என் உள்ளத்தை ஈரத்த பூமுகம்-21

Loading

 

முகம் 21

 

அன்று மயல்மொழி கல்லூரியில் எப்போதும் அவள் அமரும் மரத்தின் கீழே அமர்ந்திருந்தாள்.

 

இதோ அவள் மருத்துவக் கல்லூரி சேர்ந்து ஒரு வருடமும் ஓடி இருந்தது.

 

அன்று சித்தார்த் ஒரு வேலையாக வெளியே சென்றிருக்க, மதியத்துக்கு மேல் தான் வருவேன் என்றிருந்தான்.

 

அவளுக்கும் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. காரணம் கயல்மொழி தவிர வேறு யாராக இருக்க முடியும்?

 

இப்போதெல்லாம் அவள் தொல்லை அதிகமாகி இருக்க, ஒரு கட்டத்தின் மேல் கோபத்தை வர வைக்கப் போராட வேண்டி இருந்ததில் சோர்ந்து தான் போனாள்.

 

கோதை மேல் கோபம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது தான். ஆனால் அதனை தன் சகோதரியிடம் காட்ட சிரமப்பட வேண்டி இருந்தது என்பதே உண்மை.

 

காலையில் வேறு கோதை அவளிடம் பேச வந்திருக்க, சற்று அதிகமாய் இவளும் பேசி விட்டாள். அதன் தாக்கம் இன்னும் உள்ளே இருக்க, அடுத்த வகுப்பைத் தொடரும் எண்ணம் சுத்தமாய் இல்லாமல் போனது.

 

____________________

 

 

அன்று காலை கயலைப் பள்ளியில் விட வந்திருந்தார் கோதை. தினமும் வருவது தான்.

 

மறுபடியும் அழைத்துச் செல்வதும் அவரே!

 

கோதை எப்போதும் நேரத்துக்கே கயலை அழைத்து வந்து விடுவார். இவள் பெரும்பாலும் நேரம் கடந்தே கல்லூரி வந்து சேர்வதால், சந்திப்புகள் குறைவுதான்.

 

இவளைக் கண்டாள் ஓரிரு வார்த்தைகள் பேசவும் அவர் தவறுவதில்லை.

 

பேச்சின் சாரம்சத்தில் பெரும்பாலும் அவளது வெளிநாட்டு பயணம் தொடர்பான விடயங்களே இருக்கும்.

 

‘இதுக்கு நேரடியாக எப்போ இங்க இருந்து கிளம்ப போறன்னே இவங்க கேட்டிருக்கலாம்’ என்று மயல் பல நேரங்களில் நினைப்பதுண்டு…

 

இன்று அவர் சற்று தாமதித்திருக்க எதிர்பாராமல் அவளும் அன்று சற்று முன்னரே வந்திருந்தாள்.

 

தன் ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கியவள், எப்போதும் கடந்து செல்வது போல் அவள் அங்கிருந்து நகரப் பார்க்க, அன்று அது முடியாமல் கோதையே அவளைத் தடுத்திருந்தார்.

 

‘மொழி’ என்ற அவரது அழைப்பு ஒரு முறை அவள் காதில் விழுந்தும் அவள் செல்லப் போக, மீண்டும் அதே குரல்…

 

அவள் கேட்க வேண்டும் என்று தவம் இருந்த நாட்களில் எல்லாம் கேட்காத குரல் இன்றோ வேண்டாம் என்கையில் தொடர்கிறது.

 

வழமையாக அமைதியாய் பதில் சொல்லி விட்டு கடந்து விடுபவள் தான். ஆனால் நேற்று இரவு தொடங்கிய மாதவிடாய் ஹார்மோன்கள் வேலையைக் காட்ட, விரக்திப் புன்னகையுடன்

 

“வாவ் பெயர் கூட ஞாபகம் இருக்கே, எப்படி உங்க மூத்த பொண்ணுக்கும் அதே பெயர் இருக்கு எங்குறதாலையா?” என்றாள் கேலிப் புன்னகையுடன்…

 

அவருக்கும் அவள் பேச்சு அதிர்ச்சி தான். ஒரு மாத்ததுக்கு பின் இந்த சந்திப்பு என்பதால் தான் நிறுத்திப் பேசினார்.

