தனியொரு அன்றில் நீதானா

Loading

அன்றில்-1

 

சலித்து, போதுமெனச் 

சொல்ல முடியாமல்

என் வெளியெங்கும்

நீண்டிருக்கும் வானம்

நீ..

 

கோவை மாவட்டத்தின் ஒரு பிரபலமான கலை அறிவியல் கல்லூரியின் ஏசி கான்ஃபரன்ஸ் ஹால்.. இறுதியாண்டு படிக்கும் கணினி அறிவியலின் பல்வேறு துறை மாணவ மாணவிகள் அங்கு குழுமியிருந்தனர்.. அவர்கள் முன்னே எல்இடி டிஸ்ப்ளே போர்டின் பக்கவாட்டில் நின்றபடி.. இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படக் கூட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவான ஆங்கில நடையில் பேசிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

 

பெயருக்கு ஏற்றபடி சமுத்திரத்தின் ஆழத்தையொத்த.. ஆனால் அலைகள் வீசாத.. அறிவார்ந்த.. கூர்மையான விழிகள்.. இடது கரத்தில் மைக்கை அசால்ட்டாகப் பிடித்திருந்தவளின் வலது கை விரல்கள் டேபிளில் இருந்த லேப்டாப்பில் ஒரு புறம் விளையாட.. எவ்வித கவனச் சிதறலும் இன்றி அந்த வகுப்பைக் கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

 

இறுதியாக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அளவான புன்னகையுடன் பதில்கள் கொடுத்தவள்.. சரியாகக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வகுப்பை முடித்திருந்தாள்.. மாணவர்கள் நன்றி சொல்லிப் புறப்பட.. அதுவரை பக்கவாட்டில் அமர்ந்திருந்த பேராசிரியர்கள் இருவரும் எழுந்து வந்து அவளை நோக்கி வந்தனர்.

 

இது அவள் இளங்கலைப் படிப்பும், முதுகலைப் படிப்பும் முடித்த கல்லூரி என்பதால் வெகு பிரபலம் அவள் இங்கே.. நெகிழ்ச்சியுடன் அவளை நெருங்கிய பேராசிரியை “ரொம்ப சூப்பரா செஷன ஹேண்டில் பண்ணுன நேத்ரா.. அமேசிங்” என்று குருவை மிஞ்சிய சிஷ்யை அவளைப் பாராட்ட.. அதற்கும் அளவாய் ஒரு புன்னகை மட்டுமே சிந்தினாள் அவள்.

 

உடனிருந்த இன்னொரு பேராசிரியர் “எப்ப பிஹெச்டி கம்ப்ளீட் ஆகுது நேத்ரா உனக்கு” என்று வினவவும்..

 

“எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரி இந்த இயர் கம்ப்ளீட் பண்ண முடியல சார்.. அதனால நெக்ஸ்ட் ஒன் இயர் மட்டும் எக்ஸ்டன்ஷன் போட்ருக்கேன்.. டீம்டு யுனிவர்சிட்டி தானே.. எல்லாமே அவங்களே டிசைட் பண்ணிருவாங்க.. சினாப்சிஸ் ரெடி பண்ணிட்டு அவங்ககிட்ட சொன்னா போதும்” என்று விளக்கம் அளித்தாள் நேத்ரா.

 

இருவரும் அவளைப் பெருமையாகப் பார்த்து.. வைவா வரும்போது அழைக்கும்படி சொல்லிவிட்டுப் புன்னகையுடன் வழியனுப்பி வைக்க.. தான் கொண்டுவந்த லேப்டாப் இத்யாதிகளோடு.. அவர்கள் கொடுத்த சால்வை, நினைவுப் பரிசு என அனைத்தையும் அள்ளிக் கொண்டவள்.. அவள் படிக்கும் போது கணினித் துறையில் துறைத்தலைவராக இருந்து தற்போது கல்லூரி முதல்வராக இருப்பவரிடமும் சென்று சொல்லிவிட்டு.. விடைபெற்றுக் கிளம்பினாள்.

