
சொல்லாமல்…!
மௌனம் – 02
திறந்திருந்த யன்னலின் வழியே,குளிர்த்தென்றல் வீச,அதன் குளுமை அவளறை அறையெங்கும் நிரம்பியிருந்தது.
யன்னல் அருகே அமர்ந்து,வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,புள்ளியாய் ஓர் விமானம்.அது,அவன் நினைவுகள் வாரித்தந்திட,இதழ்களில் சிறு புன்னகை மொட்டவிழ்ந்தது.
இந் நேரம் அவனும் விமான நிலையத்தில் இருப்பானோ..?
இல்லை,விமானத்தில் பறந்து கொண்டிருப்பானோ.?
தன் மானம் பார்த்திடா மனம்,சிந்தனையை அவன் புறமே விரட்டித் தள்ளியது.
நேற்றுத் தான் எவ்வித முன்னறிவிப்புமின்றி,இரு மாத காலம் வெளிநாடு செல்ல இருப்பதை,வெறும் கடமைக்கென ஒப்பித்து விட்டு,மறுமொழி கேளாமல் நகர்ந்து இருந்தான்.
ஏன் இந்த அலட்சியம்..?
அதுவும் அவளிடம்..?
சத்தியமாய் எத்தனை யோசித்தும் பதில் கிடைக்கவில்லை,
அவளுக்கு.இன்று மட்டுமா கிடைக்காமல் போனது..?
ஒவ்வொரு முறையும் பதில் தேடி சோர்ந்து போவது நிஜம் தானே.
இப்போதும்;ஆழமான பெருமூச்சொன்று விடுபட விரல்கள் தானாகவே கழுத்தை வருடிக் கொடுத்தது,
வழமை போலவே.
முன்பெல்லாம் அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறம் இரண்டு வீடுகள் தள்ளி தான் அவன் வீடு.மொட்டை மாடியில் நின்றால் இரு அவனைப் பார்த்திடலாம்.
அடிக்கடி அவனின் வீட்டு மொட்டை மாடியில் அவனைப் பார்த்ததும் உண்டு.அவனின் கல்லூரிப் படிப்பு முடியும் வரை அவர்கள் இருந்தது இங்கு தான்.ஏதோ வேலை நிமித்தமே இடம் மாறிச் சென்றிருந்தனர்.
அப்போதெல்லாம் அவனின் மீது சிறு சலனம் கூட தட்டிடாமல், தன்னை காத்துக் கொண்டவளுக்கு திருமணத்தின் பின், உண்டான சடுதியான காதலை இன்னுமே நம்ப முடியவில்லை.
அதுவும்,அவர்களின் திருமணம் நடந்த சூழ்நிலையே வேறாய் இருக்க,அதை அவள் ஏற்கும் பக்குவத்துக்கு வரும் முன்பே,அவன் மீதான பிடித்தம் வேர்விட்டு எழுந்தது,அவளுக்கு இன்னும் புதுமை தான்.
தாலி வாங்கியது,நினைவில் இல்லை.ஆயினும்,கணவன் என்று அவனை கை காட்டிய பின்னர்,மறுபேச்சு எதுவுமின்றி அப்படியே ஏற்றிருந்தாளே.
முன்பெல்லாம் அழுத்தமும் இறுக்கமும், சிடுசிடுப்புமாக வலம் வருபவன் தான் அவன்.
திருமணத்திற்கு முன்பு,அவன் மீது பிடித்தம் வராததற்கு பெரும் காரணம் அதுவாகத் தான் இருந்திருக்கும்.
ஆனால், திருமணத்தின் பின்..?
அவற்றை அத்தனை பிடித்தது.எத்தனை முறை அவனின் விழியசைவை கூட உள்வாங்கி புதைத்து, மீண்டும் மீண்டும் தனக்குள் நிழலாடவிட்டு ரசித்திருப்பாள்..?
பிடிக்காதது கூட, பிடித்தவர்கள் செய்திடும் போது பிடித்து பேரழகாய்த் தோன்றிடுவது மாயம் தான் போலும்.
கேளாமலே அவனின் எண்ணங்கள் மனதை நிரப்பி,அவளின் திண்ணக்கத்தை தகர்த்து விட்டு வேடிக்கை பார்த்திட ஏது செய்திட முடியும்,அவளால்..?
