Loading

ரௌத்திர காளியாக, கேலிச் சிரிப்புடன் நிற்கும் கந்தன் முன் நின்றிருந்தாள் ஜனனி.

‘அவள் வருவாள்’ என்று அவனுக்குத் தெரிந்திருந்தது போல! அவளுக்காகவே காத்திருந்தான். அவள் வந்ததுமே உள்ளே நுழைய அனுமதித்திருந்தான். அவளோடு நந்துவைக் கண்டதும் கந்தனுக்கு வன்மம் மேலும் கூடியது.

அன்று தன்னை உசுப்பேற்ற, ஜனனியின் காதலன், கணவன் என்றெல்லாம் சொல்லி இருந்தானே! இன்று அவன் முகத்தில் வெடிக்கும் கோபத்தைக் கண்டு கந்தனின் மனம் சற்று இளைப்பாறியது.

அவர்கள் இருவரும் கோபத்துடன் நிற்க, ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “வாங்க வாங்க! உங்களை எதிர்பார்த்துதான் காத்திட்டு இருந்தேன்… நீங்களே வந்துட்டீங்க… உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான்.

ஜனனியைவிட நந்துவே கொதித்துப் போய் இருந்தான். பாய்ந்து அவனை அடிக்கும் எண்ணம் அவனுக்குள் அலைமோதியது. ஆனால், ஜனனிக்காக – அவள் வார்த்தைக்காகத் தன்னைத் தட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க, என்ன விஷயம்? முதல்ல உட்காருங்க…” எனத் தெனாவெட்டாக கந்தன் சொல்ல,

“விஷயம் என்னன்னா… நீயெல்லாம் ஒரு ஆம்பளதானான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்!” என்றாள் ஜனனி. அவள் வார்த்தைகள் சுருக்கென்று தைக்க, “ஜனனி!” என்று பல்லைக்கடித்தான் கந்தன்.

“என்ன கோபம் வருதா? நீ கந்துவட்டித் தொழில் தான் பண்றேன்னு நினைச்சேன்… ஆனா இப்பதானே தெரியுது உன் தொழிலே வேறன்னு!” – அவள் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் எழுந்தவன், “ஜனனி, நீ ஓவரா பேசிட்டு இருக்க…” என எச்சரித்தான்.

“என்னடா ஓவரா பேசிட்டு இருக்கேன்? உன்கிட்ட கடன் வாங்கினவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, அவன் பொண்டாட்டியைக் கேட்பியா நீ?”

செருப்பால் அடித்தது போலிருந்தது அந்தக் கேள்வி.

“ஜனனி… நான் அப்படிப்பட்டவன் இல்ல…” என வார்த்தைகள் தடுமாறினான் கந்தன்.

“வேற எப்படிப்பட்டவன் நீ? சொல்லு கேட்டுக்கிறோம். என்ன, உன்னை நீயே உத்தமன்னு சொல்லிக்கப் போறியா? உத்தமன் செய்யுற வேலையா இது?”

“ஜனனி! நான்…” என அவளது சிவந்த விழிகளை நேருக்கு நேர் காண முடியாமல் தவித்தான்.

“உன்கிட்ட பணம் வாங்கினவன் ஓடிட்டான். சூரிட்டி கையெழுத்து போட்டது எங்க அப்பாதான். அவர்தான் பணம் கொடுக்கணும், நியாயப்படி அது சரிதான். அதை நான் தப்புன்னு சொல்லவே மாட்டேன். ஆனா, சம்பந்தமே இல்லாத என்னை ஏன் இதுல இழுக்குற? அதுவும் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தெரிஞ்சும், உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி எங்க அப்பாவை ஏன் கழுத்துப்பிடியில நிறுத்தி வச்சிருக்க? என்ன ஜென்மம்டா நீ?!” எனக் கேட்டதும் தலைகுனிந்து நின்றான். அவளைப் போல அவனிடம் திமிராகப் பேச அவனால் முடியவில்லை.

“அன்னைக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு உன் குடும்பத்துக்கு முன்னாடியே மூஞ்சியில அடிச்ச மாதிரி சொன்னதுக்குத்தானே, என்னை இப்படிப் பழிவாங்குற?”

