Loading

 

அன்றில் – 8🦢

நொடிப்பொழுது என்றாலும் 

உயிர் தொடும்

உன் பார்வைகளுக்கு..

விரல் நுனி தொட்டு

வந்த வேகத்தில் ஓடும்

கடலலையின் சாயல்.

 

இன்று காலை நேத்ராவைப் பார்த்த போதே உள்ளம் உடைந்து போனார் பார்த்திபன்.. கண்ணில் இல்லாத போதே கருத்தை நிறைக்கும் ஒரு விஷயம்.. நேரில் வந்தால்.. அவள் பார்வையிலேயே சுக்கல் சுக்கலானது மனது.. மேற்கொண்டு அவள் பேசியது எல்லாம் அந்தளவு அவரைப் பாதிக்கவில்லை.. அவள் அம்மா தான்  சாகும் வரை வைராக்கியமாக ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்துவிட்டாள்.. கடைசிக்கு இவளாவது ஏதாவது பேசிவிட்டுப் போகட்டுமே.. இது தனக்குத் தேவை தான்.. இதுவும் இல்லையென்றால் தற்போது வாய்க்கும் சொற்பத் தூக்கம் கூடத் தனக்கு வாய்க்காது என்று நினைத்துக் கொண்டு இருக்க.. வீட்டில் அப்பாவும் இவ்வளவு தூரம் பேசுவார் என்று பார்த்திபன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

தந்தையும் மகனும் பேசியே இருபத்தி ஆறு வருடங்கள் ஆயிற்று.

 

அவர் சொன்ன அதே விஷயம் தான் ‘வயதுப்பெண் தனியாக என்ன செய்வாள்’ என்ன நினைப்பே இப்போதெல்லாம் மனதில் பாரத்தைக் கூட்ட.. அனைத்தையும் மனதில் உருப்போட்டபடி அமைதியாகக் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த பார்த்திபன் அருகில் அமர்ந்த பல்லவி “நாளைக்கு ப்ரியாவையும், ஆகாஷ் குழந்தையையும் போய் பாத்து பேசிட்டு வருவோம்” என்று சொல்ல.. எதிர்பார்த்தது தான் என்பது போலத் தலையசைத்தார் பார்த்திபன்.

 

 

மேற்கொண்டு கேள்விகளை எதிர்பார்த்திருந்த பல்லவிக்கு.. பார்த்திபனின் இந்தத் தலையசைப்பு அதிருப்தியைத் தர.. “ஹர்ஷா பேசினத எல்லாம் கேட்டிங்களா.. அவனுக்கு என்ன விட அவங்க தான் முக்கியமா போயிட்டாங்க.. நான் பெத்த பையன எனக்கே எதிரா திருப்பி விட்ருக்காங்க” என்று கண்ணீர்க் குரலில் சொல்ல..

 

 

தற்போது நன்றாகவே கண்களைத் திறந்து எழுந்து அமர்ந்த பார்த்திபன் “ஒன்னு தெரிஞ்சுக்க.. பிரபா இந்த குடும்பத்து ஆளுங்ககிட்ட பேசமாட்டா.. அதுல ஹர்ஷாவும் தான் அடக்கம்.. அவனா போயி அவங்கள பாத்துட்டு வருவானே தவிர.. பிரபா வேண்டாம்னு சொன்னதில்ல அதே சமயம் வான்னும் கூப்பிட்டதில்ல.. அப்பறம் அவ எப்படி உன் பையன மேனிபுலேட் பண்ணிருக்கான்னு நீ சொல்ற” என்று கடிந்தார்.

 

அவரையே வெறித்த பல்லவி “இருபத்தி ஏழு வருசம் ஆச்சு.. இப்ப வரைக்கும் கூட அவங்கள பத்தி ஒரு வார்த்தை சொல்ல என்னைய விடறது இல்ல.. ஆனா அவங்கம்மா இருந்த வரைக்கும் என்னை பேசாத வார்த்தை இல்ல.. குடுக்காத சாபம் இல்ல.. அதெல்லாம் உங்களுக்கு பெருசு இல்ல தான” என்று கேட்கவும்..

