

முகம் 20
அவன் பணத்தை எடுக்கிறான் என்ற கோபத்தில் அவனை நோக்கி. வந்தவள்,
“ரொம்ப நல்லா இருக்கு சார் நீங்க பண்றது? நாட்ட நீங்க காப்பாத்துவீங்கன்னு உங்கள வேலைக்கு வெச்சா, இப்படித்தான் சின்சியாரிட்டி இல்லாம இருப்பீங்களா?” என்று அவன் முன்னே வந்து நின்றாள்.
அவள் பேச ஆரம்பிக்கும் போதே ஏதோ தவறாக புரிந்து கொண்டு பேசுகிறாள் என்று எண்ணி விளக்க முற்பட்டவன், அடுத்து அவள் முடித்த வார்த்தையில் புருவம் உயர்த்தி அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
அவள் முறைத்தபடி அப்படியே நிற்க, கூட்டத்தின் மத்தியில் அடங்கிய சத்தம் சற்று உயிர்பெற்றது.
தீரனோ “வேலைக்கு வெச்சிருக்கீங்களா?” என்று ஒரு கரத்தில் உள்ள விரல்களில் சொடுக்கெடுத்தவாறு கேட்டவன்,
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அப்போது அங்கு வந்த பழனியிடம் கூட்டத்தைக் கண் காட்ட, புரிந்து கொண்டவரும் கூட்டத்தை அப்புறப்படுத்தத் தொடங்கினார்.
அவன் குரலில் இருந்த நக்கலை உணர்ந்தவள் கடுப்புடன், “நாங்க கட்டுற வரிப்பணத்துல தானே உங்களுக்கு சலரி வருது, உங்களுக்குப் பணம் கொடுக்குறது நாங்கன்னா, எஸ் நாங்க தான் வேலைக்கு வெச்சிருக்கோம்” என்றாள் தைரியமாகவே,
அவளது கண்களையே கூர்மையாகப் பார்த்தவனோ “முதலாளியம்மா இப்போ என்ன பண்ண சொல்லுறீங்க?” என்றான் கேலியுடன்…
“லஞ்சம் வாங்கிட்டு தப்ப தட்டிக் கேக்காம விடுறது ரொம்ப தப்பு, சோ இவர் மேல நடவடிக்கை எடுத்தே ஆகணும்” என்றாள்.
‘யாரு சாமி இவ?’ என்று நக்கலாய் எண்ணிய மனதை அடக்கியபடி அவன் நிற்க,
அவளோ அவன் கரத்தில் இருந்த குழந்தையின் அருகில் சென்று, காயத்தை ஆராய்ந்தவள், தன் பையில் இருந்தவற்றைக் கொண்டு முதலுதவி செய்யத் தொடங்கினாள்.
அங்கே நின்றிருந்தவன் இதுதான் சந்தர்ப்பம் என ஓடப்பார்க்க, குழந்தையை அவள் கையில் கொடுத்த தீரன், இரண்டே எட்டில் அவனை வளைத்துப் பிடித்திருந்தான்.
“ஏன்டா ராஸ்கல், குழந்தை கூட்டிட்டு வந்து வாகனத்துல தள்ளி விட்டு காசு பார்க்குற நாதாரி, உன்ன அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா, தப்பிச்சு ஓடுறீங்களோ? இருக்குடி உனக்கு” என்றவன், அவன் தலையில் விட்ட அடியில் அந்தப் பெண்ணோ வாயைப் பிளந்து தான் நின்றிருந்தாள்.
சட்டென தோன்றிவிட்ட பதற்றம் அவளைச் சூழ, குற்றம் செய்த பாவனை அவளிடம்…
‘ஐயோ சொதப்பிட்டியேடி’ என்று எண்ணியவள், பிடிபட்ட குழந்தையின் பாவனையுடன் தான் நின்றாள்.
அதற்குள் பழனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததற்கு இணங்க அதிகாரிகள் அங்கே வந்திருந்தனர்.
தன் முன்னே சல்யூட் வைத்து நிற்கும் இருவருக்கும் தலையசைத்தவன்,
விஷயத்தை மேலோட்டமாக சொல்லி “இந்த விஷயத்துல இன்னும் யார் இருக்கா? என்ன நடக்குதுன்னு, ஃபுல்லா விசாரிங்க ஒருத்தனையும் விடவேண்டாம். நான் வந்து மீதியை பார்த்துக்கிறேன்” என்க, அவர்களும் அவனை அழைத்துச் சென்றுவிட்டனர்.