 

அவளும் வழமைக்கு மாறாய் பேசி விட ‘என்னவாகிற்று’ என்று எண்ணியபடி,

 

அவள் பேசியதைக் கவனமாய் தவிர்த்தவரோ “எப்படி இருக்க மொழி? ராம் கூடவே இருக்கலாமே! ஏன் தனியா அண்ணா கூட இருக்க, கார் கூட இல்லாம ஸ்கூட்டில எதுக்கு?” என்று கேட்டார்.

 

“வழமை போல,ஏன் இன்னும் இங்க இருக்க போகலன்னு கேப்பீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை, பாயிண்ட் வன் பெர்ஸன்ட்டேஜ் பொண்ணுன்னு நினைப்பு இருக்கும் போலயே!” என்றாள்.

 

இப்போதும் அதே நக்கல் குரல் தான். அவர் ஒருவரால் அவள் பாதிக்கப்பட்டது கொஞ்சமில்லையே, எத்தனை நாள் அவளும் வலிக்கவில்லை என உணர்வுகளை அடக்குவது?…

 

அவள் இங்கே கல்லூரியில் சேரும் போதே ‘விலகி நடந்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தாள். ஆனால் இன்று கோதை சாதாரணமாக நலம் விசாரித்ததில் மனது வெகுண்டு விட்டது.

 

‘தான் இவருக்கு எதுவுமே இல்லையா?’ என்று எப்போதும் தோன்றும் கேள்வி மனதை அரிக்க, அப்போதும் கட்டுப்படுத்தியபடி அங்கிருந்து செல்ல நினைக்க, விதி கோதையின் வார்த்தைகள் மூலம் அவளை சாமியாட வைத்திருந்தது.

 

“ஐ எம் சாரி மொழி, என்னோட சூழ்நிலை…?” என்று அவர் பேசவர,

 

“தூக்கி குப்பைல போடுங்க உங்க மன்னிப்பையும், விளக்கத்தையும்… யாருக்கு வேணும் அது? இதெல்லாம் நான் இழந்த அத்தனையும் எனக்குத் திருப்பி தருமா? சொல்லுங்க தருமா?” என்று கோபமாய் கேட்டவள்,

 

“யாரோ எவனோ சொல்லிட்டான்னு என்னத் தூக்கிப் போட்டுடீங்கல்ல, உங்களுக்கு உங்க மூத்த பொண்ணுதான் முக்கியம்னா என்னை எதுக்குப் பெத்துகிட்டீங்க?” என்று சிறிது நிறுத்தி எதுவோ யோசித்தவளாக,

 

“அதுசரி உங்க மூத்த பொண்ணு கூட வந்த இலவச இணைப்பு தானே நான்” என்றாள்…

 

கோபத்தில் பதற்றம் கூட அவள் கரங்கள் நடுங்கியது.

 

கோதையோ “ரிலாக்ஸ் மொழி, ரிலாக்ஸ்மா, உணர்ச்சி வசப்படுறது உனக்கு நல்லதில்ல” என்று அவர் பதற, அவள் இத்தனை நாள் வைத்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைந்து நொறுக்கியது அவளுள்ளே!

 

“நல்லதில்லையா? அது கூட தெரியுமா சூப்பர்? அப்போ தெரிஞ்சு தான் இத்தன நாளா தனியா விட்டிருக்கீங்கல்ல. உங்களுக்கு உங்க மூத்த பொண்ணு உயிர் மட்டும் தான் உயிர்ல” என்று உடைந்து போய் கேட்க,

 

கோதையால் எதுவும் பேச முடியவில்லை, அவள் பேசுவது அத்தனையும் நிஜம் தானே! அதில் அவரது தவறும் மிக அதிகமே!

