Loading

அன்று பிரணவ்வின் ஒரே நண்பனான அபினவ்வினதும் அவனது சகோதரன் ஆதர்ஷினதும் திருமணம்.

 

ஆனால் பிரணவ்வோ திருமணத்திற்கு செல்லாது ஆஃபீஸில் வேலையாக இருக்க, அனுமதி கேட்டு விட்டு அவன் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், “பாஸ்… அபினவ் சார் கல்யாணத்துக்கு நீங்க போகலயா?” எனக் கேட்கவும் தலை நிமிராமலே இல்லை எனத் தலையசைத்தான் பிரணவ்.

 

ஒரு நிமிடம் தயங்கி விட்டு, “அபினவ் சார் காலைல இருந்து நிறைய தடவை எனக்கு கால் பண்ணிட்டார் நீங்க அவர் கால் அட்டன்ட் பண்ணலன்னு… நான் நீங்க மீட்டிங்ல இருக்குறதா சொல்லி சமாளிச்சேன்…” என ஆகாஷ் கூறவும் பிரணவ் அதே போல தலையை நிமிர்த்தாமலே, “ஓஹ்… நான் கவனிக்கல…” எனக் கூறும் போதே அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

 

அபினவ் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்காமல் கைப்பேசித் திரையையே வெறித்த பிரணவ் ஆகாஷ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டவன் வேறு வழியின்றி அழைப்பை ஏற்றான்.

 

“டேய்… எங்கடா இருக்க… நீ எங்க கல்யாணத்துக்கு வருவியா மாட்டியா?” என அழைப்பின் மறுபக்கத்தில் இருந்த அபினவ் எடுத்ததுமே கோபமாகக் கேட்க,

 

“சாரிடா அபி… நான் வரலடா… ஆதர்ஷ் கிட்டயும் சாரி கேட்டதா சொல்லு…”  என பிரணவ் பதிலளிக்கவும்,

 

அபினவ், “அப்படி என்ன பிரச்சினைடா உனக்கு? ஃப்ரெண்டு ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொன்னியா? எங்க கல்யாணத்துக்கு கூட உன்னால வர முடியாதா?” என்கவும் சில நொடி அமைதி காத்த பிரணவ்,

 

“நான் அங்க வந்தா தாரா கஷ்டப்படுவா அபி… அவ ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்… என்னைப் பார்த்தா அவ மூடே ஸ்பாய்ல் ஆகிடும்டா…” என்றான்.

 

மறுபக்கம் கைப்பேசி கை மாறும் சத்தம் கேட்க, “பிரணவ்… இன்னைக்கு மினியோட ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டுமில்ல மேரேஜ்… உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் தான்… நீங்க வாங்க… என் மினிக்காக நீங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க…” என்க, 

 

“இல்ல ஆர்யான்… நான் வந்தா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்… ப்ளீஸ்… என்னைக் கம்பில் பண்ணாதீங்க…” என மறுத்த பிரணவ்விற்கு ஆர்யானின் என் மினியில் இருந்த அழுத்தம் புரியாமல் இல்லை.

 

அபினவ், ஆதர்ஷ், ஆர்யான் என மூவருமே மாறி மாறி பிரணவ்விடம் எவ்வளவு கெஞ்சியும் முடியாது என உறுதியாகவே மறுத்து விட்டான் பிரணவ்.

 

வேறு வழியின்றி அபினவ்வும் கோபமாக அழைப்பைத் துண்டித்து விட, இன்னும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்து புருவம் உயர்த்தி கண்களாலே என்ன எனக் கேட்டான்.

 

ஆகாஷ், “பாஸ்… சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… அபினவ் சார் கல்யாணத்துக்கு போனா உங்களுக்கும் கொஞ்சம் மனசுக்கு சேன்ஜா இருக்கும்…” என்க, ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், “ஆல்ரெடி குற்றவுணர்ச்சில இருக்கேன் ஆகாஷ்… அந்த கல்யாணத்துக்கு போனா என் கடந்த காலத்தை திரும்ப பார்க்க வேண்டி வரும்… அது என்னை இன்னும் குற்றவுணர்ச்சில தான் ஆழ்த்தும்… எவ்வளவு தூரம் என் பாஸ்ட்ட விட்டு விலகி ஓட முடியுமோ அவ்வளவு தூரம் போக விரும்புறேன்…” என ஒரு நிமிடம் இடைவெளி விட்டவன், “அதனால தான் அப்பா கிட்ட எங்க பெங்களூர் பிரான்ச்ச பொறுப்பெடுக்க பர்மிஷன் வாங்கி இருக்கேன்… பட் யாருக்கும் நான் தான் அங்க எம்.டினு தெரிய போறது இல்ல… ஜஸ்ட் ப்ராஜெக்ட் மேனேஜரா தான் போக போறேன்…இன்னும் வன் மந்த்ல அங்க போக வேண்டி வரும்…” என்கவும், “பாஸ்…” என நெஞ்சில் கை வைத்து அலறி விட்டான் ஆகாஷ்.