கார் காரனைப் பார்த்தவனோ, “நம்ம மேல தப்பு இல்லனு தெரிஞ்சா தைரியமா நிலைமைய ஃபேஸ் பண்ணனும், இப்படி தப்பிச்சா போதும் பிரச்சனை வேணான்னு பணம் கொடுக்கப் போறதால தான் இப்படிப்பட்டவங்க இன்னும் அதிகமா தப்பு செய்றாங்க. உங்களால நேர்மையா வேலை செய்றவங்களுக்கும் கெட்ட பேர் தான் வருது” என்றவன் இறுதி வசனம் சொல்லும் போது பார்வை அந்தப் பெண்ணை தொட்டு மீண்டது.
அது அவளுக்கான குறிப்பு என்பது அவளுக்கும் புரியாமலில்லை…
“தேங்க்ஸ் சார், நீங்க மட்டும் வரலைனா, நான் தான் தப்புனு முடிவே பண்ணி இருப்பாங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்” என்ற அந்தக் காருக்குச் சொந்தக்காரரோ தீரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அடுத்து அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி அதன் கன்னத்தில் முத்தம் வைத்து, பழனியிடம் கொடுத்தவன்,
“இங்க பக்கத்துல உள்ள ஆசிரமம் தான் இந்தக் குட்டியோட வீடாம். அங்க இவங்கள ஒப்படைச்சிட்டு இந்த விஷயம் சம்பந்தமா இன்ஃபோர்ம் பண்ணிடுங்க பழனி. அன்ட் குழந்தைங்க ஃசேப்ட்டி என்ன நிலமைல இருக்குனு பார்த்துட்டு, அப்படியே ஸ்டேஷன் வந்துடுங்க” என்றான்.
பழனியோ “சரி சார்” என்று கிளம்பப் போக,
“ஜீப்லேயே வந்துடுங்க பழனி” என்றான் மீண்டும்…
அவர் எண்ணி இருந்தது, குழந்தையை ஒப்படைத்து விட்டு பேருந்தில் வரச் சொல்கிறான் என்றே!
ஆனால் இவனோ ஜீப்பில் வரச் சொல்கிறானே என தயக்கத்துடன் “சார், நீங்க…” என்று ஆரம்பிக்க,
“நான் நம்ம முதலாளி கூடவே போய்க்கிறேன்” என்றான் சாவகாசமாக…
அதில் அவள் திகைக்க, பழனிக்கு புன்னகை தான் வந்தது. அவரும் அவள் பேசியதைக் கேட்டார் தானே!
செல்லும் பழனியையே பார்த்தபடி இவள் நின்றிருக்க, “என்ன முதலாளி மேடம் வண்டி எடுத்துட்டு வந்தீங்கன்னா, உங்க வேலைக்காரன் உங்கள எங்க விடணுமா விட்டுடுவேன். சம்பளம் கொடுக்குறீங்க டிரைவர் வேலையும் பார்க்கலாம் தப்பில்ல” என்றான்.
அவளோ தயக்கத்துடன் “சாரி சார்…” என்க, குரல் அத்தனை நலிந்து தான் வந்தது.
“என்னமோ பேசுறீங்க ஆனா கேக்க மாட்டேங்கிதே!” என்று அவன் நெருங்கி ஒரு அடி அவளை நோக்கி வைக்க, அவளோ மூன்று அடி பின்னே சென்றாள்.
பயம் இருந்தாலும் கூடவே ரோஷமும் வர “தப்பு தான் இப்போ என்ன பண்ணும்கிறீங்க? பப்ளிக்ல ஏதாச்சும் தப்பு நடந்தா யாரும் தட்டிக் கேக்கலாம். என்ன கொஞ்சம் தப்பா தட்டி கேட்டுட்டேன். அதுக்கு இப்போ என்ன? அதான் சரியா கண்டு பிடிச்சிடீங்கல்ல, அதுக்கு ஒரு பெரிய பாராட்டும். நான் பண்ண தப்புக்கு ஒரு பெரிய சாரியும் போதுமா? நான் வரேன்” என்றவள் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேக நடையுடன் செல்ல,
இவன் புன்னகை சத்தம் அவள் காதை அடைய மறுத்து, அவளறியாமலேயே அவர்களது வருங்கால வசந்தத்துக்காய் அவளிதயத்தில் ஒளிந்து கொண்டது.
