Loading

சஜீவ்வை உள்ளே அழைத்து அமர வைக்க அவனோ சற்று நேரம் எதுவும் பேசாது அமைதியாக இருந்தான்.

வசந்தியும் ராஜாராமும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சஜீவ், “முதல்ல ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிடுங்க…” என்க,

“என்னப்பா வந்த நேரத்துல இருந்து மன்னிப்பு கேட்டுட்டு இருக்க… என்ன பிரச்சினை… நீங்க எப்படி என் பொண்ணு கூட வந்திருக்கீங்க…” எனக் கேட்டார் ராஜாராம்.

சஜீவ் தலை குனிந்தபடி, “நான்… நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…” என்க,

ராஜாராம் அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார்.

தன்னிலை அடைந்து சஜீவ்வின் கன்னத்தில் அறைந்த ராஜாராம் அவன் சட்டையை பிடித்து,

“என்னடா சொல்ற… நீ அன்னைக்கு என் பொண்ணுக்கு பண்ணிட்டு போன காரியத்துக்கு உன்ன வீட்டுக்குள்ள எடுத்ததே பெரிய விஷயம்… என் வீட்டுக்குள்ள இருந்துட்டு என் பொண்ண பத்தி என்ன வேணாலும் பேசுவியா… எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்குடா… அவ நிச்சயமா அப்படி ஒரு காரியத்த பண்ண மாட்டா…” என்றார்.

வசந்தி சஜீவ் சொன்ன செய்தியில் இன்னும் அதிர்ச்சியில் இருக்க,

சஜீவ், “யுவி மேல எந்தத் தப்பும் இல்ல மாமா… அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…” என்றவன் அன்று நித்ய யுவனி கழுத்தில் தான் எவ்வாறு தாலி கட்டினேன் எனக் கூறினான்.

அவனை விடுவித்த ராஜாராம் அப்படியே இருக்கையில் சாய்ந்தார்.

வசந்தி, “என்னங்க…” என அவரிடம் ஓட சஜீவ், “மாமா…” எனப் பதறி அவரின் காலின் கீழ் அமர்ந்தான்.

தன் மகளின் நிலையை எண்ணி அழக் கூட திராணியற்று அமர்ந்த ராஜாராம் சஜீவ்வைப் பார்த்து,

“ஏன்ப்பா இப்படி பண்ண… என் பொண்ணு‌ மனநிலைய கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்கலயா… ஏற்கனவே உன்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… அவ வேதனைய பாத்துட்டு இருக்க முடியாம தான் அவள எங்க கிட்ட இருந்து கூட‌ தூரமா அனுப்பினோம்…” என வேதனையுடன் கேட்க,

சஜீவ்வும் கவலையாக, “என்னோட சூழ்நிலை அப்படி பண்ண வெச்சிடுச்சி மாமா… என்னால யுவி இல்லாம இருக்க முடியாது… எனக்கு தெரியும் அவளாலயும் நிச்சயமா என்ன விட்டு இருக்க முடியாது… ஆனா நான் பண்ண காரியத்துனால தான் இன்னைக்கு வரைக்கும் யுவி என்ன வெறுக்குறா… அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நடந்தது கூட வேணும்னு இல்ல மாமா…” என்றவன் தனக்கு ஈஷ்வரியால் இழைக்கப்பட்ட துரோகம், அதன் பின் நடந்தவை என அனைத்தையும் கூறினான்.

பின், “நான் இத நிறைய தடவ யுவி கிட்ட சொல்ல ட்ரை பண்ணேன்… ஆனா அவ நான் சொல்றத கேக்க கூட தயாரா இல்ல… இதுக்கு மேலயும் யுவிய பிரிஞ்சு என்னால இருக்க முடியலன்னு தான் அவ சம்மதம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டினேன்..” என கண்கள் கலங்க கூறினான் சஜீவ்.

