
அனைவரும் இரவு உணவிற்காக உணவு மேசையில் அமர்ந்திருக்க, தோசை வார்த்த படி இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள் ஜனனி.
எப்போதும் உதவிக்குக் கரம் நீட்டும் அவளது துணைவன் நந்து கூட, இன்று சிடுசிடுப்புடன் மேசையில் அமர்ந்து தோசையைப் பிய்த்து உண்டு கொண்டிருந்தான். பெரிய சதுர தோசைக்கல் என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு மூன்றென ஊற்றி எடுத்து வந்துவிடுவாள்.
ஒவ்வொரு முறையும் உணவு மேசை அருகே வரும்போதும் நந்துவை அழுத்தமாகப் பார்த்தபடிதான் தோசையை வைப்பாள். ஆனால் அவனோ, அவளைக் கண்டுகொள்ளாமல் தோசை சாப்பிடுவதிலும், மகன் சச்சினைச் சாப்பிட வைப்பதிலும் கவனம் செலுத்தினான். அவனது இந்தச் செய்கை ஜனனிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
பெரியவர்கள் சாப்பிட்டு முடித்துக் கைகழுவிவிட்டு அறைக்குள் சென்றுவிட, இவர்களும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “போதும்” என்ற சச்சின் கைகழுவச் சென்றான்.
“சச்சின்! என்னடா ஆச்சு உன் அப்பாவுக்கு? ஏன் முகத்தை உர்ன்னு வச்சிருக்கார்? பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்ல மிஸ் எதுவும் அப்பாவைத் திட்டுனாங்களா? இல்லை வேற எதுவும் சொன்னாங்களா?”
“இல்லை, மிஸ் திட்டலையே! அப்பாவும் மிஸ்ஸும் சிரிச்சு சிரிச்சுப் பேசினாங்களே!”
“எது… சிரிச்சு சிரிச்சுப் பேசினாங்களா? என்னடா பேசினாங்க? என்ன சொன்னாங்க மிஸ்?!”
“நீ அப்பாகிட்டயே கேட்டுக்கோ மா, எனக்குத் தூக்கம் வருது!” என்று அவன் நழுவிக்கொண்டான்.
விபுவின் போதனையால் நந்துவை ‘அப்பா’ என்று அழைக்கப் பழகிக்கொண்ட சச்சின், இப்போது சரளமாகவே அப்பா என்கிறான். ஆனால் தனிமையில் அவனுக்கு நந்துதான் எல்லாம். ஆசையாக அழைத்து, முகத்தில் எச்சில் செய்து, தாயைச் சுற்றி விளையாடும் கன்று போல நந்துவின் மடியில் அமர்ந்து விளையாடுவது, அவன் கையால் உண்பது, அவனே பள்ளிக்கு அழைத்துச் செல்வது என சச்சினுக்கு நந்துவே உலகமாகிப் போனான். அன்னை கூட அடுத்த பட்சம்தான். இருவரும் இணைந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், சில நேரம் ஜனனிக்குச் சிறு பொறாமையாகவும் இருக்கும்.
அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவிய மகனை “டேய்!” என அழைக்க, அவனோ ஓடியே போய்விட்டான்.
சரியாக அந்த நேரம் நந்துவும் உள்ளே வந்தான். அவனை முறைக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளாது தட்டை மட்டும் கழுவி வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். இவளுக்கு ஆத்திரம் இன்னும் கூடியது. இவள் இன்னும் சாப்பிடவில்லை. மூன்று தோசை ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தாள். வழக்கமாக அவன் தான் அவளுக்கு ஊட்டி விடுவான். இன்று ஊட்டிவிடவில்லை; ஆனால் அவளுக்கு எதிரே அலைபேசியைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
‘ம்க்கும்… ம்கூக்கும்’ என இவள் இரும, அவனோ கண்டுகொள்ளவே இல்லை.
“இப்படி ஒன்னும் நான் சாப்பிடணும்னு அவசியம் இல்லை!” என்று தட்டைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க,
“ஜனனி!” என்று முழுப் பெயரையும் அழைத்து அவளைத் தடுத்தான். அந்த அழைப்பு அவளுக்கே அந்நியமாகத் தெரிந்தது. “உட்கார்ந்து சாப்பிடு” என்றான் அழுத்தமாக.
