Loading

தன் மாமனே தன்னைக் கொல்ல நினைக்கிறார் என அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரணவ்விற்கு அதற்கான காரணம் தான் பிடிபடவில்லை.

 

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனைக் காணும் போது ஆகாஷிற்கு பாவமாக இருக்க, “பாஸ்…” என்றான் தயங்கியபடி.

 

பிரணவ் தலையை நிமிர்த்தாமலே, “ஐம் ஓக்கே ஆகாஷ்… நீங்க போங்க…” என்கவும் ஆகாஷ் சென்று விட, பிரணவ் தன் தாய் மாமனை எண்ணி யோசனையில் ஆழ்ந்தான்.

 

பிரணவ்வின் பெற்றோர் எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று ஓடிக் கொண்டிருந்தாலும் பிரணவ்வின் தாய் மாமன் அடிக்கடி அவனை வந்து பார்த்து அவனிடம் அன்பாகவே நடந்து கொள்வார். தன் பெற்றோரை விட பிரணவ் அவரிடம் சற்று நெருக்கமாகவே பழகுவான். அப்படி இருக்கும் போது தன் மாமாவே தன்னைக் கொல்ல முயன்றதை அறியும் போது அவனால் அதனை நம்பவே முடியவில்லை.

 

சற்று நேரம் அது பற்றியே சிந்தித்தவன் வேண்டும் என்றே வேறு யாரோ தனக்கும் தன் மாமனுக்கும் இடையில் பிணக்கு ஏற்படுத்த இவ்வாறு செய்வதாகவே முடிவெடுத்தான்.

 

************************************

 

பிரணவ் கேட்ட ஃபைல்களை ஒப்படைக்க அனுபல்லவி அவனின் அறைக் கதவைத் தட்ட, உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால் அன்று போல் பிரணவ்விற்கு ஏதாவது ஆகி விட்டதோ எனப் பயந்தவள் அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

 

ஆனால் அறையில் யாருமே இருக்கவில்லை. “சார்…” என அழைத்தவாறு சுற்றும் முற்றும் பார்வையைப் பதித்த அனுபல்லவியைக் கவர்ந்தது மேசையில் வைக்கப்பட்டிருந்த நாவல்.

 

அதனைக் கையில் எடுத்துப் பார்த்த அனுபல்லவி, “ஓஹ்… நம்ம ஆளு நவல்ஸ்லாம் ரீட் பண்ணுவாரா?” என ஆச்சரியமாகத் தன்னையே கேட்டுக் கொண்டவளிடம், ‘எதே? உன் ஆளா?’ எனக் கேட்டது மனசாட்சி.

 

மனசாட்சியின் கேள்வியில் முகம் சிவந்தவள், “ஏன்? என் ஆளுன்னு சொன்னா என்ன தப்பு? எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு… அப்புறம் அவர் சிங்கிள் வேற…” என்க, ‘உனக்கு எப்போ இருந்து அவரைப் பிடிச்சிருக்கு? அப்புறம் அவர் சிங்கிள்னு உன் கிட்ட யாரு சொன்னாங்க?’ என மனசாட்சி மீண்டும் வினா எழுப்ப, “இந்த சிடுமூஞ்சியாவது யாரையாவது லவ் பண்றதாவது? அவரை எப்போ இருந்து பிடிக்கும்னு நான் அவர் கிட்டயே சொல்லிக்குறேன்… உன் கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…” என அனுபல்லவி மனசாட்சிக்கு குட்டு வைத்தவாறு மெதுவாகத் திரும்ப, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி, ஒரு காலை மடக்கி சுவரில் சாய்ந்தவாறு நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

 

பிரணவ் நின்ற தோற்றம் வழமை போலவே அனுபல்லவியை அவனை ரசிக்கத் தூண்ட, பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் அவனையே விழி அகற்றாமல் ரசித்தாள் அனுபல்லவி.

 

பிரணவ், “என்ன மிஸ் பல்லவி? சைட் அடிச்சி முடிச்சிட்டீங்களா?” என்ற பிரணவ்வின் குரலில் சுயம் உணர்ந்த அனுபல்லவி அவள் இவ்வளவு நேரம் செய்து கொண்டிருந்த காரியத்தை உணர்ந்து அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

 

அனுபல்லவி, “சார்… நான்… நான்… ஃபைல்…” என வார்த்தை வராது தடுமாற, “ஹ்ம்ம்… சொல்லுங்க பல்லவி… எத்தனை மார்க் போடலாம்? தேருவேனா?” எனப் பிரணவ் கேட்கவும், “இனிஃபினிட்டி…” எனத் தன்னை மறந்து கூறிய அனுபல்லவி அவசரமாக நாக்கைக் கடித்தாள்.

