Loading

அனுபல்லவியின் கடந்தகாலத்தை அவளின் வாயாலேயே கேட்டதும் அவ் இடத்தில் பெரும் மௌனம் நிலவியது.

பிரஜனை ஆகாஷ் வெளியே அழைத்துச் சென்றிருக்க, மூர்த்தி, லக்ஷ்மி, பிரதாப், பிரணவ், அனுபல்லவி மட்டுமே அங்கிருந்தனர்.

அனுபல்லவியை இழப்பது பிரதாப்பின் மனதை அறுத்தாலும் பிரஜனின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது தான் தன் சுயநலம் புரிந்தது.

பிரணவ்விற்கு தன்னவள் அனுபவித்த வலிகளை அவள் சொல்லியே கேட்கும் போது அவ் வலியை அவனும் அனுபவித்தது போல் உணர்ந்தான்.

கண்கள் கலங்க தன்னவளின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ அவள் தன்னை விட்டு விலகிச் சென்றதை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவள் தன் கண் பார்வையில் இருந்திருந்தால் என்றோ தனக்கு நினைவுகள் திரும்பி இருக்கலாம் என எண்ணினான் பிரணவ்.

அனுபல்லவி மடியில் கோர்த்திருங்க தன் கரங்களில் பார்வையைப் பதித்திருக்க, இவ்வளவு நேரமும் கலவையான உணர்வுகளில் சிக்கித் தவித்திருந்த லக்ஷ்மி நீண்ட பெருமூச்சுடன் தன் அருகில் அமர்ந்திருந்த கணவனைக் கேள்வியாக ஏறிட்டார்.

மூர்த்தி தன் கண்களை மூடித் திறந்து தன் பதிலைத் தெரிவித்ததும் புன்னகையுடன் அனுபல்லவி அருகே சென்ற லக்ஷ்மி அனுபல்லவியின் தாடையைப் பற்றி அவளின் தலையை நிமிர்த்தி தன்னைக் காணச் செய்தார்.

கண்ணீர் பார்வையை மங்கலாக்கி இருக்க, லக்ஷ்மியை ஏறிட்ட அனுபல்லவியின் தலையை வருடி விட்ட லக்ஷ்மி, “அனு…இதுல எந்த இடத்துல டா உன் தப்பு இருக்கு?” எனக் கேட்டார்.

அனுபல்லவி தயக்கமும் குழப்பமுமாக மௌனமாக இருக்க, “ஒரு தாசியா இருந்தா கூட இன்னொருத்தருக்கு அவங்கள பத்தி பேச எந்த உரிமையும் கிடையாது. ஏன்னா யாரும் விரும்பி அந்த நிலமைக்கு போக மாட்டாங்க. சூழ்நிலை எல்லாருக்கும் ஒரே போல இருக்குறதில்ல. ஒரு குழந்தை நல்ல வழிலயோ, இல்ல தப்பான வழியிலயோ பிறந்தாலும் அந்தக் குழந்தை பிறக்கும் போது கடவுளோட குழந்தையா தான் பிறக்குறாங்க. அங்க அந்தக் குழந்தையோட தப்பு எதுவுமே இல்ல. இங்க நீ ஒரு தப்புமே பண்ணல. ஏன்? உன் அம்மா மேல கூட தப்பு இல்ல. நீ, உன் அம்மா, அப்பா எல்லாருமே விதியின் சதியில மாட்டின கைப்பாவைகள் தான்.”

“கட்டினவன் கூட இல்லாம ஒரு பொண்ணு தன்னோட குழந்தைய தனியா வளர்க்குறது லேசிப்பட்ட காரியம் இல்ல. ஒரு பொண்ணா உங்க அம்மாவுக்கு நடந்தது ரொம்ப பெரிய அநியாயம். யாருக்கும் அந்த நிலைமை வரக் கூடாது. உயிரோடு இருக்குற காலம் வரை கஷ்டப்பட்ட உன்னோட அம்மாக்கு இறந்ததுக்கு அப்புறமும் அவங்க ஆன்மா சாந்தியடையாம இருக்குறத அவங்க பொண்ணா நீ விரும்புறாயா?”

அப்பா இல்லாம வளருறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்போ ஏன் மா தெரிஞ்சே அந்தக் கஷ்டத்த உன் பையனுக்கும் கொடுக்க நினைக்கிற? உன் அப்பா, அம்மா பட்ட கஷ்டம் எல்லாம் உன்னோடயும் தொடர்ந்தது போல உனக்கு அப்புறம் உன் பையனும் அது போல கஷ்டப்படலாமா அனு? உன்ன பத்தி நாங்க தப்பா நினைச்சிடுவோமோன்னு நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லம்மா. எங்க ரெண்டு பேரையும் பொறுத்தவரை எங்க வீட்டுக்கு வரப் போற மருமகள் எங்க பையனுக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும். அந்தப் பொண்ணோட பேக்ரவுன்ட் எதுவுமே அவசியம் கிடையாது. நாங்க தான் கண்கூடா பார்க்குறோமே பிரணவ் உன் மேல வெச்சிருக்குற காதல. இதுக்கப்புறமும் நாங்க உன்ன மறுப்போமா? உனக்கு அம்மா இல்லன்னு என்னைக்கும் நீ ஃபீல் பண்ணாதே டா. உனக்கு அம்மாவா நான் இருப்பேன்.” என லக்ஷ்மி கூறியதும் அவரை அணைத்துக் கொண்டு கதறினாள் அனுபல்லவி.

தன்னவளின் கண்ணீர் மனதை வாட்டினாலும் அவள் தன்னைப் பிரிய நினைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத பிரணவ் சில நொடிகள் தன்னவளின் முகத்தையே வெறித்தவன் சட்டென அங்கிருந்து வெளியேறினான்.

வாசல் வரை சென்றவனின் பார்வை பிரதாப்பை அழுத்தமாக நோக்க, அவனின் பார்வையில் என்ன புரிந்ததோ பிரதாப்பும் பிரணவ்வைப் பின் தொடர்ந்தான்.

பிரணவ் அவ்வாறு செல்லவும் கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்திருக்க, அதனைக் கண்டு கொள்ளாது கிளம்பினான் பிரணவ்.

“அவன் கிடக்குறான் விடும்மா நீ. கோவம் போனதும் உன் கிட்ட தான் ஓடி வரப் போறான். உன் மேல ரொம்ப அன்ப வெச்சிட்டான். அதனால தான் நீ அவன விலகி போக நினைச்சத பிரணவ்வால ஏத்துக்க முடியல. ஆனா யாரோ ஒருத்தி சொன்னத நம்பிட்டு ஒரு அம்மாவா நான் கூட என் புள்ளய புரிஞ்சிக்கலன்னு நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு.” எனக் கண் கலங்கினார் லக்ஷ்மி.

“அஞ்சி வருஷமா அவன் முகத்துல நிஜமான சந்தோஷத்த பார்க்கவே இல்ல நான். முகத்துல உயிர்ப்பில்லாம சுத்திட்டு இருந்தான். நான் தான் ஆப்பரேஷன் பண்ணதனால அப்படி இருக்கான்னு நினைச்சிட்டேன்.” என லக்ஷ்மி கவலையாகக் கூற, “விடு லக்ஷ்மி. முடிஞ்சு போன விஷயத்த பத்தி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல. நமக்கு மட்டும் தெரியுமா என்ன இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு? இந்த ஆகாஷ் பையன் வேற எதுவும் சொல்லல.” என்றார் மூர்த்தி.

_______________________________________________

பிரணவ்வைத் தொடர்ந்து வந்த பிரதாப் அவன் காருக்கு அருகில் எங்கோ வெறித்தபடி நின்றிருப்பதைக் கண்டு அவனருகே சென்றான்.

“பிரணவ்…” என பிரதாப் தயக்கமாக அழைக்கவும், “வந்து கார்ல ஏறு. மாமாவ பார்க்கணும் நான்.” என்றவன் ஓட்டுனர் இருக்கையில் அமர, அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்த பிரதாப் பல்லவனைத் தங்க வைத்திருந்த ஹோட்டலுக்கு வழியைக் கூறினான்.

அவர்கள் இருவரும் வரும் போது பல்லவன் உறங்கிக் கொண்டிருக்க, “நீங்க பேசிட்டு இருங்க. நான் வெளிய இருக்கேன்.” என்று விட்டு அவ் அறையில் இருந்து வெளியேறினான் பிரதாப்.

அரவம் கேட்டு கண் விழித்த பல்லவன் பிரணவ்வைக் குழப்பமாக நோக்க, “ஐம் பிரணவ்.” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் பிரணவ்.

உடனே பல்லவனின் கண்கள் மின்ன, பிரணவ்விடம் ஏதோ கூற விழைந்தவர் அவனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லையோ என்று எண்ணி உடனே முகம் வாடி மௌனம் காத்தார்.

“பல்லவி இப்போ என் வீட்டுல தான் இருக்கா.” எனப் பிரணவ் கூறவும் புரியாது முழித்த பல்லவன், “என் பையனும்…” என்ற பிரணவ்வின் வார்த்தையில் முகம் மலர்ந்தார்.

உடனே கட்டிலில் இருந்து எழுந்து அமர முயல, பல்லவனுக்கு உதவி செய்தான் பிரணவ்.

பிரணவ்வின் கரத்தைப் பற்றிக் கொண்ட பல்லவன், “உ…உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா மாப்பிள்ளை?” எனக் கேட்டார் ஆர்வமாக.

ஒரு கசந்த புன்னகையை சிந்த விட்ட பிரணவ், “உங்க பொண்ணுக்கு அது தான் விருப்பம் போல மாமா. அதனால தானே என் பையன என் கிட்ட இருந்து இத்தனை வருஷம் பிரிச்சு வெச்சிருந்தா.” என்றான் வலி நிறைந்த குரலில்.

“அப்படி இல்ல மாப்பிள்ளை. நான் சொல்லி என் பொண்ண நீங்க புரிஞ்சிக்கணும்னு இல்ல. உங்களுக்கே பல்லவி மனச பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். அவ யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டா. உங்கள பிரிஞ்சி இருக்க கூட ஏதாவது காரணம் இருக்கும். ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க. எல்லாம் சரியாப் போயிடும். ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன். என் பொண்ணு ஒன்னும் உங்கள பிரிஞ்சி சந்தோஷமா இருக்கல.” என்றார் பல்லவன்.

பிரணவ்விற்கும் அது புரியாமல் இல்லை. இருந்தும் ஏதோ ஒன்று அவனின் கோபத்தை இழுத்துப் பிடித்தது.

“உடம்புக்கு எப்படி இருக்கு மாமா இப்போ?” எனப் பிரணவ் பேச்சை மாற்ற, அதனைப் புரிந்து கொண்ட பல்லவனும், “உடம்பு வலிய விட மன வலி தான் மாப்பிள்ளை அதிகம். என் பொண்ணுக்காக தான் இன்னும் இந்த உசுர கைல பிடிச்சு வெச்சிட்டு இருக்கேன். ஆனா அதான் நீங்க இப்போ வந்துட்டீங்களே. இனிமே நிம்மதியா கண்ண மூடுவேன்.” என்றவரின் கண்கள் தன்னவளின் நினைவில் கலங்கின.

பல்லவனின் கரத்தை ஆறுதலாக அழுத்திய பிரணவ், “மாமா… உங்க இழப்பு ரொம்பவே பெரிசு. வெறும் வார்த்தைகளால ஆறுதல் சொல்லி அதைப் போக்க முடியாது. ஆனா நீங்க இப்படி அத்தைய நினைச்சி கஷ்டப்படுறத அத்தை விரும்புவாங்களா? உடல் ரெண்டும் தான் பிரிஞ்சி இருக்குறதே தவிர உங்க ரெண்டு பேரோட காதலுக்கு அழிவில்ல. அது எப்போவும் உங்க கூடவே இருக்கும். பல்லவிக்கு பிறந்த வீட்டு உறவுன்னு இருக்குறது நீங்க மட்டும் தான். உங்க பொண்ணு வருத்தப்படுறது உங்களுக்கும் அத்தைக்கும் சந்தோஷத்த தருமா மாமா? இல்லவே இல்ல. உங்க கிட்ட காட்டிக்கலன்னாலும் நீங்க இப்படி பெட்டோட இருக்குறது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். எந்த நோய்க்கும் பெஸ்ட் மெடிசின் நம்ம மனசு தான். மனசு ஆரோக்கியமா இருந்தா எதையும் சாதிக்கலாம்.” என்றான்.

பல்லவன் புன்னகையுடன் சரி எனத் தலையசைத்தார்.

சற்று நேரம் பல்லவனுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு பிரதாப்புடன் கிளம்பினான் பிரணவ்.

