என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -16

Loading

 

முகம் 16

 

பண்ணை வீட்டில் தன் முன்னே சிவாவும் மலரும் ஆர்வமாய் அமர்ந்திருக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் இன்பன்.

 

“உங்கள யாரு வரச் சொன்னது?” என்று கேட்க,

 

‘இவ தான்’ இருவரும் ஒருவரை ஒருவர் காட்டினர்.

 

“அடி வாங்க போறீங்க இப்போ ரெண்டு பேரும்” என்றவன், “இது அந்த கிருபா வேலை தான வரட்டும் இன்னைக்கு இருக்கு அவனுக்கு” என்க,

 

தூரத்தில் கிருபாகரனின் வண்டிச் சத்தம் கேட்டதில் பெண்கள் இருவரும் ஆர்வமாகினர்.

 

வந்து இறங்கிய கிருபாவோ தன் பின்னே அமர்ந்திருந்த பெண்ணை இறங்கச் சொல்லி அவளிடம் பேசிச் சிரித்தபடி வந்தான்.

 

“டேய் எங்கடா அவ, யாரு இது? என்றான் இன்பன்.

 

“இதுவா மச்சான் இது இங்க வந்த டாக்டர் ஸ்னேகா, ரொம்ப ஸ்வீட்டா பேசுறாங்க மச்சான்” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இன்னொரு வண்டி அங்கே வந்தது.

 

அதில் வந்தவர்களைப் பார்த்த, இன்பனின் முகம் கோபத்தில் வெடிக்கத் தயாராக, அங்கே மலர்விழியும் கிருபாகரணை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் காதலில் குண்டைப்போட, ஸ்னேகா என்ற சிட்டுக் குருவி பறந்து வந்திருந்ததில் கடுப்பில் அமர்ந்திருந்தாள்.

 

இன்பனோ “அவன் எதுக்குடா அவளை கூட்டிட்டு வரான்” என்று அடிக்குறளில் சீற,

 

“என்னைக் கேட்டா, அவ அம்மா தான் கட்டிக்கப் போறவங்க தானே! ஒன்னா போகட்டும்னு என்னை இவங்கள கூட்டிட்டு போக சொன்னாங்க” என்றான். சினேகாவைப் பார்த்துப் புன்னகைத்து…

 

அங்கே ஒருத்தியின் வயிறு நெருப்பில்லாமல் புகைந்தது. அதனை அடிக்கண்ணால் பார்த்தவன்,

 

‘அப்படி வாடி வழிக்கு, என்னையா சுத்தவிடுற, இந்த ஸ்னேகாவ வெச்சு உனக்கு தர்றேன் பாரு ஷாக்கு’ என்று எண்ணியவன், அவள் எடுத்த ‘பொஸ்ஸசிவ்’ வகுப்பைப் பற்றி தன்னிடம் ஒப்பித்த அத்தை மகள் சிவாவுக்கு மனதார ஒரு நன்றியையும் சொல்லிக் கொண்டான்.

 

“டேய் உன்கிட்ட தான் பேசுறேன்” என்க,

 

“என்னடா கேட்ட?” என்றான் கிருபாகரன்.

 

அதற்குள் விஷாலும் கயலும் அங்கே வந்து விட, மெல்லிய குரலில் “இவன் எதுக்குடா, உங்கிட்ட அவளை மட்டும் தானே கூட்டிட்டு வர சொன்னேன்” என்று கேட்க,

 

அப்போது சரியாய் “ஹாய் கைஸ், மிஸ்டர் கிருபாகரன் தான், கயல்கிட்ட இங்க ஈவினிங் டைம்ல, குளம் அழகா இருக்கும் போகலாம்னு சொல்லிட்டு இருந்தாரு, நானும் சும்மா தானே இருக்கேன்னு ஜொயின் பண்ணிகிட்டேன். உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே!” என்று கேட்டான்.

 

“ச்சே, ச்சே. எங்களுக்கு என்ன சங்கம்” என்ற கிருபன் முன்னே ஸ்னேகாவுடன் நடக்க, இன்பனோ கயலை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

ஒவ்வொருவராக முன்னே நடக்க, இறுதியில் தான் இன்பன் நடந்தான்.

 

முன்னே செல்லும் கயலை விடாமல் விஷால் பேசிக்கொண்டே வர, இன்பனுக்குக் கோபம்

ஏறிக்கொண்டே போனது.