வசந்திக்கும் ராஜாராமுக்கும் என்ன கூற என்றே விளங்கவில்லை.

சற்று நேரம் அமைதியாக இருந்த ராஜாராம், 

“சரிப்பா… நடந்தது நடந்து போச்சி… இதுக்கு மேல உங்க குடும்பத்தால என் பொண்ணு கஷ்டப்படுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது… முதல்ல போய் உங்க அம்மாவ சம்மதிக்க வெச்சி குடும்பத்தோட வாங்க… அதுக்கப்புறம் சந்தோஷமா என் பொண்ண உங்க கூட‌ அனுப்பி வைக்கிறேன்…” என முடிவாகக் கூறினார்.

சஜீவ், “இல்ல மாமா… ப்ளீஸ்… இப்படியே விட்டா யுவி மனச மாத்துறது கஷ்டம் மாமா… நான் யுவி பக்கத்துல இல்லன்னா நிச்சயம் அவங்க ஏதாவது பண்ணி திரும்ப எங்கள பிரிச்சிருவாங்க… ப்ளீஸ் மாமா… உங்க கால்ல கூட விழுறேன்… தயவு செஞ்சி சம்மதிச்சு எனக்கு ஒரு வாய்ப்ப தாங்க… அத்த நீங்களாவது சொல்லுங்க அத்த…” என ராஜாராமின் காலைப் பிடித்து கெஞ்சினான்.

ராஜாராமுக்கு சஜீவ் தன் காலில் விழுந்து கெஞ்சுவது சங்கடமாக இருந்தது.

ஆனால் நித்ய யுவனியின் மனநிலையை நினைத்துப் பார்த்தவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

சஜீவ் கெஞ்சுவதை வசந்தியால் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் ராஜாராமிடம்,

“அதான் அந்தப் பையன் அவ்வளவு சொல்றாரேங்க… என்ன இருந்தாலும் அவர் இப்ப நம்ம வீட்டு மாப்பிள்ளை… இப்படி கால்ல எல்லாம் விழுந்து கெஞ்சுறது பாக்க நல்லா இல்லைங்க… உங்களுக்கு தான் யுவனியோட பிடிவாதம் எப்படிப்பட்டதுன்னு தெரியுமேங்க… நிச்சயம் அவ கடைசி வர இப்படியே தனி மரமா இருக்க தாங்க பார்ப்பா… அதுவுமில்லாம கல்யாணம் ஆன பொண்ணு இப்படி வாழாவெட்டியா பொறந்த வீட்டுல இருக்குறத ஒரு அம்மாவா என்னால பாத்துட்டு இருக்க முடியாதுங்க… நாம தாங்க ஏதாவது பண்ணியாகனும்…” என அவரும் அழுதபடி ஒரு பக்கம் கெஞ்சினார்.

ராஜாராம் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தார்.

நேராக தன் அறைக்குள் ஓடி வந்த நித்ய யுவனி கீழே அமர்ந்து கட்டிலில் தலை சாய்த்தாள்.

அவளின் மனம் ஒரு நிலையில் இல்லை.

தாயும் தந்தையும் எவ்வாறு இதனை ஏற்பார்கள் என்ற எண்ணமே அவளை வாட்டியது.

சற்று நேரத்தில் நித்ய யுவனியின் அறையைத் திறந்து கொண்டு வந்த வசந்தி நேராக அவளின் கப்போர்டைத் திறந்து நித்ய யுவனியின் உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தார்.

சத்தம் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்த நித்ய யுவனி தாயின் நடவடிக்கை புரியாமல்,

“மா… என்ன பண்ற நீ… எதுக்காக என் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்க…” என்க,

வசந்தியோ அவளுக்கு பதிலளிக்காமல் தன் வேலையைப் பார்த்தார்.

எழுந்து வசந்தியிடம் சென்ற நித்ய யுவனி,

“மா… உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன பண்ற…” என மீண்டும் கேட்டாள்.

