
பெரிய வரவேற்பு அறை.
அந்த ஹாலின் நடுநாயகத்தில் மாட்டப்பட்டு இருந்தது ஒரு புகைப்படம்.
வம்சியும் விக்ரமும் தோள் மேல் தோள் கைப்போட்டு இருக்க நடுவில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்.
முகத்தில் சிரிப்பு இல்லை.
கண்களில் ஒளி இல்லை.
பொம்மையைப் போல…
ஆனால் உடைந்த பொம்மையை போல இருந்தாள்.
இவள்தான்… இவர்களுடைய தங்கையோ என்று யூகம் அவள் மனதை கீறியது.
சுவரில் மாட்டப்பட்ட ஒவ்வொரு புகைப்படமும் ஒரு துயரக் கதை போல தெரிந்தது.
சந்திரிகா கண்கள் சுருங்கின.
அவள் இப்படங்களை கவனமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
அப்போது மாடிப்படிகளில் இருந்து யாரோ இறங்கி வரும் சப்தம் கேட்டது.
டப்…
டப்…
டப்…
ஒவ்வொரு அடியும் ஒரு மிரட்டல் போல படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தான் வம்சி. அவன் பின்னால் விக்ரம்.
அவனது நடையில் அதிகாரம்.
அவனது முகத்தில்
தன் வீட்டை தன் உலகம் என்று அறிவித்த அகங்காரம்…
“வந்தவங்களுக்கு ஜுஸ் யாரும் கொடுக்கலையா?” என்ற வம்சியின் அதிகார குரலில் உள்ளே இருந்த வேலையாள் இரண்டு டம்ளர் அண்ணாச்சி பழச்சாற்றை கையில் தாங்கியபடி வெளியே வந்தார்.
எடுத்துக்கோங்க என பெண்கள் இருவரையும் பார்த்து வம்சி சொல்ல
இசையோ வேண்டாம் என்று தலையாட்டி மறுத்தாள்.
ஏன் அவனிடம் கேள்வி…
“இந்த வீட்டுலே நிற்கவே எனக்கு பிடிக்கலை… இதுலே ஜுஸ் வேற குடிக்கணுமா?”
“அப்ப சரி குடிக்காதே…” என விட்டேத்தியாக சொன்னான் வம்சி.
“என்ன போலீஸ்காரி நீயும் ஜுஸ் குடிக்க மாட்டியா?” என்று கேட்டான் விக்ரம்.
“அதெல்லாம் ஷேமமா குடிப்பேன். உன் கூட மல்லு கட்ட எனக்கு தெம்பு வேணாமா” எனக் கேட்டபடி பழச்சாற்றை தொண்டைக்குள் சரித்தாள்.
அவள் பேசியதை கேட்டு மெல்லிய சிரிப்பு விக்ரமிடம்.
“இது தான் எங்க வீடு.. எப்படி இருக்கு?” என விக்ரம் கேட்க
“உன் வீட்டை பத்தி கமெண்ட்ஸ் கேட்க தான் என்னை கூப்பிட்டியா?” அப்பட்டமான சலிப்பு சந்திரிகா முகத்தில்.
“இல்லை அதுக்கு மட்டும் கூப்பிடலை. நம்ம செருப்பு இன்வஸ்டிகேஷனை நம்ம வீட்டுலே இருந்து மங்கலமா ஆரம்பிக்கலாமே னு நினைச்சு தான் கூப்பிட்டேன்” என்றதும் சந்திரிகா சிடுசிடுப்பானாள்.
வாயை திறந்தாலே செருப்பு தான்… அதை கண்டுபிடிச்சு இவன் வாயிலேயே அடிக்கணும் என்று முணுமுணுத்தவள் போலியாய் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அதே நேரம் கதவை திறந்து கொண்டு வந்தாள் ஒரு பெண்.
உடைகளில் ஒரு நேர்த்தி இல்லை. அவள் கண்களிலோ ஆறா துயரம்.
ஏன் வாழ வேண்டும் என்ற சலிப்பு அவளின் நடையில் தெரிந்தது.
அவளை கண்டதும் இரண்டு அண்ணன்களின் கண்களும் கனிந்தன.
“இசை இது தான் என் தங்கச்சி காவ்யா… இவளுக்கு தான் நீ மியூசிக் கத்து கொடுக்கணும்” என்று வம்சி சொல்ல
“நோ நான் யார் கிட்டேயும் பாட்டு கத்துக்க மாட்டேன்” என்று ஆங்காரமாய் கத்திய காவ்யா அருகிலிருந்த பூஞ்சாடியை எடுத்து இசையின் மீது வீசினாள்.
அது சரியாக இசையின் தலையை பதம் பார்த்து இருக்க ஆ என்ற அலறலோடு கீழே விழுந்தாள்.

