Loading

அன்றில்-11🦢

 

இரவின் இறுதிச் சிந்தனை நீ..

 

“நேத்ரா.. எப்படிம்மா இருக்க” என்ற ஆகாஷின் குரலில் பாசமும், குற்றவுணர்ச்சியும் சரிசமமாக இருக்க.. அவனைக் கோவமாக ஏதோ சொல்லத் திரும்பியவள்.. அவன் கைகளில் தவழ்ந்தவாறு அப்போது தான் முளைத்திருந்த முன் பக்க நான்கு பால் பற்களைக் காட்டியபடி இருந்த குழந்தையைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

ஆனாலும் கோவத்தை அப்படியே விட முடியாமல் “நான் இவ்வளவு நாள் எப்படி இருந்தனோ.. இனிமேலும் அப்படியே இருந்துட்டு போறேன்.. நீ என்னைப் பத்தி கவலைப்படாத.. உன் குடும்பத்தை பாரு சரியா” என்று கண்களில் நெருப்பை உமிழ..

 

“இல்லம்மா” என்று அவன் ஏதோ சொல்ல வர..

 

“ஆனா கடைசில நீயும் அந்த குடும்பத்துல வந்த ஆம்பளை தான்னு நிருபிச்சிட்டல்ல ண்ணா” என்றாள் சலிப்பான குரலில்.

 

 

நெடுநாளைக்குப் பிறகு.. ஏன் நீள் நெடும் வருடங்களுக்குப் பிறகு அவளின் அண்ணா என்ற அழைப்பில் அவனுக்கும் கண்கள் கலங்கும் போலானது.

 

“ஏண்ணா ஏன் இப்படி பண்ணுன.. இவ்வளவு அமைதியா இருக்காதண்ணா.. உன்னோட குடும்பத்துக்கு நீ தான் பேசனும்.. உன்னோட இந்த அமைதி பாப்பாவும் அவங்க அம்மாவும் நாளைக்கு அந்த வீட்டுக்கு வந்தாலும் அவங்கள நிம்மதியா இருக்க விடாது.. இவ்வளவு நாள்ல உனக்கே புரிஞ்சுருக்கனும்.. எதை தள்ளி வைக்கனும்.. எதுக்காக நாம போராடனும்னு.. புரிஞ்சு உன் குடும்பத்தை காப்பாத்திக்கோ.. நாளைக்கு உனக்குன்னு நிக்க போறது அவங்க மட்டும் தான்.. அந்தக் கிழவி எல்லாம் ஒரு ஆளுன்னு அதை மதிச்சு உன் பொண்ணோட நீ இருக்க வேண்டிய நேரத்தை வேஸ்ட் பண்ணிடாத.. அதுக்கு அப்புறம் நீ எத்தனை கொட்டிக் குடுத்தாலும் அது கிடைக்காது.. இவங்களுக்கு எல்லாம் உன்னையும், பெரியம்மாவையும் அதிகாரம் பண்றதோட சந்தோஷத்த குடுத்துட்டே இருக்காத.. அது உன்ன நம்பி வந்த பொண்ணுக்கும், உனக்கு பிறந்த பொண்ணுக்கும் தான் ஆபத்து” என்று மூச்சு வாங்க அவள் பேசவும்.. அவள் பேச்சில் இருந்த உண்மை அவனையும் சுடத்தான் செய்தது.

 

அவன் பதில் மொழியாது நிற்கவும் சற்றே கோவம் விடுத்து “பெரியம்மா எப்படி இருக்காங்க ண்ணா” என்று கேட்டாள்.

 

“நல்லா இருக்காங்கடா.. ஹர்ஷா நீ இங்க வந்துருக்கேன்னு சொன்னப்ப இருந்து உன்ன பாக்கனும்னு சொல்லிட்டே இருக்காங்க..”

 

“டூ டேஸ் முன்னாடி என்ட்ட ஃபோன்ல பேசும் போதே சொன்னேன் இங்க வந்துட்டேன்னு.. அப்பவே பாக்கனும்னு தான் சொன்னாங்க.. உனக்கு ஃப்ரீ டைம் இருக்கும் போது அவங்கள அனுப்பி வை”

 

‘நான் வர வேண்டாமா’ என்று கேட்கத் துடித்த மனதை அடக்கி அவளிடம் தலையை மட்டும் அசைத்தான் ஆகாஷ்.. எந்த உரிமையில் கேட்பது.. அனைவரும் அவளைக் கைவிட்ட போது, தானும் தனது படிப்பு, வளர்ச்சி என்று சுயநலமாக தவறு என்று தெரிந்தும் அவளது எதிர்ப்புறம் நின்றேனே.. அதற்கான பலன் தான் இன்று தனக்கும் அத்தகைய சூழ்நிலை என்று அவன் மனதே ஒப்புக் கொண்டது.

