என் உள்ளதை ஈரத்த பூமுகம் -06

Loading

 

முகம் 06

 

அன்றிறவு பூங்கோதை வீட்டில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் மலர்ந்தே இருக்கும் அவர் முகம். இன்று சற்று அதிகமாகவே சந்தோஷமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவர் கண்களில். அவர் இன்று பார்த்த பிரசவம் கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

அப்படியே நின்றவரைப் பின்னிருந்து இரு கரங்கள் அணைத்துக் கொள்ள அவரிடமோ மாற்றமில்லை…

அதில் கோபம் கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரரோ “மா திஸ் இஸ் டூ மச்… கொஞ்சமாச்சும் பயந்தது போல நடிக்கலாம்ல” என்று சிணுங்க,

“ஏன்டி இந்த வீட்ல உன்னை என்னையும் தவிர யாரும் இல்லை, அதைவிட உன்னப் பெத்து வளர்த்த எனக்குத் தெரியாதா, பிடிச்சது நீதான்னு?” என்றார் புன்னகையுடன்…

“இருந்தாலும் கொஞ்சம் நடிச்சிருக்கலாம். போம்மா” என்றவள் அங்கே சமையல் மேடையில் ஏறி அமர,

“கயல் இப்படி பண்ணாதன்னு உன்கிட்ட எத்தனை தடவ சொல்லி இருக்கேன். கேக்கவே மாட்டியா? கீழ இறங்கு” என்று கோபம் வந்தவராகக் கேட்க,

“சரி சரி, ஆரம்பிக்காத. இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு பாடம் எடுக்க ஆரம்பிச்சா உன் பேச்சை மறுக்கவும் முடியாது எனக்கு. ஏதோ வசியம் வெச்சிருக்கம்மா நீ. ஆனா எப்பவும் இப்படியே பண்ணிட்டு இருந்தன்னா நான் இங்க இருந்து பிச்சிக்கோன்னு ஓடியே போய்டுவேன் பார்த்துக்க” என்றதும் பூங்கோதையின் முகம் சற்று மாறி விட்டது.

அதனை உணர்த்தவளோ “ம்மாஆ, நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். உடனே மூஞ்ச தூக்கிப்பியே! எப்பவும் உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்மா” என்க,

அவள் முகத்தை வாஞ்சையுடன் வருடியவர், “தெரியும் கயல், எனக்குன்னு இருக்குறது நீதானே அதன் சட்டுனு ஒரு மாதிரி ஆகிடிச்சு, உனக்குப் பிடிச்ச போல நீ இருடா. அம்மா அதுக்கு ஏன் மறுப்பு சொல்லப்போறேன். ஏற்கனவே இழந்தது வரை போதும். உன்ன ஒரு நல்லவன் கைல கொடுத்துட்டா நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” என்றார் சற்று உணர்ச்சி வசப்பட்ட குரலுடன்…

கயலுக்கோ எப்போதும் போல் அந்த வசனம் குற்ற உணர்வைத் தூண்டி விட்டிருந்தது. தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது ஒரு புறம் என்றால் இப்போது வரை அதனை மறைப்பது இன்னும் குற்ற உணர்வைத் தான் கொடுத்தது.

அதற்கு மேல் தாய் முகத்தைப் பார்க்க முடியாதவளோ “ம்ம்மா இனிமேல் கண்ண மூடுவேன் அது இதுனு பேசாத, கஷ்டமா இருக்குமா? உன் கூடவே தான் நான் இருப்பேன். குட் நைட் மா… நான் தூங்கப் போறேன்” என்க,

“அச்சோ கயல் நான் இனிமேல் பேசலடா. சாப்பிட்டு போ” என்ற தாயின் குரலுக்கு, “பசிக்கலமா” என்று பதில் கொடுத்து அங்கிருந்து அறைக்குள் வந்திருந்தாள்.

வந்தவள் அப்படியே மெத்தையில் விழ, மனதில் அவன் முகம்.

கூடவே “பொம்மை ப்ளீஸ் புரிஞ்சிக்கோடி, எனக்கு உன்ன இப்படி குற்ற உணர்ச்சியோட கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோசத்தோட உன் அப்பா அம்மா உன்ன என்கிட்ட கொடுக்கணும். நான், என் குடும்பம் சூழ நெஞ்சம் முட்டுற காதலோட உன்னை என் மனைவியாக்கிக்கணும். இதெல்லாம் நடக்க கொஞ்சம் பொறுத்துக்கோயேன்டி. என் மேல, உன் முகி மேல உனக்கு நம்பிக்கை இல்லையா பொம்மை?” என அவன் அன்று மன்றாடலுன் பேசியது ஞாபகம் வர, கண்கள் குலமாகியது.

