
அவளை விட்டுப் பிரிந்து வந்த நந்தாவிற்கு எங்கு செல்வது என்றே தெரியவில்லை. ஆட்டோவில் அமர்ந்திருந்தவனின் நினைவுகள் மதுவர்ணிகாவின் பிறந்தநாள் இரவு நடந்த நிகழ்வினையே சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தது. அவளது பிறந்தநாள் அன்று அவள் வார்த்தைகளால் காயப்பட்டவன், உணர்வுகள் வதைப்பட்டு, உயிரற்ற நிலையை உணர்ந்தபடி, விரக்தியின் விளிம்பில் நடந்துச் சென்றான்.
தனது மாமன் மகனான நந்தாவைக் காண்பதற்காகவும், தன் உயிர் தோழி மதுவின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவும் அன்று இரவே வந்து இறங்கியிருந்த சைத்ரா கண்களில் பட்டது என்னவோ, விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த நந்தாவை தான். நந்தாவைக் கண்டதும் அவள் அவனை அழைக்க, அவளது அழைப்பு கூட அவனை எட்டவில்லை. அவளும் காரை விட்டு இறங்கியபடி அவனை பின் தொடர்ந்தாள்.
அந்நொடி தான் தண்டவாளத்தை நோக்கி செல்பவனைக் கண்டு பயம் தொற்றிக் கொண்டது சைத்ராவிற்கு. அவனைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் பெண்ணவளுக்கு அந்நொடி பதட்டம் சூழ்ந்துக் கொண்டது என்னவோ உண்மைதான். ஆனால் அவனோ தன் மொத்த வலியையும் தொடர்வண்டி போகும் சமயத்தில் வாய்விட்டு கதறி அழுதிருக்க, அவனைக் கண் கொண்டு இவளால் பார்க்க இயலாது போனது அந்நொடி.
விரைந்து அவனருகே அவள் வர, தாயைக் கண்ட சேயைப் போல அவளது மடி தாங்கி அமர்ந்துக் கொண்டவன் கண்ணீர் சிந்த, பெண்ணவளின் மனம் துடித்துப் போனது. தங்களது ரகு இப்படி மனம் உடைந்து அழுபவன் இல்லையே? என்று கவலைக் கொண்டது அவள் மனம்.
“அம்மு, முடியலைடி. ரொம்ப வலிக்குது. நான் தோத்துட்டேன்.” என்றவனது தலையில் பட்டென்று அடித்தவளது செயலில் மீண்டும் அவன் தலை கவிழ்ந்துக் கொள்ள, மீண்டும் மீண்டும் அடித்தவள், அடுத்துக் கூறிய வார்த்தையில் நிமிர்ந்து எழுந்தான் நந்தா.
“எங்க ரகுக்கு அழ எல்லாம் தெரியுது போல… அக்சராவுக்கும், உனக்கும் நடக்கயிருந்த கல்யாணத்தை நிறுத்தி உன் காதலை தேடி போறேன்னு சொன்ன அந்த காதலன் எங்க? அக்சராவை தனியா அழைச்சு உன் காதலை எவ்ளோ அழகா எடுத்து சொன்ன? எங்கடா போச்சு அந்த காதல்? நீ யாருனு சொன்னா, எங்க உன் மேல இருக்க மரியாதையிலையும், உன் மேல இருக்க அபிப்ராயத்திலயும் காதல் வந்திடுமோனு சொல்லி, அவளுக்கு இந்த ரகுவா இல்லாமல் நந்தனா பிடிக்கணும்னு அவ்ளோ வைராக்கியமா இருந்தியேடா? அந்த வைராக்கியம் எங்க போச்சு? அதுக்குள்ள உன் காதலை விட்டுட்டு வந்துட்டியா?” என்றவள் தன் கண்ணீரை கட்டுப்படுத்தியபடி அவனை பார்த்து கத்தினாள்.
“நானும் மனுசன் தான் அம்மு. எனக்கும் வலிக்கும் அம்மு. எத்தனை நாள் என் காயத்தை மறைச்சு சிரிச்சுகிட்டே இருப்பேன். என்னைக்காவது ஒருநாள் அந்த காயம் என்னையும் மீறி வெளிய வரதானே செய்யும். முடியல அம்மு. என்னால மதுவை விட்டு கொடுக்கவும் முடியல. ஆனால் அவளுக்கு என்ன பிடிக்கலையே?”