 

பெரியவர்கள் இருவரது இறுக்கம் எதுவும் தீண்டாத குழந்தை அவர்கள் பேசப்பேச கைதட்டி தன் உற்சாகத்தை வெளிப்படுத்த.. அகம் மலரப் புன்னகைத்த நேத்ராவும் மருமகளைக் கையில் வாங்கி “உன்னைய விட்டுட்டு பேசிட்டமாடி தங்கம்.. உங்கூட நாயம் பேசோனுமா சாமி” என்று கொஞ்சி ஆசை தீர இரு கன்னங்களையும் தன் முத்தத்தால் நிறைத்து.. அவளும் கூச்சத்தோடு குஷியாக அவள் தோள் வரையிலான கூந்தலை இழுத்து விளையாடினாள்.

 

“ஆனா ஒன்னு ண்ணா.. எங்களுக்கு ஒன்னு நடந்தப்ப கேக்கறதுக்கு யாரும் இல்ல.. ஆனா இவளுக்கு இவ மாமா இருக்காரு.. உங்க குடும்பத்தையே என்ன சேதின்னு கேட்டுட்டு.. உன்னைய அப்படியே ஷர்ட் காலரை பிடிச்சு தூக்கிட்டு வந்து அவங்க அக்காட்ட குடுத்துடுவாரு” என்று நேத்ரா சிரிப்புடனே சொல்ல..

 

“துருவனுக்கு இதெல்லாம்…” என்று ஆகாஷ் இழுக்க..

 

“இப்ப வரைக்கும் தெரியாது.. இனியும் என்மூலமா ஒன்னும் தெரியாது.. கொஞ்சம் மாசம் தான்.. அதுக்கப்புறம் நான் கனடா போயி செட்டில் ஆகலாம்னு இருக்கேன்.. திரும்பி இங்க வர்ற ஐடியாவே இல்ல.. என்னோட பிஹெச்டி கம்ப்ளீட் ஆகத்தான் வெயிட்டிங்.. நீயும் இதை இவங்க அம்மாட்ட சொல்லி தேவையில்லாத ப்ராப்ளம்ஸ்ஸ க்ரீயேட் பண்ணாத.. நான் கிளம்புறேன்.. சீக்கிரமா என் மருமகளுக்கு அழகா ஒரு நேம் வைக்கற வழிய பாரு” என்று குழந்தையைக் கொடுத்துவிட்டு அவள் கிளம்பிவிட.. போகும் அவளையே துயரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

 

நேத்ரா எண்ணியபடி அவள் பற்றிய உண்மை வெளிவரும் முன் கிளம்பி விடுவாளா.. அதற்கு துருவன் விடுவானா.. இல்லை உண்மைகள் தெரிய வரும்போது துருவன் என்ன முடிவெடுப்பான் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

*****

 

துருவன் ஊருக்குச் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.. அதில் ஒரு நாளை அவனில்லாமல் கடக்க நேத்ரா சற்றே பழகவேண்டியிருந்தது.. பிடிவாதமாக அவனை நினைக்காமல் இருக்க நினைத்தாள்.. அதில் அவள் எந்தளவு வெற்றி பெற்றாள் என்ற உண்மையை அவள் தான் சொல்ல வேண்டும்.

 

இதில் ரஞ்சித் வேறு அவளைப் பார்க்கும் போதெல்லாம் பார்வையால் சீண்டி அவளை வெறுப்பேற்றும் வேலையைச் செவ்வனே செய்ய ‘இந்த ஓணான் என்னைக்கு அடி வாங்கப் போகுதுன்னு தெரியல’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்.. மறுநாள் வீட்டில் இருந்துவிட்டு.. அடுத்தநாள் அலுவலகம் சென்றாள்.