_____________________
பிடிபட்டவனை அடித்துத் துவைத்ததில், அதனுடன் தொடர்புபட்ட அத்தனை பேரும் வரிசையாக மாட்டி இருந்தனர்.
மொத்தமாக ஐந்து பேர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசிரம வாளாகத்தில் இலவசமாக ‘சுத்தம் செய்கிறோம். சேவை செய்கிறோம்’ பேர்வழியென அங்கே நுழைந்து, குழந்தைகளுடன் பழகி, வெளியே அழைத்துச் செல்லும் அளவுக்கு நம்பிக்கையைப் பெற்ற பின்னர் தான். இந்த பணம் பறிக்கும் வேலையிலேயே ஈடுபடுகின்றனர்.
“இப்போ முழுசா சொல்லலைனா எங்க அடிக்கிறேன் எப்படி அடிக்கிறேன்னே தெரியாம செம்மத்தையா வாங்கப் போறீங்க. ஏற்கனவே பசி வேற வந்துடிச்சு அப்பறம் உங்க இஷ்டம்” என்றவன் சுழலும் நாட்கலியை அவர்கள் அருகில் கால்கள் கொண்டு முன்னேற்ற, அவர்களைப் பயம் கவ்விக்கொண்டது.
சட்டை என்று ஒன்று உடலில் தொங்கிக் கொண்டிருந்தது அவ்வளவே, உயர்த்தி இருக்கும் கையை மட்டும் கீழே இறக்கினால் தன்னால் கீழே விழுந்து விடும் என்னும் அளவுக்கு அடி விழுந்து சட்டை கிழிந்திருந்தது.
இனியும் அடியை தாங்க மனம் இல்லாமல் தானே உண்மை வெளியே வந்தது.
முதலில் பிடிப்பட்டவன் தான் பேசினான். அவனுக்கு தான் அடி அதிகம். இனிமேல் தாங்காது என்று அவனே ஆரம்பித்தான்.
“பணக்கார வண்டிய தான் சார் பார்த்து போய் குழந்தையை தள்ளி விடுவோம்” என்றவன் முடிக்கவில்லை “ஆஆஆ” என்று அருகில் அமர்ந்திருந்தவன் அழ,
“நீ மேல சொல்லு, இன்ட்ரெஸ்ட்டா கதை கேக்கும் போது அடிக்கணும்னு தோணுனா அடி விழும்” என்றான் லத்தியை சுழற்றிய படி…
அவனோ மரண பீதியுடன் தான் மீண்டும் ஆரம்பித்தான்.
“குழந்தைங்க விழுந்தத பார்த்த உடனே நிறைய பேர் பணத்தை தந்துட்டு போகத்தான் பார்ப்பாங்க, காயத்தோட அளவப் பொறுத்து நாங்க பணம் கேட்போம்” என்று சொல்ல இந்த முறை அவன் முதுகில் பெரிதாய் விழுந்ததில் துடித்தான் அவன்.
“காயத்தோட அளவு… ம்ம்ம்ம்ம்” என்று இழுத்தவன், “நீ சொல்லி முடி ராசா” என்றான் கோபத்தை அடக்கியபடி…
அங்கிருந்த இன்னொருவனோ
“இவன் ரொம்ப உண்மை விளம்பியா எல்லாத்தையும் சொல்லுறான்டா, மிச்சத்த சுருக்கமா நீ சொல்லேன்” என்று அழுக்குறளில் மெல்ல அவனருகில் இருந்தவனிடம் கிசுகிசுக்க,
அடுத்தவன் பேச வாயைத் திறக்க அடுத்த அடி விழுந்திருந்தது.
“அங்க என்ன டிஸ்கஷன்? இவன் சொல்லி முடிச்சதும், இவன் சொல்லாம விட்ட விஷயத்தை எல்லாம் ஒவ்வொரு ஆளா வரிசையா சொல்லணும். புதுசா எதுவும் விஷயம் சொல்லாம விடுறவனுக்கு…” என்று ஆரம்பித்து அருகில் இருந்த இரும்பு ராடை அவன் வருட,
அடுத்த நிமிடம் மற்ற நால்வரும் அத்தனையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்து உண்மை விளம்பியாகி தப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.
தீரன் பார்த்த பார்வையை உணர்ந்த முதலாமவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்தான்.
“எல்லாரும் பிரச்சனை பண்ணாம காசு குடுக்க மாட்டாங்க, அப்படி பிரச்சனை பண்ணுறவங்க கிட்ட மட்டும் போலீஸ்னு கொஞ்சம் மிரட்டுவோம். அப்படியும் மசியாதவங்ககிட்ட குழந்தையைக் காட்டி கொஞ்சம் எமோஷனலா பேசி காச வாங்கிடுவோம்” என்றான்.
