Loading

20

 

அந்தக் காட்டுப் பகுதியின் ஆரம்பத்தில், ஜீப்பில் சாய்ந்தபடி கருப்பசாமியும், அவனுக்கு எதிரே சுபிக்ஷாவும் நின்றிருந்தனர். சுடரொளிவானன் கருப்பசாமியின் அலைபேசி இலக்கங்களை அனுப்பியதுமே, அவனுக்கு அழைத்து, அவனைத் தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தாள்.

 

தன் வண்டியில் அவளை அழைத்துக் கொண்டு, இதோ இங்கு வந்துவிட்டான்.

 

“சொல்லுங்க சுபி” என்று அவன் கூற,

 

அவளிடம் பெரும் படபடப்பு…

 

மென்மையானப் புன்னகை பூத்தவன், “என்னாச்சு? என்ன விஷயம்? விஷ்ணு பத்தினதா?” என்று கேட்டவனுக்கே, அது இல்லையென்று புரிய,

 

அவன் எண்ணத்தை உறுதி செய்யும் விதமாய், இடவலமாய் தலையசைத்தாள்.

 

“எ..எனக்கு எப்படி ஆரம்பிக்கணும்னு தெரியலை சார்” என்று அவள் தடுமாற,

 

“என் லவ் விஷயமாங்க?” என்று நேரடியாகக் கேள்விக்கு வந்தான்.

 

“ஹ்ம்..” என்ற பெருமூச்சுடன் தலைகோதிக் கொண்டவள், “என்னால முடியலை சார்.. அது பத்தி யோசிச்சாலே தலையெல்லாம் வலிக்குது” என்க,

 

“எதுக்குங்க யோசிக்குறீங்க? கொஞ்ச நாள் போகட்டும். இப்ப நீங்க அல்ரெடி விஷ்ணுவைத் தொலைச்ச சோகத்தில் இருப்பீங்க. இந்த நேரத்தில் இதைப் பத்தி நீங்க யோசிச்சா, இருக்கும் சூழல்ல நாம நம்மளோட லைஃப் பத்தி யோசிக்குறோமேனு கில்ட் உருவாகும். யோசிக்குறது தப்பில்லை. ஆனா நம்ம மனசு இருக்குற சூழலையும் நம்ம யோசனையையும் மையப்படுத்தி கில்டா உணர வைக்கும். அத்தோட யோசிக்காம இருந்தா, நான் என்ன நினைப்பேனோ? டிலே பண்றதால எனக்கு ஹோப் குடுக்குற போல இருக்குமோங்குற கில்டும் உருவாகும். இப்போதைக்கு இந்த விஷயத்தை ஆறப்போடுங்க. எல்லாப் பிரச்சனையும் சால்வ் ஆனதும் யோசிங்க” என்றான்.

 

அவள் பேசத் தடுமாறி, பக்கம் பக்கமாய் யோசித்து மனனம் செய்து வைத்த வார்த்தைகளை எல்லாம், அவளது ஒரு நிமிட தடுமாற்றத்தைக் கண்டே, புரிந்துகொண்டவனாய், மொத்தமாகக் கூறியிருந்தான்.

 

அவன் கூறிய வார்த்தைகள், தன் மன உணர்வுகளின் கண்ணாடியாய் விளங்குவதை உணர்ந்து, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள், சுபிக்ஷா. அவள் மனதில் அவன் புரிதல் மீட்டிய மாயாஜாலம் குறுகறுத்தது.

 

“ச..சார்..” என்று அவள் தடுமாற,

 

“சில் அன்ட் ரிலாக்ஸ்.. இதுல எந்த முடிவு நீங்க எடுத்தாலும், அதுல உங்கப் பிழைனு எதுவும் கிடையாது. நீங்க நோ சொன்னா எனக்கு வலிக்காதுனு இல்லை. வலிக்கும். ஆனா அதுக்கு கண்டிப்பா நீங்கக் காரணமாக மாட்டீங்கமா. இது முழுக்க முழுக்க என் உணர்வுகள் சார்ந்தது. நீங்க என்ன முடிவு எடுத்தாலும், அது உங்க உரிமை. அதுல என் உணர்வுகள் தலையிடாது, தலையிடவும் கூடாது” என்று தெளிவாய்க் கூறினான்.