“சரி, கல்யாணம் பண்ணிக்கலாம்! ஆனா என்னோட உடம்பு மட்டும்தான் உனக்குச் சொந்தமாகும். மனசு இவனை மட்டும்தான் நினைச்சுட்டு இருக்கும், பரவாயில்லையா? உனக்கு அதைப்பத்திக் கவலையில்லையே! என்னைக் கல்யாணம் பண்ணித் தந்தா கடனைத் தள்ளுபடி செய்றேன்னு சொன்னியாமே! வா கல்யாணம் பண்ணிக்கலாம்! இப்பவே பண்ணிக்கலாம்! ஆனா என் மனசு பூராவும் இவன்தான் இருக்கான். எப்பவும் இருப்பான்.”

“உனக்குத் தேவை நானும் என் கேட்டரிங் பிசினஸும் தானே? தாராளமா எடுத்துக்கோ! என்னோட வர்த் (Worth) அறுபது லட்சமா? எழுபது லட்சமா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்… ஆனா ஒன்னு, எத்தனை லட்சம் நீ இழந்தாலும் உன்னால என் மனசை மட்டும் வாங்கவே முடியாது! அது உனக்குத் தேவையும் இல்லை, அப்படித்தானே?”

அவள் பேசப் பேச கந்தனுக்கே அசிங்கமாக இருந்தது.

“யாரை ஜெயிக்க இதுபோல செஞ்சுட்டு இருக்க? என்னையா? இவனையா? இல்லை உன்னையா? யாரைச் ஜெயிக்கணும்னு நினைக்கிற? யாரைச் ஜெயிக்கணும்னு நினைச்சாலும், தோத்துப் போறது என்னவோ நீதான். என் உடம்பை உன்னால பணம் கொடுத்து வாங்கிட முடியும். ஆனா காதலை வாங்க முடியுமா? நான் இவனை மனசார விரும்புறேன். என் காதலுக்குச் சொந்தமானவன் இவன் மட்டும்தான். அதை உனக்குச் சாதகமா மாத்திக்கவே முடியாது. அதைப்பத்திக் கவலையில்லைன்னா சொல்லு, இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் வா!” என்றாள்.

அவன் முகம் செத்துவிட்டது. அவள் பேச்சில் ஒன்று தெளிவாகப் புரிந்தது – அவளை அடைய முடியும், ஆனால் அவள் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது.

பெருமூச்சுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “என்ன, கல்யாணம் பண்ணிக்கலாமா?” என அவள் மீண்டும் கேட்க, எச்சிலை விழுங்கிக் கொண்டு பேசினான் கந்தன்.

“என்னை மன்னிச்சிடுங்க ஜனனி! தப்புதான். திமிர், ஆணவம், வன்மம்… இதெல்லாம் சேர்ந்து உங்களைத் தோற்கடிக்கணும், எனக்குக் கீழ நிக்க வைக்கணும்னு நினைச்சுதான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்தேன். உடம்பு மேல உள்ள ஆசையில இல்லை! அந்தளவுக்கு மோசமானவனும் நான் இல்லை. பொண்ணுங்களை வெறும் சதையாப் பார்க்குற மிருகம் நான் இல்லை. என்னால உங்க உடம்பை வாங்க முடியும், ஆனா உங்க மனசு… அது கஷ்டம் தான். நீங்க பணம் தர வேண்டாம், இங்கிருந்து கிளம்புங்க… முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க,” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

நெடிய பெருமூச்சு விட்டவள், “எனக்கு ஒரு மாசம் டைம் கொடு! அப்பா கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுறேன். கந்துவட்டித் தொழிலா இருந்தாலும் அதுவும் உன் உழைப்புதானே! என்னை நம்பு, ஒரு மாசத்துல உன் பணத்தைத் தந்துடுறேன்,” என்றாள்.

அவனும் சரி என ஆமோதித்தவன், “சாரி ஜனனி… நான் அப்படிப்பட்டவன் இல்லை…” என மென்று முழுங்கினான்.

“தெரியும்! கந்துவட்டித் தொழில்ல கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும், பெண்கள் விஷயத்துல நீ ஒழுக்கமானவன்தான். இது இயல்பான ஆண்களுக்கே உண்டான கோபம்தான். விடு! நான் வர்றேன்… வா போலாம்,” என்று நந்துவின் கையைப் பற்றினாள்.

இன்னமும் கந்தன் மீது கொலவெறியில் நின்றிருந்த நந்துவைச் சிரமப்பட்டுத்தான் அங்கிருந்து இழுத்து வந்தாள் ஜனனி.

