக இருந்தது.

 

அதில் அவளை தீப்பார்வை பார்த்த ஷ்யாமோ, “இடியட்…” என்று மேலும் ஏதோ கூற வந்தவன், பின் என்ன நினைத்தானோ அங்கிருந்து செல்ல முயல, “ஹலோ சீனியர், உங்க பேரை நீங்களே வச்சுக்கோங்க.” என்று சத்தமாக கூறிவிட்டு, “ஏதோ காலேஜே கொண்டாடுற ஹீரோன்னு சொன்னாங்களேன்னு பேச வந்தா, ரொம்பத்தான்…” என்றாள். என்னதான் முணுமுணுத்தாலும் அது மற்றவர்களுக்கு கேட்கத்தான் செய்தது.

 

மீண்டும் அவளை ஷ்யாம் முறைக்க, அகிலோ, “அந்த ஹீரோன்னு சொன்னியே, அது எப்படி தெரிஞ்சுது?” என்று அவன் சந்தேகத்தை கேட்க, “இதெல்லாம் ஒரு கேள்வியா ப்ரோ. மூணு வருஷம் படிக்க போற காலேஜ், இது கூட ரிசர்ச் பண்ணலன்னா எப்படி?” என்று தோளை குலுக்கினாள் ஷர்மிளா.

 

‘இது ரொம்ப அவசியமா?’ என்று பார்வையிலேயே கேள்வி கேட்டு அகிலை ஷ்யாம் முறைக்க, அவனைக் கடந்து சென்ற ஷர்மிளாவோ, “இதுக்கே இப்படின்னா, இனி டெயிலியும் ஓட வேண்டியதா இருக்கும்!” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

 

அவள் கூறிச் சென்றதை போல, தினமும் அவன் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தாள். முதலில் முறைத்தாலும், பின்பு என்ன நினைத்தானோ ஷ்யாமும் அவளைக் கண்டு கொள்வதில்லை.

 

அடிக்கடி அவன் முன் வந்து, “அட என்ன சீனியர், இன்னைக்கு நீங்க ஹேண்ட்ஸமா தெரியுறீங்க?” என்பாள். சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை!

 

அவளின் செயலில் பல்லைக் கடித்து கொண்டு, “ஏய்…” என்று ஷ்யாம் ஏதோ சொல்ல வருவதற்குள், “வெயிட் வெயிட், நீங்க ஹேண்ட்ஸமா இருக்கீங்கன்னு தான் சொன்னேன். வேற ஸீன் ஒன்னும் இல்ல.” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விடுவாள்.

 

“இவளை…” என்று திட்ட வந்து, பின் சுற்றி இருப்பவர்கள் அவனை நோட்டமிடுவதை பார்த்து நிறுத்தி விடுவான்.

 

ஷர்மிளா ஷ்யாமிடம் பேசுவதைக் கண்டு சில பெண்களும் அவனிடம் பேச வர, அவர்களை முறைத்தே தள்ளி நிறுத்தி விடுவான்.

 

இதை ஷர்மிளாவின் தோழிகள் அவளிடம் சொல்லி, “நீ மட்டும் அப்படியென்ன ஸ்பெஷலோ?” என்று பொறும, அது ஷ்யாமின் காதுகளுக்கும் சென்றது.

 

உடனே ஷர்மிளாவை தனியே அழைத்தவன், “ஓய் சோடாபுட்டி, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? வேணும்னே என்னைப் பத்தின காசிப்பை ஸ்ப்ரெட் பண்ணிட்டு இருக்கியா?” என்று கோபமாக வினவ, அவளோ அதற்கெல்லாம் அசராமல், “இப்போ எதுக்கு இவ்ளோ கோபம் சீனியர்? நான் உங்களை பத்தி காசிப் பண்ணேன்னு நீங்க பார்த்தீங்களா? காசிப் எல்லாம் நம்ம ஆக்ஷன்ஸ் வச்சு பரவுறது தான் சீனியர். நானா ஆள் வச்சு எல்லாம் பரப்பல. இதோ, இப்படி நம்ம பேசிட்டு இருக்குறதை பார்த்து தானா பரவுறது தான்.” என்று கண்ணடித்து கூறிவிட்டு ஓடி விட்டாள்.