“சாரி முகி, எனக்கு மனசுக்குள்ள ஏதோ பயம். உன்ன இழந்துடுவனோன்னு மனசு கெடந்து அடிச்சிகிச்சி, ஏற்கனவே என் மனசுக்கு நெருக்கமான ஒருத்திய நான் இழந்தப்பவும் இதே ஃபீல் இருந்திச்சு. அதான் பயந்துட்டேன்டா, எங்க உன்னையும் காலம் எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டா?” என்று அவனிடம் சமாதானம் சொல்வது போல் பேசியவள்,

தலையணைக்கு அடியில் பாதுகாப்பாய் மறைத்து வைத்திருந்த அவர்களது திருமணப் புகைப்படத்தைக் கையில் எடுத்து அதில் முகிழின்பனின் வரிவடிவத்தை விரல்களால் வருடி,

“என் மீசைகாரனுக்கு ரொம்ப தான் கோபம். இன்னும் எவ்வளவு நாளைக்கு முகி இந்தப் பிரிவு? எனக்கு உன் மூச்சு காத்து வேணும்னு தோணுதுடா. வாயேன் என்கிட்ட, நானும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்னோடவே வந்துடவா?” என்று அவன் படத்திடம் பேசிக்கொண்டிருக்க, மனக்கண்ணில் தாய் முகம். ‘அவளுக்காகவே வாழும் அவரை விட்டுத் தன்னால் செல்ல முடியுமா’ என்பது கேள்விக்குறியே!

முகிழின்பனைக் காணாமல் தவிர்ப்பதும் இதனால் தானே! ‘எங்கே அவனை மீண்டும் பார்த்தால் அவனோடு சென்று விடுவோம்’ என்ற பயம் அவளுக்கு.

‘தாயிடம் பேசிவிடலாம்’ என்று தான் போராடுகிறாள் ஆனால் அது இத்தனை நாட்களில் முடியவே இல்ல. எங்கே கோபம் கொண்டு தன்னை விட்டு அவர் சென்று விட்டால், அதனையும் அவளால் தாங்க முடியாதே!

அதுவே இன்னும் அவளது தந்தையானவரின் மேல் கோபத்தை விதைத்தது அவளுக்கு…

“சீக்கிரம் வா முகி, எனக்கு முடியல. உன்னோடு உன் கைக்குள்ள என் கவலை எல்லாம் மறந்து தூங்கணும்” என்றவள் கண்களை மூட, அவனே அணைத்துக்கொண்டது போல் தென்றல் அவளைத் தீண்டியது.

அங்கே அவளது மீசைக்காரனும் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருந்தான்.

கோபம் வானளவு இருந்தாலும் அவன் காதல் அதனையும் விடப் பெரிதல்லவா?

“படுத்துறடி என்ன, உன்ன வெறுக்கவும் முடியாம ஏத்துக்கவும் முடியாமத் தவிக்கிறது உனக்கு எப்போ புரிய?” என்று அலுத்துக் கொண்டவன் நினைவுகளில் அவனின் அவள். அவள்மீதான காதல்,

அவளும் இதே நேரம் தூக்கத்தில் இவர்களது முதல் சந்திப்பைத் தான் எண்ணிக்கொண்டிருந்தாள்.

_____________________

இரண்டு வருடங்களுக்கு முன்பு

சென்னையில் பிரபல்யமான வழக்கறிஞ்சர் சீனிவாசனிடம் தான் முகிலின்பன், கிருபாகரன் இருவரும் ஜூனியராகப் பயிற்சி பெறுகின்றனர்.

இப்போது சென்று கொண்டிருக்கும் வழக்கு ஒன்றில், ‘ஆதாரத்தைத் தேடவேண்டாம்’ என்று மறைமுக மிரட்டல் வந்திருந்ததது.

அந்த மிரட்டலுக்குரியவன் இன்று பொய்யாக ‘ஹார்ட் அட்டாக்’ என்று வந்து படுத்திருப்பது தெரிய, உண்மையாகவே அவன் இதயத்தை நிறுத்த, அவனைத் தேடி மருத்துவமனைக்கு வந்திருந்தான் இன்பன்.

உள்ளே நுழைந்தவன் நேரே அவன் இருக்கும் அறைக்கே சென்று படுத்திருந்தவனின் கன்னத்தில் ஒன்று வைக்கவும்,

அவனைப் பரிசோத்தித்து விட்டு, கை கழுவச் சென்றிருந்தவள், வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவளோ “என்ன மிஸ்டர் மீசைக்காரன் ரௌடிசமா? அத எல்லாம் ஹாஸ்பிடலுக்கு வெளிய வெச்சிக்கோங்க” என்க,

அவளை முறைத்தவன், மீண்டும் அவளைப் பார்த்தபடியே இன்னொரு அறை வைத்திருந்தான். அதற்குள் படுத்திருந்தவன் எழுந்து கொள்ள, அடுத்த அறைக்கு அவன் கை ஓங்க தடுக்க போனவளின் கால் வழுக்கியதில் அந்த அறை அவளுக்கு விழுந்திருந்தது.

