Loading

இதயம்-22

“யாரும் தானாக மாறுவதில்லை..!
யாரோ ஒருவராரல் மாற்றப்படுகிறோம்..!
ஏமாளியாகவோ.. முட்டாளாகவோ..!
சில நேரங்களில் கோமாளியாகக் கூட..!”

ஆனால், இப்போது ஆதன் எதிரியாக மாறி நின்றான். மாறி நின்றான் என்பதை விட மாற்றப்பட்டான்.

தன்னைப் பெற்ற தகப்பனுக்கே எதிரியாக நின்றான். தான் பெற்ற பிள்ளையையே தனக்கு எதிரியாய் மாற்றியது சதாசிவம் தான். தந்தைக்கே எதிரியாய் நிற்க வேண்டுமென்கிற ஆசை அவனுக்கு துளியும் இல்லை. யாரோ ஒருவனால், கழுத்தறுக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்த தன் அன்னை கற்பகத்தின் முகம் அவன் கண் முன்னால் வந்து போனது. விபரமில்லா வயதில் புரியாதது எல்லாம், விபரம் தெரிந்த போது புரிந்தது.

எதிர்க் கட்சியிலிருந்தே தான் கொலை செய்ததாய் ஒருவன் சரணடைந்ததும், அதன் பின் அனுதாபத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்றதும், முக்கியப் பொறுப்பிலிருந்த அமைச்சரின் மகளான காயத்திரியை திருமணம் செய்துக் கொண்டார்.

அமைச்சரின் மருமகன் என்ற அந்தஸ்தே அவரை இன்னும் இன்னும் உயரத்திற்குக் கொண்டுப் போக, சட்டம் ஒழுங்கைப் பின்பற்றாதவர் இன்று சட்ட அமைச்சர். நினைக்கவே சிரிப்பாக வந்தது அவனுக்கு.

அதே நேரம், அவன் அன்னையின் நிலையை நினைத்து அவனுக்கு வேதனையாய் இருந்தது. கண்கள் கலங்கிப் போனது. மகன் மட்டுமே அவருக்கு உலகம். மகனுக்காகவே இந்த வாழ்வென வாழ்ந்தவர் தான் கற்பகம். கணவனை எதிர்த்துக் கேள்விக் கேட்க தைரியமில்லாத வாயில்லா பிள்ளைப் பூச்சி.

கணவன் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்துடன், தன் நகைகளை எல்லாம் கொடுத்தவர், அதே கணவன் பதவியில் அமர, தன் உயிரையும் கொடுத்தார்.

ஆனால், இதையெல்லாம் நினைத்து துளி குற்றவுணர்வோ, வருத்தமோ இல்லை நன்றியுணர்வோ, எதுவுமே சதாசிவத்திடம் இதுநாள் வரை இருந்ததில்லை. மனசாட்சி உறுத்தவில்லையா? மனைவி மூலமாக வந்த பணம் வேண்டும், நகை வேண்டும், அவள் மூலமாக வந்த பதவியும் வேண்டும், ஆனால் அவள் தேவையில்லை. அவள் தேவையில்லை என்ற எண்ணம் தானே, கட்டிய மனைவியையே பலி கொடுக்கத் துணிந்தது.

ஒருவரின் தேவையைப் பொறுத்தே, அவர்கள் உறவாடும் நேரமும் நிர்ணயிக்கப் படுகிறது. தேவை குறைய குறைய அந்த உறவே தேவையில்லாதாக மாறிவிடுகிறது. சதாசிவத்திற்கும் கற்பகம் தேவைப்பட்டது வெறும் பதினோரு ஆண்டுகள் தான். அவருக்கான தேவை முடிந்ததும், கற்பகம் தேவையற்ற உறவாய் மாறிப் போய்விட, காயத்ரி தேவையான உறவாய் மாறிப் போய்விட்டார்.

தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதன் பெயர் பாசம் அல்ல, சுயநலம்.
உண்மையிலேயே கற்பகத்தின் உயிரைப் பறித்தது கத்தி எனும் கூர்முனை அல்ல, துரோகம்.

கணவன் தனக்குச் செய்த துரோகம் தான் அவர் உயிரை ஒட்டு மொத்தமாய் விழுங்கிவிட்டது. இதயத்தையே கொடுத்தாலும் முதுகில் தான் குத்துவான் துரோகி. சதாசிவமும் சொந்த மனைவியின் முதுகில் தான் குத்தினார்.