 

அது போதாதென, மெல்ல நடையை குறைத்து இன்பன் அருகில் வந்தவன், “பாஸ் நாங்க ரெண்டு பேரும் கட்டிக்கப் போறவங்க, கொஞ்சம் பர்சனலாப் பேசிப்போம். இஃப் யூ டோன்ட் மைண்ட், நீங்க கொஞ்சம் முன்னாடி நடக்குறீங்களா?” என்றிருந்தான்.

 

அது அவள் காதிலும் விழுந்து தொலைத்ததில் ‘அடேய் ரோமியோ அவன் என் புருஷன்டா, கொஞ்சம் அடக்கி வாசி’ என்று அவளால் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

 

இன்பனோ எதுவும் பேசவில்லை, கோபமாய் அவளைக் கடந்து செல்ல, அவன் பார்வை தந்த உஷ்ணம் பெண்ணவளைச் சுட்டது.

 

அப்படியே குளத்துக்கும் வந்து விட்டார்கள். அந்த மாலை நேரத்துக்கும் அதன் குளிருக்கும் அந்த நீரில் பட்டு வரும் கூதல் காற்றிற்கும் காதலர்களாக இருந்தால் நிச்சயம் ரம்யமான இடம் தான்.

 

ஆனால் இன்பனுக்கும் மலருக்கும் அந்த இடம் சுகிக்கவில்லை, காதலர்களுடன் இருந்தால் ரசிக்கும். தங்கள் காதலர்கள் வேறொருவருடன் இருந்தால்???

 

விஷால் கயலிடம் பேசிக்கொண்டே நெருங்க, அவள் அந்தத் திட்டில் விலகி அமரவெனத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க, கடுப்பாகிய இன்பனோ அங்கே நடந்து செல்வது போல, அவனை குளத்துக்குள் தள்ளி விட்டவன், அவள் உணர்வதகுள் அவளை அப்படியே தூக்கி சற்று தள்ளி இருந்த மரத்தின் பின்னே நின்று கொண்டான்.

 

அது பெரிய மரம் என்பதால் இவர்கள் நின்றிருப்பது யாருக்கும் தெரியாது.

 

விஷால் விழுந்ததையே ஸ்னேகா பார்த்துக் கொண்டிருக்க, மலர்விழி கிருபாவைக் கடத்தி இருந்தாள்.

 

சிவாதான் ‘அடப்பாவிகளா?’ என வாயைப் பிளக்க வேண்டி இருந்தது.

 

வெளியே வந்த விஷலோ “யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்திச்சே” என்க,

 

சிவாவோ முகத்தை சாதாரணமாக மாற்றியவள் “யாரும் தள்ளி விடலையே பாசி வழுக்கி இருக்கும்” என்றாள்.

 

ஸ்னேகாவோ “கிருபா எங்க என் பக்கத்துல தானே இருந்தாரு?” என்று கேட்க, விஷாலும் கயலைக் கேட்டான்.

 

“கயலும் மலரும் வாஸ்ரூம் போறாங்க, அதான் மாமாங்க ரெண்டு பேரும் கூட்டுட்டு போய் இருக்காங்க” என்று முடித்திருந்தாள்.

 

 

அங்கே மரத்தில் பின்னே, அவள் மரத்தின் மீது சாய்ந்திருக்க, அவன் அவள் மீது சாய்ந்திருந்தான்.

 

“என்னடி நினைச்சிட்டு இருக்கான் அவன்? என் பொண்டாட்டி நீ, உன்கிட்ட பர்சனல் என்ன வேண்டி இருக்கு அவனுக்கு, நானே கடுப்புல இருக்கேன் மனிசன் டென்ஷன் பண்ணுற நீ…” என்று அவன் விடாமல் பேசிக்கொண்டே போக, அவள் அவன் இதழை அடைத்திருந்தான், கரம்கொண்டு காதலியாய் அல்ல, இதழ் கொண்டு மனைவியாய் உரிமையாய்…

 

தான் உனக்கானவள் உனக்கு மட்டுமானவள் என்பதை அவனுக்கு உணர்த்த விளைந்தாளா?? இல்லை அவன் சுவாசம் வேண்டும் என்று நினைத்தாளா??

 

எப்படி இருந்தாலும் அந்த நொடி அவர்களுக்கு பொக்கிஷம் தான்.

 

முதல் முத்தம். அதுவும் அவளே தர, இன்பன் இன்பமாய் மூழ்கித்தான் போனான்.