அந்த வெண் பட்டுக்கன்னத்தில் அவன் விரல் அடையாளம் பதிந்து போக, அத்தனை சிவந்திருந்தது. வலியில் கண்கள் கலங்க, அவன் தந்ததை அவனுக்கே திருப்பிக் கொடுத்திருந்தாள் பெண்ணவள்.

அவள் கண்ணங்களில் விடாமல் கண்ணீர் பெறுக, வழியும் கண்ணீரும் கன்னத்தில் பட்டத்தில் அதுவும் சேர்ந்து வலித்தது.

அவனுக்கோ அத்தனை சங்கடம். பெண்களை அவன் எத்தனை மதிப்பவன். அம்மா, அத்தைகளின் வளர்ப்பில், தங்கையுடனும் அத்தை பெண்களுடனும் வளர்ந்தவன் அவன். இதுவரை அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கை ஓங்கியதே கிடையாதே!

அவள் மீசைக்காரன் என்று அழைத்த கோபத்தில் தான் அவனை இன்னும் ரெண்டு அறை விட்டிருந்தான். இவள் இப்படி வந்து இடையில் விழுவாள் என்று அவன் நினைக்கவே இல்லையே!

நிச்சயம் அதிகமாகவே வலித்திருக்கும் என்று அவனுக்கே தெரியும். அவன் பலத்துக்கு ஓங்கி இருக்க, அவள் மென் கன்னம் வலியில் சற்று வீங்கிப் போயிருந்தது புரிந்தது.

“ஐ எம் சாரி…” என்றவனுக்கு அடுத்து என்ன பேசவென்றே புரியவில்லை…

தவறுதான் மிகப்பெரிய தவறுதான். ஆனால் அவன் வேண்டும் என்று செய்யவில்லையே!

“இட்ஸ் ஓகே இதுல என்னோட தப்பும் இருக்கு, நானும் சாரி” என்றவள் அங்கிருந்து கிளம்பப் போக, கிருபாகரன் அழைத்து விடயத்தைச் சொல்லி இருந்ததில் சித்தார்த் வேகமாக உள்ளே நுழைந்திருந்தான்.

“டேய் இன்பா, இங்க வந்து என்னடா பிரச்சனை? போ இங்க இருந்து” என்க, அவன் பார்வை சித்தார்த்திடம் இல்லை. அதனை உணர்ந்த சித்தார்த் அவன் பார்வை போகும் திசையைப் பார்க்க, அங்கே கயல்.

“லாங்குவேஜ் என்னாச்சு உனக்கு?” என்று அவள் அருகே செல்லப்போக,

“நான் தான் மாமா அடிச்சிட்டேன்” என்றான் இவன்.

“டேய்…” என்று இவன் ஆரம்பிக்கும் போதே அவள் அங்கிருந்து சென்றிருக்க, இவனுக்கும் அங்கிருக்க முடியவில்லை. ‘ஒரு பெண்ணை அடித்துவிட்டோம்’ என்று குற்ற உணர்வாகிப் போக அங்கிருந்து அவனும் சென்றிருந்தான். சித்தார்த் தான் முழிக்க வேண்டியிருந்தது.

நாட்கள் அதுபாட்டுக்கு கடந்தாலும், அவன் அடித்ததில் வீங்கிய அவள் முகமும், அன்று அழுதபடி நின்றிருந்த நிலையும் அவனை ஒவ்வொரு நாளும் எண்ணங்களால் அவளைத் தொடர வைத்தது.

அன்று அவன் அடித்துவிட்டு மன்னிப்புக் கேட்டதும் அவள் அதனைப் புரிந்து கொண்டு சொன்ன அவள் பதில் அவனுக்கு அத்தனை பிடித்தது

முதலில் சாதாரணமாகத் தொடர்ந்த அவன் உணர்வுகள் நாட்களின் நீட்டிசியில் கதாலாய் மாறி இருக்க, சித்தார்த்திடம் அவள் எண்ணை ‘மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என வாங்கி இருந்தான். ஆனால் அழைத்துப் பேசிடத்தான் முடியவில்லை.

அவள் என்னை அவனது அழைபேசியில் ‘கயல்’ பதிவு செய்தவன், பின்னர் என்ன தோன்றியதோ அதனை அழித்து ‘பொம்மை’ என்று பதிந்திருந்தான்.

அவ்வப்போது காதலின் மிகுதியில் சேமித்து வைத்த அவளது எண்ணுடன், அவளிடம் பேசுவது போலவும் பேசுவதுண்டு. ஆனால் அவளிடம் நேரில் பேச எண்ணவில்லை…

‘அடித்துவிட்டு காதலும் சொல்வாயா’ என்று கேட்டாள் என்ன சொல்வான்.