பதவி ஆசையும் சுயநலமும் அவர் செய்வது துரோகம், மாபாதகம் என்பதை உணரவிடவில்லை.

“உன்னை நம்பியவரை ஏமாற்றுவதற்கு பெயர், திறமையோ, தந்திரமோ, புத்திசாலித் தனமோ இல்லை.
அதற்கு பெயர் துரோகம்.. நம்பிக்கை துரோகம்..!
கொலையினும் கொடியது..!”

தான் செய்ததை புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று தான் இன்றுவரை சதாசிவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தன் தாய்க்கு அவர் செய்த துரோகத்தை மகனாக, ஆதனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கொன்று போட்டுவிடும் கோபமும் ஆத்திரமும் கூட வந்தது. ஆனால் தகப்பன் என்ற ஒரே காரணம், அவனைப் பொறுமையை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருந்தது.
எல்லா தவறுகளும், ஒருநாள் மன்னிக்கப்படலாம். ஆனால், துரோகங்கள், மறக்கப்பட்டாலும் ஒருபோதும் மன்னிக்கப்படுவதே இல்லை.

ஒரு கணவனாய் மனைவிக்கும், தகப்பனாய் மகனுக்கும் அவர் செய்த துரோகம் இன்னும் ஆதனால் மறக்கப்படவே இல்லையே? பிறகு எப்படி அவரை மன்னிப்பது? அதற்காக கொலை எனும் மாபாதகத்தையெல்லாம் கையிலெடுக்க மாட்டான் ஆதன்.
ஒரேயொரு அலைபேசி அழைப்பு, ஒரேயொரு பணப்பரிமாற்றம் என சதாசிவத்தின் கதையையே நொடியில் முடித்துவிட அவனால் முடியும் தான்.

ஆனால், ஓர் உயிரின் மதிப்பு அவனுக்குத் தெரியுமே.. தாயில்லாமல் அவன் பட்ட கஷ்டமெல்லாம் அவனுக்குத் தெரியுமே..!

கடும் குளிரோடு, காய்ச்சல் கண்ட உடலோடு, தலைகோத கரமில்லாது எத்தனை நாட்கள் விடுதியறையில் தவித்திருப்பான். பெற்ற தாயில்லாத மனிதன் கூடு இல்லாத பறவையைப் போல, வெயிலோ மழையோ வெந்து தணியத்தான் வேண்டும். அப்படி வெந்து தணிந்ததன் விளைவு தான் இவனின் பக்குவம். அந்தப் பக்குவம் தான் கோபத்திலும் கூட நிதானமாய் அவனைச் சிந்திக்க வைத்தது.

‘அவனுக்குத் தேவையானது அவன் தந்தையின் உயிரல்ல.. மாற்றம். செய்த தவறுக்கு மனம் வருந்தும் மனமாற்றம் தான் அவனுக்கு வேண்டும். அந்த மாற்றத்தை வர விடாமல், அவர் செய்த தவறை உணரவிடாமல் தடுப்பது எது?’ என யோசித்தவனுக்கு விடையோடு வழியும் சேர்ந்தே கிடைத்தது.

அதே நேரம் அலைபேசி அழைத்து, அந்த அறையின் நிசப்தத்தை இதமாய் கலைத்தது.

“சொல்லு சிமி! போன விஷயம் என்ன ஆச்சு?”

“உன் கெஸ் கரெக்ட் தான் ஆதன். இப்போ என்ன பண்ணுறது?”

“நான் இருக்கேன் கேண்டி க்ரஷ்! பயப்படாமல், போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைண்ட் கொடுத்துடு! நாம ஏற்கனவே கேண்டி க்ரஷ் ஃபயர் ஆக்ஸிடெண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கோம், இப்போ இவங்க காரணம்ன்னு குறிப்பிட்டு சொல்லிடலாம்.”

“எனக்கு பயமெல்லாம் இல்லை! இதுவரை எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்லை! இப்போ நீ இருக்கே! ஆனால், இப்போ நடக்கறதெல்லாம் பார்த்தால், என்னால் தான் எல்லாமேன்னு தோணுது!”

