Loading

அகம் 18

விடியல் என்றாலே கதிரவன் தான், ஆனால் அன்றைய விடியலில் கதிரவனுக்கோ இளைபாறும் காலம், ஏனென்றால் அழகிய மழைக்காலம், அதிகாலை மழை அழகாய்ப் பொழிந்துக்கொண்டிருந்தது. காற்றுடன் இடியும் சேர்ந்துக்கொண்ட, இந்த விடியற்காலை பொழுதில் வழக்கத்திற்கு மாறாக அவந்திகை உறங்கிக்கொண்டிருந்தாள், அகனோ காபி கோப்பையுடன் அறைக்குள் நுழைந்தான்.

“அவந்தி காஃபி” எனக் குரல் கொடுத்தான் அகன், அவன் குரல் கேட்டுப் பதறி அடித்து எழுந்தவள்.

“அய்யோ நேரமாச்சா அகன் கடையைத் திறக்கணுமே” படபடவென அவள் எழ முயல,

“என் அருமை பட்டிக்காடு, முதல்ல இந்தக் காஃபிய குடி” அவளைக் காபியை குடிக்க வைத்தான்.

“இருங்களேன் பல்லாவது தேய்ச்சிட்டு வர்றேன், என்ன உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு” என அவந்திகை கேட்டபடி குளியலறைக்குள் சென்று பல்துலக்கி விட்டு, மீண்டும் மெத்தையில் வந்தமர்ந்தவள், காஃபியை எடுத்து ஒரு மிடறு மிடறினாள்.

“இப்போ மேடம் தான் இந்த வீட்டோட மஹாராணியாச்சே, சேவகன் நான் சேவை செய்யத் தான செய்யணும்” எனப் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

“எதோ விளங்கலை நான் பார்த்துகிடுதேன்” என்றவள் குளித்துவிட்டு சமயலறைக்கு வந்தாள். அங்குக் காயத்ரி பரபரப்பாய் உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அவந்திகையைப் பாரத்ததும் அவ்வளவு சந்தோசம் காயத்ரிக்கு.

“வா மா அவந்தி.! அகன் விசயத்தைச் சொன்னான் மா, ரொம்பச் சந்தோசம் என அவளைக் கட்டி அணைத்துக்கொண்டவர், அவளுக்காகக் கேசரி செய்து அதையும் ஊட்டி விட்டார். விசயம் தெரிந்த அனைவரும் அகனின் வீட்டுக்கு வந்து அவந்திகையை ஆசிர்வாதம் செய்தனர்.

அப்போது சிவசக்தியும் சந்தோசமான தகவலைக் கொண்டுவந்திருந்தாள்.

“அவிக்கா நான் நேஷ்னல் லெவல்ல கபடி விளையாடப் போறேன்க்கா” எனப் புன்னகையுடன் சொன்னாள்.

“ஏட்டி சக்தி ரொம்பச் சந்தோசம்ட்டி நம்ம ஊர் பேரைக் காப்பத்துணும் புரிஞ்சுதா.?” தங்கைக்கு அறிவுரை கொடுத்தாள் அவந்திகை.

“கண்டிப்பாக்கா” தமக்கையின் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அப்போது அங்கு வந்த சந்தியா,

“அண்ணா.! எனக்குக் கனடால ஜாப் கிடைச்சிருக்கு” என்று தெரிவித்தாள்.

“சந்தியா என்ன சொல்ற, உனக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிச்சிருக்கு சொல்லிட்டு, இப்போ என்ன கனடா சொல்லிட்டு இருக்க.?” கோபமாய்ப் பாரத்தார் காயத்ரி.

“ம்மா ப்ளீஸ் எனக்குன்னு ஒரு கேரியர் கோல் இருக்கு, ப்ளீஸ்ம்மா நான் போயிட்டு வந்தறேன், அப்பறம் இந்த ஊர்லையே ஒரு பையனைப் பார்த்து வையுங்க கல்யாணம் பண்ணிக்குறேன், அண்ணா சொல்லுனா ப்ளீஸ்” எனக் கெஞ்சலாய் சந்தியா கேட்டதும். அவள் வெளிநாடு செல்வதற்குத் தாயிடம் சம்மதம் வாங்கிக் கொடுத்தான், தன் சொந்த காலில் நிற்க ஆசைப்பட்டுத் தான் கனடா செல்ல முடிவெடுத்தாள் சந்தியா.