நித்ய யுவனியின் உடைமைகளை பேக் செய்து முடித்தவர் அதனை ஒரு கையால் எடுத்துக் கொண்டு மறு கையால் நித்ய யுவனியின் கரம் பற்றி அவளை ஹாலுக்கு இழுத்துச் சென்றார்.

அவரின் இழுப்புக்குச் சென்ற நித்ய யுவனி, “எதுக்குமா இப்போ என்ன இழுத்துட்டு போற… என்ன பண்ற நீ…” எனக் கத்த,

வசந்தியோ ஹாலை அடைந்த பின் தான் அவளின் கையை விட்டார்.

நித்ய யுவனியின் கையில் அவர் கொண்டு வந்த அவளின் உடைமைகள் அடங்கிய பையைத் திணித்தவர், “கிளம்பு…” என்றார் எங்கோ பார்த்தபடி.

அவரைப் புரியாமல் பார்த்த நித்ய யுவனி,

“எங்க கிளம்ப சொல்ற…” என்க,

நித்ய யுவனியின் பக்கம் திரும்பிய வசந்தி அவளை ஒரு பார்வை பார்த்தவர் அவளின் சுடிதாருக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து வெளியே போட்டு,

“எங்க ரெண்டு பேருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு தைரியம் வந்திடுச்சுல்ல… இன்னும் நீ எதுக்கு இங்க இருக்கனும்… உன் புருஷன் கூட சேர்ந்து உன் புகுந்த வீட்டுக்கே போய்டு…” என்றார்.

வசந்தியின் சொல்லில் அதிர்ந்த நித்ய யுவனி ராஜாராமைப் பார்க்க,

அவரோ இது வரை நடந்த எதிலும் கலந்து கொள்ளாது அமைதியே உருவாக அமர்ந்திருந்தார்.

அவரிடம் சென்ற நித்ய யுவனி கீழே அமர்ந்து,

“என்னப்பா அமைதியா இருக்கீங்க… அம்மா என்ன சொல்றாங்க… ஏதாவது பேசுங்கப்பா…” என அவரை உலுக்க,

“அந்த பையன் கூட போ யுவனி…” என்றார் ராஜாராம் அமைதியாக.

தந்தையின் யுவனி என்ற அழைப்பே அவளுக்கு வேதனையாக இருந்தது.

எப்போதும் யுவனிம்மா யுவனிம்மா என்பவர் இன்று யாரோ போல் யுவனி என்கவும் அவள் மனம் வேதனை அடைந்தது.

ராஜாராமைக் கண்ணீருடன் பார்த்த நித்ய யுவனி,

“ஏன்ப்பா இப்படி சொல்ற… எதுக்காக என்ன வீட்ட விட்டு போக சொல்ற… அவன் பண்ண தப்புக்கு எனக்கெதுக்குப்பா தண்டனை தரீங்க…” எனக் கேட்டாள்.

ராஜாராம் அவளுக்கு பதிலளிக்கவில்லை.

வசந்தி கடினப்பட்டு தன் கண்ணீரை அடக்க முயன்றார்.

சஜீவ்வாலும் நித்ய யுவனியை இந் நிலையில் பார்க்க முடியவில்லை.

ஆனால் இப்படியே விட்டால் நிச்சயம் தன்னால் அவள் மனதை மாற்ற முடியாது என அமைதியாக இருந்தான்.

ராஜாராம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க எழுந்த நித்ய யுவனி அவரைப் பார்த்து,

“பேச்சுக்கு தான் அப்போ உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு யுவனிம்மான்னு சொன்னீங்களாப்பா… அவன் பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை தரீங்களே…” என்றவள் வசந்தியைப் பார்த்து,

“நீங்களும் என் மேல தான் தப்புன்னு முடிவு பண்ணிட்டீங்களேம்மா…” என்க பெற்ற உள்ளங்கள் கண்ணீர் வடித்தன.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட நித்ய யுவனி,

“சரி உங்க ரெண்டு பேருக்கும் நான் இவன் கூட போய் வாழனும்… அது தானே வேணும்… சரி நான் இவன் கூட போறேன்… என்னோட மனச நீங்க கூட புரிஞ்சிக்கல இல்ல…” என கவலையுடன் கூறியவள் கிளம்புவதற்காக தன் பையை எடுக்க,

அதற்கு மேல் நித்ய யுவனியின் வேதனையைத் தாங்காத ராஜாராம்,

“யுவனிம்மா…” எனக் கண் கலங்க அழைத்தார்.

