Loading

“அனு…………..” என்ற சாருமதியின் கத்தலில் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்தாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி, “என்னாச்சு? என்னாச்சு? யாரு செத்துட்டாங்க?” என அரைத் தூக்கத்தில் பதட்டமாகக் கேட்க, அவள் முகத்தில் உடையை விட்டெறிந்த சாருமதி, “நான் குளிக்க போக முன்னாடி உன்ன எழுப்பாட்டிட்டு தானே போனேன்… நீ என்னன்னா திரும்ப தூங்கிட்டு இருக்க…” என்றாள் கோபமாக.

 

“ப்ச்…” என மீண்டும் போர்வையால் முகத்தை மூடியபடி அனுபல்லவி தூங்கவும் சாருமதி குளியலறையில் இருந்து ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து வந்து வஞ்சகமே இன்றி அனுபல்லவியின் மீது ஊற்றவும், “ஐயோ… அம்மா…” எனப் பதறித் துடித்துக்கொண்டு எழுந்தாள் அனுபல்லலி.

 

சாருமதியின் கரத்தில் இருந்த பாக்கெட்டைக் கண்டு அனுபல்லவி அவளை ஏகத்துக்கும் முறைக்க, அவளுக்கு சமமாய் பதிலுக்கு முறைத்த சாருமதி, “புது ப்ராஜெக்ட் மேனேஜர் வந்து இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் டே… போர்ட் மீட்டிங் வேற இருக்கு மறந்துட்டியா?” என்கவும் அதிர்ந்து தலையில் கை வைத்த அனுபல்லவி இன்னும் தன் தோழி தன்னை முறைத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

எவ்வளவு வேகமாகக் குளித்தும் அரை மணி நேரத்திற்கு மேல் கடந்திருக்க, வேகமாகக் குளியலறைக் கதவைத் தட்டிய சாருமதி, “அனு… இம்பார்டன்ட் ஃபைல் ஒன்ன சப்மிட் பண்ண வேண்டி இருக்கு டி..‌. நேத்து கொடுக்க மறந்துட்டேன்… சோ நான் முன்னாடி போறேன்… லேட் ஆகிடுச்சு… நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு போறேன்… நீ பஸ் பிடிச்சி வா…” என்றவள் அனுபல்லவி, “ஹேய் சாரு… இரு டி‌… எனக்கு தனியா பஸ்ல போய் பழக்கம் இல்ல டி… சாரு…” எனக் கத்தக் கத்தக் கேட்காது அங்கிருந்து சென்றாள்.

 

சாருமதி சென்றதும் உதட்டைப் பிதுக்கிய அனுபல்லவி, “உனக்கு இன்னைக்கு நேரம் சரி இல்ல டி அனு… எல்லாம் அவரால தான்… நீ எதுக்கு நைட் ஃபுல்லா அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்த?” எனத் தன்னையே கேட்டுக்கொள்ள, ‘இன்னும் நீ கிளம்பாம லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கியா?’ என்ற மனசாட்சியின் கேள்வியில் தன்னிலை அடைந்து அவசரமாக குளித்து உடை மாற்றி விட்டு பேரூந்தைப் பிடிக்க ஓடினாள்.

 

அனுபல்லவியும் சாருமதியும் ஒரே நாளில் தான் வேலையில் சேர்ந்தனர். அதனால் தான் என்னவோ இருவருக்கும் இடையிலும் அனைத்தும் பொருந்திப் போகும். சில நாட்களிலே இருவரும் உயிர்த்தோழிகள் ஆக மாறினர். ஒன்றாகவே தங்கியும் இருந்தனர். எப்போதும் வேலைக்குச் செல்லும் போது இருவரும் ஒன்றாகத் தான் ஸ்கூட்டியில் செல்வர். அதனால் அனுபல்லவிக்கு இதுவரை பேரூந்தில் சென்று பழக்கம் இல்லை.

 

பேரூந்துத் தரிப்பிடத்தில் பேரூந்து வரும் வரை காத்திருந்த அனுபல்லவிக்கு லேசாக பயமாக இருந்தது. இருந்தும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாது பேரூந்துக்காக காத்திருந்தாள். முதல் இரண்டு பேரூந்திலும் சன நெரிசல் என்று ஏறாமல் இருந்த அனுபல்லவி நேரம் வேறு செல்லுவதால் வேறு வழியின்றி அடுத்து வந்த பேரூந்தில் ஏறினாள்.