முத்துவேல், ஜெயக்கொடி இருவருக்கும் தங்களின் இரு மகள்களையும் நினைத்துப் பெருமையாகவே இருந்தது. அதோடு மன்னராசாவும் அவந்தி ப்ராடக்ட்ஸை, திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் டீலர்ஷிப் எடுத்து, விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்.சிவசக்திக்கு நகைகளும், அவர்களுக்கான வீட்டையும் கட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய வளர்ச்சிக்கு முழுக் காரணமும் அவந்தியும், அகனும் தான், என எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு பெருமிதமுக் கொண்டான்.

பார்வதியும், ராஜபூபதியும் தன் மகனின் செயல்களையும், பொறுப்புணர்வையும் கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.

செந்தில் நாதன் வாங்கிய ஒற்றைச் சத்தியத்தில் துவங்கிய பயணம், குடும்பத்தின் மகிழ்வோடு நிறைவடைந்தது.

*********

சென்னை;

பிரம்மாண்டாமான மீட்டிங் ஹாலில் மக்கள் கூட்டத்தின் நடுவே கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தாள் அவந்திகை. அவளின் கரம் தொட்டு முகம் பார்த்த அகன், கண்களிலே பேசினான் அவளிடம், அவன் என்ன சொன்னானோ புரிந்தது போல் தலையாட்டினாள் அவந்திகை.

மக்கள் கூட்டமும், மேடையில் துறை சார்ந்தவர்கள் அமர்ந்திருக்க, மேடையில் இருந்த மைக்கில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியபடி இருந்தாள்.

“லெட்ஸ் வெல்கம் மிஸ்ஸ் அவந்திகை ஆன் தி ஸ்டேஜ்” எனச் சொன்ன நொடியில் அரங்கம் முழுவதும் கரகோஷம் எழும்பியது.

மெரூன் நிற புடவையை அணிந்திருந்தவள், அவளின் அடர்ந்த குழலை அழகாய் விரித்து விட்டிருந்தாள், ஒரு கையில் புடவையின் முந்தானையைப் பிடித்தபடி படியேறி சென்றவளின் அழகை ரசித்தபடி இருந்தவனின் கைகளில் மூன்று வயது பெண் குழந்தை இருந்தது.

“பாப்பா அம்மா பாரு” என அகன் சொல்ல முத்தாய் சிரித்து வைத்தாள் குட்டி தேவதை.

அவந்திகை மேடையேறியவுடன் சாதனை பெண்களுக்கான விருது கொடுக்கபட்டது. அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிப் புன்னகைக்க, அவளின் கையில் மைக் கொடுக்கபட்டது.

அந்த நிகழ்ச்சியின் விரிவுரையாளராய் இருந்த பெண் அவந்திகையிடம் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தாள்.

“சோ, சொல்லுங்க மிஸஸ் அவந்திகை, உங்களுடைய முதல் அவார்ட்டு இது, சாதனை பெண்களுக்கான அவார்ட் வாங்கிருக்கிங்க, சில வார்த்தைகள் எங்களோட ஷேர் பண்ணிக்கலாமே” எனக் கேட்டாள்.

“எல்லாருக்கும் வணக்கம், நான் அவந்திகை அகத்தினியன், இது என்னோட முதல் அவார்ட் கிடையாது, திஸ் இஸ் மை தெர்ட் அவார்ட்” எனப் பெருமிதமாய்ச் சொன்னவள்.,

“என்னோட இரண்டு அவார்டையும் மேடைக்குக் கூப்பிடலாமா.?” அவந்திகை கேட்க,

“தாரளாமா கூப்பிடுங்க மேடம்” என அந்தப் பெண் சொன்னவுடன் அவள் அழைத்தது தன் கணவனையும் மகளையும் தான். அவள் அழைத்த நொடி கம்பீரமாய்க் குழந்தையுடன் மேடையேறிச் சென்றான்.

“சோ என்னோட ஃபர்ஸட் அவார்ட் என்னோட ஹஸ்பண்ட் தான், எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம்ன்ற ஒன்னு வந்து அவங்களோட கேரியர்க்கு ஒரு தடையா இருக்கும், சோ அஃப்டர் மேரேஜ் கூட, என்னோட பிஸ்னஸை தொடர முடிஞ்சதுக்குக் காரணம் என் கணவர் தான், அவர் எனக்குள்ள இருக்கத் திறமையா வெளிய கொண்டு வந்தாங்க, நான் இந்த இடத்துல நிக்குறேன்னா அதுக்குக் காரணம் என் ஹஸ்பண்ட் தான்” எனப் பெருமிதமாய்ச் சொல்ல, அவளின் தோள் தொட்டு அணைத்துக்கொண்டான் அகன்.

