என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -07

Loading

முகம் 07

 

சென்னை காவல் நிலையமே இந்த ஒரு வாரமாகப் பரபரப்பாகத் தான் காணப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னே தடுத்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.

ஐ.ஜி வரதராஜன் நிலைமையை உணர்ந்து, விரைவாக ஒரு குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கையை உடனடியாக ஆரம்பித்திருந்தார். அந்தக் குழுவை தலைமை தாங்கியது என்னவோ ஏ.சி.பி விக்ரமன் தான்.

ஒரு வார விசாரணைக்குப் பின் அன்று காலையிலேயே விக்ரமன் வரதராஜனைச் சந்திக்க வந்திருந்தான்.

அவனை உள்ளே அனுமதித்த வரதராஜன் அமரும்படி இருக்கையைக் காட்ட, அவனோ அவருக்கு சல்யூட் வைத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“என்ன நிலைமையில போயிட்டு இருக்கு விக்ரம்? எனி கெஸ்ஸஸ்? வேற ஏதாச்சும் பாஸிபில் இருக்கா? இல்ல சேம் தானா?” என்று கேட்க,

“நாட் ஷ்யோர் சார். பட் சேம் பட்டன்ல தான் கடத்தல் நடந்திருக்க வாய்ப்பிருக்கு. ஏன்னா வழமை போல எல்லாமே அஞ்சு வயசுக்கு கீழ உள்ள குழந்தைங்க தான். பட் இந்தவாட்டி ரெண்டு மூனு குழந்தைங்களுக்கு எந்த டிபெக்ட்டும் இல்ல. சோ இது அதே ஆளோட வேலையா இருக்க நைன்ட்டி பெர்ஸன்ட்டேஜ் வாய்ப்பு இருக்கு, அன்ட் தீரன் இஸ் ரைட், அன்னைக்கு பிடிச்சது தப்பான ஆளா இருக்கவும் அதே நைன்ட்டி பெர்ஸன்ட் வாய்ப்பு இருக்கு” என்றவன்,

“கிட்டத்தட்ட நமக்கு தெரிய வந்திருக்கிறதே இருபது குழந்தைங்க. சோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சாகணும். அன்ட் இன்னும் இன்வெஸ்டிகேஷன் போகுது சார். சீக்கிரமே உங்களுக்கு அப்டேட் பண்ணுறேன்” என்றபடி எழுந்து அவருக்கு சல்யூட் வைத்து கதவுவரை சென்றவன் ஒரு நிமிடம் நின்று திரும்பி,

“சார், ஐ திங் இந்தக் கேஸ் மறுபடியும் தீரன்கிட்டயே போறது பெட்டர்” என்க, வரதராஜனுக்கும் அதே எண்ணம் தான்.

ஆனால் இதை விக்ரமன் சொன்னதுதான் அவருக்கு அதிர்ச்சி! இந்த ஒரு வழக்குக்காக அவர்கள் இருவருக்குள்ளும் எப்படி முட்டிக் கொண்டது என்று அவர் அறியாததா?

“ஐ ஆல்சோ பீல் தி சேம் வே விக்ரம். பட் அதுக்கு அவன் ஒத்துக்கணுமே, பிடிவாதக்காரன். பார்ப்போம்” என்றவரிடம் பெருமூச்சு,

அவர் நினைத்தால் அவனை வரவழைக்க முடியும் அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கிறது தான். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை அழைப்பது?

அன்று அவன் அத்தனை சொல்லியும் அது அவருக்குப் புரிந்தாலும், ஆதாரம் ஒன்றைக் கொண்டு அவனை எட்ட நிறுத்தியவர்களைக் கை கட்டி இவர் வேடிக்கை தானே பார்த்தார்.

இன்று விடயம் பெரிதாகி இருந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காவல் நிலையத்தின் முன் கதறிய கதறல் ஊடகத்துக்குத் தான் தீனி போட்டிருந்தது.