 

ஆகாஷின் அதிர்ந்த முகத்திலே அவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பிரணவ், “பயப்படாதீங்க ஆகாஷ்… உங்களுக்கு வேலை போகாது… நீங்களும் என்னோட பெங்களூர் வரீங்க…” எனப் புன்னகையுடன் கூறவும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆகாஷ், “ஒரு நிமிஷம் பயந்துட்டேன் பாஸ்…” என்க, “இன்னும் ஏதாவது இருக்கா?” எனக் கேட்டான் பிரணவ்.

 

ஆகாஷ் இல்லை என இட வலமாகத் தலையசைக்க, “அப்போ…” என கண்களாலே கதவைக் காட்டினான் வெளியேறுமாறு.

 

“ஆஹ்… ஆஹ்… யேஸ் பாஸ்…” என உடனே பிரணவ்வைப் பார்த்து ஆகாஷ் சல்யூட் அடிக்கவும் பிரணவ் அவனை வேற்றுக்கிரக ஜந்து போல் நோக்க, தன் செயல் புரிந்து அவசரமாகக் கையைக் கீழே போட்ட ஆகாஷ் பிரணவ்வைப் பார்த்து இளித்து விட்டு வெளியே ஓடி விட்டான்.

 

பிரணவ் தான், ‘பைத்தியமா இவன்?’ என்ற ரீதியில் பார்த்து விட்டு தோளைக் குலுக்கினான்.

 

************************************

“ஹேய் காய்ஸ்… ஒரு குட் நியூஸ்… நம்ம டீமுக்கு புது ப்ராஜெக்ட் மேனேஜர் வரப் போறாங்க… சென்னை பிரான்ச்ல இருந்து ட்ரான்ஸர் ஆகி வரார்… இனிமே அந்த சிடுமூஞ்சி சிங்காரம் கிட்ட வீணா திட்டு வாங்க வேண்டிய அவசியமில்ல…” என மாலதி உற்சாகமாகக் கூறவும், 

 

“ப்ச்… அடப்போம்மா நீ வேற… இப்போ வரப் போறவன் கூட இந்த சிடுமூஞ்சி சிங்காரத்த போலவே ஓல்ட் பீஸ் ஒன்னா இருக்கும்… எப்படியும் நம்மள திட்ட தான் போறார்… ஏனா நம்ம முக ராசி அப்படி…” என்றாள் சாருமதி சலிப்பாக.

 

அதனைக் கேட்டு அனு உதட்டை மடித்து சிரிக்க, “அதான் டி இல்ல சாரு… இப்போ வரப் போறவர் யூத்… செம்ம ஹேன்ட்சம்மா இருப்பார்… நான் ஒரு தடவை அவரை மீட்டிங் ஒன்னுல பார்த்து இருக்கேன்…” என மாலதி கூறவும் சாருவின் கண்கள் பளிச்சிட, “ஹேய்… ஹேய் மாலு… சொல்லுடி அவரைப் பத்தி… ஆள் பார்க்க எப்படி இருப்பார்? எனக்கு மேட்ச்சா இருப்பாரா?” என ஆர்வமாகக் கேட்க, மாலதி புது பிராஜெக்ட் மேனேஜரைப் பற்றி தனக்கு தெரிந்தை வைத்து ஆஹா ஓஹோ என வர்ணிக்க, ஏனோ அனுவின் நினைவு அந்தப் பெயர் தெரியாதவனிடமே சென்றது.

 

அன்று பிரணவ் விபத்துக்குள்ளாகி அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சாருமதியுடன் ஆஃபீஸ் வந்த அனுபல்லவியால் அந்த இரத்தம் படிந்திருந்த முகத்தை மறக்க முடியவில்லை.

 

‘அவன் இப்போது எப்படி இருப்பான்? குணமாகி விட்டானா? இல்லை அன்று விபத்துக்குள்ளானதில்‌ ஏதாவது ஆகி விட்டதா? உயிருடன் தான் இருக்கின்றானா?’ என அனுவின் மனதில் பல கேள்விகள்.