அவர்கள் சென்றதும் பொத்தென்று அமர்ந்த கந்தனுக்கு நெஞ்சமெல்லாம் தீப்பற்றி எரிந்தது. வெளியே பணத்துக்காக அவளைத் திருமணம் செய்யக் கேட்டாலும், உள்ளே அவள் மீது இருந்த காதலை அவனால் மறைக்க மட்டுமே முடிந்தது. அன்று வெளிப்படுத்தத் தெரியவில்லை; இன்று வெளிப்படுத்த முடியவில்லை. கந்துவட்டித் தொழிலால் அவனது எண்ணம் முழுக்கப் பணமாகத்தான் இருக்கும் என்று உலகம் நினைத்துக் கொண்டிருக்க, அவன் மனதில் முளைத்த காதலை யாருமே அறியவில்லை. படர வேண்டிய காதல் பட்டுப்போன வலியில் கண்ணீரோடு அமர்ந்துவிட்டான்.

நந்து பற்களைக் கடித்தபடி வண்டியில் ஏறாமல் நிற்க, ஜனனி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தபடி நின்றாள்.

“இப்போ என்னடா பிரச்சனை உனக்கு? ஏன் இப்படி இருக்க?”

“ஏன் இப்படி இருக்கேன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியலையே… சொல்லேன்!” – இதழை மடித்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டாள்.

“சிரிக்காதடி! எனக்குச் செம கோபம் வருது,” என்று பற்களை அரைத்தான் நந்து.

“சரி சரி சிரிக்கலை… சொல்லு!”

“அவனை நாலு அடி அடிக்காம பேசிட்டு வந்திருக்க! இதுல என்கிட்ட பேசக்கூடாது, கை நீட்டக்கூடாதுன்னு சத்தியம் வேற வாங்கி வச்சிருக்க! ச்சே… அவனைச் சும்மா விட்டுட்டு வந்தது என்னால தாங்கிக்க முடியல,” என்று வண்டியின் மீது தன் கோபத்தைக் காட்டினான்.

“அச்சச்சோ! அடிதடி எதுக்கும் தீர்வாகாது நந்து. அது பிரச்சனையை வளர்க்கத்தான் செய்யும். கோபம் நியாயம்தான், ஆனா அடிதடிதான் தீர்வா? பேசித் தீர்க்க வேண்டியதைப் பேசித்தான் தீர்க்கணும். அவனை அடிச்சுட்டு நீ ஜெயிலுக்கா போகப்போற? அப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணிடக்கூடாதுன்னுதான் சத்தியம் வாங்கினேன். என்னையும் நம்ம சச்சினையும் ஒரு நிமிஷம் நினைச்சுப் பாரு, உன் கோபம் காணாமப் போயிடும்,” என்றாள் புன்னகையுடன்.

அவர்கள் இருவரின் நினைவு வந்ததுமே நந்துவின் கோபம் தடம் தெரியாமல் போனது. அவளை நிதானமாகப் பார்த்தான்.

“ம்ம்… கோபம் போயிடுச்சா? அவன் தன் தப்பை உணர்ந்துட்டான், இதுக்கு மேல அவனைத் தாக்குறது சரியில்லை,” என்றாள். அவன் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.

“வா போலாம்!” என அவள் அழைக்க, அவன் வண்டியில் அமர, பின்னால் ஏறிய ஜனனி அவனை அணைத்தபடி முதுகில் கன்னம் வைத்துச் சாய்த்துக்கொண்டாள்.

நந்துவின் மீது அவள் கொண்ட காதலைத் தன் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான் கந்தன். அந்தப் பார்வை பெரும் வலியை இதயத்தில் ஏற்படுத்தியது. நெஞ்சைத் தேய்த்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“என்னடி என் பணம், உன் பணம்? நீ என் பொண்டாட்டிடி! உன்கிட்ட என் பணம் உன் பணம்னு பார்ப்பேனா? இல்லை உங்க வீட்டு ஆளுங்களுக்காக நான் ஏன் செலவு செய்யணும்னு கேட்கப் போறேனா? என்கிட்ட பணம் வாங்க உனக்கு என்னடி கூச்சம்? அப்போ நீ என்னை உன் புருஷனாப் பார்க்கல, அப்படித்தானே?” என்று கோபமாகக் கேட்டான் நந்து.

அந்த வளர்ந்த குழந்தைக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் ஜனனி. அவனோ முஷ்டியை மடக்கித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்