 

 

ராணி பிங்க் நிறத்திலான சல்வார் கோல்டன் பார்டரோடு அவள்  நிறத்திற்கு அப்படிப் பொருந்தியிருக்க.. தனது நிதானமான நடையுடன் தனது இருக்கையில் அமரப் போக “ஆபிஸ்க்குள்ள ஏன்யா இத்தனை வேகமா நடக்கறீங்க.. நீங்க நடக்கறதப் பாத்தா எனக்கு பதட்டமா வருதே” என்ற குரல் அருகே கேட்க.. சற்றே தலையைத் திருப்பிப் பார்க்க.. தான் பேசியது அவள் காதில் விழுந்துவிட்டது என்று தெரிந்ததும் ஓர் அழகான புன்னகையை உதிர்த்தாள் அந்தப் பெண்.

 

துருவன் இல்லாத வெறுமையோ என்னவோ நேத்ராவால் அந்தப் புன்னகையைக் கடந்து செல்ல முடியாது போக.. அவளும் சிறிதாகப் புன்னகைத்தாள்.

 

“ஹாய்.. ஐம் ஹரிணி” என்றவாறே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

 

“நேத்ரா” என்று இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் மடிக்கணினியைத் திறக்க.. ஹரிணியின் கவனமும் அங்கில்லாமல் விழிகள் அந்த வளாகம் சுழன்று ஒருவனைத் தேடியது.

 

அவள் தேடியவனும் வந்தான்.. ஹரிணையைத் தேடி அல்ல.. நேத்ராவைத் தேடி.

 

நேத்ராவிடம் வந்த கோகுல் வேலை விஷயமாக ஏதோ பேசிவிட்டு.. அருகில் இருந்தவளைப் பொருட்படுத்தாமல் நகர.. அதில் பல்லைக் கடித்து ஹரிணியும் அவன் பின்னேயே சென்றாள்.

 

அலுவகத்தின் மேல் தளத்தில் இருந்த காஃபிடேரியாவிற்கும் அவன் பின்னேயே சென்றவள் அவனைக் காணாது தேட.. ஓர் மூலையில் அமர்ந்தபடியே செயற்கை நீரூற்றின் நடுவே இருந்த வெள்ளை நிற புத்தர் சிலையைப் பார்த்தவாறே தனது காஃபியில் ஆழ்ந்திருந்தான் கோகுல்.

 

அவன் எதிரே சென்று அவள் அமர்வது அவனது கருத்தில் பதிந்தாலும்.. விழிப்பாவை கூட அவளை நோக்கித் திரும்பாது போக.. இவ்வளவு நேரம் இருந்த துள்ளல் அவளிடம் சற்றே குறைந்து “எப்படி இருக்கேன்னு கூடக் கேக்க மாட்டிங்களா” என்று ஏக்கம் ததும்பும் குரலில் கேட்க..

 

அவன் போட்டிருந்த வேலியையும் மீறி அவள் குரல் அவனைத் துளைத்தாலும்.. அதை முகத்தில் காட்டாமல் “பாத்தாலே தெரியுதே பிடிச்ச பைத்தியம் இன்னும் தெளியலைன்னு” என்று அலுப்புடன் சொல்ல..

 

அவன் வார்த்தைகள் அவளை வதைத்தாலும்.. முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை வாடாது “அது எப்பவும் தெளியாது.. அதை அப்பறம் பாக்கலாம்.. இப்போதைக்கு என்னோட வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று கேட்க.. பொறுமையாக விழிகளை அவள் முகத்தை நோக்கித் திருப்பினான் கோகுல்.

 

அதில் பல்லைக் கடித்து “என்ன லுக்.. லாஸ்ட் டைம் மாதிரி இப்பயும் வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டேன்.. டெம்ப்ரரியா அத்தை வீட்ல இருக்கேன்.. எனக்கு பிஜி இல்லைன்னா ஹாஸ்டல் எதாவது பாக்கனும்.. இந்த வீக் என்ட் என்னோட வந்து வீடு தேடிக் குடுங்க” என்று மிரட்ட..

 

“ஆமா.. எனக்கு அதான் வேலை பாரு.. பேசாம எழுந்து ஓடிரு” என அவளை மிரட்டியவாறே கோகுல் அங்கிருந்து கிளம்பத் துவங்க..

