அத்தியாயம்: 13

Loading

தாரகேஷ் வெண்ணிலாவுடன் சென்றதைக் கேட்ட செங்காந்தள் துடித்துப்போனாள்.

 

“என் தம்பி, எனக்காக ஓர் உயிரை எடுத்துட்டானே..” எனக் கதறியவள், பொன்னம்மா மூலம் வெண்ணிலாவுடன் பேச முயற்சித்தாள்.

 

வெண்ணிலா, “ஹலோ..”

 

செங்காந்தள், “ஹலோ.. தம்பி, என் தம்பி இருக்கானா? அவன் கூடப் பேசணும். அவன் ஏன் வீட்டுக்கு வரல? அவன் இருக்கானா..” எனப் பதறினாள்.

 

வெண்ணிலா, “செங்காந்தள் கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க தம்பி இப்போ நல்லாதான் இருக்கான். ஒன்றும் பிரச்சனையில்லை.. பயப்படாதீங்க.. ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளுக்குள்ளவே நிறைய கஷ்டப்பட்டுட்டீங்க. அதுவும் இல்லாம உங்க தம்பி பண்ணது ரொம்பப் பெரிய காரியம். உங்க தம்பியை கோர்ட் வெளியே விட்டுட்டாலும், அவரால யாருக்கும் பாதிப்பில்லைன்னு கோர்ட் நம்பணும். அதோட ஒரு சூழ்நிலை மாற்றம் உங்க இரண்டு பேருக்கும் வேணும். நான் உங்க தம்பியை நல்லாப் பார்த்துக்கிறேன். அதோட பொன்னம்மா அத்தையும் இன்னும் கொஞ்ச நாள்ல ஏலகிரியில ஒரு எஸ்டேட்ல வேலைக்குப் போகப் போறாங்க, அவங்க கூடப் போங்க. கொஞ்ச நாள் வேற ஒரு சூழ்நிலையில இரண்டு பேரும் இருங்க.. மனசு அமைதி ஆகட்டும். அப்புறம் என்னன்னு பொறுமையா பார்த்துக்கலாம்..” என்று சூழ்நிலையை விளக்கிக் கூறினாள்.

செங்காந்தள், “நீங்க சொல்றது எனக்குப் புரியுது வக்கீலம்மா.. ஆனா நான் ஏன் என் தம்பியைப் பிரிஞ்சு இருக்கணும்? நாங்க இந்த ஊரை விட்டுப் போறது தான் நல்லதுன்னா போயிடறோம். ஆனா என் தம்பியை மட்டும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க..” என்றாள் குரல் கரகரக்க.

 

வெண்ணிலா, “இது நான் எடுத்த முடிவு இல்லை.. உங்க தம்பியோட விருப்பம். நீங்களே அவன்கிட்ட பேசுங்க..” என்று போனை தாரகேஷிடம் கொடுத்தாள்.

 

தாரகேஷ், “அத்தா..” என்றான் கலங்கிய குரலில்.

 

செங்காந்தள், “தம்பி.. அத்தா கூட வந்துருடா.. நாம எங்கயாவது போய் எப்படியாச்சும் பிழைச்சுக்கலாம்.. அத்தாவைத் தனியா விட்டுடாதடா..” என்றாள் கதறலாக.

 

தாரகேஷ், “அத்தா.. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. நான் ரெண்டு நாள் வக்கீலம்மா கூட இருந்தேன். ரெண்டு நாள் பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாரையும் பார்த்தேன். எல்லாரும் நிறைய படிச்சுப் பெரிய இடத்துல இருந்தாங்க. நானும் நிறையப் படிக்கப் போறேன். வக்கீல் அம்மா ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காங்க. ஆனா கோர்ட்ல ஒரு அங்கிள் நான் கொலை பண்ணிட்டேன், என்னால மத்தவங்களுக்கும் பிரச்சனை வரும்னு சொன்னாரு. அப்போ எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது. என்னால உனக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அதே நேரம் நீயும் பத்திரமா இருக்கணும். பொன்னம்மா கூடப் போ.. நீ எங்க இருந்தாலும் நான் கண்டிப்பா உன் முன்னாடி வந்து நிப்பேன். அப்போ நிறைய படிச்சுப் பெரிய ஆளா இருப்பேன்.. நீ தைரியமா இரு..” என்று தன் அத்தாவைப் பிரியும் வலியை மறைத்துக்கொண்டு கூறினான்.

