Loading

இரவெல்லாம் பிரதாப்பிற்கு பல முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காமல் போகவும் அவன் வரும் வரை வாசலிலேயே காத்திருந்தனர் அவனின் பெற்றோர்.

வெகு நேரம் கழித்து பிரதாப் வீட்டினுள் நுழைய, “பிரதாப்… வந்துட்டியா? நைட் எல்லாம் எங்கப்பா போன? வீட்டுக்கு கூட வரல. ஆஃபீஸுக்கு கால் பண்ணி கேட்டப்போ நீ முன்னாடியே போய்ட்டதா சொன்னாங்க.” என்றாள் ஹேமா.

பிரதாப்போ மௌனமாக ஹேமாவின் முகத்தை வெறிக்க, “பிரதாப்… நீ இனிமே அந்த அனுபல்லவி விஷயத்த பத்தி யோசிக்க அவசியம் இல்ல. வர்க்ல கன்சன்ட்ரேட் பண்ணு. நானும் அம்மாவும் அந்த ஓடுகாலிக் கழுதைய பார்த்துக்குறோம். அவள எப்படி நம்ம வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.” என்றான் கிஷோர் விஷமப் புன்னகையுடன்.

ஹேமாவும் கணவனுடன் சேர்ந்து விஷமமாகப் புன்னகைக்க, பிரதாப் மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

அதே நேரம் வாசலில் சைரன் ஒலி கேட்கவும் கிஷோரும் ஹேமாவும் குழப்பமாக ஒருவரையொருவர் நோக்க, இப்போது பிரதாப்பின் முகத்தில் விஷமப் புன்னகை.

சில நொடிகளில் நான்கைந்து காவலர்கள் சட்டென வீட்டினுள் நுழையவும் இருவருமே அதிர்ந்தனர்.

உள்ளே வந்த ஏ.சி.பி. அபிஷேக்கோ சக காவலர்களிடம், “அரெஸ்ட் தெம்.” என்ற மறு நொடியே கிஷோர் மற்றும் ஹேமாவின் கைகளில் விலங்கிடப்பட்டது.

“சார்… என்ன பண்ணுறீங்க? எதுக்கு எங்கள அரெஸ்ட் பண்ணுறீங்க?” எனக் கேட்டான் கிஷோர் அதிர்ச்சியாக.

“இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லாமே புரியும்.” எனக் கிஷோரிடம் கூறிய அபிஷேக், “அவங்கள கூட்டிட்டு வாங்க.” என ஒரு காவல் அதிகாரியிடம் கூற, கோபமாக உள்ளே வந்தாள் அனுபல்லவி.

பிரதாப் சென்று சற்று நேரத்திலேயே கண் விழித்து விட்டான் பல்லவன்.

தந்தை கண் விழித்து விட்டதைக் கண்டு அனுபல்லவி ஆனந்தக் கண்ணீர் வடிக்க, தன் மறு உருவமாக இருந்த மகளை அடையாளம் காண முடியாமல் போகுமா அப் பாசக்காரத் தந்தைக்கு? 

“ப…பல்லவி?” எனக் கண்ணீருடன் பல்லவன் கேட்கவும் அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு ஆம் எனத் தலையசைத்த அனுபல்லவி மறு நொடியே இத்தனை நாட்கள் நெஞ்சை அடைத்து வைத்திருந்த துக்கம் தாளாமல், “அப்பா…” எனப் பல்லவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள்.

அனுபல்லவியுடன் சேர்ந்து கண்ணீரில் கரைந்த பல்லவனுக்கோ தன் மகளைத் தொட்டு உணரக் கூட கரங்களை அசைக்க முடியவில்லை.

இத்தனை வருடங்கள் அவனுக்கு செலுத்திய மருந்தின் காரணமாக கழுத்துக்குக் கீழே எல்லாம் மரத்துப் போனது போல் இருந்தது.

“ப…பல்லவி… என் ஷியா… உன் அம்மா… அவ எங்க? அ…வளுக்கு தெரியுமா நான் உயி…ரோட இருக்குறது. பாவம் ஷியா. நா…ன் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அ…வள பார்க்கணும் போல இருக்குடா. அ… ம்மா கிட்ட கூட்டிட்டுப் போறியா?” எனக் கேட்டான் பல்லவன் திக்கித் திணறி.

அனுபல்லவியோ தந்தைக்கு என்ன பதில் அளிக்க எனத் தெரியாது மௌனமாகக் கண்ணீர் வடிக்க, அதே நேரம் அங்கு ஒரு போலீஸ் வண்டியும் அம்பியுலன்ஸும் வரவும் அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

உள்ளே வந்த அபிஷேக், “யூ ஆர் சேஃப் நவ் சார்.” என்றான் பல்லவனிடம்.

