Loading

பிரணவ்வின் வீட்டில் இருந்து அர்ச்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த கார்த்திக் அவள் திமிறத் திமிற அவளின் வாயை அடைத்து கைகளைப் பின்னே கட்டி காருக்குள் அடைத்தான்.

 

அர்ச்சனா தன் கைக் கட்டை அவிழ்க்கப் போராட, கார்த்திக் கோபமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் நிறுத்தினான்.

 

தன்னை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த அர்ச்சனாவை ஒரு பொருட்டாகவே கருதாது அவளை இழுத்துச் சென்று வீட்டுக்குள் தள்ளி கதவைத் தாழிட்டான் கார்த்திக்.

 

அர்ச்சனாவின் கைக் கட்டை கார்த்திக் அவிழ்த்த மறு நொடியே அவனின் கன்னத்தில் இடி என இறங்கியது அர்ச்சனாவின் கரம்.

 

கார்த்திக்கோ முகத்தில் எந்தவொரு சலனமும் இன்றி அர்ச்சனாவை வெறிக்க, அவன் சட்டைக் காலரை ஆவேசத்துடன் பற்றிய அர்ச்சனா, “என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுற? பிரணவ்வ நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்கு நல்லா தெரியும்ல. எதுக்காக என்னை வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்த?” எனக் கேட்டாள் கோபமாக.

 

தன் சட்டையைப் பற்றி இருந்த அர்ச்சனாவின் கரங்களை விலக்கிய கார்த்திக்கோ அவளின் கேள்விக்குப் பதிலளிக்காது நேராக பூஜை அறையை நோக்கி நடந்தான்.

 

“உன் கிட்ட தான் டா பேசிட்டு இருக்கேன்.” எனக் கத்திய அர்ச்சனா குழப்பமாகக் கார்த்திக்கைப் பின் தொடர, அவனோ கண் மூடிக் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான்.

 

சில நொடிகள் பொறுத்துப் பார்த்த அர்ச்சனா கார்த்திக் அங்கிருந்து அசையாதிருக்கவும் நீண்ட பெருமூச்சுடன் கண்களை மூடி கடவுளிடம் தன் வேண்டுகோள்களை முன் வைத்தாள்.

 

திடீரென அவளின் கழுத்து பாரமாக, விழிகளைத் திறந்து குனிந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

 

அர்ச்சனாவின் கழுத்தில் தொங்கியது கார்த்திக் கட்டிய கனமான தாலிச் சரடு.

 

மறு நொடியே கார்த்திக்கை அதிர்ச்சியுடன் நோக்கியவாறு அவனின் கரங்களிலே மயங்கிச் சரிந்தாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா மீண்டும் கண் விழிக்கும் போது அவள் கட்டிலில் படுத்திருக்க, அவளின் கரத்தைப் பற்றி அதில் முகம் புதைத்து படுத்திருந்தான் கார்த்திக்.

 

பட்டென தன் கரத்தை அர்ச்சனா இழுத்துக் கொள்ளவும் கார்த்திக் கண் விழித்து அவளைக் குழப்பமாக நோக்கினான்.

 

தான் ஏதாவது கனவு கண்டு விட்டோமோ என எண்ணியவளின் கைகள் தானாக கழுத்தைத் தடவ, நிதர்சனம் அவளின் முகத்தில் அறைய, கண்கள் தன்னால் கலங்கியது.

 

“ஆஹ்…” என அர்ச்சனா தலையைப் பற்றியபடி கதற, “அர்ச்சு… அர்ச்சு… என்னாச்சு?” எனக் கேட்டான் கார்த்திக் பதட்டமாக.

 

அவனை வெறி கொண்டு தள்ளி விட்ட அர்ச்சனாவோ, “என்னாச்சா? இன்னும் என்னடா ஆகணும்? பாவி… பாவி… என் வாழ்க்கையையே அழிச்சிட்டியே. உன்ன ஃப்ரெண்டா நினைச்சத்துக்கு எனக்கு நல்ல செருப்படியா கொடுத்துட்ட.” எனக் கதறினாள்.

 

“அர்ச்சு நான்…” எனத் தன்னிலை விளக்கம் அளிக்க வந்தவனை இடையிட்ட அர்ச்சனா, “போதும் கார்த்திக். இதுக்கு மேல நீ எதுவுமே சொல்ல அவசியம் இல்ல. என் ஆசை, கனவு எல்லாத்துலயும் மண் அள்ளிப் போட்டுட்டியே. இ…இனி நான்… நான்… எப்படி பிரணவ் முகத்த பார்ப்பேன்? எந்த மூஞ்ச வெச்சிக்கிட்டு அவன் முன்னால போய் நிற்பேன்? உன்ன நம்பினதுக்கு இப்படி பண்ணிட்டியே… ஏன் டா?” என முகத்தை மூடிக் கொண்டு கதறினாள் அர்ச்சனா.