இப்படியே ஒருநாள் அவளே அவனைத் தேடி வந்திருந்தாள். வழக்கு ஒன்றுக்கு கோப்புகளை அவன் தாயர் செய்து கொண்டிருக்கும்போது, கிருபாகரன் அவளை அழைத்து வந்து, “இன்பா ஒரு பொண்ணு உன்ன தேடிட்டு இருந்திச்சு அழைச்சிட்டு வந்தேன்” என்க, நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை…

ஒரு நிமிடம் அவளுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று உள்ளம் பதற, வெளியே சாதாரணமாகவே அமர்ந்திருந்தான்.

பொதுவாக சீனிவாசனைத் தேடி வரும் வழக்குகள் அதிகம், அதனால் வழக்குகளின் தேவையைப் பொறுத்து அதனை முன் பின் எனப் பிரித்துக் கொடுப்பது முகிலின்பனின் வேலை.

முக்கியமானவர்களின் வழக்கு என்றால் சீனிவாசனே நேரில் வந்து தகவல் வாங்கிக் கொள்வார், இல்லை என்றால் இன்பன் தான். அதனாலயே அவன் அவனைத் தேடி வந்திருக்கக் கூடுமோ என்று எண்ணியவன் அவளை உள்ளே அனுமதித்தான்.

அவன் முன்னே அமர்ந்த கயல் கிருபாகரனையே இரண்டு முறை திரும்பித் திரும்பிப் பார்க்க, அவள் தயக்கம் உணர்ந்தவனும் கிருபனை வெளியே போகச் சொல்லி இருந்தான்.

இது அங்கே வழமையாக நடக்கும் ஒன்றுதான் அதனால் கிருபாகரனும் கிளம்பி விட்டான்.

“சொல்லுங்க மிஸ் என்ன விஷயம், கேஸ் ஏதாச்சுமா?” என்றவனுக்கு அவள் முன் அடுத்து சாதாரணமாகப் பேசுவதே பேரும் பாடானது.

அவளோ அப்போதும் தயக்கத்துடன் அமர்ந்திருக்க, இவனுக்குப் பயம் பெரிதாகியது. இந்த அளவுக்குத் தயங்குகிறாள் என்றால் ‘விடயம் பெரிதோ?’ என்றொரு கலக்கம் அவனுக்குள்…

அவன் அடுத்து கேட்க ஆரம்பிப்பதற்குள், அவள் கேட்டிருந்த கேள்வியை அவன் மூளை எடுத்துக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது.

“என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா?, அன்னைக்கு என்ன நீங்க அடிச்சு உங்கள நான் அடிச்சு…” என்று இழுத்தவள் அவனுக்கு ஞாபகப்படுத்த, அவனுக்கோ அவள் கேட்டதைப் புரிந்து கொண்டத்தில் உள்ளே ஒரு கலவரமே உருவாகி இருந்தது.

ஆனால் காட்டிக்கொல்லாமல் “அப்படியா, என்னை அடிசீங்களா?” என்று கேட்க, அவள் முகம் போன போக்கைப் பார்க்க, பாவமாய் இருந்தது.

“உண்மையாவே ஞாபகம் இல்லையா” என்றவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது.

அவன் எப்படி அன்றிலிருந்த்து அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறானோ? அதே போல் அவளும் அவனைத் தான் எண்ணிக் கொண்டிருக்கிறாள். அப்படி இருக்கையில் இவனது இந்தப் பதில் அவளைக் கூறு போட்டது எனலாம்.

பேசிக் கொண்டிருக்கையில் அவனை யாரோ தேடி வர, எழுந்து சென்று அவன் பேசிக்கொண்டிருக்க, இவளுக்கோ அவன் தொலைபேசி என்னை எடுக்கும் ஆர்வம்.

அவள் நல்ல நேரத்துக்கு அவனது தொலைபேசி அங்கேயே இருந்தது. அதிலும் எந்தவித திரைப்பூட்டு எதுவும் போடப்பட்டிருக்கவில்லை…

அவனைது அழைபேசியை மெல்ல எடுத்தவள் ‘அவன் வருகிறானா?’ என்று பார்த்தபடி அவள் என்னை அழுத்த, அவன் சேமித்து வைத்த ‘பொம்மை’ என்ற அவள் எண் அவளுக்குப் பல்லைக் காட்டியது.

அவ்வளவு தான் அத்தனை நேரம் வாடி இருந்த அவள் முகம் பளிச்சென்று ஆகிவிட, சத்தம் இல்லாமல் அவன் தொலைபேசியை அதன் இடத்திலேயே வைத்து நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்டாள். மீண்டும் வந்தவனுக்கு அவள் முகம் குழப்பத்தைக் கொடுத்தது.

அவளோ “அப்போ நான் கிளம்புறேன்” என்க, இவனோ “அதுக்குள்ளயா?” என்று அதிரச்சியாய் கேட்டு “இல்ல இன்னும் நீங்க வந்த விஷத்தைச் சொல்லலையே!” என்று சமாளித்திருந்தான்.

