Loading

தனது அலுவலகத்திற்கு வந்த பிறகும் அவளால் நிலையாக இருக்க முடியவில்லை. உட்கார்ந்திருந்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

அவளால் நம்ப முடியவில்லை — தனது முக வாட்டத்தையும் மனதில் மருகிக் கொண்டிருக்கும் காரணத்தையும் சட்டென யூகித்து அதைக் கேட்டுவிட்டானே!

“அட!” என்று ஒரு நொடி ஆச்சர்யம் கொண்டவள், பின் அதிலிருந்து முகத்தை மாற்றினாள்.

அவளது எண்ணங்கள் சற்று முன் நடந்த அவர்களது உரையாடலுக்குள் சென்றது.

“ஹேய் அன்னம்மா, டூ யூ லவ் மீ?” ஆச்சர்யமடைந்த குரலில் சத்தமாக கேட்டான். பக்கென்றது அவளுக்கு.

‘வெளிப்படையாகக் கண்டு பிடிக்கும் அளவிற்கா தனது முகத்தில் சோகத்தை காட்டி இருக்கிறோம்?’ என எண்ணியவள், அவன் முன்னே சாதாரணமாக இருக்க முயன்றாள்.

“என்ன உளறுறே நந்து! நான் உன்னை காதலிக்கிறேன்னு எப்படி நினைச்ச நீ? ஆங்… சொல்லு, எதுக்கு இந்த கேள்வி கேட்ட?”

அவனும் இதழை மடக்கி புன்னகையை அடக்கியபடி,

“உன்னோட பேஸ் ரியாக்ஷன் ரொம்ப வீக்கா இருக்குடி அன்னம்மா! நான் என்ன பண்ணட்டும்? கண்டு பிடிச்சிட்டேன்!” என்றவனால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நிறுத்து நந்து! தேவையில்லாததை கற்பனை பண்ணிட்டு பேசிட்டு இருக்காத! நான் உன்னை எப்பவும் காதலிக்கப் போறது இல்ல! ஏதாவது கேட்டு வச்சி நான் ஏதாவது சொல்லிடப் போறேன். நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு!” என்றவள், தனக்குள் எழுந்த பதற்றத்தை மறைக்க முயன்று சாவியை நுழைக்க முடியாமல் தவித்தாள்.

“ஹேய் அன்னம்மா, முதல்ல ரிலாக்ஸா இருடி! பதற்றத்துல அண்டால கைய விட்டாலும் எதுவும் கிடைக்காது’ன்னு சொல்வாங்க! நான் என்ன கேட்டேன்னு உனக்குள்ள இவ்வளவு பதட்டம்?”

“பதட்டமா எனக்கா? நான் சாதாரணமாதான் இருக்கேன்! எனக்கு எதுக்கு பதட்டம்?” என அவள் சொல்லும் தோரணையில் மேலும் சிரிப்பு அதிகரிக்க,

அதை கட்டுப்படுத்திக் கொண்டவன்,

“ம்ம்… தெரியுது! நீ பதட்டமா இல்லாம கூலா இருக்கேன்னு!” என நக்கலோடு கூறினான்.

“நந்து!” என முறைத்தாள்.

“ம்ம்… சொல்லு அன்னம்மா!”

“என்ன பார்த்தா உனக்கு எப்படி தோணுது?”

“நிறைய தோணுது… எதை சொல்ல?”

“நீ எதையும் சொல்ல வேண்டாம். நகரு!” என்று வண்டியை உயிர்ப்பித்தாள்.

“அன்னம்மா! நானும் வர்றேன்… என்னையும் கூட்டிட்டு போடி!”

“போடா! என்னைப் பார்த்து சிரிச்சேல… ஆட்டோலே வா!” என்று புறப்பட்டுவிட்டாள்.

“ம்க்கும்…” என நொடித்துக் கொண்டவனுக்கு இன்னும் இதழ்களில் புன்னகை இருந்தது. சிறிதாய் சாதித்த வெற்றிக் களிப்பு அவனிடத்தில் தெரிந்தது. நடந்து சென்றான்.

‘என்னாச்சி உனக்கு ஜனனி! ஸ்டெடியா இருந்தியே! எங்கே ஸ்லிப்பான? என்னாச்சி உனக்கு?! அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணம் நடக்கணும்னு தானே ஆசைப்பட்றே? இப்போ எதுக்கு பீல் பண்ற? போதாத குறைக்கு அவனோட இருக்கிற மாதிரி கனவு வேற! ச்சே! என்ன பொண்ணு நீ! உன் கனவு மட்டும் அவனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்? எதுவானாலும் ஸ்டெடியா இரு ஜனனி! உன் உலகம் சச்சின் மட்டுமே! அதுல யாருக்கும் இடமில்லை!’

என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, வெளியே நின்றிருந்த நந்து,

“எனக்கு இல்லையா?” என்று சத்தமாக கேட்க,

அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் வெளியே ஜெயந்தியோடு பேசிக் கொண்டிருந்தான்.