“லூசு மாதிரி பேசாதே கேண்டி க்ரஷ்! இது எதுவுமே உன்னால் இல்லை! உன்னை வச்சு என்னை வீழ்த்துவதற்காகப் போட்ட ப்ளான். உன்னை அடிச்சா எனக்கு வலிக்கும்ன்னு தப்பு கணக்கு போட்டுட்டாங்க! அவங்க உனக்கு கொடுத்த வலியை விட, பல மடங்கு அதிகமான வலியை நான் அவங்களுக்குக் கொடுப்பேன்னு அவங்களுக்குத் தெரியாது.!” ஆதனின் குரலில் தெரிந்த தீர்க்கம் வாஹினியை ஆட்டிப் பார்த்தது.

“இப்போ என்ன பண்ண போறே ஆதன்? ஏடாகூடமாய் ஏதாவது பண்ணி வச்சிடாதே!”

“நான் ஒண்ணும் கொலைகாரன் இல்லை! பொய்யை அடித்தளமாய் போட்டு சாம்ராஜ்ஜியத்தை அமைத்த அவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது, உண்மையாய் நேர்மையாய் உழைச்சு இந்த உயரத்தை தொட்டு இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த எனக்கு திமிர் இருக்காதா? உண்மை எப்போதுமே தனித்து தான் நிற்கும். பொய் தான் எப்போதும் கூட்டம் சேர்க்கும். அதனால் தான் பொய் பேசறவங்க பின்னாடியும் பெரிய கூட்டமே இருக்கும்.”

“எனக்கு ஒண்ணுமே புரியலை!”

“அவர் கொடுத்த அரசியல் வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கும்ன்னு தேடித்தான் கண்டுபிடிக்கணும். பொய் பளபளப்பானது. வசீகரமானது. வசதியானது. பொய்யான வதந்திகள் உண்மையை விட வெகு சீக்கிரமாய் பரவறதுக்கும் அது தான் காரணம். அதோட கவர்ச்சி தான் காரணம். ஆனால் உண்மை அப்படியில்லை, தனித்து தான் நிற்கும். உண்மை கசக்கும், நெல்லிக்காயின் துவர்ப்பிற்கு பிறகான இனிப்பைபப் போல, கசப்புக்குப் பின்னாலேயும் ஒரு இனிப்பு இருக்கும். நிரந்தரமான நிம்மதி இருக்கும். பொய்ங்கிறது புதைகுழிக்கு மேலே போட்ட அஸ்திவாரம் மாதிரி எப்போ வேணும்னாலும் ஆட்டம் கண்டுடும். அந்த ஆட்டத்தை நீயும் பார்க்கப் போறே சிமி! ஷியாம் அங்கே தானே இருக்கான் அவன் கிட்டே கொடு!”

என்றவன் ஷியாமிடம் என்ன பேசினான் என்று தெரியாது, ஆனால் அவன் முகத்தில் இருந்த தெளிவும் தீர்க்கமும், அவன் தீர்க்கமாய் எதையோ முடிவு செய்துவிட்டான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

**********

மறுநாள் காலை.. புள்ளினங்களின் கீச்சிடலுடன், லேசான சலசலப்பும் முணுமுணுப்புபும் சேர்ந்தே வாஹினியின் செவிதனைத் தீண்டியது.

இப்போது அவள் ஆதனின் வீட்டில் தான் இருக்கிறாள். அவன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு தெள்ளத் தெளிவாய் செய்வதில் அவன் மீது நம்பிக்கை வந்திருந்தது. நம்பிக்கையோடு அவன் தன்னோடு இருக்கிறான் என்கிற நிம்மதியும் தான்.

புன்னகை தாங்கிய முகத்துடனே படுக்கையிலிருந்து எழுத்தவள், முகம் கழுவி, புத்துணர்வாகி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே போனாள்.

கதவைத் திறந்ததுமே, ஆதனின் படுக்கை காலியாக இருக்க, துளி ஏமாற்றம் சூழ்ந்தது அவள் முகத்தில். ஆலம் விழுதென, அழகாய் முகம் மறைத்தக் கூந்தலை, க்ளிப்பிற்குள் அடக்கியபடி ஆதனைத் தேடிப் போனாள்.

ஆர்வமாய் ஆதனைத் தேடிச் சென்றவளுக்கு, ஆதனின் முன் நின்று யாரோ ஒருவர் கத்திக் கொண்டிருப்பதும், ஆதன் நிதானமாய் அமர்ந்து கருப்பு தேநீர் பருகிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

‘யார் வந்திருப்பது?’ கேள்வியால் முடிச்சிட்டப் புருவங்களோடு, பக்கத்தில் சென்றவளுக்கு, பார்த்ததும் தெரிந்து போனது வந்திருப்பது, நிஷாவின் தந்தை பரமேஷ்வர் எனேபது.

