
விழிகளை மூடி அமர்ந்திருந்தவள், அவனது இதழ் தீண்டல் இல்லாமல் போகவே மெதுவாக இமைகளைத் திறந்தாள்.
கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே வெறித்தபடி நின்றிருந்தான் இளநந்தன்.
அவளும் அவனையே பார்த்திருந்தாள். அவனோ புன்னகையுடன், “கிளம்பலாமா அன்னம்மா? நேரமாச்சு,” என்று தன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.
அவளும் தனது கண்களை மூடித் திறந்தவள், கைப்பையை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தாள். அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அவனும் அவள் பின்னே நடந்தான்.
அவனே வண்டியில் அமர்ந்து அதை உயிர்ப்பிக்க, இவளோ பின்னால் அமர்ந்தாள். கண்ணாடியைச் சரிசெய்து அவளைப் பார்க்க, அவளோ தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
வண்டியைச் சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தவன், அடிக்கடி அவளையும் பார்த்துக் கொண்டான். ஆனால் ஜனனியோ, எங்கோ வெறித்தபடி கண்களில் நீர் படர வந்தாள்.
முத்தமிட அவன் நெருங்கியபோது, அதை ஏற்றுக்கொள்வது போல விழிகளை மூடியவள், தொண்டைக் குழியில் எச்சில் விழுங்க, இதழ் நடுங்கக் காத்திருந்தாள்.
அதைக் கண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை… நந்தன் மீது ஜனனிக்கு விருப்பம் இருந்தாலும், இன்னும் அவள் குழப்பத்தில்தான் இருக்கிறாள். விழிகளை மூடியதால் கிடைத்த சலுகையை எடுத்துக்கொண்டு அவன் முத்தமிட்டிருந்தால், கண்டிப்பாகத் தாம் தூமெனக் குதித்து அவனது கன்னத்தைப் பழுக்கச் செய்திருப்பாள். ‘ஏதோ இந்த மட்டிற்கு மௌனமாக வருகிறாளே’ என்று எண்ணிக் கடவுளுக்கு நன்றி சொன்னான் நந்தன்.
ஜனனியோ உள்ளுக்குள் தன்னைத் தானே திட்டிக்கொண்டே வந்தாள். அவன் நெருங்கியதும் தள்ளிவிட்டு அறையாமல், முத்தத்தை ஏற்றுக்கொள்வது போலக் கண்களை மூடியதை நினைத்து நொடிக்கு நொடி தன்னைச் சாடிக்கொண்டாள். அவளது இந்தச் செயலால் தன்னை அவன் என்ன நினைத்திருப்பான் என்று எண்ணிப் பார்க்கவே உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அவனைப் பாராமல் விறுவிறுவென உள்ளே சென்றாள். அவளது செய்கையால் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
இருவரும் லிஃப்ட்டில் ஏறினர். அவன் அவளையே பார்க்க, அவனது பார்வையை உணர்ந்தும் அவனைப் பாராமலே இருந்தாள். அவர்கள் வசிக்கும் தளத்திற்கு வந்து சேர்ந்தனர். கதவுகள் திறக்க, இருவரும் வெளியே நடந்தனர். அவன் தனது வீட்டிற்குச் செல்ல, அவளும் அவனைப் பாராமல் உள்ளே சென்றாள்.
சச்சின் அவளை அணைத்தபடி, “எங்கம்மா நந்து?” என ஆவலாகக் கேட்டான்.
“அவன் வீட்டுக்குப் போயிருக்கான், இப்போ வருவான்,” என்றவள், தனது மாமனார் மற்றும் மாமியாரிடம், “இதோ வந்துடுறேன் அத்தை,” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குள் சென்றவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
கன்னத்தில் தன்னைத் தானே இருமுறை அறைந்துகொண்டாள். தனது செயலை நினைத்துக் கடிந்துகொண்டாள். கண்ணாடியில் தன் முகம் பார்த்துத் தானே வெறுத்துக்கொண்டாள்.
பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவள், எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்துவிட்டு உடை மாற்றி வர, அதற்குள் நந்துவே உணவைத் தயார் செய்து பரிமாறிக்கொண்டிருந்தான்.
கிச்சடி செய்திருந்தான். கேரட், பீன்ஸ் போட்டு உதிரியாக, காரமான பச்சை மிளகாய் சேர்த்து ருசியாகச் செய்திருந்தான். சரியாகச் சாப்பிடாத சச்சின் கூட அதை விரும்பிச் சாப்பிட்டான். இவளும் அமர, தட்டில் வைத்து அவள் பக்கம் நகர்த்திவிட்டு அவனும் உண்டான்.
“ஜானுமா! தம்பிக்கு மேட்ரிமோனியில் பதியச் சொன்னேனே, பண்ணிட்டியா?” எனக் கேட்டதும் அவளுக்குப் புரையேறியது. சச்சின் தாயின் முதுகைத் தட்டிக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்தான்.