கண்ணீருடன் தந்தையை ஏறிட்டவள் அவர் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டு அவரிடம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

ராஜாராம், “என்ன மன்னிச்சிருடா… எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்குடா… ஆனா உன்ன கடைசி வர தனி மரமா பாக்குற சக்தி எனக்கில்லடா… நீயும் குடும்பம் குழந்தைனு சந்தோஷமா வாழனும்… அதுக்கு தான் அப்பாவும் அம்மாவும் அப்படி பேசினோம்…” என்க நித்யா தாயைப் பார்த்தாள்.

அவரும் அழுது கொண்டிருப்பதைக் கண்டு தாயிடம் சென்றவள்,

“என்ன மன்னிச்சிருமா… இவன் அப்படி பண்ணுவான்னு சத்தியமா நான் எதிர்ப்பார்க்கலமா…” என்க,

அவளின் கண்ணீரைத் துடைத்து விட்ட வசந்தி,

“நீ எதுக்கு யுவனி மன்னிப்பு கேக்குற… நான் தான் உன்ன அப்படி பேசினதுக்கு மன்னிப்பு கேக்கனும்… எங்க நீ மாப்பிள்ளை கூட இருக்குற கோவத்துல பிடிவாதமா இங்கயே தங்கிடுவியோன்னு தான் அப்படி நடந்துக்கிட்டேன்மா…” என்றார்.

நித்ய யுவனி, “நான் இங்கயே இருக்குறேன்மா… என்னால அங்க போய் இருக்க முடியாதுமா… இவன புருஷனாவும் என்னால ஏத்துக்க முடியாது..” என அழ,

ராஜாராம், “இல்ல யுவனிம்மா… இனி இது தான் உன் வாழ்க்கை… இவர் தான் உன் புருஷன்… எங்களுக்கும் எங்க பொண்ண அந்த வீட்டுக்கு அனுப்ப மனசில்ல தான்… ஆனா இந்த தம்பி அவ்வளவு சொல்றாரே… ஒரு தடவ அவர் என்ன சொல்ல வராருன்னு கேளுமா…” என்றார்.

“என்னால அவன் பண்ண தப்ப மன்னிக்கவோ மறக்கவோ முடியலபா… எப்படிப்பா நான் அவன் கூட போய் வாழுவேன்..” என நித்ய யுவனி கூற,

வசந்தி, “இங்க பாரு யுவனி… உங்க கல்யாணம் எப்படி வேணா நடந்து இருக்கலாம்… ஆனா இது கடவுள் முடிவு பண்ணது… இவர் கூட தான் உன் வாழ்க்கைன்னு எழுதி இருக்கு… மாப்பிள்ளை பண்ணது தப்பு தான்… இல்லன்னு சொல்லல… ஆனா அவர் ஏன் அப்படி பண்ணினார்னு ஒரு தடவ காது கொடுத்து கேளுமா…” என்கவும் நித்யா மறுப்பாக தலை அசைத்தாள்.

ராஜாராம், “இந்த அப்பாவோட வார்த்தைல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே யுவனிம்மா..” என்க,

அவசரமாக ஆம் என்று தலையாட்டினாள் நித்ய யுவனி.

