அத்தியாயம்: 12

Loading

 

ரத்தினம் இரவில் அந்நேரத்தில் தாரகேஷைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என் அத்தாவை என்னடா பண்ற..” என்று கத்திய தாரகேஷ், உள்ளே செங்காந்தளைப் பார்க்க முயல, ‘டப்’ என ஜன்னலை மூடினான் ரத்தினம்.

 

“டேய் என் அத்தாவை விடுடா..” என்று கத்திக்கொண்டே வீட்டின் முன்புறம் ஓடிய தாரகேஷ், வழியில் இருந்த கடப்பாரைக் கம்பியை எடுத்து வந்து வீட்டின் வாசல் கதவை அடித்தான். அதே நேரம் ரத்தினம் வாசல் கதவைத் திறக்க, அவனது இடது பக்கத் தோளில் தாரகேஷின் அடி விழுந்தது. அதில் ரத்தினம் “அம்மா…” என அலறினான்.

 

கதவைத் திறப்பதற்காகக் கடப்பாரைக் கொண்டு அடித்த தாரகேஷ், ரத்தினம் கதவைத் திறப்பான் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடுத்த நிமிடமே தன் அம்மா, அப்பா, அத்தா என அனைவரையும் கஷ்டப்படுத்திய ரத்தினம் இவன் என்பது நினைவில் வர, கையில் இருந்த கடப்பாரையால் மேலும் சில அடிகள் அடித்தான். அதில் ரத்தினத்தின் தலையிலிருந்து ரத்தம் கொட்ட, ”ஆஆஆ….” என வலியில் கத்தினான்.

 

ஏற்கனவே தாரகேஷின் ‘அத்தா’ என்ற அழைப்பில், வெளியே வர முயற்சி செய்த செங்காந்தள், ரத்தினத்தின் அலறலில் வேகமாக வாசல் வர முயன்றவள், கால்கள் துவள, கீழே விழுந்தாள். பல நாட்கள் கழித்துத் தன் அத்தாவைப் பார்த்த தாரகேஷ் அதிர்ந்தான்.

 

எப்பொழுதும் சுத்தமான உடை உடுத்தி கண்ணியமாகவும், எளிமையாகவும், மலர்ச்சியாகவும் இருக்கும் தன் அத்தா என்ற நினைவில் இருந்தவனுக்கு; தலை கலைந்து, உடல் இளைத்து, கண்களில் உயிரில்லாமல் கருவளையம் வந்து, பார்ப்பதற்கே பரிதாபமாய் நடக்க முடியாமல் வந்து கீழே விழுந்தவளைப் பார்த்தபோது உயிர் துடித்தது.

வேகமாகச் சென்று அவளைத் தன் பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடித்து அமர வைக்க, அந்தச் சிறு தொடுகையிலும் உடல் வலி தாங்காதவளாய் அழுதாள் செங்காந்தள்.

 

“ரொம்ப வலிக்குதுடா தம்பி, என்னை இங்கே இருந்து கூட்டிட்டுப் போறியா? நான் அம்மா அப்பா கிட்ட போகணும்..” என்று அழுதவளைப் பார்த்துத் தானும் அழுத தாரகேஷ், “அம்மா உன்னைப் பத்தி புலம்பிட்டே இருந்தாங்க. அப்பா பதில் சொல்லவே இல்லை. நேத்து காலையில் ரெண்டு பேரும் பேசவே இல்லை. நல்லா தூங்கிட்டாங்க. பொன்னம்மா ரெண்டு பேரையும் தண்ணி ஊத்தி எழுப்பியும் எந்திரிக்கல.. அப்புறம் ரமேஷ் மாமாதான் இந்த ரத்தினம் கடைசியாகக் கூட உன்னைப் பார்க்க விடலன்னு சொன்னாரு. எனக்கு ரத்தினம் மேல கோபம் வந்தது. அப்போவே உன்னைப் பார்க்கணும்னு நான் சொன்னதுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய் அம்மா அப்பா மேல நெருப்பு வைக்கச் சொல்லிட்டாங்க.. நானே எரிச்சிட்டேனே.. இப்போ எப்படி அம்மா அப்பா கிட்ட உன்னைக் கூட்டிட்டுப் போக..” எனத் தேம்பிக்கொண்டே கேட்டான் சிறுவன்.

