Loading

       நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி குழுவாக செல்வதால் பேருந்தில் இருந்த அனைவருமே மகிழ்ச்சியான மனநிலையில் பாடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் வர மகி ஏதோ யோசனையிலே அமர்ந்திருந்தாள். “என்ன மகி என்ன யோசனை?” என அருகில் இருந்த ஆகாஷ் கேட்டான்.

“இல்ல. இதெல்லாம் யாரோட பிளான். நீ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல?” எனக் கேட்டாள் மகி. “நான் சொல்ல வந்தப்பல்லாம் நீ விட்டாதானே. எல்லா ஏற்பாடும் சந்துரு சாரோடது தான்.” என்றான் ஆகாஷ். இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க அருகில் இருந்த காலியான இருக்கையில் வந்து அமர்ந்தான் சந்துரு.

சந்துரு, “என்ன மேடம் இப்ப சந்தோஷமா?” எனக் கேட்க, “ஓ உங்க வேலையா இதெல்லாம். நான் கல்யாணத்துக்கு போகனும்னு உங்ககிட்ட சொன்னனா என்ன. நல்ல கிப்டா வாங்கலாம்னு நினைச்சேன் அவ்ளோதான்.” என்றாள் மகி. “நீ என்ன கிப்ட் வாங்கனும்னு நினைச்ச.” என்றான் சந்துரு.

மகி, “எல்லாரும் சேர்ந்து பணம் போட்டா கோல்ட்ல ஏதாவது வாங்கலாம்னு தோணுச்சு.” எனவும்.. “இது ஓகேவா பாரு.” என அவன் ஒரு நகைப்பெட்டியை கொடுக்க திறந்து பார்த்தால் அழகிய கற்கள் பதிக்கப்பட்டு ஒரு நெக்லஸ் இருந்தது. “வாவ். சூப்பரா இருக்கு.” என ஆகாஷ் கூற மகியும் அதைத்தான் நினைத்தாள்.

“இது நீங்க என்கிட்ட கூட சொல்லலயே. உங்க கிப்டா சார்.” எனக் கேட்டான் ஆகாஷ். “இல்ல நம்ப கம்பெனில இருக்கிற எல்லார்கிட்டயும் கலெக்ட் பண்ணதுதான். மகி சொன்னதையே நேரடியா பணமா வாங்கி இதை வாங்கினேன்.” என்றான் சந்துரு.

“முன்னாடியே சொல்லியிருந்தா நாங்களும் கொடுத்திருப்போம்ல?” என ஆகாஷ் கேட்க, “யார் இப்ப வேணாம்னு சொன்னது. இப்பவும் குடுக்கலாம். என் கைக்காசை போட்டுருக்கேன் உங்க ரெண்டு பேருக்கும்.” என்றான் சந்துரு. “ஓ. அப்ப ஓகே சார். இந்தாங்க என்னோட ஷேர்.” என ஆகாஷ் கொடுக்க மகி அவனை தடுத்தாள்.

“அதான் சொல்லலல்ல. அப்பறம் என்ன. அப்படில்லாம் கொடுக்க முடியாது. நாங்க தனியாவே கிப்ட் குடுத்துக்கறோம்.” என்றாள் மகி. “ஹேய். ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லல. கோவிச்சுக்கிட்டியா?” என்றான் சந்துரு. “அதெல்லாம் இல்ல. வாங்கின கிப்ட்டை என்ன பண்றது. அதான்.” என்றாள் மகி.

“அத வேற யாருக்காவது கொடுக்கலாம். ம்ம். ஆகாஷ் மேரேஜ்க்கு. இல்ல. என் மேரேஜ்க்கு அந்த கிப்ட்டை குடுத்துரு. சரியா?” என சமாதானம் செய்தான். “அப்பறம் வார்த்தை மாறக்கூடாது கண்டிப்பா உங்க மேரேஜ்க்கு இதே கிப்ட்தான் குடுப்பேன்.” என்றாள் மகி.