விடிய விடிய விழித்திருந்து,விட்டத்தை வெறித்து அவன் நினைவுகளை சுமந்தவளாய்,அவள் இருக்க அவனின் மனநிலை என்னவென்று,அவனுக்குள் அவனை படைத்த அந்த கடவுளுக்கும் மாத்திரமே,வெளிச்சம்.
அவள் காதலிக்கிறாள்.
அளவுக்கு மீறி காதலிக்கிறாள்.ஆனால்,அவள் காதலையே,மண்டியிட வைத்திடும் காதலொன்று அவளுக்கென காத்திருப்பின்..?
அவள் நினைவுகளை மட்டுமே,பற்றிக் கொண்டு அது ஜீவித்திருப்பின்..?
அவளுக்கென,மட்டுமே அது உயிர் சுமந்து உயிர்க்கூட்டில் புதைந்திருப்பின்..?
காதலிக்கப்படுவதன் சுகத்தை,முன்பொருமுறை உணர்த்த தவறியவனுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்திடுமோ விதி..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறுநாள் அழகாய் விடிய,வழமையாக எழும் நேரத்துக்கு முன்பாகவே,எழுந்தமர்ந்து விட்டான்,தேவேந்திரன்.
மொட்டை மாடியில் நின்று அவளின் வீட்டு மாடியை உரசி மீண்டு கொண்டிருந்த,
அவன் விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்னியது.
அவள் இன்னொருவனின் மனைவி,என்கின்ற எண்ணத்தில் தன் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தவனோ,காதலையும் மறந்திடும் பிரயத்தனத்தில் தான்,இருந்ததே.
இப்போது,விவாகரத்து பெறப் போவது தெரிந்ததாலோ என்னவோ,மீண்டும் புதைந்திருந்த காதல் தன்னை மீறி எழ முயன்று கொண்டிருந்தது,
அவனுக்குள்.
முன்பெல்லாம் எத்தனை சிடுசிடுப்பாக இருப்பான்…?
எப்படியெல்லாம் கோபம் வரும்..?
முற்றாக மாற்றியது அவள் தானே.அவளொருத்தி தானே.
ஒருவேளை அவளிடம் முன்பே தன் காதலை சொல்லியிருக்க வேண்டுமோ,என்கின்ற எண்ணம் முகிழ்த்திட,”ச்சே..என்ன இது…?” தனக்கு வந்த நினைவின் மடத்தனத்தை உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்திட அவன் விழிகளில் இடம் பிடித்தது,உடைகளை உலர்த்தப் போட வந்த அவள் விம்பம்.
ஏனோ தற்செயலாய் அவளின் பார்வை அவன் புறம் தாவ,சிறு புன்னகையை தெளிக்க விட்டவளை கண்டு அவனிதழ்களிலும் புன்னகை தவழ்ந்தது.
“வணக்கம்.” என்றவாறு கையசைத்தவளின் முகத்தில் துளியும் உண்மை இல்லை என்று புரிந்தாலும் அவனால் கேட்டிட இயலாதே.
பதிலுக்கு அவனும் “வணக்கம்..”என்றவாறு சைகை செய்திட “நலமா..?” என்றான் சைகையின் ஊடு.
“ஆம்..” என்றவாறு தலையசைத்து விழிகளால் அவனிடம் வினவ “சூப்பர்..” என்றவாறு அசைந்து கொடுத்தன,
அவன் விரல்கள்.
வேறெதுவும் கேளத் தோன்றாமல் சிறு தலையசைப்புடன், அவள் நகர்ந்திட விரிந்திருந்த, இதழ்களின் புன்னகை அப்படியே வற்றிப் போயிட விரக்தியின் சாயல் முகத்தினில்.
அவளை ஒரு முறை தவற விட்டதை நினைக்கையில்,ஆற்றாமை பொங்கிட,மெல்ல தன்னை மீட்டுக் கொண்டான்.
கல்லூரியில் தன் முன் வரப் பயந்து அவள் ஒதுங்குவதும்,அவளை வேண்டுமென்றே தான் சீண்டிப் பார்ப்பதும் தானாக நினைவிலாட, மனம் நெகிழ்ந்தது.தன் மாற்றங்களை நினைக்கையில் சிரிப்பாகவும் வந்தது.