காவல் துறையையும் சட்டத்தையும் கேலி பொருளாக்கி அதில் வியாபாரம் செய்து கொண்டிருந்தது ஊடக சமூகம். இங்கே அடுத்தவரின் பரிதாபம் என்றும் விளம்பரம் தானே! கிடைத்த சந்தர்ப்பத்தை யார் தான் விட்டுவைப்பர். எந்தத் துறையாக இருப்பினும் கலப்படம் என்றொன்று உட்புகுந்து மனித குலத்தையே ஆட்டிப்படைக்கிறதே!

மனிதனுக்கு என்றும் மனிதனே எதிரி…

_________________

இதே நேரம் வேதநாயகபுர காவல் நிலையத்தில், கண்களில் வலியுடன் இதழ்களில் கேலிபுன்னகையுடன் தொலைபேசியில் இந்த செய்தியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் ஜெயதீரன்.

அதிலோ “மீண்டும் தொடரும் கடத்தல்கள். சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதினைந்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிலையில், இன்று அதிகாலை மேலும் ஐந்து குழந்தைகள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அதிக கவனத்துடன் விசாரணை மேற்கொள்ள வேண்டிய நிலையில், நீதித்துறை கடந்த ஐந்து வருடங்களின் முன் இதே வழக்கில் இன்னொருவருக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கி இருக்க, தற்போதைய தொடர்ச்சியான கடத்தல்கள் ஒட்டு மொத்த சட்டத்தின் மீதும் நம்பிக்கையை மக்களிடத்தில் குறைப்பதுடன் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

அத்தோடு நகரின் முக்கிய சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி அருகே கூட அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறனர். தொடர்ச்சியான சம்பவங்களின் பின்னணி குறித்து மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்” என்ற நிரூபரின் குரலுடன் அந்த விசேட செய்தி முடிந்தவடைந்திருந்தது.

அதையே தீரன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, நண்பனின் தோளை தொட்ட பரஞ்ஜோதியோ “தீரா…” என்று அழைத்தான். அவனை நிமிர்ந்து பார்த்த தீரனின் கண்களோ கலங்கி இருக்க,

இந்தக் கடத்தல் மீண்டும் பழைய நினைவுகளை நண்பனுள் எழுப்பி இருக்கின்றது என்பது அவனுக்குப் புரிந்தது.

“எதுவும் நம்ம கையில இல்ல தீரா, நீ மனசக் கஷ்டப்படுத்திக்காத” என்றவனுக்கு நண்பன் இதை விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை இல்லை. அதுவே அவனுக்கு இன்னும் வேதனையாக இருந்தது.

நண்பன் அந்த நிகழ்வுகளில் இருந்து வெளி வர எவ்வளவு போராடினான் என்பது அவன் அறிந்தது தானே!

பரஞ்ஜோதி பேசிக்கொண்டிருக்க, தீரனின் தொலைபேசி அதன் இருப்பை உணர்த்தியது.

‘வரதராஜன் சார்’ என்ற பெயர் தாங்கி வந்த அழைப்பு, தீரனுக்கு அவரது அழைப்பின் நோக்கத்தை உணர்த்த, இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை.

அவர்மீது அவனுக்கு என்றும் கோபம் இருந்ததில்லை. அவராவது அவனை நம்பினாரே! அவனை நம்பாமல் ஏமாற்றியவர்களின் மத்தியில் எந்த ஆதாரமும் இன்றி தான் சொன்ன ஒற்றை தனக்காக நம்பிய அவர் என்றும் அவனது மதிப்பிற்குரியவர் தான்.

அழைப்பை உயிர்ப்பித்து காதில் வைத்தவனோ “குட் மார்னிங் சார்” என்றான்.

அவரோ “தீரா…” என்று இழுக்க,

“ஐ நோ சார்” என்றான் அவர் தயங்குவது புரிந்து.

