சது(ரங்கம்). அத்யாயம் 30 final episode

Loading

சாதுர்யா அவளது குரல் அவளது குடும்பத்தார் இடையே உள்ளத்தை உருக வைப்பதாக இருந்தது. ரங்கனை நிலை சொல்லவே வேண்டாம். இவள் பேசுவதை எல்லாம் சிரிப்புடனே கேட்டுக் கொண்டிருந்தான். ஏதோ தீர்மானித்துவிட்டாள் என்பது வரை அவள் குடும்பத்தினருக்கு புரிந்து இருந்தது ஆனால் அவள் மனதில் இருக்கும் ஆழமான விஷயங்கள் அவளை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை.

\தேர்தலில் சாதுர்யா அமோக வெற்றி பெற்றாள் இந்தமுறையும். அருணாச்சலத்தின் கட்சி முதன்முறையாக ஆட்சிபீடத்தில் ஏறியது. மக்கள் இந்தப் பெண்ணை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பது அருணாசலத்திற்கு மிகப்  பெரிய மகிழ்ச்சி. தனக்குப்பின் தான் உருவாக்கிய கட்சி  என்ன ஆகுமோ என்ற கவலை அவர் மனதில் கரையான் போல் அரித்து கொண்டிருந்தது. இனி அந்த கவலை இல்லை. தனது அம்மாவின் வெற்றியை கொண்டாட  ஸ்கந்தன் வந்துவிட்டான். மருத்துவக் கல்லூரியின் கடைசி ஆண்டு மாணவன் அவன்.

செய்திகள் மூலம் சாதுர்யா வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்க போவதை அறிந்துகொண்டான் குரு. அவன் மனம் முழுவதும் காந்தியது. அவளை இனி நிம்மதியாக ஆட்சி செய்ய விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

 உதகை தொகுதியில் ராக்காயி வெற்றி பெற்றாள்.“சாதுர்யா வெங்கடேசன் ஆகிய நான்…” என்று ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சாதுர்யாவை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ரங்கன்.சாதுர்யா தன் குடும்பத்தில் இருந்தவர்களையும் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்திருந்தாள். வெங்கடேசனும் மாலதியும் வரவில்லை. லக்ஷ்மி அம்மாளும் ரங்கனும் மட்டும் வந்திருந்தார்கள்.

தாமு தான் ஸ்ரீரங்கத்திலிருந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வதாக  சொல்லிவிட்டார் . அவருக்கு சற்றே உடல்நிலை சரியில்லை. லக்ஷ்மி அம்மாள் சென்னை செல்ல எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவரை மட்டும் அனுப்பி வைத்தார்.

தொலைக்காட்சியில் தன் பேத்தியின் பதவியேற்பு விழாவை பார்த்துக் கொண்டிருந்த தாமு உணர்ச்சியில் தத்தளித்தார்.

அவர்கள் எதிர்பார்த்தது அந்த பெண்ணிற்கு வேறு விதமான வாழ்க்கை. திருமணம் குழந்தைகள் என்று.இதோ அவளது கணவன் கூட அவளது பதவி ஏற்பு விழாவில் யாரோ மூன்றாவது நபர் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்படியோ வாழ வேண்டிய பெண், இப்போது விதி அவளை என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது… உண்மையில் அவளது குடும்பத்தினர் பொருத்தவரை அவள் முதலமைச்சராக பதவியேற்பது,அரசியலில் தீவிரமாக  பங்கேற்பது போன்றவையெல்லாம் அவர்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத ஒன்று.ஆனால் தீர்மானம் செய்திருப்பது பெண்.அதனால் அதை மாற்றுவதற்கு அவர்கள் முனையவில்லை. அதைப்போல், என்னதான் அவர்கள் எடுத்துச் சொன்னாலும் அவள் என்றும் போல் தன் பிடிவாதத்தில், தீர்மானத்தில் இருந்து மாறப் போவதுமில்லை.காவல்துறை,சட்டம், நிதி இலாகாக்களை தன்வசம் வைத்துக் கொண்டவள் மற்ற துறைகளுக்கான அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து இருந்தாள். அவர்களும் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

ராக்காயிக்கு சமூக நீதி மற்றும் பெண்கள் மேம்பாடு ஒதுக்கி தரப்பட்டது.சாதுர்யா ராக்காயிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தது சீரழிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை சீரடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் ராக்காயி செய்ய வேண்டும் என்பதே!சாதுர்யா சொல்வது ராகாயிக்கு இப்பொழுது ஒன்றும் புரியவில்லை. ஆனால் போகப்போக ராக்காயி செய்ய வேண்டியவற்றை  சாதுர்யா புரிய வைப்பாள்!

ஆட்சியில் முழு கட்டுப்பாடும் அவளிடம். கட்சிக்குள் முணுமுணுப்பும் சலசலப்பும் இருந்தபோதும் கூட அவளை எதிர்த்து பேசும் தைரியம் யாருக்கும் இல்லை. அவளைப் பார்த்தாலே ஏதோ பயத்தில் அமைச்சர்கள் இரண்டடி தாங்களாகவே பின்னே சென்றார்கள். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட அவளைப் பற்றி பேசுவதற்கு ஏனோ பலமுறை யோசித்தார்கள் .