“ஹேய் சிமி! நல்லா தூங்கினியா?” எனக் கேட்டபடியே அவள் நெற்றி விழுந்தக் கூந்தலைக் காதோரம் ஒதுக்கியவன், தன் அருகில் அமர்த்திக் கொண்டு தேநீரை அவள் கரத்தினில் திணித்தான். தேநீர் கோப்பையைக் கையில் வாங்கியபடி, அவள் அண்ணாந்து எதிரில் நின்றவரைப் பார்த்தாள்.

“நீ பண்ணுறதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆதன், உனக்கும் உங்க அப்பாவுக்கும் இருக்கிற பிரச்சனையில் என்னை ஏன் இடையில் இழுக்கிறே?”

“எனக்கும் மிஸ்டர்.சதாசிவத்திற்கும் இடையில் வந்தது நீங்கதான் பரமேஷ்வர். இடையில் இழுத்தது நான் இல்லை.!”

“ம்ப்ச்! ஆதன்! நான் இப்போ இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிட்டு நிக்கறேன். என் பையன் ஜெயிலில் இருக்கிறான். அவனை வெளியில் கொண்டு வர, என் கிட்டே பத்து பைசா இல்லை!”

“தறுதலைப் பிள்ளையைப் பெத்தால், இதையெல்லாம் அனுபவிச்சு தானே ஆகணும். விடுங்க அப்படியாச்சும் உங்க பையன் திருந்தறனான்னு பார்க்கலாம்.” என்றவன் சிமியிடம் திரும்பி,

“சிமி, உன் கிட்டே சொன்னேன்ல்ல, அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பிச்சுடுச்சு பார்த்தியா? உன் அடையாளத்தை அழிச்சவங்களோட அஸ்திவாரம் இப்போ ஆட்டம் கண்டு போய் நிக்கிது பாரு!” என அவன் வாஹினியிடம் சொல்ல, ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் சிம்மவாஹினி.

“மேடம் ப்ளீஸ்! ஆதன் கிட்டே சொல்லுங்களேன்.! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவனாய் நிக்கிறேன். நான் வேணும்ன்னா உங்க இழப்புக்கு அதிகமாகவே கொடுக்கிறேன். ப்ளீஸ் எங்களை விட்டுடேன்..!”

“பணத்தால் எல்லாத்தையும் வாங்க முடியாது பரமேஷ்வர். அப்படி வாங்க முடிஞ்சிருந்தால், இப்படி என் முன்னே வந்து நின்னுருக்க மாட்டீங்க தானே? பணம் என்கிற மூன்றெழுத்து வார்த்தை உங்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்குது. என்னைப் பெத்தவரையும் சேர்த்து தான் சொல்றேன். வெறும் உயிரில்லா கலர் காகிதம். அதற்கும் இருக்கும் மதிப்பு, உயிரோட இருக்கிற மனுஷனுக்கும், அவன் மனசுக்கும் இல்லையே?” எனச் சொன்ன ஆதனின் வார்த்தைகளில் ஆத்திரம் நிரம்பியிருந்தது.

“ஆதன் இவர் என்ன சொல்றார்? ஆகாஷ் தப்பு பண்ணினான் அதனால் தானே, ஜெயிலில் இருக்கான். ஆனால், இவர் ஏன் உன் கிட்டே வந்து உதவி கேட்கிறார்? எனக்கு ஒண்ணுமே புரியலையே? அவர்கிட்டே இல்லாத பணமா?” குழப்ப மேகங்கள் அவளின் நிலா முகம்தனில் கலக்கமாய் சூழ்ந்திருந்தது.