“அப்போ அப்பா சொல்றத கேளுடா… மாப்பிள்ளை கூட போ… அங்க இருக்குறவங்க எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் மாப்பிள்ளை உனக்கு துணையா இருப்பார்டா… எங்களுக்கு உன்ன சந்தோஷமா அங்க கொண்டு போய் விட்டுட்டு வரனும்னு ஆசை தான்மா.. ஆனா சூழ்நிலை இப்படி ஆகிடுச்சு… கூடிய சீக்கிரம் எல்லாப் பிரச்சினையும் சரி ஆகும்டா… ” என நித்ய யுவனியின் தலையை வருடியபடி ராஜாராம் கூற,

அதற்கு மேல் பெற்றோரின் பேச்சை நித்ய யுவனியால் மறுக்க முடியவில்லை.

அதன் பின் பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் சஜீவ்வின் வீட்டிற்கு கிளம்பினாள் நித்ய யுவனி.

கண்ணீருடன் நித்ய யுவனியை வழி அனுப்பி வைத்த ராஜாராமுக்கும் வசந்திக்கும் இனி தம் மகளின் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற பயமும் எழாமல் இல்லை.

ஏர்போர்ட்டிலிருந்து வந்த கேப்பிலே நித்ய யுவனி, சஜீவ் சர்வேஷ் இருவரும் புறப்பட வழியில் ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால் நித்ய யுவனி மனதிலே ஏதோ முடிவு செய்து கொண்டாள். 

ஈஷ்வரி சமையலறையில் இருக்க திடீரென ஜீவிகா வீருடன் வீட்டுற்குள் நுழைந்தாள்.

சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வந்த ஈஷ்வரி,

“வாங்க மாப்பிள்ளை… வா ஜீவி… என்ன ஜீவி திடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு வந்திருக்க…” என்க,

ஜீவிகாவோ அவருக்கு பதிலளிக்காது சமையலறை சென்று ஆரத்தி கரைத்தாள்.

எங்கோ சென்று விட்டு வந்த பிரபுவும் வீருடன் இணைந்து வீட்டை அலங்கரித்தார்.

தன்னை மதிக்காது அனைவரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட,

கோவம் வந்த ஈஷ்வரி, “நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன்… யாரும் பதில் சொல்லாம இருக்கீங்க… என்ன பண்ணுறீங்க மூணு பேரும்… எதுக்கு இப்போ வீட்ட டெகரேட் பண்ணிட்டு இருக்கீங்க… யாரு வராங்க… ஜீவி நீ எதுக்கு ஆரத்தி கரச்சி வெச்ச… ” எனக் கேட்க,

மூவரும் அவர் பேச்சை காதிலே போட்டுக் கொள்ளவில்லை.

திடீரென அழைப்பு மணி ஓசை கேட்க சமையலறைக்கு ஓடிச் சென்ற ஜீவிகா ஆரத்தியை எடுத்து வந்து கதவைத் திறந்தார்.

ஈஷ்வரி மூவரின் நடவடிக்கையையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர் ஜீவிகா கதவைத் திறக்கவும் வாசலில் நின்ற இருவரையும் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

வாசலில் சஜீவ், நித்ய யுவனி இருவரும் தம்பதி சகிதமாய் நின்று கொண்டிருந்தனர்.

இருவருக்கும் ஜீவிகா ஆரத்தி எடுக்க நித்ய யுவனியோ ஏனோ தானோவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜீவிகா, “வெல்கம் ஹோம் அண்ணி…” எனப் புன்னகையுடன் கூற நித்ய யுவனியோ அமைதியாக இருந்தாள்.

சஜீவ் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன் அவள் கைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க,

அதனைத் தட்டி விட்டாள் நித்ய யுவனி.

பிரபுவுக்கும் ஜீவிகாவுக்கும் அதனைக் காண கவலையாக இருந்தாலும் நித்ய யுவனியின் மனநிலையையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜீவிகா இருவருக்கும் உள்ளே வர வழி விட தன் பையை எடுத்த நித்ய யுவனி உள்ளே செல்ல கால் எடுத்து வைக்கப் பார்க்க,

“அங்கயே நில்லு…” எனக் கத்தினார் ஈஷ்வரி.