“அத நான் ஃபோன்லயே சொல்லிக்கிறேன் உங்க நம்பர் கிடைக்குமா?” என்க, அவனும் புன்னகையுடன் அவன் தொலைபேசி எண்ணைக் கொடுத்தான்.

“அச்சச்சோ என் ஃபோன்ல பேலன்ஸ் இல்லையே! என்ன பண்றது?” என்று யோசிப்பது போல் அவனைப் பார்க்க,

“அது பரவாயில்லை நானே உங்களுக்குக் கால் பன்றேன்” என்றவன் அவளுக்கு அழைக்க, அதன் பிறகே அவள் அவன் தொலைபேசியைப் பார்த்திருக்கிறாள் என்றே புரிந்து போனது.

ஒற்றைக் கண்ணை மூடி நாக்கையும் கடித்துக் கொண்டவன் அவளைப் பார்க்க, அவளோ புருவம் உயர்த்தி அவனைத் தான் பார்த்திருந்தாள்.

“என்னத் தெரியாது, ஆனா என் நம்பர் மட்டும் உங்க ஃபோன்ல அதுவா வந்து குதிச்சிச்சோ? எல்லாமே பொய்யில?” என்று கேட்டாள்.

“அது வந்து…” என்று அவன் இழுக்க,

“லெட்ஸ் பி ஃபிரண்ட்ஸ்” என்றவள் அவனுக்குக் கரத்தை நீட்ட,

“வெறும் ஃபிரண்ட்ஸ் தானா?” என்றவனும் அவளுடன் கை குலுக்கிக் கொண்டான்.

அதன்பின் என்ன ‘நண்பர்களா?? காதலர்களா??’ என்று தேடும் பயணத்தில் அவனுள் அவளும். அவளுள் அவனும் தொலைந்து போனது தான் மிச்சம்…

இரண்டு வருடம் தொடர்ந்த அவர்களது காதல் கதையில் பிரிவு என்னும் சிறு இடைவெளி அவர்களைத் தேக்கி இருந்தது.

மீண்டும் தெளிந்த நீரோடையாவது விதியின் கைகளில்….

_______________

பழைய நினைவுகளிலிருந்து மீண்டவனோ “நீ அங்கேயே இருக்குறது நல்லதுடி பொம்மை, சும்மாவே உன்னப் பார்த்தா நான் நானா இருக்க மாட்டேன். இதுல கல்யாணம் வேற ஆகிடிச்சு, ஏடாகூடம ஏதாச்சும் ஆகி, நான் அப்பா ஆகிட்டேன்னா முடிஞ்சிது கதை. சோ கொஞ்ச நாள் அங்கயே இரு. சீக்கிரமே உன் அப்பாகிட்ட பேசுறேன்” என்றவனும் அதே திருமணப் புகைப்படத்தில் அவளது கன்னதுக்கு மென் முத்தம் வைத்தான்.

சிறிது நேரம் அப்புகைப்படத்திலேயே லயித்திருந்தவன், “இன்னும் எத்தனை நாளைக்கு இன்பா, இப்படி?” என்று கேள்வியைத் தன்னை நோக்கிக் கேட்டவனும் கண்களை மூடிக்கொண்டான்.

__________________

அடுத்த நாளும் விடிந்திருந்தது. அங்கே சித்தார்த், துவா இருவரும் விமான நிலையத்தில் காத்திருக்க, அவர்கள் எதிர் பார்த்த விமானம் தரை இறங்கி இருந்தது.

“துவா, இப்படி உக்காரு உனக்கு ஏதாச்சும் குடிக்க வாங்கிட்டு வரேன்” என்று சித்தார்த் சொல்ல,

“அதெல்லாம் வேணாங்க, இன்னும் கொஞ்ச நேரம் தானே! அவங்களும் வரட்டுமே சேர்ந்தே குடிச்சிக்கலாம்” என்க, அவனும் சம்மதமாய் புன்னகைத்துக் காத்திருக்கத் தொடங்கினான்.

சில நிமிடங்களிலே அவர்களது காத்திருப்பு முடிந்திருக்க, அவர்கள் எதிர்பாத்துக் காத்திருந்தவர்கள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அவளைக் கண்டதும் இங்கே சித்தார்த் நிற்கவில்லை, அவளை நோக்கி அவனும் அடியெடுத்து நெருங்கி, அவளாய் வருவதற்குள் இவனே சென்று அணைத்திருந்தான்.

“வெல்கம் லேங்குவேஜ்” என்று அவளை விட்டுப் பிரிய, இருவர் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர். ஒன்று அவன் மனைவி என்றால், இன்னொன்று அவனது செல்ல அபி.

“ஃபிரண்ட்ட பார்த்ததும் கட்டுன பொண்டாட்டி கண்ணுக்குத் தெரியலைல” என்று துவா பொய் கோபத்தோடு கேட்க, அபினவோ அவனை முறைத்தப்படியே நின்றான்.

