
ஐந்து மாதங்களுக்குப் பிறகு…
அறைக்குள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஜோவி. மேகவாணியும் ஜனனியும் கெஞ்சிக்கொண்டிருக்க, ஜோவியோ பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
சற்று முன் தான் அவளுக்குப் பெரிய மண்டபத்தில் ஊரைக் கூட்டி வளைகாப்பு நடத்தி, வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். பேறுகாலத்தில் உண்டான பொலிவோடும், சந்தனமும் குங்குமமும் அவளது அழகை மேலும் கூட்ட, சிரித்த முகத்துடன் இல்லாமல் விழிகள் கலங்கப் பிடிவாதமாக மெத்தையில் அமர்ந்திருந்தாள்.
“என்னடி பிடிவாதம் இது? இது சம்பிரதாயம் ஜோவி மா! அதோட அம்மா உன்னை இந்த ரெண்டு மாசம் நல்லா கவனிச்சுக்கணும்னு நினைக்கிறது தப்பா?” எனத் தாடையைப் பற்றிக் கெஞ்சிக் கேட்டார் மேகவாணி.
“பத்து மாசத்துல ஏழு மாசம் விபுவும் அத்தையும் தானே கவனிச்சாங்க… கடைசி ரெண்டு மாசம் என்னை நல்லா கவனிச்சுட்டுப் பேர் வாங்கலாம்னு பார்க்கிறீயா நீ?!” எனத் தாயிடம் வம்பு வளர்த்தாள்.
“அப்படியே இருக்கட்டும்! பிள்ளையைச் சுமக்கிறாளேன்னு பார்க்கிறேன். என்ன பேச்சு பேசுற நீ?” எனக் குரலை உயர்த்த, உதட்டைப் பிதுக்கிக் கண்கள் கலங்கச் சிறுபிள்ளை போல அழக் காத்திருந்தாள் ஜோவி.
மேகவாணியைப் பிடித்துக்கொண்ட ஜனனி, “ம்மா!! கோபப்படாதீங்க!!” என்றாள்.
“வேற என்னம்மா பண்ணச் சொல்ற? என் நிலைமை உனக்கு புரியுதுதானே! நான் அவளைப் பாசமா கவனிக்கணும்னு நினைக்கிறேன். இவ நான் பேரெடுக்கப் பண்றேன்னு சொல்றா! பேர் எடுத்து நான் என்ன சாதிக்கப் போறேன் சொல்லு” என அவரும் அழுது மூக்கை உறிஞ்சினார்.
“ஜோவி!! நீ பேசினது தப்பு. அம்மா கிட்ட சாரி கேளு” என்று அதட்டினாள் ஜனனி.
ஜோவியோ மேகவாணியைக் கட்டிக்கொண்டு, “சாரி மா! விளையாட்டுக்குத்தான் சொன்னேன். ப்ளீஸ் மா, நான் விபுவோட இருக்கேனே! நீங்க என்னை அடிக்கடி வந்து பாருங்க! இல்லையா இங்கேயே இருங்க! எனக்கும் விபுவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை… ப்ளீஸ் மா, நான் மதுரைக்கு வரல. அங்க வந்துட்டா நான் விபுவை வீக் எண்ட் (Weekend) தான் பார்க்க முடியும். மிச்ச அஞ்சு நாள் அவனை நினைச்சுட்டே இருப்பேன். எனக்கு எதுவுமே உள்ள இறங்காது ப்ளீஸ் மா! அவன் கையால சாப்பிட்டுப் பழகிட்டேன். எனக்கு அவனோட தான் மா இருக்கணும்… புரிஞ்சுக்கங்க…” எனச் சந்தனம் அப்பிய கன்னத்தில் கண்ணீர் கோடு வரையக் கெஞ்சினாள்.
மகளது கெஞ்சலைக் கண்டு அவர் மனம் நிறைந்து போனது. அவள் விழிகளைத் துடைத்துவிட்டு, “அப்போ உனக்கு அம்மா வேண்டாம், மாப்பிள்ளை தான் வேணுமா?” எனக் கேட்க,
“நீ வேண்டாம்னு நான் சொல்லுவேனா! நீயும் என்னோட இருக்கணும்ங்கிறது தான் என்னோட பேராசையே!!!” என்றவள் சிரித்தபடி, “நீயும் அப்பாவை விட்டு வர மாட்டேன்னு அழுத விஷயம் எனக்குத் தெரியும்” என்றாள். அவரும் இதே நிலையில் தாயிடம் அடம்பிடித்து நவநீதனுடன் இருந்த செய்தியைப் பாட்டி மூலம் கேட்டிருக்கிறாள் ஜோவி. அதைச் சொல்ல அவர் முகத்திலும் வெட்கப் புன்னகை.
