Loading

2.அத்தியாயம்

 

இன்னாருக்கு இன்னார் என்பது விதி அமைக்கும் மேடை என்றால், பொருத்தமற்ற குணாதிசயங்கள் கொண்ட இருவரையும் இணைத்தது விதியன்றோ? மஞ்சள் கயிறு மாயம் அவளுக்கு நடந்ததா என்பதைக் காட்டிலும், அவனுக்குள் நன்றாகவே நடந்தது.

 

அவள் எப்போதெல்லாம் ஒப்பந்தத்திருமணம் என்று நினைவூட்டுகிறாளோ, அப்பொழுதெல்லாம் அவனையும் மீறி, உள்ளுக்குள் கோபம் துளிர்க்கும். அவள் தனக்கானவள் என்பதை பார்த்த முதல் பார்வையிலேயே உணர்ந்து விட்டான் போல, ஆதலால் தான் திருமணம் முடிந்ததும் தன் மணவாட்டியை உரிமையோடு ரசித்தான் இந்த கள்வன். அதன்பின் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறியது.

 

மதுவின் தந்தை தாமோதரன் மணமக்கள் இருவரையும் அழைத்து வீட்டிற்கு வந்ததும், அனைத்து உறவினர்கள் முன்பு தன் மருமகனுக்கு காப்பு ஒன்றை அணிவித்தார்.

 

“வெள்ளியா மாமா” என்று ஒரு ஆர்வத்தில் அவன் விசாரிக்க,

 

“இல்லை மாப்பிள்ளை பிளாட்டினம்.” என்று புன்னகையுடன் அவர் கூறியநொடி அவனது கண்கள் பெரிதாக விரிந்தது. உதடோ ஆச்சரியத்தில் திறந்திருக்க,

 

“அல்பம் அல்பம். வாயை கொஞ்சம் மூடு.” அவனது காதோரம் கிசுகிசுத்தாள் மதுவர்ணிகா.

 

“அல்பம் காதுரா ஆர்வம்.” என்றவனோ தனது முப்பத்திரண்டு பற்களையும் காட்டி புன்னகைத்தான்.

 

தங்கத்தை விட விலையுயர்ந்த ஆபரணம் அல்லவா? ஒரு நிமிடம் அவன் மனதில் ஓடிய பாடல், ‘காசு, பணம், துட்டு, மணி மணி…’ தான். இருந்தும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவன்,

 

“எதுக்கு மாமா, இது எல்லாம்?” என்று சமாளிப்பாக கூறினாலும், அவன் மனமோ, மகிழ்ச்சியில் திளைத்தது.

 

மதுவோ, “அப்பா, நான் தான் சொன்னேன்ல அவருக்கு வரதட்சணை எல்லாம் பிடிக்காதுனு. அவரோட உழைப்பு மேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. இந்த மாதிரி பொண்ணு வீட்டுல பொருள் வாங்குறதே அவமானம்னு சொல்வாரு. ஏற்கனவே நீங்க போட்ட மோதிரம், செயின் எல்லாம் எதுக்குனு பீல் பண்றாரு பா. என்னங்க அப்படி தானுங்க…” என்று அவனது கைகளிலிருந்த காப்பினை இவள் உருவ செல்ல, பக்கென்று ஆனது அவனுக்கு.

 

‘அடிப்பாவி! உங்க அப்பன் பணம் வீணா போக கூடாதுனு கம்பிக் கட்டுற கதையெல்லாம் சொல்றியா? உன்னை வந்து வெச்சுக்குறேன்டி. இப்போ எப்படி சமாளிக்குறேன்னு மட்டும் பாரு’ மனதில் அவளை வறுத்தெடுத்தவன், அடுத்த நொடியே, “மது… மாமா இவ்வளவு அன்பா கொடுத்திருக்காரு. அவரு மனசை கஷ்டப்படுத்தலாமா? சபையில எல்லார் முன்னாடியும் வெச்சு இப்படி நிராகரிக்குறது ரொம்ப தப்புமா” என்று கூறியது மட்டுமின்றி பெண்ணவளின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தியிருக்க, அவளோ அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

 

‘மவனே செத்தடா’ என்பது போல் முறைப்பு பலமாக இருக்க, இடையில் குறுக்கிட்டார் தாமோதரன்.

