Loading

திமிர்-19

 

 

“ஏன் அரசி! நாளை மறுநாள் நம்ம விழிக்கு, வளைகாப்பு வச்சிருக்கோம்! இன்னும் இந்தப் புள்ளைங்க ஒண்ணும் வீட்டுப்பக்கம் வரவே இல்லை! வீராவுக்கு எதுவும் ஃபோன் போட்டு பார்த்தியா?” காத்தவராயனின் மனைவி கயலுடன், அடுக்களையில் வேலையாக இருந்த அரசியிடம் கேட்டார் பூங்கொடி.

 

 

 

“ஒண்ணும் தெரியலைக்கா! நானும் நூறு நேரம், ஃபோன் போட்டு பார்த்துப்புடேன். இந்தப் பய எடுக்கவே மாட்டேங்குறான். என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியாமல், என்ன செய்றதுன்னே தெரியலை. நம்ம அத்தை வேற, வீரா எப்போ வருவான்? நெடுமாறன் கிளம்பிட்டானான்னு புலம்பிட்டே இருக்காங்க!”

 

 

 

“ஆமா! நெடுமாறனும், மதுவும் கிளம்பிட்டாங்களாக்கா? எதுவும் ஃபோன் போட்டானா?” எனப் பூங்கொடியைக் கேட்டார் அரசி.

 

 

 

 

“அட, அதை ஏன் கேட்கிற அரசி, ஒருவாரம் முன்னேயே வந்துருங்கன்னு, எப்போவோ ஃபோன் போட்டு சொல்லிட்டேன். ஒருநாள் முன்னேதேன் வருவாகளாம். ஒருவாரம், பத்துநாளுன்னு இங்கண இருந்தாகன்னா, பேரனைப் பார்த்துக்கலாம்ன்னு பார்த்தேன். நாம நினைச்சதா நடக்குது? வந்ததும், வராததுமா, காலில் வெந்நீரை ஊத்திக்கிட்டு போகணும்ன்னு நிப்பாக பாரு! இதுக்குத்தேன், இந்த வெளியூரெல்லாம் வேணாம்ன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். நாம சொல்றதை யார் கேட்கிறா? நினைச்ச நேரம், பார்க்க முடியுதா? கொள்ள முடியுதா?” எனச் சலிப்பாய் பேசினார் பூங்கொடி.

 

 

 

 

“விடுங்கக்கா! நாம செய்யாததை நம்ம புள்ளைங்க செய்றாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதேன். நம்மால் இப்போ வரைக்கும், பிடிச்ச மாதிரி ஒரு துணி போட்டுக்க முடியுதா? நம்ம மாமியார், என்னதேன் நமக்கு சப்போர்ட்டா இருந்தாலும், சேலை மட்டுந்தேன், முழு நேரமும் கட்டனும்ங்கிறதை மாத்த முடியுதா? ஆனால் நம்ம பிள்ளைகளும், மருமகள்களும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்காங்க! இதைவிட நமக்கு வேற என்ன வேணும்.? நான் இப்படித்தேன் இருந்தேன், நீயும் இப்படித்தேன் இருக்கணும்! நாங்களெல்லாம் பிள்ளையை வளர்க்கலையா? அயடின்னு சொல்லி, நாம செஞ்சதையே அவங்களும், செய்யணும்ன்னு வற்புறுத்தறது ரொம்ப தப்புக்கா!”

 

 

 

 

“நீ சொல்றதெல்லாம் சரித்தேன் அரசி! ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே? பேரனையாவது மாசம் ஒருமுறை வந்து கண்ணில் காட்டிட்டுப் போகக் கூடாதா? சின்னப் புள்ளையை ஸ்கூலில் விட்டுட்டாங்களேன்னு மனசு ரொம்பவும் சங்கடமா கிடக்கு!” சலிப்பாய் சொன்னார் பூங்கொடி.

 

 

 

 

“அக்கா! நம்ம நம்ம பிள்ளைங்க, கெட்டுப் போகணும்ன்னு நினைப்போமா?”

 

 

“அது எப்படி அரசி, நினைப்போம்? நாம நல்லா இல்லாவிட்டாலும், நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னு தானே நினைப்போம்! ஒரு அம்மாவால் எப்படி இப்படி நினைக்க முடியும்?” எனக் கேட்டார் பூங்கொடி.

 

 

 

“மது, ஆத்விக் குட்டியோட அம்மா! அவ எப்படி தன் பிள்ளைக்கு கெட்டது நினைப்பாள்? தான் பிள்ளைக்கு எது நல்லதுன்னு ஒரு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்க்கா! எல்லாத்தையும் மது பார்த்துப்பா! நீங்க கவலைப் படாமல் இருங்க!” என அரசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

 

“அரசி! அரசி!” என்ற அங்கயற்கண்ணியின் குரல் கேட்டது.

 

 

 

 

“அரசி! உன்னையத்தேன் அத்தை கூப்பிடுறாக! என்னத்துக்கு இப்படி ஏலம் போடுறாகன்னு தெரியலையே?” எனப் பூங்கொடி சொல்லிக் கொண்டிருக்க,

 

 

 

 

“கயலு! அடுப்பைப் பார்த்துக்கத்தா! நான் என்ன ஏதுன்னு கேட்டுப்புட்டு வாரேன்.!” எனச் சொன்ன அரசி,

 

 

“வாங்கக்கா என்னன்னு கேட்போம்! எப்படியும் ஏன் புள்ளைங்க வரலைன்னுதேன் கேட்பாங்க!” எனச் சொன்னபடியே, பூங்கொடியுடன், அடுக்களையிலிருந்து வெளியேறினார் அரசி.

