Loading

காதல் 6

 

 

தோழிகள் மூவரும் ஒரு வழியாக விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இருந்த களைப்பில் கொண்டு வந்ததையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்தனர்.

 

அப்போது சஞ்சுவின் அலைபேசியில் வசுந்தரா அழைக்க, “ச்சே, இந்த அம்மாக்கு எப்படி தான் தெரியுமோ? சரியா கால் பண்றாங்க.” என்று அலுத்துக் கொண்டே அலைபேசியை உயிர்ப்பிக்க, மற்ற இருவரும் அந்த அழைப்பு எதற்கென்று தெரிந்ததால், சத்தமில்லாம் எழுந்து அவரவர் கொண்டு வந்ததை அடுக்க ஆரம்பித்தனர்.

 

அடுத்த பத்து நிமிடங்கள், சஞ்சு ‘ம்ம்ம்’ கொட்டுவதிலேயே கழிய, அவளின் மனமோ, ‘இதுக்கு வந்ததும் எடுத்து வச்சுருக்கலாம்!’ என்ற காலம் கடந்த சிந்தனையில் இறங்கியிருந்தது.

 

அதன் பிறகு, மலர்விழியிடமும் ஒரு ‘அட்டெண்டன்ஸ்’ஸைப் போட்டவர்கள், ரஞ்சுவின் வீட்டிற்கு அழைத்தனர். அழைப்பு போய் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்து போன ரஞ்சுவே அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

தன் கவலையை தோழிகளிடமும் இறக்க வேண்டாம் என்று முடிவு செய்த ரஞ்சு, “ப்ச், ஏதாவது வேலையா இருப்பாங்க. சரி நீங்க படுங்க. நான் போய் என் ஸ்வீட்டி கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.” என்று சாதாரணமாக செல்வதைப் போல பால்கனிக்கு சென்று விட்டாள். மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டனர்.

 

*****

 

காலை ஓட்டத்திற்கு தயாரான ரஞ்சுவும் தர்ஷுவும் அவர்களின் வழக்கமான பூங்காவிற்கு வந்தனர். ரஞ்சுவை விட தர்ஷு தான் ஆர்வமாக இருந்தாளோ என்று எண்ணும் அளவிற்கு அவளின் பார்வை நாலாபுறமும் சுற்றிச் சுழன்றது.

 

ஆனால், அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்குவது போல், சஞ்சீவ் அன்று வரவே இல்லை.  தர்ஷுவே, ‘ஒண்ணுமில்லாததுக்கு நாம தான் இப்படி போட்டு குழப்பிட்டு இருக்கோமோ!’ என்று எண்ணினாள்.

 

அவளின் சிந்தனையை தடை செய்வது போல, “ஹாய் க்யூட்டி.” என்ற சத்தம் கேட்க, தர்ஷு திரும்பிப் பார்க்காமலேயே அது யாரென்று கண்டுபிடித்து விட்டாள்.

 

“ஹே க்ரிஷ் அங்கிள், எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகமாக வினவ, க்ரிஷ் (எ) கிருஷ்ணாவும் அவளின் உற்சாகத்திற்கு ஈடு கொடுப்பது போல, “எப்பவும் போல சூப்பரா இருக்கேன் டா.” என்றவர், அவர்களை சமீபித்த மனைவியை கடுப்பேற்றும் பொருட்டு, “என்ன உங்க ஆண்ட்டி தான் கொஞ்சம் வயசாகிட்ட மாதிரி இருக்கு.” என்று கண்ணடித்து கூறினார்.

 

தர்ஷுவும் ஓரக் கண்ணில் ராதையை பார்த்துவிட்டு, “அஃப்கோர்ஸ் அங்கிள், நீங்க இன்னும் யங் அண்ட் சார்மிங். இன்ஃபேக்ட் இப்போ கூட உங்களுக்கு பொண்ணு தர, ‘நீ… நான்’னு போட்டி போடுவாங்க.” என்று குறும்பாக கூறி அவருடன் ‘ஹை-ஃபை’ அடித்துக் கொண்டாள்.