 

‘இவளை எப்படி தான் அடக்குறது?’ என்று ஷ்யாம் தான் தலையால் தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்பது தான் உண்மை. அவளால் அவன் கவனம் சிதறிப் போவதை உணர்ந்து, அவளிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

அவன் மனநிலையை சரியாக கணித்ததை போல, ஷர்மிளாவும் அவனருகே வராமல் தூரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்ப்பது ஷ்யாமிற்கு தெரிந்தாலும், அவன் அதை காட்டிக் கொள்ளவில்லை.

 

நியாயமாக பார்த்தால், அவள் அவனை தொல்லை செய்யாமல் இருப்பதை எண்ணி நிம்மதியுடன் தானே இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, ‘ஏன்’ என்ற கேள்வியை அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.

 

நாட்கள் செல்ல செல்ல, ஷர்மிளாவோ அகில் மற்றும் அவர்களின் நண்பர்களோடு நன்றாக உரையாட ஆரம்பித்து விட்டாள். அவ்வபோது, ஷ்யாமையும் ஜாடையாக பேசி கேலி செய்து அவன் முறைப்பை வாங்கிக் கொண்டாலும், நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

 

ஒருமுறை, “அது என்ன நாங்க எல்லாம் ப்ரோ, அவன் மட்டும் சீனியர்?” என்று அகில் வினவ, ஷ்யாமை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே, “நீங்க எல்லாரும் பேரு சொன்னீங்க, அதான் ப்ரோ. பேரைக் கூட சொல்லாதவங்க எல்லாம் சீனியர் தான்.” என்றாள்.

 

ஆனால், அவளின் குரலே ‘சீனியர்’ என்ற அழைப்பு எத்தனை நெருக்கம் என்பதை கூறியது.

 

ஷ்யாம் அதைக் கேட்டாலும் எதுவும் கூறாமல் சென்று விட, ஷர்மிளா மர்மமாக சிரித்தாள்.

 

அதைக் கண்ட அகிலோ, “இப்போ எதுக்கு நீ வினோதமா சிரிக்கிற?” என்று வினவ, “ஹ்ம்ம், ரெட் சிக்னல் எதுவும் கிடைக்கலல, அதான் வெற்றி சிரிப்பு! கூடிய சீக்கிரம் க்ரீன் சிக்னல் கிடைச்சுடனும்னு சாமி கிட்ட வேண்டிக்கோங்க.” என்றாள்.

 

தூரத்தில் செல்பவனையும், அவனை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தவளையும் பார்த்த அகிலோ, “க்கும், நீ க்ரீன் கலர் டிரெஸ் போடாம இருக்க வேணும்னா வேண்டிக்குறேன்.” என்றான்.  

 

சில நாட்கள் தள்ளி நின்றே ரசித்தவள், அது வேலைக்காகாது என்று எண்ணினாளோ என்னவோ, ஷ்யாமிடம் வந்து, “சீனியர், உங்க டிப்பார்ட்மெண்ட் ஜூனியர் வசந்த் என் ஃபிரெண்டு தான். அவனுக்கு உங்க நோட்ஸ் வேணுமாம்.” என்றாள்.

 

அவனோ அவளை பார்க்காமல், “ஏன், அதை அவன் வந்து கேட்க மாட்டானாமா?” என்று முணுமுணுக்க, அவனருகே வந்தவளோ, “அவனுக்கு உங்களை பார்த்தா பயமாம்!” என்று கண்களை விரித்து தீவிர பாவனையில் கூறினாள்.

 

அதில் வழக்கம் போல அவன் முறைக்க, “ஷப்பா, இந்த எக்ஸ்ப்ரெஷனை யாராவது பார்த்தா, நான் என்னமோ உங்களை ஏமாத்தி கழட்டி விட்டதா நினைச்சுக்க போறாங்க.” என்று சத்தமாக அவள் கூற, ஷ்யாமோ பையிலிருந்த அவன் பழைய குறிப்பேடுகளை அவளின் கைகளில் பொத்தென்று வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

அவள் அவனிடம் பேசியதில், ஏனோ இத்தனை நாட்கள் மனதிற்குள் தொக்கி நின்ற கேள்வி மறைந்து விட்டதை போல தான் உணர்ந்தான் ஷ்யாம்.