 

அவளுக்குக் கண்கள் கலங்குவது போல் ஆனது. இத்தனை தூரம் தன்னைப் புரிந்துகொள்கின்றாரா? எப்படி? என்று மனதின் ஓரத்தில் ஒரு ஓலம் எழுந்தது. அந்த ஓலத்தின் விடையெல்லாம் காதல் தானே? அதை அவள் உணரும் நாளும் வெகு தொலைவில்லை என்பதை, அவளது கண்களின் மெல்லிய நீர்ப்படலம் அவனுக்கு உணர்த்தியது.

 

“நி..நீங்க ஏன் என்கிட்ட எந்த பதிலுமே கேட்கலை அன்னிக்கு?” என்று அவள் கேட்க,

 

“கேட்கனும்னு தோன்றலைமா. என் மனசுல ஒரு வருஷமா அழுத்தி வச்சிருந்தக் காதலை உங்கக்கிட்ட இறக்கினதே எனக்குப் பெரும் நிம்மதியா இருந்தது. அதுவே எனக்குப் போதுமுங்குற ஆசுவாசத்தைக் கொடுத்தது. அதனாலதான் நீங்க யாரு என்னனு எதுவுமே தெரிஞ்சுக்கவும் நான் நினைக்கலை. நாம ஒரு விஷயத்தின் மேல ஆழமான அன்பு வைச்சா, உலகமே அதை நம்மக்கிட்டக் கொண்டுவந்து சேர்க்கும்னு சொல்வாங்க. அப்படி என் காதல் உங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்னு நம்பினேன்” என்று கூறினான்.

 

உண்மைதானே? அவளைப் பற்றிய தகவலே வேண்டாமென்று சென்றான். இன்று இவ்வழக்கு அவள் ஆதி முதல் அந்தம்வரை அவளே அவனிடம் ஒப்படைக்கும்படியல்லவா நிகழ்த்தியது? அவன் நேசத்தின் ஆழம், இத்தனை தூரம் தன்னை அவனிடம் ஈர்ப்பதைக் கண்டு, பாவை உள்ளம் குழம்பி நின்றாள்.

 

“ரிலாக்ஸா விடுங்க சுபி. நான் உங்கக்கிட்ட எதுவுமே இதுபற்றிக் கேட்கலை. அன்னிக்கு நான் சொன்னதையே கொஞ்ச நாளுக்கு மறந்துடுங்க. இந்த பிரச்சினை எல்லாம் முடிந்த பிறகு யோசிங்க. நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரிதான்” என்று கருப்பசாமி கூற,

 

பெருமூச்சுடன் தலையசைத்தவள், “தேங்ஸ்” என்றாள்.

 

“இப்ப நீங்க ஓகே தானே?” என்று அவன் கேட்க,

 

“ம்ம்” என்று மென்மையானப் புன்னகையுடன் தலையசைத்தாள்.

 

“அவ்ளோதான். விடுங்க” என்று அவன் கூற,

 

“விஷ்ணு விஷயம்..” என்று தயங்கியவள், “கிடைச்சிடுவா தானே?” என்று கேட்டாள்.

 

“உறுதியா தெரியலை. ஆனா கிடைச்சுடுவாங்கனு எனக்கு தோன்றுது. ராஜ் எதையோ ஸ்மெல் பண்ணிட்டான். அவனோட பாடி லேங்வேஜ்லயே அது ஃபீலாகுது” என்று கருப்பசாமி கூற,

 

“ம்ம்..” என்று தலையசைத்தாள்.

 

“ராஜ் சாரை பிரம்மா அன்னிக்குப் பேசினதுக்கு சாரி சார்.. அன்னிக்கு அவ ரொம்ப எமோஷனலா இருந்தா.. அதான்” என்று சுபிக்ஷா கூற,

 

“புரியுதுமா. ராஜ்.. அவனோட லைஃப் வேற.. அவன் கடந்த பாதை அவனை அப்படி ஆக்கிடுச்சு. அவன் பண்ணது சரினு நியாயப்படுத்தலை.. ஆனா அவனோட வேதனைகள் அவனை அப்படி ஆக்கிடுச்சுனு சொல்றேன்” என்றான்.