 

“க்கும், அரைக் கிழவனுக்கு ஏத்தத்த பாரேன்! வாக்கிங் வரதே முன்னாடி துருத்திட்டு இருக்க தொப்பைய குறைக்கத் தான். இதுல இவரு ஆணழகன் மாதிரியும், இவருக்கு பொண்ணு கொடுக்க லைன்னா நிக்குற மாதிரியும் பேசிட்டு இருக்காரு.” என்று உதட்டை சுழித்துக் கொண்டார் ராதை.

 

அப்போதும் சும்மா இருக்காமல், “ஆமா, என் ஸ்வீட்டி எங்க? இந்நேரம் அவ இருந்துருந்தா, என்னை இப்படி பேச்சு வாங்க விட்டுருப்பாளா?” என்று கிருஷ்ணா வருத்தத்துடன் கூறுவது போல் பாசாங்கு செய்ய, ராதையோ அவரை முறைத்துக் கொண்டு நின்றார்.

 

“உங்க ஸ்வீட்டிக்கு எப்போ இவ்ளோ சீக்கிரமா விடிஞ்சுருக்கு, அங்கிள்? இனிமே நாங்க போய் தான் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பி விடணும்.” என்றாள் ரஞ்சு.

 

“ச்சே, ஸ்வீட்டியை ரொம்ப மிஸ் பண்றேன் ரஞ்சும்மா.” என்று அவர் மனைவியைப் பார்த்துக் கொண்டே கூற, “என்னவாம் இப்போ அவருக்கு? மிஸ் பண்றாராம்ல மிஸ்ஸு!” என்று ராதை பொங்கியெழ, ரஞ்சுவும் தர்ஷுவும் தான் அவர்களை சமாதானப்படுத்தினர்.

 

“அப்பறம் ஊருக்கு போயிட்டு வந்தீங்களே, வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று ராதை வினவ, இருவரும் ஊருக்கு சென்று வந்த நிகழ்வுகள் அனைத்தும் கதையாகக் கூறினர்.

 

இது தான் ராதையின் வழக்கம். அவருக்கு சொந்த பந்தம் இல்லாததால், இவர்கள் கூறும் கதைகளை ஆவலுடன் கேட்பார். சில சமயங்களில் மலர்விழியிடம் பேசியதுண்டு. வசுந்தரா காவலர் என்பதால், அவரிடம் சிறு தயக்கம் உண்டு. அது போலவே ரஞ்சுவின் பெற்றோரிடமும் ஒருவித தயக்கம் எழும் ராதைக்கு.

 

“என்ன இது? பிள்ளை ஊருக்கு வந்துருக்கு, அதை கவனிக்காம, ஊர் சுத்துறது ரொம்ப முக்கியமோ?” என்று ராதை நீட்டி முழக்க, ரஞ்சுவின் முகம் தான் கூம்பிப் போனது.

 

ராதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், வெளியே கொட்டி விடுவார். அவரிடம் நாசூக்கு என்பதெல்லாம் கிடையாது. சில சமயங்கள் அது மற்றவரின் மனதை பாதிக்கவும் செய்யும்.

 

ஆனால், அவருக்கு அதெல்லாம் தெரியாது. பேசி முடித்த பின்பே, தான் பேசியது தவறோ என்று கணவனின் முகம் பார்க்கும் வெள்ளந்தி மனிதி அவர்.

 

இப்போதும் அப்படியே! ரஞ்சுவின் முகத்தைக் கண்டவர், பாவமாக கிருஷ்ணாவைப் பார்க்க, மனைவியின் பாவனையில் லேசாக புன்னகைத்தவர், தான் பார்த்துக் கொள்வதாக கண்களை சிமிட்டினார்.

 

“ஹே ராதா மா, இந்த த்ரீ ரோசஸை லஞ்சுக்கு இன்வைட் பண்ணனும்னு சொன்னியே…” என்று பேச்சை மாற்ற உதவ, இத்தனை வருட பழக்கமாக, கணவன் புள்ளி வைத்து ஆரம்பிக்க, மனைவியோ அதை வைத்து கோலம் போட்டு விட்டார்.