“உன் பாட்டி சொன்னாங்களாக்கும்” என்று கன்னத்தில் கிள்ள, “ஆமாம்” என்றாள். பின் தன்னைச் சமாதானம் செய்துகொண்ட மேகவாணி, மகளின் ஆசைக்கு இணங்கினார்.
அதற்குள் ஆண்கள் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
“என்ன அத்தை, இன்னும் உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போகலையா? நல்ல நேரத்தைத் தவறவிடக் கூடாதுன்னு மாமா சொல்லிட்டே இருந்தார். என்னாச்சு? எப்ப கூட்டிட்டுப் போவீங்க?” என உள்ளே நடப்பதை அறியாமல் கேட்டுவிட்டான் விபு.
மெத்தையில் அமர்ந்தவள் கையில் கிடைத்த தலையணையை அவன் மீது தூக்கி எறிந்து, “எப்படா கூட்டிட்டுப் போவாங்க, நீ ஜாலியா இருக்கலாம்னு நினைக்கிறீயா? மவனே, உன்னைச் சந்தோஷமாவே இருக்க விட மாட்டேன். நான் இங்கேயே இருக்கப் போறேன். உன் உயிரை வாங்கத்தான் போறேன்” என கோபமாகச் சொல்ல, மற்ற அனைவரும் சிரித்தனர்.
“என்னத்தை சொல்றா இவ? நீங்க கூட்டிட்டுப் போகலையா?” எனப் பெரும் அதிர்ச்சியோடு கேட்பவனை இன்னும் தீயாக முறைத்தாள் அவள்.
“உன் பொண்டாட்டி உன்னோட இருக்கணும்னு தான் ஆசைப்படுறா! அவ மதுரைக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறா!!!” என ஜனனி சொல்ல, அவளைக் காதலாகப் பார்த்தான் விபு.
“ரொம்பத்தான் செல்லம் கொடுத்திருக்கீங்க மாப்பிள்ளை இவளுக்கு” என்றதும் அவனுக்கு வெட்கம் வந்தது.
“மொதல்ல அப்பா செல்லம்! அப்புறம் அம்மா செல்லம்! இப்போ மாமா செல்லம்! இவளுக்கு மட்டும் செல்லம் கொஞ்ச எத்தனை பேர் இருக்கீங்க! ஆனா என்னைச் செல்லம் கொஞ்ச யாருமே இல்ல” என ஜீவிதன் வராத கண்ணீரைத் துடைத்தபடி சொல்ல,
“என்ன ஜீவி இப்படிச் சொல்லிட்ட? நீ மாமா செல்லம் இல்லையா? வாடா” என்று விபு கைகளை நீட்ட, அவனுக்குள் அடங்கிப் போனான் ஜீவி.
பொறாமை கொண்டு அந்தப் பக்கம் வந்து தனது கணவனை அணைத்துக்கொண்டாள் ஜோவி. சொல்லப்போனால் இருவருமே விபு செல்லம் தான். சென்னையில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் (Hostel) தங்கிப் படிக்கிறான் ஜீவிதன். அவனை அவ்வப்போது விபு பார்த்துக் கொள்வான். வார விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஜோவியைப் போல அவனையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள, மாமா-மச்சான் உறவு மேலும் பலமாகிப் போனது. மேகவாணிக்கு மருமகனின் மேல் முழு நம்பிக்கை வந்ததோடு, அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியும் வந்துவிட்டது.
“அத்தை, நீங்களும் மாமாவும் கூட இங்கேயே இருங்க! அங்க தனியா இருந்துட்டு என்ன பண்ணுவீங்க? உங்க பொண்ணோட இருந்து உங்க ஆசை தீர அவளைக் கவனிச்சுக்கோங்க. நாங்க யாரும் எதுவும் சொல்லப்போறதில்லை” என்றான் விபு.
“ஆமா அண்ணி!!! நீங்க எங்களோட இருங்க!!! ஜோவிக்கு உங்களோட இருக்கணும்னு ஆசை இருக்கும்ல! அண்ணனும் நீங்களும் இருங்க” என்று சுதாவும் சொல்ல,
“அதுக்கென்ன அண்ணி! இப்போ போயிட்டு ஒருசில வேலைகளை முடிச்சுட்டு அடுத்த மாசமே வந்துடுறோம். அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சுதான் போவோம், சரியா?” என மேகவாணி சொல்ல, ஜோவிக்கு இரட்டிப்புச் சந்தோஷம்.