“இல்லை, எனக்குப் பசிக்கல!” என இவளும் முறுக்கிக்கொள்ள,
“பச்… உட்கார்ந்து சாப்பிடுடி!” என்று மேலும் அதட்டினான். அவளோ விடாமல், “என் கையால சாப்பிடற அளவுக்கு எனக்குப் பசிக்கல” என்று உள்ளே செல்ல முயன்றாள்.
“நில்லுடி!” என்று கையைப் பிடித்துத் தடுத்தவன், அவளோடு அமர்ந்து அவளுக்கு ஊட்டிவிட்டான். இருவர் முகத்திலும் சிடுசிடுப்பு கொட்டிக்கிடந்தது.
“என் மேல என்ன கோபம்? நான் என்ன பண்ணேன்?” எனக் கேட்டாள். அவனோ அவளது கேள்வியை அசட்டை செய்துவிட்டு மீண்டும் ஊட்ட, அவனது கையைப் பிடித்துத் தடுத்தவள், “சொன்னாதான் சாப்பிடுவேன்” என்று அடமாய் நின்றாள்.
‘சரியான இம்சை’ என உள்ளுக்குள் முனங்கியவன், “நீ சாப்பிட்டு முடி, சொல்றேன்” என அவளைச் சாப்பிட வைக்க அவ்வாறு கூறினான். அவளும் சிறு பிள்ளை போல நம்பி அவன் கையால் உணவை விழுங்கினாள். அவள் உண்டு முடிக்க, இவனும் தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தான்.
“இப்போ சொல்லு” என்றாள்.
“உள்ள வாடி” என்று அவன் அறைக்குள் செல்ல, இவளும் பின்தொடர்ந்தாள். சச்சின் உறங்குவதைப் பார்த்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டுப் பால்கனிக்குச் சென்றான்.
“என்னடி வேணும் உனக்கு இப்போ?” என்று சற்றுக் காட்டமாகக் கேட்டான்.
“எதுக்கு இப்போ என் மேல கோபமா இருக்க? நியாயப்படி நான் தான் உன் மேல கோபமா இருக்கணும். பேரண்ட்ஸ் மீட்டிங் நான் போகணும், உன்னைச் சீக்கிரமா ஃபங்ஷனுக்கு வந்திடுன்னு தானே சொன்னேன்? நீ பாட்டுக்கு மீட்டிங் போயிருக்க. சரி… அங்க என்ன சொன்னாங்கன்னு சாயங்காலத்துல இருந்து கேட்கறேன், மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்க. இவன் என்னடான்னா அப்பாகிட்ட கேளுங்கறான். நீ என்னடான்னா சிடுசிடுன்னு இருக்க. இதுல டீச்சர்கிட்ட சிரிச்சு சிரிச்சுப் பேசியிருக்க வேற? இதுக்குத்தான் நீ என் பேச்சை கேட்காம போனியா?” எனக் கோபமாய்க் கேட்டாள்.
“எல்லாத்தையும் கேட்டு முடிச்சுட்டியா? இத்தனை கேள்வி கேட்டயே… நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்றான்.
“என்ன கேள்வி?”
“சச்சினுக்கு நான் யாரு?”
“இதென்ன கேள்வி? நீ அப்பா!”
“ம்ம்… அப்பா தானே! அப்போ நான் பேரண்ட்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணலாம் தானே? ஏன் நான் பண்ணக் கூடாதா? ஒரு நிமிஷம்… நீ என்னைச் சச்சினோட அப்பாவா நினைக்கல தானே? நீ மட்டும்தான் அவனோட மீட்டிங் அட்டென்ட் பண்ணணுமா? ஓகே, சூழ்நிலை இந்த முறை சரியில்லை; ரெண்டு பேரால சேர்ந்து போக முடியல. அப்போ ‘என்னை’ப் போகச் சொல்லியிருக்கலாம் தானே? என்னை வரச் சொல்லிட்டு, ‘நீ’ தான் மீட்டிங் போகணும்னு ஏன் சொன்ன? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா?” என குரல் கம்மக் கேட்க, ஜனனிக்குத் தன் தவறு புரிந்தது.
அவள் வேண்டுமென்று செய்யவில்லை என்றாலும், இது அவனது சிறிய உரிமைப் போராட்டம். அவனது கோபத்தில் இருக்கும் நியாயம் அவளுக்கும் புரிந்தது.
விழிகள் கலங்கி நின்றவனைத் தன் பக்கம் திருப்பினாள். “நந்து…” என்றாள். கையைத் தட்டிவிட்டான்.
