Loading

 

 

அன்றில்-6

 

விழி தொடும் தொலைவில்

நீ இருந்தால் போதும்..

உனைக் கொண்டாடத் துடிக்கும்

என் நேசங்களுக்கு.

 

வெளிச்சப் புள்ளிகள் தொலைத்து நட்சத்திரக் கோலமிட வானம் தயாராகிக் கொண்டிருந்த நேரமது.. காலையில் இருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்து கண்கள் கூட லேசாய் இருட்ட ஆரம்பித்துவிட்டது நேத்ராவிற்கு.. இனி இந்தப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி, வீடு சென்று, ஏதாவது சமைத்து.. நினைக்கவே மலைப்பாய் இருந்தது அவளுக்கு.

 

இந்த வெறுமை தான் அவளைக் கடுப்பேற்றுகிறது.. அவள் அம்மா பிரபா இருந்த போதும் அவர் பெரிதாக எதையும் செய்யமாட்டார்.. அவருக்கும் சேர்த்து இவள் தான் சமைப்பாள்.. ஆனாலும் நமக்காக வீட்டில் யாரேனும் ஒருவர் இருந்தால்.. அதைத் தேடி ஓடிப்போகத் தோன்றுமே.. அது மிஸ்ஸிங்.. இப்போது சென்றாலும் நடு இரவு வரை உறக்கம் வருவது சந்தேகமே.. அதனால் எங்கேனும் சுற்றிவிட்டுச் செல்லலாம் என்று அவள் யோசித்தபடியே நடந்தாள்.

 

ரஞ்சித்தும் அவளையே பார்த்தபடி கவனியாமல் அவள் மேல் மோத வர.. இறுதி நொடியில் இருவருமே சுதாரித்து விலகிவிட.. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நேத்ரா.

 

பத்து மாதங்கள் கடந்திருந்தது ரஞ்சித் Enfin IT Solutions வாசியாக மாறி.. நேத்ராவையே பார்த்தபடியே வந்தவன் அவளை ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் ஒரு நொடி பார்த்துவிட்டு.. மறு நொடியே இகழ்ச்சியைக் கண்ணில் தேக்கி “அப்பறம் எப்படி இருக்கறீங்க.. கோயம்புத்தூர் பேரழகி.. இங்க என்ன சோலி” என்று நக்கலாக வினவ..

 

அரை இருட்டில் அவனை அடையாளம் கண்டு கொண்டவள் அதை விட நக்கலான குரலில் “அட பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் நீங்களா.. எப்ப லண்டன்ல இருந்து வந்தீங்க.. அதுவந்துங்க கோயம்புத்தூர்ல எல்லா கஃபேலயும் காஃபி குடிச்சு போர் அடிச்சுருச்சு.. அதான் சென்னையில குடிச்சுட்டு போலாம்னு வந்திருக்கறேன்.. ஏனுங்க உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சென்னைக்கு விசா எடுத்துட்டு வரனுங்களா” என்று கேட்கவும்..

 

எப்போதும் இவளை நம்மால் வீழ்த்தவே முடிவதில்லையே என்ற அவனது ஆண் ஈகோ தூண்ட “அதான.. உனக்கென்ன ஃபேமிலி இருக்குதா இல்ல பெத்தவங்க தான் இருக்கறாங்களா.. கேக்குறதுக்கு.. இப்படியே அலைஞ்சுட்டே இருக்க வேண்டியது தான்” என்று அவள் தற்போதைய நிலையைக் குத்திக் காட்டினான்.

 

ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கியவள் “யார் கூட இருந்தாலும் இல்லைன்னாலும் நான் எப்பவும் இப்படித்தான் இருப்பேன்” என்றுவிட்டு ‘நீயெல்லா ஒரு ஆளா’ என அவனைக் கணக்கில் எடுக்காமல் பதில் சொல்லவும்..

 

 

‘இந்தத் திமிரு மட்டும் எப்பவும் இவளுக்கு குறையாது.. எல்லா காசு இருக்கற திமிரு’ எனப் பொறுமியவன் “ஆமா உன் பின்னாடி ஒருத்தன் சுத்துவானே.. அவன் எங்க காணோம்” என்று கேட்க..

 

 

அவன் ஹர்ஷாவைத் தான் கேட்கிறான் என்று புரிய “ஏன்?? போன தடவை அவங்கிட்ட மாட்டி அடி வாங்காம தப்பிச்சிட்ட.. இந்தவாட்டி அடி வாங்கியே ஆகனுமா.. வேணும்னா சொல்லு.. ஒரு கால் பண்றேன்.. இப்ப வந்துருவான்” என்கவும்..

