Loading

நிறம் 17

 

ஒருவழியாக இரவு நேர சிறுவிருந்து முடிந்து ஷ்யாம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளையில், அவனிடம் வந்த வர்ஷினியோ, “ஆமா, உங்க ஃபிரெண்டு பாட்டுக்கு என்னை கடத்திட்டு வந்துட்டாரே. உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் எந்த ஆக்ஷனும் எடுக்கல? நீங்களும் ஏதோ வெகேஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா சுத்துறீங்க?” என்று வினவினாள்.

 

அதைக் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்த ஸ்வரூபனோ, “ஆமா, இவ இந்த நாட்டோட பி.எம். இவளைக் காணோம்னு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டே அல்லோலகல்லோல படுது!” என்று கேலியாக கூற, அவனை முறைத்த வர்ஷினியோ, பதிலை வேண்டி ஷ்யாமின் முகத்தை பார்த்தாள்.

 

அவனோ எதுவும் கூறாமல் தன் அலைபேசியை எடுத்து காவல்துறை துணைத்தலைவருக்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்ய, மறுமுனையில் அவரோ அழைப்பை ஏற்றதும், “விக்ரம் பத்தி நியூஸ் கிடைச்சதா?” என்று வினவினார்.

 

ஷ்யாமோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “இல்ல சார். விக்ரம் பத்தி எந்த நியூஸும் கிடைக்கல. ஹாஸ்பிடல்லயிருந்து காணாம போன அந்த பொண்ணு பத்தி தான் க்ளூ கிடைச்சுருக்கு. அதை வச்சு ப்ரோசீட் பண்ணலாம்னு இருக்கோம்.” என்றான்.

 

“வாட்? அந்த பொண்ணை கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க? இட் இஸ் வேஸ்ட் ஆஃப் டைம். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா, எலெக்ஷனுக்கு முன்னாடி அந்த விக்ரம் சிங்கை கைது பண்ணியே ஆகணும். மேலிடத்துலயிருந்து செம பிரஷர் ஷ்யாம்.” என்று அவர் கூற, எப்போதும் போல ஒரு ‘ஓகே’வுடன் அழைப்பை துண்டித்தான் ஷ்யாம்.

 

“அடப்பாவிங்களா, இப்படி தான் உங்க விசாரணை எல்லாம் போகுதா?” என்று வர்ஷினி வாயில் கைவைத்து ஆச்சரியப்பட, அவளை முறைத்த ஷ்யாமோ, “உன்னை பிடிச்சுட்டா, விக்ரமை ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்னு தான் அந்த ஆளு உன் பக்கம் எங்க கவனத்தை திருப்ப விடமாட்டிங்குறாரு.” என்றான்.

 

“அட ஆமா, அவரை விக்ரம் கூட ஒருமுறை பார்த்துருக்கேன். அப்போ அவரும் அந்த மாஃபியா கேங்கோட கூட்டா? விளங்கிடும்!” என்ற வர்ஷினியோ, “அதுசரி, ஆனா இந்த விக்ரம் கூட என்னை தேடலையா?” என்று அடுத்த கேள்வியை கேட்க, ஷ்யாமோ ஸ்வரூபன் புறம் பார்வையை திருப்பினான்.

 

“ஏன் தேடலை? உன்னை தேடி வரிசையா வந்தவனுங்களை எல்லாம் நம்ம குடவுன்ல தான் ‘பாதுகாப்பா’ தங்க வச்சுருக்கோம்.” என்று அந்த பாதுகாப்பை அழுத்தி கூற, அந்த தோரணையே அவன் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறான் என்பதை கட்டியம் கூறியது வர்ஷினிக்கு.

 

எவ்வளவு கேள்விகள் கேட்டாலும், வர்ஷினிக்கு குழப்பங்கள் தீரவில்லை போலும்.