அனைவரும் அங்கிருந்து நகர்ந்ததும், விபுவின் அருகே வந்த ஜோவி, “இன்னும் கூட்டிட்டுப் போகலையான்னு கேட்கிறியே… நைட்டு உனக்கு இருக்குடா” என்று விலாவில் குத்திவிட்டுப் போனாள்.
வலியில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவனருகில் வந்த நந்துவும், “என்ன பங்காளி, நைட்டு வளைகாப்புப் பரிசு இருக்கு போல!” என்றான்.
“நீ வேற ஏன்டா? ரெண்டு மாசம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, அழுது அடம்பிடிச்சு என் சந்தோஷத்துல மண்ணள்ளிப் போட்டுட்டா” எனப் பொய்யாக வருத்தம் கொண்டான் விபு.
“ஓ!!! ஜோவிகிட்ட சொல்லட்டுமா நண்பா?” என்று அவனது பக்கவாட்டில் வந்து நின்றாள் ஜனனி.
பெரிய கும்பிடாகப் போட்டவன், “அவ எனக்குப் பிரசவம் பார்க்கவா? நண்பி, நாரதர் வேலை பார்க்காதீங்க… மீ பாவம்” என்றான்.
“அது…” என்று ஒரு விரலை நீட்டி மிரட்டினாள் ஜனனி.
“பங்காளி!!! நீயும் என்னைப்போல தான். மேடமும் அவங்க பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்குப் போக மாட்டாங்க போல” என்றான் நந்து.
“ஏன்? நான் ஏன் போகணும்? புள்ளையைக் கொடுத்தா மட்டும் போதுமா, பாத்துக்க வேணாமா? நானும் என் புருஷனோட தான் இருப்பேன். என்ன நந்து? நீயெல்லாம் இப்படி பீல் (Feel) பண்ண மாட்டேதானே!” என ஐந்து மாதக் கருவைச் சுமந்து, அதன் மேலே கையை வைத்தபடி கேட்ட மனைவியிடம், சிரித்தபடி “ஆ… ஆமாம்மா” என்றான் நந்து. ‘எப்படிச் சிக்கியிருக்கேன் பாருப்பா’ என விபுவிடம் ஜாடை காட்ட, அவனோ சிரிப்பை அடக்கப் பாடுபட்டான். இருவரும் தங்களின் தலையெழுத்தை எண்ணிச் சிரித்துக்கொண்டனர்.
பின் ஜோவியின் ஒன்பதாம் மாதத்தில் ஜனனிக்கும் ஏழாவது மாதம் தொடங்க, நல்ல நாளில் வளைகாப்பு நடத்தினார்கள்.
ஜோவிக்குப் பிரசவ நாள் நெருங்க நெருங்கக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டான் விபு. லேசாக வலி வந்ததுமே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அங்கே அவளுக்கு வலி வருவதற்கான மருத்துவ முறைகளைச் செய்ய, வலியும் வந்துவிட, விபுவை அருகே நிறுத்திக்கொண்டாள் ஜோவி. சிறு போராட்டத்திற்குப் பிறகு அவர்களது மகவைப் பெற்றெடுத்தாள். விபு ஆனந்தத்தில் அழுதேவிட்டான்.
ஜனனி குழந்தையைத் தூக்கி வைத்திருந்தாள். நந்து சச்சினை மடியில் வைத்துக்கொண்டான். மெத்தையில் ஜோவி படுத்திருக்க, அருகே அமர்ந்திருந்தான் விபு.
“நந்து, இந்தப் பாப்பா நமக்குத்தானே! வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடலாமா? நாம விளையாட வச்சுப்போம்” என்றான் சச்சின்.
“எதே… விளையாட வச்சுப்போமா? அடேய் அது என் பொண்ணுடா! நான் தர மாட்டேன். நீ விளையாட உள்ள இருக்கு பாரு பாப்பா, அதோட விளையாடு” என்று விபு அவனோடு மல்லுக்கட்டினான்.
“நீ தாராட்டிப் போ! என் நந்து தரும்! இந்தப் பாப்பா மாதிரி இன்னும் நிறைய பாப்பா என் நந்து தரும். உன் பாப்பாவைச் சேர்த்துக்க மாட்டேன் போ! நந்து, நீ எனக்கு நிறைய பாப்பா தருவேல?” என விவரமறியாமல் கேட்டான் சச்சின்.