“செஞ்சதுக்கான பலனை அனுபவிச்சு தானே ஆகணும். பிள்ளைகளை ஒழுங்கா வளர்த்திருந்தால் இதெல்லாம் தேவையா? செய்யறெதெல்லாம் தப்புன்னு நீங்க கொஞ்சம் சொல்லி வளர்த்திருக்கலாம் பரமேஷ்வர். இப்போ பாருங்க, தேவையில்லாமல் உங்க புள்ளை ஜெயிலுக்குப் போய், உங்களை என் முன்னாடி கை கட்டி நிக்க வச்சுட்டான். நீங்க எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன், தமிழ்நாட்டை யார் ஆளனும்ன்னு முடிவு செய்யற உங்களைப் போய் இப்படி நிக்கவச்சிட்டானே உங்கப் பையன்.!” நக்கல் புன்னகையுடன் பரமேஷ்வரைப் பார்த்துப் பேசினான் ஆதன்.

“போதும் ஆதன்! வயசில் சின்ன பையன்னு பார்க்காமல், உன்கிட்டே உதவி கேட்டு வந்துட்டேன், அதுக்காக என்னை ரொம்ப மட்டம் தட்டறே! எல்லாத்துக்கும் சேர்த்து நீ அனுபவிக்கப் போறே! உன் அப்பன் சொல்லி தான் என் புள்ளை உன் பொண்டாட்டி கடைக்கு தீ வச்சான். நான் தான் உன் இழப்பை விட அதிகமா பணம் தர்ரேன்னு சொல்றேன்ல்ல, இன்னும் என்ன?!” பொறுமை காற்றில் கரைய கோபம் எட்டிப் பார்த்தது அவர் குரலில்.

“ஓ! பணம் கொடுத்துட்டா எல்லா இழப்பையும் ஈடு கட்டிடலாமா சார்? உங்களுக்கு உங்கப் பையன் எவ்வளவு முக்கியமோ, அதே போல் தான் எனக்கு என்னோட கேண்டி க்ரஷ்! நான் வேணும்ன்னா உங்கப் பையனை உயிரோடு எரிச்சுட்டு அவனுக்கு பதில் அதிகமாவே பணம் கொடுத்துடுறேன். நீங்க வேணும்னா புதுசா ஒரு பையனை வாங்கிக்கோங்க! என்ன சார் மூஞ்சியே மாறிப் போச்சு! நீங்க சொன்ன அதையே தான் நான் உங்களுக்கு திருப்பி சொன்னேன். ரொம்ப வலிக்குதுல்ல சார். வார்த்தையில் சொல்லும் போதே உங்களுக்கு வலிக்குதே, நான் என் அடையாளம் என் கண் முன்னால் எரிஞ்சு சாம்பலாகிறதைப் பார்த்தேன். உங்களைப் பொருத்தவரை அது ஒரு உயிரில்லாத பொருளாய் தோணலாம். ஆனால் எனக்கு அது தான் எல்லாமே! அது என்னோட அடையாளம். நானாக உருவாக்கிக் கொண்ட அடையாளம். நீங்கக் கொடுக்கிற பணத்தால் நான் பட்ட வலியையோ வேதனையையோ போக்க முடியாது. இன்னொன்னு ஞாபகம் வச்சுக்கோங்க, இந்தப் பணமெல்லாம் பூமியைத் தவிர வேறெங்கேயும் செல்லாது.” அவர் பேசியதைப் பொறுக்க முடியாது உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்று கத்தியிருந்தாள் சிம்மவாஹினி.

“சிமி! கூல்! டென்ஷன் ஆகாதே! ஐ கேன் ஹேண்ட்டில்! நீ அமைதியாய் இரு!” என அவளை அமைதிப்படுத்தியவன்,

“என் தங்கச்சி சம்யூவிற்காக மட்டும் தான், நான் நிஷாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால் உங்கப் பையன் என் தங்கச்சியை ஏமாத்தி வீடியோ எடுத்து மிரட்டினானோ, அப்போவே அவன் தலையைக் கிள்ளி துடிக்க துடிக்க கொன்னுருக்கணும். ஆனால், என் தங்கச்சி உங்கப் பையனை விரும்பினாங்கிற ஒரே காரணத்திற்காகவும், உங்களுக்காகவும் மட்டும் தான் அமைதியாய் இருந்தேன். என் நிறுவனத்தோட டெலிவரி ஆள் பையில் ட்ரக்ஸ் வச்சப்போ கூட, பெரிய பிஸ்னஸ்மேன் உங்க பேர் கெட்டுடக் கூடாதுன்னு அமைதியாய் இருந்தேன். ஆனால், என் சிமி உங்களை என்ன செஞ்சா? நேரடியாய் என் கிட்டே மோத தைரியமில்லாமல், அவள் கடை மேல் கை வைக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது.? என் அப்பா சதாசிவத்திற்காக செஞ்சேன்னு சொல்லாதீங்க, உங்களுக்கு தனிப்பட்ட லாபமில்லாமல் இதையெல்லாம் செஞ்சீங்களா?” ஆதனின் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை.