 

“ஆமா ஆமா, மறந்தே போயிட்டேன் பாருங்க! இந்த வாரம் சண்டே உங்க மூணு பேருக்கும் நம்ம வீட்டுல தான் லஞ்ச். எந்த சாக்கு போக்கும் சொல்லாம வந்துடனும் சரியா?” என்று கூற, இது அடிக்கடி நடக்கும் நிகழ்வானதால், தோழிகள் இருவரும் சம்மதித்தனர்.

 

“வாவ் ஆண்ட்டி! இந்த தடவை என்ன டிஷ் புதுசா செய்யப் போறீங்க?” என்று ரஞ்சு ஆர்வமாக வினவ, ராதையும் அவர் ‘யூ-ட்யூப்’பில் பார்த்த அந்த ரெசிபியைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

 

ராதை கூறி முடித்ததும் கிருஷ்ணா தான், “இந்த தடவையும் என்னை ‘டெஸ்ட் ரேட்’டாக்க முடிவு பண்ணிட்டீங்களா?” என்று பாவமாக கேட்க, மற்ற மூவரும் கலகலத்து சிரித்தனர்.

 

இதில் ஊருக்கு சென்ற கதையை பாதியிலேயே விட்டதால், சஞ்சீவை சந்தித்ததைப் பற்றி இவர்களிடம் கூறவில்லை. ஆக மொத்தத்தில் சஞ்சீவ் ஊருக்கு வந்திருந்தான் என்பது தோழிகள் மூவரை தவிர யாருக்கும் தெரியாது!

 

இவர்களின் சிரிப்பை சற்று தள்ளி, தன் ஹுடை வைத்து முகத்தை மறைத்த உருவம் கண்ணெடுக்காமல் கண்டதை இவர்கள் அறிய வாய்ப்பில்லை தான்!

 

*****

 

அந்த ஒரு வாரம் வேகமாக சென்றிருக்க, வாரயிறுதி நாட்களுக்குள் அடியெடுத்து வைத்திருந்தனர் மூவரும். அந்த ஒரு வாரத்தில் பெரிதாக எந்தவித நிகழ்ச்சிகளும் நடந்துவிடவில்லை. கல்லூரி விட்டால் விடுதி, அவ்வப்போது பசிக்கும் போது, வடை கடை, தாகமெடுக்கும் போது,  ‘ஜூஸ் கடை’ – இதுவே தான் ‘ரிப்பிட் மோட்’டில் சென்று கொண்டிருந்தது.

 

அந்த சமயங்களில், சஞ்சீவின் ஹோட்டலை கடந்து செல்லும்போது, “ஹே, யாராவது என் புது ப்ரோவை பார்த்தீங்களா?” என்று சஞ்சு தான் வினவினாள்.

 

“இல்லயே சஞ்சு. அவரை ஊர்ல பார்த்தது தான். பார்க்ல கூட நான் பார்க்கல.” என்று ரஞ்சு கூறினாள்.

 

இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல், தர்ஷு அமைதியாகி விட, அதைப் பொறுக்காத சஞ்சு, அவளை வம்பிழுக்க வேண்டியே, “சிலர் என்னவோ அவரு நம்மள ஃபாலோ பண்றாருன்னு சொன்னாங்களே!” என்று கூற, தர்ஷு அப்போது தான் மனதிற்குள், ‘நம்ம தப்பா தான் நினைச்சுட்டோம் போல!’ என்று நினைத்துக் கொண்டு, “இப்போ என்ன உன் இன்ஸ்டன்ட் ப்ரோ ரொம்ப நல்லவருன்னு சொல்லணுமா?” என்று சஞ்சுவிடம் கேட்டாள்.

 

“என்ன உடனே இறங்கிட்ட? ஹே உண்மைய சொல்லு, உனக்கு அவரு மேல ஒரு ‘சாஃப்ட் கார்னர்’ வந்துடுச்சு தான?” என்று சஞ்சு கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல், தர்ஷுவை ஓட்டித் தள்ள, அவளோ சஞ்சுவை கலாய்க்க என்று அந்த இடமே ரணகளமானது.

 

ரஞ்சுவோ இவர்களின் சேட்டையை சிரித்துக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்தாள். தவிர, இது அவர்களுக்குள் எப்போதும் நிகழும் நிகழ்வு தான். வாய்ப்பு கிடைக்கும் போது, யாரையாவது தோழிகள் ஒருவருடன் சேர்த்து வைத்து கலாய்ப்பது. அதை மூவரில் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்போது கிண்டல் செய்து அப்போதே மறந்தும் விடுவர்.