 

சிறிது நீண்ட அந்த முத்தம் ஆரம்பித்து மட்டுமே அவள். இதோ இப்போது வரை காற்புள்ளி வைத்து நீண்டித்துக் கொண்டிருப்பது அவன் செயல்…

 

ஒரு கட்டத்தின் மேல் முடியாமல் அவன் மீதே தொய்ந்து விழ, அவளை விடுவித்து அவள் முகம் பார்த்தவன், “இதுக்கு மேல எல்லாம் எனக்கு பொறுமை இல்ல பொம்மை, வீட்ல பேசலாம்டி, நானே உன் அம்மாகிட்டயும் பேசுறேன். என் வீட்லயும் பேசுறேன்” என்க,

 

“அன்னைக்கு கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்ன்னு குதிச்சீங்க, இப்போ என்னடான்னா என் பொண்டாட்டிறீங்க?” என்று சிணுங்க,

 

இன்பனோ “ஐயோ சிணுங்காதடி, மனிசன் பீலிங்ஸ் புரியாம! என்னை விட்டா இப்போவே உன்ன எடுத்துப்பேன் போல இருக்கு…” என்றவன் “அதுக்குள்ள தப்பிச்சு ஓடிடு” என்று சொல்ல வந்த வசனைத்தை அவன் முழுமையாய் முடிப்பற்குள்,

 

அவளோ “எனக்கு நோ அப்ஜெக்ஷன், எனக்கு அம்மான்னா தான் பயம் மத்தப்படி ஆல் எஸ் தான்” என்றாள் அவன் முன் இரு பொத்தான்கள் கழன்று இருந்த இடைவெளியில் தெரிந்த அவளுக்கான இதயத்தின் மேல் முத்தம் பதித்து…

 

இன்பனுக்குப் பேச்சே வரவில்லை, அவள் செயலில் கண்மூடி சயன நிலைக்கே போய் விட்டான்.

 

எங்கே உணர்வில் பிடியில் மயங்கி விடுவோமா என அவன் அவளை தன் பக்கம் இழுத்து அவன் மரத்தில் சாய்ந்து கொண்டான்.

 

ஆழ்ந்த மௌனம் இருவருக்குள்ளும். பிரிந்திருந்த நாட்களின் கணமும் இப்போது அனுபவிக்கும் நெருக்கத்தின் சொர்க்கமும் இருவரையும் மிச்சம் வைக்காமல் மொத்தமாய் அவர்கள் காதலினுள் சுருட்டிக் கொண்டது.

 

அந்த மௌனத்தை உடைத்தவள் “மூனு மாசமா என்னைப் பார்க்க தோணலல?” என்று அவன் நெஞ்சிலேயே சாய்ந்து அவனிடமே அவன் மீது குற்றபத்திரிகை வாசித்தாள்.

 

“பழசு எதுக்கு இனிமேல் வரபோறத பார்ப்போம்? வந்திருந்தா இதோ இப்போ நடக்குறது தான் நடந்திருக்கும். ஏன் இதுக்கு மேலயும்…” என்று அவளில் அவன் பிடியை இருக்கியவன் அவள் முகம் பார்க்க பாவைக்கோ வெட்கம்.

 

“பொம்மை, உன் அம்மாகிட்ட பேசுறதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல, என் அப்பாவ நினைச்சாதான் அள்ளு விடுதுடி, தீராண்ணா இருந்தாளாவது ஏதாச்சும் பண்ணிக் காப்பாத்தி விடுவாங்க, இப்போ மொத்தமா விழுமே” என்று புலம்ப, கிளுக்கிச் சிரித்தவள்,

 

“தீரா மாமா மாஸ்ல” என்றாள்.

 

“ஏன்டி சொல்லமாட்ட, காதலிச்சு ரெண்டு வருஷம் ஆகுது, ஒரு வார்த்தை உன் தங்கச்சிய தான் என் அண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு சொன்னியா?” என்று கேட்க,

 

“அத எப்படி நான் சொல்றது, அது அவங்க பர்சனல் இல்லையா? அத சொல்லி இன்னும் மயலுக்கு என் மேல வெறுப்பு வந்துட்டா அதான் சொல்லல. சும்மாவே அவ என்கூட பேசவே மாட்டா தெரியுமா?” என்றாள் சோகமாய்…

 

“இனிமேல் பேச வெச்சிடலாம். ஒரே வீட்டுக்குள்ள இருந்தா பேசித்தான ஆகணும்” என்றதும் அவள் கேள்வியாய் பார்க்க,

 

“அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்து வைக்க, துவாவோட மாப்பிள்ளை அதான் உன் ஃபிரண்ட் சித்தார்த் பிளான் போட்டிருக்காங்க சோ கூடிய சீக்கிரமே நாம எல்லாரும் ஒரே வீட்டுல குடும்பமா இருக்கப்போறோம்” என்றான்.