 

“க்கும், நோட்ஸ் கேட்டா, ஏதோ சொத்தையே கேட்டா மாதிரி ஸீன் போட வேண்டியது!” என்று ஷர்மிளா முணுமுணுக்க, அகிலோ, “ஆமா, அவன் தான் முறைக்குறான்ல. திரும்ப திரும்ப அவனை ஏன் வம்பிழுக்குற?” என்றான்.

 

“முறைக்குறதுக்கெல்லாம் கவலைப்பட்டா இலக்கை அடைய முடியுமா ப்ரோ?” என்று ஷர்மிளா கண்ணடிக்க, “ஹ்ம்ம், பார்க்குறது சைட்டடிக்கிற வேலை, இதில இலக்கு ஒன்னு தான் குறைச்சல்.” என்றான் அகில்.

 

அதன்பின்போ, ‘வசந்த்திற்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று அடிக்கடி வந்து ஷ்யாமின் முன் நின்றாள் ஷர்மிளா. இது அந்த வசந்த்திற்கு தெரியுமா என்பது வசந்த்திற்கே வெளிச்சம்!

 

ஷ்யாம் அவளிடம் சிடுசிடுவென்று பேசினாலும், அவள் கேட்டதை செய்ய, அகிலே அவனிடம், “நீ ஏன் டா அவ என்ன சொன்னாலும் செய்யுற?” என்று கேட்க, “பின்ன நொய்யுநொய்யுன்னு பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா என்ன பண்ண? மனுஷனை நிம்மதியா இருக்க விடுறாளா?” என்றான் ஷ்யாம்.

 

ஆனால், அது மட்டும் தான் காரணமா என்றால் அவனிற்கே அது தெரியாது என்று தான் கூற வேண்டும். மற்ற பெண்களை தள்ளி நிறுத்தியதை போல ஷர்மிளாவை தள்ளி நிறுத்த முடியவில்லை அவனால். அவன் அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்று கூற வேண்டுமோ!

 

நாட்கள் கடந்து, மாதங்களும் கடந்து சென்றன. ஆனால், ஷர்மிளா – ஷ்யாம் உறவு என்னவோ பேச்சுவார்த்தையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அவளும் விதவிதமாக அவளின் மனதை தெரிவிக்க முயன்று கொண்டு தான் இருக்கிறாள். அதற்கு அவன் அவகாசம் கொடுத்தால் தானே!

 

வேறு வழியின்றி, “ஷப்பா, லவ்வை சொல்ல கூட விட மாட்டிங்குறாரு ப்ரோ உங்க ஃபிரெண்டு.” என்று அகிலிடம் தான் புலம்புவாள் ஷர்மிளா.

 

அதற்கு அவனோ, “நான் தான் சொன்னேன்ல, அவன் லவ்வுக்கு எல்லாம் செட்டாக மாட்டான். நீ ஏன், கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணக்கூடாது.” என்று அறிவுரை வழங்க, அவன் பின்மண்டையில் பலமாக அடித்து விட்டு, ஷர்மிளாவையும் துரத்தி விடுவான் ஷ்யாம்.

 

“ஷ்யாமா, உனக்கு ஷர்மியை பிடிச்சுருந்தா, அக்செப்ட் பண்ண வேண்டியது தான? அவளும் பாவம், எத்தனை முறை தான் அவ லவ்வை சொல்ல, உன் பின்னாடி அலைவா? பிடிக்கலைன்னா, அதையாவது சொல்லலாம்ல.” என்று அகில் கூற, அதற்கு புரியாத பார்வை ஒன்றே பதிலாக கிடைக்கும் ஷ்யாமிடமிருந்து.

 

இதோ அதோவென்று, இறுதியாண்டு கல்வி முடிவிற்கு வந்து விட்டது ஷ்யாமிற்கு. அடுத்த நாள் இறுதி நாள் என்ற நிலையில் அவனிடம் வந்த ஷர்மிளாவோ, “என்னை ரொம்ப துரத்திட்டீங்க சீனியர். நாளைக்கு எப்படியும் சொல்லியே தீருவேன். நீங்களும் பதில் சொல்லியே ஆகணும்.” என்று கூறிவிட்டு  ஓடியிருந்தாள்.

 

என்னதான், அவள் மனதை பகிர்வதை இத்தனை நாட்கள் தடுத்திருந்தாலும், ஏதோ ஒரு குறுகுறுப்பு உள்ளுக்குள் எழத்தான் செய்தது ஷ்யாமிற்கு.

 

அந்த சந்தர்பத்தை எப்படி கையாள வேண்டும் என்று மிகவும் யோசித்தாலும், அவளை சந்திக்கும் நேரத்திற்காக ஒருவித ஆர்வத்துடன் காத்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.

 

ஆனால், அவன் காத்திருப்பு எல்லாம் கானல் நீராகிப் போனது. அடுத்த நாள், அவனின் சோடாபுட்டி அவன் கண்முன் வரவே இல்லை!

 

எப்போதும் அவளை கண்டு கொள்ளாமல் சுற்றியவனோ, அன்று அந்த கல்லூரியையே சல்லடை போட்டு தேடி விட்டான், அவளிற்காக! ஆனால், பலன் தான் இல்லை.

 

கல்லூரியின் இறுதி நாள் என்பதால், பலர் குறிப்பாக பெண்கள் அவனை சூழ்ந்து கொள்ள, அவன் நினைவை ஆக்கிரமித்தவள் என்னவோ அவனின் சோடாபுட்டி தான்!

 

இரவு நேரமான போதும் கூட, கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் சுற்றியவனிடம், “நான் கால் பண்ணி பார்த்தேன் டா. அவ எடுக்கல. நாளைக்கு வேணா அவ வீட்டுக்கு போய் பார்ப்போம்.” என்று அகில் சமாதானப்படுத்துவதற்காக கூற, “நான் எதுக்கு அவளை தேடிப் போகணும்? ஏதோ இன்னைக்கு பேசணும்னு சொன்னாளேன்னு வெயிட் பண்ணேன். அவ்ளோ தான்.” என்று கத்திவிட்டு சென்று விட்டான்.

 

அதன் பிறகு சில நாட்கள், அவள் ஏன் அன்று வரவில்லை என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், அவன் நேரத்தை தேர்வு, பயிற்சி ஆகியன ஆக்கிரமித்துக் கொண்டன. அதில், அவளை தற்காலிகமாக மறந்தே விட்டான் என்று தான் கூற வேண்டும்.

 

அன்று மருத்துவமனையில் அவளை சந்தித்தபோது கூட, சட்டென்று அவள் தான் என்பதை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம், அவளின் தோற்றம் என்றால் மிகையாகாது.

 

அவளின் டிரேட்மார்க்காக கருதப்படும் சிரிப்பும், கண்ணாடியும் காணாமல் போயிருந்தன. கண்களை சுற்றிய கருவளையமும் முகத்தை நிறைத்திருந்த வேதனையின் சாயலும் ஏனோ ஷ்யாமின் இதயத்தை தாக்கின.

 

‘அகில் சொன்ன மாதிரி அடுத்த நாள் போய் பார்த்துருக்கணுமோ?’ என்ற கேள்வி அவளை பார்க்கும்போதெல்லாம் தோன்ற ஆரம்பிக்க, அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான் ஷ்யாம்.

 

அவளின் வேலையை பற்றி தெரிந்து கொண்டவனிற்கு, அவள் தந்தையின் இறப்பும் தெரிய வந்தது. அதுவும், அவர் இறந்தது அந்த கல்லூரி இறுதி நாளில் தான் என்பதை அறிந்ததும், அன்று சென்று பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி மனம் குமைந்தான்.

 

இந்த தகவல்கள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்திருந்தால் கூட, அவளிடம் அப்போதே பேசியிருப்பான். இப்படி தன் எதிரியிடம் அவளை தொலைத்து, அவளிற்கு என்ன ஆனதோ என்று பதைபதைப்புடன் அவனும் சொந்த ஊருக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

 

*****

 

‘சோலைப்புதூர்’ என்ற ஊரின் பெயரை மட்டுமே தெரிந்து கொண்ட ஷ்யாமிற்கு, விக்ரம் தற்போது எங்கு சென்றிருப்பான் என்று சரியாக தெரியவில்லை என்றாலும், ஒரு யூகத்தில் பெரிய வீட்டிற்கு சென்றிருந்தான்.

 

அவன் யூகம் தவறாத படி, விக்ரம் அவனின் பாதுகாவலர்கள் படை சூழ அங்கு தான் இருந்தான். அவனுடன், தலை குனிந்தபடி ஷர்மிளாவும் நின்றிருந்தாள்.

 

இதுவரை ஷ்யாமிற்கு புரியாதது என்னவென்றால், ஷர்மிளா இதற்குள் எப்படி வந்து சிக்கினாள் என்பது தான். அவளை ஏன் இவ்வீட்டிற்கு கூட்டி வரவேண்டும் என்ற கேள்வி ஷ்யாமின் மனதை அரிக்க, கண்டிப்பாக அதற்கான பதில் உவப்பானதாக இருக்காது என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

 

மீண்டும் ஒருமுறை அவன் யூகம் சரியென்பது போல இருந்தது, விக்ரம் கூறிய அந்த செய்தி.

 

அதைக் கேட்ட ஷ்யாமிற்கு, உடனே தோன்றியது என்னவோ, விக்ரம் கூறியது பொய் என்பது தான்.

 

‘டா**, எவ்ளோ தைரியம் இருந்தா, இப்படி எல்லாரு முன்னாடியும் பொய் சொல்லி, அவளை இதுல சிக்க வைப்பான்?’ என்று எண்ணிய ஷ்யாமோ யோசிக்காமல் விக்ரமின் சட்டையை பிடித்திருந்தான்.

 

அத்தனை நேரம் தலை குனிந்து நின்றிருந்த ஷர்மிளாவோ, “அப்பாவை விடுங்க.” என்று முனக, “ஷட்டப், யாரு உனக்கு அப்பா?” என்று அவளிடமும் கத்தினான் ஷ்யாம்.

 

அத்தனை நேரம் ஸ்வரூபனை அடக்கியபடி இருந்த அகிலோ, அவனை வர்ஷினியிடம் விட்டுவிட்டு ஷ்யாமை விக்ரமிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டிருந்தான். மறுபக்கம் விக்ரமின் பாதுகாவலர்களும் இருவரையும் பிரிக்க பெருமுயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றிருந்தனர்.

 

“ச்சு, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி…” என்ற விக்ரமோ தன்னை சட்டையை நீவியபடி ஷ்யாமின் அருகே வந்து, “உன் அம்மா இதை தான் சொல்லி தந்தாளா?” என்று வினவ, தன்னை பிடித்திருந்த அகிலை தள்ளிவிட்டு, விக்ரமை அடிக்க செல்ல, இருவருக்கும் இடையில் வந்த ஷர்மிளாவோ, “நிறுத்துங்க. இவரு தான் என் அப்பா.” என்று அழுத்தமாக கூறினாள்.

 

அடிக்க உயர்த்திய கையை இறக்கிய ஷ்யாமோ, “ஓஹோ, அப்போ பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தது யாரு?” என்று வினவ, “அவரு என்னை வளர்த்த அப்பா.” என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறினாள் ஷர்மிளா.

 

அதில் ஷ்யாமின் இரத்த அழுத்தம் உயர, ஒரு பெருமூச்சுடன் தன்னை இயல்பாக்கிக் கொண்டவன், அவன் முன் நின்றவளின் தோளை ஆறுதலாக பற்றியபடி, “உன் தம்பியை காப்பாத்தியாச்சு. சோ, இனி நீ யாருக்கும் பயந்து பொய் சொல்ல தேவையில்லை.” என்று இறுதி வரியை விக்ரமை முறைத்துக் கொண்டே கூறினான்.

 

ஷர்மிளாவோ, ஷ்யாமின் கைகளை தட்டிவிட்டு, “நான் ஏன் பொய் சொல்லணும்? இது தான் என் அப்பா. அவரோட வேலையால எனக்கு ஆபத்து வரும்னு தான், இத்தனை நாள் வேற பேர்ல, வேற ஒருத்தரோட பொண்ணா இருந்தேன். என் உண்மையான பேரு ஷீதல்!” என்று கூற, அந்த இடமே அமைதியாக இருந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்