 

இதோ, அடுத்த கேள்வியாக, “கிட்னாப் எல்லாம் சரி. அது எப்படி நான் சொன்ன மாதிரியே என் லவர்… க்கும், இந்தரா நீங்க வந்தீங்க?” என்று ஸ்வரூபனிடம் வினவ, அவள் இடையில் திக்கியதை அவனையும் மீறி ரசித்தவனோ, “ஹ்ம்ம், அதை ஒரு பட்சி லைவ் ரிலே பண்ணுச்சு.” என்றான்.

 

சரியாக அதே சமயம் அங்கு ஆஜரான அந்த ‘பட்சி’யோ, “என்ன என்னை விட்டு இங்க ஒரு மாநாடு நடக்குது?” என்று கேட்க, அவனை வழக்கம் போல முறைத்தாள் வர்ஷினி.

 

அவளின் முறைப்பு பழகிப் போனதாலோ என்னவோ, ஷ்யாமை நோக்கி திரும்பிய அகில், “என்னடா நீ உன் ஆளை பார்க்க நாளைக்கு போற தான?” என்று வினவ, “எது கஞ்சி சட்டைக்கு காதலா?” என்று எட்டாவது உலக அதிசயத்தை நேரில் கண்டது போல வியந்தாள் வர்ஷினி.

 

அண்ணனையும் தங்கையையும் ஒருசேர முறைத்த ஷ்யாமோ, “மவனே, ஊருக்கு வருவேல, அப்போ வச்சுக்குறேன்.” என்று அகிலிடம் கூறியபடி கிளம்ப முற்பட, “அடேய், சத்தமா சொல்லாத. இப்போ தான் என் பொண்டாட்டியை மலை இறக்கி இருக்கேன்.” என்று போலியாக வருத்தப்பட்டான் அகில்.

 

சிரிப்பும் குதூகலமுமாக கரைந்த அந்த நிமிடங்களை மனப்பெட்டகத்தில் பத்திரப்படுத்திக் கொண்டாள் வர்ஷினி. இனி, இவை போன்ற தருணங்கள் கிடைக்காது என்று எண்ணினாளோ என்னவோ!

 

*****

 

மறுநாள் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு சென்னை கிளம்பினான் ஷ்யாம். ஆனால், அவன் மனமோ அவன் தேடுதலுக்கு உரியவள் அங்கிருக்க மாட்டாள் என்று அடித்துக் கூறியது.

 

ஊருக்கு வந்ததும் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டன. முதலில், ஷர்மிளா வேலை செய்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தான். அங்கு அவனிற்கு தேவைப்படும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

 

அவள் வீட்டிற்கு சென்றும் விசாரித்தான். வீட்டின் உரிமையாளரும், அவளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிற்று என்ற தகவலையே கொடுக்க, ‘அப்போ நான் லாஸ்ட்டா பார்த்த அன்னைக்கே காணாம போயிருக்கா.’ என்று எண்ணியவன், அடுத்து என்ன என்று குழம்பி தான் போனான்.

 

அவன் நிலையற்று நின்றதெல்லாம் ஒருநொடி தான். அடுத்தடுத்த செயல்கள் எல்லாம் துரித நிலையில் நடக்க ஆரம்பித்தன.

 

திருட்டு வழக்கை விசாரிக்கும் செல்வத்திற்கு அழைத்தவன், அந்த திருடர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்குமாறு பணித்து விட்டு, ஷர்மிளா அலுவலகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான்.

 

அதில், ஆளரவமற்ற சாலையில் ஷர்மிளாவை வழிமறித்த மர்மநபர் ஒருவர் ஏதோ கூற, அதில் அதிர்ந்த ஷர்மிளா தன் வாகனத்தில் அந்த மர்மநபரின் வாகனத்தை பின்தொடர்வது பதிவாகி இருந்தது.

 

உடனே, அந்த வாகனம் செல்லும் வழியிலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான் ஷ்யாம். அது சென்று நின்ற இடம் ஒரு கைவிடப்பட்ட ஆலை.