அவன் உயரத்துக்கு குனிந்து அவன் காதில் ஏதோ சொன்ன துவாரகா அவனைத் தூக்கிக் கொள்ள, அபியின் பிஞ்சிக்கரம் சரியாய் சித்தார்த்தின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

“ஆஆ, கொலைகாரப் பாவிகளா!” என்றவன் வலிக்காத கன்னத்தைத் தடவிக்கொள்ள, மொழியோ புன்னகைத்தபடி “குட் ஷாட் அபி” என்று மகனுடன் இணைந்து கொண்டாள்.

“அடிப்பாவி உன்னால தானடி அடி வாங்குறேன் நானு” என்க,

“என் நண்பனாவே இருந்தாலும் நீ பண்ணது தப்பு சித்து, அவன் உனக்காக அங்க இருந்தே சண்டை போட்டுட்டு வரான். நீ என்னடான்னா என்னக் கட்டிப் பிடிக்கிற, கோபம் வருமா வராதா? அதுலயும் புதுப்பொண்டாட்டிய மறந்து ஓடி வர, துவாவா இருக்கப்போய் அமைதியா இருக்காங்க. நானா இருந்தா கொலை கேஸ் தான்” என்றாள் சிரிக்காமல்…

“அடிப்பாவி ஒரு அடி போதாதுன்னு என் உயிரோடவே விளையாடப் பார்க்குறியா?” என்று அவளிடம் ஆரம்பித்தவன்,

“துவா, இவ பேசுற எதையும் நம்பி உன் புருஷன கொன்னுடாதம்மா” என்று மனைவியிடம் அலறலுடன் முடித்தான்.

அதில் பெண்கள் இருவரும் சிரித்து விட, அபி துவாவின் கைகளிலிருந்து இறங்கி, சித்தார்த் முன்னே தூக்கும்படி நிற்க, “வாங்க மிக்கி மவுஸ்” என்று அவனைக் கைகளில் அள்ளிகொண்டான் சித்தார்த்.

அதன்பின் வீடு வந்து சேரும் வரை ஒரே அரட்டைதான். பேச, சொல்ல இப்படி ஆயிரம் விடயம் அவர்களுக்குள், இருந்தும் கவனமாய் சில கணமான விடயங்கள் மறந்தும் பேசப்படவில்லை.

அடுத்த வந்த நாட்களிலும் ஒன்றாக ஊர் சுற்றி அவர்கள் பொழுதுகள் கழிய, அபினவை சொல்லவே வேண்டாம் மற்றது மறந்து அத்தனை துள்ளலுடன் ஒவ்வொற்றையும் ரசித்துக்கொண்டிருந்தான். மகனின் மகிழ்வில் தயாக அவளும் மகிழ்ந்து தான் போனாள்.

இத்தனை வருடத்தில் அவன் நினைவு தெரிந்து முதன் முதலில் இந்தியா வருகிறான். இங்கிருந்து செல்லும்போது அவனுக்கு ஒரு வயது கூடப் பூர்த்தியாகி இருக்கவில்லையே!

‘தந்தையை பற்றி இந்தப் பயணம் அவனை மறக்க வைக்கும்’ என்று அவள் எண்ணி இருக்க,

தந்தையுடன் மகனை மட்டுமல்ல தாயையும் இணைக்கக் காலம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

________________

அதிகாலை நேரம் தூக்கத்திலிருந்து விழித்த சித்தார்த்தோ தாகத்துக்கு குடிக்கத் தண்ணீர் தேட அதுவோ காலியாகி இருந்தது.

தூங்கும் மனைவியை எழுப்ப மனம் இல்லாதவனோ ‘தானே எடுத்துக்கொள்ளலாம்’ என வெளியே வர, மொழியோ அவளது மடிக்கணினியில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாள்.

கண்களைக் கசக்கி அவளைப் பார்த்தவன் அவளருகில் அமர்ந்து “என்னாச்சுடி இந்த நேரத்துல என்ன பண்ணுற?” என்று கேட்க,

கரங்களை மேலே உயர்த்தி சோம்பல் முறித்தவளோ “டைம் சேன்ஞ்ல சித்து அதான் தூக்கம் வர மாட்டேங்கிது. அபி இங்க இந்த மூணு நாளாப் போட்ட ஆட்டதுக்கும் சேர்த்து அசந்து தூங்குறான். எனக்குத் தான் தூங்க முடியல, அதான் இந்த வேலைய முடிச்சிடலாம்னு வெளில வந்தேன்” என்றவள் மீண்டும் அதில் மூழ்க,

“என்ன மொழி இது?” என்று அவன் பார்க்க,

“நெக்ஸ்ட் சிக்ஸ் மந்த் இங்க தானே! சோ போர் அடிக்கும்ல அதான் இங்க ஏதாச்சும் ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணலாம்னு அப்ளை பண்ணிட்டு இருக்கேன் சித்து” என்றாள்.