“அவளுக்கு உன்னை பிடிக்குமா? பிடிக்காதானு ஒரே நாள்ல நான் சொல்றேன். அவளுக்கு மட்டும் நீ தான் ரகுநந்தன்னு தெரிஞ்சுது அந்த நிமிசமே எல்லாமே மாறிடும்.”
“அந்த நிமிசம் நானும் தோத்து போயிடுவேன். இப்பவும் சொல்றேன் நீ அவகிட்ட இந்த உண்மையை சொல்லக் கூடாது. என் மதுக்கு அளவில்லாமல் காதலை காட்டணும்னு நினைச்சிருக்கேன், அதுவும் நந்தாவா.”
“சரி ரகு. எனக்கு இரண்டு நாள் மட்டும் டைம் கொடு.”
“இரண்டு நாள் தானே தாராளமா எடுத்துக்கோ. ஆனால் அதுக்கு அப்புறம் நான் எடுக்க போற முடிவுக்கு நீ குறுக்க வரக்கூடாது.”
“நான் சொல்றது மட்டும் இப்போ பண்ணுடா. ஒருத்தங்க அன்பு பக்கத்துல இருக்கப்போ தெரியாது, கொஞ்சம் தள்ளி வெச்சு பார்க்குறப்போ தான் அந்த அன்பை உணருவாங்க. நிச்சயம் மதுவும் அந்த ரகம் தான்.” என்றவள் கையோடு நந்தாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள்.
“சார் ஏர்போர்ட் வந்திருச்சு.” என்ற ஆட்டோ ஓட்டுநரின் சத்தத்தில் நிகழ் காலம் உணர்ந்தவன் அன்று நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளி வந்தான். ஆட்டோ ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்தவன், ஆட்டோவை விட்டு இறங்க, அவன் முன்பு கார் ஒன்று வந்து நின்றது.
காரைக் கண்டதும் அவன் புருவம் கேள்வியாக சுருங்கியது. காரிலிருந்து இறங்கியவாறு வெளியே வந்தவனைக் கண்டதும் புரிந்துக் கொண்டவன்,
“அம்மு, இது உன்னோட வேலையா?” என்று மானசீகமாக சைத்ராவை முறைத்தான்.
அடிக்கும் வெயிலிலும் கருப்பு நிற கோட் அணிந்து வந்த இளைஞனோ, நந்தாவைப் பார்த்து புன் முறுவல் பூத்தான். “எதிர்ப்பார்க்கலை இல்ல… என்ன நீங்க இங்க எதிர்ப்பார்க்கலை இல்ல” என்று கண்ணடித்தபடி ஆணவனின் அருகே வந்தான் சர்வானந்த்.
அவனைக் கண்டு இளநகை புரிந்தவன், “ப்பா, சத்தியமா எதிர்பார்க்கலைடா?” என்று நகைத்துக் கொண்டே கூற,
“ரகு அண்ணா” என்றபடி அவனை இறுக அணைத்துக் கொண்டான் சர்வா. நந்தாவின் சித்தப்பா மகன். அன்று மானசாவை சாலையில் காப்பாற்றியதும் இவனே. இவனைக் கண்டதும் தான் மறைந்துக் கொண்டான் நந்தா.
அவனறிவான் தன்னை அந்நிலையில் கண்டால், எப்படியும் சர்வா வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று விடுவான் என்று. தற்போது கூட அவன் சென்ற விசயம் சைத்ராவிடமிருந்து இவன் அறிந்துக் கொண்டு தான் நந்தாவைத் தேடி இவ்விடம் வந்திருந்தான் சர்வா.
“வாங்க அண்ணா. எல்லாரும் உங்களுக்காக வீட்ல காத்திருக்காங்க.”
“அப்பா கோபம் அவ்ளோ சீக்கிரம் எல்லாம் குறையாதே?”
“நீங்க நேர்ல வாங்க. அப்புறம் பாருங்க.” என்றவன் இம்முறை அவனை விடாமல் கையோடு அழைத்துக் கொண்டு காரில் ஏற்றியிருக்க, கார் சென்றது என்னவோ ஈரோட்டிற்கு. நந்தாவின் சொந்த ஊரும், அவர்களது பாரம்பரியமான வீடும் அமைந்துள்ள இடம் அது.
இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த அழகான பாரம்பரியம் நிறைந்த வீட்டிற்குள் நுழைந்தது இவர்கள் வந்த மகிழுந்து. வீடு என்பதை தாண்டி மாளிகை என்றே கூறலாம். அத்தனை நேர்த்தியாக இருந்தது. இப்படிபட்ட வசதியான வீட்டில் பிறந்தவன் தன் வாழ்க்கை முறை அனைத்தையும் விடுத்து, திருடனாக வாழ ஒரே காரணம் அவள் மீது அவன் கொண்ட காதல் தான்.
காரிலிருந்து இறங்கியதும் அவனை கையோடு சர்வா அழைத்துச் செல்ல, “நில்லு” என்ற குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.
“எங்கடா வந்த?” என்று நந்தாவின் தந்தை சக்திவேலனது குரலில், சர்வாவை அவன் முறைத்துப் பார்க்க, சர்வாவோ, “இதுவும் பாசத்தின் வெளிப்பாடு அண்ணா.” என்றான் கண் சிமிட்டியபடி.
“உன்னை வந்து வெச்சுக்கிறேன்.” என்றவன் அவனை முறைத்தபடி தன் தந்தையை பார்த்தான்.
“பிடிக்கலைனா சொல்லுங்க. நான் கிளம்பிப் போறேன்.” என்றவனோ திரும்ப,
“டேய் நந்தா?” என்ற தாத்தாவின் குரலில் சட்டென்று திரும்பினான்.
“பார்த்தீங்களா அப்பா. உங்க பேரனுக்கு இருக்க கொழுப்பை?” என்ற வேலன் தான் அங்கலாய்த்துக் கொண்டார்.
“நான் பார்த்துக்கிறேன்.” என்றவரோ நந்தாவை பார்த்து, “இங்க வாடா?” என்று அழைத்தார் ரகுராமபிரதாபன்.
“சொல்லுங்க மிஸ்டர் ரகு தாத்தா. ஆமா என்ன முகத்துல ஒரு மாற்றம் தெரியுது?” என்றவன் கேட்கவும்,
“என்றா தெரியுது? இங்கையா? இல்லை இங்கையா?” என்று கன்னத்தை தொட்டு அவர் பார்க்க, அந்நொடி அவரது வீராப்பு எல்லாம் காணாமல் போனது.
“நல்ல தாத்தா, நல்ல பேரன்… விளங்கும்.” என்று தலையில் அடிக்காத குறையாக அங்கிருந்து சென்று விட்டார் சக்திவேலன். சர்வாவும் அவரது புலம்பலைக் கண்டு சிரிக்க, அவனையும் முறைத்து விட்டு சென்றார் அந்த பெரியமனிதன்.
அவர் சென்றதும் தான் தாமதம், “டேய் பேராண்டி.” என்றவர் அவனை இறுக கட்டிக் கொள்ள, “மை சூப்பர் ஹீரோ.” என்றவனும் அவரை ஆரத்தழுவிக் கொண்டான்.
“என்னடா பேராண்டி… ஒத்தையில வந்திருக்க? பேத்தி எங்க?”
“அவளை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரியலை தாத்தா.”
“என் பேரனா இருந்துட்டு இப்படி இருக்கியேடா படவா. நான் எல்லாம் அந்த காலத்துலயே காதல் மன்னன்னு பேர் வாங்குனவன். நீயும் தான் இருக்கியே? இதுல உனக்கு என் பேர் ஒன்னு தான் கொறைச்சல்.” என்றவர் சலித்துக் கொள்ள,
“தாத்தா?” என்றான் முறைத்தபடி. அடுத்த நொடி ரகுநந்தனது சித்தியும், சர்வாவின் அன்னையுமான சௌந்தர்யா அவ்விடம் வந்து அவனுக்கு ஆரத்தியை எடுக்க, சித்தியைக் கண்டு இன்முகம் பூத்தான் நந்தா.