பின் அங்கு ஒரு ஓரமாக கட்டி வைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்த மருத்துவனை கைது செய்து விட்டு பல்லவனை அம்பியுலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உள்ளே வந்த அனுபல்லவியைக் கண்டு கிஷோர், ஹேமா இருவரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

“உயிரோடு இருக்குறவர இறந்துட்டார்னு போலி ஆதாரங்கள காட்டி போலீஸையும் ஊரையும் ஏமாற்றினதுக்காகவும் இருபத்தி இரண்டு வருஷமா மிஸ்டர் பல்லவன அடைச்சி வெச்சி அவருக்கு போதிய சிகிச்சை கொடுக்காததாலும் அவரோட மனைவி மற்றும் பொண்ணை கொலை செய்ய முயற்சித்ததுக்காவும் உங்க யெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணுறோம்.” என்றான் அபிஷேக் அழுத்தமாக.

“என்ன சார் சொல்றீங்க? இவ பொய் சொல்றா. எங்க அண்ணன் நிஜமாவே இறந்துட்டார். சொத்துக்காக இவ இப்படி எல்லாம் பண்ணுறா. இவள முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க சார்.” எனக் கோபமாகக் கத்தினாள்.

அறுபல்லவி அவளைத் துச்சமாக நோக்க, “போதும் மா உங்க ரெண்டு பேரும் இத்தனை நாள் போட்ட நாடகம். நிறுத்துங்க எல்லாத்தையும்.” எனக் கத்தினான் பிரதாப் கோபமாக.

ஹேமா அதிர்ச்சியாக மகனை நோக்க, “நீங்க ரெண்டு பேரும் இத்தனை நாள் போட்ட நாடகத்துக்கு கண்ணால் பார்த்த சாட்சியே நான் தான். நீங்க அடைச்சி வெச்சிருந்த இடத்துல இருந்து மாமாவ காப்பாத்திட்டோம். உங்களுக்கு ஹெல்ப் பண்ண டாக்டரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவனோட லைசன்ஸையும் பறிச்சிட்டாங்க. உங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் பலமா இருக்கு. இன்னும் எதுக்காக இந்த நாடகம்?” எனக் கேட்டான் பிரதாப் கோபமாக.

“பிரதாப் நாங்க…” எனக் கிஷோர் ஏதோ கூற வர, “போதும் பா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. உங்க ரெண்டு பேரையும் அப்பா அம்மான்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. வெட்கமே இல்லாம சொத்துக்காக சொந்த அண்ணனுக்கே இப்படி ஒரு அநியாயத்த பண்ணி இருக்கீங்களே ம்மா. உங்க பழி, பாவத்துக்கு என்னையும் கூட கூட்டு சேர்க்க பார்த்தீங்க. இந்த நிமிஷம் எனக்கு என்னை நினைச்சே வெறுப்பா இருக்கு.” எனக் கோபமாகக் கூறிய பிரதாப்பின் குரல் இறுதியில் உடைந்தது.

பின் அவர்களைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல, அங்கேயே மடிந்தமர்ந்து உடைந்து அழுதான் பிரதாப்.

அனுபல்லவிக்கே அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவளால் அவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரதாப்பின் அருகே சென்ற அனுபல்லவி அவனின் தோளில் கை வைத்து, “மாமா…” எனத் தயக்கமாக அழைக்க, அவளின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட பிரதாப், “என்னை மன்னிச்சிடு அனு. சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது. அத்தை உயிரோடு இருந்திருந்தா என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பாங்க? என்னை அடியோட வெறுத்து இருப்பாங்க. உன்ன கூட ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல அனு. எனக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. பாவி நான். பாவி.” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினான்.

அவசரமாக அவனின் கரங்களைப் பிடித்துக் கொண்ட அனுபல்லவி, “விடுங்க மாமா. நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்தி பேசினாலும் எதுவும் மாறப் போறது கிடையாது. நீங்க உங்க தப்ப உணர்ந்துட்டீங்களே. அதுவே போதும் மாமா. அம்மா இருந்தா கூட உங்கள புரிஞ்சிட்டு இருந்திருப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். அழாதீங்க. ப்ளீஸ்.” என்றாள் வருத்தமாக.

பிரதாப் ஓரளவு சமாதானம் ஆனதும் இருவருமே பல்லவனைப் பார்க்க, மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

ஹேமாவையும் கிஷோரையும் அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்ததால் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது.