 

“அன்பால கொடுக்கிறது வரதட்சணையாகாது வருணிமா. என் மருமகனுக்கு நான் கொடுக்கிறேன். இதுல என்னடா இருக்கு?” என்று தன் மகளது தலையினை வருடிவிட்டவர் புன்னகைக்க, “அதே தான் மாமா.” என்று பதிலுக்கு புன்னகைத்தான் நந்தா.

 

‘அய்யோ அப்பா திருடன் கையிலேயே சாவி வேற கொடுக்கிறீங்களே?’ என்று இயலாமையுடன் பார்க்க தான் முடிந்தது அவளால். மற்றவர்களை பொருத்தவரை, பெருந்தன்மையானவன், பண்பானவன் என்று தானே நம்பியிருந்தனர். அப்படி தானே அவளும் அவனைக் காட்டியிருக்கிறாள்.

 

அவனோ அவளை எப்படி? என்ற தோரணையில் புருவம் தூக்கிக் காண, அவளோ யாரும் பார்க்காத நேரம் அவனது காலை நன்கு மிதித்திருந்தாள்.  வலியை கத்தி காட்டவும் இயலாது, திட்டவும் முடியாது தவித்தவன் கடினப்பட்டு புன்னகைத்தான்.

 

“ஹாய் மாம்ஸ்” என்று உற்சாகத்துடன் வந்தான் உமாபதி.

 

“இவன் வேற சும்மா இருக்க மாட்டீங்குறான். அப்படியே கண்டுக்காத மாதிரியே போயிடுவோம்.” என்றவன் திரும்பிச் செல்லப் பார்க்க, அதற்குள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டான் உமாபதி.

 

“மாம்ஸ், எங்க போறீங்க?”

 

“எங்கயும் போகலடா, ஆமா செயின் தேடுனியா?”

 

“அதான் வருணி எடுத்துக் கொடுத்துட்டாளே மாம்ஸ். நல்லவேளை தப்புச்சுட்டேன்.” என்று பெருமூச்சொன்றை விட்டபடிக் கூறினான்.

 

“ஆனால் நான் இப்போ உங்கிட்ட மாட்டிக்கிட்டேன்.” வாய்க்குள் நந்தா முணுமுணுக்க.

 

“என்ன மாம்ஸ்?”  என்றான் உமாபதி.

 

“ஒண்ணும் இல்லைடா மாப்பிள்ளை. ஆமா அந்த பொண்ணு யாரு? உன்னையவே பார்த்துட்டு இருக்கா?” திசைத்திருப்ப இவன் கூறிய நொடி, திரும்பிப் பார்த்தவன், அங்கிருந்த அந்த பெண்ணைக் கண்டநொடி, ஒரு நிமிடம் அதிர்ந்தது என்னவோ உண்மை தான். பின் தனது அதிர்ச்சியை வெளியே காட்டிடாமல்,

 

“அந்த பொண்ணு ஏதோ ஒரு குழந்தையை பார்த்துட்டு இருக்கு மாம்ஸ். நீங்க வேற.” என்று சமாளித்தவன் அங்கிருந்து நழுவிச் செல்ல, அவன் சென்றுவிட்ட நிகழ்வில் “அப்பாடா தொல்லை போயிடுச்சு.” என்று பெருமூச்சினை விட்டவன், யாரும் பார்க்காத நேரம் பார்த்து, தனியாக சென்றவன் தனது அலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.

பின்னர் மீண்டும் முகப்பறைக்கு வந்து ஐக்கியமாகி விட, எதுவும் அறியாதவன் போல் புன்னகையுடன் பேசினான் அனைவரிடமும்.