 

ஆனால், இம்முறை சஞ்சு கூறியது உண்மையாக இருக்குமோ! தர்ஷுவிற்கே தெரியாமல், அவள் மனதின் ஒரு மூலையில் சஞ்சீவ் நுழைந்திருப்பானோ! இவர்கள் மூவரில் அவனைப் பற்றி அதிகம் யோசித்தது அவள் தானே!

 

*****

 

சனிக்கிழமை காலை… அடுத்த நாள் ராதையின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால், சனிக்கிழமையை ஓய்வு நாளாக வெள்ளி இரவே அறிவித்துவிட்டு தான் படுத்திருந்தனர் மூவரும். அதனால் காலை நடைபயிற்சியும் ரத்தாகியிருந்தது!

 

இவர்கள் சோம்பியிருப்பதினாலோ என்னவோ, சூரியனும் அன்று சோம்பி மேகத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டது போல!

 

ஏழு மணியாகியும், விடியாதது போலவே இருந்தது. ரஞ்சுவும் தர்ஷுவும், அவ்வப்போது போர்வையை விலக்கி, அருகிலிருக்கும் அலைபேசியில் மணி பார்ப்பதற்கு கூட சோம்பி, ஜன்னல் வழியாக வெளிச்சம் வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டு மீண்டும் இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டனர். இப்படி எத்தனை முறை நடந்ததோ!

 

அதன் பின்பு, இருவரும் முழித்தது, சடசடவென கேட்ட மழையின் சத்தத்தால் தான். இருவரும் அசந்து தூங்கவில்லை என்பதால், மழை வலுக்கும்போதே எழுந்து விட்டனர். மணியை பார்க்க, அது பத்தென காட்டியது.

 

‘இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்!’ என்று பதறி எழுந்தனர் இருவரும்.  இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்ததும், காலையுணவிற்கு ‘ஸ்விகி’யில் ஆர்டர் போட்டு விடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர். ஒன்பதரைக்கே ‘மெஸ்’ மூடப்படும் என்பதால் தான் தீவிர ஆலோசனை.

 

“ப்ச் இது என்ன? எந்த ஹோட்டல் செலக்ட் பண்ணாலும், ‘நாட் அவைலபில்’னு வருது.” என்று தர்ஷு பசித்த வயிற்றை தடவிக் கொண்டே சொல்ல, “மழை வேற பெய்யுதே! அதான் ஆன்லைன் ஆர்டர் அக்ஸெப்ட் பண்ணலையோ என்னவோ.” என்று ரஞ்சு கூறினாள்.

 

“இந்த சஞ்சு இன்னுமா எழுத்துக்கல? சாப்பாடுனு சொன்னா முதல் ஆளா வருவாளே! அவளுக்கு தான் இன்னும் நிறையா ஹோட்டல் தெரியும்.” என்று தர்ஷு கூற, ரஞ்சு சஞ்சுவை எழுப்பச் சென்றாள்.

 

சஞ்சுவின் அருகே செல்லும்போதே, அவள் அனத்திக் கொண்டிருப்பது கேட்டது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள, அவளின் தலையிலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க, அவள் சந்தேகப்பட்டது போலவே, சஞ்சுவிற்கு காய்ச்சல் அடித்தது.

 

சஞ்சுவிற்கு காய்ச்சல் வந்தால், அவ்வளவு சீக்கிரம் குணமாகாது என்பது மற்ற இருவருக்குமே தெரியும். மற்ற நேரத்தில் அவள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பாளோ, அதற்கு நேர்மாறாக, காய்ச்சலில் படுத்திருக்கும்போது சோர்ந்து விடுவாள்.

 

இப்போது என்ன செய்வது என்று ஒரு நொடி சிந்தித்த தோழிகள் இருவரும், முதலில் மாத்திரையைக் கொடுப்போம் என்று முடிவெடுத்து மாத்திரையை தேடினர். ஆனால், அவர்களின் கஷ்ட காலத்திற்கு மாத்திரை டப்பாவில், காய்ச்சலுக்கான மாத்திரை அட்டை மட்டும் தான் இருந்தது. அதற்குள் மாத்திரை இல்லை. அட்டை இருப்பதைக் கண்டு, இவர்களும் மாத்திரை இருக்கிறது என்று நினைத்து விட்டனர் போலும்!