 

“நீ எவன் கூட வேணாலும் சுத்து.. எனக்கென்ன.. நல்லவேள நா தப்பிச்சுட்டேன்” என்று அவளை இளக்காரமாகச் சொன்னவன் தோளில் ஒரு கரம் தொப்பென்று விழுந்தது.

 

 

அதில் அதிர்ந்த ரஞ்சித் திரும்பிப் பார்க்க ஹர்ஷா தான் நின்றிருந்தான்.. ஒரு நொடி மிரண்டவன் நேத்ராவைப் பார்க்க.. அவள் அவனைக் கண்டு கொள்ளாமல் தனது காரை எடுப்பதற்குச் சென்று விட.. அவளையே பார்த்தபடி இருந்த ரஞ்சித்தின் தாடையை தன்னை நோக்கித் திருப்பினான் ஹர்ஷா.

 

 

“அப்பறம் ப்ரோ.. என்ன நல்லவேள.. என்ன தப்பிச்சிங்க.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க கேப்போம்.. புதுசா வேற எந்தப் பொண்ணையாவது பிடிக்க ஜாதகம் பாக்கறிங்களோ” என்று ஹர்ஷா கேட்கவும்..

 

அவன் கையைத் தன் தோளில் இருந்து வெடுக்கெனத் தட்டிவிட்ட ரஞ்சித் “என்ன ரெண்டு பேருக்கும் என்னப் பாத்தா காமெடியா இருக்குதா.. எப்ப பாத்தாலும் அவ பின்னாடி தான் நீ சுத்துற.. யாருமே இல்லன்னு சொன்னா அவ.. ஆனா அவங்க அம்மா இறந்தப்ப அவ கூட தனியா அவங்க வீட்டுல உனக்கென்ன வேலை.. உனக்காகத் தான் அவ இங்க வரைக்கும் வந்துருக்கறா.. அப்ப எதுக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி எங்கூட ஒன் இயர் பழகுனா.. என்ன ஸ்கேம்டா இதெல்லாம்” என்று குதிக்க..

 

“அதாவது ப்ரோ.. நீங்க கோயம்புத்தூர் தான.. அதான் எங்க ஸ்கேம உங்கள்ட்ட இருந்து ஆரம்பிக்கலாம்னு.. நீங்க தான ஈமுக்கோழியில இருந்து சிட் ஃபண்ட் வரைக்கும் எதை சொன்னாலும் நம்புவிங்க” என ஒட்டுமொத்த கோவையையுமே அவன் கலாய்க்க.. இன்னும் காண்டானான் ரஞ்சித்.

 

“டேய்.. என்ன ஓவரா பேசுற.. இந்த எழவுக்கு எதுக்குடா ஜாதகம், மீட்டிங், ரிலேஷன்ஷிப் எல்லாம்.. நீங்க பண்ணுற அசிங்கத்தையே பண்ண வேண்டியது தான.. இன்னொருத்தன் லைஃப ஏன்டா ஸ்பாயில் பண்ண பாக்கறிங்க” என இன்னும் தணியாமல் ரஞ்சித் வினவ..

 

ஹர்ஷாவும் முகம் மாறி “பல்ல பேத்துருவேன் ராஸ்கல்.. உம்புத்தி உன்ன மாதிரி தான் இருக்குது.. நீ கல்யாணம் பண்ணவா பொண்ணு பாத்த.. மெய்ட் வித் பெனிஃபிட்ஸ் தேடின.. அதுவும் எப்படி எனக்கு ஜாதகம் சரியில்ல ஒரு வருஷம் வெய்ட் பண்ணலாம்னு சொல்லிட்டு.. லாஸ்ட்ல வேண்டாம்னு ஓடின நீயெல்லாம் பேசற பாத்தியா” என்று அவன் சட்டையை இறுக்கவும்.. நேத்ரா கார் ஹாரனை ஒலிக்க விடவும் சரியாக இருந்தது.

 

 

அவளைத் திரும்பிப் பார்த்த ரஞ்சித்தின் கழுத்தை தன்னை நோக்கித் திருப்பிய ஹர்ஷா “அவ இங்க தான் ஜாய்ன் பண்ணிருக்கா.. ஒழுங்கா வேலைய மட்டும் பாத்தா உனக்கும் நல்லது.. உன் பாடியில இருக்க எல்லா பார்ட்ஸ்க்கும் நல்லது.. இல்லைன்னு வை நெக்ஸ்ட் டைம் இப்படி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.. பாய் ப்ரோ” என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு.. நேத்ராவுடன் காரில் பறந்துவிட.. அவர்களை முறைத்தபடியே நின்றிருந்தான் ரஞ்சித்.