செங்காந்தள் மனமே இல்லாமல் பொன்னம்மாவுடன் சென்றாள். இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி செங்காந்தளின் மனதைச் சாந்தப்படுத்தியது. நாட்கள் செல்லச் செல்ல வலிகள் மறைந்து வடு மட்டுமே மனதில் நிறைந்தது. மனம் தம்பியைத் தேடிக்கொண்டே இருக்க, என்றாவது ஒருநாள் தம்பி தன்னைத் தேடி வருவான் என்று மீண்டும் தன் சொந்தக் கிராமத்திற்கே வந்துவிட்டாள். அதுநாள் வரை தாரகேஷுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியவில்லை.

 

அதே நேரம் செங்காந்தளுடன் பேசிவிட்டுப் போனை வெண்ணிலாவிடம் கொடுத்தான் தாரகேஷ்.

 

வெண்ணிலா, “இப்போ எதுக்கு உன் அக்கா கூடப் போக மாட்டேன்னு அடம்பிடிச்ச?”

 

தாரகேஷ், “நேத்து உங்களைப் பார்க்க ஒரு அக்கா வந்தாங்களே, அவங்க எதுக்கு வந்திருந்தாங்க?”

 

வெண்ணிலா, “அது.. அவ ஒரு பையனை லவ் பண்ணா.. அந்தப் பையன் இவளை ஏமாத்திட்டுப் போயிட்டான். அதுக்காகக் கோர்ட்ல நீதி வாங்கித் தாங்கன்னு கேட்டா..”

 

தாரகேஷ், “அந்த அக்கா பாவம்ல.. என் அத்தா சொல்லிருக்கு, பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி, அவங்களைப் பத்திரமா பார்த்துக்க வேண்டியது என்ன மாதிரி பசங்க வேலைன்னு.. ஆனா உங்களைப் பார்க்க வந்த அந்த அக்காவை ஒரு பையன் தானே ஏமாத்திருக்கான். அப்போ அது அவன் தப்பு தானே. என் அத்தா இப்போ பத்திரமா இருக்கா. ஆனா இந்த அக்கா பாவம். அப்போ நான் தானே இந்த அக்காவைப் பாதுகாக்கணும்..”

தாரகேஷின் பதிலில் வெண்ணிலா அதிர்ந்தாள். வெண்ணிலாவின் அதிர்ச்சியைப் புரிந்துகொண்ட தாரகேஷ், “பயப்படாதீங்க. கோர்ட்ல அந்தப் பெரிய அங்கிள் இனி யாரையும் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காரு. அதுனால நான் எப்பவும் யாரையும் அடிக்க மாட்டேன். ஆனா அதுக்காக இனி எந்தப் பூவையும் யாரும் கஷ்டப்படுத்தவும் விட மாட்டேன். நீங்க அந்த அக்காவுக்கு ஹெல்ப் பண்ண நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்றான்.

 

வெண்ணிலா, “நீ உன் அக்கா மாதிரி பல பெண்களைக் காப்பாத்தணும்னு நினைக்கிறது எனக்குப் புரியுது. ஆனா அதுக்கு நீ சொன்ன மாதிரி எனக்கு உதவணும்னு நினைச்சா, உன் அக்கா கிட்ட சொன்ன மாதிரி நல்லாப் படி.. நான் உன்னை ஸ்கூல்ல சேர்த்து விடுறேன்..” என்றாள் வெண்ணிலா.

 

பள்ளியில் சேர்ந்த தாரகேஷ், நன்றாகவே படித்தான். தாரகேஷ் பதினோராம் வகுப்பு படிக்கும் போது அவன் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியைக் காதலிப்பதாகக் கூற, அதைக் கவனித்த தாரகேஷ், அந்த விஷயத்தைப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூற, விஷயம் பெரிதாகி அந்த மாணவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டான். அதில் முதலில் அந்தப் பெண் வருந்தினாலும் பின்னாள்களில் பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுக்க, அதில் ஆறுதல் பட்டான் தாரகேஷ்.

 

அன்று முதல் யார் காதலில் விழுந்தாலும் அவர்கள் அறியாமல், அவர்களைப் பிரித்துவிட்டான் தாரகேஷ். அதன் மூலம் அவனது ‘பூக்களைக்’ காப்பாற்றியதாகக் கற்பனையும் செய்து கொண்டான். படிப்பில் கெட்டிக்காரனான தாரகேஷ், அதன்பின் டெக்னாலஜியைக் கையில் எடுத்துக்கொண்டான். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அவன் காதில் மட்டும் அவன் அம்மாவின் புலம்பல்களும் அவன் அத்தாவின் அழுகையும் விழுந்து கொண்டே இருந்தன.