அதை வாங்கிக் குடித்துவிட்டு, “பண்ணிட்டேன் அத்தை,” என்றவள், விழிகளைச் சற்று உயர்த்தி நந்தனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு உண்டான்.
“நானும் புரோக்கர்கிட்ட சொல்லிருக்கேன் வள்ளி. தெரிஞ்ச குடும்பமா பார்த்துப் போட்டோ அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிருக்கார். அனுப்பினதும் அதைப் பார்ப்போம்,” என்றார் நீலகண்டன்.
இவளுக்கு அங்கே உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. ஏதோ நெருப்பில் இருப்பது போல இருந்தது. பாதியில் எழுந்து கொள்ளவும் முடியாது. கஷ்டப்பட்டு உணவை விழுங்கிக்கொண்டிருந்தாள்.
உணவு உண்ட பின் நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவள் அங்கே அமர்ந்திருந்தாலும், அவளது சிந்தனை எல்லாம் அலுவலகத்தில் நடந்ததிலேயே இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள், என்ன கேட்டார்கள் என்பதெல்லாம் அவள் காதில் விழவில்லை. நினைவெல்லாம் அந்த நொடியிலேயே இருந்தது.
அவர்கள் நால்வரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்போது உறங்கச் சென்றார்கள் என்பதும் தெரியவில்லை. சிலை போலவே இருந்தவள், அலைபேசியின் சத்தம் கேட்டுத் தன்னுணர்வுக்கு வந்தாள். சுற்றி யாருமில்லை. வள்ளி தம்பதியினர் அறைக்குள் சென்றுவிட்டனர். இவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். சுற்றும் முற்றும் பார்த்தவள் சச்சினைத் தேடினாள். அவனோ எங்கும் இல்லை. அறை, சமையலறை என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துப் பயந்து போனாள். நந்தனுக்கு அழைக்க முயன்றபோதுதான், அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தாள். சச்சின் அவனோடு இருப்பதாக அனுப்பியிருந்தான்.
அவள் விறுவிறுவென அவன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினாள். அவனும் திறந்தான். “சச்சின்?” என்றாள்.
அவன் வழிவிட, அவளும் உள்ளே நுழைந்தாள். அறைக்குள் மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தான் சச்சின். அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள், நந்தனைப் பாராது முன்னே நடந்தாள்.
“நீயும் என்னை விரும்புறதானே? அப்புறம் என்ன உனக்குச் சொல்லத் தயக்கம்?” எனக் கேட்டே விட்டான்.
அவளது நடை நின்றது. திரும்பி அவனைப் பார்த்தாள்.
“எனக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லை! நான் உன்னை விரும்பலை.”
“பொய்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஏன் மறைக்கிற? முத்தம் கொடுக்க வந்ததும் என்னை அறையாம, கண்ணை மூடும்போதே தெரியலையா நீ என்னைக் காதலிக்கிறன்னு? எத்தனை நாளைக்கு இதைக் காலமெல்லாம் மறைப்ப?”
“ஸ்டாப் இட் நந்து!” எனக் கத்தினாள். சச்சின் லேசாக அசைந்து மீண்டும் உறங்கினான். அவன் முதுகை வருடியவள், “நந்து! தெரியாம கண்ணை மூடிட்டேன்… ப்ளீஸ், அதையே சொல்லிக் காட்டி எனக்கு உன் மேலே காதல் இருக்குன்னு சொல்லாதே! உன் மேலே எனக்கு எந்த விருப்பமும் இல்லை, கல்யாணத்து மேலேயும் தான். ப்ளீஸ் என்னை விட்டுடு,” என்றாள்.
அவனும் எதுவும் சொல்லாது பாறையை விழுங்கியது போல விறைப்பாக நின்றான். வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் அவள். இவனும் கதவைச் சாத்திவிட்டு மெத்தையில் விழுந்தான்.
மகனை அருகே போட்டுக்கொண்டு கண்ணீர் வடித்தாள் ஜனனி. மனதில் இருப்பதைச் சொல்வதற்கு அத்தனை தயக்கம். தனக்காக முடிவெடுக்க முடியாமல் சொந்தத்தையும் சமூகத்தையும் சார்ந்து எடுக்கும் முடிவை அவள் வெறுத்தாள்.
வெளியே யாருக்கும் தெரியாது போனாலும் நெருங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் அவளைப் பற்றித் தெரியும்தானே! வள்ளி – நீலகண்டன் தம்பதியினர் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்களே அவளிடம் திருமணப் பேச்சு எடுத்ததை மறந்துவிட்டு யோசிக்கிறாள்.
