
அன்றில்-5
முப்பொழுதும் கற்பனையில்
உன் நினைவோடு தான்
என்றாலும்..
நேரில் உனைக் கடக்கும்
எனது நிமிடங்களுக்கு..
இருளில்
தன் நிழலைக் கொண்டாடும்
மழலையின் சாயல்.
அந்த ஏழு தளங்களைக் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தின் மூன்று தளங்களைத் தனதாகக் கொண்டிருந்த Enfin IT Solutions-ன் பார்க்கிங்கிற்குள் தனது காரைச் செலுத்தினாள் நேத்ரா.. செக்யூரிட்டி சொல்லியபடி லாவகமாகக் கையாண்டு அவள் காரைத் திருப்பி நிறுத்திய விதத்திலேயே தெரிந்தது இதில் அவளுடைய அனுபவம் என்னவென்று.
கழுத்தை ஒட்டி சேர்ந்தாற் போலச் சிறியதும் பெரியதுமாய் ஒன்றிணைந்த இரண்டு வட்டங்களும் அதனைச் சுற்றி பொடிப்பொடியாக வைரங்கள் அலங்கரித்த செயினும், அதே மாடலில் காதில் சிறு தோடும், கையில் மெல்லிய ப்ரேஸ்லெட்டும் அவள் அழகுக்கு நிகர் செய்யப் போராடித் தோற்றுப் போக.. வால்நட் ப்ரௌன் நிற குர்தி மற்றும் ஆங்கில்பிட் லெகினில் விரிந்த கூந்தலுடன்.. முதல் நாளிற்கான படபடப்பு எதுவுமின்றியே அலுவலகத்தை நோக்கி நகர்ந்தாள் நேத்ரா.
அவள் செய்யப் போகும் பணியும், உடன் இருக்கும் நபர்களும் ஏற்கனவே அவளுக்கு அறிமுகமானவை தானே.. இன்று நேற்றல்ல அவள் முதுகலை முடித்து நேரடியாக முனைவர் படிப்பிற்குள் சென்ற பொழுதில் இருந்து இதே வேலையைத் தான் விருப்பத்துடன் செய்து வருகிறாள்.. எனவே எவ்வித பயமும் இன்றி அவள் அலுவலகத்திற்குள் நுழையப் போகவும்.. எதிர் வந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் மோதுவதற்கும் சரியாக இருந்தது.
இதை எதிர்பாராத நேத்ரா கீழே விழப் போக.. துருவனுக்கும் முன் அவசரமாக அவளை நெருங்கி அவள் கையைப் பிடித்து நிறுத்தினார் பார்த்திபன்.
ஒரு நொடியில் தன்னை நிலைப்படுத்திய நேத்ரா.. தன்னைப் பிடித்திருந்த பார்த்திபன் விரல்களைப் பார்த்துவிட்டு.. அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க.. அவள் முகத்தில் தெரிந்த அசூயை உணர்வில்.. எதிரில் இருந்த இரண்டு ஆண்களின் முகமும் இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியைத் தொலைத்து இறுகியது.
அவளின் பார்வையில் பார்த்திபன் முகம் கருத்தாலும்.. அவள் கையை விடாமல் அவள் வலது கைப் பெருவிரலைச் சற்றே வருடவும் “கையை கொஞ்சம் விடறீங்களா” என்று எரிச்சல் குரலில் மொழிந்து அவர் கையை உதறிவிட.. அவளைப் பார்த்து முதலில் மலைத்து நின்ற துருவனுக்கு சற்றே நினைவு வந்து அவள் செயலில் கோபம் மேலிட.. தாடை இறுகியது.
“சாரிம்மா.. நான் நீ கீழ விழுந்துடக் கூடாதுன்னு தான் பிடிச்சுட்டேன்.. சாரி” என்று பார்த்திபன் இறங்கி வந்து மன்னிப்பு வேண்ட.. அவரை அலட்சியப் பார்வையில் ஒதுக்கிய நேத்ரா அதை விட அலட்சியமாக அவரது மன்னிப்பை ஒதுக்கிவிட்டு “முன்ன பின்ன யோசிக்காம பண்ணிட்டு சாரி சொல்லியே வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிடாம வேலையப் பாருங்க.. போங்க” என்று குத்தல் குரலில் சொன்னாள்.
அதற்கு மேலும் நிற்காமல் பார்த்திபன் அவள் முகம் பாராமல் அவ்விடத்தை விட்டு நகர.. அவரை அழைத்தபடியே பின்னாலேயே சென்றான் துருவன்.