 

அது அவனால் ‘ஆணும் பெண்ணும் இணைந்து உருவானதுதான் இந்தச் சமூகம்’ என்ற காட்சி அமைப்பைப் பார்க்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தது. சமூகமும் அவன் செய்வது சரிதான் என்பது போன்ற சூழ்நிலைகளை அவனுக்குக் காட்டிக்கொண்டே இருந்தது. கல்லூரி, அலுவலகம் என அவனைச் சுற்றிப் பெண்கள் காதலில் விழுவதும், அந்தக் காதல் பிரிந்ததும், ‘நல்லவேளை அவனை நம்பி நான் கல்யாணம் பண்ணல’ என அவர்கள் ஆறுதல் கொண்டு மேலும் மேலும் முன்னேறுவதும் தாரகேஷ் மனதிற்குத் தான் செய்வதுதான் சரி என்று அழுத்தமாகப் பதிந்து போனது.

 

இதோ அவன் இத்தனை ஆண்டுகள் தன் பூக்களைப் பாதுகாத்தும், அவனது பூவே இன்று அவனை எதிர்த்து நின்றதைத் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டான். பல வருடங்கள் கழித்துத் தன் அத்தாவைப் பார்த்த தாரகேஷ் கலங்கினான்.

 

செங்காந்தள், “என்ன சொல்ற தம்பி?”

 

தாரகேஷ். “ஆமாத்தா.. நான் இங்கே இருந்து போனது படிப்புன்னாலும், அங்கே உன்னை மாதிரி நிறையப் பூவைப் பறிக்க நிறைய ஆம்பளைங்க வேட்டைக்காரன் மாதிரி சுத்திட்டு இருக்காங்க.. இந்த உலகம் ரொம்ப மோசமா இருக்கு. எந்த ஒரு பூவையும் வேட்டைக்காரன் விடவே மாட்டேங்குறான். நானும் என்னால முடிஞ்ச அளவுக்குக் காப்பாத்துனேன். ஆனா காப்பாத்துன பூவே இப்போ எனக்கு எதிரா இருக்கு?” என வலியுடன் கூறினான்.

 

தாரகேஷ் பேசப் பேசத் தன் வாழ்க்கை அவனது வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்து கலங்கினாள் செங்காந்தள். தன் தம்பி இனியும் இப்படி கஷ்டப்படக்கூடாது எனப் புரிய, அவனுக்கு மெல்ல விளக்கினாள்.

 

செங்காந்தள், “தம்பி… பூக்களைப் பறிக்கக் கூடாதுன்னு நான் தான் உனக்குச் சொன்னேன். ஆனா அந்தப் பூச் செடிக்கும் ஒரு பிடிப்பு வேணும்தானே. அதுக்குத்தான் அந்தச் செடியோட தண்டு இருக்கு. நீ பூக்களைப் பாதுகாக்குறேன்ற பேர்ல தண்டையே வெட்டிட்டு இருக்கியேடா! ஒரு பெண்ணுக்குத் துணையா இருக்குற ஆணை நீ வேட்டைக்காரன்னு நினைக்கிற… ஆனா சில நேரங்கள்ல அந்த ஆணைப் பிரிக்குற நீ தான் அந்தப் பெண்ணுக்கு வேடனாத் தெரியுற…”

 

தாரகேஷ் அதிர்ந்து அவளைப் பார்க்க, செங்காந்தள் தொடர்ந்தாள், “நீ ரத்தினத்தை அடிச்சது தப்பில்லை. ஆனா உண்மையிலேயே நீ பிரிச்ச மத்த ஆண்களும் ரத்தினமும் ஒண்ணா? என்னைக் காப்பாத்தப் போய் இப்போ நீ ஒரு குற்றவாளியா நிக்கிறியேடா.. இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு பொண்ணையும் எப்படிப் பிடிக்காத வாழ்க்கைக்குள்ள தள்ளுறது தப்போ, அதே மாதிரி பிடிச்ச வாழ்க்கையில இருந்தும் பிரிக்கிறது தப்புடா தம்பி.” என்றாள் கவலையாக.

 

தாரகேஷிற்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்துக்கொண்டிருந்த நிலையில், தன் அத்தாவே தான் செய்வது தவறு என்று சொல்லும்போது அவனால் தாங்கவே முடியவில்லை. மனம் மொத்தமும் வெறுமையாகத் தன் அத்தாவிடமே, “இப்போ நான் என்னதான் செய்யட்டும்” என்றான் உணர்வுகள் வடிந்தவனாக.

 

அதில் கவலைகொண்ட செங்காந்தள், “நீ அந்தப் பொண்ணுங்க கிட்டப் போய் மன்னிப்புக் கேளு. அந்தப் பொண்ணுங்க என்ன சொல்றாங்களோ அதை ஏத்துக்கோ..” என்றாள் கவலையாக.

 

தாரகேஷ் செங்காந்தளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது வண்டியினை வைத்து அவனது இருப்பிடம் கண்டுபிடித்த போலீசார் அவனைச் சுற்றி வளைத்தனர்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்