ஒரு கணம் திகைத்தவள் இதழை குவித்து ஊதி தன்னை சமாதானம் செய்தாள்.உள்ளே வந்தான். அவனைப் பாராமல் ஏதோ ஒரு பைலை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். அவளோடு பேசிய உரையாடல்களை நினைத்து புன்னகைத்தவன், வெளியே சமையல் செய்பவர்களுக்கு உதவச் சென்று விட்டான். இவளுக்கு ‘அப்பாடா!’ என்றிருந்தது.

சற்று நேரத்தில் வெளியே ஏதோ சத்தம் கேட்க, புருவங்கள் சுருங்க என்னவென்று பார்க்க வெளியே வந்தாள்.

அங்கே கந்தனுக்கும் நந்துவிற்கும் பெரும் வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தாள் ஜனனி.

“என்ன பிரச்சனை இங்க? நந்து, என்னாச்சி? எதுக்கு சண்டை போடுறீங்க?” என பதற்றமாக கேட்டாள்.

“வாங்க ஜனனி மேடம்! வாங்க… உங்களை தான் கேட்டுட்டு இருக்கேன்! உங்க ஆளு தான் பார்க்க விட மாட்டிக்கிறார்!” என்று பல்லைக் கடித்தபடி சொன்னான் கந்தன்.

“எதுக்கு பார்க்கணும்? எதுவா இருந்தாலும் என் கிட்ட பேசு! நாம பேசலாம்,” என்று கைகளை கட்டிக் கொண்டு சன்னமாக சொன்னான் நந்து.

“ஏன்? உங்க முதலாளியம்மாவ கடிச்சுத் தின்னிடுவேன்னு பயமா?” என்று இதழ் ஓரத்தில் நக்கல் சிரிப்புடன் கேட்டான் கந்தன்.

“நீ எப்படி வேண்டுமானாலும் நினைச்சுக்கோ! ஆனா வந்து விஷயத்தை என் கிட்ட பேசிட்டு கிளம்பு,” என்று அசையாமல் நின்றான் நந்து.

ஜனனி சலிப்பாக, “ப்ச்… என்ன நந்து இது? வெளியே நின்று பேசிட்டு இருக்கீங்க! கந்தன், உள்ள வாங்க… நாம பேசிக்கலாம்,” என்றாள்.

“உள்ள வந்து உட்கார்ந்து சம்பந்தம் பேச வரல நான்… நியாயம் கேட்டு வந்திருக்கேன்! இங்கேயே பேசலாம்,” என்று உறுதியாக சொன்னான்.

தலையில் கை வைத்தவள், சமையல் செய்யாமல் இவர்களது சண்டையைப் பார்த்துக் கொண்டு நிற்பவர்களை கண்டாள்.

“ஜெயந்தி அக்கா! நேரமாச்சு… வேலையை பாருங்க!” என்றதும் அவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

கந்தன் பக்கம் திரும்பி,

“என்ன வேணும் உங்களுக்கு இப்ப?” என்றாள் ஜனனி.

“என்ன நியாயமிது ஜனனி மேடம்? ஒரு நாள் உதவிக்கு வேணும்னு என் ஆளுகளை கூட்டிட்டு போனீங்க! என்ன சொன்னீங்க அவங்க கிட்ட? என்ன சொல்லி மூளை சலவை செய்தீங்க? இப்ப வேலைக்கு வர மாட்டேன்னு சொல்றாங்க! உங்க கூடவே வேலை பார்க்கப் போறோம் சொல்றாங்க! ச்சே… உங்களை என்னவோ நினைச்சேன்… இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவீங்களா? என்னை பழி வாங்குறீங்களா?”

“இதோ பாருங்க கந்தன்! என்ன நடந்ததுன்னு தெரியாம நீங்களா கற்பனை பண்ணி பேசாதீங்க! உங்க ஆளுங்க அவங்களாகவே வந்து வேலை கேட்டாங்க! நாங்க ஒன்னும் அவங்களை மூளை சலவை செய்யல!

சம்பளம் கூட சரியாக கொடுக்காம ‘அடுத்த ஆடர் வந்தா தர்றேன்’ன்னு சொன்னா அவங்க என்ன செய்வாங்க? உங்க அப்பா கிட்ட ரொம்ப வருஷமா வேலை பார்த்தவங்கதான்! இப்போ அந்த வேலையை விட்டு போறாங்கன்னா அதுக்கு காரணம் இருக்கும்!

உழைப்புக்கு உரிய மரியாதையும் சம்பளமும் கொடுக்கணும்! அது இல்லாத இடத்துல யாரும் நிலைக்க மாட்டாங்க!

இப்போ கூட நீங்க அவங்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கிறேன், இங்கயே இருங்கன்னு சொல்லுங்க… உங்களை விட்டு போக மாட்டாங்க!