 

பார்த்திபன் ஒரு பெருமூச்சுடன் “இங்க பாரு பல்லவி.. பிரபா, அவங்க அம்மா எல்லாம் இப்ப இந்த உலகத்திலயே இல்ல.. அவங்கள பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறது இல்ல.. எல்லாத்தையும் முடிச்சுட்டு தான் அந்த ஊரை விட்டே வந்தோம்.. அவங்க யாரும் உன்ன நினைச்சது இல்ல” என்று சலித்துக் கொண்டவர்..

 

“ஆனா உங்கள நினைச்சுட்டு இருந்தாங்க தான” என்ற பல்லவியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.

 

 

“நாந்தான் காதல் காதல்னு என்னோட வாழ்க்கையவே பணயம்‌ வச்சேன்.. உங்களுக்காக என்னல்லாமோ பண்ணுனேன்.. ஆனா உங்களுக்கு இப்ப வரைக்கும் அவங்க தான பெருசு.. அவங்க சாகறதுக்கு முன்னாடி அவங்கள தேடி ஓடத்தான பாத்திங்க.. அவங்க உங்கள நினைச்சுட்டே தான உயிர விட்டாங்க.. இந்த குடும்பம், கம்பெனி, மரியாதை எல்லாம் என்னால, எனக்கு அப்பறம் உங்களுக்கு வாய்ச்சது தான.. ஆனா ஒன்னுமே செய்யாத அவங்கள தான உங்களுக்குப் புடிக்குது” என்று எழுந்து நின்று வெறி பிடித்தவர் போல திடீரெனக் கத்த ஆரம்பிக்கவும்..

 

பார்த்திபனும் பதறி அவர் கைப்பற்றி அமர வைத்து “அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா.. எனக்கு உன்னைய மட்டும் தான் பிடிக்கும்.. உங்கூட தான் எப்பவும் நான் இருப்பேன்” என்று ஆறுதல் உரைத்துத் தட்டிக் கொடுக்க.. அவர் முகம் பார்த்தவாறே கண்ணயர்ந்தார் பல்லவி.

 

ஆனால் பார்த்திபன் மனது மட்டும் வழக்கம் போல ‘மன்னிச்சுரு ஜோதி’ என்று ஊமையாய் அழுதது.

 

***

 

கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன் என்று டிஎம்எஸ் முருகனையே உருக்கும் குரலில் பாடிக்கொண்டிருக்க.. சமையல் அறையில் இருந்து கையில் எதையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் நேத்ரா.

 

‘அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே..

அருமறை தேடிடும் கருணையென் கடலே’ என்று அவரோடு சேர்ந்து பாடியபடி, வீட்டில் இருந்த எடுத்துவந்த பிரபாவின் இஷ்ட தெய்வமான சிறு முருகன் சிலைக்குப் பூ, பொட்டு வைத்துக்கொண்டிருந்தாள்.

 

ஈரக் கையைத் துடைத்தபடி வந்த காஞ்சனா அக்கா “ஏன் நேத்துக் கண்ணு.. உனக்கு இத்தன பக்தியா” என்று கேட்க..

 

“அப்படியெல்லாம் இல்லக்கா.. ஒரு நிமிஷம் இருங்க வந்து சொல்றேன்.. ஓடிடாதீங்க.. உக்காருங்க” என்று சோபாவைக் கை காட்ட அவரும் அமர்ந்து கொண்டார்.

 

இந்த வீட்டில் வேலைக்கு வருபவர் தான் காஞ்சனா.. கோகுல் மூலமாக அறிமுகம் ஆனவர்.. நேத்ரா முதலில் மறுத்துப் பார்த்தவள்.. பிறகு என்ன நினைத்தாளோ ஒப்புக் கொண்டாள்.