 

அதை பார்த்ததும், அந்த இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவன், அவனும் அவ்விடத்திற்கு விரைந்தான்.

 

அவன் சந்தேகப்பட்டது போல, அங்கு சிலரை கடத்தி வைத்ததற்கான சான்றாக அறுந்த கயிறுகள், சங்கிலிகள், சிகரெட் துண்டுகள், ரத்த துளிகள் முதலியவை தென்பட, ஆட்கள் யாரும் தென்படவில்லை.

 

‘ஷிட், லேட்டா வந்துட்டேன்.’ என்று ஷ்யாம் தன்னையே திட்டிக் கொண்டபடி, அந்த இடத்தை மேலும் பார்வையால் அலச, அங்கு ஓரமாக கிடந்த அலைபேசி அவன் பார்வையில் சிக்கியது.

 

அதன் முகப்பு படத்தை பார்த்த ஷ்யாமோ, “வினய்…” என்று முணுமுணுக்க, சரியாக அதே சமயம், செல்வத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

“சார், அந்த திருட்டு கும்பலை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவங்க குரூப்புக்குள்ள ஏதோ சண்டை வந்து, அடிதடில இறங்கிருக்காங்க. அதுல, எல்லாருக்கும் நல்ல காயம். இப்போ **** ஹாஸ்பிடல்ல இருக்காங்க சார். ஒருத்தன் மட்டும் தான் அபாய கட்டத்தை தாண்டிருக்கான். மத்தவங்க எல்லாம் இன்னும் ஐசியூல தான் இருக்காங்க.” என்றான் செல்வம்.

 

“ஓகே செல்வம். நான் இப்பவே அங்க வரேன்.” என்ற ஷ்யாமோ, அடுத்த இருபது நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்திருந்தான்.

 

அவன் ஏன் இந்த வழக்கில் இத்தனை தீவிரம் காட்டுகிறான் என்பதை அறியாத செல்வமோ, அவனை அழைத்துக் கொண்டு குற்றவாளி இருக்கும் அறைக்கு சென்றான்.

 

அங்கு கட்டிலில் பலத்த காயங்களுடன் படுத்திருந்தவன் வினய் தான்.

 

அதுவரை வலியுடன் விரக்தி கலந்த உணர்வில், எதிரிலிருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்த வினய்யின் விழிகள், உள்ளே நுழைந்த ஷ்யாமை கண்டு அதிர்ந்து பின் நிர்மலமாகின.

 

அவன் பாவனைகளை எல்லாம் சரியாக கணித்துக் கொண்ட ஷ்யாமோ, அவனருகே இருந்த முக்காலியில் அமர்ந்தபடி, “என்ன  நடந்துச்சு?” என்று அடிக்குரலில் வினவினான்.

 

அந்த குரல் வினய்க்கு கிலியை கிளப்பினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “அதான் சொன்னேனே சார், எங்க குரூப்புக்குள்ள சண்டைன்னு.” என்று கூற, அவன் தலை முதல் கால் வரை அளவிட்ட ஷ்யாமோ மீண்டும் அதே கேள்வியை இன்னும் இறுக்கத்துடன் கேட்க, வினய் பயத்தில் எச்சில் விழுங்கியபடி அதே பதிலை கூறினான்.

 

அத்தனை நேரம் இருந்த பொறுமை பறந்து போக, அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்த வினய்யின் கரத்தை மேலே இழுத்த ஷ்யாமோ, “இந்த காயமெல்லாம் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக்கிட்டீங்க, அப்படி தான?” என்று மிரட்ட, வலியிலும் பயத்திலும் வினய் அலற, அவனின் மிரட்டலில் பயந்து போன செல்வமும், “சார் சார், வேண்டாம் சார்.” என்று தடுக்க முற்பட்டான்.