“என்னோட செகண்ட் அவார்ட் பார்த்திங்கன்னா இந்த வாலு பொண்ணு தான், இவங்க தான் எனக்கு அம்மாவா ப்ரோமொஷன் கொடுத்தாங்க, அதோட இவங்களுக்காக நிறைய நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் உருவாக்கினோம், இப்போ நாங்க பேபி ப்ராட்க்ட்ஸூம் பண்ணுறோம்,இட்ஸ் ப்யர்லி ஆர்கானிக்” என அவள் சொல்லி முடிக்க அரங்கமே கரகோஷம் எழுப்பியது.

“ஹவ் க்யூட் பேபி, மேம் பேபி நேம் என்ன..?” அந்தப் பெண் கேட்க,

“தியா ஶ்ரீ” என்ற அவந்திகை தன் முத்து முரல்கள் தெரிய சிரித்தாள்.

“மிஸ்டர் அகத்தினியன், உங்க வொய்ஃ பத்தி சில வார்த்தைகள்” நிகழ்ச்சி விரிவுரையாளர் கேட்க,

“ஷி இஸ் ஜெஸ்ட் ஆசம், அவங்களைப் பார்த்து ஒவ்வொரு நாளும் நான் வியந்துகிட்டு தான் இருக்கேன், குழந்தைக்கு நல்ல அம்மாவா, எனக்கு நல்ல மனைவியா இருக்கதோட, சிறந்த பிஸ்னஸ் வீமனாவும் இருக்காங்க, ப்ரவுட் ஆஃப் ஹர்” எனச் சொன்னவன், அவள் நெற்றியில் முத்தம் வைத்து. “வாழ்த்துகள் மை வொண்டர் வீமன்” என வசீகரமாய்ச் சிரித்தான் அகன்.

“வீ ஆர் லன்சிங் அவர் நியூ ப்ராடக்ட் இன் திஸ் ஸ்டேஜ்” என அவந்திகை நுனி நாக்கு ஆங்கிலம் பேசிய நொடியில், அந்த ப்ராடக்கடின் புகைப்படம் திரையில் காட்டபட்டது. அவளின் தெளிவான ஆங்கிலத்துக்கும் அகனே காரணம்.

“ப்ரஸ்ட் மில்க் சோப் மற்றும் ஆபரணங்கள். தாய்மை ஒரு அழகான வரம், அந்தத் தாய்மைக்கான அடையாளமா தாய்பாலை கருதுகிறேன், உங்களுடைய குழந்தைக்கு உங்களுடைய தாய்பாலிலே க்ஸ்டமைஸ்ட் சோப் தயாரித்துத் தருகிறோம், அதோடு உங்களுடைய தாய்பாலை வைத்துச் செயின், ரிங் போன்றவைகளும் உற்பத்தி செய்து தருகிறோம்” என அவந்திகை பேசி முடித்தாள்.

“இன்ட்ரஸ்ட்டிங் அண்ட் கங்குராச்சுலேசன் மேம்” என நிகழ்ச்சியின் விரவுரையாளர் முடிக்க

இவை அனைத்தையும் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறிய ஊரில், இயற்கை சார்ந்த சோப் உற்பத்தி செய்துக்கொண்டிருந்தவளை, சாதனை பெண்ணாய் மாற்றியிருந்தான் அகன், அவள் என்ன தான் சாதிக்கப் பிறந்தவளாய் இருந்தாலும், திருமணத்திற்குப் பின் பெண்ணின் வாழ்க்கை சிறிய வட்டத்திலும், உறவுகளுடனும் முடிந்துவிடும், வாழ்க்கைத்துணை மட்டும் சரியாக அமைந்துவிட்டாள், பெண்ணாய் இருப்பவள் பாரதம் போற்ற உயர்வாள், அவளின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் ஆண்களில் ஒருவன் தான் அகத்தினியன். அகம் கொய்த அவந்திகையை அவன் மேலும் வளர்ச்சியின் உச்சத்தில் கொண்டு சேர்ப்பான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அவந்திகையைச் சாதனை பெண்ணாய் அகன் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்துவிட்டான். விக்கிரமசிங்கபுரத்தின் அவந்திகை, இப்போது உலகம் போற்றும் அவந்திகையாய் மாறிபோனாள்.

****நிறைந்தது*****

கதையைத் தொடர்ந்து படித்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள். ஏற்கனவே நேரடிப் புத்தகமாக வெளிவந்த எனது நாவலை, உங்களுடன் இணைந்து மீண்டும் வாசித்துப் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி.

​மீண்டும் வேறொரு கதையில் சந்திப்போம்!

​அன்புடன்,

மதிளா சுகி.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்