 

“அப்பாவும் நானும் பேசி தான் கண்ணா முடிவு எடுத்தோம். உங்க நல்லதுக்காகத் தான். ஆனா உங்க ரெண்டு பேரையும் என்னைக்கும் நாங்க பிரிச்சு பார்த்ததில்லடா” என்றார் கோதை மகளுக்கு விளக்கிவிடும் முனைப்புடன்…

 

“ஓஓஓஓஹோ, அப்போ ஒரு நாள்ல நீங்க எனக்காக ஒதுக்குன அந்த பத்து நிமிச ஃபோன் காலும், அப்பா உங்க மூத்த பொண்ணப் பார்த்துக்கிட்ட விதமும் ஒன்னுனு சொல்ல வரீங்க அப்படி தானே! நல்லாவே புரிஞ்சிடிச்சு, உங்ககிட்ட எல்லாம் பேசிப் புரியவைக்க முடியாது” என்றவள்,

 

“என்னோட பத்து வயசுல உங்க ஃபோன் கால் வேணான்னு முடிவு எடுத்த மாதிரி நீங்களும் வேணா, எனக்கு யாருமே வேணான்னு முடிவெடுத்துட்டேன். என்னை யாரும் வேணான்னு தூக்கிப் போட வேணா, நானே தூக்கிப் போடுறேன் உங்கள” என்றாள்.

 

“மொழி நீ அம்மாவைத் தப்பா புரிஞ்சிகிட்டடா…” என்றார் விடாமல்…

 

“தப்பா? யாரு தப்பு? ஒரு, ஒரு வயசுப் பொண்ணு உங்களுக்கு கண்ணுக்குக் கொலைகாரியா தெரிஞ்சிருக்கான்னா உங்க பார்வைல, நம்பிக்கைல தான் தப்பு. யாரை காப்பாத்த என்னை ஒதுக்குனீங்களோ அவ சாவு என் கைல தான்” என்றிருந்தாள் கண்மண் தெரியாத கோபத்தில்…

 

அவள் வாயிலிருந்து வந்த அந்த இறுதி வார்த்தைகள் அவளையே கொல்ல, அங்கிருந்து ஓடி வந்தவள் தான். அப்போதிருந்து இந்த மரத்தின் கீழே தான் அமர்ந்திருக்கிறாள்.

 

தான் அப்படி பேசியது ஒரு புறம் வலித்தது என்றால், தன்னை அப்படிப் பேச வைத்த கோதை மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

“ச்சே, அவளை நான் தான் கொன்னுடுவேன்னு அவங்க பயந்து பயந்து இன்னைக்கு என்னையும் சொல்ல வெச்சிட்டாங்க” என்றவளுக்கு தன் வார்த்தை ஒரு வித அசௌகரியத்தைக் கொடுத்தது.

 

அவள் காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் கயல் மீது அத்தனை பாசம் அவளுக்கு…

 

யாருக்குத் தான் தன்னைப் போலவே ஒருத்தி தேடித் தேடி வந்து பேசும் போது பிடிக்காமல் போகும்???

 

அதுவும் தன் இரத்த உறவு என்னும் போது இன்னும் உணர்வுகள் அதிகம் தானே!

 

இவளுக்கும் பேச ஆசைதான். ஆனால் பிரிந்திருந்த வருடங்களின் நீட்சி சட்டெனப் பேச அனுமதிக்கவில்லை…

 

கயலுக்கு இதில் பாதிப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது. அது மயலுக்கும் தெரியும்.

 

ஆனால் இந்த விடயத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டவள் அவள் தானே!

 

பேசிப் பழக ஆரம்பித்து, பிரிய முடியாத நிலை என்று வருகையில் இருவருக்குமே அது கடினம் தானே!