 

சில நொடி மௌனத்திற்குப் பின்,

 

“போகலாமாங்க? லேட் ஆகுது..” என்று கருப்பசாமி கூற,

 

“ஓகே சார்” என்றபடி வண்டியின் மறுபக்கம் வந்தவள், அங்கு சாலையோரமாக, காட்டிலிருக்கும் செடி ஒன்றைப் பார்த்து அப்படியே நின்றாள்.

 

அவள் அமைதியில் “சுபிக்ஷா?” என்று அவன் கேள்வியாய் அழைக்க,

 

கண்ணீர் திரையிடும் விழிகளோடுத் திரும்பியவள், மௌனமாய் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

“என்னாச்சு?” என்று அவன் கேட்க,

 

அந்தச் செடியைக் காட்டினாள்.

 

“என்னதுங்க?” என்று அவன் கேட்க,

 

“அது பெயர் சர்பகந்தா.. ஹைபர் டென்ஷனுக்கு மருந்தா குடுப்பாங்க” என்றாள்.

 

“ஓ..” என்றவனுக்கு அவள் என்னக் கூற வருகின்றாள் என்று புரியவில்லை.

 

“விஷ்ணு காலேஜ் படிக்கும்போது ஒரு பஸ் ஆக்ஸிடென்ட்ல அவளோட ட்வின் சிஸ்டரை இழந்துட்டா. அதுக்குக் கொஞ்சம் வருஷம் முன்னதான் அவங்க அம்மாவும் இறந்தாங்க. கண் விழிச்சு அவளோட ட்வின் இல்லைங்குற சென்சேஷன் சைகாலஜிகலா அவளை ரொம்ப அழுத்திச்சு. அதுல டிப்ரஷனுக்குப் போயிட்டா. அவளுக்கு கௌன்சிலிங் ட்ரீட்மென்ட்லாம் கொடுத்துத்தான் மீட்டுக் கொண்டுவந்தோம். அப்ப இந்த செடியோட படம் போட்ட டேப்லெட்ஸ் எடுத்துப்பா. ஹோமியோ டாக்டர் தந்தது. அப்பத்தான் இதைப் பற்றி அவர் சொன்னதா எங்கக்கிட்ட வந்து ஷேர் பண்ணிக்கிட்டா” என்று சுபிக்ஷா கூற,

 

விஷ்ணுவின் நினைவால் வரும் கண்ணீரது என்று புரிந்தது.

 

“ம்ம்..” என்று தலையசைத்த கருப்பசாமி, “ஹோப் ஃபார் பெஸ்ட்மா” என்க,

 

அவளும் மெல்ல தலையசைத்தாள்.

 

அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு, “என்ன சொன்னாங்க அது பத்தி?” என்று கருப்பசாமி கேட்க,

 

“செடிகள்ல இன்டிகேட்டார் பிளான்ட்ஸ்னு சில செடிகள் இருக்காம். அதாவது, இப்ப ஒரு செடி இருக்கு, அது மெடல் இன்டிகேட்டார்னா, அந்த செடி இருக்குமிடத்தில், கண்டிப்பா அந்த மெட்டல் இருக்கும். அது மாதிரி தான் இந்த சர்பகந்தா செடி இருக்குமிடத்துல மேங்கனீஸ் நிறையா இருக்குமாம். அந்த டாக்டர் சொன்னதா இவ சொன்னா” என்று கூறினாள்.

 

கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று வண்டியை நிறுத்த, அவன் மனதில், பிரதாப்பின் முகம் வந்து போனது.

 

அங்கு ராஜசிம்மன், வீட்டின் கூடத்தை அளக்கும்படி குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.

 

அவன் கைகள் பரபரப்பிலும், கோபத்திலும் லேசாய் நடுங்கியது. எப்போதும்போல் அதை சட்டைப் பையினுள் நுழைத்துக் கொண்டு, தான் எதிர்ப்பார்க்கும் அழைப்புக்காகக் காத்திருந்தான்.

 

அந்த அழைப்பும் வந்தது.

 

அழைப்பை ஏற்றவன், “ஹலோ.. சிஸ்டர்.. கிடைச்சுதா?” என்றான்.