மாற்றங்கள் தினம் தினம்..
மாறத் தெரியாமல் தவிப்பது தான் மனித மனம்..
மெல்ல கீழிறங்கியவனை, தாயார் ஒரு வித கேள்வியாக பார்த்திட, சட்டென்று தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டு இயல்பாகி நின்றாலும் தாய் அறியா சூலா..?
அவளின் திருமணத்தன்று தன் மடியில் படுத்து கட்டிக் கொண்டு அழுத தேவேந்திரன் தான் அவரின் கண் முன்னே வந்து செல்ல ஏனோ,தாயுள்ளம் நெருடியது.
அவள் வருகை,அவர் அறிந்திருக்க,மகனின் செயலும் அதற்கு ஒத்து ஊத,பயம் படர்ந்தது.
தாயின் முகத்தை வைத்தே,அவரின் எண்ணப் போக்கை கணித்தவனுக்கு,தன்னிலை விளக்கும் சூழல் இப்போது அமையாது போகவே,பேசாமல் அகன்று சென்றான்,அவ்விடத்தில் இருந்து.
●●●●●●●
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தவனோ,ஒரு குளியலைப் போட்டு விட்டு,வராந்தாவில் வந்தமர்ந்தான்,தேவேந்திரன்.
எப்போதும்,அப்படி அமரும் பழக்கம் இல்லை.எதிர் வீட்டில் கேட்ட,அவளின் பேச்சுக் குரல் அவன் கால்களை தன்னாலே நகர்த்தியிருந்தது.
இதழ்களில் மெல்லிய புன்னகை படர்ந்திட,தன் அலைபேசியை ஆராயத்துவங்கிட,அவள் நினைவுகள் ஒவ்வொன்றாய் அணிவகுக்க மனதில் ஒரு போராட்டம்.
முன்பெல்லாம் இப்படி இல்லை.இல்லவே இல்லை.அவள் நினைவுகள் எழுந்தாலும்,அதை வலுக்கட்டாயமாய் ஒதுக்கித் தள்ளுவான்.
இதோ,அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையிலான விவாகரத்து.அதுவோ,அவனின் காதல் கைகூட மற்றுமோர் வாய்ப்பாகிற்றே.அதுவே,அவனை ஆசுவாசப் படுத்திட,மனதில் அவளே நிறைந்து நின்றாள்.
அதே,நினைப்புடன் அவனிருக்க,திடுமென தன் முன்னே நிழலாடியதில் கலைந்திட,அவன் முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம்.விழிகளில் கடுமை ஏறிற்று.
புன்னகை வாடாத இதழ்களுடன், அவனின் விம்பத்தை விழிகளில் தேக்கி, இரசிப்பின் ரேகைகளை முகத்தில் படரவிட்டு நின்றிருந்தாள்,ஆர்த்தி.
அவனின் அத்தை மகள்.அவனை ஒரு தலையாக, காதலித்துக் கொண்டு அவனின் காதல் வேண்டி அவனையே சுற்றி வருபவள்.
“அத்தான்..”
“அத்தான் பொத்தான்ன..பல்ல ஒடச்சி கைல தந்துருவேன்..எதுக்கு இங்க வந்துருக்க..?”சீறினான்,பற்களை நறநறத்தவாறு.
“ஏன் நா வரக் கூடாதா..?”,துடுக்காக கேட்டவளின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.கொஞ்சமும் பயமில்லை,அவள் விழிகளில்.
“இங்க பாரு ஆர்த்தி..காதல் கீதல்னு என் பின்னாடி சுத்தாத..சொல்லிட்டேன்..”
“ஹலோ..சும்மா அதட்டுற வேலயெல்லாம் வேணா..” சிலுப்பிக் கொண்டே,அவள் சொன்ன பதிலில் இவனுக்குத் தான்,இரத்த அழுத்தம் எகிறும் உணர்வு.
“இங்க பாரு ஆர்த்தி..நா..”