 

தாரகேஷ் கூறிய செய்தியில் மேலும் கதறிய செங்காந்தள், “இங்கே இருக்க வேண்டாம்டா வா.. நாம எங்கேயாவது போய்டுவோம்.. இவன் என்னை டெய்லி அழ வைக்கிறான். இவன் பக்கத்துல வந்தாலே பயமா இருக்கு..” என்றாள் அழுதுக்கொண்டே.

 

”உன்னால தான் நடக்க முடியலையே.. நான் உன்னை உட்கார வச்சப்பக் கூட அழுதியே, உன்னை எப்படி கூட்டிட்டுப் போக..” என அழுதுகொண்டே கேட்டவன், அருகே இருந்த சிமெண்ட் மூடைகளை வைத்துக்கொண்டு போகும் தள்ளுவண்டியைக் (Platform trolley) கொண்டு வந்து அதில் செங்காந்தளை அமர வைத்து, அவன் மொத்த சக்தியையும் பயன்படுத்தி, ரத்தினத்தின் வீட்டிலிருந்து தள்ளிக்கொண்டு சென்றான்.

 

இங்கே ரத்தினமோ ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்தான்.

 

செங்காந்தளை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்ற தாரகேஷ், நேரே தன் வீட்டிற்கு வந்தான். அன்று மாலைதான் அந்த வீட்டில் இருவர் இறந்ததற்குக் கடைசி காரியம் நடந்தது என்று சொன்னால் கூட நம்ப முடியாத வண்ணம் வீடு வெறிச்சோடி இருந்தது.

 

மெதுவாக வண்டியிலிருந்து இறங்கிய செங்காந்தள், வீட்டினுள் நுழைந்தாள். வீட்டைச் சுற்றி ஒரு முறை வெறித்தவள், பின் கட்டுக்குச் சென்று தன் தலை வழியே தண்ணீரை ஊற்றினாள். உடலில் பல பாகங்களில் தண்ணீர் பட்டவுடன் எரியத் தொடங்க, வலியைப் பொறுத்துக்கொண்டு குளித்துவிட்டு வந்தாள். தான் அணிந்திருந்த ஆடையைக் கழற்றித் தூக்கிப்போட்டவள், சுத்தமான உடையை உடுத்தினாள். நேரே தாரகேஷிடம் வந்தவள், மெதுவாக அவனது தலையை வருடிக் கொடுத்தாள். ஏற்கனவே பல நாள் மன உளைச்சலில் இருந்த தாரகேஷ், செங்காந்தள் தன் அருகில் இருக்கிறாள் என்ற தைரியத்தில், வெறும் தரையிலேயே படுக்க, தானும் தம்பிக்கு அருகில் படுத்தவள் மெல்ல கண் அயர்ந்தாள்.

 

அங்கே நடு இரவில் கழுத்து வரை குடித்துவிட்டு வந்த ரத்தினத்தின் கூட்டாளிகள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரத்தினத்தைப் பார்த்து அதிர்ந்தனர். பின் சுதாரித்துத் தள்ளாட்டத்துடன் அவனைத் தூக்கிக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அதிக ரத்தக் கசிவின் காரணமாக ரத்தினத்தின் உயிர் பிரிந்தது. மருத்துவர் அதையே கூற,

 

“இன்னைக்கு அந்தச் செங்காந்தளை எனக்குத் தரேன்னு சொல்லிருந்தாண்டா..”

”அவதான் நம்ம நண்பனைக் கொன்னுட்டா..”

 

“அவளைச் சும்மா விடக்கூடாது.. அவ எங்க இருந்தாலும் அவளைக் கொளுத்திட்டுத் தான் என் நண்பனுக்குக் காரியம் பண்ணணும்..” என்று ஆளாளுக்குக் கோபம் கொண்டவர்கள், செங்காந்தளைத் தேடி அவளது வீட்டிற்கு வந்தனர்.

 

பல நாள் மன உளைச்சலில் உழன்ற சகோதரர்கள் வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்க, அந்தச் சாதாரணக் குடிசை வீட்டினை முற்றுகையிட்டனர் ரத்தினத்தின் கூட்டாளிகள். அதில் ஒருவன் ‘செங்காந்தள் உள்ளே இருக்கிறாளா?’ என்று சிறிய ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, அவன் பார்வைக்குச் சிறுவன் தாரகேஷ் மட்டுமே உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. சற்று உள்ளே தள்ளிப் படுத்திருந்த செங்காந்தள் தெரியவில்லை.