பல்லவனைப் பரிசோதித்த மருத்துவர் பல்லவனின் உடலுக்குள் செலுத்தி இருந்த மருந்தின் வீரியம் அதிகம் என்பதால் தான் அவனுக்கு கழுத்துக்குக் கீழே வேலை நிறுத்தம் செய்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பல்லவனுக்குச் சிகிச்சை அளித்தும் கைகளை மட்டுமே ஓரளவுக்கு அசைக்க முடிந்தது. கால்களை அசைக்க முடியவில்லை.

அதனால் கட்டிலோடு ஆனான் பல்லவன்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பின் அனுபல்லவி தான் அவனின் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நிறைவேற்றினாள்.

பல்லவன் அனுஷியாவைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஏதேதோ கூறிச் சமாளித்த அனுபல்லவியால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாது போக, தயங்கித் தயங்கி அனுஷியா பற்றிய உண்மையைப் பல்லவனிடம் தெரிவித்தாள்.

அதனைக் கேட்டு அதிர்ந்த பல்லவனோ, “ஷியா…” என அவ் இடமே அதிரக் கதறினான்.

அனுபல்லவியால் தந்தையைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

“ஷியா… ஐயோ… அந்தக் கடவுளுக்கு மனசாட்சியே இல்லையா? இப்படி நடக்கக் கூடாதுன்னு தானே அந்தப் படுபாவி கண்ணுல படாம முதல் தடவை அவளைக் காப்பாத்தி என் கூடவே வெச்சிக்கிட்டேன். கடைசியில என்னால என் ஷியாவ காப்பாத்த முடியலயே. உங்க அம்மா நான் இல்லாம எப்படி துடிச்சுப் போய் இருப்பா பல்லவி? ஐயோ… இதுக்கு நான் அந்த ஆக்சிடன்ட்லயே இறந்து போயிருக்கலாமே. என் ஷியா இல்லாத உலகத்துல நான் இருந்து என்ன பிரயோஜனம்?” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினான் பல்லவன்.

அனுபல்லவியும் அவனுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்க, திடீரென நெஞ்சைப் பற்றிக் கொண்டு மயங்கினான் பல்லவன்.

அதனைக் கண்ட அனுபல்லவி பிரதாப்பிற்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க, அவன் வந்ததும் பல்லவனை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் கூறவும் அதிர்ச்சியில் உறைந்தாள் அனுபல்லவி.

பல்லவனின் உடல்நிலை காரணமாக மீண்டும் ஒரு தடவை அட்டாக் வந்தால் அவனின் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்றார் மருத்துவர்.

மயக்கத்தில் இருந்து கண் விழித்த பல்லவனோ மனைவியை எண்ணி மீண்டும் கண்ணீர் வடிக்க, “அப்போ என் மேல உங்களுக்குப் பாசம் இல்லையா ப்பா? அம்மாவ போல நீங்களும் பாதியிலேயே விட்டுட்டு போகப் போறேன்னு சொல்றீங்க. என்னை அநாதையா விட்டுட்டுப் போறதுக்குப் பதிலா என்னையும் உங்க கூட கூட்டிட்டுப் போயிடுங்க. இப்படி யாரும் இல்லாம இருக்குறத விட அது எவ்வளவோ மேல்.” என்றாள் அனுபல்லவி கண்ணீருடன்.

அதன் பின் தான் பல்லவனுக்குத் தன் தவறு புரிந்தது.

அனுபல்லவியின் தலையை வருடி விட்ட பல்லவன், “அப்பாவ மன்னிச்சிடுடா செல்லம். நீ அநாதை இல்லடா. உனக்கு அப்பா நான் இருக்கேன் டா. உங்க அம்மா எனக்குள்ள வாழுறாங்க. உனக்கு அம்மா, அப்பா எல்லாமே இனி இந்த அப்பா தான்.” என்கவும் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள் அனுபல்லவி.

ஆனால் ஹார்ட் அட்டாக் வந்த பின் பல்லவன் முற்றாகவே உடைந்து போய் விட்டான்.

சதா நேரமும் தன்னவளின் நினைவிலேயே காலத்தைக் கழித்தான் பல்லவன்.

அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அனுபல்லவி.

பிரதாப்பிடம் எவ்வளோ கூறியும் அவன் கம்பனியைப் பொறுப்பேற்க மறுத்து விட்டான்.

பின் பல்லவனின் கட்டளையில் அனுபல்லவியே அனைத்தையும் பொறுப்பேற்க, அவளுக்கு உதவியாக இருந்தான் பிரதாப்.

தந்தை பற்றிய கவலையில் மூழ்கிக் கிடந்த அனுபல்லவிக்கு வேறு யாரின் நினைவுமே எழவில்லை.