 

எப்படியும் இருவரையும் ஒன்றாக இருக்க, கோதை அனுமதிக்கப் போவதில்லை…

 

படித்து முடித்து அமெரிக்கா செல்லும் எண்ணத்தில் தான் இப்போது அவள் இருக்கிறாள். திரும்பி வரும் எண்ணம் எல்லாம் சிறிதும் இல்லை…

 

படிக்க அங்கே செல்ல வேண்டும் என்றவளை, ராம் தான் பேசி படிப்பு முடியும் வரை இங்கே இருக்க வைத்திருந்தார்.

 

 

அவள் சிறிய பெண். இன்னும் பதினெட்டு கூட ஆரம்பித்திருக்காதவளை அவ்வளவு தூரம் அனுப்ப மனம் இல்லை அவருக்கு…

 

நண்பன் பார்த்துக்கொள்வான் என்று தெரியும். இருந்தும் ‘தன்னுடன் இல்லை என்றாலும் இன்னும் சிறிது காலம் நாட்டிலாவது இருக்கட்டுமே’ என்றே அவர் பிடிவாதமாய் அவள் முடிவை மறுத்திருந்தார்.

 

‘தான் கேட்பதை செய்ய விடவில்லை’ என்ற கோபத்தில்

 

“உங்க மூத்த பொண்ணு படிக்கிற காலேஜ்ல தான் படிப்பேன் முடிஞ்சா அங்க சேர்த்து விடுங்க, இல்லையா என்னை என் வழில விடுங்க” என்று முடித்திருந்தாள்.

 

அவளுக்குத் தெரியும் தாய் அனுமதிக்க மாட்டார் என்பது அதனாலேயே அப்படி பேசி இருந்தாள்.

 

ஆனால் ராம் இப்படி அதிரடியாக முடிவு எடுப்பார் என்று அவளும் எதிர்பார்க்க வில்லை…

 

கோதையை மீறி தன்னை அங்கேயே சேர்த்து விட்டது ஒரு அதிர்ச்சி என்றால், கோதை இன்று வரை அதற்கு அமைதியாய் இருப்பது பெரும் அதிர்ச்சியாய் இருக்கிறது.

 

_______________

 

 

இவள் காலையில் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருக்க, அவளது தொல்லையோ அவளை நோக்கி வந்திந்தாள்.

 

“ஹோய் மொழி. இன்னைக்கு ஏன் நீ கிளாஸ் வரல, நான் கூட நீ லீவ்னு நினைச்சு ஃபீல் பண்ணேன் தெரியுமா?” என்று அவளருகே இடித்துக்கொண்டு கயல் அமர,

 

‘ஐயோ மயல், இன்னைக்கு சித்துவும் இல்ல தப்பிச்சு போய்டுடி’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

 

வேக வேகமாய் நடந்து சென்றவள், சற்று தூரம் சென்று ‘பின்னே வருகிறாளா?’ என்று திரும்பிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

 

சற்று முன்னே இவள் அமர்ந்திருந்த மரத்தின் கீழேயே இன்னும் கயல் நின்றிருக்க, அவள் முன்னே ஒரு ஆடவன் அவளிடம் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.

 

அவனை யாரென்று உணர்ந்து கொண்டவளோ “ஐயோ போச்சு போச்சு” என்றபடி அவளருகே விரைந்தாள்.

 

இங்கே கயலின் முன்னே நின்றிருந்தவனோ “என்ன முதலாளி மேடம், இந்த மாசம் சம்பளப்பணம் கொஞ்சம் கூட்டிக் கொடுக்கிறது” என்று அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க, கயலோ பயந்து தான் அவனைப் பார்த்திருந்தாள்.

 

அவளை அங்கே கண்டது அவனுக்கு பேரானந்தம் தான். இரவு தூங்க விடாமல் படுத்தியவளை அவன் தேட வேண்டுமே என்று சலிப்புடன் எண்ணி இருக்கே, தேடாமலே அவனுக்கு கிடைத்து விட்டாளே!