 

“டேய் அவ தம்பி மட்டும்தான் உள்ள படுத்துருக்கான். என்ன பண்ண?” என்று எட்டிப்பார்த்தவன் கேட்க, “கொளுத்திருவோம்டா.. என் நண்பனைக் கொன்னவளோட குடும்பமே இருக்கக்கூடாது” என்று போதையில் பிதற்றியவர்கள், அந்தக் குடிசைக்குத் தீ வைத்தனர்.

 

நன்கு உறங்கிக்கொண்டிருந்த தாரகேஷ், திடீரென ஏற்பட்ட வெப்பம் காரணமாகக் கண் முழிக்க, வீட்டின் கூரை எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துப் பயந்தவன், செங்காந்தளை எழுப்பினான். ஆனால் அவளோ அசதியில் மயங்கியிருக்க, தாரகேஷ் எழுப்பியும் எழவில்லை.

 

அதற்குள் அக்கம் பக்கம் இருக்கும் மக்கள் தீயை உணர்ந்து வந்து அணைக்க முற்பட, மயங்கிய செங்காந்தளைத் தன் கரங்களால் வீட்டை விட்டு வெளியே இழுத்து வர முயன்றான். அதில் மெல்ல கண்விழித்த செங்காந்தள், தானும் எழுந்து வீட்டை விட்டு வெளியே வர முயன்றாள். ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்காமல் எழுந்து நின்றவள் மீண்டும் கீழே விழ, அருகே எரிந்துகொண்டிருந்த நெருப்பு, செங்காந்தள் முகத்தைத் தனக்கு இறையாக்க முயன்றது.

 

அதில் பதறி வேகமாக வெளியே ஓடிய தாரகேஷ், உதவிக்குச் சில பெண்களை அழுதுகொண்டே அழைக்க, எதிர் வீட்டுப் பொன்னம்மா நிலைமையைப் புரிந்துகொண்டு வேகமாக வீட்டினுள் சென்று, செங்காந்தளை வெளியே அழைத்து வந்தார். முகத்தில் நெருப்புப் பற்றிய வலியில் செங்காந்தள் துடிக்க, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

முடியவே மாட்டேன் என மூன்று உயிர்களைக் காவு வாங்கிய அந்த நாள் ஒருவழியாக முடிந்து மறுநாள் பொழுது புலர்ந்தது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்காந்தள், மதியத்திற்கு மேல் கண்விழித்தாள். “தம்பி.. தம்பி..” என மெல்ல அழைக்க, அருகே இருந்த செவிலிப்பெண், “பயப்படாதீங்கம்மா, நீங்க இப்போ ஆஸ்பத்திரில தான் இருக்கீங்க. இருங்க நான் டாக்டரைக் கூட்டிட்டு வரேன்” என்று வேகமாக மருத்துவரை அழைக்கச் சென்றாள்.

 

செங்காந்தளை வந்து பார்த்த மருத்துவர், சிகிச்சை வேலை செய்வதை உறுதி செய்துவிட்டு அடுத்துக் கொடுக்க வேண்டிய மருந்துகளைச் செவிலியிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மருத்துவர் பார்த்துச் சென்றதும் உள்ளே வந்தார் பொன்னம்மா.

 

“செங்காந்தள், கண்ணு முழிச்சிட்டியாடி. இப்போதான் எனக்கு உயிரே வருது. உனக்கு வந்த கெட்டது எல்லாம் நேத்து நெருப்போட போச்சுன்னு நினைச்சுக்கோ. நம்ம ஊரு மாரியம்மாதான் உன்னைக் காப்பாத்திருக்கு.. உனக்கு இனி எல்லாம் நல்லதுதான் நடக்கும்.” என்று தன் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போனார்.

 

“தம்பி..” என மீண்டும் செங்காந்தள் கேட்க, ஒரு நொடி தயங்கிய பொன்னம்மா பின் இது மறைக்கக்கூடிய விஷயம் இல்லை என்று நடந்ததைக் கூறினார்.

 

“அது.. செங்காந்தளு.. கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமக் கேளு.. அது… நேத்து உன் வீட்டுல என்ன நடந்துச்சு..” எனத் தயங்கிவிட்டுக் கேட்டார்.