விபுவோ நமட்டுச் சிரிப்புடன் நந்துவைப் பார்க்க, “அதுக்கென்ன, என் சின் கேட்டா மாட்டேன்னு சொல்லுவேனா? நிறைய பாப்பா கொடுக்க எனக்கு ஓகே! அம்மாவுக்கு ஓகேவான்னு கேளு” என்று ஜனனியைப் பார்த்துக் கண்ணடித்தபடி கேட்டான் நந்து. அவளோ, “என்னை என்ன பாப்பா தயாரிக்கும் மெஷின்னு நினைச்சீங்களா? பிச்சிடுவேன் பிச்சி!” என்று சொல்ல, அறையெங்கும் சிரிப்பொலி நிறைந்தது.
ஜனனிக்கும் குறித்த தேதியில் பிரசவ வலி வந்துவிட, அவளும் போராட்டத்திற்குப் பிறகு மகளை ஈன்றெடுத்தாள். மனைவியின் வலியை கண்ணீரோடு கண்டவன் அவளை அணைத்துக்கொள்ள, “என்ன இதுக்கே அழுதா எப்படி? இன்னும் நிறைய குழந்தை பெத்துக்கணும், உன் மகனுக்கு விளையாடக் கொடுக்கணும்னு சொன்னியே!” என வலியிலும் சிரிப்புடன் வினவினாள் ஜனனி.
“போதும்டி… இதுக்கே நான் செத்துட்டேன்… போதும், நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க, அதுவே போதும். இன்னொன்னு வேணாம். நீயும் நானும் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலாம். இனி இதுபோல ஒரு நிலையில் உன்னைப் பார்க்க என்னால் முடியாது. உன்னை இதுக்கு மேல வேதனைப்படுத்த நான் விரும்பல…” எனக் கழுத்தில் முகம் புதைத்தான் நந்து.
இரு குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து பெயர் சூட்டும் விழா நடத்தினர். விபு தன் மகளுக்கு ‘மகதி’ என்று பெயர் சூட்ட, நந்து தன் மகளுக்கு ‘சஷ்டிகா’ என்று பெயர் சூட்டினான்.
கேட்டரிங் ஆர்டர்கள் குவிய, அவர்களது அலுவலகத்தை மேலும் விரிவுபடுத்தி, ஆட்களை வேலைக்கு எடுத்து மிகப்பெரிய அளவில் தொழில் செய்து வருகின்றனர். நீலகண்டனுக்கும் வள்ளிக்கும் மகன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்துவிட்டான் நந்து. பேரன், பேத்தியென அவர்களது நாட்கள் நிறைவாகச் சென்றன. இதற்கிடையே நாடு திரும்பிய நீலகண்டனின் மகள் அவர்களது வீட்டிற்கு வந்தாள்.
அங்கே நந்துவைப் பார்த்து அதிர்ந்தாள். நீலகண்டனின் மீதமிருக்கும் வீட்டைத் தனது பெயரில் மாற்றிக்கொள்ள மன்னிப்பு கேட்டு அவள் வர, அங்கே நந்துவும் ஜனனியும் திருமணம் செய்துகொண்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் தாய்-தகப்பனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.
“இது அவளோட வாழ்க்கை. வேற யாரும் முடிவு பண்ண என்ன உரிமை இருக்கு? ரெண்டு பேரும் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க, கல்யாணம் பண்ணி வச்சோம். அவ்வளவுதான்” என்றார் வள்ளி உறுதியாக.
“கல்யாணம் பண்ணி வச்சது போல சொத்தையும் சேர்த்து எழுதி வச்சுட்டீங்களா என்ன?” என அவள் வினவ, அவளது எண்ணம் புரிந்து வள்ளி சிரித்துக்கொண்டார்.
“அதை எழுதி வைக்கத் தயார் தான். இராமகிருஷ்ணன் இருந்தால் என்ன பண்ணியிருப்பாரோ, அதை நந்துவுக்குச் செய்யப்போறோம்” என்றதும் திகைத்துவிட்டாள் மகள்.
“அப்போ உங்க பொண்ணு எனக்கு என்ன வச்சிருக்கீங்க? உங்க வளர்ப்புப் பிள்ளைக்கு வீடுன்னா எனக்கு என்ன?” என்று சண்டை பிடித்தாள்.
“இப்போதான்டி எனக்குப் புரியுது நீ ஏன் இங்க வந்தேன்னு! எங்களை அழைச்சுட்டுப் போய் மூணு வேளையும் சோறு போட்டு வீட்டு வேலை பார்க்கச் சொல்லப்போற… வெளிய நான் தான் என் அப்பா-அம்மாவைப் பார்த்துக்கிறேன்னு பெருமை பேசுவ… இதுல உனக்கு இந்த வீட்டை எழுதி வைக்கணும், அதானே உன் திட்டம்?”