 

“ம்ம்.. கிடைச்சது ராஜ்.. கருப்பு நம்ம மேரி ஹாஸ்பிடல்லதான் பிறந்தான். இவனுக்கு அஞ்சு வயதிருக்கும்போது நம்ம ஆசிரமத்தில் வந்து சேர்த்தாங்க. சேர்த்தவங்க பெயர் ராஜலட்சுமி. இவங்கதான் அவனோட அம்மா. ஆனா ஏன் ஆசிரமத்துல விட்டுட்டுப்போனாங்கனு தெரியலை. எனக்கு அந்த நாள் நல்லா நினைவிருக்கு. ஒருமாதிரி பயந்து, அழுகையோட வந்து சேர்த்தாங்க. யாரு வந்து இவனோட அப்பானு சொல்லிக் கேட்டாலும் தரக்கூடாதுனு சொல்லித்தான் குடுத்துட்டுப் போனாங்க” என்று அவனும் கருப்பசாமியும் வளர்ந்த ஆசிரமத்திலிருக்கும் சிஸ்டர் ஃபிலோமினா கூறினார்.

 

“இவன் நம்ம மேரி ஹாஸ்பிடல்லதான் பிறந்தான்னு எப்படி சொல்றீங்க?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“இவங்களுக்கு டெலிவரி பார்க்கும்போது கூட இருந்த நர்ஸ், நம்ம சிஸ்டர் பிளஸ்ஸி தான். அவங்கதான், இவங்கக்கிளம்பிப் போகும்போது பார்த்துட்டுச் சொன்னாங்க” என்று ஃபிளோமினா கூறினார்.

 

“தேங்ஸ் சிஸ்டர்” என்று கூறியவன், அடுத்து தன்னுடன் பணிபுரிபவனிடம் கூறி, மேரி மருத்துவமனையிலிருந்து கருப்பசாமியின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதர விவரங்களை வாங்கும்படி பணித்தான்.

 

அது மேலும் சில நிமிடங்களைக் களவாடியது.

 

கருப்பசாமி வீட்டை அடைய, அவன் முகத்திலிருக்கும் குழப்பத்தை இவனும், இவன் முகத்திலிருக்கும் பதட்டத்தை அவனும் கவனிப்பதாக இல்லை.

 

நிமிடங்களின் நகர்வுக்குப் பின், ராஜசிம்மனின் அலைபேசி ஒலிக்க, பரபரப்புடன் அதை ஏற்றவன், “சொல்லு கதிர்” என்றான்.

 

“ராஜ்.. போய் செக் பண்ணிட்டேன். அம்மா பெயர் ராஜலட்சுமி, அப்பா பெயர் இல்ல. இவன் அவங்களோட செகென்ட் பேபி. முதல் குழந்தைக்கும் இவனுக்கும் ஒரு வருஷம்தான் வித்தியாசம். முதல் பேபியும் சி-செக்னு இவனையும் சிசேரியன் பண்ணித்தான் எடுத்திருக்காங்க. மெடிகல் ரிபோர்ட்ஸ் அன்ட் பர்த் சர்டிபிகேட் உனக்கு அனுப்பிருக்கேன்” என்று அவனால் கதிரென்னு அழைக்கப் பெற்றவன் கூற,

 

“முதல் குழந்தை ஆணா பெண்ணா?” என்று கேட்டான்.

 

“அது தெரியலை. ஃபர்ஸ்ட் பேபி இங்க பிறக்கலை. வேற எந்த ஹாஸ்பிடல்னும் தெரியலை” என்று கதிர் கூற,

 

“தேங்ஸ் கதிர்” என்று அழைப்பைத் துண்டித்தவன், “கருப்பு” என்று ஓங்கி அழைத்தான்.

 

தனது சிந்தையிலிருந்த கருப்பசாமி திடுக்கிட்டு சுயம் பெற,

 

“உனக்கு உன் அம்மா அப்பாவைப் பத்தி ஏதும் நினைவிருக்கா?” என்று ராஜசிம்மன் கேட்டான்.

 

‘திடீரென ஏனிந்த கேள்வி?’ என்று தோன்றினாலும், “என்னடா கேட்குற? எனக்கு நினைவு தெரிஞ்சதுலருந்து நான் உன்கூட ஹோம்லதான் இருந்தேன். இப்ப என்னடானா இப்படிக் கேட்குற?” என்று கருப்பசாமி கேட்க,

 

ராஜசிம்மன் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.

 

“ராஜ்.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று தீவிரமானக் குரலில், கருப்பசாமி கூற,

 

ராஜ் அவனைக் கேள்வியாய் நோக்கினான்.