 

“இடியட், உன்னால உன் அக்காவை அவனுங்க கடத்தி இருக்கானுங்க. நீ என்னன்னா, இப்பவும் அவனுங்களுக்கு முட்டு கொடுத்துட்டு இருக்க! ராஸ்கல்.” என்று ஷ்யாம் பேச பேச, மற்ற இருவரும் அதிர்ந்து தான் போயினர்.

 

‘இதென்ன திருட்டு கேஸ்னு நினைச்சா, கடத்தல்னு சொல்றாரு?’ என்று செல்வம் யோசிக்க, வினய்யோ, “சார் சார், எப்படியாவது அவளை காப்பாத்துங்க சார்.” என்று கதறினான்.

 

அப்போது தான் பிடித்து இழுத்த அவனின் கரத்தை விடுவித்தான் ஷ்யாம்.

 

“சொல்லு அன்னைக்கு என்ன நடந்துச்சு?” என்று ஷ்யாம் வினவ, வினய்யும் அன்றைய நிகழ்வை கூற துவங்கினான்.

 

*****

 

“வினய்… எங்க எல்லாம் உன்னை தேடுறது? சேகரண்ணா எல்லாரையும் கூப்பிடுறாரு டா.” என்று வினய்யின் சகாக்களில் ஒருவன் கூற, “ப்ச், இங்க பாரு குமாரு, நமக்கு இந்த போதைப்பொருள் மேட்டர் எல்லாம் செட்டாகாது. ஏதோ சின்ன சின்ன திருட்டுன்னு சொன்ன, அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். போக போக நமக்கு கொடுக்குற வேலையெல்லாம் ரிஸ்க் ஜாஸ்தியா இருக்கு. இந்த மாதிரி வேலைக்கு எல்லாம், இனிமேல் என்னை கூப்பிடாத.” என்றபடி அவனுடன் சென்றான் வினய்.

 

“அதை நீயே சேகரண்ணா கிட்ட சொல்லிடு.” என்ற குமாரோ வினய்யை அழைத்துக் கொண்டு அந்த கைவிடப்பட்ட ஆலைக்குள் நுழைந்தான்.

 

உள்ளே நுழைந்ததும் வினய்யின் தலையில் யாரோ பலமாக அடிக்க, அது யாரென்று தெரியாமல் மயங்கி விழுந்தான் வினய்.

 

அடுத்து அவன் லேசாக கண் விழித்தபோது, ஷர்மிளா பதற்றத்துடன் உள்ளே வருவது தெரிந்தது. அவளை வர வேண்டாம் என்று சொல்வதற்கு எத்தனை முயன்றும் அவனால் அதை செய்ய முடியவில்லை.

 

“வினய்…” என்று ஷர்மிளா கத்தும்போதே, அவளிற்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்வதை எதுவும் செய்ய முடியாத கையாளாகத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.

 

பின், அவனும் அதிக உதிரபோக்கினால் மயங்கிப் போக, மீண்டும் கண்விழித்தது இந்த மருத்துவமனையில் தான்.

 

*****

 

வினய் இதை கூறி முடிக்க, “ஏன் இதை முன்னாடியே சொல்லல?” என்று கேட்டான் ஷ்யாம்.

 

வினய்யோ செல்வத்தை ஒரு பார்வை பார்த்தபடி, “சார், சேகர் ரொம்ப பவர்ஃபுல்லான ஆளு. அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. போலீஸ் செல்வாக்கும் இருக்கு. எங்க நான் இதை பத்தி வாயை திறந்தா அக்கா உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்து தான் சொல்லல சார்.” என்றவன், “சார், நான்… நான் ரெண்டு முறை தான் பிக்-பாக்கெட் அடிச்சுருக்கேன். அதுவும் என் ஃபிரெண்டு சொல்லி, அதுல கிடைக்குற த்ரில்லுக்காக… தப்பா…” என்று சொல்லும்போதே ஷ்யாம் முறைக்க, “நானே அதுலயிருந்து வெளிய வரத்தான் முயற்சி பண்ணேன். அதுவும், அக்காக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுருந்தா நிச்சயமா இதுக்குள்ள வந்துருக்க மாட்டேன்.” என்றான்.