 

முருகனிடம் மாம்பழ பாயசத்தை வைத்தவள்.. மீண்டும் கிட்சன் சென்று இரு கின்னங்களில் பாயசத்தோடு வந்து அவருக்கும் ஒன்று கொடுத்துவிட்டு.. தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“என்னக்கா கேட்டிங்க.. பக்தியா.. நமக்கு அந்த ஏரியா எல்லாம் ஆகாதுக்கா.. எங்கம்மாக்கு மிஸ்டர் முருகன்னா புடிக்கும்.. அவங்க இருந்தவரைக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  மருதமலைக்கு விசிட் அடிப்பாங்க.. அதே மாதிரி இந்தப் பாயசமும் புடிக்கும்.. நானும் ஊர்ல இருந்து வரும்போது இந்த குட்டி சிலைய மட்டும் கொண்டு வந்தேன்.. அதோட மறந்துட்டேன்.. நேத்து தான் நியாபகம் வந்துச்சு.. சரி இன்னைக்கு வீட்ல வேலை அதோட செவ்வாய்ல இன்னைக்கு வச்சுடலாம்னு பண்ணிட்டேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க.. காஞ்சனாவோ பாயசத்தின் சுவையில் தன்னை மறந்து போயிருந்தார்.

 

“எப்படி கண்ணு இப்படி சமைக்கற.. நாப்பது வருசமா நானுந்தான் பண்றேன்.. ஆனா இப்படி எனக்கு வரதில்லையே.. என்னா கைப்பக்குவம் உனக்கு” என்று சிலாகிக்க..

 

புன்னகைத்த நேத்ரா “உங்க பேத்திக்கும் எடுத்து வச்சிருக்கேன்.. போகும்போது எடுத்துட்டு போங்க.. அப்படியே உங்க கம்யூட்டர் தம்பிக்கும் கொண்டு போங்க” என்றாள்.. ‘கம்யூட்டர் தம்பி’ கோகுலை அப்படித்தான் விளிப்பார் அவர்.

 

இப்போது டிஎம்எஸ் “உள்ளம் உருகுதய்யா” என்று உளி கொண்டு பக்தியைச் செதுக்க ஆரம்பிக்க.. அவள் சொன்ன அனைத்திற்கும் தலை ஆட்டியவர் “ஏன் கண்ணு எப்ப பாத்தாலும் பழைய பாட்டே கேக்கற” என்று தான் வந்த நாள் முதல் இருந்து வரும் சந்தேகத்தைக் கேட்டார்.

 

“என்ன தான் பக்தி இல்லைன்னாலும் முருகன் பாட்டுக்கு இருக்கற வைப்பே வேற தான் க்கா.. ஆனா உங்களுக்கு எது வேணும்னு சொல்லுங்க க்கா.. அதையே போடலாம்”

 

“புதுப்பாட்டு.. அதான் ஏதோ ‘அலை அவ, கலை அவ’ன்னு வருதே.. அந்தப் பாட்டெல்லாம் கேக்க மாட்டிய”

 

“பார்றா.. க்கா என்ன இப்படி ஊரும் ப்ளட் அளவு அப்டேட்டா இருக்கறீங்க”

 

“ஊருதோ ஊளை விடுதோ.. நமக்கு என்ன தெரியும் கண்ணு.. எம்பேத்தி அதான் கேக்குது.. ஆனா இந்த பாட்டு வந்தா மட்டும் ரேடியோல கொடைக்கானல் டேசன் வச்சா கொரகொரன்னு கேக்குமே.. அப்படி கேக்குது” அவர் அப்பாவியாகச் சொன்னதில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் நேத்ரா.

 

அப்போது காலிங்பெல் அடிக்கவும்.. அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு அவளே சென்று பார்க்கவும் கோகுல் தான் நின்றிருந்தான்.

 

அவள் சிரிப்பைப் பார்த்துவிட்டு அவன் விசாரிக்க.. அவனுக்கும் மாம்பழ பாயசத்தைக் கொடுத்தவள்.. அங்கு நடந்ததைச் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.

 

அவனும் சிரித்துவிட்டு “காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

இலை தொடங்கும்

நடனம் முடிவதில்லையே’ ன்ற மாதிரி லிரிக்ஸ் எல்லாம் இனி நமக்கு கனவு தான்ல” என்று வருத்தமும் பட..