 

“பிரணவ்… பிரணவ்… பிரணவ்… நம்ம ரெண்டு பேருக்கும் இடைல அவன் எப்படி வந்தான்?” எனத் திடீரென கார்த்திக் ஆக்ரோஷமாகக் கத்தவும் கார்த்திக் இத் திடீர் அவதாரத்தில் தன் கதறலை நிறுத்தி அதிர்ச்சியில் உறைந்தாள் அர்ச்சனா.

 

“சொல்லு டி. உன்னையும் உன் காதலையும் கால் தூசியா கூட மதிக்காதவன் பின்னாடியே போற. இத்தனை வருஷமா உன் கூடவே இருக்கேன். உன் பின்னாடி நாய் மாதிரி அலையிறேன். என் காதல ஒரு தடவை கூடவா நீ உணரல?” என்ற கார்த்திக்கின் கேள்வியில் அர்ச்சனாவிற்கு மேலும் அதிர்ச்சி.

 

அவன் தன் மீது அன்பாக இருப்பதை அவளும் அறிவாள்.

 

ஆனால் அதனை நட்பென்று எண்ணி இருந்தவங்களுக்கு இச் செய்தி புதிது.

 

“சின்ன வயசுல இருந்தே உனக்கு நான், எனக்கு நீன்னு தானே ஹோம்ல வளர்ந்தோம். நமக்குள்ள எப்போ பிரணவ் வந்தான்? உன் மேல கடலளவு காதல் இருந்தும் உனக்கு அந்தப் பிரணவ்வ தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் நான் என் காதல் நிறைவேறலன்னாலும் உன்னோட காதல் நிறைவேறணும்னு உனக்கு சப்போர்ட் பண்ணேன். அனு பிரணவ்வ விட்டு போனதும் நீ ஒரு நாடகமாடி பிரணவ் கூட இருந்த போது உனக்காக அனு திரும்பி வரக் கூடாதுன்னு கடவுள் கிட்ட கூட வேண்டிக்கிட்டேன். அதனால தான் எங்க உன் பக்கத்துல இருந்தா எனக்கே தெரியாம என் காதலுக்காக சுயநலமா யோசிச்சிடுவேனோன்னு பயத்துல தான் இந்த அஞ்சு வருஷமா வீடு, வேலை எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உன்ன மறக்க முடியாம உன்னோட நினைவுகளோட ஊர் ஊரா சுத்தினேன். ஆனா எப்போவும் உன்ன கண்காணிச்சிட்டு இருந்தேன் எந்த வழிலயாவது. ஆனா எப்போ பிரணவ்வுக்கும் அனுவுக்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்குன்னு தெரிஞ்சதோ இதுக்கப்புறமும் உன்னோட இந்த நாடகத்துக்கு துணையா நின்னா நீயும் பெரிய பாவி ஆகிடுவியோன்னு தான் திரும்பி வந்தேன். என் காதல் நிறைவேறலன்னாலும் உன் காதல் நிறைவேறணும்னு நினைச்சேன் நான். ஆனா உன் ஒருத்தியோட காதல் நிறைவேற இரண்டு பேரோட காதல் அழிஞ்சி போகவும் ஒரு சின்னப் பையன் அப்பா இல்லாம வளரவும் என்னால நினைக்க முடியல. ஏன்னா அப்பா, அம்மா இல்லாம அநாதையா வளருற கொடுமை என்னன்னு எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்லா தெரியும். அர்ச்சு… பிரணவ் போல என்னால உன்ன தங்கத் தட்டுல வெச்சி தாங்க இப்போதைக்கு முடியாது தான். ஆனா காலம் பூரா உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம என்னால உன்ன தாங்க முடியும். பிரணவ்வ ஒருவேளை நீ கல்யாணம் பண்ணி இருந்தா நீ அந்த வீட்டுல இளவரசியா இருந்து இருக்கலாம். ஆனா என்னோட வாழ்க்கைல எனக்கும் இந்த வீட்டுக்கும் நீ தான் மகாராணி.” எனக் கோபமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தான் கார்த்திக்.

 

கார்த்திக்கின் பேச்சில் அர்ச்சனா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள்.