 

அப்போது தான் பிரணவ்வின் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தாள். எப்போதும் இருக்கும் இறுக்கம் அகன்று, முகத்தில் மெல்லிய புன்னகையுடன் கண்களில் ஒரு வித ரசனையுடன் அவனின் பார்வை அனுபல்லவியைத் தழுவியது.

 

அதன் காரணம் அறியாத பேதையோ, ‘என்ன இவர் இப்படி பார்க்குறார்? கோவமா பார்த்தா கூட தாங்கிக்கலாம்… இது என்ன பார்வை? ஏன் இந்தப் பார்வை என்னை ஏதோ பண்ணுது?’ என மனதினுள் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, தன் அழுத்தமான காலடிகளுடன் மெதுவாக அவளை நெருங்கினான் பிரணவ்.

 

‘ஐயோ பக்கத்துல வராரே… நான் இப்போ என்ன பண்றது? அவர் கிட்ட பர்மிஷன் கேட்காம அவரோட புக்கை எடுத்தேன்னு அடிப்பாரோ? எங்க அடிப்பார்? கன்னத்துல அடிச்சிட்டார்னா என்ன பண்றது? யாராவது கேட்டா இவரை மாட்டி விடவும் முடியாதே?’ என அனுபல்லவி மீண்டும் மனதுக்குள் விவாதிக்க, அவளின் கால்களோ பிரணவ் முன்னேறும் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி நகர்ந்து அதற்கு மேல் முடியாது மேசையுடன் ஒட்டி நின்றாள்.

 

அனுபல்லவியின் முகத்தில் தெரியும் பதட்டத்தையும் அவளின் முகம் காட்டும் பல்வேறு பாவனைகளையும் ரசித்தவாறே அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவி நகர முயற்சித்தால் அவன் நெஞ்சின் மீது மோதும் இடைவெளியில் தன் நடையை நிறுத்தினான்.

 

இவ்வளவு நெருக்கமாக பிரணவ் வந்து நிற்கவும் இன்னும் பின்னே நகர முயற்சித்தவளை மேசை தடுக்க, மேசையிலேயே உட்கார்ந்து விட்டாள்.

 

ஒரு பக்கம் அனுபல்லவிக்கு பிரணவ் என்ன செய்து விடுவானோ என்ற பதட்டம் இருக்க, இன்னொரு பக்கம் இவ்வளவு நெருக்கமாக நிற்பவனை ரசித்தது அவளது மனம்.

 

தான் நின்ற இடத்தில் இருந்தே அனுபல்லவியின் பக்கம் லேசாக சாய்ந்த பிரணவ் தன் இடது கையால் அனுபல்லவிக்கு நெருக்கமாக மேசையைப் பிடித்தவன் அவளை இன்னும் சற்று நெருங்கவும், “சா…ர்…” என்றவளின் நா தந்தியடித்தது.

 

இதழ் மூடி புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை அணைப்பது போல் மற்ற கையையும் கொண்டு செல்ல, அனுபல்லவியின் இதயத்துடிப்பு எகிற, அவனின் நெருக்கத்தில் அனுபல்லவியின் காது மடல்கள் வெட்கத்தில் சிவந்தன.

 

அதனை மறைக்கக் கூட வழியின்றி அவளின் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, சில நொடிகளில் ஏதோ சத்தம் கேட்கவும் விழி திறந்தவள் கண்டது அவளை சுற்றி தன் கரத்தை நீட்டி மேசை ட்ராயரைத் திறந்து கொண்டிருந்த பிரணவ்வைத் தான்.

 

சரியாக பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் அனுபல்லவி சிறை பிடிக்கப்பட்டிருக்க, அசையக் கூட இடமின்றி அவனின் நெருக்கத்தில் அவஸ்தைப்பட்ட அனுபல்லவியின் இதழைச் சுற்றி வியர்வைப் பூக்கள் பூத்தன.

 

அவள் படும் அவஸ்தையை ரசித்தவாறே ட்ராயரைத் திறந்து அனுபல்லவியின் இளமஞ்சள் நிற துப்பட்டாவை பிரணவ் கையில் எடுத்துக்கொண்டு நிமிரவும் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் அனுபல்லவி.

 

இன்னுமே பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் சிறை பிடிக்கப்பட்டு இருந்தவளோ அதைக் கூட உணராது, ‘அவருக்கு தெரிஞ்சிடுச்சா நான் தான் அவரைக் காப்பாத்தினதுன்னு?’ என சிந்திக்க, இதற்கு மேலும் அனுபல்லவியை சீண்ட விரும்பாத பிரணவ் தன் கரங்களை எடுத்து அவளுக்கு விடுதலை அளித்தான்.