 

அதன்பின்னர் இருவரையும் ஓய்வெடுக்க சொல்லியிருக்க, பெண்ணவளின் பின்னே அவளது அறைக்கு சென்றிருந்தான் நந்தா.

 

விலாசமான அறை அது. அவளுக்கு பிடித்தவாறு வெண்மை, ஊதா நிறங்களில் சுவர் பூச்சுகள் பூசப்பட்டிருக்க, பெரிய மெத்தையுடன் கூடிய அறையாகவே அது இருந்தது. அனைவரின் முன்பு புன்னகையுடன் நடித்தவள், தற்போது இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சினை சுதந்திரமாக விட்டாள். “உஃப்” என்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

 

நாலறைக்குள் நடிக்க வேண்டிய அவசியம் இல்லையே? அவ்வறையின் மேசையின் மீதிருந்த தண்ணீரை குவளையை எடுத்தவள் வாயில் சரித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் அழகினை ரசித்தவன், சிறு நீர்குமிழ் ஒன்று அவளது இதழிலிருந்து வழிந்து கீழே விழுவதைக் கூட விட்டுவைக்கவில்லை.

 

அந்த அளவிற்கு அவனது பார்வை அவள் மீது பதிந்திருந்தது. தன்னை அவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள், குவளையை வைத்துவிட்டு, அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தாள். அவள் முறைத்ததும் தன் பார்வையை வேறு புறம் திருப்பியவன், அறையில் மாட்டப்பட்டிருக்கும் அவளது புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் பார்ப்பது போல் செய்கையைப் புரிந்தான் கள்வன்.

 

“ஹே இந்த சின்ன வயசு போட்டோவில இருக்கிறது நீயா மது?”

 

“இல்லை எங்க அப்பத்தா” என்றாள் முறைப்பாக.

 

“யாரா இருந்தால் என்ன? சோ க்யூட்…ஜூஜ்லிப்பாவை அள்ளி எடுத்து முத்தம் தரணும்.” என்றவன் புகைப்படத்திற்கு முத்தமிட போக, அவளோ பதறியே விட்டாள்.

 

“ஹே இடியட்! என்ன பண்ற?”

 

“பார்த்தால் தெரியலை. முத்தம் தரேன் பாப்பாக்கு, சாரி உங்க அப்பத்தாக்கு.” என்று கண்ணடித்தவன் முத்தமிட செல்ல,

 

“யோவ், அப்படி எல்லாம் பண்ணக்கூடாது. தள்ளிப் போ.” என்றவள் அவனது கைகளைப் பற்றி இழுக்க, அந்த நொடி அவளை ஆவலாக பார்த்தான் நந்தா.

 

“உங்க அப்பத்தாக்கு கொடுத்தா உனக்கு என்ன பொறாமை?”

 

“அது நான்… ஓவரா பண்ணாத வேணும்னு தான் நீ பண்றனு எனக்கு நல்லாவே தெரியும்.”

 

“அடடா புருசனை பத்தி அழகா புருஞ்சிருக்க மது டார்லிங்.”

 

“வாட்! எவ்ளோ தைரியம் இருந்தால் இப்படி சொல்லுவ? காசுக்காக தானே நடிக்க வந்திருக்க? அதை மறந்திட்டு புருசன்னு டையலாக் விட்ட மவனே… நடக்குறதே வேறடா”

 

“அடேங்கப்பா..! சிட்டிக்கு கோபம் எல்லாம் வருதே..? என்ன நடக்கும் மிஸ்… சாரி மிஸ்சஸ் நந்தா. இப்போ கூட பிரச்சனை இல்லை. உன் பாணியில சொல்லணும்னா, நம்ம டீல் மேரேஜ் பத்தி லைட்டா சொல்லட்டுமா புஜ்ஜிமா.” என்றவன் நிதானமாக கூற, அவள் முகம் நொடியில் மாறியது. அவள் முகமாற்றத்தைக் கவனித்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது.