வெளியே பெண் பார்க்க வேண்டும், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியவர்கள், வீட்டிற்குள் தனித்திருக்கும் மருமகளை மறந்து போனார்களா? அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லாதபோது அவளிடம் என்ன சொல்வது? இதை அப்படியே மறைப்பதுதான் நல்லது என முடிவு செய்தாள்.
‘வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவன் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்று எண்ணியவளுக்கு உள்ளுக்குள் இனம் புரியாத வலி. ‘ச்ச… என்ன மனது இது?’ எனத் தன்னைத் தானே கடிந்துகொண்டாள்.
‘இனி அவனைப் பற்றி நினைக்கக் கூடாது’ எனத் தனக்குத் தானே கடிவாளமிட்டுத் தூங்க முயன்றாள். ஆனால் கற்பனையிலும் கனவிலும் அவன் மட்டுமே வந்து நிற்க, தூக்கம் எப்போதோ அவளை விட்டுத் தூரம் போயிருந்தது.
வழக்கம் போல அடுத்த நாள் விடிய, வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் சென்றாள். அவனும் தாமதமாக வந்தான். இருவரும் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அவனது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. வாட்ஸ்அப்பில் அவனது பெரியப்பா பல பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, “உனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடு” என்று அனுப்பியிருந்தார்.
அந்தப் பெண்களின் புகைப்படங்களைப் பாராமலே அவளிடம் நீட்டினான்.
“என்ன?” என்பது போலப் புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.
“பெரியப்பா சில பொண்ணுங்க போட்டோ அனுப்பிப் பார்க்கச் சொல்லி இருக்கார். நீயே அதுல ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி அனுப்பு,” என்று அவன் நீட்ட, முதலில் அதிர்ந்தவள், தன்னைச் சாதாரணமாகக் காட்டிக்கொண்டே வாங்கிப் பார்த்தாள்.
நந்திற்குப் பொருத்தமாக யாரும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. சலிப்பாக அவனிடம் நீட்டியவள், “உனக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்த்து நீயே அனுப்பு,” என்றாள்.
“அப்போ உன் போட்டோவைத்தான் அனுப்பணும், அனுப்பவா?”
“நந்து!”
“என்னடி? அதுதான் உண்மை. எத்தனை தடவை சொன்னாலும் எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னை மட்டும்தான் நெஞ்சுல சுமந்துட்டு இருக்கேன். உன்னைத் தவிர்த்து எனக்கு யாரும் பொண்டாட்டியா வேணாம்… காலம் முழுக்க இப்படியே இருந்திட்டுப் போயிடுறேன்.”
“நந்து, என்ன பேசுற? ஏன் இப்படி அடம் பிடிக்கிற? நான் உனக்கு வேணாம் நந்து! நல்ல பொண்ணா, உனக்கு ஏத்த பொண்ணாப் பாரேன். பார்த்து செலக்ட் பண்ணி அனுப்பு, மாமா பேசுவார். ப்ளீஸ் நந்து!”
“நான் சொல்றதை நீ கேட்க மாட்டேங்குற! நீ சொல்றதை மட்டும் நான் கேட்கணுமா? இன்னைக்கே என் மனசுல இருக்கிறதை பெரியப்பாகிட்ட சொல்லத்தான் போறேன். அவர் என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லை. எனக்கு நீதான் வேணும்னு சொல்லப்போறேன்…” என்று மேசையில் பலமாகத் தட்டிவிட்டு வெளியே சென்றான்.
இவளோ தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்டாள். அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை; பேசவும் இல்லை.
அன்று மாலை வேலை முடிந்ததும் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டனர்.
நந்துவைப் பிடித்துக்கொண்ட வள்ளி தம்பதியினர் விசாரிக்க, அவர்களுடன் பேச அமர்ந்தான்.
“பெரியப்பா, பெரியம்மா… உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்,” என்று அவளை அழுத்தமாகப் பார்த்தவாறே பீடிகை போட்டான்.
“சொல்லுடா, என்ன விஷயம்?”
அவன் சொல்ல வருவதற்குள் முந்திக்கொண்ட ஜனனியோ, “நீங்க பேசிட்டு இருங்க, நான் சச்சினை கீழே கூட்டிட்டுப் போய் விளையாட வைச்சிட்டு வர்றேன்,” என்றாள் அவனைப் பாராமல்.
“ஏன்மா? நீயும் இரு,” என்றார் நீலகண்டன்.
“இல்லை அத்தை! இவன் விளையாடணும்னு சொல்லிட்டு இருக்கான். கீழே போகாம விட்டா பேச விடமாட்டான். நீங்க பேசுங்க,” என்று அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடியே போனாள். அவளது பதற்றத்தைக் கண்டு அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா!! முக்கியமான இடத்துல நிறுத்திட்டீங்களே.. சீக்கிரம் அடுத்த எபிஸ் போடுங்க
Poduren maa thanks ma