 

மாத்திரை இல்லை என்றதும் சிறிது பதட்டம் ஏற்பட, பக்கத்து அறைகளிலிருந்த தோழிகளிடம் சென்று கேட்க, அவர்களும் கையை விரித்தனர்.

 

கடைசி முயற்சியாக விடுதி உரிமையாளரிடம் கேட்கலாம் என்று தோழிகள் இருவரும் அவரைப் பார்க்கச் செல்ல, அவரின் உதவியாளரோ, “அவங்க மார்க்கெட்டுக்கு போயிருக்காங்க மா. அவங்க ரூமுக்குள்ள தான் மெடிக்கல் கிட் இருக்கு. ஆனா, அவங்க ரூம்ம பூட்டி, சாவியும் கொண்டு போயிட்டாங்க போல.’ என்று அவரும் எதிர்மறையாக கூறிவிட, ரஞ்சுவும் தர்ஷுவும் தான் பதறிப் போயினர்.

 

அவர்களின் நிலை கண்ட பக்கத்து அறை தோழி ஒருத்தி, அவளின் வண்டியை கடன் தர முன்வர, மழையும் சற்று விட்டிருந்தது. ரஞ்சு தான், அடுத்து மழை பிடிப்பதற்குள், மாத்திரை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, தோழியின் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றாள்.

 

ரஞ்சு கடைக்குச் சென்று மாத்திரை வாங்கும் வரை எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது. கடையிலிருந்து திரும்பும் வழியில் தான், சாப்பிடாமல் எப்படி மாத்திரை போடுவது என்று யோசிக்க, அருகில் திறந்திருந்த உணவகத்திற்கு சென்றவள், அவசரத்திற்கு இட்லியை வாங்கிக் கொண்டு மீண்டும் கிளம்பினாள்.

 

சற்று தூரம் வந்த பின்னர், வண்டி மக்கர் செய்ய ஆரம்பிக்க, ‘ஐயோ! இதுக்கு இப்போ என்னாச்சுன்னு தெரியலையே.’ என்று புலம்பியபடி வண்டியை நிறுத்தினாள். அந்த நேரம் தான், வருண பகவானிற்கு பூமியின் மேல் கருணை தோன்றியதோ, பூமாதேவியை குளிர்விக்க, சடசடவென இறங்கி வந்தார்.

 

நடுரோட்டில் வண்டி பழுதடைந்து நிற்க, இவளும் அருகில் தெப்பலாக நனைந்தபடி நின்றிருந்தாள். ‘கடவுளே! இந்த நாள் இதை விட மோசமா இருக்கக் கூடாது.’ என்று புலம்ப, கடவுளோ, ‘இனிமே தான் இன்னைக்கான நாளோட பலனை அனுபவிக்க போற.’ என்பது போல சிரித்தது, பாவம் அவளிற்கு தெரியவில்லை.

 

எதார்த்தமாகவோ இல்லை, விதியின் வசத்தாலோ, அந்த வண்டி பழுதடைந்து அவள் நின்றது, சஞ்சீவின் வீட்டின் முன்பு.

 

முதலில் அவள் அதைக் கவனிக்க வில்லை. வண்டியை எப்படி சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், பக்கவாட்டிலிருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள் கண்டது, கையில் குடையுடன் நிற்கும் சஞ்சீவை.

 

யாரும் உதவிக்கு வராத நிலையில் மனதிற்குள் புலம்பியவளிற்கு, சஞ்சீவைப் பார்த்ததும் மனது சிறிது லேசானது உண்மை தான்.

 

“ஹே ரஞ்சு, என்னாச்சு? ஏன் இப்படி மழைல நனைஞ்சுட்டு இருக்க?” என்றவாறே வந்தவன், குடையை அவளிற்கும் சேர்த்து பிடித்தான் சஞ்சீவ்.