“ஆமாம் தான்… என்னை விட்டா உங்களை யார் பார்த்துப்பா?”
“என் மருமக இருக்கா, மகன் இருக்கான். ராணி மாதிரி பார்த்துப்பாங்க… உன் வீட்டுல வேலைக்காரியா இருக்கிறதை விட, இங்க நான் ராணியா இருக்கேன்டி” என்றார் பெருமிதமாக.
“எல்லாம் நடிப்பு, இந்த வீட்டுக்காகத் தானே!” என்று அவள் சொல்ல,
“இந்த வீட்டை எங்களுக்கு அப்புறமா உனக்குக் கொடுக்கச் சொல்லி தான் நந்து சொன்னான். ஆனா எங்களுக்கு அது சரி வரல. உனக்கு நாங்க செய்ய வேண்டியதை செஞ்சாச்சு! இனி எல்லாம் என் பேரனுக்குத் தான். இந்த வீடு எங்களுக்கு அப்புறம் என் பேரனுக்குச் சேரும்” என்றார்.
“அப்போ நகை, நிலம்?” என அவள் மீண்டும் சண்டையிட, “என் நகை என் பேத்திகளான உன் மகளுக்கும் சஷ்டிகாவுக்கும் போய்ச் சேரும். என் தாலி என் மருமகளுக்கு. அவ்வளவுதான்” எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
தனது திட்டம் நிறைவேறாமல் போன கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டாள் மகள். இது முழுக்க முழுக்க நீலகண்டனின் உழைப்பு என்பதால், அவர் விருப்பப்படியே அனைத்தும் நடந்தது.
நீலகண்டன் சோர்வாக அமர்ந்துவிட்டார். “என் பொண்ணு இவ்வளவு சுயநலமா மாறுவான்னு நான் எதிர்பார்க்கல நந்து! அம்மா-அப்பானு எங்களுக்கு ஒரு மரியாதை இல்லை. இந்த வீடு தான் முக்கியம்னு நினைக்கிறா… என் வளர்ப்பு பொய்யாயிடுச்சேடா” என வருந்தினார்.
“அப்படிச் சொல்லாதீங்கப்பா! அக்கா அவங்க உரிமையில தான் கேக்குறாங்க. நாங்க இருக்கோம்ப்பா! எனக்கு நீங்களும் அம்மாவும் தான் முக்கியம்” என்றான் நந்து.
ஜனனியும், “அத்தை, நீங்க கோபமாப் பேசியிருக்கக் கூடாது. உங்களைப் பார்க்கத்தானே வந்தாங்க” என்றாள். வள்ளியோ, “அவ எங்களைப் பார்க்கவா வந்தா?” எனக் கேட்க, ஜனனி மௌனமானாள்.
நந்து அந்தச் சூழ்நிலையை மாற்ற எண்ணி, “அப்பா, உங்க பேத்தியைப் பாருங்க. நீங்க சிரிச்சாதான் அவ சிரிப்பா போல, உங்க முகத்தையே பார்த்துட்டு இருக்கா” என்றான்.
பேத்தியைப் பார்த்ததும் நீலகண்டனின் மனவேதனை பறந்துபோனது. அவளைத் தூக்கி முகம் முழுவதும் முத்தமிட்டார். “டேய் நந்து, என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் எனக்கு இந்தச் சந்தோஷம் வேணும்டா… எங்களை விட்டுப் போயிட மாட்டீயே?” என்று கேட்க,
“என்னப்பா பேசுறீங்க! அனாதையா வந்த என்னை ஆதரிச்சுக் குடும்பம் அமைச்சு கொடுத்திருக்கீங்க. என்னோட மிகப்பெரிய சொத்து நீங்களும் அம்மாவும் தான்” என்றான் நந்து.
அங்கே புன்னகை மட்டுமே நிறைந்திருந்தது. தந்தை, தாய், மகன், மகள், மனைவி என அனைவருக்கும் நடுவில் அமர்ந்து புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கும் நந்துவைக் கண்ட ஜனனிக்கு நெஞ்சில் காதல் பொங்கியது. யாருமற்று வந்தவன், இன்று அனைவருக்கும் வாரி வழங்கும் நிலையில் இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டாள்.
புன்னகை முகமாக நிற்கும் மனைவியை காதலோடு பார்த்தவன், இப்படி தன்னை நிறைவாக நிறுத்தியது இவளென்றும் உள்ளுக்குள் பெருமிதம் கொண்டான்.
நான்கு விழிகளும் நேர்கோட்டில் காதலோடு சங்கமித்தன.
முற்றும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
+1