 

திடீரென சாருமதியின் சிரிப்புச் சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி முயன்று தன் மனதை வேறு வேலையில் பதித்தாள்.

 

************************************

 

சரியாக ஒரு மாதத்தில் பெங்களூர் கிளம்ப தயார் ஆகினான் பிரணவ். ஊருக்கு கிளம்புவதற்காக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் பட்டது அன்று ஆகாஷ் தந்த பையில் இருந்த அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

 

அதனைக் கரத்தில் எடுத்தவனின் நினைவில் ஒரு பெண்ணின் முகம் மங்கலாகத் தெரிய, பல தடவை முயன்றும் அம் முகத்திற்கு சொந்தக்காரியை அவனால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

 

பிரணவ், “ச்சே…” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கோபமாக கட்டிலில் அமர்ந்தவன் அந்த துப்பட்டாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

‘யார் அவ? ஏன் எனக்கு அவ முகம் ஞாபகத்துக்கு வருதில்ல? இந்த ஷால் எப்படி என் கிட்ட…?’ என சிந்தித்தவனுக்கு மயக்க நிலையில் ஒரு பெண்ணின் குரல் மெதுவாகக் கேட்டது நினைவு வரவும், “ஓஹ்… ஆக்சிடன்ட் அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல் அனுப்பி வெச்ச யாரோடயாவது இருக்கும் போல…” என பிரணவ் தனக்கே கூறிக்கொண்டான்.

 

அப்போது கீழிருந்து அவனின் தாயின் குரல் கேட்கவும் பிரணவ் அந்த துப்பட்டாவைக் கட்டிலில் வீசி விட்டுச் செல்ல, அந்த துப்பட்டாவோ பிரணவ்வின் பைக்குள் தஞ்சம் அடைந்தது.

 

ஹால் சோஃபாவில் லக்ஷ்மி கோபமாக அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் ஏதோ கோப்பை கையில் வைத்து படித்தவாறு அமர்ந்து இருந்தார் மூர்த்தி.

 

தன் தாயைக் கேள்வியாக நோக்கியபடியே பிரணவ் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து என்ன விஷயம் என்பது போல லக்ஷ்மியைப் பார்க்க, அவரோ பிரணவ்வை முறைத்து விட்டு, “உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க பிரணவ்? யாரைக் கேட்டு நீ இப்படி பண்ற? எம்.எல் க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸோட வருங்கால எம்.டி நீ… ஆனா நீ என்னன்னா அங்க போய் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்க போறதா சொல்ற…” என்றார் கோபமாக.

 

பிரணவ், “ஏன் அதுவும் நம்ம கம்பனி தானே… நான் வேற யாரோட கம்பனியில சரி எம்ப்ளாயியா வர்க் பண்ணா தான் நீங்க அசிங்கப்படணும்… இதுல என்ன இருக்கு?” எனக் கேட்கவும் லக்ஷ்மி ஏதோ கூற வர, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், “உங்க புருஷன் கிட்ட நான் என் முடிவை சொல்லி அவர் சம்மதத்தோட தான் நான் கிளம்புறேன்… இதுக்கு மேலயும் என்னை தடுக்க நினைச்சீங்கன்னா எதுவும் வேணாம்னு தூக்கி போட்டு கிளம்பி போய்ட்டே இருப்பேன்…” என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டான்.

 

************************************

 

அன்று ஆஃபீஸ் முழுவதுமே ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. 

 

அனு, “ஏன் டி சாரு… நம்ம டீமுக்கு தானே புதிய ப்ராஜெக்ட் மேனேஜர் வரார்… ஜஸ்ட் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரை வெல்கம் பண்ண எதுக்கு இவ்வளவு அலப்பறை?” எனப் புரியாமல் கேட்க, “அதான் அனு எனக்கும் புரியல… சரி வெய்ட் பண்ணி பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…” எனச் சாருமதி கூறவும் தோளைக் குலுக்கினாள் அனுபல்லவி.

 

அப்போது திடீரென ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்கவும் தோழிகள் இருவரும் கூட்டத்தின் பக்கம் திரும்ப, அங்கு வந்துகொண்டு இருந்ததோ ஆகாஷ்‌.