 

அவளையே பார்த்திருந்தவன் “டென்ஷனா தான் இருக்கா, ஆனா இந்தக் கண்ணுல ஏதோ மிஸ் ஆகுதே” என்று சொன்னபடி அவள் பார்வை போகும் திசையப் பார்க்க,

 

அவனுக்குப் பின்னே அவனை எப்படி அழைப்பது என்று தவிப்புடன் மயல்மொழி நின்றிருந்தாள்.

 

அவளைக் கண்டவன் பார்வையோ அவள் விழிகளில் தான் நிலைத்தது. பதட்டத்தில் மாறித்துடித்த அவள் விழிகள் அந்த நிமிடம் அவனுக்குள் எதையோ நிகழ்த்திச் சென்றது என்னவோ உண்மை…

 

அவன் அப்படியே நிற்க, “சார்…” என்று இழுத்தாள் மொழி…

 

அதில் கவனம் கலைந்தவன் “ஓஹோ, டபுள் ஆக்ஷனா??? ஒன்னே இந்த உலகம் தாங்காதே!” என்றவன்,

 

பயந்து நிற்கும் கயலைப் பார்த்து, “சாரி போர் தி டிஸ்டபென்ஸ், எனக்கு என் முதலாளி அம்மா கூடத்தான் பேசணும்” என்று மயல் புறம் திரும்பினான்.

 

மயலோ “சார் அதான் நான் சாரி சொல்லிட்டேனே! இதுக்குப் போய் காலேஜ் எல்லாம் தேடி வரணுமா?” என்க,

 

“சாரி கேட்டா போதுமா?” என்று அவன் ஒரு மாதிரியான குரலில் இழுக்க, அவனுக்கே அது சற்று அதிகம் என்று புரிந்தது.

 

‘டேய் தீரா ஓவரா வழியாத, ஸ்டடி… ஸ்டடி’ என்று மனதைக் கட்டுப்படுத்தியபடி பார்க்க, பெண்கள் இருவரும் அவளைத்தான் பார்த்திருந்தனர்.

 

“சாரி எல்லாம் போதாது, ஒரு நேர்மையான அதிகாரி மேல அப்படி பழி போட்டா அவன் மனசு என்ன பாடு பாடும்” என்று சோகமாய் சொன்னவன்,

 

“நீங்க கேளுங்க மேடம், உங்க சிஸ்டர் தானே, நான் ரொம்ப மனவுளைச்சளுக்கு உளாகிட்டேன். நைட் எல்லாம் உங்க தங்கச்சி என்னை தூங்கவே விடல” என்றான் வாராத கண்ணீரைத் துடைத்தபடி,

 

கயலுக்கோ அவன் சொல்லவருவது புரியாவிடினும் மண்டையை ஆட்டி வைத்தாள்.

 

அப்போது அங்கே “டேய் தீரா, சாரி கொஞ்சம் லேட்டாகிடிச்சு, யூனிபோர்ம்ல செமயா இருக்கியேடா!” என்றபடி சித்தார்த் வர,

 

“ஏன்டா எரும, டு வீக்ஸ் உனக்கு கொஞ்சம் லேட்டா, அடிக்குறதுக்குள்ள ஓடிடு, அங்க ஒருத்தன் அவனை விட்டுட்டு நான் உன்னோட சுத்துறேன்னு கடுப்புல இருக்கான். நீ என்னடான்னா பார்க்கவே வரல, அத நெனச்சா தான் சிரிப்பா வருது” என்றவன் ஜோதியின் நினைவில் உண்மையிலேயே புன்னகைத்து விட்டான்.