“அதுசரி குழந்தைக்கு என்ன காயம்னு ஆசிரமத்துல கேட்க மாட்டாங்களா?” என்று அவன் கேட்க,
“ஒரு ஆசிரமத்துல ஒரு குழந்தையை மட்டும் தான் இப்படி பண்ணுவோம். அதனால சந்தேகம் வராது” என்க,
“சென்னைல அவ்வளவு ஆசிரமமா இருக்கு?” என்று அவன் சந்தேகமாகக் கேட்க,
“இப்போ கொஞ்ச நாளாத்தான் சார், அதுவும் ஆசிரமம் மட்டுமில்ல, ஸ்கூல்லயும் பண்ணுவோம்” என்று அவன் தயங்கித் தயங்கிச் சொல்ல, தீரன் ருத்ரமூர்த்தியாய் தான் மாறி இருந்தான்.
அலறிய சத்தம் வெளியே கேட்டால் மீண்டும் விழுந்தது, அதற்கு பயந்தே கத்தாமல் இருக்க முயன்று கொண்டே அடி வாங்கிக் கொண்டிருந்தனர்.
“இப்போ போயிட்டு திரும்பி வருவேன், அவன் சொன்னது இல்லாம வேற புது விஷயம் சொல்லணும், யாராச்சும் சொல்லாம விட்டீங்க” என்றவன் பார்வை அந்த இரும்பு ராடை தான் பார்த்து வைத்தது.
வெளியே வந்தவனோ தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவி, சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
மதியவேளை தாண்டி இருக்க, பழனி உள்ளே சாப்பாடுடன் வந்திருந்தார்.
“என்ன பழனி நீங்க? நான் தான் வேணாம்னு தினமும் சொல்லுறேன்ல” என்று கண்டிப்புடன் கேட்க,
“என்ன சார் நீங்க, வீட்ட விட்டு இங்க வந்து இருக்கீங்க வாய்க்கு ருசியா வீட்டுக்குச் சாப்பாடு கேக்கும்ல, என் சம்சாரம் எனக்கு கொடுத்து விடும் போது உங்களுக்கும் கொடுக்குது. இதுல என்ன? சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோங்க” என்றார் எப்போதும் சொல்லும் அதே பதிலை…
இவன் வசிக்கும் அரச குவார்டர்ஸ் பகுதியில் தான் பழனியும் வசிக்கிறார்.
அவருக்கு இரண்டும் பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்திருக்க, அவரும் மனைவியும் மட்டுமே இப்போது அங்கே!
இன்னும் மூன்று வருடங்களில் அவருடைய சேவை காலம் முடிவடைய இருக்கிறது. மிகவும் அமைதியான மனிதரும் கூட…
தீரன் வந்த நாள் முதல், அவர் அவனுடன் தான். இடைப்பட்ட நாளில் இருவருக்கிடையிலும் ஒரு மரியாதையான உறவு மேம்பட்டிருந்தது.
முதல் இரண்டு நாள் இங்கே வெளியில் உணவு அவனுக்கு சேரவில்லை என்றதும் மூன்றாம் நாளில் இருந்து அவரே இவனுக்கும் கொண்டு வந்து விடுகிறார்.
அவன் எவ்வளவு சொல்லிப் பார்த்தாலும் அவர் மாறுவதாக இல்லை…
அவனுக்கும் சங்கடம். சரியென அதற்குரிய பணத்தைக் கொடுக்க, கணவன் மனைவி இருவரிடமும் அத்தனை மனத்தாங்கள்.
அவர்கள் இதையெல்லாம் எதிர் பார்த்து செய்யவில்லையே ஒரு பாசத்திலேயே அவர்கள் செய்திருக்க, இவனுடைய இந்தச் செயல் அவர்களை வாட்டித் தான் இருந்தது.
அதனை அடுத்து வந்த நாளில் அவனும் உணர்ந்திருந்தான்.
சில உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் விலை பேச முடியாது என்பது புரிய, அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி இருந்தான்.