“தனிப்பட்ட லாபமில்லாமல் செய்யலை! எல்லாம் கணக்கு போட்டு தான் செஞ்சோம். இப்போ என்னாங்கிற? எங்களோட ஒட்டுமொத்த கணக்குமே வளர்ந்துட்டு வர்ர உன் நளபாகம் நிறுவனம் தான். அதுக்குத்தான் உன் தங்கச்சியைப் பகடைக்காயாய் வச்சு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்டோம். பட், எங்களுக்கே நீ ட்விஸ்ட் கொடுத்துட்டு, இந்த ஒண்ணுமில்லாதவளுக்கு தாலி கட்டிட்டே! எல்லா ப்ளானும் சொதப்பி போய், இப்போ இன்கம் டேக்ஸ் ரெய்ட்டில், அக்கௌண்ட் மொத்தமும் ஃப்ரீஸ் ஆகிடுச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீ தான் ரித்வி! உன்னால் தான் எல்லாமே!” எனக் கத்தியபடி அவன் முன் வந்து நின்றாள் நிஷா.

“வாயை மூடு நிஷா! சிமியைப் பத்தி பேசறதுக்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. கையில் பத்து பைசா இல்லாத போதும் கூட, உங்க திமிர் குறையவே இல்லையே? ரெய்ட் வந்து அத்தனையும் அள்ளிட்டு போய்ட்டாங்களா? இதுக்குத்தான் நேர்மையான வழியில் சொத்து சேர்க்கணும். இந்நேரத்திற்கு உங்க பினாமி வீட்டுக்கும் ரெய்ட் போயிருக்குமே.! அவர் என்ன கதியில் உட்கார்ந்திருக்கிறாரோ? இந்தச் சூழ்நிலையில் ஆகாஷை எப்படி வெளியில் எடுப்பிங்க.? இங்கே வந்து கத்தற நேரத்திற்கு வேறு எதாவது செய்ய முடியுதான்னு பாருங்க!” ஆதன் சொல்லவும்,

“வாட்!” அதிர்வுடன் தலையில் அடித்துக் கொண்டார் பரமேஷ்வர்.

“நீ என்ன சொல்றே ஆதன்? உனக்கெப்படி தெரியும் இதெல்லாம்..!” முகத்தில் அதிர்வின் ரேகைகள்.

“எது, என்னைப் பெத்த மிஸ்டர். சதாசிவம் தான் உங்க பினாமின்னு எனக்கு தெரியாதா என்ன? சோழியன் குடுமி சும்மா ஆடாது பரமேஷ்வர். எங்கப்பா நிஷாவைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லும் போதே, நான் சுதாரிச்சுட்டேன். பணமும் பதவியும் தானே உங்களை இப்படி ஆட்டி வச்சது. இனிமே நான் ஆட்டி வைக்கிறேன் நீங்க ஆடுங்க! என் சிமி கண்ணிலிருந்து சிந்திய கண்ணீருக்கு உங்களால் நஷ்ட ஈடு கொடுக்கவே முடியாது பரமேஷ்வர்.!” எனச் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான் ஆதன்.

பரமேஷ்வரோ, ஓய்ந்து போய் தலையில் கை வைத்து அமர்ந்துவிட, அதே நேரம் சதாசிவமும், தலையில் கை வைத்தபடி அவர் வீட்டில் அமர்ந்திருந்தார்.
ஒட்டுமொத்த வீடும் அலங்கோலமாய் கிடக்க, இதுவரை அவர் சம்பாதித்தது, பினாமியாய் பாதுகாத்து வைத்திருந்தது, பதுக்கி வைத்திருந்தது அத்தனையும் ஒரே நாளில், சுரண்டி எடுத்துக் கொண்டு போய் விட்டனர் வருமான வரித் துறையினர்.

அவர்கள் எடுத்துக் கொண்டு போவதெற்கெல்லாம் சரியாய் கணக்கு காட்டி, மீண்டும் திரும்பப் பெறுவதென்பது நடக்கவே இயலாத ஒன்று. எனென்றால், அனைத்துமே வருமானத்திற்கு அதிகமாக, அரசுக்குப் புறம்பான காரியங்களில் சம்பாதித்தது அல்லவா? நேர்மையான கணக்கு வழக்கிற்கு அவர் எங்கே போவார் பாவம்.