அலுவலக காரிடாரில் அவரை நிறுத்திய துருவன் “சாரி அங்கிள்.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. அவங்க அம்மா ரீசன்டா தவறிட்டாங்க.. நியூ என்விரான்மெண்ட்.. அதான் இன்செக்யூர்டா ஃபீல் பண்றா போல.. உலகத்து மேல பிடிப்பே இல்லாம இருந்தவள.. நான் தான் அவங்க அம்மா பேரை சொல்லி இங்க வேலைக்கு அழைச்சுட்டு வந்தேன்.. ஒன்ஸ் அகெய்ன் சாரி அங்கிள்” என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறவும்..
அவன் தோளைத் தட்டிக் கொடுத்த பார்த்திபனும் “தட்ஸ் ஓகேப்பா.. நானும் கவனிக்காம வந்துட்டேன்.. ஒரு சின்ன ப்ராப்ளம்.. நீ இதை பெரிசு பண்ணாத.. நான் எதையும் மனசுல வச்சுக்கல.. சீ யு சூன்” என்று புன்னகையுடன் விடைபெற்றுக் கொள்ள.. தனது கோவத்தை நடையில் முடிந்த அளவு காண்பிக்காமல் நேத்ராவைத் தேடிச் செல்ல.. அவ்வளவு பெரிய மனிதரைத் தன் ஒரு பார்வையில் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டு எதுவும் அறியாத பிள்ளை போல அவன் அறையில் அமைதியே உருவாக அமர்ந்து சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க.. உனக்கு மட்டுந்தான் ஊருக்குள்ள கஷ்டம் இருக்கா.. சரி ஓகே.. உன்னோடது பெரிய இழப்பு தான்.. அதை போறவங்க வர்றவங்க எல்லார்ட்டயும் எரிஞ்சு விழுந்து தான் காட்டனுமா” என்று ஏக வசனத்தில் ஆரம்பிக்கவும்.. தன் கவனம் கலைந்து சுற்றுப்புறத்தில் இருந்து தன் பார்வையை அவனை நோக்கித் திருப்பினாள் நேத்ரா.
அவள் பதில் மொழியாமல் இருக்கவும் “என்ன முறைக்கற.. ஆன்சர் மீ.. எதுக்கு அப்படி அவர்ட்ட பிகேவ் பண்ண.. எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா.. நீ என்னமோ அவரை அவ்வளவு சீப்பா.. ச்சீ.. எனக்கு இப்ப நினைச்சா கூட ஆத்திரமா வருது” என்று விடாமல் அவன் பொரிந்து கொண்டிருக்க..
எழுந்து நின்று அமைதியாக அவனை ஏறிட்ட நேத்ரா “எனக்கு வேலை தர்றதா தானே சொல்லி இங்க கூட்டிட்டு வந்திங்க.. அப்பறம் என்ன மாரல் எஜூகேஷன் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க.. யார்ட்ட எப்படி நடக்கனும்னு தெரியாம.. அதை கத்துக்க ஒன்னும் நா கோயம்புத்தூர்ல இருந்து பஸ் பிடிச்சு சென்னை வரல” என்று நிதானமான குரலிலேயே சொல்ல.. இன்னும் ஆத்திரமானான் துருவன்.
விஷ்ணுப்பிரியா – ஆகாஷ் காதல் தெரிய வர.. அதைத் திருமணத்தில் கொண்டு சென்று நிறுத்தியதற்கு உண்மையில் பார்த்திபன் மீதான மரியாதையும் ஒரு காரணம்.. சிறு வயதில் இருந்தே அவரை இவனுக்குத் தெரியும்.. அளவில்லாத மதிப்பு கொண்டிருக்கிறான் அவரிடத்தில்.
தனது மரியாதைக்குரிய நபரை அவளுக்கு எப்படியேனும் புரிய வைத்துவிடும் வேகம் அவனிடம்.. ஆனால் எதிரில் இருப்பவளோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளவதாக இல்லையே என்று சலித்துக் கொண்டான் துருவன்.
ஒரு நெடுமூச்சு ஒன்றை வெளியிட்டுத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவன் “ஸீ நேத்ரா.. நீ நினைக்கிற மாதிரி அவர் இல்ல.. அவரை அப்படி நீ ட்ரீட் பண்ணது தப்பு.. அதுவும் தெரியாம நடந்த ஒரு சின்ன விஷயத்துக்கு நீ இவ்வளவு ஓவர் ரியாக்ட் பண்ணிருக்க கூடாது.. பாவம் அங்கிள் முகமே மாறிடுச்சு.. நெக்ஸ்ட் எப்பயாவது பாத்தா சாரி..” என்று ஏதோ சொல்ல வர..