 

சாருமதி, “இந்த பாடிக்கு தான் இவ்வளவு அலப்பறை பண்ணினாங்களா?” எனக் கேலியாகக் கேட்கவும் வாயை மூடிச் சிரித்தாள் அனுபல்லவி.

 

ஜெனரல் மேனேஜரை தனியே சந்தித்த ஆகாஷ் அவரிடம் ஏதோ ரகசியமாகக் கூற, புரிந்தது போல் தலை ஆட்டியவர் கூடி இருந்த கூட்டத்தின் அருகே வந்து, “எல்லாரும் எதுக்கு இப்போ கும்பலா இருக்கீங்க? போய் வேலையை பாருங்க…” என்று சத்தமிடவும் அனைவரும் கலைந்து சென்று விட, ஆகாஷும் அங்கிருந்து சென்றான்.

 

“இவன் இல்லையா அப்போ அந்த ப்ராஜெக்ட் மேனேஜர்? இவன் யாரு அனு அப்போ? இவன் பேச்சை கேட்டு நம்ம ஜி‌.எம்மே பூம் பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுறார்…” எனச் சாருமதி நக்கலாகக் கூறவும் அவளின் தோளில் அடித்து அமைதிப்படுத்திய அனுபல்லவி, “ஷ்ஷ்ஷ் சாரு… பேசாம இரு டி… கேட்டுட போகுது… யார் வந்தா நமக்கு என்ன?” என்றாள்.

 

சிறிது நேரம் கழித்து அனுபல்லவின் டீம் உறுப்பினர்களை ஜீ.எம் மீட்டிங் ஹாலுக்கு அழைப்பு விடுக்கவும் அனைவரும் அங்கு செல்ல, அங்கு ஜி.எம். இற்கு அருகில் அமர்ந்து இருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள் அனுபல்லவி.

 

ஜீ.எம், “சா…” சார் எனக் கூற வந்தவர் பிரணவ்வின் அழுத்தமான பார்வையில் அவசரமாகத் திருத்தி, “மிஸ்டர் பிரணவ்… இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்…” என்கவும் பிரணவ் திரும்பி ஒவ்வொருவராய் அவதானிக்க,

 

தான் காப்பாற்றியவன் நலமுடன் இருக்கின்றான் என அனுபல்லவியின் முகம் மலர, பிரணவ்வோ அவளைப் பார்த்து விட்டு மற்ற ஆள் மீது கவனம் பதிக்கவும் அனுபல்லவியின் முகம் வாடிப் போனது.

 

அனுபல்லவி, ‘என்ன இது? இவருக்கு என்னைக் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையா? ப்ச்… அவருக்கு எப்படி என்னை ஞாபகம் இருக்கும்? அவர் தான் மயக்கத்துல இருந்தாரே…’ என மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்தினாள்.

 

பிரணவ்வின் குரலில் தன்னிலை மீண்டவள் அவனின் மீது பார்வையை செலுத்த, “ஹாய் காய்ஸ்… ஐம் பிரணவ்… நைஸ் டு மீட் யூ ஆல்… இன்னைல இருந்து நான் தான் உங்க ப்ராஜெக்ட் மேனேஜர்… என்னைப் பத்தி சொல்லி தெரிஞ்சிக்கணும்னு இல்ல… போக போக புரியும் உங்களுக்கே… நாம ஒரு டீமா இருக்கும் போது உங்க ஒப்பீனியன்ஸ தயங்காம நீங்க முன் வைக்கலாம்… ஏதாவது டவுட் இருந்தாலும் எப்பன்னாலும் யூ ஆர் ஃபீல் ஃப்ரீ டு ஆஸ்க்…” என பிரணவ் அழுத்தமான குரலில் கூறவும் அனைவரின் தலையும் தானாகவே சம்மதம் என மேலும் கீழும் ஆடியது.

 

பிரணவ் ஜீ.எம். இற்கு கண் காட்டவும், “யூ மே கோ நவ்…” என ஜீ.எம். கட்டளையிட, அனைவரும் வெளியேறினர்.

 

பிரணவ்வின் மீதே பார்வை பதித்திருந்த அனுபல்லவிக்கு தான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவனின் பார்வை தன் மீது படிந்தது போல் ஒரு மாயை.