 

அவளோ “வாவ்…” என்று கண்களை விரித்ததில்,

 

“உன் புருஷன் உன் கூட இருப்பாங்கிறத விட உன் தங்கச்சி இருப்பாங்கிறது தான் உனக்கு சந்தோசம்ல” என்க,

 

அவளோ அவனை தள்ளிவிட்டு “உங்கள எனக்குப் பிடிச்சதே நீங்க தீரா மாமா தம்பி எங்குறதால தானே!” என்றவள் ஓட, அவனும் விடாமல் தூரத்தினான்.

 

குளம் இருந்த இடத்துக்கு எதிர்பக்கம் தான் ஓடினார்கள் என்றாலும் அந்த சத்தத்தில் திரும்பி பார்த்த சிவாவின் கண்களில் அது பட,

 

‘டேய் எங்க வந்து என்னை மாட்டிவிட்டுடா ரொமான்ஸ் பண்ணுறீங்க, பண்ணுறது தான் பண்ணுறீங்க அத கொஞ்சம் அமைதியா பண்ணுங்கடா அப்பரசண்டிகளா?’ என்று எண்ணியவள்,

 

அதுவரை நேரமும் ‘ம்ம்’ கொட்டிகொண்டிருந்த விஷாலின் கேள்விகளுக்கு ஆர்வமாய் ஸ்னேகாவையும் இழுத்து பதில் சொல்லத் தொடங்க, இருவரும் அவளுடன் பேசிய ஆர்வதில் காதல் புறாக்களை கவனிக்கவில்லை.

 

அவனிடமிருந்து தப்பித்து ஓடி, அங்கே மோட்டார் போடும் அறைக்குள் நுழைந்தவள் அப்படியே ஓட்டத்தை நிறுத்தி இருக்க, பின்னே வந்த இன்பனோ கண்ட காட்சியில்,

 

“எங்கத்த பெத்த ரத்தினமே, அவன் நெஞ்சுல என்னமா பண்ணுற?” என்று கயலின் தோளில் கை போட்டுக் கொண்டே கேட்க,

 

அங்கிருந்த உரமூட்டையில் படுத்திருந்த இன்னொரு ஜோடிக் காதல் புறாக்கள் இரண்டும் பட்டென எழுந்து கொண்டது.

 

இன்பனோ “நீங்க எப்போடா ராசியானீங்க?” என்க,

 

“அது வந்து இன்பா, அந்த டாக்டர் பச்சக்கிளி கூட நான் பேசுனேனா, என் குயிலுக்கு கோபமாகி, அதுல பொஸ்ஸசிவ் மந்திரம் ஒர்க் ஆகி நாங்க ராசி ஆகி…” என்க,

 

இன்பனோ “இப்படி எத்தனை ஆகி?” என்று முடித்திருந்தான்.

 

“அதெல்லாம் அப்படித்தான் இன்பா” என்றான் கால் விரல்களினால் கோலம் போட்டபடியே!

 

‘ஓவரா சிணுங்கிறானே இவனுக்கொரு பயாசத்தை போட்டுட வேண்டியது தான்’ என்று எண்ணியவனோ

 

“இருந்தாலும் நீ ரொம்ப அப்புராணியா இருக்க மலரு, பாரு இவன் இப்போவும் அவளைப் பச்சக்கிளின்னும் உன்ன குயிலுன்னும் தான் சொல்லுறான். உன்னைவிட அவளை தான் அழகுன்னு வர்ணிக்கிறான் பாரேன்” என்க, மலரோ அவன் சட்டைக் காலரை பிடித்திருந்தாள்.

 

கயல் தோளில் கை போட்டவனோ “நீ வாடா செல்லம் இந்தப்பக்கம் ஒரே சத்தமாக இருக்கு நாம அங்க போகலாம்” என்றவன்,

 

அங்கே “அப்படி இல்லடா மலரு, குயில் எவ்வளவு அழகா கூவும் அத சொன்னேன்டா” என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதை கண்டவன்,

 

“நீ உருட்டுடா அண்ணா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்ப” என்று அதோடு விடாமல்,

 

“நல்லா யோசி மலர், நீ அவனை லவ் பண்றது தெரிஞ்சும் தீராண்ணாக்கு ரெண்டாவதா உன்ன பேசும் போதும் அமைதியாத் தான் இருந்தான். மாமன் உன் நல்லதுக்குச் சொல்லுறேன் இன்னொருக்கா நல்லா யோசி” என்றிருந்தான்.