 

கூடவே கார்த்திக்கின் கலங்கி இருந்த கண்கள் அர்ச்சனாவின் இதயத்தை வெகுவாய்க் குடைந்தது.

 

என்ன இருந்தாலும் உற்ற தோழன் ஆயிற்றே.

 

சில நொடிகள் மௌனம் காத்த கார்த்திக் நீண்ட ஒரு பெருமூச்சின் பின், “உன் மனசுல இப்போ என்னைப் பத்தி நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு எனக்கு தெரியல. ஆனா இத்தனை நாளா உன் காதல் நிறைவேறணும்னு தான் ஆசைப்பட்டேன். இனி அப்படி கிடையாது. இது எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பா நான் பார்க்குறேன். நிச்சயம் என் காதல ஒரு நாள் நீ புரிஞ்சிக்குவ. புரிய வைப்பேன்.” என அழுத்தமாகக் கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

 

கார்த்திக் சென்றதும் சிந்தனையில் ஆழ்ந்த அர்ச்சனாவிற்கு கார்த்திக்கின் காதல் ஏனோ காயம்பட்ட இதயத்தை மயிலிறகால் வருடுவது போல் இருந்தது.

 

ஆனால் இத்தனை வருடங்களாக நல்ல நண்பனாக எண்ணிக் கொண்டிருந்தவனை திடீரென காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

 

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

 

‘கார்த்திக் கூறுவதும் சரி தானே. பிரணவ்வின் பின்னால் காதல் என்று அத்தனை வருடங்களாக சுற்றினாள். இருந்தும் நினைவுகள் மறந்த பின் கூட தன்னை அவன் ஏற்றுக் கொள்ளவில்லையே. அது போக பிரணவ்வின் மீது தனக்கு காதலை விட, சுயநலம் தானே அதிகம் இருந்தது. அவனின் செல்வச் செழிப்பு தானே அவன் மீது காதல் கொள்ளக் காரணமே. ஆனால் கார்த்திக் என்னவென்றால் தன்னை தனக்காகவே காதலிக்கிறான்.’ என்ற எண்ணமே தித்திப்பாக இருந்தது அர்ச்சனாவிற்கு.

 

_______________________________________________

 

அன்று இரவு அனுபல்லவிக்கும் பிரஜனுக்கும் லக்ஷ்மி பிரணவ்வின் அறையைக் காட்டிக் கொடுக்க, மகனை உறங்க வைத்த அனுபல்லவி தன்னவனின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

ஆனால் நேரம் சென்றதே தவிர பிரணவ் வந்தபாடில்லை.

 

அனுபல்லவி தன்னை மறந்து உறங்கி விட, நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்த பிரணவ்விற்கு தன் அறையில் நுழையும் போதே அவனின் பார்வையில் விழுந்த தாயும் மகனும் மனதுக்கு இதமாக இருந்தது. 

 

கூடவே ஒரு ஏக்கப் பெருமூச்சும்.

 

மறுநாள் காலையில் அனுபல்லவி கண் விழிக்கும் போது நேரம் எட்டைக் கடந்து இருந்தது.

 

பிரஜனையும் அருகே காணவில்லை.

 

முதல் நாளே இவ்வளவு தாமதாக எழுந்ததற்கு லக்ஷ்மி ஏதாவது கூறுவாரோ என்ற பயத்தில் அவசரமாக குளித்து உடை மாற்றி கீழே செல்ல, பிரஜனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் லக்ஷ்மி.

 

“சாரி அத்தை‌ அது…” எனத் தயக்கத்துடன் ஏதோ கூற வந்தவளை இடையிட்ட லக்ஷ்மி, “ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருந்த மா நீ. அதனால தான் உன்ன எழுப்பல. பிரஜன நானே வாஷ் பண்ணி சாப்பாடு ஊட்டுறேன். நீ வந்து உட்காரு மா. நான் உனக்கு காஃபி கொண்டு வரேன்.” என்கவும் அவரின் பாசத்தில் அனுபல்லவியின் கண்கள் கலங்கின.

 

உடனே தன்னை மீட்டுக் கொண்டவள், “பரவால்ல அத்த. நானே போட்டுக்குறேன். நீங்க இருங்க.” என்ற அனுபல்லவியின் பார்வை தன்னவனைத் தேடி வீட்டை வலம் வந்தது.

 

ஆனால் பிரணவ்வோ அவளின் பார்வையில் விழவே இல்லை.

 

லக்ஷ்மியிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

 

அனுபல்லவி காலை உணவை முடித்த நேரம் சரியாக அவளின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

 

பிரதாப் தான் அழைத்திருந்தான்.