அவள் அருகில் செல்லக் கூடிய ஒரே ஆண் இன்றைய நிலையில் அவள் மகன் ஸ்கந்தன் மட்டுமே!

அத்தனை பேரையும் தன் கண்ணசைவில் அவள் நினைத்ததை செய்யும் அளவிற்கு தயார் செய்து வைத்திருந்தாள் சாதுர்யா.

அவள் கட்சியில் இருந்தவர்கள் “அத்தனை பேருக்கும் ஒழுக்கம் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் “என்று எச்சரிக்கை விடுத்திருந்தாள் சாதுர்யா. இத்தனை ஆண்டுகளில் அவளை புரிந்து இருந்ததாலோ என்னவோ எல்லோரும் தங்களது கட்சித் தலைமையை மீறி எதுவும் செய்வதற்கு தயாராக இல்லை. அவள் கொண்டு வர நினைத்த ராணுவ காட்டுப்பாடு.

அருணாச்சலம் கொஞ்சம் கொஞ்சமாக முழுநேர  அரசியலை விட்டு விலக ஆரம்பித்திருந்த சமயம். கட்சியின் அடுத்த தலைமையாக, தனது அரசியல் வாரிசாக அவர் சாதுர்யாவை முன் நிறுத்தி விட்டார்.

சாதுர்யாவின் குடும்பம் விலகி நிற்க வேண்டிய சூழ்நிலை. மனோ திடம் அவளுக்கு அடிக்கடி குறைந்தது. அவளது மனதிற்கு தைரியம் தரும் நெருங்கிய துணை இந்த சூழலில் அவளது வளர்ப்பு மகன் மட்டும் தான்!

 இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல். என்னதான் மருத்துவமனையில் வேலைகள் அதிகமாக இருந்தாலும் கூட காலையிலும் இரவு தூங்கப் போகும் முன்பும் இருவரும் அரை மணி நேரமாவது அன்றைய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொள்வார்கள். இருவருக்கும் அது ஒரு வகையில் ஆறுதலைக் கொடுத்தது. வயது வித்தியாசம் அதிகம் இல்லை  என்பதால் ஒருவருக்கு ஒருவர்  சொல்வதை புரிந்து கொள்வதும் எளிதாக இருந்தது. என்னதான் அவள் தாய் ஸ்தானத்தில் இருந்தாலும் அவளது வயது அவளை

ஸ்கந்தனுக்கு ஒரு மூத்த சகோதரியாகவும், தோழியாகவும் நடக்க வைத்தது.

சாதுர்யா சமயம் வாய்க்கும் போதெல்லாம்ஸ்கந்தனை தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். இதன்மூலம் ஸ்கந்தன் மக்களிடையே நன்கு பரிச்சயமான ஒருவனாக இருந்தான். ஆனால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்றுதான் யாருக்கும் புரியவில்லை, ஸ்கந்தன் உட்பட.

மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வந்தவன் முழுநேர மருத்துவனாக தனது பணியை தொடங்கி விட்டான். அதேசமயம் தனது அம்மாவுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் அவள் அருகிலேயே இருப்பதும் தனது கடமை என்பதும் அவனுக்கு புரிந்தது.  அவள் இரும்பால் வார்க்கப்பட்ட  பெண்மணியாக இருக்கலாம். அவளும்  பெண்களுக்கு உரிய பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி தான் அவள் ஜெயித்து கொண்டிருக்கிறாள்.

ராக்காயி போல இன்னும் இரண்டு பெண் அமைச்சர்களும் அவளது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். கல்வித்துறை, நெடுஞ்சாலை துறை ஆகிய இரண்டு துறைகளும் அந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவள் கட்சியில் இருக்கும் பெண்கள்  சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதற்கு ஒரே காரணம் ‘சாதுர்யா’. அவளைப் பொருத்தவரை இது போறாது.  மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். எந்த ஆணாலும் அவர்களது வாழ்க்கை சீரழிக்க படக்கூடாது. அவள் தனது அவமானங்களை புலி தன் காயங்களை தானே நக்கி பார்த்துக்கொள்வது போல தனியாக இருக்கும் நேரங்கள் முழுவதும் தன் கண்முன்னே காட்சிப் படுத்திக் கொண்டிருந்தாள். 

இன்று அவள்  தன் கணவன் ரங்கனுடன் காதல் வாழ்க்கை வாழாமல், இது போன்ற ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருப்பது எதனால் என்பதை அவளால் மறக்க முடியவில்லை. அவள் தன்னை இந்த வழியை தேர்ந்தெடுக்க தோன்றிய கயவனை பழி வாங்குவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறாள்.அவளது ஐந்தாண்டு ஆட்சி முடியும் பொழுது பெண்கள் சமூகத்தில் வெறும் போகப் பொருளாக இல்லாமல் அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை எல்லாம் செய்வதற்கு அவள் தனது அரசை நேர் முகமாகவும் மறைமுகமாகவும் உட்படுத்தி இருந்தாள்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஒரு மாவட்டத்தை மட்டும்  ஆட்சி செய்வதற்கு தன்னை தயார் செய்து வைத்து இருந்தவள் இன்று மாநிலத்தை ஆளும் முதலமைச்சர். மாநிலம் முழுவதும் அவளின் செயல்பாடுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே இருந்த குளறுபடிகளை சரிசெய்வதற்கு அவளுக்கு நேரம் சரியாகி விட்டது. அவளுக்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை குறை சொல்வதற்கு பிடிக்கவில்லை. 