 

அப்போதும் ஷ்யாம் நம்பாத பார்வை பார்க்க, “சார், நான் சொல்றது உண்மை தான். என்னதான் அவ என்கூட பொறக்காதவன்னாலும், அவ மேல எனக்கு பாசம் இருக்கு சார். பிளீஸ், அவளை எப்படியாவது காப்பாத்துங்க.” என்று கெஞ்சினான் வினய்.

 

ஷ்யாமோ ஒரு பெருமூச்சுடன், “அவங்க உன் அக்காவை எங்க கூட்டிட்டு போனாங்கன்னு ஞாபகம் இருக்கா? ஏதாவது சின்ன க்ளூ கிடைச்சா கூட போதும். நல்லா யோசிச்சு பாரு.” என்று கூற, வினய்யும் யோசித்து பார்த்தான்.

 

அவனிற்கு சட்டென்று ‘சோலைப்புதூர்’ என்று அவர்கள் பேசிக் கொண்டது நினைவுக்கு வர, அதை ஷ்யாமிடமும் பகிர்ந்தான்.

 

அதைக் கேட்டதும், ‘நம்ம ஊருக்கு எதுக்கு கூட்டிட்டு போறாங்க?’ என்று ஷ்யாம் குழம்ப, “சார், இந்த வேலையை அவனுக்கு கொடுத்தது விக்ரம்னு பேசிட்டு இருந்தாங்க.” என்று வினய் கூற, அந்த பெயரே ஷ்யாமின் கோபத்தை அதிகரிக்க போதுமானதாக இருந்தது.

 

‘இவன் எதுக்கு ஷர்மியை தூக்கி இருக்கான்?’ என்ற யோசனை ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, மறுபுறம் அவன் ஊருக்கு மீண்டும் பயணிக்க ஆயத்தமானான் ஷ்யாம்.

 

*****

 

பெரிய வீட்டில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குழுமி இருந்தனர். காரணம், ரூபியின் வளைகாப்பிற்கான திட்டம் தீட்ட தான்.

 

“எனக்கு லீவு டைம்மா பார்த்து வளைகாப்பு வைங்க.” என்று முதல் ஆளாக அகில் கூற, “க்கும், அப்போ குழந்தை பொறந்ததுக்கு அப்பறம் தான் வைக்கணும்.” என்று நொடித்துக் கொண்டார் பெரியநாயகி.

 

அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, “ப்ச் கிழவி, என்னை அசிங்கப்படுத்துறதே பொழப்பா வச்சுருக்கியோ!” என்று சலித்துக் கொண்டான் அகில்.

 

அப்போது வாசல் புறமிருந்து, “அட, எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்க போல!” என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பாவனையை வெளிப்படுத்தியது.

 

அங்கு வாசலை மறைத்துக் கொண்டு நின்றிருந்தது சாட்சாத் விக்ரமே!

 

அவனை அங்கு கண்டதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, வர்ஷினியோ தமயந்தி பக்கம் வந்து நின்று, அவரின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

 

“அட, என்ன இது? வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்க மாட்டீங்களா?” என்ற விக்ரமின் பார்வை தமயந்தியையும் அவரருகே நின்ற வர்ஷினியையும் தொட்டு விட்டு சென்றது.

 

“உனக்கெல்லாம் வரவேற்பு ஒரு கேடா?” என்று அனைவரும் மனதில் நினைத்ததை பெரியநாயகி வெளியே சொல்லிவிட, “என்ன அத்த இப்படி சொல்லிட்டீங்க? உங்க மாப்பிள்ளை என்ன பழைய மாதிரி ஒன்னும் இல்லாதவன்னு நினைச்சீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சென்ட்ரல் மினிஸ்டர் நான்.” என்று கர்வமாக கூறினான் விக்ரம்.