“ம்ம் கண்டிப்பா.” எனவும், “அப்ப ஓகே. ஆனா அதுக்காகலாம் காசு குடுக்க முடியாது. என்கிட்ட சொல்லாம பண்ணதுக்கு பனிஷ்மெண்ட் அது.” என்றவள் எழுந்து முன்னே சென்று அமர்ந்து விட்டாள். “ஏன் ஆகாஷ். இங்க நான்தானே எம்.டி. பேசறதை பார்த்தா.” என இழுத்தான் சந்துரு.

“சார் அவ சும்மா உங்ககிட்ட சொல்றா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நான் வேணா பணம் குடுக்கறேன்.” என்றான் ஆகாஷ் அவசரமாக. “அதெல்லாம் இல்ல ஆகாஷ். சொல்லப்போனா அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. நீயும் என்ன பேர் சொல்லியே கூப்பிடலாம். எனக்கு ரொம்ப ப்ரண்ட்ஸ்லாம் இல்ல. நாம ஏன் ஃப்ரண்ட்ஸா ஆகக் கூடாது.” என்றான் சந்துரு.

“நீங்க இவ்ளோ இயல்பா பேசறத்துக்கு நான் வேணாம்னு வேற சொல்வேனா ஃப்ரண்ட்ஸ்.” என ஆகாஷ் தனது கைகளை நீட்ட மாறி அவனுக்கு அருகில் அமர்ந்தவன் தோளில் கைப்போட்டுக் கொண்டான். வேலூர் வரும்வரை இருவரும் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டு வர சந்துருவிற்கு தான் அது புதிய அனுபவமாக இருந்தது.

வழியில் வேலூர் பொற்கோவில் பார்த்துவிட்டு செல்லலாம் சந்துரு கூறியிருந்ததால் பேருந்து அங்கு நிறுத்தப்பட்டது. கோவிலை சுற்றி வரும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு நட்சத்திர வடிவ நடைபாதை அமைக்கப்பட்டிருக்க அனைவரும் அதில் நடந்தனர்.

சற்று தூரத்திலே நடுவில் முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட நாராயணிக்கு எழுப்பப்பட்ட கோவில் தெரிந்தது. “அச்சோ அழகா இருக்குல்ல.” என மகி அதிசயிக்க, சந்துருவும் அதுபோலவே பார்த்தான். “நீ ஏற்கனவே வந்திருக்கியா ஆகாஷ்.” என சந்துரு கேட்கவும் ஆமாமென தலையாட்டியதோடு விளக்கமும் கொடுத்தான்.

“இது நாராயணி எனும் மகாலெட்சுமிக்கு கட்டின கோவில். இங்க அம்மன் சுயம்புவா அருள்பாலித்து அதற்கு பிறகு கோவில் கட்டியிருக்காங்க. சுமார் ஆயிரத்து ஐநூறு கிலோ தங்கத்துல முழுக்க முழுக்க தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பயன்படுத்தி எட்டு அடுக்கா கட்டியிருக்காங்க..

கோவிலை சுற்றிலும் அகழி இருக்கற மாதிரி அமைப்புல கட்டியிருப்பாங்க. அமிர்தசரஸ் பொற்கோவில் மாதிரி தமிழ்நாட்டுக்கு இது பொற்கோவில்.” எனும்போதே கோவிலை நெருங்கியிருக்க தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.

அதைப்பற்றி சிலாகித்து பேசிக் கொண்டே அருகில் இருந்த ஒரு உணவகத்தில் மதிய உணவையும் முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தனர். இப்போது மூவருக்குள்ளும் ஒரு இணக்கம் வந்திருந்தது.

             பெங்களூருவில் அன்று காலையில் அலுவலகம் வந்ததுமே சித்துவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கவின் வேறு விசயமாக வெளியில் சென்றுவிட்டு தாமதமாக வருவதாக கூறியிருக்க சித்து தனது அறையில் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தான்.

அவனது வாடிக்கையாளர் சிலரிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்க, அதை திறந்து பார்த்தவன் திகைத்து போனான். அனைத்துமே அவர்களுக்கும் சித்து கம்பெனிக்குமான தொடர்பை அறுக்கும் வகையில் இருந்தது தான் காரணம். அதுவும் நான் உங்களது கோரிக்கையை ஏற்று இந்த பிராஜக்ட்டை கேன்சல் செய்கிறேன் என்று ஆங்கிலத்தில் இருந்தது.

பிராஜக்ட் கேன்சல் செய்வதாக தான் எதுவுமே கூறவில்லையே. என நினைத்துக் கொண்டே அனுப்பிய அஞ்சல்களை பார்த்தால் அனைத்து கம்பெனிக்கும் “தற்போது போதிய வசதி இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி குடுக்க முடியாது. இதற்கு சம்மதம் இல்லையெனில் கேன்சல் செய்துக் கொள்ளலாம்” என அனுப்பப்பட்டிருந்தது.

அனுப்பிய நேரத்தை கணக்கிட்டு பார்த்தால் எல்லாமே நேற்றிரவு வேலை நேரம் முடிந்து அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பின் அறைக்கு யார் வந்திருப்பார்கள் என நினைத்து சிசிடிவியை சரிபார்க்க தொடங்கியபோது உள்ளே வந்தான் கவின்.

“என்ன மச்சி. காலையிலேயே சிசிடிவில தங்கச்சியை சைட் அடிக்கறியா?” எனக் கேட்டவன், சித்துவின் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டதும் விளையாட்டை விடுத்து, “என்னாச்சு மச்சி. எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான். “ஆமாடா. பிராப்ளம்தான்.” என்றான் சித்து.

கவின், “என்னாச்சு சொல்லு.” எனக் கேட்க, “நேத்து நாம இரண்டு பேரும் கிளம்பறப்ப மணி பத்து இருக்கும்ல. அதுக்கப்பறம் யாராவது  இங்க வர சான்ஸ இருக்கா?” என கேட்டுக் கொண்டே சித்து செக் செய்ய சிசிடிவியும் அதுவும் யாரும் வரவில்லை என காட்டியது. “கண்டிப்பா வாய்ப்பே இல்ல. என்னாச்சு இப்ப?” எனக் கேட்டான் கவின்.

“எல்லா கம்பெனிக்கும் புராஜக்ட் கேன்சல் பண்ண சொல்லி மெயில் போயிருக்குடா. அவங்களும் கேன்சல் பண்ணிக்கலாம்னு சொல்லி ரிப்ளே பண்ணியிருக்காங்க. இப்ப என்ன பண்றதுனே புரியல. யாரு மெயில் அனுப்பியிருப்பா?” என யோசித்த சித்துவுக்கு எதுவும் புரியவில்லை.

அந்த நேரம் பார்த்து எதுவோ கேட்பதற்காக அவனது அறைக்கு வந்தாள் மகிழ். “வா மகிழ். என்ன வேணும்.” என கவின் கேட்க, சித்துவோ அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவள் வந்ததையே கவனிக்கவில்லை. “ஏதாவது பிராப்ளமா?” என அவளும் கேட்டாள் சித்துவை கண்டு.

“ஆமாம் கொஞ்சம் பிரச்சனை தான்.” என்ற கவின் நடந்ததை கூற, அவளோ, “இதனால என்ன. நேத்துதானே மெயில் போயிருக்கு. இப்ப தப்பா மெயில் வந்துருச்சு. அதை இங்னோர் பண்ணிடுங்க. அப்படின்னு மறுபடி ஒரு மெயில் குடுத்தா போதாதா.” என்றாள்.

“மத்த டிபார்ட்மெண்ட்னா அப்படி பண்ணலாம். ஆனா ஐடி இண்டஸ்ட்ரீல பாதி வேலை ராத்திரிதான் நடக்கும். ஏன்னா நம்ப கிளையண்ட்ஸ் அப்படி.. இன்னேரத்துக்கு வேற டெண்டர் குடுத்திருந்தாலும் ஆச்சர்யப்பட இல்ல. அப்படியே இல்லனாலும் பேர் கெட்டு போயிருக்கும். ஆனா ஏன் யாருமே ஃபோன்ல காண்டாக்ட் பண்ணலனு தான் தெரியல.” என்றான் கவின் கவலையாக..

“கரெக்டா சொன்னடா நம்ப கஸ்டமர் எல்லாருமே எப்படி சொல்லி வைச்ச மாதிரி காண்ட்ராக்ட் குளோஸ் பண்ணுவாங்க. அதுவும் நம்ப மெயிலுக்கும் அவங்க ரிப்ளேக்கும் டூ அவர்ஸ் கூட டைம் இல்ல.  எனக்கென்னவோ இதுல வேற எதுவோ இருக்கு. எதுக்கும் நீ யாருக்காவது ஃபோன் பண்ணி கேளு.” என்றான் சித்து.

கவின் ஒரு கம்பெனியின் முக்கிய நிர்வாகிக்கு ஃபோன் அடிக்க அவரோ, “என்னப்பா திடீர்னு இப்படி பண்ணீட்டிங்க. இப்ப டீம் மீட்டிங் போயிட்டு இருக்கு. இருங்க செக் பண்ணிட்டு சொல்றேன்.” எனக் கூறி வைத்தார். இன்னும் இரண்டு கம்பெனிகளிலும் இதே போல பதில் வர அப்ப ரிப்ளே மெயில் அங்க இருந்து வரல. என்ன நடந்திருக்கும்!” என குழம்பி நின்றான் சித்து.

“அப்படின்னா இப்ப நீங்க மெயில் குடுங்க.” என மகிழ் கூற கவினும் சம்மதமாக தலையாட்டினான். ஆனால் சித்துவுக்கு வேறு எதுவோ தோன்ற வேறு வழியை யோசித்து நின்றிருந்தான். அவனை புரியாமல் பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.

              சென்னையில் மகியை அனுப்பி விட்டு, குணசேகரன் ஒரு வேலையாக கிளம்பி வெளியில் சென்றவர் அப்போதுதான் வந்திருக்க.. மீனாட்சி தேநீர் எடுத்து வந்தவர், “மதியமே வந்திருவிங்கனு பார்த்தேன். ஏங்க இவ்ளோ நேரம் ஆகிடுச்சு.” எனக் கேட்க, “அது கொஞ்ச தூரம் வந்துட்டு மறுபடி போனா அலைச்சல் தானே அதான்.” என்றார் குணசேகரன்.

பிறகு அவரே, “மகி ஃபோன் பண்ணுச்சா. அங்கு போய்ட்டாங்களாமா?” எனக் கேட்க, ஓசூர் பக்கம் வந்துட்டேன். பார்டர் கிராஸ் பண்ணா என் ஃபோன் எடுக்காதுனு நினைக்கறேன். ரீச் ஆகிட்டு பண்றேனு சொன்னாங்க. ஒரு ஒரு மணி நேரம் முன்னாடி.” என மீனாட்சி கூறவும் சரியென்றவர் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார்.

ஒரு செய்திச்சேனலில் விபத்து பற்றிய செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ‘சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓசூர் அருகே பேருந்துடன் லாரி மோதி பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி எரிந்து உள்ளதால் ஆட்களை தேடும்பணி தொய்வாகி இருக்கிறது’ என செய்தி வாசிப்பாளர் வாசிக்க பின்புறம் விபத்தினை பற்றிய காணொலி ஓடிக்கொண்டிருந்தது.

ஓசூர் எனவும் செய்தியை உற்று பார்க்க அதில் மகி சென்ற பேருந்தை தான் காட்டிக் கொண்டிருந்தனர். “என்னங்க. இந்த பஸ்ல தானே மகி போனா?” என மீனாட்சி கேட்க, குணசேகரனும் அதிர்ந்து போய், “அச்சோ எது நடக்கக்கூடாதுனு பொத்தி பொத்தி வளர்த்தோமோ அது நடந்திருச்சே.” எனக் கூறிக் கொண்டே மகிக்கு அழைப்பு விடுக்க அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் இருவரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்