இந் நிலையில் தான் அடிக்கடி மயக்கமும் வாந்தியும் எனத் தடுமாறினாள் அனுபல்லவி.

அதன் பின் தான் இத்தனை நாட்களாக அவளின் உடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியின் நினைவு எழ, அதனைக் கையில் எடுத்துப் பார்த்தவளின் மறு கை தன்னால் வயிற்றைப் பற்றிக் கொண்டது.

அப் சமயம் பார்த்து பல்லவனை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு அனுபல்லவியைக் காண வந்த பிரதாப்பும் பல்லவனும் அவளின் கழுத்தில் தொங்கிய தாலியைக் கண்டு அதிர்ந்தனர்.

பிரதாப்போ உள்ளுக்குள் உடைந்து விட்டான்.

தன் மாமாவின் மகள் என்பதையும் தாண்டி அவனுக்கு அனுபல்லவியைப் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் அவளைத் தவறாக எண்ணிக் கொண்டு வெறுத்தாலும் உள்ளுக்குள் அவள் மீதிருந்த பிரியம் அப்படியே தான் இருந்தது.

“அனு…” என பிரதாப் அதிர்ச்சியாக அழைக்க, திடுக்கிட்டுத் திரும்பிய அனுபல்லவியின் முகம் கலங்கிப் போய் இருந்தது.

அனுபல்லவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு பல்லவனுக்குமே அதிர்ச்சியாக இருந்தாலும் மகளின் களையிழந்த முகம் அவனுக்கு வருத்தத்தை அளித்தது.

“என்ன அனு இது தாலி? நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்ற பிரதாப்பின் கேள்விக்கு பதிலளிக்காது தந்தையின் முகத்தைக் கலக்கமாக நோக்கினாள் அனுபல்லவி.

எங்கு தந்தை தன்னைத் தவறாக எண்ணி விடுவாரோ என்ற பயம் தாங்கிய மகளின் பார்வையில் மனம் நொந்த பல்லவன், “பல்லவிம்மா…” என்கவும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடி வந்து தந்தையின் மடியில் தலை வைத்துக் கதறினாள் அனுபல்லவி.

“எ…என்னை மன்னிச்சிடுங்க ப்பா. சத்தியமா நான் மறைக்கணும்னு நினைக்கல. எனக்கு உங்கள தவிர வேற எதுவுமே கண்ணுக்கு தெரியலப்பா.” என்றாள் அனுபல்லவி கண்ணீருடன்.

மகளின் தலையைப் பரிவாக வருடி விட்ட பல்லவன், “மாப்பிள்ளை எங்கம்மா இருக்கார்?” எனக் கேட்கவும், “அவருக்கு என்னோட ஞாபகமே இல்லப்பா.” என்ற அனுபல்லவியின் குரல் கமறியது.

அதனைக் கேட்டு பிரதாப்பும் பல்லவனும் அதிர, பிரணவ்வைப் பற்றி அனைத்தையும் கூறிய அனுபல்லவி ஒரு இக்கட்டான வேலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று மட்டும் கூறினாள்.

அத்துடன் பிரணவ்வின் விபத்தையும் தற்போது அவன் தன்னைப் பற்றிய நினைவுகளை இழந்து விட்டான் எனக் கூறவும் இருவருக்குமே என்ன கூறுவதென்றே தெரியவில்லை.

பல்லவன் தான் மகளின் வாழ்க்கை பாழாகி விடுமோ எனப் பயந்தான்.

“அனு… நான் வேணா பிரணவ் கூட பேசவா?” எனத் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிரதாப் கேட்கவும் உடனே மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி, “அந்தத் தப்ப மட்டும் தயவு செஞ்சி பண்ணிடாதீங்க மாமா. வலுக்கட்டாயமா அவருக்கு பழைய நினைவுகள கொண்ட உன் வர முயற்சித்தா அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.” என்றாள் வருத்தமாக.

“அதுக்காக இப்படியே இருக்கப் போறியா டா?” எனக் கேட்ட பல்லவனைப் பார்த்து கசப்பாகப் புன்னகைத்த அனுபல்லவி, “எனக்கு தான் நீங்க இருக்கீங்களேப்பா. அதுவும் இல்லாம என்னைப் பத்தி தெரிஞ்சா அவர் வீட்டுல நிச்சயம் என்னை ஏத்துக்க மாட்டாங்க. அவர் என் கூட இல்லன்னாலும் அவர் நல்லா இருந்தாலே போதும் எனக்கு.” என்றவள் சில நொடிகள் மௌனித்து விட்டு, “அ…அது போக… அவரோட நினைவா, எங்களோட காதலோட பரிசா எனக்குள்ள அவரோட உயிர் வளருது. அதுவே போதும் எனக்கு நான் உயிர்ப்பா இருக்குறதுக்கு.” என்றாள் வலியுடன் கூடிய புன்னகையுடன்.