“நான் பண்ணது தப்புதான்! நிஜமா தெரிஞ்சே பண்ணலடா. எப்பவும் நான் தானே அட்டென்ட் பண்ணுவேன், அந்தப் பழக்கத்துல சொல்லிட்டேன். நிஜமா வேற எந்தக் காரணமும் இல்லை, ப்ளீஸ் என்னை நம்பு! ஐ யம் சாரிடா.”
அவன் மீது தவறு இல்லை என்று மனம் உரைத்தாலும், அவனது மூளை கோபத்தை விடாமல் பிடித்துக்கொண்டது.
“சாரிடா! இனி இதுபோல எப்பவும் பண்ண மாட்டேன். இனி எல்லா மீட்டிங்கும் நீயே போ! அவனுக்கு எல்லாத்தையும் நீயே பாரு. ப்ளீஸ்… பேசாம இருக்காதடா” எனக் கண்கள் கலங்கச் சொன்னாள்.
அவளது நனைந்த விழிகளைக் கண்டதும், அவன் பிடித்து வைத்திருந்த கோபம் காணாமல் போனது. இருந்தாலும் வீராப்பாக, “தண்டனை இருக்கு! இன்னைக்கு ஒரு நாள் கீழப் படு!” என்றான்.
அவள் தரும் தண்டனையை இன்று அவன் கொடுக்க, உதட்டைச் சுழித்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தவள், கீழே போர்வையை விரித்துப் படுக்க, அவனோ சிரிப்பை அடக்கியபடி கட்டிலில் படுத்துக்கொண்டான்.
கண்களை மூடி ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் மேல் ஒரு பாரம் விழ, கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் மீது பாதியாகச் சரிந்து, கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தான் அவளது கயவன்.
“நீங்க ரோசாக்காரராச்சே! என்ன இந்தப்பக்கம்?” என வடிவேலு பாணியில் கேட்டாள்.
“ரோசத்தை விட இந்த ரோசாதான் முக்கியம்…” என்று அவளது கன்னத்தில் முத்தம் வைக்க, இப்போது அவள் முறைத்தாள்.
“இப்போ நீ தண்டனை கைதி! இந்த முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது. நான் கொடுக்கிற தண்டனையை அனுபவிக்கணும்” என்றவன் மொத்தமாக அவள் மேல் படர, அவனது இதழ்கள் கொடுத்த சுகமான தண்டனையை ஏற்றுக் கொண்டாள். உடலும் உள்ளமும் கசடுகளை மறந்து கூடத் தொடங்கினன.
திருமணம் முடிந்த மறுநாள், வெற்று உடலுடன் இருவரும் பின்னிப் பிணைந்து கிடந்தனர் மெத்தையில்.
முதலில் கண் விழித்த நந்து, நேரமானதை உணர்ந்தான். தனது மார்போடு மார்பு ஒட்டி, வியர்வை பிசுபிசுப்புடன் பசை போட்டு ஒட்டியது போலக் கிடந்தவளை எழுப்ப அவனுக்கு மனமில்லை. ஆனால், அவர்களை எதிர்பார்த்து ஒரு ஜீவன் காத்திருக்கும் என்பதால் அவளை எழுப்பிவிட்டான்.
அவளோ இன்னும் அவனுக்குள் ஒன்றி அவனைச் சோதனை செய்ய, “அன்னம்மா! எழுந்திரடி, லேட்டாயிடுச்சு,” என்று அவள் கன்னத்தில் தட்டினான்.
“இப்பதானே தூங்கினேன், அதுக்குள்ள எழுப்புற? இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்,” என்றாள் அவன் நெஞ்சில் வாகாகப் புதைந்து கொண்டு.
“கொஞ்ச நேரமென்ன, ஒரு நாள் முழுக்க இப்படியே இருக்கலாம் தான். ஆனா நம்ம புள்ளை நம்மளத் தேடுவானே!” என்றதும் வேகமாக எழுந்து அமர்ந்தவள், அவன் பார்வையைத் தாளமாட்டாமல் போர்வையை மார்போடு இழுத்து மறைத்தாள்.
“ம்க்கும்! அதான் முழுசா பார்த்தாச்சே! இதுக்கு அப்புறம் என்ன?” என அவன் கண்ணடிக்க, “ச்சீ!” என்றாள் வெட்கத்துடன்.