அவன் பேச்சை இடை வெட்டியவள் “யார் எப்படிப் பட்டவங்கன்னு ரிசர்ச் பண்ண நான் இங்க வரல.. அதுக்கு எனக்கு அவசியமும் இல்ல.. உங்களுக்கு அவ்வளவு வேத்து வடிஞ்சா நீங்க உங்க அங்கிளை தலையில தூக்கி வச்சு ஆடுங்க.. இப்ப என்னோட வேலை என்னன்னு நீங்க சொன்னீங்கன்னா நான் பாட்டுக்கு அதைப் பாக்க போவேன்” என்றாள் தன் பிடியில் நின்றவாறே.
“நிஜமாவே நீ பிரபா மேம்மோட பொண்ணு தானா.. இப்படி எல்லாரையும் எடுத்தெறிஞ்ச மாதிரி பேசி தான் இப்படி வந்து நிக்கிற” என்று துருவனும் வாய் விட்டுவிட..
அவள் புருவம் நெறிய அவனைப் பார்த்துவிட்டு “எப்படி நிக்கறேன்.. ஏன்னு கேக்க கூட ஆள் இல்லாம தனியா அநாதையா நிக்கறேனா.. அதான் வள்ளல் நீங்க வாழ்க்கை குடுக்க இங்க கூட்டிட்டு வந்துட்டிங்களே.. இனி என்ன கவலை சொல்லுங்க” என்று நக்கல் தெறிக்கக் கேட்டாள் நேத்ரா.
அவன் சொன்னதில் இருந்த பொருளில் அவனுமே வருந்தி கண்களை மூடித் திறந்த துருவன் “சாரி.. ஐ டின்ட் மீன் தட்.. ஓகே.. ஆல்ரெடி உன்ட்ட சொன்னது தான் நேத்ரா.. இந்த ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப இம்பார்டென்ட்.. இதுல நீ, நான் அப்பறம் என் ஃப்ரெண்ட் கோகுல் தெரியும்ல அவன்.. மூனு பேர் பண்ணப் போறோம்.. இதுக்கு உன்னோட சப்போர்ட் எங்களுக்கு ரொம்பவே தேவை.. மத்த டீடெயில்ஸ் எல்லாம் உனக்கு மெயில் பண்ணிருக்கேன்.. கரன்ட்டா நீ பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா இப்ப ஒரு இன்டர்வியூ நடக்க போகுது.. அதை பாக்கனும்” என்றான்.
அதில் தன் கண்களை அகல விரித்தவள் “வாட்.. நானா.. நான் எப்படி இதெல்லாம் பண்ண முடியும்.. ப்ளீஸ் நான் போய் என்னோட வேலைய மட்டும் பாக்கறேனே” என்று தலை சரித்து அவள் வினவ..
மறுத்துத் தலையசைத்த துருவன் “நோ நேத்ரா.. நீ இதை பண்ணித்தான் ஆகனும்.. ஏன்னா இந்த ப்ராஜெக்ட்ல இருக்க கோகுல் இப்ப வேற ஒரு வேலையில எங்கேஜ்டா இருக்கான்.. வந்து சேர டூ டேஸ் ஆகும்.. எனக்கு ஒரு அர்ஜெண்ட் கால் பேசனும்.. எப்படியும் டூ ஹவர்ஸ் ஆகிரும்.. பேலன்ஸ் இருக்குறது நீ தான்.. நீ கூட இருந்து தான் ஆகனும்” என்று வலியுறுத்தினான்.
“எல்லாம் புரியுது.. ஆனா நான் எப்படி.. எனக்கு இதுல எந்த எக்ஸ்பீரியன்ஸூம் இல்லையே” என்று அவள் இன்னமும் தயங்க..
“டோன்ட் வொர்ரி.. நீ ஜஸ்ட் கூட போ.. மத்தது எல்லாம் ஹெச்ஆர் பாத்துப்பாங்க.. ஓகே எனக்கு டைம் ஆகுது.. சீ யூ” என்றுவிட்டு அவ்விடம் விட்டு அவன் நகர.. பழக்கமில்லாத வேலையை நினைத்து சற்றே மலைத்துப் போனாள் நேத்ரா.