பிரதாப்பிற்கும் பல்லவனுக்கும் அதனைக் கேட்டு மீண்டும் அதிர்ச்சி.

ஆனால் அனுபல்லவி இவ்வளவு கூறிய பின்னும் அவளை வற்புறுத்த இருவருக்குமே மனம் வரவில்லை.

பின் அனுபல்லவி தன் பழைய சிம்மை உடைத்துப் போட்டு அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டாள்.

பிரணவ்வின் நினைவு எழும் போதெல்லாம் தன் மணி வயிற்றில் வளரும் தன்னவனின் உயிருடன் பேசுவாள்.

பல்லவனும் அடிக்கடி சுகவீனமுற, அவனைக் கவனிப்பதிலேயே அனுபல்வவியின் நாட்கள் கடந்தன.

நாட்கள் கடந்து மாதங்களாக உருண்டோட, பிரணவ்வின் வாரிசு இவ் உலகில் காலடி எடுத்து வைத்தான்.

பிரஜன் பிறந்த பின் மூவரின் வாழ்விலும் ஒரு பற்றுகோல் வந்தது போல் இருந்தது.

குழந்தையுடன் சேர்ந்து மூவருமே குழந்தை ஆகிப் போயினர்.

இங்கிருந்தால் பிரணவ்வின் நினைவு அடிக்கடி எழுவதால் இந்தியாவில் பிஸ்னஸை பிரதாப்பின் பொறுப்பில் விட்டு விட்டு பிரதாப் எவ்வளவோ கூறியும் கேட்காது தந்தையையும் மகனையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் கிளம்பினாள் அனுபல்லவி.

பிரதாப் அடிக்கடி சென்று பிரஜனைப் பார்த்து விட்டு வருவான்.

அவனுக்கு ஏனோ பிரஜனின் மீது அலாதிப் பிரியம். 

அது தன் மனம் கவர்ந்தவளின் வயிற்றில் உதித்த குழந்தை என்பதாலோ என்னவோ பிரஜனைத் தன் பிள்ளையாகவே எண்ணினான்.

பிரஜனுக்கு ஓரளவு நினைவு தெரிந்த பின் அவன் அனுபல்லவியிடம் தந்தையைப் பற்றிக் கேட்க, அவளோ அவனுக்கு தாய் மட்டும் தான் எனக் கூறி அப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாள்.

தன் சக வயது நண்பர்களுடன் விளையாடும் போது பிரஜனுக்கு தந்தையைப் பற்றிய ஏக்கம் எழும்.

அனுபல்லவியிடம் கேட்டால் அவளோ பிரஜனை அடக்க குரலை உயர்த்த, உடனே தாத்தாவிடம் ஓடிச் சென்று புகார் வாசிப்பான்.

அந்த நேரம் பல்லவன் மகளை வருத்தமாக நோக்க, அவளோ யாரிடம் முகம் கொடுக்க மாட்டாள்.

பிரதாப் வந்ததும் தாயைப் பற்றிக் குற்றப் பத்திரிகை வாசிக்க, பிரஜனை வெளியே அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அவன் விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவனை சமாதானம் செய்வான் பிரதாப்.

பல முறை பிரதாப் பிரஜனிடம் தன்னை அப்பா என அழைக்கக் கூற, அவனோ அனுபல்லவி தனக்கு தந்தை இல்லை எனக் கூறியதைக் கூறி மறுத்து விட்டான் பிரஜன்.

ஆனால் வெளியுலகுக்கு அனுபல்லவியைத் தன் மனைவியாகவும் பிரஜனைத் தன் மனைவியாகவும் பிரதாப் அறிமுகப்படுத்தி இருக்க, அதனை அறிந்து ஆத்திரம் தலைக்கேறிய அனுபல்லவி பிரதாப்புடன் சண்டை இட்டாள்.

“கழுத்துல தாலியோட, ஒரு பையனையும் வெச்சிக்கிட்டு தனியா இருக்குற பொண்ண ஊர் தப்பா பேசுவாங்க அனு‌.” எனப் பிரதாப் தயக்கமாகக் கூறவும், “அதுக்காக எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுறீங்களா?” எனக் கேட்டாள் அனுபல்லவி கோபமாக.