 

பார்க்கிங் வந்தவள்.. கையோடு கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பின் சீட்டில் விசிறி விட்டு.. தன் ஐ போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

 

மறுபுறம் அழைப்பு ஏற்கப்படவும் “வேற எதுக்காகவும் கூப்பிடல ரஞ்சித்.. ஒன்ஸ் ஸ்ட்ரெய்ட்டா பாத்து எல்லாத்தையும் க்ளீயர் பண்ணிக்கலாம் வாங்க” என்கவும்..

 

மறுபுறம் கேட்ட எதற்கும் பதில் அளிக்காமல் “சேம் கஃபே தான்.. ஷார்ப் சிக்ஸ் ஓ க்ளாக்.. வரலன்னா நோ ப்ராப்ளம்.. உங்க வீட்டுக்கே வந்து பேசிடறேன்.. சீ யூ” என்றுவிட்டுக் காரை எடுத்தாள்.

 

 

மாலை நேர வானத்தில் சூரியன் ஓரமாய் ஒதுங்கிப் போயிருக்க.. இளஞ்சிவப்பு நிறத்தை மெல்லமாய்த் துரத்திக் கொண்டு வந்தது கருமை நிறம்..‌ ஒருநாளை நெட்டித் தள்ளிக் கூடடையும் பறவைகள் வானத்திலும்.. மனிதர்கள் நிலத்திலும் நகர்ந்து சென்று கொண்டிருக்க.. எப்போதும் வரும் கஃபே உள்ளே அமர்ந்து அந்த மௌன நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.

 

 

அவள் முன்னே அமர்ந்திருந்த ரஞ்சித்தோ இவள் என்ன குழப்பம் செய்யப் போகிறாளோ என்ற பயத்தில் பீதியுடன் அவள் முகத்தில் பார்வையைப் பதித்திருக்க.. தன் விழிகளை அவன் புறம் திருப்பிய நேத்ரா “காஃபி எடுத்துக்கோங்க ரஞ்சித்” என்று சொல்லவும்.. ‘ரைட்டு.. கையில காஃபியை குடுத்து.. கழுத்துல கத்திய வைக்கப் போறா’ என்று திகிலுடனே ஹேசல்நட் காஃபி மோக்காவை சுவை பார்க்க ஆரம்பித்தான் ரஞ்சித்.

 

 

அவன் நினைப்பு சரி என்பது போல “சொல்லுங்க ரஞ்சித்.. கால் பண்ணி என்னமோ சொன்னிங்களே” என்று அவள் தொடங்க..

 

 

‘நாம ப்ரேக்அப் பண்ணிக்கலாம்’ என்று அவன் சொல்லி கிட்டத்தட்ட இரண்டு பகல், இனறோடு சேர்ந்து இரண்டு இரவு ஆகிவிட்டது.. சாவகாசமாக இப்போது அவள் வந்து கேட்பதில் பல்லைக் கடித்தவன் “அதான் ஆல்ரெடி சொன்னனே” என்று அவன் முகத்தைத் திருப்ப..

 

 

“தட்ஸ் ஓகே.. அகெய்ன் ஒருவாட்டி சொல்லுங்க” என்றாள் இப்போதும் கேஷூவலாக.

 

 

கப்பைக் கீழே வைத்த ரஞ்சித் “நீ என்ன எப்படி கன்ப்யூஸ் பண்ணப் பாத்தாலும் என்னோட டிசிஷன் இதான்.. நாம பிரியறது தான் சரி” என்றான் ஒரு வித அவஸ்தையுடன்.

 

 

“என்ன ரீசன்னு நான் தெரிஞ்சுக்கலாமா” இப்போது துளி சலனம் இல்லாத அவள் வதனத்தில் இவன் தான் அயர்ந்து போக வேண்டி இருந்தது.

 

 

சற்றே தயக்கமாக “சொன்னா ஃபீல் பண்ணுவ.. வேண்டாமே” என்று அவன் இழுக்க.. தோளைக் குலுக்கினாள் நேத்ரா.