***
நேத்ரா Artificial intelligence and Machine learning டொமைனில் தான் தனது முனைவர் படிப்பைத் தொடர்ந்து வருகிறாள்.. சென்ற வருடமே அது முடிந்திருக்க வேண்டியது.. ஆனால் சிலபல சூழ்நிலைகள் காரணமாக ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் போட்டிருந்தாள்.. அதுவும் இன்னும் மூன்று மாதங்களில் முடியவிருக்க.. ஏற்கனவே டாக்குமெண்ட்கள் வைத்தாயிற்று.. தற்போது தனது முனைவர் படிப்பின் இறுதியில் இருக்கிறாள்.
ஜோதி பிரபாவின் இறப்பிற்குப் பின்னர் தனிமை தீயாக அவளைத் தகிக்கத் துவங்கவும்.. மனமும் மூளையும் ஓய்வு ஒழிச்சல் இன்றி எதை எதையோ யோசித்துக் கொதித்துக் கொண்டே இருக்க.. இப்படியே இருந்தால் நிச்சயம் பைத்தியம் ஆகிவிடுவோம் என்ற நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருந்தாள்.
அப்போதும் அவளால் மனதை அமைதிப்படுத்த முடியாது போக.. இடமாற்றம் ஏதேனும் செய்யுமா என்று பார்க்கவே துருவனின் ஆஃபரை ஏற்றுக்கொண்டாள்.
எங்கோ ஆரம்பித்து எங்கு வந்து நின்றிருக்கிறோம் என்று எண்ணியவாறே அவள் அமர்ந்திருக்க.. நேர்முகத்தேர்வு தொடங்கியது.. இதுவே இறுதிநிலை.
சற்றே பதட்டமாக உள்ளே வந்த இளம்பெண் ஒருத்தியிடம் பெயர், தகுதி, படிப்பு அனைத்தையும் அருகில் இருந்தவர் கேட்டுக்கொண்டிருக்க.. இவள் அப்பெண்ணின் ரெஸ்யூமில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
பின்னர் அப்பெண்ணிடம் “தர்ஷினி லேங்வேஜஸ்ல தெலுங்குன்னு போட்ருக்கிங்க.. எழுத, படிக்க தெரியுமா” என்று தனது முதல் கேள்வியை வினவினாள்.
சற்றே தளர்ந்த அப்பெண் “நோ மேம்.. ஜஸ்ட் வீட்ல பேசற லேங்வேஜ்” என்று பதில் அளிக்க..
மீண்டும் அவளிடம் “ஓஓஓ ஓகே.. நீங்க சின்ன வயசுல இருந்து நம்பின எதாச்சும் ஒரு விஷயம்.. வளந்த அப்பறம் ஸ்டுப்பிட்டா இருந்துருக்கா” என்று கேட்க.. அவள் விழிக்கவும்..
நேத்ரா லேசாகச் சிரித்துவிட்டு “அது என்னன்னா நா என்னோட சின்ன வயசுல பஸ்ல போது கண்டக்டர்ட்ட காசு குடுத்து ஊர் பேர் சொன்னா டிரைவர் எப்படி கரெக்டா போய் இறக்கி விடுவாருன்னு யோசிச்சிருக்கேன்.. வளந்த அப்பறம் தான் பஸ் ரூட் பத்தி எல்லாம் தெரியும்.. இப்படி எதாவது இருக்குதா” என்று விளக்கவும்..
அப்பெண்ணும் சிரித்துவிட்டு பதில் சொல்ல.. அடுத்து வேலை சம்பந்தப்பட்ட கேள்விகளை உடன் இருக்கும் மற்றவர்கள் கேட்க.. அவளும் தயக்கங்கள் இன்றி பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
இவை அனைத்தையும் தனது அறையில் கேமரா கண்கள் வழியே பார்த்துக் கொண்டிருந்த துருவனுக்கு அவளை எப்படியேனும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை சற்றே துளிர்த்தது.
ஒருவழியாக நேர்முகத்தேர்வை முடித்துக் கொண்டு.. அலுவலகத்தின் முதல் நாளிற்கான மற்றைய ப்ரொசீஜர்கள் அனைத்தையும் முடித்தாள்.
அன்றைய நாளில் தனது வேலையை முடித்துவிட்டு மின்தூக்கியில் கீழே வந்தாள்.. வாரத்தில் மூன்று நாட்கள் அவள் இங்க வரும்படியும்.. மற்ற மூன்று நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலையைத் தொடரும்படியும் இருக்கும்.
ஏதோ யோசனையில் அவள் நடந்து வர.. தன்மேல் யாரோ மோதுவது போல வரவும்
சற்றே சுதாரித்து நகர்ந்து திரும்பிப் பார்க்க ரஞ்சித் நின்றிருந்தான்.
துணையாவான்..