“என்னால இத உன்கிட்ட உதவியா தான் கேட்க முடியும் தீரா, விஷயம் எவ்வளவு சென்சிடிவ்னு உனக்கே புரிஞ்சிருக்கும். மொத்தம் இருபது குழந்தைங்க. இப்போ டிபார்ட்மென்ட்டுக்கும் சரி அந்த குழந்தைங்களுக்கும் சரி உன்னோட உதவி ரொம்ப அவசியம். இது வேற ஒருத்தர் பண்ணுனதா இருக்கக் கூட வாய்ப்பிருக்கு. ஆனா என் மனசுக்கு இது அவன் வேலை தான்னு அத்தனை உறுதி. உன் பேச்சுக்கு எங்க மதிப்பில்லாமப் போச்சோ அங்க உன்ன நீ நிரூபிக்கணும் தீரா” என்க,

“யாருக்கு சார் நிரூபிக்கணும்? எதுக்காக? என்னை நிரூபிச்சு இங்க எதுவுமே மாறிப்போறதில்லையே” என்றான் விரக்தியான குரலில்…

அவருக்கு அவன் மனம் புரிந்தது. அவனை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் அறிவாரே! “அது உன் இஷ்டம் தீரா, ஆனா மறுபடியும் முதல்ல இருந்து இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணி மூவ் பண்ற அளவுக்கு நம்மகிட்ட டைம் இல்ல. குழந்தைங்க லைஃப் தீரா. சோ…” என்றவர் நிறுத்த,

அவர் எதிர்பார்த்தது போல் “நான் வரேன் சார்” என்று இவன் முடித்திருந்தான்.

தொடங்கவிருக்கும் புது அத்தியாயம் எதற்கான விடையாய் அமையுமோ????

___________________

அந்த காஃபி ஷாப்பினுள் சித்தார்த் நுழையும் போது, அவனுக்காக அவன் மச்சான்கள் இருவரும் காத்திருந்தனர்.

சித்தார்த்தின் வதனம் கண்டு இன்பன் யோசனையாகப் புருவம் சுருக்கினாலும் எதுவும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“வாங்க மாப்பிள்ளை, உக்காருங்க” என்று இன்பன் சொல்ல, ஒரு முறைப்புடன் சித்தார்த் அமர்ந்து கொண்டான்.

அவன் முறைப்பு ஏனென்று கிருபாகரணுக்குப் புரிந்தது. ஆனால் இன்பன் தான் முழித்தான்.

“மாப்பிளை என்ன விஷயம், நீங்க ஏதோ பேசணும்னு கூப்பிட்டதா கிருபா சொன்னான். என்னாச்சு எதுவும் பிரச்சனையா மாப்பிள்ளை. துவா என்கிட்ட எதுவும் சொல்லலையே!” என்று அவன் பாட்டுக்குக் கேள்வியை அடிக்கிக்கொண்டே போக,

கிருபனோ ‘அவரே மண்டை சூடாகிப் போய் வந்திருக்காரு இவன் வேற மாப்பிளை மாப்பிளைனு ஏத்தி விடுறானே! இன்னைக்கு உயிரோட போய்டணும் கடவுளே!’ என்று அவசர வேண்டுதலையும் மனதிற்குள் வைத்துக்கொண்டான்.

“மாமான்னே கூப்பிடு இன்பா, உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு இன்வைட் பண்ணத்தான் இங்க வரச் சொன்னேன்” என்று அவன் ஒரு உள்ளர்த்தத்தில் பேச,

அது புரியாத இன்பனோ “அதுக்குனு நீங்க இங்க இவ்வளவு தூரம் வரணுமா மாப்பிளை…” என்று ஆரம்பித்தவன் சித்தார்த்தின் பார்வையில்,

“அதுவா வந்துடிச்சு இனிமேல் மாமானே கூப்பிடுறேன். போன்லயே சொல்லி இருக்கலாமே மாமா” என்றான் திருத்தி…

“ம்ம்ம் தட்ஸ் குட். சொல்லி இருக்கலாம் தான் ஆனா அது முறை இல்லையே! நான் ஃபோன்ல சொன்னா நீ வருவ, ஆனா எல்லாரும் அப்படி வரணும்னு இல்லையே! அவங்க மரியாதையை எதிர்பார்த்தா என்னை செய்றது, அதான் நேர்லயே கூப்பிடலாம்னு வந்தேன்” என்றான்.