 

 

அதில் இவன் ஈகோவும் தூண்டப்பட “பாத்த உடனே ஒரு ஸ்பார்க் வரனும்ல.. அது உம்மேல எனக்கு வரல.. போகப்போக சரியாகிடும்ன்னு நினைச்சு நானும் இந்த நைன் மன்த்ஸ்ல வெய்ட் பண்ணி பாத்துட்டேன்.. ஆனா வரல.. அதுபோக நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கும் போது ஃபேமிலி எல்லாம் பாக்கனும்.. உன்னைக் கேட்டா நீயும் அம்மாவும்னு சொல்ற.. மத்தபடி எதுவுமே சொல்ல மாட்டேன்ற.. வீட்ல பேசனும்னா சிலது எல்லாம் நெசஸரி.. புரியும்னு நினைக்கறேன்.. சோ ஐ திங்க் திஸ் வோன்ட் வொர்க்.. லெட்ஸ் ப்ரேக்அப்” என்று அவள் முகத்தில் அறைந்தது போலச் சொல்ல நினைத்துப் பேச.. அப்போதும் அவள் முகத்தில் மாற்றம் வரவில்லை.

 

 

அவன் சொன்ன அத்தனையும் குறுக்கிடாது கேட்டவள் விரல்கள் தனக்கு முன்னிருந்த கப்பை எடுக்க ‘மூஞ்சியில கொட்டிருவாளோ’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க.. மூன்றாவதாக ஒரு கரம் அவள் கையில் இருந்த கப்பைப் பறித்தது.. இருவரும் நிமிர வாயெல்லாம் பல்லாக அவள் அருகே அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் ஹர்ஷா.

 

 

‘ஐயோ.. இவனா.. இன்னைக்கு என்ன பண்ணப் போறானோ’ என்று அவனைக் கண்டு ரஞ்சித் விழிக்க “ரொம்ப குஷியோ எனக்கு ப்ரேக்அப் ஆனதுல” என்று அவனிடம் தன் கோவமுகத்தைக் காட்டினாள்.

 

 

“அப்கோர்ஸ் பேபி” என்று அவளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவன்.. ரஞ்சித்திடம் திரும்பி “நூத்துல ஒரு வார்த்த சொன்னீங்க ப்ரோ.. இதைத்தான இத்தன நாளா நான் சொல்லிட்டு இருந்தேன்.. அதுனால என்ன இப்பவாச்சு புரிஞ்சுகிட்டிங்களே.. இன்னைல இருந்து உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சு ப்ரோ” என்று ப்ரேக்அப் செய்ததற்கு வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருக்க.. அவன் குறுக்கே இருந்ததால் எழுந்து செல்லவும் முடியாமல் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா.

 

 

இவன் வாயிலிருந்து வருவது வாழ்த்தா, வஞ்சப்புகழ்ச்சியா, உயர்வு நவிற்சியா என்று குழம்பிப் போன ரஞ்சித் “சார்.. யார் நீங்க.. ரெண்டு பேர் பேசிட்டு இருக்கும் போது மேனர்ஸ் இல்லாம இப்படி பிகேவ் பண்றீங்க” என்று காய..

 

 

தன் புன்னகை முகம் மாறாமலேயே அவனை ஏறிட்ட ஹர்ஷா “உனக்கு இருக்காடா நாயே மேனர்ஸ்” என்று கேட்க.. “ஹலோ” என்று குரலை உயர்த்தினான் ரஞ்சித்.

 

 

விளையாட்டுத்தனம் விடைபெற்றுச் செல்ல.. சொல்ல முடியாத ரௌத்திரம் முகத்தில் தாண்டவமாட”என்ன சவுண்ட் விடற.. மேட்ரிமோனியல் சைட்ல இவ ப்ரோஃபைல் பாத்துட்டு நீயா தானே வந்து இன்ட்ரோ ஆன.. ஒன் இயர் உனக்கு டைம் சரியில்ல.. அப்பறமா மேரேஜ் பத்தி ப்ரொசீட் பண்ணலாம்னு நீதானே வந்து கமிட் ஆன.. இப்ப ஸ்பார்க் வரல, பூ பூக்கல, நிலா நட்சத்திரமா ஆகலைன்னு கதை சொல்ற.. ஒருத்தங்க ஃபீலீங்க்ஸ் கூட விளையாடுற உனக்கு இருக்காடா மேனர்ஸ்” என்று மிரட்டினான் ஹர்ஷா.