 

“அது.. அந்த ரத்தினம்.. அவன்.. அவன்..” என அழுத செங்காந்தள், பின் ஒருவாறு, “அவன் என்னைக் கொடுமைப்படுத்தினான். எனக்கு.. எனக்கு..” எனச் சொல்ல முடியாமல் தவித்தவள், “அப்போ தம்பி சத்தம் கேட்டது. என்னால நடக்க முடியல. மெதுவா வெளியே வந்தா, தம்பி ரத்தினத்தை அடிச்சிட்டு இருந்தான். என்னால முடியாம நான் விழுந்துட்டேன். அப்புறம் தம்பி தான் தள்ளு வண்டியில வச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தான். அப்புறம் நான் குளிச்சிட்டு வந்ததும் ரெண்டு பேரும் தூங்கிட்டோம். அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல. தம்பி என்னை வீட்ட விட்டு வெளியே கூட்டிட்டுப் போக முயற்சி பண்ணான். அதுல தான் நான் முழிச்சேன். நடக்க முடியாம கீழே விழுந்துட்டேன். வீடு முழுக்க நெருப்பு.. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல..” என்றாள்.

 

“ஓ… அதான் நைட் நீ வீட்டுக்கு வந்துட்டியா?” என்றவர், “அது தம்பி ரத்தினத்தைக் கடப்பாரையால அடிச்சிருப்பான் போல, தலைல அடிபட்டு, ரத்தம் நிறையப் போய் செத்துட்டான். அதை நைட் பார்த்த அவன் கூட்டாளிங்க தான் போதையில உங்க வீட்டுல தீ வச்சிருக்கணும்..” என்றார்.

 

“ஐயையோ.. தம்பி..” என மீண்டும் செங்காந்தள் அழ ஆரம்பிக்க, “பயப்படாத, என் அண்ணன் மவ வெண்ணிலா, வக்கீலு. அதுதான் ஊருக்கு வந்திருந்தவ, தம்பியைப் போலீஸ் கூப்பிட்டதுன்னு தம்பி கூடப் போயிருக்கு.. அது எப்படியாவது தம்பியைக் கூட்டிட்டு வந்துரும்.” என்று தைரியம் சொன்னார்.

 

இங்கே போலீஸ் ஸ்டேஷனில், “சார் அந்தப் பையன் பண்ணது செல்ஃப் டிஃபன்ஸ். கண்ணு முன்னாடி அக்காவை அந்த ஆளு ஹராஸ் பண்ணிருக்கான். யாரா இருந்தாலும் இப்படித்தான் பண்ணிருப்பாங்க. செக்ஷன் 34-ல போடுங்க.. அதோட செல்ஃப் டிஃபன்ஸ்க்கு பண்ணதுக்கு அவனுங்க பழிவாங்க வீட்டை கொளுத்திருக்கானுங்க. அவனுங்களால தாரகேஷ் வாழ்க்கையே ஸ்பாயில் ஆக வாய்ப்பு இருக்கு. அவனுங்க மேல அட்டெம்ட் டூ மர்டர் போடுங்க.. அது வேற கேஸ், இது வேற கேஸ்” என்றாள் வெண்ணிலா.

 

தாரகேஷ் சிறுவன் என்பதால் எமர்ஜென்சி பெயில் அப்ளை செய்து மேஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் செல்லப்பட்டான். குற்றம் நடந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மேஜிஸ்ட்ரேட், 2 நாட்களில் வழக்கிற்கு எழுதி கொடுத்தார். அதுவரை சிறுவன் தாரகேஷ், வெண்ணிலாவின் கண்காணிப்பில் இருந்தான்.

 

இரண்டு நாட்கள் கழித்துக் கோர்ட்டில், தாரகேஷ் ரத்தினத்தை அடித்த சூழ்நிலையை விளக்கினர். போலீஸ் ரத்தினத்தின் வீட்டில் செங்காந்தள் கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்களைக் கையகப்படுத்தி ஒப்படைத்தனர். மேலும் தாரகேஷின் பள்ளி மதிப்பெண் சான்றிதழும், ஆசிரியர்களிடம் அவனது நன்னடத்தை சான்றிதழும் பெறப்பட்டது.

 

10 வயது சிறுவன், தனது 18 வயது அக்காவைக் காப்பாற்றவே இவ்வாறு செய்தான். இது தற்காப்புக்காக நடந்தது எனக் கூறி விடுதலை செய்தனர். தாரகேஷ் கேஸிலிருந்து வெளி வரும் வரை செங்காந்தளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்பொழுதும் “தம்பி எப்போ வருவான்.. தம்பி எப்போ வருவான்..” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

 

ஆனால் கோர்ட்டிலிருந்து வெளியே வந்த தாரகேஷ், செங்காந்தளைக் கூடச் சந்திக்காமல் நேரே வெண்ணிலாவுடன் சென்றுவிட்டான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்