அவ் வார்த்தைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதாப், “ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன். பிரணவ் உன் வாழ்க்கைல வர முன்னாடி இருந்தே உன்ன காதலிக்கிறேன். என் அப்பா, அம்மா பேச்சைக் கேட்டு உன் மேல கோவமா இருந்தாலும் என் ஆள் மனசுல உனக்கான காதல் அப்படியே தான் இருந்தது. நான் மட்டும் அவங்கள நம்பி அந்தத் தப்ப பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு அந்தப் பிரணவ் இருக்குற இடத்துல நான் இருந்திருப்பேன்.” எனக் கத்தினான் தன்னையும் மீறி.

பிரதாப்பின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை அறிந்து கொண்ட அனுபல்லவி அன்றிலிருந்து பிரதாப்பிடம் பேசுவதையே நிறுத்தினாள்.

அனுபல்லவி அவனுடன் பேசாமல் இருக்கவும் தான் பிரதாப்பிற்கே தான் எந்தளவு சுயநலமாக இருக்கிறோம் என்பதே உறைத்தது.

இருந்தும் அவனுக்கு அனுபல்லவியை இழக்க மனமில்லை.

பலமுறை அனுபல்லவியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் பேச முயற்சித்தும் அனுபல்லவியோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு நாள் அனுபல்லவி தன் திருமண நாளில் அறைக்குள் அடைந்து கிடந்து பிரணவ்வின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு அழ, அது பிரஜனின் பார்வையில் விழுந்தது.

ஓரளவு புத்தி சாதுர்யமான சிறுவனோ தாய் கூறாமலே தனக்கும் அப் புகைப்படத்தில் இருப்பவனுக்கும் இருக்கும் முகப் பொருத்தத்தை வைத்து அவன் தன் தந்தை என அறிந்து கொண்டான்.

அந்த வாரம் பிரதாப் சிங்கப்பூர் வந்த சமயம் தாய்க்குத் தெரியாமல் ரகசியமாக அப் புகைப்படத்தை எடுத்துச் சென்று பிரதாப்பிடம் காட்டித் தன் தந்தையிடம் அழைத்துச் செல்லப் பிரஜன் கேட்கவும் அதிர்ந்தான் பிரதாப்.

“பிரஜன்… அம்மா மேல அப்போ உனக்கு பாசம் இல்லையா? இத்தனை வருஷமா அம்மா தானே உன்ன வளர்த்தாங்க. இப்போ நீ அப்பா கிட்ட போகணும்னு சொன்னா அம்மா வருத்தப்பட மாட்டாங்களா?” எனக் கேட்ட பிரதாப்பிற்கு எங்கு அனுபல்லவியை இழந்து விடுவோமோ என்ற பயம் எட்டிப் பார்த்தது.

என்றாவது ஒரு நாள் அனுபல்லவி பிரணவ்வை மறந்து தன்னை ஏற்றுக்கொள்வான் என நம்பிக் கொண்டிருந்தான் பிரதாப்.

பிரதாப்பின் கேள்வியில் பிரஜனின் முகம் வாடி விட, அதனைக் காண மனம் பொறுக்காத பிரதாப் வேறு வழியின்றி, “சரி அப்போ ஒரு டீல். நெக்ஸ்ட் மந்த் பிஸ்னஸ் விஷயமா நாம எல்லாரும் இந்தியா போறோம். அங்க வெச்சி முடிஞ்சா நான் உனக்கு உன் அப்பாவ காட்டுறேன். ஆனா உங்க அப்பாவுக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால நீ அவர் பையன்னு அவருக்கு தெரியாது. நீயும் சொல்லக் கூடாது. அவர் கூட பேச ட்ரை பண்ணக் கூடாது. அம்மா கிட்டயும் எதுவும் சொல்லக் கூடாது. ஓக்கேயா?” எனக் கேட்கவும், “டீல்…” எனத் துள்ளிக் குதித்தான் பிரஜன்.

அதன் பின் தான் அனைவரும் இந்தியா கிளம்பிச் சென்றது.

ஹைதராபாத்தில் தம் கம்பனிக்கு வந்து பார்த்த அனுபல்லவி அங்கு கூட அனைவரும் தன்னைப் பிரதாப்பின் மனைவியாகப் பார்ப்பதைக் கண்டு கோபம் கொண்டாள்.

ஆனால் தான் மறுத்து ஏதாவது கூறினால் பிரதாப்பிற்கு சங்கடமாக இருக்கும் என்பதாலும் அவள் சில நாட்களுக்கு மட்டுமே இந்தியாவில் இருப்பதாலும் அமைதியாக இருந்தாள்.

அனுபல்லவி இந்தியா வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அவளுக்குக் கிடைத்த செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அவள்.