 

அவனை மறித்தவள் “அப்படில்லாம் நீங்க எஸ்கேப் ஆக முடியாது பாஸ்.. சன்டே நீங்க என்னோட வர்றீங்க.. இல்ல.. மன்டே மார்னிங் நான் உங்க வீட்டு வாசல்ல லக்கேஜோட நிப்பேன்.. செய்ய மாட்டேன்னு நினைக்காதீங்க.. என்னை பத்தி உங்களுக்கு தெரியும்” என அவன் கையில் இருந்த போனை வாங்கி அவன் முகத்தின் முன்னே காட்டி.. ஓபன் செய்தவள் “ப்ளாக் பண்றிங்களோ துரை.. இனி பேசிக்கறேன்” என அவன் கருப்பி வைத்திருந்த தன் நம்பரை அதிலிருந்து விடுவித்து.. மீண்டும் போனை அவன் கையில் திணித்துவிட்டு அவள் விலகி நடக்க.. அவள் செய்கையில் கிளர்ந்த புன்னகையுடன் “இம்சை” என்று முணுமுணுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றான் கோகுல்.

 

****

 

“சோ.. உனக்கு இப்ப ஆகாஷ் மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சு.. உன் அக்காவ அங்க திருப்பி அனுப்ப உனக்கு நோ அப்ஜக்ஷன் இல்லையா” என்று செல்வரத்தினம் கேட்க.. யோசனையுடனே நின்றான் துருவன்.

 

அமைச்சர்கள் உடனான தொழில் முறைப் பயணம் முடிந்து அவரும் இப்போது தான் வீடு திரும்பியிருக்க.. ஓய்வு எடுத்த பின் பேசலாம் என்ற மனைவியின் பேச்சையும் மீறி மகனையும் அழைத்து அலுவலக அறையில் பேசிக் கொண்டிருத்தார் செல்வரத்தினம்.

 

மூன்று முறை தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினராகவும், ஒரு முறை கனிம வளத்துறை அமைச்சராகவும் இருந்து.. தற்போது பதவி அரசியலில் இருந்து ஒதுங்கி கட்சி அரசியலில் கவனம் செலுத்தி வரும் அறுபது வயது இளைஞர் அவர்.

 

அரசியல், தன் கட்சி, அது கொடுத்த வளம், வாழ்வு அனைத்தையும் மீறி குடும்பம் மட்டுமே அவரது முதல் போதை.. எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் அதை இரண்டாம் பட்சமாகத் தூக்கி ஓரம் வைத்துவிட்டு குடும்பத்தை நோக்கி ஓடி விடுவார் மனிதர்.

 

“சொல்லுப்பா.. பேசாமையே நின்னா என்ன அர்த்தம்”

 

“இவ்வளவு நடந்தும் நீங்க தலையிடாம இருக்க என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான் ப்பா” என்ற மகனை சிறு புன்னகையுடன் ஏறிட்ட ரத்தினம்.. அவன் தோள் தட்டி “நீ இதுல என்ன பண்றேன்னு பாக்க நான் ஜஸ்ட் ஓரமா நின்னேன்.. ஒதுங்கி நிக்கல.. ஆனா நான் உன்மேல வச்ச நம்பிக்கையை நீ காப்பாத்திட்ட” என்றார்.

 

“அந்த ஃபேமிலில எனக்கு இப்பயும் இஷ்யூ இருக்கு தான்.. ஆனா ஆகாஷ் மாமா, பார்த்திபன் அங்கிள் இவங்க எல்லாரோட அப்ரோச் தாண்டி எனக்கு அக்காவோட சந்தோஷம் தான் வேணும் ப்பா.. கொஞ்ச நேரம் மாமா இங்க வந்தா கூட அவரையும் பாப்பாவையும் சேர்த்து அவ்வளோ பிக் எடுத்து வச்சுக்கறா.. அவ அவரை ரொம்ப மிஸ் பண்றாப்பா”

 

மகள் மேல் மகன் கொண்ட பாசம் திருப்தியைக் கொடுத்தாலும் “என்ட்டயும் பார்த்திபன் பேசினார்ப்பா.. பாப்போம்.. எப்ப நேமிங் செரிமனி வச்சுக்கலாம்னு பெரிய மனுஷன் முடிவு பண்ணிருக்கீங்க” என்று கிண்டலாகக் கேட்க..

 

“பாப்போம்” என அவர் போலவே அவனும் சொல்லிச் செல்ல.. மகனைக் கண்ணில் நிரப்பியபடியே உறங்கச் சென்றார் ரத்தினம்.

 

துருவனும் அதை யோசித்தபடியே உறங்க ஆயத்தமாக.. அவன் ஃபோன் இசைத்தது.. அதில் வந்த எண்ணைக் கண்டு குழம்பியவன்.. ஏற்று காதில் வைக்கவும்.. மறுபுறம் சொல்லப்பட்ட செய்தியில் விழுந்தடித்து வெளியே ஓடினான்.

 

துணையாவான்..

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்