 

கிருபனோ “ஐயா ராசா, இனிமேல் தெரிஞ்சி கூட உன் ஆள அவன் பைக்ல ஏற விடமாட்டேன் ராசா, என் உயிரை கொடுத்தாதவது அந்த சீன தடுத்திருக்கணும்னு புரியுது. மன்னிச்சுக்கப்பா” என்க,

 

“அது, அந்த ராஸ்கல் வண்டில ஏத்துற வர பார்த்துட்டா வர்ற…” என்றவன்,

 

மலரிடம் “சரி பொழச்சு போறான், வேணும்னா அவளை வண்டில ஏத்திட்டு வந்ததுக்கு மட்டும் ஏதாச்சும் பண்ணிட்டு விட்டுட்டு மலரு” என்று அப்போதும் மாட்டி விட்டே சென்றான்.

 

“உயிரோட வந்து சேருடா கிருபா” என்றவன் கூட்டத்துடன் ஐக்கியமானான்.

 

அவன் மனதில் நாளை இரு வீட்டிலும் பேச வேண்டும் என்ற தீர்க்கம் நிறைந்திருந்தது.

 

ஆனால் அது நடக்காமலே இருந்திருக்கலாம் என்று அவன் எண்ணும் நாள் வெகு தொலைவில் இல்லை…

 

 

_____________________

 

 

முரளிதரனோ அவருடைய பாட்னரின் உத்தரவுப்படி அந்த இடத்துக்குச் செல்ல, வாசலில் காவலுக்கு நின்றிருந்தவன் இவருக்கு வழி விட்டான்.

 

அங்கே ஒரு கதவுக்குப் பின்னே இருக்கும் மின் இயக்கக் கதவில் கை விரல் ரேகையைப் பதிக்க அருகிலுள்ள கதவு திறந்து கொண்டது.

 

அதன் வழியே அவர் உள்ளே நுழைய. எப்போதும் போல் இருள் தான் அங்கே.

 

மொத்தமாக மூன்று அறைகள் அங்கே! ஒன்றில் கங்கா இருக்கிறார். இன்னொன்றில் அவர்களால் ‘ஷோல்ஜர்’ என அழைக்கப்படும் கடத்தப்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர்.

 

இறுதியாக ஒன்று அது மொத்தமும் அந்த உருவத்தின் ஆராய்ச்சி கூடம், அதில் யாருக்கும் அனுமதி கிடையாது. முரளிதரன் உட்பட…

 

‘அதில் என்ன இருக்கிறது?’ என்று பார்க்க, முரளிக்கும் ஆர்வம் தான் ஆனால் அதற்கு தான் வாய்ப்பில்லையே!

 

அந்த இடத்தினுள் நுழைய வேண்டிய கதவுக்கு மட்டுமே முரளிதரனின் விரல் ரேகை இணைக்கப்படவில்லை…

 

‘தனக்கு தெரியாமல் மறைத்து வைப்பட்டிருக்கிறதே’ என்று எப்போதும் போல் கோபமாய் அந்தக் கதவில் அவர் தட்ட, கங்காவின் அறையில் இருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். வயது ஒரு முப்பது இருக்கும்.

 

அவரை கண்ட முரளியோ அதுவரை இருந்த எரிச்சல் தணிந்து புன்னகையுடன் “சரோ இன்னைக்கு நீயா? தெரிஞ்சிருந்தா நேரத்துக்கே வந்திருப்பேனே! நாம ஒரு ஆட்டம் போட்டிருக்கலாம். இப்போ ரிப்போர்ட் வேற அவசரமா குடுக்கணுமே பேபி” என்று குழைந்தவர்,

 

“அடுத்த தடவ வரும் போது நேரத்துக்கே வரேன். இப்போ ஷோல்ஜர் நம்பர் டூவென்ட்டியோட பிளட் வேணும்” என்றார்.

 

அவளோ தலையசைத்து குழந்தைகள் இருக்கும் அறைக்குள் நுழையப்போக, அந்த இடைவெளியில் அவளைத் தழுவி இதழணைத்து விட்டே அனுப்பி இருந்தார்.

 

சரோஜா, காங்காவைக் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட தாதி அவள். இந்த வேலைக்காக இருவர் அங்கே பணியமர்த்தப் பட்டிருக்கின்றனர்.

 

இன்னொருவர் சற்று மூத்த பெண், அனுபவம் வாய்ந்தவர். அதனாலேயே அவர் இங்கே அதிகம் இருப்பது வழக்கம்.

 

அவர் வெளியே செல்ல வேண்டிய நேரங்களில் இவள் என இருவரும் மாறி மாறிக் கங்காவைப் பார்த்துக்கொள்வர்.