 

 

“என்ன நேத்து இவனை பேசவிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்க” ஹர்ஷா சொன்ன உண்மையில் அவனிடம் பதில் சொல்ல முடியாமல் ரஞ்சித் அவளிடம் புகார் சொல்ல..

 

 

“சார் சார்.. இங்க பேசுங்க.. அதான் ப்ரேக்அப்ன்னு சொல்லியாச்சுல்ல.. அப்பறமென்ன நேத்து, இன்னைக்கு, நாளைக்கு.. கிளம்பு” என்று அவனை இருக்க விடாமல் துரத்தினான் ஹர்ஷா.

 

 

அவளிடமும் அதற்கு பதில் வராமல் போக இருவரையும் முறைத்தபடியே அவன் நகர.. ஹர்ஷா திரும்பி நேத்ராவைப் பார்த்தான்.

 

 

“உனக்கு வேற ஆளே கிடைக்கலையா.. இவன் வந்து சொன்னதும் எதையும் யோசிக்காம ஓகே சொல்லிட்ட.. அதுவும் நான் வேண்டாம்னு சொன்னது உனக்கு ஆடட் அட்வான்டேஜ் ஆகி.. என்ன வெறுப்பேத்த இப்படி பண்ணிருக்க” என்று அவன் அதட்ட.. அவள் இதழில் நக்கலாய் ஒரு புன்னகை.

 

 

“அடேங்கப்பா.. உன்ன வெறுப்பேத்தவா நா அவனுக்கு ஓகே சொன்னேன்.. ஆனாலும் இன்னமும் பொண்ணுங்க பூ வச்சுக்கறது, புடவை கட்டிக்கறதுல தொடங்கி எல்லாமே உங்களுக்காகன்னு நினைக்கற இந்த பாவப்பட்ட ஆண் இனத்த நெனச்சா சிரிப்பு தான் வருது.. அவன பாக்க இன்னொசென்டா இருந்துச்சு.. நோ சொல்ல ரீசன் இல்ல அதான் அக்சப்ட் பண்ணேன்.. உனக்காக இல்ல” என்று அவள் பொரியவும்.. அவளைப் போலவே தோளைக் குலுக்கினான் ஹர்ஷா.

 

 

“மொதல்ல உனக்கு இங்கென்ன வேலை”

 

 

“என்ன தெரியாத மாதிரி கேக்கற.. என் உயிர் இங்கதான இருக்குது”

 

 

“நல்ல ரைமிங்கா ஒரு கெட்ட வார்த்தை வாயில வருது.. மரியாதையா எந்திருச்சு ஓடிரு.. தேவையில்லாம ரோட்ல அடி வாங்கிராத” என்று அவனை எச்சரித்தவள்.. தன் மொபைலை எடுத்துக் கொண்டு அவனை இடித்தவாறே கிளம்பிவிட்டாள்.

 

 

புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்தவளின் மனதை அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடலும்.. அதை இப்போது தான் முதல் முறை கேட்பது போல இரசித்துக் கொண்டிருந்த அவள் அம்மாவும் சற்றே சாந்தம் ஆக்கினர்.

 

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை

தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை

தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை

தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை

காதலில் வாழ்ந்த கன்னி மனம்

காவலில் வாடையில் கண்ணிவிடும்

கூண்டுக்குள்ளே அலைமோதும்

காதல் கிளி அவள் பாவம்

காற்றே பூங்காற்றே

என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு.. என்று யேசுதாஸ் உருக.. அதைக் காதில் வாங்கியவாறே தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார் ஜோதி பிரபா.