 

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. அத்தை… மாமா… மச்சான்…” என்றவன் ராகமிட ஆரம்பிக்க, நொடியில் அவனது வாயை தன் கைகளால் பொத்தியவள், ‘வேண்டாம்’ என்று மறுப்பாக தலையாட்டினாள்.

 

“இப்போ ஏன் இப்படி சீன் கீரியட் பண்ற?ப்ளீஸ்” என்றவளின் பார்வையை இமை மூடாது ஆராய்ந்தான்.

 

முதன் முதலாக அவளைக் காணும் போது அவளது கண்களில் தெரிந்த ஒருவித பயம் தற்போது தெரிய, இவன் இதழோ புன்னகைத்தது. ‘இன்னும் நம்ம ஆளுக்கு பயம் இருக்கு. அந்த கெத்த மட்டும் விட்ராதடா.’ தனக்குள் உரைத்தவன், அவளது மென்மையான கைகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். அவனது செயலை உணர்ந்தவள், பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டாள்.

 

“ஏங்க, என்ன சோப் யூஸ் பண்றீங்க? ஆளைத் தூக்குது.” என்றவன் கேட்ட நொடி அவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது.

 

“டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ் ஓகே.” என்று கத்திவிட்டு வெடுக்கென்று திரும்ப, அவளது கால்கள் புடவையோடு சேர்த்து தடுக்கி விழச் செய்தது. அவள் விழப் போகும் நேரம், சுதாரித்தவனோ, மெல்லிடையாளின் இடையினை தன் கரத்தால் வளைத்துப் பிடித்திருந்தான். அவனது கரம் மென்மையான பெண்ணவளின் மணி வயிற்றில் அழுத்தமாக பதிந்த நொடி, அவளது கண்கள் மிரட்சியில் விரிந்தது என்றால், அவனது கண்களோ, ஆர்வத்ததில் திளைத்தது.

 

தனது அழுத்தமான பிடியை இறுக்கியவனது விரல்கள், அவனையும் மீறி அவளது புடவை விலகிய வயிற்றை வருடிக் கொடுக்க, அவனது இதழ்களோ, “சும்மா நெய் மீனு மாதிரி வழுக்கின்னு போகுது… எப்பா…” என்றானே தாமதம், அவனை விட்டு விருட்டென்று பிரிந்து நின்றவளது கண்கள் அனலாக அவனைச் சுட்டெரித்தது.

 

“என்கிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதனு எத்தனை முறை சொல்லியிருக்கேன். அறிவில்லை, இல்லை அறிவை அடகு வெச்சுட்டியா? இது ஒரு கான்ட்ரெக்ட் கல்யாணம். ஆனால் நீ இன்னைக்கு பண்றது எதுவுமே சரியில்லை” என்றவள் தன் மைவிழிகளை உருட்டிக் கொண்டே உரைக்க, அவளையே இமை மூடாது பார்த்தவனது மனமோ அவளை ரசித்துக் கொண்டே வசைப்பாடியது.

 

அவளுக்கோ அவனது பாவனை பயத்தைக் கொடுத்தது. வசமாக இவனிடம் மாட்டிவிட்டோமோ? என்று முதல்முறையாக யோசித்தாள். அன்றைக்கு மட்டும் அந்நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால், இவை அனைத்தும் நடந்திருக்காதே? என்றெல்லாம் தோன்றியது அவளுக்கு.

 

“விழப் போன உன்னை பிடிச்சு காப்பாற்றுனது குத்தமா?”

 

“யோவ், நீ பிடிச்சதுகூட பரவாயில்லை. தப்பா வேற கமெண்ட் பண்ணிட்டு நல்லவன் மாதிரி பேசாத.”

 

“அப்போ பிடிச்சது தப்பில்லையா மது.” என்றவன் ஆர்வத்துடன் முணுமுணுக்க,

 

“என்ன?” என்றாள் புருவம் உயர்த்தியபடி.