அதற்கு இன்பனோ கிருபனின் தலையில் தட்டி “இவன் ஒரு ஆளுன்னு இவனை நேர்ல கூப்பிட வந்தீங்களாக்கும்” என்க,

கிருபாகரணோ ‘நான் சிவனேன்னு தானடா இருந்தேன்’ என்று சோகமாய் திரும்பி இன்பனைப் பார்க்க, அதில் சித்தார்த்தோ முயன்று, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“நான் கிருபாவ சொல்லல இன்பா, உன் பொண்டாட்டி கயல்மொழியச் சொன்னேன்” என்க,

“அவளுக்கு எதுக்கு மாமா தானியா சொல்லணும், நான் சொல்ல மாட்…” என்று பேசிக்கொண்டு சென்ற அவன் இதழ்களின் முனைப்பை உணர மூளை சில வினாடிகளை எடுத்துக்கொண்டது.

அவன் பேசிய வசனத்தை முடிப்பதற்குள், பேசியது புரிய விழிகள் விரிந்தது. அவனோ தயக்கமாய் சித்தார்த்தைப் பார்க்க, அவன் முகத்தில் தீர்க்கம் வந்து ஒட்டிக்கொண்டது. இனிமேல் மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்தவன் அனைத்தையும் சொல்லிவிடும் மனநிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டான்.

அது அவன் முகத்தைப் படித்த சித்தார்த்துக்கும் புரிய, “என்ன மோதலின் பின் காதலா? வீட்ல யாருக்கும் சொல்லாம பண்ணுற அளவுக்கு சார் பெரிய ஆளாகிடீங்க இல்ல, அண்ணனும் தம்பியும் மாமாவோட நம்பிக்கையை உடைச்சே ஆகணும்னே கங்கணம் கட்டிட்டு இருக்கீங்களோ?” என்று சற்று காரமாகவே வந்தது சித்தார்த்தின் வார்த்தைகள்.

இன்பன் எதுவும் எதிர்த்து பேசவில்லை. தன் மாமனை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாதவனாய் தான் அமர்ந்திருந்தான். அவனுக்கு தெரியுமே அவனது பிழையின் அளவு… ஆனால் கிருபாவுக்குத் தான் நண்பனின் தலைக்குனிவு கஷ்டமாகிப் போனது.

“மாமா, ப்ளீஸ் நடந்து முடிஞ்சது வேணாமே! நடக்குறத யோசிப்போம்” என்க,

“வாய மூடு கிருபா, சூழ்நிலை அது இது ஆயிரம் சொல்லலாம். ஆனா அந்த சூழ்நிலையை உருவாக்குனது யாரு? எல்லாமே நம்ம பண்ணிக்கிறது தான். நான் தீரனுக்கும் இதையே தான் சொல்லுவேன். அவன் ஈகோ அவனை மட்டுமா பாதிக்கிது. அவங்க அவங்க தான் தான் பெரிய ஆளுன்னு நினைச்சு ஒவ்வொன்னையும் பண்ணிட்டு போயிடுறாங்க. ஆனா அதால பாதிக்கப்படப்போறது பெத்தவங்க தானே! ஒரு தீரனால மாமா பட்டது போதாதா? இவனுக்குத் தெரியாதா வீட்டுல என்ன நடக்குதுன்னு?” என்று அப்போதும் விடாமல் சாட, கிருபாவாலும் பேச முடியாமல் போனது.

சித்தார்த்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தீரன் செய்த காரியம் அவனை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்திருப்பது தெரிந்தும், அதே பிழையை செய்து வந்து நிற்கும் இவனை என்ன சொல்வது?

கோபம் மட்டுப்படும் மட்டும் திட்டி ஒய்ந்து, சிறு அமைதியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் “இப்போ என்ன பண்றதா இருக்க இன்பா?” என்று கேட்டான். இப்போது குரல் சற்று சாதாரணமாகவே வந்தது.

“துவா கல்யாணம் முடியிற வரை அமைதியா இருக்கலாம்னு தான் இருந்தேன் மாமா. இனிமேல் சீக்கிரமே வீட்ல சொல்லிடுவேன். அவளோட வீட்லயும் சேர்த்து” என்க,

“சோ உன் தங்கச்சி கல்யாணம் சிறப்பா நடக்கணும், ஆனா வேறொரு பொண்ணு தானே அவ, சோ எப்படியும் பண்ணிக்கட்டும்னு விட்டுட்ட அப்படித்தானே!” என்றான் காட்டமாய்…