 

“எஸ்.. அதே மாதிரி ப்ளேபேக் சிங்கர்ஸ்னு ஒரு இனமே அழிஞ்சிருச்சு.. விட்டா ஃபீமேல் வாய்ஸூக்கும் இவங்களே பாடிருவாங்க போல” என்று அவளும் அதில் பங்கெடுத்துக் கொள்ள.. கோகுலின் போன் இசைத்தது.

 

துருவன் தான் அழைத்திருந்தான்.

 

 

“என்னடா பண்ற” ஏதோ அவசர கதியில் அவன் வினவ..

 

கோகுலோ சாவகாசமாக அமர்ந்து “நேத்ரா வீட்டுக்கு வந்தேன்.. ஏதோ மாம்பழ பாயசமாமாடா.. சூப்பரா இருக்குது.. அதுலயும் மேடம் சிரிச்சுட்டு வேற குடுத்தாங்களா.. இன்னும் டேஸ்ட் அள்ளுது” என்று ரசித்துச் சொல்ல.. மறுமுனையில் பரபரப்பு மொத்தமும் அடங்கியது.

 

“ஏதே சிரிக்கிறாளா.. எங்கிட்ட பேசும்போது மட்டும் மூட்ஸ்வீங்க்கு மூத்தகுடி மாதிரி மூஞ்சிய வச்சுப்பா.. உங்கிட்ட சிரிக்கிறாளா” என்று பொறாமையில் துருவன் பொங்க..

 

அதைத் தட்டிவிட்ட கோகுல் “அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும் ப்ரோ.. பை த வே நீ ஹைதராபாத் கிளம்பலையா இன்னும்” என்று கேட்கவும்..

 

“ரெடி ஆகிட்டு இருக்கேன்.. இப்ப நீ என்ன பண்ற.. நா அந்த பெப்பர் மிட்டாய பாக்கனும்.. அதுக்கு ஏற்பாடு பண்ணு” என்றான் கூலாக.

 

“அடேய்.. என்னடா பண்ண சொல்ற என்னைய” என்று கோகுல் கொந்தளிக்க..

 

“நாம்பாட்டுக்கு ஃப்ளைட்ட பிடிக்க போயிருப்பேன்.. நீ தான் பாயசம் குடுத்தா.. பல்லை காட்டினான்னு எங்கிட்ட ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்துன..” என்று மறுமுனையில் அடம்பிடித்தான் துருவன்.

 

“என்னது ஆசை வார்த்தையா.. டேய் எதாவது நியூஸ் சேனல் பாத்தான்னா என்னைய ஃப்ளாஷ் நியூஸ் ஆக்கிருவான்.. ஒழுங்கா வேலைய பாக்க கிளம்பு” என்று கோகுல் மிரட்டவும்..

 

“ஆஹான்.. நீ மட்டும் இப்ப அவள என்னைய பாக்க அனுப்பி வைக்கல.. நேரா ஹைதராபாத் போயி.. யார்ட்ட என்ன சொல்லனுமோ அதைச் சொல்லி.. திருப்பூர் போற சைக்ளோன சென்னையில லேண்ட் ஆக வச்சிருவேன்” என்று பதில் மிரட்டல் விடுத்தான் துருவன்.

 

 

“அடப்பாவி.. அப்படி மட்டும் பண்ணாத.. இன்னும் நாலு நாள் கழிச்சே அந்த இம்சை இங்க வந்து சேரட்டும்.. எதாவது பண்ணித் தொலையறேன்.. நீ ஃபோனை வை” என்று பல்லைக் கடித்தான்.

 

‘ஒரு பாயாசத்த சாப்பிட விடறானா பாரு.. மொதல்ல இவனுக்கு ஒரு பாயாசத்த போடனும்.. எப்படி இவள அங்க போக வைக்கறது’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தவன் அருகே.. தன் லேப்டாப்போடு வந்தமர்ந்தாள் நேத்ரா.

 

அதைக் கண்டவுடன் அவன் மூளையில் பல்ப் எரிய.. நேத்ரா “இந்த செக்யூரிட்டி ஃபிச்சர்ஸ் எல்லாம்” என எதுவோ சொல்ல வர..