 

“நீ சென்டுரல் மினிஸ்டரா இருந்துக்கோ இல்ல யாரா வேணும்னா இருந்துக்கோ, உனக்கெல்லாம் இந்த வீட்டுல எந்த மரியாதையும் கிடைக்காது!” என்று கத்தி, அதன் விளைவாக மூச்சுக்கு சிரமப்பட்டார் பெரியநாயகி.

 

வைத்தீஸ்வரனோ மனைவியை கவனிக்க, பாட்டியின் பேச்சில் முகம் கறுக்க நின்ற விக்ரமை, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பார்வையால் சுட்டெரித்தான் ஸ்வரூபன்.

 

அவனருகே வந்த அகிலோ, “மச்சான், அவன் பக்கத்துல நிக்கிற பொண்ணை பார்த்தியா?” என்று வினவ, அப்போது தான் விக்ரமை விடுத்து மற்றவளை பார்த்தான் ஸ்வரூபன்.

 

சட்டென்று அடையாளம் தெரியாமல் போனாலும், அவளை எங்கோ பார்த்த ஞாபகம் ஸ்வரூபனிற்கு!

 

அவனை அதிகம் யோசிக்க விடாமல், “அந்த பொண்ணு தான் ஷர்மிளா, நம்ம ஷ்யாம்…” என்று அகில் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்த, அதை புரிந்த கொண்ட ஸ்வரூபனோ குழப்பத்தில் ஆழ்ந்தான்.

 

இருவரின் பேச்சுவார்த்தைகளை விக்ரம் ஒருபுறம் கவனித்தான் என்றால், மறுபுறம் வர்ஷினியும் கவனித்து அவர்களருகே வந்து நின்றாள்.

 

அதே சமயம், மூச்சிரைக்க ஷ்யாமும் அவ்வீட்டுற்கு வர, அவனைக் கண்ட விக்ரமோ, “ஓஹோ, ஆடு பகை குட்டி மட்டும் உறவோ?” என்று கேலியாக வினவ, கட்டுப்படுத்திய கோபம் கட்டுடைத்து வெளியே வர, அதை எதிரிலிருந்தவனிடம் காட்டிவிடும் வேகத்தில் ஸ்வரூபன் முன்னே செல்ல, அவனை இருபக்கமும் தடுத்து நிறுத்தினர் வர்ஷினி மற்றும் அகில்.

 

விக்ரமோ இந்த மூவர் கூட்டணியை பார்த்து நக்கலாக சிரித்தபடி, “சரி சரி, ஆடு பகையாவே இருக்கேன். இதோ இன்னொரு குட்டி வந்துருக்கே, அதையாவது வரவேற்பீங்களா?” என்றவனின் பார்வை மொத்த குடும்பத்தை வட்டமடித்து தமயந்தியிடம் நிலைக்க, அந்த ஒரு நொடி அங்கு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.

 

தாங்கள் கேட்டதும், உணர்ந்ததும் சரியா என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, ஷ்யாமோ விக்ரமின் சட்டையை பற்றி இருந்தான்.

 

வர்ஷினிக்கு எதுவும் விளங்காமல் இருக்க, “அகிலண்ணா, இங்க என்ன நடக்குது?” என்று சந்தேகம் கேட்டாள்.

 

அகிலோ ஸ்வரூபனை அடக்கிக் கொண்டிருந்தபடி, “ஹ்ம்ம், அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு சொல்றாரு உன் அப்பா.” என்று ஷ்யாம், ஷர்மிளா மற்றும் விக்ரமை முறையே காட்டி கூறினான்.

 

அதைக் கேட்ட வர்ஷினியோ திகைப்பின் எல்லைக்கே சென்றாள் என்று தான் கூற வேண்டும்!

 

எல்லாமே உடனே தெரிஞ்சுக்கணும்னு நினைக்காத மயூரா. அது, உனக்கு தான் வலியை தரும்.” என்று ஸ்வரூபன் கூறியது மீண்டும் அவளின் மனக்கண்ணில் வந்து போனது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்