 

“நத்திங் மது… நத்திங்… யூ கன்டின்யூ.”

 

“ஆர் யூ கிட்டிங்… உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா?” தனது அனல்பார்வை கொண்டு முறைத்தாள் பெண்.

 

“திருத்த நான் ஒண்ணும் நோட் புக் இல்லை மது…” என்றான் அட்டகாசமான புன்னகையுடன்.

 

“யூ இடியட்” என்று பல்லைக் கடித்தவள் அவன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்துவதற்காக, அவனை நெருங்கினாள்.

 

அந்நேரம் பார்த்து, “வரு… வருணிமா…” அவளது அன்னையின் அழைப்பில் அவளது கைகள் கீழே இறங்கியிருக்க, தனது கணவனது கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டவள், நொடியில் தன் முகத்தை புன்னகையோடு மாற்றியது மட்டுமின்றி, தன்னவனை தன் கண்களாலே புன்னகைக்கும்படி கட்டளையும் இட்டாள்.

 

“வரும்மா, கீழ எல்லாரும் வெயிட் பண்றாங்கடா. வாங்க மாப்பிள்ளை நீங்களும்.” என்று அறைக்குள் நுழைந்ததுமே இன்முகத்துடன் மதுவர்ணிகாவின் அன்னை பிரபாவதி அழைத்திருக்க,

 

“இதோ ம்மா, நாங்க வந்திடுறோம்.” என்றவள் புன்னகை முகம் மாறாது கூற,

“சரிடா வரு.” என்று மலர்ந்த முகத்துடன் அங்கிருந்துச் சென்றார் பிரபாவதி.

 

இங்கு அவளவனோ, தன்னவளையே இமை மூடாமல் ரசித்துக் கொண்டிருந்தான். அவளது அருகாமை அவனுக்குள் அந்நிமிடம் அமுதத்தை அளித்திருக்க, அடுத்த நொடியே அவள் விசத்தை கக்குவாள் என்று அறிந்திருந்தும், அவளை சைட் அடித்தான் நந்தா.

 

அடுத்த நிமிடமே மதுவின் முகம் மாறிவிட, “என்ன லுக்கு..? உன்னை வந்து வெச்சுக்கிறேன்.” என்று முறைத்தவள் அவனது கைகளை உதறிவிட்டுச் செல்ல,

 

“எங்க மது இடுப்பில தூக்கி வெச்சுப்பியா?” என்று வேண்டுமென்று இவன் சீண்ட, கதவின் அருகில் நின்றவளோ,  “டேய்” என்றபடி அங்கிருந்த பூச்சாடியை அவன் மீது எறிவதற்காக எடுத்துக்கொண்டாள். கடும் கோபத்தில்…

 

“நோ வயலென்சு பேபி கேர்ள். அப்புறம் எல்லாரும் வந்திடுவாங்க.” என்றவன் எச்சரிக்கை விடுத்திருக்க, அதன்பின் தான் அமைதியடைந்தவள் எதுவும் பேசாது அங்கிருந்துச் சென்றிருந்தாள். சரியாக அந்நொடி அவனது அலைபேசி ஒலித்தது.

 

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன…

உனக்கும் வாழ்வு வரும்…

 

இன்று தான் இப்பாடலை வைத்திருந்தான். அது அழகாய் இசைக்க, திருமணம் ஆன முதல் நாளே இந்த ரணகளம் என்றால் இனி வரவிருக்கும் நாட்களை எண்ணும் போதே ஒரே குதுகலமாய் தோன்ற, “எதையும் பார்த்துக்கலாம் என் ஜூஜிலிக்காக” என்றான் புன்னகையுடன்.

 

ஒரே ஆர்வமாக வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. முகப்பறைக்கு வந்தவன், தப்பிக்கும் மார்க்கம் அறியாது விழிப் பிதுங்கி போய் நின்றான்.

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்