செல்லும் வழியில் ஆகாஷையும் பிரஜனையும் பார்க்கில் இருந்து அழைத்துக் கொண்டனர்.

ஆகாஷ் வண்டியை ஓட்ட, பக்கத்து இருக்கையில் பிரதாப் அமர்ந்தான்.

பிரஜனும் பிரணவ்வும் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பிரஜனோ வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான்.

வார்த்தைக்கு வார்த்தை ‘அப்பா…’ என்ற வண்ணம் பிரஜன் இருக்க, பிரணவ்வின் நெஞ்சம் குமுறி அழுதது தன் மகனின் தந்தைக்கான ஏக்கத்தைப் புரிந்து கொண்டு.

பிரதாப்போ குற்றவுணர்ச்சியில் வாடினான்.

“அப்பா… இனிமே ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நீங்க தான் என் அப்பான்னு உங்க இன்ட்ரூ பண்ணலாம்ல. அந்த ஜான் இருக்கானே… அவன் எனக்கு அப்பா இல்லன்னு எல்லார் கிட்டயும் சொல்லி வெச்சிருக்கான். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அவங்க பேரன்ட்ஸ் என்னை சிம்பதியா பார்த்தாங்க. எனக்கு பிடிக்கவே இல்ல.” என்கவும் பிரணவ்வின் நெஞ்சில் ‘சுருக்’ என்று ஏதோ தைத்தது.

பிரஜனை வாரி அணைத்துக் கொண்ட பிரணவ், “இனிமே என் பையன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதான் அப்பா வந்துட்டேன்ல. ரியல் ஃப்ரெண்ட்ஸ் ஒருநாளும் உன்ன ஹர்ட் பண்ண மாட்டாங்கடா. இங்க உனக்கு நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. அவங்க கூட நீ விளையாடலாம்.” என்றவனின் பார்வை முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதாப்பின் மீது கோபமாகப் படிய, ஃப்ரன்ட் மிரர் வழியாக அதனைக் கண்ட பிரதாப்பிற்கு திக் என்றானது.

சற்று நேரத்தில் அனைவரும் பிரணவ்வின் வீட்டை அடைய, அனுபல்லவி ஹாலிலேயே அமர்ந்து இருந்தாள்.

தாயை அங்கு கண்டதும் உற்சாகம் அடைந்த பிரஜன், “அம்மா…” என்றவாறு ஓடிச் சென்று அனுபல்லவியை அணைத்துக் கொண்டான்.

“அம்மா… அப்பா சொன்னாங்க நாம இனிமே அப்பா கூட தான் இருக்கப் போறோம்னு. தாத்தா, பாட்டி எல்லாருமே இருப்பாங்களாம். எனக்கு புது ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடலாமாம். அம்மா… ப்ளீஸ் மா… நாம சிங்கப்பூர் போக வேணாம்மா.” என அனுபல்லவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கெஞ்சினான் பிரஜன்.

அனுபல்லவியின் பார்வை தன்னவனின் மீது ஏக்கமாகப் படிய, பிரணவ்வும் அவளின் பதிலுக்காக அவளையே அழுத்தமாக நோக்கினான்.

“அம்மா… சொல்லுங்கம்மா…” என்ற பிரஜனின் குரலில் தன்னிலை அடைந்த அனுபல்லவி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ச…சரிடா கண்ணா… உன் இஷ்டம் போலவே அ…அப்பா கூட இருக்கலாம்.” என்றவளின் குரல் கமறியது.

அப்போது தான் பிரணவ் தன்னையும் மீறி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“ஹை ஜாலி… ஜாலி…” என அங்கேயே துள்ளிக் குதித்தான் பிரஜன்.

“அனு… அப்போ நான் கிளம்புறேன். மாமா தனியா இருப்பார். நீ மாமாவ பத்தி கவலைப் படாதே. நான் பார்த்துக்குறேன்.” எனப் பிரதாப் கூறவும் அனுபல்லவி சம்மதமாகத் தலையசைக்க, பிரணவ்விடம் பார்வையால் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பிரதாப்.

“அப்போ நானும் போய்ட்டு வரேன் பாஸ். என் ஆளு கிட்ட பேசி கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணணும்.” என வாயெல்லாம் பல்லாகக் கூறிய ஆகாஷின் கழுத்தில் கையைப் போட்டு லேசாக அழுத்திய பிரணவ், “எங்க சார் ஓடுறீங்க? நாம இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கே…” என்றவாறு ஆகாஷை வெளியே இழுத்துச் சென்றான்.