 

 

அங்கே அந்த அறைக்குள் இரட்டை அடுக்குப் படுக்கைகள் போடப்பட்டிருந்தது.

 

மொத்தமாக அதே போல் இருபது இருக்க, மேலும் கீழும் என மொத்தமாக நாற்பது மெத்தைகள்.

 

ஒவ்வொன்றுக்கும் முன்னே ‘ஷோல்ஜர் ‘ என எழுதப்பட்டு கூடவே வரிசைப் படி ஒரு இலக்கமும் எழுதப்பட்டிருந்தது.

 

தூங்கிக்கொண்டிருக்கும் அவர்களிடம் சிறு அசைவு கூட இல்லை, ஆழ்ந்த அமைதி மட்டுமே

 

சரோஜாவோ இருளாக இருந்தாலும் பழக்கத்தின் அடிப்படையில் சரியாக நேரே இருபதாம் இலக்க மெத்தையின் அருகே சென்றவள், அதில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் இரத்த மாதிரியை சேகரித்து வெளியே வந்திருந்தாள்.

 

“சார், நான் பணம் கேட்டிருந்தேனே” என்று தன்னை அணைத்து நிற்கும் முரளிதரனிடம் கேட்க, அவரோ அவள் அவள் கழுத்தில் புதைந்திருந்தார். செல்லும் அவசரத்திலும் அவளை விட மனதில்லை…

 

அவள் மீண்டும் கேட்டதில் கோபம் கொண்டவரோ “ச்சே மனிசனோட மூடக் கெடுக்குறியே!” என்று திரும்பி நடக்க, அவரை இழுத்த சரோஜா அவர் இதழ் அணைத்தாள்.

 

‘எங்கே தான் கேட்டது கிடைக்காதோ?’ என்ற பயம் அவளுக்கு, அதனாலேயே அந்த பின் ஐம்பதுகளில் இருக்கும் அவருடன் இழைந்து நின்றிருந்தாள்.

 

அவள் சேவையில் மகிழ்ந்தவர் “ப்ப்பா சான்ஸே இல்ல சரோ, இன்னும் அனுபவிக்க தான் தோணுது, ஆனா டைம் இல்லையே! சரி உன் புருஷன் கிட்ட குடுத்தனுப்புறேன் வாங்கிக்க” என்றவர் அவள் கன்னத்தில் தட்டி வெளியேறி இருந்தார்.

 

போகும் அவரையே பார்த்து “பண்ணதுக்காக இந்த கிழவன் கூட எல்லாம் இருக்க வேண்டி இருக்கு, ச்சே” என்று தனக்கு தானே திட்டிக் கொண்டவள். கங்காவின் அறைக்குள் நுழைந்தாள்.

 

______________________

 

 

“ஏன்டா தோஸ்து, அங்க தான் அந்த சமரத்தோட மல்லு கட்டுனன்னு பார்த்தா, இங்க உன் மாமனார் கூடயே மல்லுக்கு நிக்கிறியே! சொந்ததுலேயே யாராவது உனக்கு சூனியம் வெச்சிட்டே தான் இருப்பாங்களாடா?” என்று கேட்டுக்கொண்டே ஜீப்பைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

 

“டேய், அந்தாள என் மாமனார் அது இதுன்னு சொன்ன, நான் மனிசனா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்க,

 

“இப்போ மட்டும் என்ன மனிசனாவா இருக்க குரங்குப்பயலே, மாமனாரை மாமனாருன்னு சொல்லாம உன் மச்சான்னா சொல்ல முடியும். சுத்த கூறு கெட்டவனா இருக்கியேடா. நான் வேணா அவர உன் பொஞ்சாதினு சொல்லவா? பொருத்தமா இருக்கும்” என்றவன்,

 

“அதுசரி, நீ உன் மாமனாரை தூக்கி ஜெயில்ல போட்டா உன் பொஞ்சாதி கோச்சிக்காதா மச்சான்?” என்றான் வேண்டுமென்றே…

 

“டேய் ஜோதிகா இன்னைக்கு உன் நாக்குல சனி பகவான் தான் உக்காந்திருக்காருன்னு நினைக்கிறேன் மூடிட்டு வண்டிய ஓட்டு, இல்ல உன் மேல வண்டிய நான் ஓட்டுவேன்” என்று பல்லைக் கடித்தபடி தீரன் சொன்னதில் பரஞ்ஜோதி அமைதியாகி இருந்தான். ஆனால் அடுத்த இரண்டு நொடிக்கு மேல் அவன் மௌன விரதம் காலாவதியாகிப் போனது தனிக்கதை.

 

அடுத்த சில வினாடிகளில் அவர்கள் வரவேண்டிய அந்த ஆசிரமமும் வந்துவிட, இருவரும் இறங்கிக் கொண்டனர்.

 

அதுவரை நேரம் இருந்த சிறு இலகு தன்மையும் மறைந்து முழு போலீஸ்காரனாய் தான் நின்றிருந்தான் ஜெயதீரன்.

 

ராம்பிரசாத்தின் உதவியாளனான ராஜ், அவருக்குத் தகவல் சொல்லி இருக்க, தியாகராஜனுடன் வெளியே வந்திருந்தார்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே நிற்க, தியாகராஜன் தான் அவனை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

அவரை அவன் ஒரு அர்த்தப் பார்வை பார்க்க அவருக்கும் அது ஏன் எனப் புரியாமல் இல்லை. அவன் பார்வைக்குப் பதிலாய் கண்களை மூடித் திறந்தார் தியாகராஜன்.

 

அறைக்குள் வந்தமர்ந்து இதோ அரைமணி நேரம் ஆகிவிட்டது. இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவர் என அவர்களின் நண்பர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, அது தான் இன்னும் நடந்த பாடில்லை.

 

பரஞ்சோதியோ ‘இவன் என்ன ஒரு பேச்சுக்கு நாம பொண்டாட்டினு சொன்னத உண்மையாக்குற மாதிரி இவரையே வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கான்’ என்று எண்ண,

 

தியாகராஜனோ ‘ரெண்டு பேருக்கும் இருவர் பட பிரகாஷ்ராஜ் மோகன்லால்னு நினப்பு’ என்று எண்ணிக் கொண்டார்.

 

ஆனால் அமர்ந்து பார்வையால் முறைத்துக் கொண்டிருந்த இருவர் மனதில் என்ன ஓடுகிறது என்பது தான் நண்பர்கள் இருவருக்கும் புரியவில்லை…

 

இவர்கள் தேற மாட்டார்கள் என்பதை உணர்ந்த தியாகராஜனோ “என்ன விஷயமா தம்பி வந்திருக்கீங்க?” என்று கேட்க,

 

தீரனோ காதில் விழுந்த அவரது கேள்விக்கு ராம்பிரசாத்தை பார்த்தபடியே “இல்ல ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம் இருக்கேன். என் மாமனார் வேற ஒன்னுக்கு ரெண்டா பெத்து வெச்சிருக்காரே, அதான் பொண்ணு கேட்டுட்டுப் போகலாம்ணு வந்தேன். இளைய பொண்ணுக்கு கொஞ்சம் அவர் மாதிரியே திமிரு ஜாஸ்தி” என்க,

 

ராம்பிரசாத்தோ வந்த கோபத்தை அடக்க வழி தெரியாமல் ஏதோ பேச வர,

 

தியாகராஜனைப் பார்த்தவன் “இப்படியெல்லாமா சொல்லப் போறேன். இவர் பொண்ணக் கட்ட எனக்கென்ன பைத்தியமா? கேஸ் விஷயமாத்தான் வந்தேன்” என்று முடித்திருந்தான்.

 

தியாகராஜனோ அவன் பேச்சில் வந்த சிரிப்பை நண்பனுக்காக மறைத்தபடி நிற்க, ஜோதிக்கு அந்த அவசியம் இல்லாமலே போனதில் சத்தமாய் சிரித்துவிட்டான்.

 

ராம்பிரசாத் அவனை முறைத்தவர், தீரனிடம் “என்ன பிரச்சனை பண்ணன்னே வந்துருக்கியா? அதான் ஒரு தடவ எங்கிட்ட தோத்து போனது பத்தாது? இப்போ மறுபடியும் பொய் கேஸ்ல என்ன உள்ள போட வந்திருக்க போல, முடிஞ்சா செஞ்சி தான் பாரேன்” என்றார் கெத்தாக…

 

பழையது ஞாபகம் வந்ததில் அவன் தாடை இறுக, “பொய் கேஸ்ஸா?? யாரு பொய்னு உங்க மனசாட்சிக்குத் தெரியாதா மிஸ்டர் ராம்பிரசாத்?” என்றவன்,

 