“நா ஒரு பொண்ணு விரும்புனவன்..அதனால உன்னோட காதல என்னால ஏத்துக்க முடியாது..அதத் தான சொல்ல வர்ரீங்க..யாரந்த பொண்ணுன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க..திரும்ப சேர்ரதுக்கு வாய்ப்பே இல்லாத காதல நெனச்சு எதுக்கு அத்தான் இப்டி வதச்சுக்கிறீங்க..?”
“ஏய்..ஷட் அப்..” அவளின் பேச்சில் அவனுக்குள் சினம் எழுந்திற்று.
இப்போது தான்,மீண்டும் தன் காதல் கை கூடிட வாய்ப்பிருப்பதாக கருதி மகிழ்ந்தவனுக்கு,அவள் பேச்சு அபஸ்வரமாகவே தோன்றிட,சின்னதாய் ஒரு திடுக்கிடல்.
அவன் முகத்தை அவளும் ஊன்றி கவனித்திட,அதை உணர்ந்து தன்னை சட்டென மீட்டுக் கொண்டான்,லாவகமாய்.
“இங்க பாரு ஆர்த்தி..வாய மூடிட்டு கெளம்பு..நானே செம்ம கடுப்புல இருக்கேன்..இந்த ஜென்மத்துல உன்னால என்னோட மனசுக்குள்ள வர்ர வேலய பண்ண முடியாது..ஸோ ப்ளீஸ் இங்கிருந்து போ..”
உரக்க துவங்கி ஆற்றாமையில் முடிக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி இன்னும் புன்னகை மாறாமல் பார்த்திருந்தாள்,அவனை.
இன்னும் சொல் என்றவாறு,அவளின் விழிகள் சொன்ன செய்தியில்,பேசாமல் இவளிடம் உண்மையை சொல்லி விட்டால் என்னவென்று கூட,அவன் மனம் யோசித்திட,தலையில் தட்டி தன்னை அடக்கினான்.
அவள் முகத்தில் இருந்த உணர்வுகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
“இங்க பாருங்க அத்தான்..இவ்ளோ நாள் இதத்தான் சொல்றீங்க..வேற மாடுலேஷன்ல வேணா ட்ரை பண்ணுங்க..எப்டின்னாலும் என்னோட முடிவுல மாற்றம் இல்ல..”
அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தவளுக்கு, அவனின் காதலியை மறக்க முடியாததால் தான் தன்னை தள்ளி வைக்க எப்போதும், போல் இப்படி பேசுகின்றான் என்கின்ற எண்ணம்.
புதைந்திருந்த காதல் துளிர்விட்டது தான், அவனின் இத்தகையை கோபத்துக்கு காரணம் என்று அவள் அறிந்திருந்தால் கொஞ்சமேனும் வலியை தவிர்த்திருக்க இயலுமோ என்னவோ..?
அவனாவது சொல்லியிருக்கலாம்.
அவனுக்கு அவளின் கூற்றில் இன்னும் கோபம் எகிற ஒரு முறைப்புடன் நகர்ந்திருந்தான்,
அவ்விடத்தில் இருந்து.
போகும் அவனையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவளின் இதழ்களில் புன்னகை மட்டும் வாடவேயில்லை.
இங்கோ,
தன் அறையை ஒழுங்டுபடுத்தி விட்டு நிமிர்ந்தாள்,தர்ஷினி.
அறையை ஒழுங்குபடுத்தும் போது ஏனோ மனம் ஆற்றாமையில் பொங்கியிருந்தது,
உண்மை தான்.மொத்த எண்ணங்களிலும் அவன் தான்.
அவன் மட்டுமே தான்.
தவிப்பு கரை கடக்க,கோர்த்த நீரலையும் விழிகளுக்குள்,அடங்கிப் போயிற்று.
மெல்ல நகர்ந்து யன்னல் புறம் நகர்ந்தவளுக்கு ஏனோ அன்றைய நினைவு.
ஒற்றைக் கையால் தலை கோதிய படி,அவன் யன்னலுக்கு வெளிப்புறம்,பார்வையை அலைய விட்டு நின்றிருந்ததை,விழியெடுக்காது தன் பார்வையால் உரசியது,கேளாமலே நினைவில் வந்து போக,அவளிதழ்களில் மெல்லமாய் சிறு விரிவு.