 

அதிலும் கூட்டமாக இருக்கவும் நின்று கொண்டே பயணித்தாள். அனுபல்லவியின் அருகில் நின்ற ஒரு ஆடவன் வேண்டும் என்றே அவள் உடலில் உரச, முதலில் அதை கண்டு கொள்ளாமல் தள்ளி நின்றவள் மேலும் மேலும் அவன் அதையே செய்யவும் ஏற்கனவே ஆஃபீஸுக்கு தாமதமாகி உள்ள கடுப்பில் திரும்பி அவனை முறைத்தவள் ஓங்கி அவன் காலை மிதிக்கவும் அவனின் கண்கள் அதிர்ச்சியிலும் வலியிலும் வெளியே தெறித்து விடும் அளவு விரிந்தன.

 

பேரூந்தில் குழப்பத்தை ஏற்படுத்தாது இருக்க அவனின் முகத்தின் முன் விரல் நீட்டிய அனுபல்லவி, “என்ன? நீ வேணும்னே தெரியாத மாதிரி வந்து வந்து உரசுவாய்… மத்த பொண்ணுங்களை போல நானும் வேற வழி இல்லாம அமைதியா போவேன்னு நினைச்சியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன் மகனே… மரியாதையா நீயே பஸ்ஸ விட்டு இறங்கி ஓடிடு… இல்ல தர்ம அடி வாங்கி தருவேன்…” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியான குரலில் மிரட்டவும் அடிக்குப் பயந்து நடத்துனரிடம் பேரூந்தை நிறுத்தக் கூறி இறங்கி ஓடினான்.

 

ஒரு வழியாக ஒரு மணி நேரம் பிந்தி ஆஃபீஸை அடைந்த அனுபல்லவி நேரத்தைப் பார்த்து அதிர்ந்தவள் மீட்டிங் நடக்கும் ஹாலை நோக்கி ஓடி மூச்சிறைக்க நிற்கவும் அவளை கேள்வியாகப் பார்த்தான் பிரணவ்.

 

அனுபல்லவிக்கு முன்னதாகவே ஆஃபீஸ் வந்த சாருமதி அவள் முடிக்காமல் இடையில் விட்டிருந்த வேலையை செய்து முடிக்க, சற்று நேரத்திலேயே மீட்டிங் ஆரம்பமானது.

 

ஏதோ புதிய ப்ராஜெக்ட் பற்றி பிரணவ் விளக்கிக் கொண்டிருக்க, சாருமதியோ அடிக்கடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் தோழியின் வருகையை எதிர்ப்பார்த்து.

 

திடீரென, “மிஸ் சாருமதி…” என்ற பிரணவ்வின் கோபக் குரலில் சாருமதி பதறி எழுந்து நிற்க, “நான் இப்போ சொன்னதை இவங்களுக்கு புரியிற மாதிரி எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க…” என அழுத்தமான குரலில் கூறவும், “சா…சார்…‌ அ…அது…” என சாருமதியின் நா தந்தி அடித்தது.

 

பிரணவ், “இது தான் நீங்க மீட்டிங்கை கவனிக்கிற லட்சணமா? வேலை பார்க்க வந்தீங்களா? இல்ல வேடிக்கை பார்க்க வந்தீங்களா? ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்லன்னா இப்பவே கிளம்புங்க…” எனக் கோபமாகக் கூறவும் தலை குனிந்த சாருமதி, “சாரி சார்…‌” என்க, “சிட் டவுன்…”‌என்ற பிரணவ்வின்‌ அழுத்தமான குரலில் அவசரமாக அமர்ந்து கொண்டாள் சாருமதி.

 

பிரணவ் மீண்டும் பேச ஆரம்பிக்கவும் தான் மூச்சிறைக்க ஓடி வந்தாள் அனுபல்லவி.

 

தன் கைக் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு பிரணவ் அனுபல்லவியைக் கேள்வியாக நோக்க, “சாரி சார்… அது… பஸ் மிஸ் ஆகிடுச்சு…” என அனுபல்லவி தயங்கிக் கொண்டே கூற, பெருமூச்சு விட்டான் பிரணவ்.

 

‘பாவம் அனு… ஆல்ரெடி பாஸ் செம்ம கோவத்துல இருக்கார்… இவ வேற நேரம் காலம் தெரியாம வந்து மாட்டிட்டா…’ என தோழிக்காக மனதில் வருத்தப்பட்டாள் சாருமதி.