அது என்னவென்றால் உடல்நிலை சரியில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்த்த கிஷோர் அங்கிருந்து தப்பித்து விட்டான் என்பதே.

உடனே பல்லவனுக்கு விஷயத்தைக் கூறிய அனுபல்லவி நிலைமையைப் பற்றி விசாரிக்க காவல்நிலையம் சென்று சற்று நேரத்தில் இங்கு பல்லவனைத் தேடி பழி தீர்க்க வந்தான் கிஷோர்.

வீட்டில் பல்லவனும் பிரஜனும் தனியாக இருந்தது கிஷோருக்குச் சாதகம் ஆகிப் போனது.

கிஷோரை அங்கு எதிர்ப்பார்க்காத பல்லவன் அதிர, பிரஜனோ பயந்து பல்லவனில் மடியில் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டான்‌. 

தன்னை இந் நிலைக்குத் தள்ளிய அனுபல்லவியைப் பழி தீர்க்க அவளின் மகனைக் கொல்ல முடிவு செய்து பிரஜனை நோக்கி கத்தியை எடுத்துக் கொண்டு முன்னேறிய கிஷோர் கத்தியை பிரஜன் மீது இறக்க முயற்சிக்க, பல்லவன் பிரஜனை மறைக்க முயற்சித்ததால் கத்தி பல்லவனின் முதுகில் இறங்கியது.

கத்தியை உருவி மீண்டும் பிரஜனைக் குத்த முற்பட்ட நொடியில் கிஷோரின் தோளில் ஒரு குண்டு பாயவும் அங்கேயே விழுந்தான் அவன்.

போலீஸிடம் இருந்து தப்பித்த கிஷோர் நிச்சயம் பல்லவனைத் தேடித் தான் வருவான் என எதிர்ப்பார்த்த ஏ.சி.பி அபிஷேக் தான் சரியான நேரத்துக்கு வந்து பல்லவனையும் பிரஜனையும் காப்பாற்றியது.

முதுகில் கத்தி குத்துப்பட்டதால் இரத்தம் அதிகமாக வெளியேறி பல்லவன் மயங்க, கிஷோரைக் கைது செய்து விட்டு உடனே பல்லவனை மருத்துவமனையில் சேர்த்து அனுபல்லவிக்குத் தகவல் தெரிவித்தான் அபிஷேக்.

விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு ஓடி வந்த அனுபல்லவி பல்லவனை அனுமதித்திருந்த அறைக்கு வெளியே பிரஜனை அணைத்துக் கொண்டு கலங்கிப் போய் அமர்ந்திருந்த பிரதாப்பைக் கண்டு தந்தைக்கு என்னவோ எனப் பயந்தாள்.

“மாமா… அப்பாவுக்கு என்னாச்சு? அவர் எப்படி இருக்கார்?” எனப் பதட்டமாகக் கேட்ட அனுபல்லவியிடம், “ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு அனு. பயப்படும்படி ஒன்னும் இல்லன்னு தான் நினைக்கிறேன். கத்தி அவ்வளவு ஆழமா இறங்கல.” எனப் பிரதாப் கூறவும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

பல்லவன் கண் விழித்ததும் மூவரும் சென்று அவனைப் பார்த்தனர்.

மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் துவண்டு போய் இருந்த தந்தையை அணைத்துக் கொண்டு அனுபல்லவி கண்ணீர் விட, அவளை சமாதானம் செய்வதற்குள் பல்லவனுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து பல்லவனை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

“என்னை மன்னிச்சிடு அனு. என்னை மன்னிச்சிடுங்க மாமா.” எனப் பிரதாப் திடீரெனக் கேட்கவும் அனுபல்லவியும் பல்லவனும் அவனைக் குழப்பமாக நோக்க, “அப்பா ஹாஸ்பிடல்ல இருக்குறது எனக்கு முன்னாடியே தெரியும். அவர் அங்கிருந்து தப்பிச்சதும் முதல்ல எனக்கு தான் கால் பண்ணாரு. மாமாவ பார்த்து அவர் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு சொல்லவும் நான் தான் மாமா இருக்குற இடத்த சொன்னேன். அதுவும் அவரே போலீஸ்ல சரண்டர் ஆகிடுவேன்னு சொன்னார். திரும்பவும் அவர நம்பி பெரிய தப்பு பண்ணிட்டேன்.” என்றான் பிரதாப் தயக்கமாக.

அனுபல்லவி கோபமாக ஏதோ கூற வர, அவளைத் தடுத்த பல்லவன், “பிரதாப்…” என அழைக்கவும் பிரதாப் பல்லவனின் அருகில் வர, யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பல்லவன்.