விசுவாசம் முக்கியம் தான்… ஆனா உழைப்புக்கு ஊதியம் வேணாமா?

முதல்ல அவங்க கிட்ட போய் பேசுங்க! என் கிட்ட பேசுறதுல உங்களுக்கு எந்த லாபமும் இல்லை!” என்று திடமாக சொன்னாள்.

கந்தன் இன்னும் கோபமாகவே அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளால் பறிபோன கேட்டரிங், திருமண மறுப்பு—இப்போது இதுவும் சேர்ந்து, அவள்மீது கோபம் அதிகரித்தது.

“ஹலோ! என்ன முறைப்பு? அது எல்லாம் உன்கிட்ட வேலை பார்க்கிறவங்களோட வச்சுக்கோ! இங்க… அதுவும் என் ஜனா கிட்ட வச்சுக்காத! அப்புறம் என்னால தான் சொல்லிட்டு மறுபடியும் சண்டைக்கு வந்துடாதே! இங்கிருந்து கிளம்பு முதல்ல!” என்று இருவருக்கும் நடுவில் நின்று சொன்னான் நந்து.

“இதுக்கெல்லாம் மொத்தமா அனுபவிப்பீங்க!” என்று இருவரையும் மிரட்டி விட்டு சென்றான் கந்தன்.

இருவரும் சற்று சுவாசம் விட்டுப் பின் உள்ளே சென்றனர். ஜனனி தலையை தாங்கியபடி அமர்ந்தாள்.

அவளுக்காக பழச்சாறு வாங்கி வைத்து அவள் முன்னே அமர்ந்தான் நந்து.

ஜெயந்தி பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன்,

“அன்னம்மா… இத குடி,” என்று அவள் முன் வைத்தான்.

அவளும் அதை எடுத்து மெதுவாக பருகி, எங்கோ வெறித்தாள்.

அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்—ஏதாவது பேசுவாளா என்று.

“நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா நந்து? என் கிட்ட ஏன் இப்படி பேசுறான்? நான் தப்பு பண்ணது மாதிரி… முடியல என்னால…”

“ஜனா! அவனுக்கு உன்னை கண்டு பொறாமை! அவனை விட பின்னாடி இருந்த நீ முன்னேறி வர்றேன்னு தான் இந்த கோபம்!

இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் காரணம் சொல்லி உன்னை குறை சொல்லுவாங்க! அவங்களை எல்லாம் நினைச்சுக்கிட்டு இருந்தா எப்படி வாழ்றது?

அவங்களை எல்லாம் தள்ளி விட்டு நீ முன்னாடி போயிட்டே இருக்கணும்!” என்றான்.

“ம்ம்…” என்று மெதுவாக தலை ஆட்டியவள் தன்னை வேலையில் மூழ்கச் செய்தாள்.

மாலையில் பிறந்தநாள் விருந்துக்கான உணவு ஆர்டர் வந்ததால், இருவரும் அதில் பிஸியாகி விட்டனர். வேலை முடித்து, உணவை அனுப்பி வைத்து இருவரும் அருகருகே அமர்ந்தனர்.

“ஓரளவுக்கு வேலை முடிஞ்சுது நந்து… நாம கிளம்பலாமா?” என்றாள்.

“இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு! காலை பெரியம்மா சொன்னாங்களே… மறந்துட்டீயா?” என்றான்.

“என்ன வேலை சொன்னாங்க?” என்று உண்மையாகவே கேட்டாள்.

“அதான்… என்னை நீ ஒரு பொருட்டாவே மதிக்க மாட்ட! இதுல எங்க நினைவில் வச்சிக்கப் போற?” என்றான் சலிப்புடன்.

“டேய்! தேவையில்லாம பேசாத! விஷயத்தை சொல்லு!” என்றாள்.

“பெரியம்மா… என் கல்யாணத்துக்கு பொண்ணு தேட மேட்ரிமோனில அப்ளை பண்ண சொல்லினாங்க!” என்றான்.

“அதை மறக்கல! இப்போ பண்ணிட்றேன்!” என்று மடிக்கணினியை திறந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

அவனிடம் கேட்காமலேயே விவரங்களை நிரப்பினாள்.

“உனக்கு பொண்ணு எப்படி இருக்கணும்?” என்றாள்.

“உன்னை போல இருக்கணும்,” என்றான்.

அவளது விரல்கள் தட்டச்சை நிறுத்தின. மெதுவாக அவனை நோக்கி பார்த்தாள்.

“உன்னை போல என்ன… நீயே தான் வேணும்,” என்றவன் அவளது கன்னத்தை மெதுவாக வருடினான்.

உடல் சில்லிட்டது அவளுக்கு.

“கல்யாணம் பண்ணிக்கலாமா டி?” என்று கேட்டவனின் முகம் அவளருகே உதட்டை நோக்கி வந்தது.

அவளும் தன்னறியாமலே கண்களை மூடிக் கொண்டாள்…

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்