அதே நேரம், அலைபேசி அவசரமாய் அழைக்கவும் எடுத்துப் பேசியவருக்கு அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

“யோவ்! முன்னவே சொன்னேன்ல லஞ்சமாய் இருந்தாலும் அளவா வாங்குன்னு. உன்னை இதுக்கு மேலேயும் கட்சியில் வைத்திருந்தால், வர்ர தேர்தலில் கட்சி ஜெய்க்கிறது சந்தேகம் தான். அதனால் தலைவர் உன்னை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து துக்கிட்டார். தப்பித்தவறி இந்தப் பக்கம் வந்துடாதேய்யா!” சதாசிவத்தின் பதிலுக்காகக் கூடக் காத்திருக்காமல், இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட,
நாயை விடக் கேவலமாய் தன்னை நோக்கிப் பார்வையை வீசிய காயத்ரியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் சதாசிவம்.

“பத்து வயசில் ஆம்பிள்ளைப் பிள்ளை இருக்குன்னு தெரிஞ்சும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே, என்னைச் சொல்லணும். இப்படி என்னை நடுத்தெருவில் நிறுத்திட்டியே?” அழுது புலம்பியபடி அமர்ந்திருந்தார் காயத்ரி.

“பேசாமல் வாயை மூடிட்டு இரு. நானே என்ன செய்யறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.!”

“நீ யோசிச்சுக்கிட்டே இரு! நான் போய் ஆதன் கிட்டே உதவி கேட்கப் போறேன். அவன் இப்படி பிரச்சனைன்னு தெரிஞ்சால் கண்டிப்பா உதவி செய்வான்.!” தான் பெறாத மகனின் நினைப்பு இத்தனை வருடங்களில் முதன்முறையாய் அவருக்கு இப்போது தான் வந்தது.

“இந்த வாசலைத் தாண்டி போனே, உன்னைக் கொன்னுடுவேன் காயத்திரி. பொய் சொல்றேன்னு நினைக்காதே! எனக்கு ஒண்ணும் கொலை புதுசு இல்லை. என் அரசியல் ஆதாயத்திற்காக என் பொண்டாட்டி கற்பகத்தையே கொன்னவன் நான். உன்னைக் கொல்ல எனக்கு நிமிஷமாகாது.!” உணர்ச்சி வேகத்தில் உண்மையைச் சொன்னவரை கண்களில் மிரட்சியுடன் பார்த்தார் காயத்ரி.

“என்ன சொல்றே? நீ கொலைகாரனா? கொலைகாரனையா என் அப்பா எனக்கு கட்டி வச்சாரு! ஒரு கொலைகாரன் கூடவா இத்தனை வருஷம் குடும்பம் நடத்தினேன்.? நான் உன் கூட வாழ்ந்த அசிங்கத்துக்கு சாட்சியாய் பிள்ளையும் பெத்து வச்சிருக்கேனே? எதிர்க்கட்சியோட சதின்னு நீ சொன்னதெல்லாம் பொய்யா?” கண்கள் கலங்க, அச்சத்தில் உடல் நடுங்க, சுவற்றில் ஒட்டியபடி மிரட்சியுடன் பேசினார் காயத்ரி.

உடல் அச்சத்தில் நடுங்க, கண்கள் கலங்கிப் போனது காயத்ரிக்கு.

“அவ இடம் ,பொருள், ஏவல் அறிஞ்சு பேசத் தெரியாதவ. சாமர்த்தியம் சுத்தமாய் கிடையாது. சரியான தத்தி! ஒரு பொய் சொல்லக் கூடத் தெரியாது. அரசியல்வாதியோட பொண்டாட்டியாய் இருக்க தகுதியே இல்லாத ஜந்து..!” என அவர் என்றோ கற்பகத்தைப் பற்றிச் சொன்னது செவிக்குள் வந்து மோத, மூளை மரத்துப் போக ஸ்தம்பித்து நின்றவரின் கண்கள் சொருகி மயங்கிச் சரிந்தவரை சம்யுக்தாவின் கரங்கள் தாங்கிப் பிடித்திருந்தது.

இசைக்கும்..❤

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்