 

பிரணவ், “இது என்ன ஸ்கூலா காலேஜா?” என அமைதியாக வினவவும் புரியாமல் முழித்த அனுபல்லவி, “சார்…” என இழுக்கவும் பிரணவ், “ஸ்கூல் பசங்க போல பஸ் மிஸ் பண்ணிட்டேன்னு ரீசன் சொல்றீங்க… நேத்தே ஆகாஷ் மீட்டிங் பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டார் தானே… கொஞ்சம் கூட பன்க்சுவாலிட்டி இல்லயா? இப்படி தான் டெய்லி ஆஃபீஸுக்கு ஆடி அசைஞ்சி வருவீங்களா?” எனக் கேட்டான் கடுமையாக.

 

பிரணவ்வின் கோபமான பேச்சில் அனுபல்லவியின் கண்கள் கலங்கி விட, பிரணவ்வோ அதனைக் கொஞ்சம் கூட கருத்திற் கொள்ளாது, “கெட் அவுட்…” என வெளியே கை காட்டவும் அதிர்ந்த அனுபல்லவி, “சாரி சார்… நான்…” என ஏதோ கூற வரவும், “ஐ செய்ட் கெட் அவுட்…” எனக் கத்தினான் பிரணவ்.

 

அதில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனுபல்லவியின் கன்னம் தாண்டி வடிய, அழுதுகொண்டே தன் இடத்திற்கு சென்றாள் அனுபல்லவி.

 

சாருமதி தோழியை எண்ணி கலங்க, பிரணவ்வோ, “இது தான் ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட்டா இருக்கணும்… இனிமே மீட்டிங் இருந்தா கரெக்ட் டைமுக்கு எல்லாரும் அட்டன்ட் பண்ணணும்…” என்று விட்டு தன் பாட்டில் மீண்டும் மீட்டிங்கைத் தொடங்கினான்.

 

இங்கு தன் இடத்திற்கு வந்த அனுபல்லவியோ பிரணவ்வின் கோபத்தில் கண் கலங்க அமர்ந்து இருந்தாள்.

 

அனுபல்லவி, “எதுக்கு அவ்வளவு கோவப்படுறார்? அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்? ஒரே ஒரு நாள் தானே லேட் ஆகினேன்…” என மூக்கு உறிஞ்சி உறிஞ்சி தன்னையே கேட்டுக்கொள்ள, ‘நீ இன்னைக்கு மட்டுமா லேட்?’ என அனுபல்லவியின் மனசாட்சியே அவளுக்கு எதிராக சதி செய்தது.

 

“அதுக்காக எல்லார் முன்னாடியும் வெச்சி அப்படி திட்டலாமா?” என அனுபல்லவி மூக்கை உறிஞ்ச, ‘இப்போ உனக்கு அவர் உன்னை திட்டினது பிரச்சினையா? இல்ல எல்லார் முன்னாடியும் வெச்சி திட்டினது பிரச்சினையா?’ எனக் கேட்டது மனசாட்சி.

 

அனுபல்லவி, “ம்ம்ம்ம்… தெரியல… அவரை அன்னைக்கு ஆக்சிடன்ட் அப்போ காப்பாத்தினதுக்காகவாவது கொஞ்சம் பாசமா பேசலாம் இல்லையா? பாசமா எதுக்கு? இப்படி திட்டாம இருக்கலாமே…” என மீண்டும் கண் கலங்க, ‘அட அறிவுக் கொழுந்தே… நீ காப்பாத்தினது அவருக்கு எப்படி தெரியும்? நீ சொன்னியா? அது மட்டும் இல்லாம இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கூட உன்னை திட்டி இருக்கார்ல… அப்போ எல்லாம் நீ இப்படி அழுதுட்டு இருக்கலயே…’ என மனசாட்சி சரியான பாய்ன்ட்டைப் பிடிக்கவும், “அ…அது… அது…” என என்ன கூறுவது எனத் தெரியாது விளித்தாள்.

 

அப்போது அனுபல்லவிக்கு அருகில் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் அதிர்ந்து திரும்ப, அவளுக்கு பின்னே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி நின்றிருந்தான் பிரணவ்.

 

அனுபல்லவி, “சார்…” என எழுந்து நிற்க, “கம் இன் டு மை கேபின்…” என்று விட்டு சென்றான்.

 

பிரணவ் சென்றதும் அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், ‘நான் தனியா உளறினதை கேட்டு இருப்பாரோ… ச்சே ச்சே இருக்காது…’ என சிந்தித்துக் கொண்டிருக்க, மீட்டிங் முடிந்து வந்த சாருமதி அனுபல்லவியின் தோள் தொடவும் தன்னிலை அடைந்தாள்.

 

அனுபல்லவியை அணைத்துக்கொண்ட சாருமதி, “சாரி டி அனு… என்னால தான் நீ வீணா சார் கிட்ட திட்டு வாங்கின… நான் மட்டும் உன்ன விட்டுட்டு வரலன்னா நீ எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கி இருக்க வேணாம்…” என்று வருத்தப்படவும் புன்னகைத்த அனுபல்லவி, “ப்ச்… சாரு… என்ன இது? நீ என்ன வேணும்னா என்ன விட்டுட்டு வந்த? அடுத்தது இதுல உன் தப்பு எதுவும் இல்ல டி… நான் தானே லேட்டா எழுந்திரிச்சேன்… சரி அதை விடு… லேட் ஆகிடுச்சுன்னு ஓடி வந்தது டயர்டா இருக்கு டி… எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வந்து வைக்கிறியா? நான் போய் ப்ராஜெக்ட் மேனேஜரை பார்த்துட்டு வரேன்…” என்று விட்டு சென்றாள்.

 

லேப்டாப்பில் மூழ்கி இருந்த பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், “யேஸ் கம் இன்…” என்கவும் தயக்கமாக உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ் இன்னுமே லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமல் இருக்கவும் தொண்டையைச் செறுமி தன் இருப்பை உணர்த்தினாள்.

 

அதில் அனுபல்லவியை நிமிர்ந்து பார்த்த பிரணவ் தனக்கு முன் இருந்த இருக்கையைப் பார்வையால் காட்டி அமருமாறு சைகை செய்ய, ‘வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சி இருக்கார்? வாய திறந்து பேசினா அப்படியே முத்து உதிர்ந்திடும்…’ என அனுபல்லவி மனதில் பிரணவ்வை வருத்து எடுத்துக்கொண்டே அவன் காட்டிய இருக்கையில் அமர, “என்ன? திட்டி முடிச்சிட்டீங்களா என்னை?” என்ற பிரணவ்வின் குரலில் அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

 

அனுபல்லவி, “சா…ர்…” எனத் தடுமாற, அவளைக் கேள்வியாக நோக்கிய பிரணவ், “உட்காருங்க மிஸ் பல்லவி…” என்கவும் அனுபல்லவியின் மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு.

 

‘பல்லவி…’ என அனுபல்லவி தன் பெயரையே மனதில் மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, மேசையில் தட்டி அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய பிரணவ், “என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க பல்லவி? சொன்னது புரியலயா?” என்கவும் தான் அவசரமாக பிரணவ் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

 

பிரணவ் லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து ப்ரின்ட் எடுத்து அனுபல்லவியிடம் வழங்க, ‘லேட்டா வந்ததுக்கு எம்.டி கிட்ட சொல்லி என்னை வேலையை விட்டு தூக்க போறாரோ?’ என யோசித்த வண்ணம் அதனை வாங்கிப் படித்த அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

அனுபல்லவி, “சார்…” என இழுக்க, “புரிஞ்சிதா மிஸ் பல்லவி? என்ன போட்டு இருக்கு?” எனக் கேட்டான் பிரணவ்.

 

“ப்ராஜெக்ட் பத்தி சார்…” என்ற அனுபல்லவியிடம், “ஹ்ம்ம்… உங்களோட ஓல்ட் ப்ராஜெக்ட் வர்க்ஸ் பத்தி பார்த்தேன் நான்… இந்த நியூ ப்ராஜெக்ட்ல நம்ம டீம்ம லீட் பண்ண போறது நீங்க தான்… டுமோரோ இன்னொரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணி மத்த டீம் மேட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்றேன்… அதுவரை இதை பத்தி யார் கிட்டயும் சொல்ல வேணாம்… உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா ஆகாஷ் கிட்ட கேட்டுக்கோங்க…” என பிரணவ் கூறவும் அனுபல்லவி சம்மதமாகத் தலையசைக்க, “அப்புறம் இன்னொரு விஷயம்… இனிமே ஆஃபீஸுக்கு லேட் பண்ணாம வரப் பாருங்க… லீடர்ஷிப் அப்படிங்கிறது சாதாரண விஷயம் இல்ல… நிறைய பொறுப்பு இருக்கு அதுல… உங்கள பார்த்து தான் உங்களுக்கு கீழ இருக்குறவங்க இயங்குவாங்க…” என்றான் பிரணவ்.

 

அனுபல்லவி, “சாரி சார்… இனிமே ஒழுங்கா நடந்துக்குறேன்…” என்று விடை பெற்றாள்.

 

அனுபல்லவி சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்த பிரணவ்வின் கண் முன் மீண்டும் அந்த மங்கலான முகம் தெரிய, தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

 

ஏதோ யோசனையுடனே வந்த அனுபல்லவியைப் பார்த்து புருவம் சுருக்கிய சாருமதி, “என்னாச்சு அனு? சார் திரும்ப திட்டிட்டாரா?” என வருத்தத்துடன் கேட்கவும் புன்னகைத்த அனுபல்லவி, “இல்ல சாரு…” என்று பிரணவ் தந்த ஃபைலைக் காட்டினாள்.

 

அதனை வாங்கிப் படித்த சாருமதி மகிழ்ச்சியில் அனுபல்லவியைக் அணைத்துக்கொண்டு, “ஹே சூப்பர் டி அனு…” என்க, “என்னால முடியுமா சாரு? எனக்கு பயமா இருக்கு…” என்றாள் அனுபல்லவி கவலையாக.

 

அவளின் தோளில் தட்டிக் கொடுத்த சாருமதி, “அனு… இது உன் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம்… உன்னோட ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் வேற… உன்ன நம்பி சார் இந்த ப்ராஜெக்ட்டை ஒப்படைச்சி இருக்கார்… நீ இதை சக்சஸ்ஃபுல்லா முடிச்சு காட்டு…” என அனுபல்லவியை ஊக்குவிக்கவும் முகம் மலர்ந்தாள் அனுபல்லவி.

 

மறுநாள் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மீண்டும் எதற்காக ஒரு மீட்டிங் என அனைவரும் புரியாமல் விளிக்க, சாருமதியும் அனுபல்லவியும் எதையும் காட்டிக்கொள்ளாது அமைதியாக இருந்தனர்.

 

பிரணவ் வந்ததும் அனைவரும் அமைதியாக, “குட் மார்னிங் எவ்ரியோன்… திரும்ப எதுக்கு இந்த மீட்டிங்னு நீங்க யோசிக்கிறது புரியுது… நேத்து நான் நியூ ப்ராஜெக்ட் பத்தி எல்லாமே சொன்னேன்… எங்களுக்கு வன் மந்த் தான் டைம் இருக்கு.‌‌.. டெட்லைனுக்கு முன்னாடி கரெக்ட்டா ப்ராஜெக்ட்டை முடிக்கணும்… இந்த ப்ராஜெக்ட்டை மட்டும் நாங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சோம்னா இதுக்கு அப்புறம் பெரிய பெரிய ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்க சான்ஸ் இருக்கு… சோ இந்த ப்ராஜெக்ட் ஃபுல்லா உங்களை கைட் பண்ண ஒரு டீம் லீடர் அவசியம்…” என்கவும் வழமையாக டீம் லீடராக இருக்கும் அர்ச்சனா ஆவலுடன் எழுந்துகொள்ள, “மிஸ் பல்லவி தான் உங்களை லீட் பண்ண போறாங்க…” எனப் பிரணவ் கூறவும் சாருமதி கை தட்ட, புன்னகையுடன் எழுந்து நின்றாள் அனுபல்லவி.

 

பிரணவ் அனுபல்லவியின் பெயரைக் கூறவும் அர்ச்சனாவின் நண்பர்கள் அவளைக் கேலியாகப் பார்க்க, அதனைக் கண்டு உள்ளம் கொதித்தவள் அனுபல்லவியின் மீது வன்மம் கொண்டாள்.

 

பிரணவ் வந்த அன்றிலிருந்தே அர்ச்சனாவிற்கு அவன் மீது ஒரு கண். இப்போது டீம் லீடர் தெரிவு செய்யும் போது முதல் ஆளாக எழுந்ததே அவனுடன் அதிக நேரம் செலவழித்து நெருக்கமாக வேண்டும் என்று தான்.