 

தன் தலையில் தட்டிக்கொண்ட அனுபல்லவி, ‘ப்ச் அனு… உனக்கு என்னாச்சு? அவருக்கு உன்ன யாருன்னு கூட தெரியல… அவர் எதுக்கு உன்ன பார்க்க போறார்? அது மட்டும் இல்லாம அந்த ஆக்சிடன்ட் அப்போ அங்க யாரு இருந்தாலும் நீ அப்படி தான் காப்பாத்தி இருக்க போற… அதுக்காக அவங்களுக்கு நம்மள ஞாபகம் இருக்கணும்னு அவசியமா என்ன? அவர் உன்னோட பாஸ்… நீ ஒரு எம்ப்ளாயி… அவ்வளவு தான்…’ எனத் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள, எவ்வளவு நேரமாக அழைத்தும் பதிலளிக்காது வித விதமான முக பாவனைகளைக் காட்டிக் கொண்டிருந்த தோழியை புருவம் சுருக்கிப் பார்த்தாள் சாருமதி.

 

அப்போது தான் தோழியின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து அனுபல்லவி அவளைப் பார்த்து இளித்து வைக்க, பெருமூச்சு விட்ட சாருமதி, “நான் கூட புதுசா வர ப்ராஜெக்ட் மேனேஜர் ரொம்ப ஜாலி டைப்பா இருப்பார்னு எதிர்ப்பார்த்தேன்… இவர் என்னன்னா சிரிப்பு என்ன விலைனு கேட்பார் போல… பரவால்ல… ஆளு பார்க்க செம்ம ஹேன்ட்ஸமா இருக்கார்… அதனால அவர் திட்டினா கூட சந்தோஷமா கேட்டுக்கலாம்…” என்றாள் கண்கள் மின்ன.

 

அதில் ஏனோ அனுபல்லவிக்கு லேசாக பொறாமை எட்டிப் பார்க்க, “மிஸ் சாருமதி… அவர் நம்ம பாஸ்… சோ நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா?” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்கவும் உதட்டை சுழித்த சாருமதி, “அடப் போம்மா அங்குட்டு… சரியான ரசனை கெட்டவ…” எனக் கூறி விட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

 

ஒரு நிமிடம் நின்று பிரணவ் இருந்த அறையைத் திரும்பிப் பார்த்த அனுபல்லவி, ‘வர வர ரொம்ப ஓவரா போற அனு நீ… இது நல்லதுக்கு இல்ல…’ என்ற மனசாட்சியின் எச்சரிக்கையில் தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

 

டீம் உறுப்பினர்கள் அனைவரும் சென்றதும் ஜீ.எம்மின் பக்கம் திரும்பிய பிரணவ், “மிஸ்டர் மோகன்… எனக்கு கொஞ்சம் சேன்ஜ் வேணும்… அதனால தான் நான் இந்த பிரான்ச்ச பொறுப்பேற்று இருக்கேன்… பட் இங்க இருக்குற எம்ப்ளாயீஸ் யாருக்கும் நான் தான் இந்த கம்பனி எம்.டி னு தெரியக் கூடாது… கோட் இட்?” என்கவும் புரிந்ததாய் தலை ஆட்டினார் மோகன்.

 

அவர் சென்றதும் கண்களை மூடி தலையில் கை வைத்து அமர்ந்தவனின் மனக்கண் முன் அனுபல்லவி வந்து சென்றாள்.

 

வந்ததிலிருந்தே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை அவனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியாக செல்லும் போது அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தின் காரணம் தான் அவனுக்கு புரியவில்லை.

 

அதனை‌ முயன்று ஒதுக்கித் தள்ளிய பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், “யேஸ் கம் இன்…” என்கவும் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், “பாஸ்… நீங்க கேட்ட டீட்டைய்ல்ஸ்… உங்க டீம் மெம்பர்ஸோட டீட்டைல்ஸ் அப்புறம் கம்பனி பத்தி ஃபுல் ரிப்போர்ட் இதுல இருக்கு…” என்கவும் அதனை வாங்கிப் படித்த பிரணவ்வின் கண்கள் அனுபல்லவி பற்றி இருந்த தாளில் சற்று நேரம் நிலைத்து நின்றது.

 

‘பல்லவி…’ என மனதில் கூறிப் பார்த்தவனின் கவனத்தைக் கலைத்தது ஆகாஷின் செறுமல். அவசரமாக மற்ற தகவல்களில் பார்வையை பதித்த பிரணவ், “ஆகாஷ்… நாளைக்கு காலையில என் டீம் மெம்பர்ஸ் எல்லாருக்கும் மீட்டிங் அரேன்ஜ் பண்ணிடுங்க… இப்போவே அதை பத்தி அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க…” எனக் கட்டளை இட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்