அந்த வெட்கத்தைக் கண்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவளும் ஆடையை எடுத்து அணியத் தொடங்க, அவளது கைகளைப் பற்றி, “எப்படி பீல் பண்ண? உனக்கு பிடிச்சிருந்ததா?” எனக் கேட்டான்.
“ரொம்ப! ஒரு தேவதை போல, ஒரு ராணி போல உணர்ந்தேன். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உன் காதலை உணர்த்திட்ட. எனக்குள்ள இருக்கிற சிறு துரும்பு கூட உனக்கு பழகிடுச்சு… பழக்கிட்ட! உன்னைக் கேட்டு அடம்பிடிக்கும் போதெல்லாம் இதே போல எனக்குச் சேவை செய்யணும், என்ன? இல்லாட்டி பித்து பிடிச்சு உன்னையே தின்றுவேன்,” என்று அவள் சொல்ல, அவள் இதழில் முத்தமிட்டான்.
திருமணத்திற்குப் பிறகு இருவரது வாழ்க்கையுமே மாறிப்போனது. பகலில் சச்சினுக்கு நல்ல தாய் தந்தையாகவும், இரவில் அவன் உறங்கிய பிறகு கணவன் மனைவியாகவும் பின்னிப் பிணைந்து கிடப்பார்கள். நாட்கள் கடக்க, சச்சினின் பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு (PTA Meeting) வைக்கப்பட்டது. இருவராலும் சேர்ந்து செல்ல முடியாத சூழ்நிலை; இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் வேலை இருந்தது.
நந்து கேட்டரிங் வேலைக்குச் சென்று, விடுதி மாணவர்களுக்குக் காலை உணவு மட்டும் தயாரித்துக் கொடுத்து அனுப்ப வேண்டும். திருமண ஆர்டர் வந்ததால், அங்கே தனது கேட்டரிங் ஆட்களை அழைத்துக்கொண்டு ஜனனி சென்றுவிட்டாள்.
காலை உணவைக் கொடுத்து அனுப்பிய பிறகு, நந்து சமையல் வேலை பார்க்க மண்டபத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது ஜனனியின் திட்டம். தான் சச்சினை அழைத்துக்கொண்டு பள்ளி செல்வதாக அவள் கூற, நந்துவிற்கோ கோபம். அவள் ஏன் தன்னைச் சச்சினுடன் பள்ளிக்குச் செல்லச் சொல்லவில்லை என்கிற ஆதங்கம் தான் அது.
திருமண மண்டபத்தில் காலை பந்தி வேளையில் அவளது கவனம் இருந்தாலும், அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி. நந்துவோ காலை உணவை அனுப்பிவிட்டு இல்லம் வந்தவன், சச்சினை அழைக்க, அவனோ “நீ ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போப்பா,” என்றான்.
அவ்வளவுதான்! அந்த வார்த்தையைப் பிடித்துக்கொண்டு இவனே பள்ளிக்கு அழைத்துச் சென்று மீட்டிங் அட்டென்ட் செய்துவிட்டு வந்தான். அவனை வீட்டில் விட்டுவிட்டு மண்டபத்திற்குச் சென்றான்.
சச்சினை அழைத்து வராமல் தனியாக வரும் நந்துவைப் பார்த்ததும் ஜனனி பொரிந்து தள்ளினாள். “எங்க சச்சின்? ஏன் இவ்வளவு லேட்டா வர்ற? இந்நேரம் மீட்டிங் முடிஞ்சிருக்குமே? இப்போ நான் போய் அவனைத் தூக்கிட்டு மீட்டிங் போகணுமா?” எனத் தான் சொன்னதை அவன் செய்யாத கோபத்தில் கத்தினாள்.
“நான் சச்சினோட மீட்டிங் போயிட்டுத் தான் வர்றேன்… அவனை வீட்ல விட்டுட்டு இங்க வர்றேன். வா, வேலையைப் பார்ப்போம்,” என்றான் முன்னே நடந்தபடி.
“நான் என்ன சொன்னேன், நீ என்ன பண்ணியிருக்க? மீட்டிங்கிற்கு நான் போறேன்னு தானே சொன்னேன்? நீ ஏன் போன?” எனக் கேட்டதும் அவனுக்குக் கோபம் இன்னும் ஏறியது. அவளை முறைத்துவிட்டு வேலை பார்க்கச் சென்றான். அன்று முழுக்க அவன் அவளிடம் பேசவே இல்லை. ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதிலளிக்க, “வீட்டில் பேசிக்கொள்ளலாம்” என்று அவளும் விட்டுவிட்டாள். வீட்டிற்கு வந்ததும் அவன் அப்படியே இருக்க, அதன் பிறகு (கூடலில்) நடந்ததுதான் தெரியுமே!