 

“ஓ காட்.. நேத்ரா இப்ப தான் எனக்கு ஒரு அர்ஜெண்ட் வொர்க் இருக்கறது நியாபகம் வந்துச்சு.. சீக்கிரமா கம்பெனிக்கு போகனும்” என்று எழவும்..

 

 

“அப்படியா.. அப்ப ஓகே.. நானும் ஆஃபிஸ்கே வரேன்” என்றாள் அவளும்.

 

 

மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்ட கோகுல் “அதில்லம்மா.. ஆஃபிஸ் போயிட்டு ஒரு மீட்டிங்க்கு வேற ஒரு லொகேஷன் போகனும்.. நீ வேணா துருவன்ட்ட கேட்டுப் பாரு” என்றான்.

 

“அவர்ட்டயா” என்று அவள் தயங்கி யோசிக்க.. அவளை அதையும் இதையும் சொல்லி.. துருவன் வீட்டு லொகேஷனையும் ஷேர் செய்து.. அவளை அனுப்பி வைத்தான் கோகுல்.

 

துருவனின் அப்பா ஓர் அரசியல்வாதி என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்.. ஆனால் வேறு எதுவும் பெரிதாக அவனைப் பற்றித் தெரியாது இவளுக்கு.. அவள் யோசனைக்கு நேர் எதிராக வீடு மிகவும் அமைதியாக இவளை வரவேற்றது.

 

அவள் உள்ளே நுழைந்த போதே அதன் செழுமையும், வளமையும் கண்ணில் பட ‘அதான் கெத்து குறையாம சுத்துது பார்ட்டி’ என துருவனை எண்ணி உதட்டைச் சுழித்துக் கொண்டவளின் காதில் குழந்தையின் மிழற்றல் சத்தம் வந்து விழ.. தன் பார்வையைத் திருப்பி.. மைதானம் போலிருந்த அந்த ஹாலை அலசினால் பார்வையால்.

 

 

ஒரு மூன்றடிச் சிலையின் கீழே தவழ்ந்தபடி‌ இருந்த குழந்தை ஒன்று.. தன் கைக்கு எட்டிய தொலைவில் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சிக்கவும்.. சிலை ஆட ஆரம்பித்து.

 

ஆபத்தை உணர்ந்து நேத்ரா குழந்தையிடம் செல்வதற்குள்.. சிலை சாயவும்.. வெடுக்கெனக் குழந்தையைத் தூக்கியவள் சிலையையும் நேராய்ப் பிடித்து நிறுத்தினாள்.

 

சிலை விழ வந்தும் குழந்தை இவளைப் பார்த்துச் சிரிக்க “என்னடி சிரிப்பு உனக்கு.. இப்பவே நடந்து எந்த ஊரு ஃப்ளைட்ட பிடிக்க போற” என்று கடிந்து கொள்ளவும்.. அதுவும் அவள் கொஞ்சுவதாய் நினைத்து குலுங்கிச் சிரித்தது.

 

“அத்தை பயந்தா உனக்கு சிரிப்பு வருதா” என இன்னும் கண்ணை உருட்ட.. இந்தப் பேச்சுச் சத்தத்தில் அருகே இருந்த அறையில் இருந்து துருவன்  அவன் அம்மா, அக்காவுடன் வெளியே வந்தான்.

 

அவளது ‘அத்தை’ என்ற வார்த்தையிலேயே அவன் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.. அதுவும் குழந்தையோடு குழந்தையாய் முகம் கனிய அவள் சிரிப்புடன் நின்றிருக்க ‘தோள் கண்டார்.. தோளே கண்டார்’ மொமண்ட் தான் நம் துருவனுக்கு.

 

இருவரது சிரிப்பும் தாள, லயமாய் சீராக ஒலிக்க.. அதில் அபஸ்வரம் தட்டினாற் போல வந்து சேர்ந்தார் பல்லவி.. உடன் பார்த்திபனும்.

 

துணையாவான்..

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்