 

***

 

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…

பறித்து கொடுக்கும் ஒருவன்…

கேளாமல் போன பாடலை எல்லாம்…

திரட்டி கொடுக்கும் ஒருவன்… என்று நித்ய ஶ்ரீ மகாதேவன், ஹாரிஸின் இசைக்குத் துள்ளல் ஊட்டிக் கொண்டிருக்க.. தானும் உடன் கத்திக்கொண்டு வந்தான் ஹர்ஷா.

 

முன்னாலும் பின்னாலும் ஹாரன் ஒலி ஏற்றியிருந்த கார் விண்டோவைத் தாண்டிக் காதைத் துளைக்க.. போதாதற்கு இவன் வேறு தன் பங்கிற்கு நேத்ராவின் டென்ஷனை ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறான்.

 

“அவன்ட்ட என்ன சொன்ன??” போக்குவரத்து ஓரளவு சீரானதும் நேத்ராவின் கேள்வி ஹர்ஷாவைத் துளைக்க..

 

அவள் ஃபோனை எடுத்து எதையோ நோண்டிக் கொண்டே “அவனப்பத்தி பேசற அளவு அவ்வளவு பெரிய பட்டர்கட்டர் இல்ல அவன்..  நீ இந்த ரெஸ்டாரன்ட்க்கு போ” என்று மேப்பை அவள் காரோடு கனெக்ட் செய்ய.. அவளும் அவனை முறைத்தபடி அமைதியாக.. அவனும் தன் பாடலைத் தொடர்ந்தான்.

 

 

தன் மனதின் வெறுமையை உணர்ந்தோ, உணராமலோ ஏதேதோ செய்து கொண்டு வரும் ஹர்ஷாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்து முறைத்தாலும்.. அவன் சேட்டைகளை இரசித்துக் கொண்டு தான் வந்தாள்.

 

 

“அப்ப.. முதல் நாளே ரெண்டு பேரும் முட்டிக்கிட்டிங்க.. அவ இங்க வருவாளா மாட்டாளான்னு காதல் பரத் மாதிரி மண்டையில கொட்டிகிட்டே சுத்துன.. வந்ததும் வேலைய காட்டிட்ட.. இதுக்குப் பின்னாடி இருக்கற சயின்ஸ் என்னன்னு எனக்குப் புரியவே இல்ல மச்சி” என்று ஆல்ஃபாம் சிக்கனை ருசித்தபடி கேட்ட கோகுலை பாவமாகப் பார்த்தான் துருவன்.

 

இருவரும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து இருந்தனர்.

 

கோகுலின் அனைத்துமே துருவன் தான்.. கல்லூரியில் இருந்து தொடர்ந்து வரும் நட்பு.. துருவனின் Enfin IT Solutions-ன்  ஒரு முக்கியமான தூண் கோகுல்.. ஒரு வேலையாக இரண்டு நாட்கள் சென்றுவிட்டு.. இன்று தான் சென்னை திரும்பியிருக்க.. அவனைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டான் துருவன்.

 

 

“என்னடா பண்ணச் சொல்ற.. ஜஸ்ட் தெரியாம வந்து மோதினதுக்கு அவ்வளவு ஓவர் ரியாக்ட் தேவைதானா.. இப்படித் தொட்டாச்சிணுங்கியா இருந்தா எப்படி இங்க சர்வைவ் பண்ணுவா.. நாளைக்கு நம்ம கம்பெனிய மேனேஜ் பண்ற சிட்டுவேஷன் வந்தா என்ன செய்வா” என்று தன் போக்கில் துருவன் பேசிக்கொண்டே செல்லவும்..

 

“தம்பி தம்பி.. நம்மள பந்திக்கே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கறாங்க.. நீ என்ன இலை ஓட்டைன்னு புலம்பிட்டு இருக்க” என்று இடைவெட்டினான் கோகுல்.

 

துருவன் புரியாமல் பார்க்கவும் “அதாவது மச்சி.. அவ இந்த ஒரு ப்ராஜெக்ட் ஆர் மிஞ்சி போனா அவளோட பிஹெச்டி கம்ப்ளீட் ஆகுற வரை தான் இங்க இருக்கறதா சொல்லிருக்கா.. நீயும் எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு.. நீங்க வந்தா மட்டும் போதும்னு கூட்டிட்டு வந்துருக்க.. இப்ப வரைக்கும் உன்னோட நினைப்பு என்னனு அவளுக்குத் தெரியாது.. அவ்வளவு ஏன் எனக்கே தெரியாது” என்று கோகுல் விளக்கவும்.. துருவன் முகத்தில் ஓர் அழகிய புன்னகை.

 

அதைக் கவனித்த கோகுலும் “எப்ப இந்த டாபிக் வந்தாலும் இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சுக்குறடா.. எங்கூடத்தானடா இருந்த.. இதெல்லா எப்ப நடந்துச்சு” என்று கேட்க.. அதற்கும் துருவனிடம் பதிலில்லை.

 

சற்று தூரத்தில் அவன் பார்வை பதிந்திருக்க.. அவனை உலுக்கிய கோகுல் “டேய்.. என்னடா நாம்பாட்டுக்கு பேசிட்டு இருக்கறேன்.. நீ என்னன்னா புதுசா வாங்குன ப்ளூடுத்ல ஆடியோவும் வீடியோவும் ஒரே லைன்ல போகாத மாதிரி.. காதை இங்க வச்சுட்டு கண்ண எங்க வச்சுட்டு இருக்கற” என்று கேட்கவும்..

 

“பின்னாடி திரும்பிப் பாரு” என்றான் துருவன்.

 

கோகுல் திரும்ப அங்கே நேத்ரா அமர்ந்திருந்தாள்.. உடன் வேறு ஓர் ஆடவன் அமர்ந்திருக்க.. அது யார் என்று இருவருக்கும் தெரியவில்லை.

 

“அவளுக்கு இங்க யாரைத் தெரியும்.. அப்படியே தெரிஞ்சாலும் இப்பிடி ஒன்னா டின்னர் வர்ற அளவு வச்சுக்க மாட்டாளே.. கொடூர இன்ட்ரோவெர்ட் ஆச்சே இவ” என்று துருவன் சொல்லவும்..

 

“ஆமாமா.. எக்ஸ்ட்ரா ஒரு கப் ரைத்தா கேக்க கூட யோசிக்கற இன்ட்ரோவெர்ட்லாம் எதுக்கு ரெஸ்டாரன்ட் வரனுங்கறேன்” என்று கோகுலும் பதிலுக்குக் கேட்க..

 

அவனை முறைத்த துருவன் “டேய்.. நானே அவ யார் கூட வந்தான்னு யோசனையில இருக்கறேன்.. உனக்கு நக்கல் கேக்குதா” என்று திட்டிக் கொண்டிருக்க.. இவர்களைக் கவனிக்காமல் அங்கு ஹர்ஷாவை மிரட்டிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

 

“எருமை மாடே.. லாஸ்ட் டைம் இத தின்னு சேராம போச்சு தான.. மறுபடியும் எதுக்கு க்ராப் (crab) சூப்.. தின்னுட்டு செத்துராத” என்று அவள் அடிக்குரலில் அவனை மிரட்டவும்..

 

அதற்கு பதிலாக வேறு ஒன்றைச் சொல்லி சர்வரை அனுப்பிவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷா “செத்தா தான் என்ன.. உனக்கு நிம்மதி தான”  என்று அவளை ஆழ்ந்து பார்த்தவாறு கேட்க.. “ஆமாமா.. நீயும் போயிரு.. ஒரு நாயையும் நம்பி நான் இல்ல” முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் நேத்ரா.

 

ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடிக்க.. அவளுக்காக ஐஸ்கிரீம் எடுத்துவர ஹர்ஷா சென்றுவிட.. அப்போது தான் எதிரில் இருந்தவர்களைக் காண.. ஒரு நொடி சிரிப்பதா வேண்டாமா என்று யோசித்தாள் நேத்ரா.

 

 

“நாஞ் சொல்லல.. இவ கொடூர இன்ட்ரோவெர்ட்னு.. சிரிக்கலாமான்னு யோசிக்கறா பாரு” என்று துருவன் சொல்ல.. அவளைப் பார்த்த கோகுலின் கை அவன் இடது

பக்க நெற்றித் தழும்பை வருட.. அதைக் கண்ட நேத்ராவின் இதழ்கள் தன்னை மீறி விரிந்தது.

 

துணையாவான்..

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்