கூடல் முடிந்து, இருவரும் ஒருவரின் முகம் பார்த்தபடி அணைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.
“அன்னம்மா,” என்றான் நந்து.
“ம்ம்…”
“என் வாழ்க்கையில முக்கியமான ரெண்டு பேர்ன்னா அது நீயும் சின்னுவும் தான்டி. உங்களுக்கு ஒண்ணுன்னா நான் தான் முன்னாடி நிற்கணும். உன்னோட வளர்ச்சியிலயும் சச்சினோட வளர்ச்சியிலயும் நான் பெரும் பகுதியா இருக்கணும்ங்கிறது என் ஆசையும் கடமையும் கூட. அதை மட்டும் என்கிட்ட இருந்து பறிக்காதடி! என்னை ஒதுக்கி வைச்சிடாத! எனக்கு முன்னுரிமை குடு அன்னம்மா! இல்லைன்னா, நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன்னு நீ நினைக்கிறியா?” எனத் தனக்குள் இருந்த ஏக்கத்தை அவளிடம் கொட்டிவிட்டான்.
அறியாமல் செய்த தவறால் அவன் மனதில் உண்டான சிறு காயத்தையும், அதை வெளிப்படுத்தும் கண்ணீர் நிறைந்த விழிகளில் வழியும் வலியையும் கண்டாள் ஜனனி.
வேகமாக அவன் வாயைப் பொத்தியவள், “எங்க ரெண்டு பேருக்கும் நீ மட்டும்தான் எல்லாம்… மத்தவங்க எல்லாரும் இரண்டாம் பட்சம்தான். உன்னை ஒதுக்கி வைச்சிட்டு நாங்க எங்க வாழ்க்கையில என்ன நல்லது கண்டிடப் போறோம்? உன்னால தான் என் வாழ்க்கையில இப்படி ஒரு மாற்றமே! எங்களோட பெரும் பகுதி நீ தான்டா! நீ மட்டும்தான் எங்களைத் தாங்கப் போற! நிச்சயமாச் சொல்றேன், உன்னைக் காயப்படுத்தவோ அல்லது நீ சரிப்பட்டு வரமாட்டேன்னு நினைச்சோ நான் அப்படிச் சொல்லலடா! எப்பவும் நான் போறது வழக்கம்ங்கிறதால சொல்லிட்டேன். இதுக்கு பின்னாடி எந்தக் காரணமும் இல்லை… என்னை மன்னிச்சிடு நந்து,” என அவள் விழிகள் கலங்கின.
அதைத் துடைத்தவன், “நீ மன்னிப்புக் கேட்கணும்னு நான் இதைச் சொல்லலடி! இது சின்ன விஷயம் தான், ஆனாலும் அது ரொம்ப வலிச்சது, அதான் உன்கிட்ட சொன்னேன். எனக்குள்ள இருக்கிற எல்லாத்தையும் கொட்டுற இடம் நீ தானேடி!” என்று நெற்றி முட்டினான்.
“கரெக்ட்தான்! உன் மனசுல என்ன இருக்கோ அதைக்கொட்டிடு, சண்டை போடு, அடி! ஆனா முகத்தைத் தூக்கி வைச்சிட்டுப் பேசாம இருக்காத! எனக்கு அது வலிக்குது. பார்க்க அப்படியே சச்சினைப் போலவே இருக்கு நீ பண்றது. அப்புறம் எனக்கு அதை பெருசா எடுத்துக்கத் தெரியாது, சிரிப்பு வந்திடும்,” என்று சொல்லிச் சிரிக்க, அவளைச் செல்லமாக முறைத்தவன், அடுத்த நொடியே அவளது நெஞ்சில் புகுந்துகொள்ள, அவளும் தனது மகனைப் போல அவனை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
இருவருக்கும் உண்டான முதல் ஊடல், கோடி முத்தத்திலும் கூடலிலும் முடிந்தது. இனி இதுபோல இருவர் வாழ்விலும் ஊடலும் கூடலுமாகப் பேரின்பக் காதலோடு நாட்கள் கடக்கட்டும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1