 

தனது அலைபேசியில் ஒரு செடியைக் காட்டியவன், “இந்தச் செடியைப் பத்தி ஏதாவது தெரியுமாடா உனக்கு?” என்று கருப்பசாமி கேட்க,

 

அதைக் கூர்ந்து பார்த்தவன் இடவலமாய்த் தலையசைத்தான்.

 

“இது சர்பகந்தா. இதை ஹைபர்டென்ஷனுக்கான மெடிசன்ஸ்ல யூஸ் பண்ணுவாங்க. இது ஒரு மேங்கனீஸ் இன்டிகேடார் ப்ளான்ட்” என்று கருப்பசாமி கூற,

 

“வாட்?” என்று புருவம் சுருக்கி புரியாது வினவினான்.

 

“அதாவது, இந்த ப்ளான்ட் வளரும் இடத்துல, பூமிக்கு அடியில் மேங்கனீஸ் ஓர் ப்ரெஸென்ட் ஆகியிருக்குமாம்” என்று கருப்பசாமி கூற,

 

“இது யார் உனக்கு சொன்னாங்க?” என்று கேட்டான்.

 

“சுபிக்ஷா” என்று ஒரு வேகத்தில் கருப்பசாமி கூறிவிட,

 

“அவங்களை எப்ப மீட் பண்ண?” என்று கேட்டான்.

 

பிறகுதான், கருப்பசாமிக்குத் தான் கூறியது உரைத்தது.

 

தன் தொண்டையை செறுமியபடி அவன் தலைகோத, ஏனோ அவனது சிறுபிள்ளை பாவத்தில், ராஜசிம்மனுக்கு சிரிப்பு வந்தது.

 

“ந.. நான் அவங்களை லவ் பண்றேன்.. அதைச் சொல்லியிருந்தேன். அதுபத்திப் பேசக் கூப்பிட்டாங்க” என்று கருப்பசாமி கூற,

 

இருபக்க இடையில் கரங்கள் ஊன்றி, “ஓகே சொல்லிட்டாங்களா?” என்று சிரிப்பாய்க் கேட்டான்.

 

கருப்பசாமிக்கு வெட்கம் எட்டிப் பார்த்தது. அடடா.. இந்த ஆண்களின் வெட்கமும் தான் எத்தனை அழகு?

 

ராஜசிம்மன், “என்னடா?” என்க,

 

“இல்ல.. யோசிக்கனும் சொன்னாங்க..” என்றவன், “நீ அத விடுடா.. அவங்கதான் இதைச் சொன்னாங்க. எனக்கு பிரதாப் மேலதான் சந்தேகமா இருக்கு” என்று கூறினான்.

 

“பிரதாப்?” என்று ராஜ் கேள்வியாய்க் கேட்க,

 

“ஆமாடா.. அவனோடது ஸ்டீல் ஃபேக்டரி. அங்க சல்ஃபர் அன்ட் ஆக்ஸிஜன் ரிமூவ் பண்றதுக்கு, அலாய் உருவாக்குறதுக்கு, டக்டைல் அயன் உருவாக்கத்துக்குலாம் மேங்கனீஸ் ரொம்ப அவசியம். ஒரு வருஷத்துக்கு சுமார் ஒன்னு புள்ளி அஞ்சு கோடிலருந்து பதிமூன்று கோடிவரை செலவாகும் இந்த மேங்கனீஸ் பர்சேஸுக்கு. அந்த நிறுவனத்தோட உயர்வைப் பொறுத்தது. இது இலவசமா கிடைச்சா, இவனுக்கு எவ்வளவு ப்ராஃபிட்னு யோசி.. ஏன் இதுக்காக இந்தக்கட்டை சுரண்ட அவன் முயற்சி செய்திருக்கக் கூடாது?” என்று கருப்பசாமி கேட்டான்.

 

ராஜசிம்மனின் முகத்தில் பெரும் யோசனை.

 

“அதுக்கு ஏன் அவன் அவனோட ஆட்களையே கொல்லனும்?” என்று ராஜ் கேட்க,

 

“கொலை செய்தது ஏன் வேற யாருமா இருக்கக்கூடாது?” என்று கருப்புசாமி தீவிரமானக் குரலில் கேட்டான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment