
22
அந்த அடர்ந்த காட்டினுள், நான்கு ஜோடி கால்களின் ஓட்டம் பெரும் ஓட்டமாக இருந்தது.
“பிரதாப்.. நீயா வந்து சரெண்டர் ஆகிடு.. இல்லைனா மோசமானப் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்று துப்பாக்கி முனையில் ராஜசிம்மன் பிரதாப்பை மிரட்ட முயற்சிக்க,
“உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாதுடா போலீஸ்.. வீணா என் பின்னாடி அலையாத” என்று கத்தினான், பிரதாப்.
இருவரின் ஓட்டமும் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னோக்கி ஓடுவதாய் இருக்க, அவர்கள் இருவரும் எதிர்பாராத வகையில் குறுக்கு வழியில் ஓடிவந்து, பிரதாப்பை ஏறி மிதித்து கருப்பசாமி கீழே தள்ளியிருந்தான்.
அவனது இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராத பிரதாப், உருண்டு அருகிருந்த பள்ளத்தாக்கில் சரிந்தான்.
“ஏய்..” என்று கருப்பசாமி அவனைப் பிடிக்க முற்பட,
அதற்குள் ஒரு மரவேரைப் பிடித்துக் கொண்டவன், “உங்கக்கைல சிக்குவேன்னு மட்டும் நினைக்காதீங்க.. இதுலருந்து எப்படித் தப்பிக்கனும்னு எனக்கு நல்லாத் தெரியும்” என்று கத்தினான்.
மூச்சிறைக்க ராஜசிம்மனும் கருப்பசாமியும், அவனை எப்படி மேலே கொண்டுவர என்று யோசிக்க,
அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில், பெரிய ஆலமரத்தின் விழுதில் தன் உடலைக் கட்டிக் கொண்டு, அந்தப் பள்ளத்தாக்கின் வழி பாய்ந்து வந்து, பிரதாப்பைக் கெட்டியாகப்படித்துக் கொண்டான், பச்சையனென்ற அபூர்வன்.
சட்டையல்லாத திடகாத்திரமான பச்சைநிற மேனி, கருநீல கால்சட்டை, தோள்வரை வளர்ந்திருக்கும் கூந்தலை அள்ளிக் குதிரைவால் போட்டிருந்த அபூர்வனின் தோற்றம், பாதிக்கும்மேல் கருப்பசாமியை நினைவூட்டும் விதமாகவே இருந்தது.
முதன்முறை அவனை நேரில் பார்க்கின்றனர். அவனது தோற்றமும், பலமும் அவர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி, ஒரு நிமிடம் உண்மையில் உரைந்துபோகத்தான் செய்தது.
யாரிந்த பச்சையன்? என்பதையெல்லாம் தாண்டி, ‘எப்படி பச்சையாக இருக்கின்றான்?’ என்று தான் அவர்களுக்கு முதலில் தோன்றியது. அதிர்ச்சியில் சிலையாகிப் போகும் நிலையை, அந்த நொடி உணரும் நிலையில் கூட அவர்கள் இல்லை.
“டேய்.. யாருடா நீ” என்று தன்னைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு முனைக்கு வந்தவனிடம் கத்தியபடி திரும்பிய பிரதாப், அவன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து போக,
அவனைக் கீழேத் தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்த அபூர்வன், பேச இடம் கொடுக்காது அவன் வாயில் ஓங்கிக் குத்தத் துவங்கினான்.
“ஆ…” என்று பிரதாப் கத்தியதில் தான், ராஜசிம்மனும், கருப்பசாமியும் அதிர்ச்சி விலகி மீண்டனர்.
“ராஜ்..” என்று கருப்பசாமி அதிர்வாய் அழைக்க,
ராஜசிம்மனுக்கு, அந்த மரபணு பரிசோதனைதான் மனதில் வந்தே போனது.
‘அப்ப இவன் கருப்போட பிரதரா?’ என்று மனதில் தோன்ற,
“சீக்கிரம் வா” என்று கருப்பசாமி அவனையும் இழுத்துக் கொண்டுச் சென்றான்.
அபூர்வன் அடித்த அடியில் வாய் மூக்கெல்லாம் உடைந்து ரத்தம் பீரிட்டது பிரதாப்பிற்கு. அப்படியென்ன கோபமோ அவன் மேல்? என்று வியக்கும் அளவு அவனது அடியின் வேகமும் அழுத்தமும் அதீதமாக இருந்தது.
அதைத் தடுக்கவும் முடியால் தாங்கவும் முடியாமல் பிரதாப் மயக்கத்திற்குச் செல்லும் நேரம்,
“ஹே யூ.. அவனை விடு” என்று ஓங்கி ஒலிக்கும் குரலில் கருப்பசாமி கூற,
அவனைச் சட்டெனத் திரும்பி, கோபம் கொப்புளிக்கும் பார்வைப் பார்த்தான், அபூர்வன்.
அவன் பார்வையில் ஏதோ ஒரு சொல்ல முடியாத தாக்கம் கருப்பசாமியைத் தாக்கித் தடுமாற வைத்தது. உரைய வைத்தது. அசையாது அடிபணிய வைத்தது.. அதுதான் ரத்த பந்தமோ?
“மரியாதையா அவனை எங்கக்கிட்ட ஒப்படச்சுட்டு நீங்களும் சரெண்டர் ஆகிடுங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது” என்று ராஜசிம்மன் கூற,
அபூர்வன் முகத்தில் இலக்காரமானப் புன்னகை.
வானை நோக்கித் துப்பாக்கியை நீட்டி சுட்ட ராஜசிம்மன், “அவ்ளோதான் மரியாதை. எழுந்திரி. சுட்டுத்தள்ளிட்டு அவனை இழுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்” என்று கூற,
வெகு அசட்டையானப் பார்வை அபூர்வனிடம்.
அவ்வளவு தைரியமா? சுட்டு விடுவாயா என்னை? என்ற பார்வை அபூர்வனிடம்.
இருவருக்கும் தங்கள் பாஷை அவனுக்குப் புரியவில்லையோ? என்றே தோன்றிவிட்டது.
அசட்டையாக எழுந்து கைகளைத் தட்டிக் கொண்டவன், அவர்களை மிக மெல்லமாய் நெருங்கி கருப்பசாமியை அமைதியாய்ப் பார்த்தான்.
அவர்களுக்கும் அவனுக்குமான இடைவெளி பத்தடித் தொலைவில்..
அவன் பார்வையில் பரிவும் பாசமும் பொங்கி வழிந்தது. அதை உணர்ந்த கருப்புக்குக் குழப்பம், தெரிந்த ராஜுக்கு ஆச்சரியம். ‘அப்ப இவனுக்கும் கருப்பைத் தெரிஞ்சிருக்கு..’ என்று ராஜ் யோசனையில் மூழ்கிய நேரம்,
பின்னே மயக்கம் போல் படுத்திருந்த பிரதாப், மெல்ல கண் திறந்து, தனது கால்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான்.
“யார் நீ?” என்று கருப்பசாமி கேட்க,
பச்சையன் விழிகள் கலங்கியதோ?
‘நான் யாருனு தெரியலையாடா உனக்கு?’ என்ற கேள்வியோடு அபூர்வன் கண்கள் கலங்க,
கருப்பசாமிக்கு மூச்சடைக்கும் உணர்வு…
இவர்களின் குழப்ப நிலையில் பிரதாப்பை யாரும் கவனியாதிருக்க,
பிரதாப்பின் குறி, பச்சையனை நோக்கிப் பாய முயன்றது.
அதன் ஓசையில் பச்சையன் அதிர்ந்து திரும்பும் நேரம்,
“நோ..” என்ற கூவலுடன் குறுக்கே வந்து, அதைத் தன் வயிற்றில் வாங்கிக் கொண்டாள், விஷ்ணுப்ரியா.
வயிற்றில் பாய்ந்த குண்டோடு அதிர்வும் வலியுமாக அவள் பொத்தென்று விழ, பச்சையனின் சர்வமும் ஆட்டம் கண்டது, அந்நொடி.
அவன் உயிரானவள் அவள் உயிர் காக்க தன்னுயிர் பணயம் வைத்து அவன் காலடியில் வீழ்ந்தாள்..
“விஷ்ணு!” என்று கருப்பசாமி அவள் பெயரை ஆச்சரியமாய் முனுமுனுத்து அவளிடம் ஓட,
ராஜசிம்மன், பிரதாப்பை நோக்கி வேகமாகச் சென்றான்.
ஓடி தப்ப முயன்ற பிரதாப்பின் காலில், ராஜசிம்மன் துப்பாக்கியின்
குண்டு பாய, “ஆ…” என்ற அலறலோடு கீழே பிரதாப் சரிந்தான்.
இவையனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது.
கருப்பசாமி விஷ்ணுப்ரியாவைத் தாங்கி, “விஷ்ணு..” என்க,
அவள் கண்களில் கண்ணீர் பெருகியோட, மூச்சுக்கு சிரம்பட்டுத் தவித்தாள்.
அவளது தவிப்பான மூச்சுக்காற்றின் ஓசை, தன் இதயத்தின் துடிப்பை அடைப்பதாய் உணர்ந்தான், அபூர்வன்.
அவன் சர்வமும் நடுநடுங்கியது. அவளது செயலில் உஷ்ணத்தின் உச்சத்தை அடைந்தவன் மேனி தகித்தது. அவளது விழியோர கண்ணீரும் இதழ் பிரிந்து மூச்சுக்கு ஏங்கும் தொண்டைக்குழியும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று புதைத்துக் கொண்டிருந்தது.
“ப்ரியா..” என்று அவன் மனம் முனுமனுக்க, அவன் மூளையில் பல கலவையான நினைவுகள்…
“ப்ரியா…” என்ற கேவலோடு அவளிடம் விரைந்தவன், அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளிக் கொண்டான்.
“ஏய்.. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகனும்” என்று கருப்பசாமி கத்த,
அவனைத் திரும்பிப் பார்த்தானே ஒரு பார்வை…
கருப்பசாமியால் அவனிடம் அதற்குமேல் ஒரு வார்த்தை உதிர்க்க முடியவில்லை..
அவளைத் தூக்கிக் கொண்டு, காட்டைவிட்டு வெளியேரும் பகுதிக்கு ஓடினான். செல்லும் வழியில் அவனது குகை…
வேகமாக உள்ளே சென்றவன், அங்கிருந்த பஞ்சு சுருளை மொத்தமாக எடுத்து அவள் காயத்தில் வைத்து அழுத்தி, துணி வைத்துக் கட்ட முற்பட, “ஆ..” என்று வலி பொறுக்காது கத்தினாள்.
அவனது “ஷ்ஷ்…” மிக மென்மையாய், நடுக்கமாய்..
“வ..வலி..” என்று அவள் குரல் தடுமாற, அவளது கம்பளிப் போர்வையை எடுத்து வந்து மொத்தமாக அவளைப் போர்த்தி, உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள முற்பட்டான்.
“இட்ஸ் ஆல்ரைட் ப்ரியா.. ஒன்னுமில்ல.. நான் இருக்கேன்..” என்று மிக மிக மென்மையாய் வெளிவந்த அவன் குரலை போல இல்லை, அவன் மனம்..
மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டு அவன் திரும்ப, கருப்பசாமி, அங்கு நின்றிருந்தான்.
அவனை சட்டைசெய்யாது சென்றவன், காட்டுப்பகுதியின் முடிவில், சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கருப்பசாமியின் வண்டியில் அவளைக் கிடத்த, கருப்பு வந்து வண்டியை இயக்கியிருந்தான்.
அனைத்தும் கனவு போல் நிகழ்ந்து கொண்டிருந்தது. கைது செய்ய வந்தோனின் கண் பார்வைக்குத் தான் கட்டுப்படுவதில் கருப்பசாமி தன்னையே வியந்தான். பாவம் உடன் வந்த ராஜசிம்மனைத்தான் அவன் நினைவில் கொள்ள வில்லை.
ராஜ சிம்மனும் அதை கருத்திலும் கொள்ளவில்லை…
இருவரும் இருவேறு பணியில் பரபரப்பாயினர்.
ராஜசிம்மன் தான் சுட்டு வீழ்த்தியவனைத் தலையில் அடித்து மயங்கச் செய்து, பிற காவலர்களைத் தொடர்புகொண்டு, பிரதாப்பைக் கைது செய்யும் ஆயத்தப்பணிகளில் ஈடுபட, கருப்பசாமி மருத்துவமனையை அடைந்தான்.
அத்தனை நாட்களும் தன்னை வெளியுலகுக்கு மறைத்து வைத்திருந்ததையே மறந்தவனாய், பச்சையன் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓட, அவனது விசித்திரத் தோற்றம் கண்டு மருத்துவமனையே அலறியது.
மருத்தவர் அவனைக் கண்டு அஞ்சி, பதறி நகர, “ப்ளீஸ்.. அவ ப்ரீத்திங் குறையுது. புல்லட் தாக்கிருக்கு. வெண்டிலேடர் வைங்க, சுவாசிக்க முடியலை அவளால. அப்டோமினல் சர்ஜரி பண்ணனும். சீக்கிரம் புல்லட் பொசிஷன் அனலைஸ் பண்ணுங்க. பெயின் அதிகமாருக்கு. மார்ஃபைன் சலைன்ல ஏத்தனும். ப்ளெட் லாஸ் அதிகமில்லை. நான் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டேன்.. க்விக்” என்று பரபரப்பானான்.
மருத்துவனைப்போல் அவன் அத்தனை விளக்கமாய்க் கூற, சுற்றியிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ந்தே போயினர்.
“ப்ளீஸ்..” என்று அவன் கத்த, உள்ளே ஓடிவந்த கருப்பசாமி, தனது நண்பனை பேச வைத்து, சிகிச்சைக்கு அனுமதிக்கச் செய்தான்.
வந்தவர்கள் போனவர்களின் பார்வையெல்லாம் பச்சையன் மீதே…
அவனது கைகால்கள் வெளிப்படையாய் நடுநடுங்கியது. கண்களில் கண்ணீரின் வெள்ளம் பெருகியோடியது.
‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்னைவிட்டுப் போயிடாதடி.. ப்ளீஸ்.. ஐ கான்ட் லூஸ் யூ அகைன் அன்ட் அகைன்’ என்று அவனது இதழ் நடுநடுங்க முனுமுனுக்க,
அவன் எதிர்பாராத விதமாய், அவனை இரு கரங்கள் அரவணைத்துக் கொண்டது.
அதிர்ந்துபோய் நிமிர்ந்தவன் அந்த அணைப்பில் உணர்ந்தது தாய்மையல்லாது வேறேது?
அது கருப்பசாமியே தான்…
“உன்னை யாருனு தெரியல.. உன்னையும் அரெஸ்ட் பண்ணிடனும்னுதான் வந்தோம்.. உன் பக்கம் எதுமே தெரியல.. ஆனா.. நி..நீ.. என்னமோ தெரியல.. உன்னை க்ளோஸா ஃபீல் பண்ணுது.. விஷ்ணு உனக்கு யாருனு தெரியாது.. ஆனா அவளுக்கான உன் துடிப்பு நல்லாவே தெரியுது.. பயப்படாத.. எல்லாம் சரியாகும்” என்று கருப்பசாமி கூற,
பச்சையனின் கைகள் அவனை இறுக்கிக் கொண்டு, வெடித்து அழச் செய்தது.
“அ..அவ..” என்று பச்சையன் கதற,
“ஒன்னுமாகாதுபா..” என்று அத்தனை உரிமையாய் அழைத்தான்.
அபூர்வன் அந்நொடி ஆறுதல் தேவைப்படும் குழந்தைபோல் அழுதான்… ‘என் உயிரானவங்க எல்லாரையும் என்கிட்டருந்து பிரிக்காத கடவுளே.. என்னால இவள இழக்க முடியாது’ என்று மனதோடு கதறித் தவித்தான்.
‘ப்ளீஸ்டி.. நீ இல்லாம என்னால முடியாது.. மறுபடி ஒரு பிரிவை என்னாலத் தாங்கவே முடியாது..’ என்று இங்கு பச்சையன் மனதோடு கதற,
உள்ளே சிகிச்சையறையில் மயக்கத்தில், உயிர்ப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டப் போராட்டத்திலிருந்தவளுக்குள் கலங்கலாய் சில நினைவுகள்…
‘ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? என்னாச்சு?’
‘யாருடி இவரு?’
‘சொல்றேன்’
‘சொல்லுங்க என்னாச்சு?’
‘ஆ….’
என்ற வாக்கியங்கள் அவள் மனதிற்குள் ஓடியது.
“டாக்டர்.. அவங்க பாடி ஷிவர் ஆகுது..” என்று ஒரு மருத்தவர் கூற,
“ஓ காட்.. நர்ஸ்.. போய் ** மெடிசன் எடுத்துட்டு வாங்க” என்று இன்னொரு மருத்துவர் கூறினார்.
அறுவை சிகிச்சை அறை இங்கு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க,
“என்னது? மாட்டிக்கிட்டானா? நல்லதா போச்சு. நாம இனிமே சேஃபா இருப்போம். அந்த பிதாப் தான் காட்டுல எல்லா வேலையும் பார்த்ததுனு நம்ப வச்சு, ஈசியா நாம எஸ்கேப் ஆயிடலாம்” என்று கூறியது, ஒரு உற்சாகக் குரல்…