வீட்டில் உள்ள சிறியவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அவனை சூழ்ந்துக் கொண்டனர். ரகுநந்தனது அண்ணன் சரவணவேல் மற்றும் அவனது மனைவி யாழினி அவர்களது குழந்தைகள் சந்தனா மற்றும் நித்திலன் என அவர்களிடம் இன்முகத்துடன் உரையாடியவனது பார்வை, சிரித்த முகத்துடன் வந்த அக்சராவின் மீது பதிந்தது.
“சரா…” என்றவன் அவளைக் கண்டு இதமாக புன்னகைத்தான்.
“மாமா எப்படி இருக்கீங்க?” என்றவள் புன்னகையோடு கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவ்விடம் வந்தனர் அக்சராவின் அன்னை சந்திரலேகாவும், தந்தை ராமனும்.
“சார்க்கு என்ன? எல்லாம் நல்லா தான் இருப்பாரு.” என்று சற்று கடுப்பாக இடையில் புகுந்துக் கொண்டு பேசிய அத்தையைக் கண்டு இளநகை புரிந்தான் நந்தா. தனது ஒரே மகளை அவனுக்கு மணம் முடித்து தர இயலாது போனதே என்ற விரக்தி தான் கோபமாக மாறியிருந்தது என்பதை புரிந்துக் கொண்டான்.
“சந்திரா…” என்று தாத்தா தன் மகளைக் கடிந்துக் கொள்ள, தாத்தாவை தன் பார்வையாலே அமைதிப்படுத்தியவன் தன் அத்தையின் அருகில் சென்று,
“என் அத்தை கோபத்தில கூட ரொம்ப அழகு.” என்று அவரது கன்னம் பிடித்துக் கொஞ்ச, அவருக்கோ அந்நொடி கோபத்தையும் தாண்டி புன்னகை தோன்றியது.
“ரொம்ப ஐஸ் வைக்காத. இருந்தாலும் என் பொண்ணை வேண்டாம்னு சொன்னவன் தானே நீ?”
“அத்தை அதுதான் நம்ம அக்சராக்கு செம அழகான மாப்பிள்ளை வந்துட்டாரே அப்புறம் என்ன?” என்றவன் கூறவும் தான் சமாதானம் ஆனார்.
ஆம் இந்த மாத இறுதியில் அக்சராவுக்கு திருமணம். அன்று கல்யாணத்தை அவன் நிறுத்தியிருந்த கோபம் தான் சக்திவேலனுக்கும் இருந்தது. தாயில்லா பிள்ளை என்று செல்லமாக வளர்த்த மகனது செயல் அவரையும் பாதித்தது.
திருமண ஏற்பாடு அவனிடம் கூறாமலே நடத்தியிருந்தனர் அவர்களது வீட்டினர். எப்படியும் அவன் மறுக்கமாட்டான் என்ற நம்பிக்கை அவனது தந்தைக்கு மிகுந்துக் காணப்பட்டது. டெண்டர் விசயமாக யூ.கே சென்றவன், வீட்டிற்கு திரும்பியிருக்க, அவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த திருமணம். திருமண நாள் வரும் வரை நேரம் கடத்த விரும்பாதவன், இரண்டு நாள் முன்பே அக்சராவை அழைத்து தன் மனதிலிருப்பதை கூறியவன், அங்கிருந்த அனைவரிடமும் தன் காதலை தேடி செல்வதாக கூறிவிட்டே அங்கிருந்து சென்றிருந்தான். அன்று சென்றவன் அதன்பின் இன்று தான் வருகிறான்.
அக்சராவின் திருமண செய்தி அறிந்த பின்னர் தான் அவன் மனமும் லேசானது.
“ரகு…” என்று அழைத்தபடி வந்தார் நந்தினி. சைத்ராவின் அன்னை. அவருக்கு ரகுநந்தனை மிகவும் பிடிக்கும்.
“ஹாய் அத்தை? வேர் இஸ் அங்கிள்?”
“அவரு ஆபிஸ்டா கண்ணா. ஆமா எங்க உன் காதலி?” என்றவர் நாலாபுறமும் தேட, அவனோ புன்னகையுடன்,
“அவ்ளோ சீக்கிரம் எல்லாம் என் ஆளை பார்க்க முடியாது. நீங்க யாரும் எதிர்பார்க்காத நேரம் வந்து இறங்குவா?” என்றவன் தன் சோகத்தை மறைத்துவிட்டு புன்னகைக்க, அவரும் சிறுபுன்னகையுடன் தலையசைத்தார்.