 

அவன் புன்னகை அவளை ஏதோ செய்ய, முயன்று அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 

சித்தார்த்தோ நண்பனை ஆரத்தழுவியவன், அங்கே பெண்கள் இருவர் நிற்பது கூடத் தெரியாமல் பழைய கதையில் மூழ்க, அவர்கள் இருவருக்கும் ‘நிற்பதா?? போவதா??’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.

 

அவர்கள் இருவரும் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள, அப்போது தான் சித்தார்த் அவர்களையே பார்த்தான்.

 

“அடேய் லாங்குவேஜ், ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? சூப்பர், இவன் என் ஃபிரண்ட் தீரன்.. ஜெயதீரன்” என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்தியவன்,

 

“இது கயல்மொழி, அக்கா… இது மயல்மொழி அவ தங்கச்சி. என் ஜூனியர்ஸ், இப்போ என் ஃபிரண்ட்ஸ். எனக்கு ரெண்டு பேருமே லாங்குவேஜ் தான். கயல் ரொம்ப சாஃப்ட். இதோ இவ இருக்காளே சரியான அருந்த வாலு” என்க,

 

‘சரியா தானே பெயர் வெச்சிருக்காங்க, மயக்குறாளே’ என்று எண்ணியவன், “தெரியும்” என்றான் மயலைப் பார்த்தபடியே…

 

“தெரியுமா??” என்று சித்தார்த் கேட்க,

 

“மேடம எனக்கு நேத்தே தெரியும்னு சொன்னேன் சித்து, அவங்க தான் என் முதலாளியம்மா” என்று நேற்றைய சம்பவம் அத்தனையும் சொல்ல,

 

சித்தார்த் கயல் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து அவளை வெறுப்பேற்றினர்.

 

அவள் தீரனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை அவனுக்கு புதிய கவிதை படித்தது.

 

“போதும் போதும் விட்டா ரொம்ப தான். நான் சாரி கூட சொல்லிட்டேன்” என்றாள் சற்றே சுணங்கிய குரலுடன்…

 

அந்தக் குரல் ஏதோ செய்ய சிறிதும் யோசிக்கவில்லை தீரன்.

 

“என் வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்கு முதலாளியா வர உனக்கு சம்மதமா மயல்?” என்றான் அவள் விழிகளைப் பார்த்தபடியே!

 

சிரித்துக்கொண்டிருந்த சித்தார்த் கயல் இருவருக்கும் அதிர்ச்சி என்றால் மயலை சொல்லவே வேண்டாம்.

 

நேற்று அவன் தூக்கம் மொத்தமும் அவள் களவாடிக் கொள்ள, அவளை அவன் களவாட திட்டம் போட்டிருந்தான்.

 

“அவளை அடுத்து எப்படிப் பார்க்குறது?” என்றும்

 

“கொஞ்சம் ஓவர் கிறுக்கி தான் பட் அவ கண்ணு யப்பா…” என்றும் புலம்பியவன் விடியும் வரை புலம்ப மட்டும் தானே முடிந்தது.

 

இப்போதும் இங்கே அவளைப் பார்ப்போம் என்றெல்லாம் அவன் எண்ணவே இல்லை…

 

பார்த்ததும் இதயம் மீண்டும் அவள் பக்கம் சாயத் தொடங்கி இருக்க, ‘இப்படி கேட்போம்’ என்று அவனே எதிர்பார்க்கவில்லை, ஆனால் கேட்டுவிட்டான், அதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை…

 

மூவரையும் அவர்கள் நிற்பதையும் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது

 

‘சீரியல்ல கிளோஸப் ஷாட் வைக்கிற மாதிரியே அதிர்ச்சில நிக்கிறானுங்களே’ என்று எண்ணியவன் தலையிலடித்துக்கொள்ள, கூடவே புன்னகையும் தோற்றிக் கொண்டது. அடுத்த நிமிடமே அந்தப் புன்னகை கருகிப் போகும் என அவன் ஒரு நாள் காதலி உணர்த்தி இருந்தாள்.