 

“சஞ்சுக்கு ஃபீவர். அதான் டேப்லெட்ஸ் வாங்கலாம்னு வந்தேன். நான் வந்தப்போ அவ்ளோவா மழை இல்ல. ஆனா, இப்போ வண்டியும் பாதி வழியிலேயே சதி செய்ய, மழையும் பெய்ய ஆரம்பிச்சுடுச்சு.” என்று கூறவும், லேசாக புன்னகைத்த சஞ்சீவ், “இப்படி மழை பெய்யுது, இதுல நீ போறதுக்கு ரிஸ்க் தான். மழை விடுற வரைக்கும் என் வீட்டுல இரு. அதுக்குள்ள வண்டி சரியாகுதான்னு பார்க்கலாம்.” என்றான்.

 

ரஞ்சுவிற்கு வேறு வழி தெரியாததால், சம்மதமாக தலையசைக்க, தன் பணியாளர்களிடம் வண்டியை உள்ளே நிறுத்துமாறு கூறிவிட்டு அவளுடன் நடந்தான்.

 

ஒரே குடையில் ஒன்றாக செல்வது, ரஞ்சுவிற்கு எந்த வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை போல. ஆனால், சஞ்சீவோ மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

 

ஆம், ஒரு வாரம் அவளைப் பார்க்க முடியாமல் போனதால், தன் திட்டம் என்னவாகும் என்று கவலையில் இருந்தவனிற்கு, இயற்கையே ஒரு வாய்ப்பை அளித்திருக்க, அதை சும்மா விடுவானா?

 

ரஞ்சு அவனிடம், “ஒரு வாரமா ஆளே காணோம். ரொம்ப பிஸியா?” என்று சாதாரணமாக கேட்டிருக்க, அவனோ மனம் மகிழ்ந்தவனாக, “கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருந்துச்சு. அதான் வாக்கிங் வரல. ஏன் மேடம் என்னை தேடுனீங்களோ?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் வினவ, “ஹாஹா, உங்க இன்ஸ்டன்ட் தங்கச்சி தான் உங்களை ரொம்ப தேடுனா.” என்று கள்ளம்கபடமில்லாமல் சிரித்தாள் ரஞ்சு.

 

அவளின் பதிலில் அவனின் எதிர்பார்ப்பு சரிந்தாலும், இந்த சந்திப்பில் அவளுள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டான்.

 

உள்ளே சென்றவள், அவள் நடந்து வந்த இடம் பார்க்க, அவள் உடையிலிருந்த தண்ணீர் அவள் நடந்து வந்த தடத்தைக் காட்டிக் கொடுத்தது.

 

அதைக் கண்டவள் கண்களைச் சுருக்கி சஞ்சீவைப் பார்க்க, அவளின் பார்வையைக் கண்டவன், சிரித்துவிட்டு ஒரு அறையைக் காட்ட, அவளும் உள்ளே சென்றாள்.

 

அங்கிருந்த குளியலறையில் உடையை நீர் வழிய பிழிந்து கொண்டிருந்தவளை அலைபேசி ஒலி கலைக்க, அப்போது தான் சஞ்சுவின் நிலை நினைவிற்கு வர, வேகவேகமாக அதை உயிர்ப்பித்தாள்.

 

எதிர்முனையில் தர்ஷு தான் பேசினாள்.

 

“ரஞ்சு, சஞ்சுக்கு மாத்திரை கொடுத்தாச்சு. செகண்ட் ஃப்ளோர்ல இருக்க நிம்மி கிட்ட மாத்திரை இருந்துச்சு. அப்பறம் நம்ம செண்பா அக்கா கிட்ட சஞ்சுவோட காய்ச்சல் பத்தி சொன்னதுல அவங்களே இட்லி ஊத்திக் கொடுத்தாங்க. சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டா. இப்படி மழை பெய்யுது, நீ இதுக்காக சீக்கிரம் வர வேணாம். எங்கயாச்சும் நின்னுட்டு வா.” என்று அவள் கூற, ரஞ்சு மறுமொழி கூறுவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

 

ரஞ்சு அலைபேசியைப் பார்க்க, சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. விடுதிக்கு சென்று சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணியவள், விட்ட வேலையை தொடர்ந்தாள்.