 

அழைப்பை ஏற்ற அனுபல்லவி, “சொல்லுங்க மாமா… அப்பா எப்படி இருக்கார்? நான் இப்போ அப்பாவ பார்க்க வரலாம்னு தான் இருந்தேன். நேத்து நடந்த பிரச்சினைல அப்பா கிட்ட கூட எதுவும் சொல்ல முடியல.” என்றாள்.

 

மறு முனையில் பிரதாப்போ, “மாமாவ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம் அனு.” என்கவும் பதட்டமடைந்த அனுபல்லவி, “எ… என்னாச்சு மாமா அப்பாவுக்கு? எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க? நான் உடனே வரேன்.” என்றாள்.

 

“அனு அனு… வெய்ட்… காம்டவுன். மாமாவுக்கு எதுவும் இல்ல. நீ பயப்படும்படி ஒன்னும் இல்ல. ட்ரீட்மெண்ட்டுக்கு தான் சேர்த்து இருக்கோம். நீ கிளம்பி VAV ஹாஸ்பிடல் வா. நான் மத்த டீட்டெய்ல்ஸ் சொல்றேன்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரதாப்.

 

உடனே அனுபல்லவி பிரஜனை லக்ஷ்மியிடம் விட்டு விட்டு அவரிடம் கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

 

அனுபல்லவி மருத்துவமனையை அடைந்த போது பிரதாப் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

 

அனுபல்லவியைக் கண்டதும் அழைப்பைத் துண்டித்து விட்டு அவளை நோக்கி வந்தவனிடம், “என்னாச்சு மாமா? ஏன் அப்பாவ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க?” எனக் கேட்டாள் பதட்டமாக.

 

“அனு… முன்னாடியே சொல்லிட்டேன். ஜஸ்ட் ட்ரீட்மெண்ட்டுக்காக தான். இனிமே சிங்கப்பூர் போய் மாமாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க அவசியம் இல்ல. இங்கயே ட்ரீட்மெண்ட்ட கன்ட்னியூ பண்ணலாம்.” என்றான் பிரதாப்.

 

அனுபல்லவி அவனைக் குழப்பமாக நோக்க, “பிரணவ் தான் மாமாவ ஹாஸ்பிடல் சேர்த்தார். மாமாவுக்கு சிங்கப்பூர்ல ட்ரீட்மெண்ட் பண்ண இருந்த டாக்டர் ஆன்டனி இன்னும் டூ டேய்ஸ்ல மாமாவுக்காக ஸ்பெஷலா இங்க வரார்.” என பிரதாப் கூறவும் அனுபல்லவியின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் படர்ந்தன.

 

“பிரணவ் எங்க இருக்கார்?” என அனுபல்லவி கேட்கவும் தோளைக் குலுக்கிய பிரதாப், “தெரியல அனு. நேத்து வந்து மாமாவ மீட் பண்ணிட்டு போனார். நைட் எனக்கு கால் பண்ணி இந்த ஹாஸ்பிடல்ல மாமாவ அட்மிட் பண்ண சொல்லி டீட்டெய்ல்ஸ் எல்லாம் சொன்னார்.” என்றான்.

 

பின் இருவரும் சேர்ந்து பல்லவனைக் காண அவர் இருந்த அறைக்குள் நுழைய, அப்போது தான் உறக்கம் கலைந்து எழுந்தார் பல்லவன்.

 

அனுபல்லவியைக் கண்டதும், “பல்லவி…” என பல்லவன் புன்னகையுடன் அழைக்க, அனுபல்லவிக்கு அவரிடம் எதுவும் தெரிவிக்காதது குற்றவுணர்வாக இருந்தது.

 

பல்லவனின் அருகில் அமர்ந்த அனுபல்லவி அவரின் கரத்தைப் பற்றி, “அப்பா சாரி… நான்…” எனத் தயக்கமாக ஏதோ கூற முயல, அவளின் கரத்தில் லேசாக அழுத்தம் கொடுத்த பல்லவன், “பல்லவிம்மா… நீ வருத்தப்பட இதுல எதுவும் இல்ல. மாப்பிள்ளை எல்லாமே சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்க வாழ்க்கை தான் இப்படி ஆகிப் போச்சு. எங்களோட பொண்ணு வாழ்க்கையும் இப்படியே போயிடுமோன்னு ரொம்பப் பயந்துட்டேன் மா. இப்போ ஐம் பர்ஃபக்ட்லி ஃபைன்.” என்றார்.