 

அவன் அத்தனை காதலுடன் உணர்ந்து கேட்ட கேள்வி அவளிடம் சென்று சேர்ந்த விதத்தில் நொந்தே போய்விட்டான் அந்த காவலன்.

 

“சார், சாத்தியமா நீங்க வேலைய விட்டுட்டு வந்தா எல்லாம் என்னால வேலை கொடுக்க முடியாது, என் அப்பாகிட்ட வேணா கேட்டுப்பார்க்கவா அவங்க ஹாஸ்பிடல்ல ஏதாச்சும் வேலை கொடுப்பாங்க” என்க, இப்போது சீரியல் கிளோஸப் ஷாட் அவனுக்குத் தான் வைக்க வேண்டியதாய் போய்விட்டது.

 

“அடிங்க, போடி இங்க இருந்து” என்று அவளை அவன் அடிக்கப் பாய, சித்தார்த் தான் பிடித்துக்கொண்டான்.

 

“சார் சும்மா சும்மா கோபப் படாதீங்க, போன வாரம் தான் ஒரு போலீஸ் காரர் எங்கிட்ட என் வண்டிய பிடிச்சிட்டு லஞ்சம் வாங்கினாரு, அதத் தடுக்க முடியாத விரக்தில இருந்த நேரம் தான் நீங்க பணம் எடுக்குறத பார்த்தேன்” என்றதும் அவன் முறைக்க,

 

“என் கண்ணுக்கு நீங்க எடுக்குற மாதிரி தான் தெரிஞ்சிது” என்று உள்ளே போன குரலில் சொன்னவள்

 

மீண்டும் “அதான் தட்டிக் கேக்க வந்து சொதப்பிடிச்சு” என்றாள்.

 

அவள் பயந்து பயந்து பேசியதில் உள்ளம் கொஞ்சம் இறங்கினாலும், அவன் ஆழ்ந்து உணர்ந்து சொன்ன அவன் காதலைத் தரையில் பட்டெனப் போட்டு உடைத்ததை எண்ணுகையில் மீண்டும் கோபம் ஏற,

 

“அடிச்சிடுவேன் அதுக்குள்ள ஓடிடு” என்று அவளிடம் சொன்னவன்,

 

சித்தார்த்திடம் “போக சொல்லு மச்சான் இவளை” என்றிருந்தான்.

 

சித்தார்த்தும் சிரிப்பை அடக்கியபடி “ரெண்டுபேரும் கிளாஸுக்கு போங்க” என்க, திரும்பி நடக்கத் தொடங்கி இருந்தனர் பெண்கள்.

 

மயலோ அவனைத் திரும்பிப் பார்க்க, “போடி” என்று அவன் இதழசைத்ததில் பட்டென திரும்பிக் கொண்டாள்.

 

அவர்கள் சென்றதும் சித்தார்த் விடாமல் சிரிக்க, கடுப்பான தீரனோ “டேய் வேணா நானே நொந்து போய் இருக்கேன் சீண்டாத” என்க,

 

“அந்தச் சின்னப்புள்ளகிட்ட போய் காதல் வசனம் எல்லாம் பேசுனா இப்படி நொந்து போய்த் தான் ஆகணும்” என்க,

 

“எந்த இயர்” என்று கேட்டான் தீரன்.

 

“செகண்ட் இயர்” என்று சித்தார்த் சொல்ல,

 

“அதெல்லாம் பதினெட்டு ஆகிடுச்சுல எல்லாம் லவ் பண்ணுற வயசு தான். என்ன ஒன்னு காதலோட சேர்ந்து அவளையும் வளர்க்கணும். கொஞ்சம் டிபிகல்ட் டாஸ்க் தான் ஆனா முடிச்சிடலாம்” என்றான் அவள் செல்லும் திசையில் பார்த்தபடியே கனவுகளுடன்!