“ஏதாச்சும் ஹாஸ்பிடல்லா? ஏன் கற்பகம் ஹாஸ்பிடலுக்கு என்ன வந்திச்சு?” என்க,

“ஏன் உனக்குத் தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்டாள் அவனைப் பார்க்காமல்…

“எப்போ இருந்து என் மொழி, அவ வேலையையும் பெர்சனலையும் கம்ப்ளீகேட் பண்ண ஆரம்பிச்சா?” என்று விடாமல் அவன் கேட்க, அப்போதும் அவனைப் பார்த்தாளில்லை…

அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவனோ “மொழி இது நீ இல்லையே! அது உனக்கு உரிமைப்பட்ட இடம், எதுக்காக நீ விட்டுக் கொடுக்கணும்?” என்றான்.

அவனை நோக்கித் திரும்பியவளோ “நான் இங்க வந்தது அதுக்கில்லையே சித்து, எதுக்கு வீணா பழசை கிளரணும். வெகேஷன் வந்த நான் வந்த மாதிரியே ஊருக்குத் திரும்பிப் போகணும்னு ஆசப்படுறேன். அதுதான் எல்லாருக்குமே நல்லது இன்பெக்ட் நான் விட்டுக்கொடுக்கல சித்து விலகிப்போறேன் ரெண்டுமே வித்தியாசம். இனிமேல் இதப் பேசாத. குட் நைட்” என்றபடி எழுந்து அறைக்குள் சென்றிருந்தாள்.

அவனுக்குத்தான் அதன் பின் தூக்கம் வருவேனா என்றது.

அவன் ஒரு திட்டத்துடன் இவளை வரவழைத்திருக்க, அதுவே இப்போது கேள்விக்குறியாகி விட்டதே என்ற கவலை அவனுக்கு…

ஏற்கனவே அவன் வீட்டில் தங்கமாட்டேன் என்றவளை அதையும் இதையும் பேசிச் சம்மதிக்க வைத்திருக்க, இப்போ அவன் எண்ணம் தெரிந்தால் தன்னிடம் கூடச் சொல்லாமல் அவள் நிச்சயம் எங்கேனும் சென்று விடுவது உறுதி. எனவே பொறுமையாகக் கையாள நினைத்தான்.

‘வேறு ஏதேனும் வழி யோசிக்க வேண்டும்’ என அவன் எண்ணிக் கொண்டிருக்க, நேற்று கிருபா ஏதோ பேச வேண்டும் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது.

“கிருபா பேசணும்னு சொன்னானே என்னவா இருக்கும். மறந்தே போய்ட்டேன்” என்று நேரத்தைப் பார்க்க, அதுவோ நான்கரையைக் காட்டிக் கொண்டிருந்தது.

இந்நேரம் எடுப்பதும் சரியில்லை, ஆனால் இதற்கு மேல் அவனால் தூங்கவும் முடியாது. கிருபாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியவன், என்ன செய்யலாம் என்ற யோசனைக்குள் புக, அடுத்த சில நொடிகளில் அவன் தொலைபேசி இசைத்தது.

‘இவன் இந்நேரம் தூங்காமல் என்ன செய்கிறான்?’ என்ற யோசனை இருந்தாலும்

அழைப்பை உயிர்ப்பித்தான்.

“மாப்பிள்ளை” என்று கிருபா ஆரம்பிக்க,

“உனக்கும் மாப்பிள்ளையாடா நானு? படுத்தாதீங்கடா என்ன, மரியாதையா முன்னாடி போல மாமான்னு கூப்பிடு இல்லையா சித்துனு கூப்பிடு அத விட்டு மாப்பிள்ளை வேப்பிலைனு எனக்கு வேப்பிலை அடிக்கப் பார்த்த, நான் ஃபோனக் கட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என்று காய்ந்தான்.

எதன் மீதோ இருந்த கோபம் எல்லாம் இப்போது இவன்மீது விழுந்திருந்தது.

‘ஏன் இத்தனை கோபம்’ என்று புரியாவிடினும்.

“சரி மாமா, கோபப்படாதீங்க, ஒரு முக்கியமான விஷயம் பேசணும் இப்போ பேசலாம்ல” என்க,

“அதுக்கு தானே மெசேஜ் போட்டேன். என்னனு சொல்லு” என்றவன் சற்று பதட்டம் வந்தவனாக,

“இந்த நேரம் தூங்காம என்ன பண்ணுற, ஏதாச்சும் பிரச்சனையாடா கிருபா, உன் அப்பா ஏதும் பண்ணிட்டாரா?” என்க,

“இல்ல இல்ல அதெல்லாம் இல்ல மாமா, இது வேற விஷயம்” என்றவன் தயங்க,

“சொல்லு கிருபா, இவ்வளவு நேரம் ஆகியும் தூங்காம இருக்கன்னா பிரச்சனை பெரிசுன்னு புரியுது” என்றவன் அவனை ஊக்கினான்.