பிரதாப் தலை குனிந்து நின்றிருக்க, “ஒரு தடவை தப்பு பண்ணா தெரியாம பண்ணிட்டன்னு விடலாம். ஆனா உன் அப்பன பத்தி தெரிஞ்சும் அவன் தப்பிச்சத பத்தி நீ எங்க கிட்ட மறைச்சிருக்க. உன் அப்பாவாலயும் அம்மாவாலயும் தான் நான் என் பொண்டாட்டிய இழந்தேன். என் பொண்ணு அநாதையா நின்னா. எனக்கு ஒன்னுன்னா நான் பொறுத்துப் போவேன். ஆனா என்னை சார்ந்தவங்களுக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க மாட்டேன். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என் பேரனோட நிலைமை என்ன?” எனப் பல்லவன் கூறும் போதே அவனின் குரல் நடுங்கியது.

அனுபல்லவிக்கும் அதனை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அதனால் தான் பல்லவனுக்கு பிரதாப் மீது அவ்வளவு கோபம்.

பிரதாப் இன்னுமே தலை குனிந்து நின்றிருக்க, “போதும். இதுக்கு அப்புறம் என் கண்ணு முன்னாடியே வராதே. உன் குடும்பத்தால நான் இழந்தது போதும். இதுக்கு மேல எதையும் இழக்க எனக்கு சக்தி இல்ல.” என்றான் பல்லவன் கோபமாக.

“மாமா நான்…” என ஏதோ கூற வந்த பிரதாப்பை இடையிட்ட பல்லவன், “பல்லவிம்மா இவனப் போக சொல்லு இங்க இருந்து.” எனக் கத்தினான் கோபமாக.

மறு நொடியே பல்லவனுக்கு மூச்சு வாங்க, “அப்பா… அப்பா… டென்ஷன் ஆகாதீங்க. ப்ளீஸ்…” என பல்லவனுக்குக் குடிக்கத் தண்ணீரைக் கொடுத்தாள் அனுபல்லவி.

பின் திரும்பி  பிரதாப்பை அழுத்தமாக நோக்க, மனமுடைந்து அங்கிருந்து கிளம்பினான் பிரதாப்.

பிரதாப்பைக் காணாது பிரஜன் அடிக்கடி அவனைப் பற்றிக் கேட்க, வேறு வழியின்றி மகனுக்காக பிரதாப்பை வீட்டுக்கு வரவழைத்தாள் அனுபல்லவி.

ஆனாலும் அவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை அவள்.

பல்லவனுக்கும் பிரதாப்பைக் காணும் போது கிஷோர் பிரஜனைக் கொல்ல முயன்ற காட்சி நினைவுக்கு வர, பல்லவனின் கோபம் குறைய மறுத்தது.

ஆனால் ஏனோ தொடர்ந்தும் பல்லவனால் தன் கோபத்தைத் தொடர முடியவில்லை.

என்ன இருந்தாலும் தான் தூக்கி வளர்த்த மருமகன் அல்லவா?

இவ்வாறிருக்கும் போது தான் பிரதாப்பே எதிர்ப்பார்க்காதது பிரணவ்வே தம்மைத் தேடி வருவான் என்று.

அதுவும் பிரணவ்வுக்கு நினைவு திரும்பி பிரஜனையும் அனுபல்லவியையும் தன்னோடு அழைத்துச் செல்வானோ எனப் பயந்தவன் பிஸ்னஸ் விஷயமாக வந்திருந்தவர்களிடம் அனுபல்லவியைத் தன் மனைவி போல் காட்டிக் கொண்டான்.

அதுவே அனுபல்லவிக்கு பிரதாப் மீது கோபத்தை அதிகரித்தது.

பிரதாப் பிரஜனை அழைத்துக் கொண்டு பார்க் சென்றிருந்த வேலை அவனுக்கு ஒரு அழைப்பு வரவும் பிரஜனை அங்கே விளையாட விட்டு விட்டு சற்றுத் தள்ளி நின்று அழைப்பை ஏற்று பேசினான்.

ஆனால் அங்கு பிரணவ்வும் இருப்பான் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவும் பிரஜன் ‘அப்பா’ என அழைத்தவாறு பிரணவ்விடம் செல்லவும் அவசரமாக சென்று பிரஜனைத் தூக்கி தன்னைப் பிரஜனின் தந்தை எனப் பிரணவ்விடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதனால் தான் பிரஜன் அவன் மீது கோபமாக இருந்தது எல்லாம்.

அதன் பின் ஏதேதோ நிகழ்வுகள் நடந்து பிரணவ்வுக்கு நினைவு திரும்பி அனுபல்லவியைத் தன்னுடன் அழைத்தான். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்