ரகுராமபிரதாபன் சௌடாம்பிகை தம்பதியனருக்கு நான்கு குழந்தைகள். முதல் மகன் சக்திவேலன், இரண்டாவது மகன் பூபாலன், மூன்றாவது மகள் சந்திரலேகா மற்றும் நான்காவது மகள் நந்தினி. நால்வருமே ஒரே வீட்டில் ஒன்றாகவே வசிக்கின்றனர். ரகு தாத்தாவும் அதை தான் விரும்பினார். ஆதலால் தான் மகளது கணவன்மார்களையும் வீட்டோடு மாப்பிள்ளையாக்கிவிட்டார்.
முதல் மகன் சக்திவேலன் சரோஜினி தம்பதியனரது வாரிசு தான் சரவணவேலும், ரகுநந்தனும். தாத்தாவை உரித்து வைத்தாற்போல பிறந்தவனுக்கு ரகு என்று அவரது பெயரிலேயே பெயரை சூட்டினர். பதினைந்து வருடங்கள் முன்பே அன்னை சரோஜினி இறந்து விட, அன்றிலிருந்து அவனுக்கு தாயாகிப் போனார் சக்திவேலன்.
இரண்டாவது மகன் பூபாலனது ஒற்றை வாரிசு தான் சர்வானந்த். பூபாலனது மனைவி சௌந்தர்யாவும் நந்தாவின் மீது மிகுந்த நேசம் கொண்டவராக திகழ்ந்தார். சந்திரலேகாவின் மகள் அக்சரா. மற்றும் நந்தினி விஜயனின் மகள் சைத்ரா அவ்வீட்டின் செல்ல இளவரசிகளாக வலம் வந்தனர். அதிலும் சைத்ரா சிறுவயதிலேயே குறும்பு மிகுந்து காணப்பட்டாள். படிப்பில் கவனம் செலுத்தாது இருக்கும் மகளை நல்வழிப்படுத்தவே நந்தினி தன் தந்தையின் பேச்சையும் மீறி அவளை ஊட்டி கான்வென்டில் சேர்த்தார். இருந்தும் மகளை வாராவாரம் அழைத்துச் செல்ல அங்கிருந்த உறவினரிடமும் கூறியிருக்க, சைத்ரா தன் தோழி மதுவுடன் தன் பள்ளி வாழ்க்கையை அழகாக மாற்றியிருந்தாள்.
இது தான் ரகுநந்தனது குடும்பம். அனைவரிடமும் இன்முகத்துடன் பேசியவன், நேராக சென்றது என்னவோ தன் அன்னையின் புகைப்படத்தைக் காண தான். அன்னை இறந்த பின் பாட்டி நன்றாக பார்த்துக் கொண்டார். அவரும் மூன்று வருடங்களுக்கு முன் மூப்பின் காரணமாக இறந்துவிட, அவ்வில்லமே களையிழந்து போனது.
“அம்மா, இன்னைக்கு நான் தனியா தான் வந்திருக்கேன். உங்க மருமகளோட என்னால வரமுடியாம போயிடுச்சுமா. சாரி” என்று கைக்கூப்பி அவரை வணங்கியவன், அதன் பின்னரே தன் அறைக்குள் நுழைந்தான். அறை எப்போதும் போல சுத்தமாக காட்சியளித்தது. அவ்வறையின் உள்ளே இருக்கும் சிறிய அறை ஒன்றின் கதவினை அவன் திறக்க, அவ்வறை முழுவதும் நிரம்பியிருந்தது என்னவோ மதுவர்ணிகா மட்டுமே.
சைத்ரா எப்படி ரகுவின் புகழை அவளிடம் பாடினாளோ அதுபோல மதுவை பற்றி நந்தாவிடமும் அதிகமாக அவள் பேசியிருந்தாள். தன் பெற்றோர்களின் அன்புக்காக அவள் ஏங்குவதை அறிந்தவனுக்கு அவனையும் மீறி அவள் மீது இரக்கம் தோன்றியது. அச்சிறு பெண்ணின் வலியை அவனாலும் அறிய முடிந்தது. அன்னை இல்லாத வலியை உணர்ந்தவனுக்கு ஆறுதலாக மொத்தக் குடும்பமும் இருக்க, அப்பெண்ணிற்கோ இருந்தும் அன்பு இல்லாத நிலையல்லவா? அதன் காரணமே அவன் மனதில் அவள் மீது சிறு நேசத்தை உருவாக்கிக் கொண்டான்.