சாதாரண குடிமகனாக இருந்து பல்வேறு விமர்சனங்களை நாம் முன்வைத்தாலும் அரசாங்கத்தை நடத்தும் போதுமட்டுமே அதன் பிரச்சனைகள் புரியும். அரசு எந்திரத்தின் செயல்பாடுகள் அவ்வளவு சுலபமானதல்ல.

தோல்வியடைந்த இலாகாக்களை  வெற்றி இலக்காக மாற்றுவதை அவள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு இருந்தாள். புதிதாக ஆட்சிக்கு வந்த  அரசு பெரிய நிதி நெருக்கடியை சந்தித்தது.

முக்கிய விஷயங்களில் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருந்தது. மக்கள் அமைதியாக இருந்தாலும் கூட, அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும் கூட ,குரு போன்ற சிலர் மக்களை எப்படியேனும்  தூண்டிவிட்டு அதில் குளிர்காய தயாராக இருக்கும் நிலையில் அரசு எந்திரத்தை சரிப்பட நடத்துவது அவளுக்கு கத்தி மீது நடப்பது போன்ற ஒன்றாயிற்று.

அதிலும் முதன்முறையாக முதலமைச்சராக இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒவ்வொரு நொடியும் அரசு விவகாரங்களில் தவறு நேராமல் காக்க வேண்டும்.

சாதுர்யா பதவியேற்ற பிறகு குரு அடிக்கடி வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். அருணாசலத்திற்கு தனது மகனின் இந்த நடவடிக்கை வித்தியாசமாக பட்டாலும் அவன் கண்களிலிருந்து புலி வேட்டையாடும் சமயத்தில் இருக்கும் ஒளி அதை அந்த வீட்டின் மையமாக இருக்கும்  சாதுர்யா கண்டுகொண்டாள்.

குரு ஆரம்பத்தில் அருணாச்சலத்துடன் நிறைய வாக்குவாதங்களும் சண்டைகளும் செய்துகொண்டிருந்தான். தன்னை ஏன் அரசியல் வாரிசு ஆக்கவில்லை என்று ஒருமுறை அருணாச்சலத்தின் மீது கை ஓங்கி போய்விட்டான். அந்த சமயங்களில் கந்தன் தனது தாத்தாவை காப்பாற்றி கொண்டிருந்தான். 

எனது அப்பா மீதான அவனது வெறுப்பு கூடிக் கொண்டே போனது. சாதுர்யா மனம் முழுவதும் சிந்தனை வயப்பட்டு இருந்தாலும் அதையெல்லாம் வெளியே அவள் காட்டிக்கொள்ளவில்லை. குருவை ஒரு பொருட்டாக மதிக்க கூட அவள் தயாராக இல்லை. அதே சமயம் அவன் மீது பலத்த சந்தேகம் அவளுக்கு. உமாவின் குறிப்புகளிலிருந்து அவள் தெரிந்துகொண்டது குரு ஏதேதோ சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்கு சந்தேகம் இருக்கிறது என்று உமா எழுதி வைத்திருந்தாள். அது எனது ஊகம் தான் தீர்மானமாக தெரியவில்லை என்றும் கூட குறிப்பிட்டிருந்தது.

 

அரசு விழாக்கள் நடக்கும் இடங்களில் சில சமயம் சாதாரண கலவரங்கள் நடக்கிறது. இரண்டு முறை குண்டு வைக்கப்பட்டு கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டது. உளவுத்துறை விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்  குமரகுரு என்று சமீபத்தில் தலை தூக்கி இருக்கும் ஒரு பயங்கரவாதியின் செயல்கள்தான் இவை. வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத தெரியாத ஒரு விஷயம் அருணாச்சலத்தின் மகனின் பெயர் குமரகுருபரன் என்பது. அது சாதுர்யாவிற்கு கூட தெரியவில்லை.

ராக்காயியை  நலிவடைந்து இருக்கும் பெண்களின் நிலை பற்றியும், கடத்திச் செல்லப்பட்டு பிறகு மீட்கப்பட்ட பெண்கள்பற்றியும் விபரங்கள் சேகரிக்க  சொன்னாள். 

ராக்காயியின் துறை பெண்கள் மேம்பாடு மற்றும் சமூகநீதி என்பதால் அவளுக்கு இந்த வேலை சந்தோஷத்தை கொடுத்தது. ராகாயி இந்த விபரங்கள் சேகரிக்க போக கடத்தப்பட்டு விபச்சார விடுதிகளில் விற்கப்பட்ட தமிழக பெண்கள் சிலர் ஒருங்கிணைந்து தங்களை மும்பை மற்றும் சோனாகஞ்ச  பகுதியில் இருந்து மீட்டு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு பெண்ணின் மூலமாக மனு கொடுத்தார்கள். அதுவும் அமைச்சரை சந்திப்பது அவ்வளவு எளிதாக இல்லை. 

அரசு பொது விழாவில் கொடுக்கப்பட்ட மனுக்களில் ஒன்று இவ்வாறான விண்ணப்பத்தை தாங்கி வந்தது. யார் கொடுத்தது என்ன விபரங்கள் என்று தெரியாவிட்டாலும், அந்த பெண்கள் குறிப்பிட்டிருந்த சில விபரங்கள்  ராக்காயியை அவற்றைப் பற்றி மேலும் தோண்டித் துருவ தூண்டியது. அந்த மனுவை நேராக முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றாள்.

குருவைப் பற்றிய விபரங்கள் சேகரிக்க போக அதன் பாதை எங்கெங்கோ சென்றது. இதுவரை அருணாச்சலத்தின் மகன் குருவும், அண்டர்வேர்ல்டு டான் குமரகுருவும் ஒன்றுதான் என்பது யாருக்கும் புரியவில்லை. என்ன பிரச்சனையுமின்றி குரு வெளி உலகில்   அருணாச்சலத்தின் மகன், முதலமைச்சரின் கணவன் என்ற போர்வையில் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கிறான். போலீஸ்காரர்கள் கூட அவனுக்கு சல்யூட் வைக்கும் நிலை. அரசியலில் மறைமுகமாக அவன் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான்.

குமரகுருவை அடக்கும் வழி தெரியாது அரசு தத்தளித்தது. ராக்காயி சேகரிக்க விவரங்களின்படி குமரகுரு தான் நிறைய பெண்களை கடத்தி, கற்பழித்து சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்பனை செய்து விட்டான். மேலும் அவன் ஆரம்பித்த தொழில் கஞ்சா கடத்தல்.

இதை ராக்காயி சாதுர்யாவிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ சாதுர்யாவுக்கு தான் கடத்தி கற்பழிக்கப்பட்டு முட்புதரில் வீசி அடிக்கப்பட்ட சம்பவம் ஞாபகம் வர அவளுக்கு இந்த குருவும் அந்த குருவும் ஒன்றே தானோ என்று பொறிதட்டியது ஆனால் அதை அவள் வாய்விட்டுச் சொல்லவில்லை.

தனக்கு மிக நெருங்கிய, சிறுவயதிலிருந்து பள்ளியில் கூட படித்த  உளவுத்துறை அதிகாரியின் மூலம் யாருக்கும் தெரியாமல் விவரங்கள் சேகரிக்க சொன்னாள். அவளுக்கு நிகழ்ந்தவை நட்பு வட்டத்தில் எல்லோருக்கும் தெரியும் ஆதலால், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த அதிகாரியும் யாருக்கும் தெரியாமல் விவரங்கள் சேகரிக்க தொடங்கினார்

அதிகாரப்பூர்வமாக இன்றி, தனியாக பயிற்சியில் இருக்கும் சில அதிகாரிகளை வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது எந்த பதிவுகளும் பதிய படாமலே  சாதுர்யாவின் கைகளுக்கு வந்தது.

அந்த கோப்பை படித்தவளுக்கு உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது. அவ்வளவு மோசமான விஷயங்களில் ஈடுபட்டு இருந்தான் குரு.

கஞ்சா மட்டுமின்றி இன்னும் போதை பொருட்கள் கடத்தல், குண்டு வைத்தல், கோவில் சிலை கடத்தல் பெண்களை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் விற்பது என்று மோசமான குற்றங்கள் என்று சுமத்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அவன் ஈடுபட்டிருப்பது அவளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அவள் தனது தனியறையில் இந்த கோப்புகளை படிக்கும்போது ஸ்கந்தனும் அவள் கூடவே தான் இருந்தான். அவன் முகபாவனைகளை பார்த்து அவள் கைகளில் இருந்த அந்த கோப்புகளை பறித்து அவன் அதை தானும் முழுமையாக படித்து முடித்தான். அவன் உணர்வுகளை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முகம் இறுகி காணப்பட்டது.இவ்வளவு மோசமான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு தான்  தான் பிள்ளை என்று குற்ற உணர்ச்சியில் குறுகினான்.

அவன் மனம் மருத்துவனாக அல்லாமல் சாதாரண குடிமகனாக யோசிக்க ஆரம்பித்தது. அதேசமயம் முதலமைச்சராக இருந்து கொண்டு அனைத்து குடிமக்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டிய தான் குருவை என்ன செய்யப்போகிறோம் என்று அறியாமல் தவித்தாள் சாதுர்யா.

ஒரு பெண்ணாக தான் பட்ட கொடுமை போல பல மடங்கு மற்ற பெண்கள் பட்டிருப்பது அவளால் தாங்க முடியவில்லை. அதே சமயம் அவளுக்கு புரிந்த ஒரு விஷயம் அவனது வலையில் இருந்து தப்பித்த ஒரே பெண் தான்  மட்டும்தான் என்பது.

ஒருவேளை அவனுக்கு முடிவு கட்டுவதற்காக தான் கடவுள் தன்னை மீட்டுக் கொண்டு வந்தாரோ என்று கூட அவளுக்கு தோன்றியது.

சாதுர்யாவும் ஸ்கந்தனும் பேசிக்கொண்டு இருந்ததில் இருவருக்கும் ஒரே ஒரு விஷயம் இடித்தது அது என்னவென்றால், முதலமைச்சரின் கணவர் குருவும், குற்றங்களை அனாயாசமாக செய்து கொண்டிருக்கும் குற்றவாளி குமரகுரு வும் ஒருவர் என்று மக்களுக்குத் தெரிந்தால் ஆட்சியும் கட்சியும் என்னவாகும் இவர்களது குடும்ப நிலை எப்படி சின்னாபின்னமாகி விடும் என்றெல்லாம் இருவரும் மண்டையை குழப்பி கொண்டார்கள்.

ஆனால் இருவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது இதற்கு மேல் அவனை உயிருடன் ஒற்றுமை வைத்தால் அது சரியல்ல சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டும்தான் சரியான வழி ஆனால் அதில் இருக்கும் பாதகங்களையும் யோசிக்கவேண்டும் யாருக்கும் எந்த துன்பமும் நேராமல் அவனை எப்படி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது என்று தான் இருவருக்கும் சிந்தனை.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து ஒரு நபர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல… நம் அருணாச்சலம் தான்.

 இப்படி ஒரு கேவலமான மனிதனை பிள்ளையாக பெற்றுவிட்டோம் என்று அவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. எத்தனை பேர் உயிரிழப்புக்கு அவன் காரணம் ஆகிவிட்டான், எத்தனை பேர் வாழ்க்கையை இழந்து இன்று வேதனைப்படுகிறார்கள். இவ்வாறான தன் மகனை பெற்றதற்கு தான்தான் முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டார்.

இரண்டு மூன்று நாட்களாக அவர் முகமே சரியில்லை ஏதோ ஒரு முடிவுக்கு அவர் வந்து விட்டார். தான் செய்த தவறை தானே சரி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் சங்கல்பம்.

இன்று வீட்டிலேயே ஒரு இளம்பெண் தன் மகனுக்கு மனைவியாக வலம் வருவதற்கும், தன் பேரன் தன் தாயை இழந்து தவிக்கும் தவிப்பிற்க்கும், சிவன் தனது மூத்த மகளை இழந்து குடும்பம் இருந்தும் அனாதையாய் நிற்பதற்கும் தான் தன் மனைவியை இழந்து  தன் முதிய பருவத்தை தனியாக கழிப்பதற்கும் காரணமானவன் அவன் தானே… இதுபோல் எத்தனை குடும்பங்களை அவன் நாதம் செய்திருப்பான் என்று அவருக்கு.

இந்தப் பாவங்களை எப்படி போக்குவது, இந்தப் பாவம் தனது பேரன் அவனது சந்ததிகள் தலையில் கூட விடக்கூடும் என்று பயந்து போனார். என்ன சொன்னாலும் அவர் கிராமத்து மனிதர் பாவ புண்ணியங்களுக்கு கட்டுப்பட்டவர்.

அந்த வார இறுதியில் குரு எப்போதும் போல உரிமையுடன் வீட்டிற்குள் நுழைந்தான் சாப்பிட உட்கார்ந்தான்.  அருணாச்சலம் தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தை ஏற்கனவே தூள் படுத்தி வைத்திருந்தார். அவன் சாப்பிடும் சாப்பாட்டில் இதை கலந்துவிட அவர் நினைக்க  ஸ்கந்தன் அவர் செய்வது பெரும்பாவம் என்று அவர் கலக்கும்  சமயத்தில் தடுத்து விட்டான்.

சாதுர்யா சட்டப்படி அவனுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். இதனால் குடும்பத்திற்கும் கட்சிக்கும் எப்பேற்பட்ட அவப்பெயர் வந்தாலும் கூட பரவாயில்லை என்று அவள் நினைத்திருக்க,

குரு தன் மகனிடம் உரிமையாக பேசிக் கொண்டிருந்தான்.வழக்கத்திற்கு மாறாகஸ்கந்தனும் உறவுக்கு தோதாக பேசிக்கொண்டிருந்தான்.

எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவர் சிவம் மட்டும்தான்! அருணாச்சலத்தின் கூடவே இருப்பதால் அருணாச்சலத்தின் மனம் செல்லும் போக்கு அவருக்கு நன்றாக பரிச்சயம். ஆனாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

சாதுர்யா சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும்போது மட்டும், குரு எளிதாக தப்பி விடுவான் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டபெயர் வருவது தான் மிச்சமாக இருக்கும் என்று விட்டார். அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் அவளுக்கும் புரியவில்லை ஆனால், சட்டத்திற்குப் புறம்பான எந்த விஷயத்தையும் செய்வதற்கு அவளுக்கு மனது இல்லை. குருவுக்கு தண்டனை தருவது அவசியமா இல்லை சட்டபூர்வமாக அவனுக்கு தண்டனை கொடுப்பது அவசியமா என்ற ஒரு மனம் பட்டி மன்றம் நடந்தது அவள் மனதில்.

ஒருவாராக குரு மாலை வேளையில் அருணாசலத்தின் வீட்டிலிருந்து கிளம்பினான். அவன் நேராக சென்றது தனது திருச்சி பெங்களூர் மார்க்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு தான்.

போகும் வழியில் ஒரு முட்புதர் அருகில் அவன் வாகனத்தில் பிரேக் பிடிக்காமல் போக, எதிரே வந்த லாரியில் அவன் கார் மோதி, லாரி சக்கரத்தின் அடியில் சென்றவன் வெறும் கூழாகி விட்டான்.

தானாகவே வண்டியில் பிரேக் பிடிக்காமல் போக வாய்ப்பு இல்லை, எதிரே வந்த லாரி அவனை மோதுவதற்கு என்று அனுப்பப்பட்டது. அதுவும் சாதுர்யாவை எந்த முட்புதரில் தனது வாகனத்திலிருந்து சொல்லிவிட்டு சென்றானோ அதே இடத்தில் அவனது விபத்து.

இதை செய்திருப்பவர் யாராக இருக்கக்கூடும் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.சாதுர்யா என்னதான் சட்டப்படி செய்யவேண்டும் என்று வெளியே பேசிக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் இருக்கும் குமுறலுக்கு  அவளே  இதை ஏற்பாடு செய்திருக்கலாம்.குரு மீதான வெறுப்பில் அருணாச்சலம் இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.ஸ்கந்தன் மனதில் அப்பா மீதான வெறுப்பு, அம்மாவின் இறப்பிற்கு குரு  தான் காரணம் என்ற கோபம் இருக்கிறது.சிவமோ தான் அனாதையாக நிற்பதற்கு குரு தான் காரணம் என்ற பழி வெறி  உண்டு.

இரண்டு வருடங்கள் கழித்து…

ஸ்கந்தன் திருமணம் அருணாசலத்தின் வீட்டிலேயே, ஆடம்பரமாக நடந்தது. சிவம், ரத்னா மற்றும் சாந்தா குடும்பத்துடன்,சாதுர்யா தன் குடும்பத்துடன் என்ற நெருங்கிய உறவுகள் மட்டுமே திருமணத்தில் கலந்து  கொள்ள  அனுமதி உண்டு..வெளிநபர்களுக்குக்கு சுத்தமாக அனுமதி கிடையாது என்று விட்டாள் சாதுர்யா.

ரங்கனும் திருமணத்திற்கு வந்திருந்தார்.சாதுர்யாவின் குடும்பம் என்றால் ரங்கன் இல்லாமல் எப்படி?

சாதுர்யா, அன்று மாலையே தான் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகப் போவதாக அறிவிப்பு கொடுத்துவிட்டாள். முதலமைச்சர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டாள்.

தனது அரசியல் வாரிசாக ஸ்கந்தனை அவள் அறிவிக்க முயல, அவனோ வாரிசு அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்று விட்டான்.

ஊடகங்களுக்கு அவன் கொடுத்த விளக்கத்தில், தான் படித்து இருப்பது மருத்துவம். மருத்துவனாக சேவை செய்வதற்கு வாய்ப்பு இருக்கும்போது அரசியல்வாதி ஆவதற்கு எந்த விருப்பம் இல்லை. அதே சமயம் எங்களது பூர்வீகத் தொழில் விவசாயம் அதை கவனிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. என் தாத்தா அருணாச்சலத்தின் அரசியல் வாழ்வு மூலம் நாங்கள் இழந்தது அதிகம். எனவே எனக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லை என்று முடிவாக சொல்லிவிட்டான். பல கேள்விகள் அவன் முன் எடுக்கப்பட்டாலும் உன் அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை. சாதுர்யாவை எந்த விளக்கமும் கேட்டு ஊடகங்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு ரங்கனும், ஸ்கந்தனும் அவளை பாதுகாத்தார்கள்.

சிறிது நாட்களில் சாதுர்யா நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வந்தது. அதற்கு மேல் அவள் எங்கு இருக்கிறார் என்பது பற்றி எந்த விஷயங்களும் வெளியே வரவில்லை.

ஸ்பெயினில், ரங்கனும் சாதுர்யாவும் அவர்கள் வீட்டு வராந்தாவில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மாலை நேரத்தில் லேசான குளிர் அங்கு.சாதுர்யா ரங்கனின் தோல் வளைவில் சாய்ந்து கண்மூடி இருந்தாள். அவள் மேடிட்ட வயிறு அவள் வாழ்க்கையின் சந்தோஷ நாட்களை சொல்லி கொண்டிருக்கிறது.

 பிரசவத்தை அவள் இந்தியாவில் தான் தனது தாத்தா வீட்டில் பார்த்துக் கொள்ளப் போகிறாள். ஸ்கந்தன் தான் அவளுக்கு பிரசவம் பார்க்க போகிறான்.

வாழ்க்கைச் சக்கரம் துன்பத்தில் மட்டும் சொல்வதில்லை… அதில் இன்ப பக்கங்களும் உண்டு. எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் சதுரங்க கட்டங்கள் தான்.  அதில் வெற்றி பெறுபவர் ராஜா என்றும் ராணி என்றும் கொண்டாடப்படுகிறார்.

சதுரங்கத்தில் ஐந்தாவது நபர் யார் ?

அந்த நபர் ரங்கனாக கூட இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உண்டு தான். ரங்கன்  குருவை முடிப்பது என்றால் எப்போதோ செய்திருப்பான். இவ்வளவு காலதாமதம் செய்து, குருவை முடிக்க அவசியமில்லை என்று காரணம் சொல்லியிருந்தார்கள். எனக்கு அதுவும் கூட சரிதான் என்று தோன்றியது.

சரி ரங்கனாக இருக்கலாம் என்றால், அதற்கு என் பக்கத்து விளக்கங்களை முன்வைக்கிறேன்.

எந்த ஒரு மனிதனும் தனது மனைவியை தவறாக நடக்கும் யாரையும் மன்னிக்க மாட்டான். அதுவும், தான் சிறுவயதில் இருந்தே  ‘ஏன் பிறந்த அன்றிலிருந்து’ தன் உயிரை வைத்திருக்கும் ஒரு பெண், அவளை மீறி நடக்கும் செயல்கள் அதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள்,எந்த ஒரு ஆணையும் அமைதியாக இருக்க விடாது. 

அதே சமயம், சரி எந்த வம்புகளும் மேற்கொண்டு வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் அவளைத் திருமணம் செய்து கொண்டு இந்த மன பாதிப்பிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்ட போதும், அந்தப் பெண் தான் கட்டிய திருமாங்கால்யத்தை  ஏற்காமல், தனது துன்பத்திற்குக் காரணமான ஒருவனை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் மீது தன் உயிரை வைத்திருந்த ஆணின் மன நிலைமை எப்படி இருந்திருக்கும்?

அதேபோல்,’எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எந்த விஷயங்களையும் செய்ய இயலாது. அவள் திருமணம் செய்து கொண்டு அருணாசலத்தின் வீட்டிற்கு சென்ற பிறகும்கூட, அவள் வேறு எதுவும் மனதில் நினைக்கிறாள். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விலகி தான் நின்றான்  ரங்கன். குருவை சாதுர்யா பதிவு திருமணம் மட்டும்தான் செய்து கொண்டாள். வேறு எந்த சடங்கிற்கும் அவள் அனுமதிக்கவில்லை. அவளின் அந்த நடத்தையில் இருந்து ரங்கன் கண்டு பிடித்து விட்டான் அவள் மனதில் ‘தான்’ மட்டும் தான் இன்னும் இருக்கிறோம் என்று.

அதனால்தான் அவளது மாதச் செலவுக்கு என்று தன் தாத்தா மூலம் பணம் அனுப்பி கொடுத்தான்.தன் மனைவிக்கு தானே எல்லா விஷயங்களையும்  பார்க்க வேண்டும் என்று அவன் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அதாவது அவள் குருவை திருமணம் செய்து கொண்டுவிட்ட போதும், கணவன் என்ற அவளது மனதின் அங்கீகாரம் ‘தனக்கு மட்டும்தான்’ என்று அவனுக்குப் புரிந்திருந்தது.

காதல் என்பது என்ன? இருவரும் உடலால் ஒன்றாக இருப்பதுதானா? வெறும்  கட்டில் தேவைகளை நிறைவு செய்வதற்கு இருப்பதில்லை காதல். அது உயிரை ஒன்றாக இணைத்து கட்டும் உயிர் பந்தம்!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரங்கன் தனது காதலை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சாதுர்யாவுக்கு ஏதோ ஒரு வகையில் அறிவுறுத்திக் கொண்டே வந்தான்.

வெறும் காகிதங்களில் விழும் கையெழுத்தும்,கழுத்தில் கட்டப்படும் திருமாங்கல்யமோ திருமணத்தை நிர்ணயிப்பதில்லை. அது இருவரையும் மனதால் ஒன்றிணைக்க வேண்டும். இளமை முடிந்த பின்னும் முதுமையிலும் தோள்கொடுக்க ஒருவரோடு ஒருவர் இருக்க வேண்டும்.

ரங்கன் அணிவித்த திருமாங்கல்யத்தை முதலில் அவள் கழட்டி இருந்தாலும், பின்னர் வேறு ஒரு சமயத்தில் அணிந்துகொண்டாள். அவள் நெற்றியில் இடும் திலகம் ரங்கனின் பெயர் சொல்லித்தான்.

 ‘இது சரியா’என்று கேட்கப்படும் ஆயின், குரு அவளது உடலை  ஆட்கொண்டதால் மட்டுமே அவளுக்கு கணவன் ஆகிவிட முடியுமா? அவனைப் பொறுத்தவரை ஆயிரம் பெண்களில் இவளும் ஒருத்தி அவ்வளவுதான்!

ஒரு சந்தர்ப்பத்தில் குரு சாதுரியாவை தீர்த்துக் கட்டவும் முயற்சி செய்தான். அந்த சமயத்தில் ரங்கன் ‘என்னுடன் வந்து விடு ‘என்று சாதுர்யாவை அழைத்தும் அவள் வரவில்லை. என் கடமைகள் வேறு என்று விலகிவிட்டாள்.

இதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, ரங்கன் குருவை முடிக்க முயற்சி செய்திருக்கலாம்.