 

அந்த துப்பட்டாவை அனுபல்லவியின் முகத்துக்கு நேராக ஆட்டிக் காட்டிய பிரணவ், “அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை வெச்சிக்கிறது எனக்கு பிடிக்காது…” என்க, ‘நான் அடுத்தவளா?’ எனத் திடீரென முளைத்த கோபத்தில் அவனின் கரத்தில் இருந்த தன் துப்பட்டாவைப் பறிக்க கரத்தை நீட்டினாள் அனுபல்லவி.

 

பட்டென அதனைத் தனக்குப் பின்னே மறைத்த பிரணவ் குறும்புப் புன்னகையுடன், “ஆனா…..” என இழுத்தவன் அனுபல்லவியின் உதட்டின் மேல் பூத்திருந்த வியர்வையை தன் பெருவிரலால் அழுத்தித் துடைக்க, அனுபல்லவிக்கோ மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

 

அனுபல்லவியின் கண்கள் அவனின் செயலில் அதிர்ச்சியில் விரிந்திருக்க, அதனை ரசித்தவாறே அந்த துப்பட்டாவை முன்னே கொண்டு வந்தவன் அதன் வாசனையை தனக்குள் இழுத்துக்கொள்வது போல் புன்னகையுடன் இழுத்து முகர்ந்தான்.

 

அனுபல்லவிக்கு அவன் ஏதோ தன்னையே முகர்ந்தது போல் மேனி சிலிர்க்க, முகம் சிவந்தவள் பிரணவ் எதிர்ப்பார்க்காத சமயம் அவனைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினாள்.

 

அனுபல்லவி சென்ற பின்னும் அவள் சென்ற திசையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் அந்த துப்பட்டாவை தன் நெஞ்சுடன் அணைத்தபடி, “பல்லவி… பல்லவி… யூ ஆர் டெம்ப்டிங் மீ…” என்றான் விழிகளை முடி ரசனையுடன்.

 

இங்கு பிரணவ்விடமிருந்து தப்பித்து ஓடி வந்தவளோ, ஒரு பாட்டில் தண்ணீர் முழுவதையுமே காலி செய்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

அவளை விசித்திரமாகப் பார்த்த சாருமதி, “என்னாச்சு அனு? எதுக்கு ஏதோ ரேஸ் ஓடிட்டு வந்ததைப் போல தண்ணியை குடிக்கிற?” எனக் கேட்கவும் அவளிடம் என்ன கூறி சமாளிக்க என விளித்த அனுபல்லவி, “அது… அது… ஒன்னுமில்ல டி… சும்மா தான்… ஆஹ்… ஆகாஷ் உன்ன லவ் பண்றதா சொன்னன்னு சொன்னியே… அப்புறம் என்னாச்சு?” எனப் பேச்சைத் திசை மாற்ற, அது சரியாக சாருமதியிடம் வேலை செய்தது.

 

சாருமதி, “அவனைப் பத்தி நினைச்சாலே கடுப்பா வருது அனு… சரியான இம்சை..‌. அன்னைக்கு என்னைத் திட்டிட்டு அப்புறம் வந்து கொஞ்சுறான்… அதுலயும் அந்த பனைமரம் என்னைக் குட்டச்சி பேபின்னு சொல்லும் போது அப்படியே அவனைக் கடிச்சு குதறி விடத் தோணுது டி…” என ஆகாஷை அர்ச்சிக்கத் தொடங்க, அதனை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த அனுபல்லவி சாருமதிக்கு பின்னே வந்து நின்றவனைக் கண்டு கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவள், “சாரு… நீ அவரைத் திட்டிட்டு இரு… நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்…” என அங்கிருந்து மெதுவாகக் கழன்று கொள்ள, “ஹேய் அனு… நில்லு டி…” என்ற சாருமதியின் கத்தல் அனுபல்லவியின் இருக்கையில் வந்து அமர்ந்த ஆகாஷைக் கண்டதும் தடைப்பட்டது.

 

“நீ… நீ… நீ இங்க என்ன பண்ணுற?” என திடீரென ஆகாஷை அங்கு எதிர்ப்பார்க்காது சாருமதி திக்கித் திணறிக் கேட்க, “யாரோ என்னை ரொம்ப புகழ்றாங்கன்னு என் மனசு சொல்லிச்சு… வந்து பார்த்தா என் குட்டச்சி பேபி…” என ஆகாஷ் கண்களில் காதல் சொட்டக் கூறினான்.

 

ஆகாஷின் பார்வையில் அவன் பக்கம் சாயத் துடித்த மனதை கடினப்பட்டு அடக்கிய சாருமதி, “சாருக்கு புகழ்ச்சி ஒன்னு தான் குறைச்சல்… ஆளையும் மூஞ்சியையும் பாரு…” என்றாள் உதட்டை சுழித்தபடி.

 

ஆகாஷ், “குட்டச்சி.‌‌..” என ஏதோ கூற வரவும் ஆவேசமாக எழுந்த சாருமதி, “யாரு டா குட்டச்சி? திரும்ப திரும்ப அதையே சொல்ற… மவனே நீ இன்னைக்கு செத்தடா பனைமரம்…” என்றவள் ஆகாஷின் முடியைப் பிடித்து எல்லாப் பக்கமும் ஆட்ட, மொத்த ஆஃபீஸும் அவர்களை வேடிக்கை பார்த்தது.

 

கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு அங்கு வந்த பிரணவ் இவர்களின் செயலில் கோபம் மூண்டு, “ஆகாஷ்‌…” எனக் கத்த, இருவரும் பதறி விலகினர்.

 

பிரணவ், “என்ன நடக்குது இங்க ஆகாஷ்? இதென்ன ப்ளே க்ரௌண்ட்டா? உங்க விளையாட்டை எல்லாம் ஆஃபீஸுக்கு வெளிய வெச்சிக்கோங்க… கண்டிப்பா இதுக்கு உங்களுக்கு பனிஷ்மன்ட் இருக்கு… மேனேஜ்மன்ட் கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேரோட இந்த மந்த் போனஸை கட் பண்றேன்…” என்றான் கோபமாக.

 

பிரணவ்வின் கோபத்திற்கு பயந்து அனைவரும் கலைந்து செல்ல, தலைகுனிந்து நின்றிருந்த இருவரையும் முறைத்த பிரணவ், “இன்னும் என்ன நிற்கிறீங்க? வேலையைப் பாருங்க… ஆகாஷ்… என் கேபினுக்கு வாங்க…” எனக் கட்டளையிட்டு விட்டு சென்றான்.

 

பிரணவ் சென்றதும் சாருமதி ஆகாஷை ஏகத்துக்கும் முறைக்க, ‘ஆத்தி… குட்டச்சி காளி அவதாரம் எடுத்துட்டா… எஸ்கேப் ஆகிடுடா ஆகாஷ்…’ என மனதில் எண்ணியவன், “இதோ வந்துட்டேன் பாஸ்…” என்றவாறு பிரணவ்வின் அறைக்கு ஓடினான்.

 

************************************

 

வாஷ்ரூம் வந்த அனுபல்லவி கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

 

பிரணவ்வின் நெருக்கத்தில் சிவந்த அவளின் காது மடல்கள் இன்னும் சிவப்பாகவே இருந்தன.

 

பிரணவ் தொட்ட இடம் கூட இன்னும் குறுகுறுக்க, “ஐயோ… கொல்றானே…” என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் அனுபல்லவி.

 

‘அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என்ன ஆச்சு அனு உனக்கு? நோ அனு… கூல் டவுன்… அவர் வேணும்னே உன்ன சீண்டுறார்… மாட்டிக்காதே…’ என மனதிற்குள் பேசிய அனுபல்லவி வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் முகத்தில் நன்றாக நீரை அடித்துத் துடைத்துக் கொண்டு வெளியே செல்ல, வாஷ்ரூமுக்கு வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள்.

 

அனுபல்லவி அவளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்கு செல்ல, அர்ச்சனா தான் அவளின் சிவந்திருந்த முகத்தை சந்தேகமாக நோக்கினாள்.

 

உடனே பிரதாப்பிற்கு அழைத்த அர்ச்சனா அவன் அழைப்பை ஏற்றதும் கத்தத் தொடங்கினாள்.

 

அர்ச்சனா, “நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க பிரதாப்? பெரிசா சபதம் போட்ட அந்த அனுவை என் வழில இருந்து தூக்கி காட்டுறேன்னு… போற போக்க பார்த்தா எனக்கு எதிரா தான் எல்லாம் நடக்கும் போல… நீ அவளை எதுவுமே பண்ணலயா?” எனக் கோபமாகக் கேட்க, 

 

“ஏய்… என்ன ரொம்ப தான் சத்தம் போடுற? இங்க உனக்கு தான் என் ஹெல்ப் தேவை… எனக்கு இல்ல… நான் எதுவுமே பண்ணலன்னு நினைச்சிட்டு இருக்கியா? நான் என்ன பண்ணினாலும் அந்த பிரணவ் என் எல்லாப் ப்ளேனையும் தவிடு பொடியாக்குறான்… கொஞ்சம் நாள் பொறுமையா இருந்து அவங்க எதிர்ப்பார்க்காத சமயம் தான் காயை நகர்த்தணும்… உனக்கு அவ்வளவு அவசரம்னா நீயே ஏதாவது பண்ணி வழக்கம் போல அவன் கிட்ட மாட்டிக்கோ…” எனக் கோபத்தில் கத்தி விட்டு பிரதாப் அழைப்பைத் துண்டிக்கவும் கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா காலால் தரையை உதைத்தாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்