சிறிய நக்கல் சிரிப்புடன் “அது சரி அதுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கணுமே! ஒரு முறை தோத்துட்டேன் தான் ஒத்துக்குறேன். என் கைய வெச்சே என் கண்ணை குத்தி ஜெயிச்சிட்டு வீர வசனம் வேறையா??? உன் பொண்ண என்கிட்ட ஸ்பை வேலை பார்க்க அனுப்பித் தான் நீ ஜெயிச்ச என்கிறத மறந்துட்டுப் பேசாத, இப்போ எனக்கு யாரு மேலையும் நம்பிக்கையும் இல்ல, அந்த வேஸ்ட்டான காதலும் இல்லை. இப்போ ஜெயிச்சு காட்டுயா பார்ப்போம்” என்று ஆவேசமாய் முடித்தவனின் கால்களுக்கு இடையில் அவன் அமர்ந்திருந்த இருக்கை நொறுங்கி இருந்தது.

 

மற்ற மூவரும் அவன் கோபத்தில் ஒரு நொடி அதிர்ந்து நிற்க, ஜோதி நண்பன் அருகில் நெருங்கி நின்றிருந்தான்.

 

உடைந்த இருக்கையின் காலை தனியே உடைத்து எடுத்தவன் “குழந்தைங்க மேல கை வைக்கிறீங்களா? இப்போ நான் போலீஸ் மட்டுமில்ல நாலு வயசுப் பொண்ணோட அப்பா, இனி வெச்சு பாருங்கடா பார்ப்போம்” என்று அதனை மீண்டும் சுவற்றில் அடித்து நொறுக்கி இருந்தான்.

 

அவன் கோபத்தை அடக்க அவனுக்கு வழி தெரியவில்லை…

 

அவன் தோற்றுப் போன வலியை விட, ‘இத்தனை கொடிய குற்றவாளி சுதந்திரமாய் வெளியே சுற்றுக்கிறானே’ என ஒரு காவல் அதிகாரியாய், ஒரு பெண் குழந்தையின் தகப்பனாய் உணர்ந்த வலி மிகவும் அதிகம்…

 

ஒன்றல்ல ரெண்டல்ல முழுதாய் அவனது ஐந்து வருடங்களை அரசாங்கத்துக்குக் கூடத் தெரியாமல், ஆதாரத்தைத் திறட்டும் வேட்டையில் கழித்திருந்தவனுக்கு எத்தனை ரணம் உள்ளே கொட்டிக்கிடக்கும்???

 

பரஞ்ஜோதிக்கு அவனை அங்கிருந்து அழைத்து வரவே சிரமமாகிப் போனது.

 

அவனும் நண்பன் இப்படி உணர்ச்சிவசப்படக் கூடுமென எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“தீரா, ரிலாக்ஸ். என்னாச்சு உனக்கு? நிதானத்தை இழக்குற அளவுக்கு என்னடா கோபம்?” என்று நண்பனை அதட்டி ஜீப்பில் அமர வைத்தவன் நீரை அவன் கையில் கொடுத்தான்.

 

“மச்சான், என்னோட மயில்டா அவ, அவ எப்படி எனக்கு இப்படி பண்ணுவா? நான் அவ ஜெய் இல்லையாடா? என்னைவிட அந்த குழந்தைங்கள விட அவ அப்பாவோட மானம் அவளுக்கு முக்கியமா போயிடிச்சுல, அது தான்டா இங்க இன்னும் வலிக்குது” என்று தன் இதயத்தை காட்டி உடைந்து பேசிய நண்பனைப் பார்க்கும் போது, ஐந்து வருடத்துக்கு முன் தன் மடி தேடி வந்து புலம்பிய ஞாபகங்கள் தான் மேலேந்தது பரஞ்ஜோதிக்கு…

 

பழைய நினைவுகளின் தாக்கம் நண்பனை இப்படி பேச வைக்கிறது என்பது புரிய, அவனுக்கான மருந்திடம் நண்பனை அழைத்துச் சென்றான்.

 

“ஜெய் கண்ணுல பூச்சு விழுந்திடுச்சா, சரியாகிடும்” என்று அவனை மடியில் படுக்க வைத்து விழிகளை தடவி விட்டுக் கொண்டிருந்தாள் இணர்வி.

 

அவனது மருந்து அவள் தானே! அவனை அவன் தேற்றிக் கொள்ள காரணமும் அவள் தான்.

 

ஐந்து மாதங்களாய் உடைந்து போய் வாழவே பிடிக்காமல் ஏதோ பேருக்கு வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, உயிர் கொடுக்கவே பூமியில் உதித்த அவனது வாரிசு அவள்…

 

அவளுடன் சேர்ந்து அவனும் வளர்ந்தான். ஆம் அவனை வளர்ந்தாள் அவள்.

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்