மது சைத்ராவிடம் கொடுத்த பொருட்கள் அனைத்தும் இவ்விடம் இருந்தது. பள்ளி கால புகைப்படம் தொடங்கி கல்லூரி கால புகைப்படம் வரை அவளது ரிப்பன் முதல் கைக்குட்டை வரை பாதுகாத்து வைத்திருந்தான் நந்தா.
“மது… உன்னை நான் முதன்முதலா பார்த்தது எப்போ தெரியுமா? அன்னைக்கு பிரவுசிங் சென்டர்ல தான். பிரெண்ட்ஸோட வீட்டுக்கு தெரியாமல் வந்த டூர். எங்க சைத்ரா என்னை பார்த்தால், வீட்டுக்கு தெரிஞ்சுடுமேனு தான் பதறி அடிச்சு போனப்போ உன் மேல இடிச்சுட்டேன். அப்போ அவசரத்தில உன்னை சரியா பார்க்க கூட இல்லை. ஆனால் நீ என்ன திட்டுனது மட்டும் எனக்கு கேட்டுச்சு.” என்று பள்ளி உடையில் சிரித்த முகத்துடன் அவளிருக்கும் புகைப்படத்தைக் கண்டு கூறினான் நந்தா.
அடுத்த புகைப்படத்தில் சைத்ராவை அணைத்தபடி கண்ணீருடன் நின்றிருந்தாள் மது. பள்ளியின் கடைசி நாளில் சைத்ராவை அழைத்துக் கொண்டு செல்வதற்காக வருகை தந்தவன் அன்று கண்ட அந்த காட்சியை தன் கண்களில் மட்டுமல்ல, தான் கொண்டு வந்த புகைப்படக்கருவியிலும் படம் பிடித்துக் கொண்டான்.
அந்த நொடி மதுவின் மீது அவனுக்கு காதல் ஒன்றும் இல்லை என்றாலும் அவள் அழுத விழிகள் அவனை தாக்கியிருந்தது. ஏனோ அவளது கண்ணீரை துடைக்க வேண்டும் என்பது போல ஆணவனின் கைகள் துடித்துக் கொண்டது.
“அப்போ நீ சின்ன பொண்ணு மது. உன்னை பார்த்ததும் காதல் எல்லாம் வரலை. ஆனால் ஒரு தாக்கம் மனசுக்குள்ள வந்துச்சு. உன் அழுகை என்ன பாதிச்சுது.” என்றவன் மென்மையாக வருடி தந்தான் அந்த படத்தினை.
பின் அருகேயிருந்த புகைப்படத்தில் பார்வை பதித்தான் நந்தா. அவளது கல்லூரி கால புகைப்படம் அது. என்ன தான் வசதியான வீட்டில் பிறந்தவனாக இருந்தாலும் நந்தா என்றுமே எளிமையான வாழ்க்கையையே விரும்பினான். அப்படி தான் தன் மேல்படிப்பை லண்டனில் முடித்தவன், இந்தியா வந்து இறங்கியதும் தன் நண்பனை அழைத்தபடி கோயமுத்தூரில் உள்ள மற்றொரு நண்பனைக் காண்பதற்காக பேருந்தில் பயணம் செய்தான்.
அவனோடு வந்த நண்பன் தான் நொந்துக் கொண்டான். இத்தனை கூட்டத்தில் நெருக்கியடித்தபடி வர வேண்டுமா? என்று அவன் நண்பன் மீது கவலைக் கொள்ள, “இது எல்லாம் வாழ்க்கையில அனுபவிக்கணும்டா. இந்த மாதிரி தருணம் திரும்பக் கிடைக்காது.” என்று கூறியபடி பேருந்தில் வர, அன்று தான் மூன்றாவது முறையாக மதுவினை பார்த்தான் நந்தா.
பள்ளி சீருடையில் சிறியவளாக தெரிந்தவள் இன்று சுடிதாரில் தேவதைப் போல தெரிய, அவனையும் மீறி அவன் கண்கள் அவளையே பார்த்தது. ஏற்கனவே அவன் மனதில் துளிர் விட்ட நேசம் அந்நொடி காதலாக மாறிப்போக, அவளை வெகுவாக ரசித்தது ஆணவனின் கண்கள்.
அந்நொடி மெய்மறந்தவன் அவளை தன் மனதில் சுமக்கத் தொடங்கினான். அவளது படிப்பை எந்த விதத்திலும் தொந்தரவு செய்திட விரும்பாதவன் அவன் வேலைகளில் கவனம் பதிக்க, அந்த சூழ்நிலையை பயன்படுத்தியபடி ரகுவாக அவளது வாழ்வில் நுழைந்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.
அதன் பின் நடந்தவை கசப்பான அனுபவங்களே. அன்று அவள் குடித்து ஆபத்தில் சிக்கிய தருணம் கூட அவளை மீட்டவன், தன்னை அவளிடம் அறிமுகம் செய்திருந்தால் இத்தனை தூரம் அவன் பாடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கலாம்.
“நான் உன்னை காப்பாத்துனேன்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அங்க காதல்னு ஒன்னு இருக்காது மது.” என்று கலங்கியவனின் பார்வை அவளது ஓவியத்தின் மீது பதிந்து மீண்டது.
“இந்த நந்தாவை உனக்கு பிடிக்கலையா மது?” என்றான் ஏக்கமாக.
அவளைத் தேடி வந்தவனுக்கு கேணியின் அறிமுகம் கிடைக்க, அவனிடம் தான் ஒரு திருடன் போலவே பேசிக்கொண்டிருந்தான் நந்தா. அவனும் அவனிடம் சவால் விடவே, திருடுவதற்காக சென்றான் அவனை அழைத்துக் கொண்டு. சுவாரஸ்யத்தை தேடி ஓடுபவனுக்கு அந்த அனுபவம் பிடித்துப் போனது. அப்படி ஒரு சமயத்தில் தான் மதுவிடம் அவன் திருடனாக அறிமுகம் ஆக, அவளிடம் தன்னை திருடனாகவே காட்டிக் கொண்டான் இந்த காதல் கள்வன்.
கல்யாணத்துக்கு முன் இரவிலும் கூட, அந்த குறுகிய கால பழக்கத் தோஷத்தில் உமாபதியின் நகையை பறித்தபடி அவன் மதுவைக் காண சென்றதும், வேண்டுமென்றே நகையை அவள் அறையிலேயே விட்டு வரக் காரணமும் அவன் திருடன் தான் என்று அவள் நம்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே.
நந்தாவாக அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டவன் அவள் எவ்வளவு பேசினாலும் அதை தாங்கிக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவளிடம் மயங்கிக் கொண்டே இருந்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் அவள் பிறந்தநாள் இரவு பெண்ணவள் பேசியிருந்த வார்த்தைகள் அவன் மனதை மிகவும் ரணப்படுத்தியிருந்தது.
குடியை அறவே வெறுப்பவன், அவள் தந்த காயத்தால் குடித்து தன்னை மேலும் காயப்படுத்தியும் கொண்டான்.
“ஒவ்வொரு முறையும் எப்படி மது வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்? என் வலி உனக்கு புரியலையா? இன்னும் என் காதலை நீ உணரலையா?” என்றவன் அவளது ஓவியத்தை இதமாக வருட, அந்நொடி ஆணவனின் அலைப்பேசி சிணுங்கியது.
“சொல்லுடா கேணி?”
“டேய் சிஷ்யா, நேத்து இருந்து ட்ரை பண்றேன் ஏன்டா போன் எடுக்கலை? அப்புறம் ஒரு முக்கியமான விசயம் டா. அன்னைக்கு நீ காட்டுனியே ஒரு போட்டோ அவனை நான் பரதேவதை போன்ல பார்த்தேன்டா. அவன் வேற யாரும் இல்லை மானசாவுக்கு புள்ளை கொடுத்து கழட்டி விட்டவனும் அவன் தான் போலடா” என்றவன் அவள் சென்றுவிட்டதை பற்றியும் விரிவாக கூற, அந்நிமிடம் அதிர்ச்சியுற்றவன், அடுத்த நொடியே அங்கிருந்து விரைந்து சென்றான்.