 

ஆனால் பிரணவ் அனுபல்லவியை டீம் லீடராகத் தெரிவு செய்யவும் ஆத்திரம் அடைந்தவள் இருக்கையில் பட்டென்று அமர, பிரணவ்வோ ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

 

“மிஸ் பல்லவி இனிமே உங்களை லீட் பண்ணுவாங்க… ஆல்ரெடி நான் உங்களுக்கு ப்ராஜெக்ட் பத்தி சொல்லி இருக்கேன்… அதனால எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நம்புறேன்… ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா நீங்க மிஸ் பல்லவி கிட்ட கேட்கலாம்…” என அனைவருக்கும் பொதுவாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் புறம் திரும்பி, “மிஸ் பல்லவி… நீங்க இந்த வன் மந்த்தும் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ண வேண்டி வரும்… டீம் மெம்பர்ஸுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தா அதை என்னன்னு கேட்டு நீங்க க்ளியர் பண்ணுங்க… முடியாத பட்சத்துல என்னை வந்து பாருங்க…” எனக் கட்டளை பிறப்பித்தான்.

 

அவனின் ஆளுமையில் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்தாள் அனுபல்லவி.

 

பிரணவ், “ஓக்கே காய்ஸ்… சியர் அப்… எல்லாரும் ஃபுல் கோர்டினேஷன்ல இந்த ப்ராஜெக்ட்டை சக்சஸா முடிக்கலாம்… இன்னைக்கே வேலையை ஆரம்பிங்க… ஆல் தி பெஸ்ட் காய்ஸ்…” எனப் புன்னகையுடன் கூறவும் அனைவரின் பார்வையும் ஒரே விதமாக இருந்தது, ‘இவனுக்கு சிரிக்கவும் தெரியுமா?’ என்று.

 

அர்ச்சனா கோபத்தில் மீட்டிங் ஹாலில் இருந்து முதல் ஆளாக வெளியேற, மற்றவர்களும் சென்றதும் தலையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் பிரணவ்.

 

இன்று காலையில் இருந்தே அவனுக்கு அடிக்கடி அந்த விபத்து நடந்த விதமும் அந்த மங்கலான முகமும் நினைவுக்கு வந்து அவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

 

கண்களை அழுத்த மூடி தலையை இரு புறமும் ஆட்டி பிரணவ் தன் வலியைக் கட்டுப்படுத்த முயல, அது குறைந்த பாடில்லை.

 

பல முறை தட்டியும் உள்ளிருந்து பதில் வராததால் வேறு வழியின்றி கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ்வின் நிலையைக் கண்டு அதிர்ந்தவள், “சா…சார்… என்னாச்சு? சார்…” என அவனை உலுக்க, பிரணவ்வோ பதில் கூறாது வலியில் துடித்தான்.

 

அனுபல்லவி, “என்னாச்சு சார்? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்…” என்கவும் மறுப்பாகத் தலை அசைத்த பிரணவ் அனுபல்லவியின் கரத்தை அழுத்தமாகப் பற்றி தன் வலியைக் குறைக்க முயல, பிரணவ்வின் இறுக்கமான பிடியில் அனுபல்லவி வலியில் முகம் சுருக்கினாலும் அவனின் வலியையும் அதன் மூலம் உணர்ந்து கொண்டாள்.

 

“வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம்…” என அனுபல்லவி மீண்டும் அழைத்தும் மறுத்தவன் தன் பிடியை விடாது, “ஆ…ஆகாஷை… கூப்பிடுங்க…” என்றான் பிரணவ்.

 

பிரணவ்வின் நிலையைக் கண்டு கண் கலங்கிய அனுபல்லவி மறு கரத்தால் தன் கைப்பேசியை எடுத்து ஆகாஷிற்கு தகவல் தெரிவித்தாள்.

 

அவன் வந்ததும், “தேங்க்ஸ்ங்க… சாரை நான் பார்த்துக்குறேன்… நீங்க கிளம்புங்க… ஆஹ் அப்புறம்… இது வெளியே யாருக்கும் தெரிய வேணாம்…” என ஆகாஷ் பிரணவ்வின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகக் கூற, அனுபல்லவி புரிந்து கொண்டதாய் தலை அசைக்கவும் பிரணவ்வை அழைத்துக்கொண்டு வேறு வழியாக வெளியேறினான் ஆகாஷ்.

 

பிரணவ்வின் தலை மறையும் வரை அவன் சென்ற திசையையே கண்ணீருடன் நோக்கிக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

 

************************************

 

“ஹஹஹா… எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்க… அன்னைக்கு அந்த பிரணவ்வை லாரி வெச்சி தூக்க பிளான் போட்டும் அவன் தப்பிச்சிட்டான்… ஆனா அதை விட பெரிய நியூஸ் இப்போ கிடைச்சிருக்கு… இது மூலமா அந்த பிரணவ் அவமானத்துல வெந்து சாகணும்…” என்றான் அவன் ஆத்திரத்துடன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்