 

“தீரா ஆர் யூ சீரியஸ்?” என்று சித்தார்த் நண்பனின் தீவிரம் உணர்ந்து கேட்க,

 

“டேய் நான் என்ன ஜோக்கா பண்ணிட்டு இருக்கேன். அவதான் என்னை கலாச்சிட்டுப் போறான்னா நீ என்னமோ இதுக்கு முன்ன பல பொண்ணுங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ண மாதிரி பேசுற?” என்று எரிந்து விழுந்தான்.

 

“தீரா, உங்ககிட்ட அவளைப் பத்தி சொல்லுறேன் அதுக்கப்பறமும் உனக்கு இந்த லவ் கண்டினியூ பண்ண தோணிச்சுனா எனக்கு சந்தோசம் தான். இல்ல இது வெறும் இன்ஃபெக்சுவேஷன் தான்னா இத நீ இதோட விடுறது பெட்டர். அதுக்கு அவ ஆளும் இல்ல நான் அதுக்கு அனுமதிக்கப் போறதும் இல்ல” என்க,

 

“சித்து என்கிட்ட வாங்கப் போற பாரேன். நான் என்ன சின்னக் குழந்தையாடா? இருபத்தஞ்சு வயசாச்சு காதல் என்னனு எனக்கு நல்லாவே தெரியும். நீ எதுவும் சொல்ல வேணா, எனக்கு தெரியும் நான் என்ன பண்ணனும்னு” என்றவன் கோபமாய் அங்கிருந்து செல்லப்போக…

 

“அப்பா அம்மா இருந்தும் தனியா அனாதையா வாழணும்னு விதிக்கப்பட்டவடா அவ, என் நண்பன் உன்னப் போல ஒரு உறவு அவளுக்கு எல்லாமாவும் கிடைக்கும்னா, அதுல முதல்ல சந்தோசப்படுறது நானா தான் இருப்பேன். ஆனா அவ விஷயம்னு வரும்போது நான் இதை பேசி தான்ட ஆகணும்” என்றவனின் குரலில் தீரனின் கால்கள் அப்படியே நின்றது.

 

நண்பனின் அமைதியை உணர்ந்த சித்தார்த் அவனுக்குத் தெரிந்த வகையில் அவளைப் பற்றி சொல்லி முடித்தவன்,

 

“இப்போ நீயே முடிவு பண்ணு தீரா” என்க,

 

“இப்படி ஒரு கேவலமான பிளாஷ்பேக் என் ஆளுக்கு இருக்கும்னு நினைக்கவே இல்லையே! எங்க குழந்தைங்கள தூங்க வைக்கக் கூட இந்த கதைய சொல்ல முடியாதேடா!” என்றான் தீரன்.

 

அதில் புன்னகைத்த சித்தார்த்தோ நண்பனை ஆரத்தழுவி இருந்தான்.

 

நண்பனின் பேச்சில் அவன் இதில் உறுதியாக இருப்பது புரிய அத்தனை ஆனந்தம் அவனுக்கு…

 

தீரன் பற்றி அவன் அறியாததா??? அவன் ஒருவன் கிடைத்தால் மயலுக்கு எத்தனை உறவுகள் கிடைக்கும். அவனுக்கும் அவள் உறவாகி விடுவாளே!

 

அதனை எல்லாம் தாண்டி தீரன். அவன், அவன் ஒருவன் போதாதா? அதுவே சித்தார்த்துக்கு நிறைவாய் இருந்தது.

 

இங்கே சித்தார்த் சந்தோச ஆர்ப்பரிப்பில் இருக்க, தீரனுக்கோ மயலின் தந்தை தாய் இருவரின் மீதும் கோபம் தான் வந்தது.

 

சந்திக்கும் முன்னரே கோபம் உருப்பெற்றிருக்க, நேரில் சந்தித்தால்???

 

விளைவு என்னவென்று அறிந்தே இவையெல்லாம் விதி நடத்தும் நாடகம் தானோ???

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்