அனுபல்லவியோ தன்னவனின் ஒற்றை விழி மொழியை யாசித்து பிரணவ்வை நோக்க, அவனோ அதன் பின் அனுபல்லவியைக் கண்டு கொள்ளவே இல்லை.

பிரணவ் வெளியே இழுத்துச் சென்ற ஆகாஷோ, “பாஸ்… பாஸ்… விடுங்க பாஸ்… மூச்சு முட்டுது. இன்னும் என் கல்யாணத்துக்கே டேட் ஃபிக்ஸ் பண்ணல. அதுக்குள்ள கருமாதிக்கு டேட் ஃபிக்ஸ் பண்ண வெச்சிடாதீங்க.” என அலறினான்.

தோட்டத்துக்கு வந்ததும் பிரணவ் தன் பிடியை விலக்க, அவசரமாக கழுத்தை நீவியபடி ஆசுவாசம் அடைந்தான் ஆகாஷ்.

சில நொடிகள் கழித்து பிரணவ்வின் பக்கம் பார்வையைத் திருப்பியவனின் குலை நடுங்கியது.

சுட்டெரிக்கும் விழிகளுடன் ஆகாஷை நோக்கிக் கொண்டிருந்தான் பிரணவ்.

“ஈ… பாஸ்… ரொம்ப சைட் அடிக்காதீங்க. எனக்கு வெக்கம் கமிங்.” என ஆகாஷ் இளிக்க, “அடிங்…” என்றவாறு பிரணவ் அவனை அடிக்கக் கை ஓங்கினான்.

ஆகாஷ் சட்டென பயத்தில் கண்களை மூடவும் தன் கையைக் கீழே இறக்கினான் பிரணவ்.

“ஏன் ஆகாஷ் நீ கூட என் கிட்ட எல்லாத்தையும் மறைச்ச? உன்ன நான் ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி போலவா ட்ரீட் பண்ணேன்?” என பிரணவ் வேதனையுடன் கேட்கவும், “ஐயோ பாஸ்…” எனப் பதறினான் ஆகாஷ்.

பிரணவ்வின் முகத்தில் இழைந்தோடிய துக்கத்தைக் காணப் பொறுக்காத ஆகாஷ், “சாரி பாஸ். நான் வேணும்னு உங்க கிட்ட எதையும் மறைக்கல. எனக்கே உறுதியா தெரியாத ஒன்ன பத்தி நான் எப்படி உங்க கிட்ட சொல்ல முடியும்? அது போக டாக்டர் வேற உங்களுக்கு பழச ஞாபகப்படுத்தினா உங்க உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்க. எ…எனக்கு எல்லாத்தையும் விட உங்க உயிர் தான் முக்கியமாப்பட்டது.” என்றவனின் கண்களும் கலங்கின.

சில நொடிகள் அங்கு பலத்த மௌனம் நிலவ, “நான் பண்ண தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் பாஸ். எ…என்னை வேலைய விட்டு தூக்கினாலும் கூட…” என்ற ஆகாஷிற்கு அதனைக் கூறும் போது நெஞ்சை ஏதோ பெரிய பாரம் அழுத்தியது.

ஆகாஷை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், “என் கிட்ட இருந்து அவ்வளவு ஈஸியா தப்பிச்சிடலாம்னு நினைச்சியா?” எனக் கேட்கவும் ஆகாஷ், “பாஸ்…” எனக் குழப்பமாக நோக்க, “சீக்கிரம் கல்யாண சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு மேன்.” என்றான் புன்னகையுடன்.

மறு நொடியே, “தேங்க் யூ பாஸ்… ஐ லவ் யூ சோ மச்…” என்றவாறு பிரணவ்வைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட ஆகாஷை கஷ்டப்பட்டு தன்னை விட்டு விலக்கிய பிரணவ், “போடா டேய்… இதெல்லாம் உன் குட்டச்சி கிட்ட வெச்சிக்கோ.” எனப் பொய்க் கோபத்துடன் கூறவும் வெட்கப்பட்டுச் சிரித்தான் ஆகாஷ்.

அதனைக் கண்டு பிரணவ்வின் முகமும் தன்னால் மலர்ந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்