இருவரையும் நோக்கி வந்த ஈஷ்வரி,

“உனக்கு என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைப்ப…” என்க,

“அம்மா….” எனக் கத்தினான் சஜீவ்.

மனதுக்குள் சிரித்த நித்ய யுவனி வலது காலை எடுத்து வைத்து ஈஷ்வரியைத் தாண்டி உள்ளே நுழைந்தாள்.

“நான் இவ்ளோ கத்திட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு உள்ள போற… ஏய்… நில்லுடி…” என ஈஷ்வரி கத்த கத்தக் கேட்காமல் வீட்டை சுற்றிப் பார்த்த நித்ய யுவனி ஈஷ்வரியை நெருங்கி,

“மாமியாரே… இதுக்கு பேர் என்னன்னு தெரியுமா..” எனத் தன் கழுத்திலிருந்த தாலியை எடுத்து அவர் முன் காட்டினாள்.

ஈஷ்வரிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்க நித்ய யுவனிக்கு அவரை அப்படிக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

சஜீவ், ஜீவிகா, வீர், பிரபு நால்வரும் நித்ய யுவனி என்ன செய்யப் போகிறாள் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க,

நித்ய யுவனி, “என்ன அப்படி பார்க்குறீங்க மாமியாரே… உங்க அருமைப் பையன் தான் இத என் கழுத்துல என் சம்மதமே இல்லாம கட்டினாரு… எப்படியோ கட்டிட்டாரு… அப்போ சொல்லுங்க பாக்கலாம் நான் இப்போ யாரு…” எனக் கூறியவள் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு,

“இந்த வீட்டோட மருமகள்…” என அழுத்தமாகக் கூறினாள்.

பின், “ஜீவிகா… என் ரூம காட்டுறீங்களா ப்ளீஸ்…” என்க,

“வாங்க அண்ணி… நான் கூட்டிட்டு போறேன்…” என நித்ய யுவனியை சஜீவ்வின் அறைக்கு அழைத்துச் சென்றாள் ஜீவிகா.

கோவமாக தன் கணவனைப் பார்த்த ஈஷ்வரி,

“என்னங்க நடக்குது இங்க… கண்டவள் எல்லாம் வீட்டுக்குள்ள வந்து இந்த வீட்டு மருமகள்னு சொல்றா… நீங்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க…” எனக் கத்தினார்.

“போதும் நிறுத்துமா… இதுக்கு மேல என் பொண்டாட்டி பத்தி ஒரு வார்த்த தப்பா பேசினாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்… இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க… யுவி தான் இந்த வீட்டு மருமக… அன்னைக்கு மாதிரி உங்க அண்ணன் கூட சேர்ந்து எங்கள பிரிக்க ஏதாவது ப்ளான் பண்ணீங்க… நடக்கூறதே வேற…” என தாயை எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றான் சஜீவ்.

சஜீவ் செல்லும் திசையை ஈஷ்வரி வெறிக்க,

“இனியாவது திருந்துற வழிய பாரு… நீ பண்ணின தப்பால தான் இன்னைக்கு நம்ம பையன் இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு வந்திருக்கான்..” என பிரபு கூற,

“அவள இந்த வீட்ட விட்டே விரட்டி காட்டுறேன் பாருங்க…” என்ற ஈஷ்வரி உடனே சுசித்ராவுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க சென்றார்.

பிரபு, “இதெல்லாம் திருந்தாத ஜென்மம் மாப்பிள்ளை… வாங்க நாம போலாம்…” என வீரை அழைத்துக் கொண்டு சென்றார்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Archana

      🤣🤣🤣 yugi game strt aaga poguthu pola😎😎😎. Ama prabhu pa avanga thirundhrathu konjo kastam thaan 😛.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.