ஆனால், இந்த கதையில் அதிகம் எழுதப்படாத ஒரு நபர் வெங்கடேசன்.சாதுர்யாவின் தந்தை. இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, அதில் பணிபுரியும் ஆட்சியாளர்.நேர்மையும், உறுதியும் ஒழுக்கமும் உடைய அதே சமயம் நல்ல குடும்பப் பின்னணியும், அளவுக்கு அதிகமான குடும்ப பணமும் கொண்டவர் அவர். பணபலமும் பதவி பலமும் அவருக்கு உண்டு. அவரின் ஒரே மகள் சாதுர்யா. திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்தவள்.குடும்பத்தின் பெண் வாரிசும் அவள் மட்டும்தான்.

குடும்பத்தின் இருக்கும் அத்தனை பேருக்கும் அவள் செல்லம் என்றால், வெங்கடேசனின் இதயப்பகுதியில் துடிப்பு அவள்தான்.

தன் மனைவி சாதுர்யாவை வெளியூர்களுக்கு கூட அனுப்பாமல் அடைகாக்கும் சமயத்தில் தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்தவர் வெங்கடேசன். காரணம் தன் மகள் மீது வைத்திருந்த அதீத பாசம் தான்.பெரும்பாலான தந்தைகளுக்கு தன் மகள்கள் தான் உயிராக இருப்பார்கள். அதற்கு  சாதுர்யா மீதான வெங்கடேசனின் பாசமும் விதிவிலக்கல்ல.

அப்படிப்பட்ட ஒரே மகளை, தன்னைவிட  வெறும் ஐந்து வயது வித்தியாசம் கொண்ட ஒரு நபர், தன் மகளை விட இருபது  வயதுகளுக்கு மூத்த ஒருவன் அவளை வன்புணர்வு செய்து, திருமணமும் செய்து கொண்டதை எப்படி வெங்கடேசனால் ஜீரணிக்க முடியும்?

குருவை தீர்த்துக்கட்ட வெங்கடேசனுக்கு இவ்வளவு காலங்கள் ‘ஏன் பிடித்தது’ என்ற கேள்விக்கு பதில்…

‘எதையும் காலம் வரும்போது தான் செய்து முடிக்க முடியும்.’

முதலிலேயே குரு தீர்த்துக்கட்ட பட்டிருந்தால் அந்த சந்தேகம் சாதுர்யா மீதுதான் விழுந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்குமேயானால் சாதுர்யா முதல் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு கதையின் போக்கே மாறி இருக்கலாம். எந்த தகப்பனுக்கும் தன் மகள் முதலமைச்சராக வேண்டும் என்றோ வேறு ஏதோ கனவுகள் வருவதற்கு முன்பே தன் மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைத்து அவள் குடும்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும். அதற்கு வெங்கடேசன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?

என் சந்தேகப்பார்வை ஐந்தாவது நபராக வெங்கடேசன் மீது. 

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் முடிவு என்று ஒரு வழக்கு இருக்கிறது. எத்தனையோ குற்ற  விஷயங்களில் ஈடுபட்டு இருந்தவன் குரு. அப்படி இருக்கும்போது அவன் சகாக்களில் யாராவதோ, அவன் தொழிலில் உள்ள எதிரிகளோ, அல்லது அவனால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது கூட அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கலாம்.

எங்கோ பிறந்த சாதுர்யாவை மையமாக நிறுத்தி, விதி எழுதிய கதை இது.

அசுரனை அழிக்க மகிஷாசுரமர்த்தினியாக அம்பிகை அவதரித்தாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பெண் என்பவள் மாபெரும் சக்தி! 

உமா மரணித்தாலும் தனது குறிப்புகள் மூலம் சாதுர்யாவுக்கு தேவையான பல விஷயங்களை கொடுத்து, அவளுக்கு மறைமுகமாக  துணை செய்திருக்கிறாள். அவளின் குறிப்புகள் இல்லாதிருந்தால்சாதுர்யாவால் பல விஷயங்களைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொண்டிருக்க முடியாது. ஒருவரின் மரணம் மட்டும் அவருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

அன்று அத்தனை பேர் இருந்த சபையில் பாஞ்சாலிக்கு அவ்வளவு பெரிய அவமானம் ஏற்பட்டது. அவளது அவமானம்தான் மகாபாரத போருக்கு காரணம்.

கண்ணன் சொல்லும் பொழுது, பாண்டவர்களுக்கு இழந்தவற்றை மீட்டு கொடுப்பதற்காக அல்ல இந்த யுத்தம் பாஞ்சாலியின் அவமானத்தை துடைப்பதற்காக தான் என்றார்.

இங்கு சாதுர்யாவின் அவமானத்தை குருவின் ரத்தம் கொண்டு கழுவிய கண்ணன் யாரோ?

எல்லாவற்றிற்கும் காலம் தான் காரணம் என்று என்னை மையப்படுத்தி பேசுவதை கேட்கிறேன். ஆனால் சதுரங்க ஆட்டத்தில், அதில் போரிடும் வீரர்களைக் கொண்டே  அதன் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. காலம் ஆகிய நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்