“பெரிசு தான் மாமா” என்றவனுக்கு எப்படி சொல்வது என்று தயக்கம்.

சிறு இடைவெளின் பின் “மெடிக்கல் கேம்ப் அடுத்தவாரம் ஊருக்கு வர்றாங்கல்ல, அதுல கயல்மொழியையும் இங்க கூட்டிட்டு வர முடியுமா மாமா?” என்று ஒருவாறு கேட்டு முடித்திருக்க,

“வாட்…” என்று அதிர்ந்து இருக்கையிலிருந்து அவன் எழ, கிருபாவிடம் மௌனம்.

இதனை விடவும் பெரிய எதிர்ப்பைச் சித்துவிடம் அவன் எதிர்பார்த்தது தானே!

“என்ன சொல்லுற கிருபா, கயல் அவளை உனக்குத் தெரியுமா? அவ எதுக்கு அங்க?” என்று கேட்கவாறு வீட்டின் வெளியே வந்திருந்தான்.

கிருபா அப்போதும் மௌனம் உடைத்தானில்லை…

“கிருபா, என்னை டென்ஷன் பண்ணாத சொல்லு என்னனு” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டதும், அவனோ கடகடவென ஒப்பித்து விட்டான்.

‘எப்படியும் சொல்லியாக வேண்டியது தானே’ என்ற எண்ணத்தில் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க,

“அடேய் உன் அண்ணனுக்கும் தம்பிக்கும் அவர் பொண்ணு தானாடா வேணும்? ஊர்ல வேற பொண்ணா இல்ல, படுத்துறீங்களேடா என்னய” என்று அவன் புலம்ப இங்கே கிருபாவுக்கு என்னவென்று புரியவில்லை…

“என்ன மாமா சொல்லுறீங்க அண்ணன் தம்பியா புரியலையே!” என்க,

அவனுக்குப் புரியாது என்பது அவனுக்கும் தெரியும் தானே!

அதனைத் தெளிவுபடுத்த இப்படி அழைபேசியில் பேச முடியாது என்பது புரிந்தது.

கூடவே அவனுக்கும் இன்னும் சில யோசனை தோன்ற, “கிருபா இத இப்படி ஃபோன்ல பேச முடியாது, எனக்கும் இதுல உன்னோட ஹெல்ப் தேவை. என்னால இப்போ இங்க இருந்து ஊருக்கும் வரவும் முடியாது, சோ நீ நாளைக்கு சென்னை வர்றியா?” என்று கேட்க,

“நான் இங்க சென்னைல தான் இருக்கேன் மாமா, நானும் இன்பாவும் ஒரு கேஸ் விஷயமா இங்க சாரைப் பார்க்க வந்தோம்” என்றான்.

“ஓகே நல்லதா போச்சு. இன்பாவும் நீயும், காலைல முதல் வேலையா ஹாஸ்பிடல் வாங்க அங்க வெச்சு பேசிக்கலாம்” என்று சொல்ல,

“ஐயோ செத்தேன் நானு, இப்போ நான் பேசுறது இன்பாவுக்கு தெரியாது மாமா! உங்ககிட்ட இத சொன்னேன்னு தெரிஞ்சா என்னைக் கொலையே பண்ணிடுவான்” என்று அலற

“சரி சொல்லாம கூட்டிட்டு வா நான் பேசிக்கிறேன்” என்று அதற்கு வழி சொன்னான்.

“ஐயோ, இன்னும் ஒரு பிரச்சனை இருக்கே!” என்று அதற்கும் மறுப்பு சொல்ல,

“கிருபா இப்போ என்னடா?” என்றவனுக்கு ஒருவித எரிச்சல் தோன்றியது உண்மை.

“இன்பா அங்க ஹாஸ்பிடல் வரமாட்டான். ரெண்டுபேரும் பேசிக்கிறதில்லன்னு சொன்னேனே!” என்று இழுக்க,

பல்லைக் கடித்தவன் “சரி காஃபி ஷாப் அழைச்சிட்டு வா” என்று அதன் பெயரைச் சொல்லி அழைப்பைத் தூண்டித்தவன் மூச்சை இழுத்து விட, அங்கே கிருபாக்கு தான் தலை வலித்தது.

இனி இன்பாவின் கேள்விக் கணைகளைத் தாங்க வேண்டுமே!

“ஆண்டவா, மத்தவங்க காதலை ஊட்டி வளர்க்குறேன். என் காதல நீ வளர்த்து விட்டுடுப்பா” என்று வேண்டுதல் வைத்தவன் உள்ளே சென்று கட்டிலில் விழுந்தான்.

இனி காலம் அதன் ஆட்டத்தை செவ்வனே செய்ய விதியுடன் கைகோர்த்துத்திருந்தது…

செய்த தவறைத் திருத்தி எழுத விதிக்கும் கடமை உண்டல்லவா??

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்