“மாமா…” என்றான் இன்பன் பதில் சொல்ல முடியாமல், அவனால் சொல்லி விட முடியும் தான். ஆனால் அவனவளை தன் மாமனிடம் கூட விட்டுக்கொடுக்க அவன் விரும்பவில்லை. அதில் சித்தார்த்திடம் சிறு மெச்சுதல் கூட…

கிருபா மூலம் விடயத்தை அறிந்திருந்தவனுக்கு, இதில் கயலின் தவறு அதிகம் என்பது தெரிந்தது. ஆனால் தான் இத்தனை திட்டியும் ஒரு வார்த்தை கூட ‘அவளால் தான் எல்லாம்’ என்று அவன் வாயில் இருந்து வரவில்லையே! அதிலேயே அவன் காதல் புரிந்தது சித்தார்த்துக்கு…

“ஓகே லீவ் இட், வீட்ல பேசுறதுக்கு முதல் கயல் கூட நீ பேசணும். இதுல உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டுமில்ல, உன் அண்ணன் தீரனோட வாழ்க்கையும் சேர்த்து இருக்கு” என்றான்.

இப்போது எதிரில் இருந்த இருவரின் விழிகளிலும் குழப்ப ரேகை.

“என்ன பார்க்குறீங்க?” என்று இருவரிடமும் கேட்டவன், இன்பனிடம் “உனக்கும் தீரனுக்கும் அப்பா மட்டுமில்ல, மாமனாரும் ஒரே ஆளு தான்” என்றான்.

அதனை உணர்ந்து கொள்ளவே இன்பனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. கிருபனுக்கோ சுத்தம் தலை புரிந்து வால் புரியாத நிலை…

“ரொம்ப யோசிக்காதீங்க, கயலோட தங்கச்சி தான் தீரனோட பொண்டாட்டி” என்று சித்தார்த் சொல்ல,

“அண்ணாக்குத் தங்கச்சியா?” என்று வாயை பிளந்திருந்தான் கிருபன்.

“ரொம்ப ஷாக் ஆகாத இன்னும் ஒரு லாரி ஷாக் பின்னாலேயே வந்துட்டு இருக்கு” என்ற சித்தார்த் இன்பனிடம்,

“கயலுக்கு ஒரு தங்கச்சி இருக்குறது உனக்கு தெரியும் தானே இன்பா?” என்று கேட்க அவன் தலையோ ‘ஆமாம்’ என்பதாய் அசைந்தது.

சித்தார்த்தோ “இதுவரை அந்த ராம்பிரசாத்த மீறி உன் அண்ணனையும் அண்ணியையும் தான் சேர்த்து வைக்கணும்னு நினைச்சா, இப்போ நீயும் கூட்டு சேர்ந்துகிட்ட. இனி திட்டம் போட்டு உங்கள சேர்த்து வைக்கிறதுலயே என் வாழ்க்கை முடிஞ்சிடும் போலயே!” என்று அந்த மேசையில் அப்படியே தலையைச் சாய்த்துக்கொள்ள,

“அப்போ நானு, என் காதலு… நீங்களாச்சும் ஒரு வாட்டி கல்யாணம் பண்ணிடீங்க மாமா, என்னை எப்படியாச்சும் காப்பாத்திடுங்க. அடியேய் மலரு நீயும் உன் மாமனுங்க மாதிரி இருந்தா நான் ஏன்டி புலம்பனும்” என்று கிருபா அலற, மற்ற இருவரும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்து விட்டனர்.

அடுத்து குழம்பியை வரவழைத்து தங்களை ஆசுவாசப்படுத்தியவர்கள் திட்டதுக்குத் தயாராகினர்.

முதல் கட்டமாக தீரனின் வாழ்வில் அவர்கள் அறியாத பக்கத்தை மேலோட்டமாக சொல்லி முடித்த சித்தார்த்,

“அப்போ பிரிஞ்சி போனவங்க தான். அப்பறம் எத்தனை முயற்சி செஞ்சும் என்னால ஒன்னு சேர்க்கவே முடியல, ரெண்டும் பேரும் பிடிவாதக்காரங்க சோ என் முயற்சி அத்தனையும் வேஸ்ட் தான்” என்றவன் அவர்களைத் தான் பார்த்தான்.