 

சஞ்சீவ் எப்படி அவளிடம் பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனின் சிந்தனையை கலைத்தது வாசல் அழைப்பு மணி சத்தம்.

 

இந்நேரத்தில் யாரென்று என்று யோசித்துக் கொண்டே, கதவை திறக்க, அங்கு நின்றவனை அவன் எதிர்பார்க்கவில்லை. எவனிற்காக இந்த ஒரு வாரம் வெளியில் செல்லாமல் இருந்தானோ, அவனே கதவில் சாய்ந்து நின்றிருந்தான்.

 

“ஹலோ சஞ்சு.” என்று புன்சிரிப்புடன் கூறினான் சஞ்சய், சஞ்சீவின் அண்ணன்.

 

அண்ணனை இவ்வளவு விரைவில் எதிர்பார்க்காமல் விழித்தது ஒரு நொடி தான். அடுத்த நொடியே வரவழைக்கப்பட்ட சிரிப்புடன், “ஹாய் சஞ்சய், சாரி சாரி… தி கிரேட் எஸ்.ஜே! என்ன இந்த பக்கம்? உங்க வேலைகளையெல்லாம் விட்டுட்டு இங்க வந்துருக்க காரணம் என்ன?”  என்றான். சாதாரணமாக கேட்பது போலிருந்தாலும், சஞ்சய்க்கு தெரியாதா, தம்பியின் நக்கல்!

 

“நானும் என் தம்பி வந்து என்னோட பொறுப்புகளை குறைப்பான்னு நினைச்சேன். அவன் இங்க வந்து ஒரு பொண்ணு பின்னாடி சுத்துவான்னு எதிர்பார்க்கல. ஹ்ம்ம், அதான் நானும் யாருக்காக இப்படி உழைக்கணும்னு ஒரு மாசம் ஜாலியா இருக்க வந்துட்டேன்.” என்று திருப்பிக் கொடுத்தான் சஞ்சய்.

 

அவன் கூறியதில் அதிர்ந்த சஞ்சீவின் மனமோ, ‘பொண்ணுன்னு சொல்றான், யாருன்னு தெரிஞ்சுருக்குமா? இல்லயே தெரிஞ்சா இவ்ளோ சாவகாசமா பேசியிருக்க மாட்டானே. ஒரு மாசம் இங்க இருக்கப் போறானா?’ என்று குழம்பிக் கொண்டிருக்க, அந்த குழப்பத்திற்கு காரணமானவனோ, “என்ன சஞ்சு இப்படி வாசல்லயே நிக்க வச்சு பேசிட்டு இருக்க?” என்று கிண்டலாகக் கேட்டான்.

 

“இப்போ எதுக்கு இங்க வந்துருக்க?” – இந்த முறை சற்று தீவிரமாக சஞ்சீவ் வினவ, “ஒரு தடவை செஞ்ச தப்பை, திரும்பவும் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன் சஞ்சு.” என்றான் சஞ்சய். கம்பீரமான அவன் குரலில் அதிசயமாக சோகம் இழையோடியது.

 

சஞ்சீவும் அதைக் கேட்டு இறுகித் தான் போனான். அவன் அப்படியே நிற்பதைக் கண்ட சஞ்சய், “என்ன சஞ்சு, இது எனக்கும் உரிமையான வீடு தான? உள்ள வர விடுவியா, இல்ல வாசலோட துரத்திடுவியா?” என்று கூறியவாறே அதிரடியாக உள்ளே நுழைந்தான்.

 

அவனின் அதிரடி பிரவேசத்தில் என்ன செய்வது என்று புரியாமல் அவன் பின்தொடர்ந்து சஞ்சீவிற்கு அப்போது தான் ரஞ்சுவின் ஞாபகம் வந்தது.

 

அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதேனும் செய்யலாமா என்று யோசிப்பதற்குள், அது எதுவும் தேவையில்லை என்பது போல, அவளே அந்த அறையிலிருந்து வெளிவந்தாள், “சஞ்சு…” என்று அழைத்தவாறே.

 

இதோ எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ, அது நடந்தே விட்டது. இவன் வெளிப்படையாகவே தலையில் கைவைத்துக் கொள்ள, அதற்கு காரணமானவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்