 

ஆனாலும் அம்மாவின் கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பவே தட் தட்டென நடந்து வர.. புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்த பிரபா “வாங்க மேடம்.. இப்பத்தா லதா மேடம் போஸ்ட் பாத்தேன்.. எப்படி போச்சு லெக்சர்” என்று எழுந்தவர்.. எப்போதும் அவள் விரும்பும் ஆரஞ்சு ஜூஸைக் கொண்டு வந்து தர..

 

“ம்ம் குட் ம்மா.. நீ எப்ப வந்த” என்று கேட்டவாறே அதை வாங்கிக் கொண்டு கேள்வி எழுப்பினாள் மகள்.

 

பிரபாவும் அருகில் இருக்கும் ஓர் அரசு உதவி பெறும் கல்லூரியில்.. அரசுப்பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணி புரிகிறார்.

 

“கொஞ்ச நேரம் முன்னாடி தான்.. மார்னிங் பஸ்ல போனதால கேன்.என் சார் டிராப் பண்றேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாரு.. ஆமா நீ எங்க போயிட்ட காலேஜ்ல இருந்து வந்து”

 

 

“அந்த ரஞ்சித் இல்லம்மா அவன் ப்ரேக்அப் பண்ணிக்கலாம்னு சொன்னானா.. அதான் என்னன்னு கேட்டுட்டு வரப் போனேன்”

 

 

“என்ன ஆச்சு.. எதுக்கு திடீர்னு”

 

 

உதட்டைப் பிதுக்கியவள் “தெரியலம்மா.. ரெண்டு நாள் முன்னாடி நா கொச்சின்ல கான்பரன்ஸ் அட்டென்ட் பண்ண போனேன்ல.. அன்னைக்கு மார்னிங் சொன்னான்.. அதான் என்னன்னு கேட்க போனா ஸ்பார்க் வரலைன்னு சொல்றான்” என்று அவள் இயல்பாகச் சொல்லிக் கொண்டிருக்க.. பிரபாவின் முகம் தான் ஒரு நொடி துக்கத்தில் ஆழ்ந்தது.

 

 

ரஞ்சித் வந்து பேசியதுமே அவரிடம் வந்து அறிமுகம் செய்து வைத்தாள் நேத்ரா.. அவனும் ஏதோ ஜாதகக்கோளாறு என்று ஒரு வருடம் நேரம் கேட்க.. அவனைப் பற்றி விசாரித்த பிரபாவும் சரி என்றிருக்க.. இப்போது இப்படி ஒரு நிலைமை.

 

 

தன் அம்மாவின் முகத்தையே ஊன்றிக் கவனித்த நேத்ராவிற்கு அவரின் எண்ணப் போக்கு புரிய “என்னம்மா.. ஃபீலிங்கா.. பத்து காசுக்கு கூட புண்ணியம் இல்ல.. போனா போறான்.. இதெல்லாம் கூட நீ சொன்னதுக்காகப் பண்ணுனது தான்.. மத்தபடி எனக்கு பெருசா இதுல எல்லா இன்ட்ரெஸ்ட் இல்ல.. பாப்போம் அடுத்து யாராச்சு வராங்களான்னு” என்று அவள் இயல்பாகச் சொன்னாலும்.. பிரபாவால் அதை ஏற்க முடியவில்லை.

 

 

“என்னடி இப்படிச் சொல்ற.. நாம பேசி பாக்கலாம்”

 

 

“வேற எப்படிச் சொல்லட்டும்.. உன்ன மாதிரியே விட்டுட்டுப் போனவங்களுக்காக அவங்களையே நினைச்சு பாட்டு கேட்டுட்டு வாழச் சொல்றியா.. எனக்கு யாருக்கும் செகன்ட் சான்ஸ் குடுக்கப் பிடிக்காது” என்று அழுத்திச் சொல்லியவள் “உனக்கு சிக்கன் சாப்படனும் போல இருக்குன்னு சொன்னியே இப்ப செஞ்சு தரேன் வாம்மா” என்று அவ

ள் கிளம்பிவிட.. ஏற்கனவே கனம் கூடிய இதயத்தின் மீது இன்னும் பாரம் ஏற மகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் பிரபா.

 

துணையாவான்..

 

வாணி அர்ஜூன் 💙

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்