 

அதே சமயம் மருத்துவர் அங்கு வர, “அனு… திஸ் இஸ் டாக்டர் சித்தார்த். ஒன் ஆஃப் தி டாப் நியுரோ ஸ்பெஷலிஸ்ட் இனி இந்தியா. இவரும் டாக்டர் ஆன்டனியும் சேர்ந்து தான் மாமாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க இருக்காங்க.” என்றான் பிரதாப்.

 

“ஹாய் மிஸ்டர் பல்லவன். ஆல் ஓக்கே? ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல.” எனக் கேட்டார் மருத்துவர்.

 

“யெஸ் டாக்டர். திஸ் இஸ் மை டாட்டர் அனுபல்லவி.” என அனுபல்லவியை மருத்துவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பல்லவன்.

 

“ஹாய் அனுபல்லவி. நைஸ் டு மீட் யூ அன்ட் நைஸ் நேம்.” என்றார் மருத்துவர் புன்னகையுடன்.

 

“தேங்க் யூ டாக்டர். நைஸ் டு மீட் யூ டூ. அப்பாவுக்கு எப்படி இப்போ?” எனக் கேட்டாள் அனுபல்லவி.

 

“டோன்ட் வொரி அனு… ஒரு சின்ன சர்ஜரி தான். அதுக்கு அப்புறம் உங்க அப்பா பழையபடியே எழுந்து நடமாடுவார். டூ டேய்ஸ்ல டாக்டர் ஆன்டனி வரார். அவர் வந்ததுமே சர்ஜரிய ஆரம்பிக்கலாம். அதுவரை பேசிக் டெஸ்ட்ஸ் அன்ட் யூசுவல் ட்ரீட்மென்ட்ஸ் நடக்கும். நம்ம மனசு நாம நல்லா தான் இருக்கோம்னு நினைச்சாலே பாதி நோய் குணமாகிடும்.” என்றார் மருத்துவர்.

 

“சாரி அங்கிள். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.” என்றவாறு திடீரென அவ் அறைக்குள் நுழைந்தான் பிரணவ்.

 

அவனைக் கண்டதும் அனுபல்லவியின் முகம் பளிச்சிட, பிரணவ்வோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

“ஹேய் யங் மேன். ஆஃப்டர் லாங் டைம்.” என்றவாறு அவனை அணைத்துக் கொண்டார் மருத்துவர் சித்தார்த்.

 

“சாரி அங்கிள். கொஞ்சம் பர்சனல் வர்க்ஸ்ல பிஸியா இருந்தேன். அதனால தான் உங்கள நேரடியா மீட் பண்ணி பேச முடியல. அபிமன்யு எப்படி இருக்கான்? பார்த்து ரொம்ப நாளாச்சு.” என்றான் பிரணவ்.

 

“அவனுக்கென்னப்பா? சிங்கிள் லைஃப்… செமயா என்ஜாய் பண்ணுறான். இங்க தான் ஒரு காலேஜ்ல ப்ரஃபசரா இருக்கான். ஆமா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற? மூர்த்தி வேற ஃபீல் பண்ணிட்டு இருந்தான் நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்கன்னு.” என சித்தார்த் கூறவும் பிரணவ்வின் பார்வை அனுபல்லவியிடம் திரும்பியது.

 

தன்னவளின் விழிகளில் இருந்த தவிப்பு பிரணவ்வின் மனதை லேசாகக் கரைக்க, “அங்கிள் அது… சாரி… எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு. ஷீ இஸ் மை வைஃப் அனுபல்லவி. எங்களுக்கு நாழு வயசுல ஒரு பையன் இருக்கான்.” என்கவும், “வாட்…” என அதிர்ந்தார் சித்தார்த்.

 

“ஆமா அங்கிள். இட்ஸ் அ லாங் ஸ்டோரி. கண்டிப்பா உங்க கிட்ட இன்னொரு நாளைக்கு சொல்றேன். அபிய வேற மீட் பண்ணணும். நீங்க சர்ஜரி பத்தி எல்லாம் சொல்லிட்டீங்களா?” எனப் பேச்சை மாற்றினான் பிரணவ்.

 

“அதை பத்தி தான் பா பேசிட்டு இருந்தோம்.” என்ற சித்தார்த் மேலும் சிகிச்சை பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்க, அனுபல்லவியோ தன்னவனையே விழி அசைக்காமல் நோக்கினாள்.

 

அவளைக் கண்டும் காணாதது போல் இருந்தான் பிரணவ்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்