அவன் மீதான காதல் உதித்திடும் வரை தன்னால் இந்தளவு காதலிக்க முடியும்,
என்பது அவளே அறிந்திராதது.
நிமிடங்கள் கடக்க யோசனையில் நின்றவளை, அலைபேசி கலைத்திட திரையில் மறைந்த எண்ணைப் பார்த்ததும் விழிகள் விகசித்தாலும், மெல்லிய கலக்கமொன்று மனதில்.
அவன் குரல் கேட்கலாம் என மனம் குதூகலித்தாலும்,அதை சுமந்து வரும் குத்தல் வார்த்தைகளை எண்ணி பயம்.
அழைப்பை ஏற்று,காதில் வைத்தவளோ,மூச்சை கூட அடக்கி மௌனம் காத்தாள்.அவன் அழைப்பென்றதுமே,இதயத் தாளம் ஏறிட,சுவாசம் சீரற்று திணற வைத்திட,அதை மறைக்க முனைந்தாள்.
“ஹலோ…” செவிசேர்ந்த அவன் குரலில்,அவள் உயிருக்குள் திரிபிழைகள்.கண்ணோரம்,கண்ணீர் தேங்கியே விட,என்னவிதென்கின்ற நிந்தனையில் கரைந்தாள்.
“ஹ..ஹலோ..”,சில நொடிகள் கழித்து திணறலுடன்,அவள் பதில்.
அந்த நொடிகளில்,அவன் சுவாசம் இவள் செவியுரசிட,அதுவே இன்றைக்கு போதுமென்று வாதிட்டது,மனம்.
“ஓஹ் சாரி! இது உன் நம்பரா….மிஸ் ஆகி கால் பண்ணிட்டேன்..”
படக்கென்று அவன் அழைப்பை துண்டிக்க,அவள் தான் அலைபேசி திரையை வெறித்து பார்த்தவாறு சில நொடிகள் சமைந்திருந்தாள்.
பதில் சொல்லத் தாமதப்படுத்தி இருந்தால்,அவனின் இருப்பையேனும் உணர்ந்திருக்கலாமே என ஆழ்மனம் தவிக்க,அப்படியே தொப்பொன்று அமர்ந்து விட்டாள்,கட்டிலில்.
உயிர்வதையாய் இருந்தது,இவ்வுணர்வு.அவன் தன் குரலை,இனங்கண்டு கொண்டதை எண்ணி,சிறு பூரிப்பு.தனக்கு அழைத்திடும் தேவை எதுவும் இல்லையென்று மனதில் மருகல்.
திரையில் மிளிர்ந்தது,
அவனுருவம்.சலனமற்று ஓரிரு நிமிடம் பார்த்தவள்,அலைபேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இறுக்கினாள்.
“ஹர்ட் பண்றீங்க என்ன..” மனதில் கதறிய போதும்,அவள் அழவில்லை.
அவனின் பாராமுகம் வலிக்கிறது.அவனின் கோபம் காயப்படுத்துகிறது.
அவனின் அலட்சியம் நோகடிக்கிறது.ஆனால்,அதற்கும் மேலாக அவனைப் பிடித்துத் தொலைகிறதே.
அது தானே அவள் பிரச்சினை.
அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டவளால்..
அவனை அவன் குணங்களில் இருக்கவே நேசிக்கத் துவங்கியவளால்..
அவனின் ஒவ்வொரு அசைவையும் மனதில் தேக்கி ரசிக்கத் தெரிந்தவளால்..
காரணமின்றியே ஒட்டு மொத்த காதலையும் அவனிடம் கொட்டி வைத்து தவிப்பவளால்…
அவனை வெறுப்பதென்பது,முடியாத காரியம்.
வெறுக்கத் தெரியா,நேசங்கள் கிடைப்பது வரம்.ஆனால்,அதை சுமக்கும் மனங்களுக்கு,நிச்சயமாய் அது சாபமே!
கதவை தட்டும் சத்தம் கேட்டிடவே,தன்னை சமப்படுத்திக் கொண்டு கதவை திறந்திட,வெளியே நின்றிருந்த தோழியை அவள்,சிறிதளவும் எதிர்பார்த்திடவில்லை.
தொடரும்.
🖋️அதி…!