அவர்களது முகம் வேதனையில் வாடி இருந்தது. இத்தனை கஷ்டம் தங்கள் அண்ணனுக்கு என்று நினைக்கையில் சற்று வருத்தம் மேலோங்கவே செய்தது.

பிரச்சனை மேலோட்டமாக தெரியும் தான், நீதி துறைக்குள் அவர்கள் வந்த பின் அந்த வழக்குப் பற்றி அறியாமலா?? ஆனால் அவன் காதல்?? அதில் அவன் அடைந்த துன்பம் அது புதியது தானே! அது புதியது தானே!

இன்பனோ “அப்போ அவங்க பிரிஞ்சதுக்கும் அந்த ராம்பிரசாத் தான் காரணமா? உலகத்துக்கு வாரி கொடுக்குற வள்ளல் பட்டம் ஆனா உள்ளுக்குள்ள இப்படியொரு சாக்கடையா? அவருக்கு எப்படி கயல் பிறந்தாளோ?” என்றான் மாமனாரின் மீதிருந்த கோபத்தின் விளைவால்…

“ம்ம்ம் இதே கேள்விய தான் மொழி விஷயத்துல தீரனும் கேட்பான். ஆனா மிஸ்ஸ ராம்பிரசாத் அவ்வளவு நல்லவங்களா இருக்கும் போது பொண்ணுங்க அப்படி வரலாம் தப்பில்லையே!” என்றான்.

“இப்போ எப்படி அவங்களை ஒன்னு சேர்க்குறது? இதுக்கு இன்னொரு மிஷன் ஸ்டார்ட் பண்ணனும் போலயே! அப்போ அதுக்கு என்ன பேரு வைக்கிறது. இந்நேரம் என் ஆளு இருந்திருந்தா பேரு நச்சுனு வெச்சிருப்பா” என்றான் கிருபாகரண்.

இன்பனோ “என்னடா உளறுற” என்று அவன் மண்டையில் தட்ட, மிஷன் இன்பமொழி விஷயம் தன்னால் வெளியே வந்தது.

“அடப்பாவிகளா இதுல அவளுங்களும் கூட்டா?” என்று ஆச்சரியமாய் கேட்ட சித்தார்த்தோ ‘நல்லது தான்’ என்று எண்ணியவன் அதனை சொல்லவும் செய்தான்.

“இப்போ நாம என்னதான் பண்ணப்போறோம்?” என்று இன்பன் கேட்க,

“மொழிய இந்தியாக்கு வரவெச்சிட்டேன். அவளை அப்படியே உங்க ஊரு மெடிக்கல் கேம்ப்ப்புக்குப் பேக் பண்ணுறது தான் என்னோட ஐடியாவா இருந்திச்சு. ஆனா இப்போ கயலும் அங்க வர்றதுனா கொஞ்சம் சிக்கல் தான். அதுவும் கோதை மேம் அதுக்கு அலோவ் பண்ண மாட்டாங்க” என்று கிருபா கயலை அங்க வரவழைக்க கேட்டதை இன்பனிடம் சொன்னவன்

“அதோட அக்களுக்கும் தங்கச்சிக்கும் ஏழாம் பொருத்தம். பேசிக்கிறதே பெரிய அதிசயம் தான். இப்போ என்ன பண்றதுன்னு தான் யோசனையே” என்று ஏதேனும் வழி இருக்கிறதா என யோசிக்கத் தொடங்கினான்.

இன்பனோ “நீங்க அண்ணியையே வர வைங்க மாமா, கயல் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, சித்தார்த்துக்கும் குழந்தைகளின் நினைவில் அதுவே சரியெனப்பட்டது.

அந்த நேரம் இன்பனின் அழைபேசி ஒலி எப்ப, உயிர்ப்பித்துக் காதில் வைத்தவனுக்கு அந்தப்பக்கம் சொல்லப்பட்ட செய்தியில் முகத்தில் அதிர்ச்சியுடன் கூடவே ஒரு நம்ப முடியாத பாவனை…

அவன் அதிர்ச்சியுடன் பேசியதைத் தான் மற்ற இருவரும் பார்த்து அமர்ந்திருந்தனர்.

 

ஈர்க்கும்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்