இருந்தாலும் வீட்டுக்குத் தேவையானதை மளிகை சாமான் சிலதை உரிமையாய் வாங்கிக் கொடுக்கவும் தவறவில்லை…
இன்று வரை அவன் மறுப்பும் தொடரத் தான் செய்கிறது. ஆனால் அவர் கொண்டு வருவதை மட்டும் நிறுத்தவில்லை…
உணவைப் பார்த்ததும் தான் அவன் வயிறும் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்த, உண்ண ஆரம்பித்தவனுக்கு மீண்டும் காலையில் வந்த அதே அழைப்பு.
இந்த முறை தவிர்க்கத் தோன்றாமல் அழைப்பை ஏற்றவன்,
“சொல்லுங்க பிரதமர் சார். ரொம்ப பிரீயா இருக்கீங்க போலயே! வேற நாட்டோட எந்த மீட்டிங்கும் இல்ல தானே” என்ற நக்கல் குரல் கேட்டதில் எதிரில் இருந்தவனுக்கு இவன் கோபம் புரிந்தது.
“ப்ச், தீரா…” என்று அவன் இழுக்க,
“தீரா தான் சொல்லுங்க சார் என்ன வேணும்?” என்று கேட்டான் இவன்.
“டேய் உண்மையாவே ஒரு வேலைல சிக்கிட்டேன்டா. இல்லனா நீ வந்தும் பார்க்க வராம இருப்பேனா சொல்லேன்” என்க, இவனிடம் மௌனம். பேசியவனின் குரலில் தெரிந்த சோர்வு இவனை நிதானிக்க வைத்தது.
“இட்ஸ் ஓகே விடு, நாளைக்கு மீட் பண்ணலாம். மார்னிங் உன் காலேஜ் பக்கம் தான் ஒரு டூட்டி விஷயமா வர்ற வேலை இருக்கு. நானே வந்து பார்க்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
மீண்டும் அவனை வேறு யோசிக்க விடாமல் வேலை இழுத்துக் கொண்டது.
அன்றிறவு அனைத்தையும் முடித்தவன், குவார்டர்ஸ் வந்து சேர, இரவு தாமதமாகி இருந்தது.
இறங்கிக் கொண்டவன் உள்ளே நடக்கப் போக, “சார், சாப்பாடு வீட்டுக்கே போகலாமா? இல்ல நானே கொண்டு வரட்டுமா?’ என்று பழனி கேட்க,
“வேணா பழனி, செம டையர்ட் தூங்கணும். லேட் நைட் வேற ஆகிடிச்சு இப்போ பசி இருந்தாலே என்னால சாப்பிட முடியாது. இதுல இப்போ பசி வேற இல்லை, சத்தியமா கஷ்டம், மார்னிங் பார்த்துக்கலாம்” என்றான்.
அவன் முகத்தில் தெரிந்த களைப்பு அவருக்கும் புரிய, சொந்தரவு செய்யாமல் சரி எனக் கிளம்பி விட்டார்.
வீட்டுக்குள் நுழைந்தவன் குளித்து முடித்து வந்து மெத்தையில் விழுந்ததும் கண்கள் சோர்வில் மூடிக்கொண்ட அதே வேலை, விழிகளுக்குள் விம்பமாய் அவள் முகம், அதுவும் அவனைப் பார்த்து பதட்டத்துடன் மாறித்துடித்த அவள் கருவிழிகள் அவனை ஏதோ செய்ய, சட்டென கண்களைத் திறந்து கொண்டான்.
“வாட் ஹெப்பண்ட் தீரா. சின்னப் பொண்ணு அவ. கழுத்துல கூட காலேஜ் டேக் போட்டிருந்தாளே! காலேஜ் படிக்கிற பொண்ணு போல, ஏதோ தெரியாம பேசிட்டா விட்டுடுவோம்” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன்,
மீண்டும் உறங்க முயல அவனை விடாமல் இம்சத்தது அவள் விழிகள்.
“ப்ச், ஐ வாண்ட் ஸ்லீப் பேபி” என்று தூக்க கலக்கத்தில் குழைந்து வந்தது அவன் குரல்…
அந்த குரல் அவனையே போதையேற்ற, சடாரென எழுந்தமர்ந்தவன் “அடச்சீ, என்ன இது என் குரலே இப்படி கன்றாவியா வருது, ஒருவேளை அவனை விட்டுட்டு சைட் அடிக்கிறோம்னு ஜோதிகா ஏதாச்சும் முட்ட மந்திரிச்சு வெச்சிட்டானா?” என்றவன்,
அவளிடம் இருந்து மனதை மாற்ற தூங்கிக்கொண்டிருந்த ஜோதியை சண்டைக்கு இழுத்தான்.
ஈர்க்கும்…