 

 

 

 

“அத்தே! கூப்பிட்டீகளா?”

 

 

 

“என்னதேன் செய்றீக? பொழுதுக்கும், அந்த அடுப்படிக்குள்ளேயே குடைஞ்சுட்டு நிற்கிறீக? நாளை மறுநாளு, வளைகாப்பை வச்சிக்கிட்டு, உன் மயனையும் காணோம். பூங்கொடி மயனையும் காணோம். ஒரு விஷேஷம்ன்னா ரெண்டு நாள் முன்னேயாவது வர மாட்டாய்ங்களா? ஃபோன் போட்டீங்களா இல்லையா?”

 

 

 

 

“ஏன்டா நீங்களும், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கீக? என்ன ஏதுன்னு கேட்க மாட்டீங்களா? எல்லாத்துக்கும், இந்த அழகரு பயதேன் அலைய வேண்டியிருக்கு.!” என மருமகள்களிடம் துவங்கி மகன்களிடம் முடித்தார் அங்கயற்கண்ணி.

 

 

 

 

“ம்க்கும்! உங்க பேரனுங்க எங்கக் கிட்டே சொல்லிட்டுதேன் எல்லாத்தையும் செய்றானுகளாக்கும்? கொஞ்ச வருஷமா இந்த வீட்டில் அல்லி ராஜ்ஜியம் தானே நடக்குது. எதுவா இருந்தாலும், உங்க மருமகளுகளைக் கேளுங்க!” எனக் குத்தலாய் சொன்னார் சரவணன்.

 

 

 

 

“நானும் என் மயனைத்தேன் எதிர்பார்த்துட்டு இருக்கேன்ம்மா! உன் பேரன் வீராவும், இந்தக் காக்காவிரட்டி பயலும் வரட்டும், காலை உடைச்சு விடுறேனா இல்லையான்னு பாரு! நமக்கு ஆகாதவிங்க வீட்டில் போய் உட்கார்ந்துக்கிட்டு ஆட்டமா ஆடுறாய்ங்க.. வரட்டும் வச்சிக்கிறேன்.!” எனக் கோபமாய் பேசினார் கதிர்வேல்.

 

 

 

 

“என்ன அரசி, கொழுந்தனார் இம்புட்டு உக்கிரமா இருக்காரு! வீராக்கிட்டே, கொழுந்தனார் சோலியாய் போயிருக்க நேரமாய் பார்த்து வரச் சொல்லு அரசி.!” என அரசியின் காதுக்குள் சொன்னார் பூங்கொடி.

 

 

“ம்க்கும்! இவன்தேன், ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறானேக்கா! நானும் ரெண்டு மூணு நாளா, ஆயிரம் தடவையாச்சு ஃபோன் போட்டிருப்பேன். கிறுக்குப் பய, என்ன செய்றான்னு தெரியலை. நீங்க வேணும்ன்னா பாருங்க, இவரு நட்டக்குத்தர நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும் போது வந்து வசமா மாட்டுவான் பாருங்க!” என அரசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் வந்து நின்றிருந்தான் வீரா.

 

 

 

 

“அரசி! நீ சொன்னது சரித்தேன். உன் மயன் வந்துட்டான் பாரு! அது யாரு உன் தம்பி மவளா? அந்தப் புள்ளையையும் கூட்டியாந்திருக்கான் போல..!” என செவியருகில் கேட்ட பூங்கொடியின் குரலில் அதிர்வுடன், திரும்பி வாசலைப் பார்த்தார் அரசி.

 

 

 

“சொல்லி வாயை மூடலை. வந்து நிற்கிறான் பாருங்கக்கா! முன்னமே சொல்லிட்டு வந்திருந்தால், எப்படி சமாளிக்கணும்ன்னு யோசிச்சு வச்சிருப்பேன். திடுதிப்புன்னு இப்படி கூட்டியாருவான்னு தெரியாதே! என்னைக் கட்டினவரை எப்படி சமாளிக்கப் போறேனோ? வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரே..!” எனப் புலம்பிய அரசி,

 

 

 

 

“அக்கா! ஒரு ரெண்டே நிமிஷம், இங்கண சமாளிங்க! அழகருக்கு ஒரு ஃபோனை போட்டு, வரச் சொல்லிட்டு வந்துடுறேன்.!” எனச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் ஓடினார் அரசி.

 

 

 

 

“பார்த்தியாம்மா! நீ அவளைத் தானே, கேள்வி கேட்ட? பொறுப்பாய் பதில் சொல்லாமல், உன் மருமக உள்ளே ஓடுறதைப் பாரு!” எனக் கதிர்வேல் மனைவியைக் குறைசொல்ல,

 

 

 

 

“அடுப்பில் என்னத்தையாவது வச்சிட்டு வந்துருப்பாள்டா! நிப்பாட்டிட்டு வருவாள்.!” எனச் சொன்ன அங்கயற்கண்ணி,

 

 

 

 

“உன் மயன் என்னதேன் சொல்றான். ஒரு விஷேஷத்தை வச்சிக்கிட்டு, இவிங்களைக் கட்டி இழுக்கும் முன்னே ஒரு வழியாகிப் போயிரணும்!” எனச் சலித்தபடியே, பூங்கொடியைப் பார்த்துக் கேட்டார் அங்கயற்கண்ணி.

 

 

 

 

“அதெல்லாம் நாளைக்கு வந்துருவான் அத்தே! மதுவுக்கு ஏதோ சோலி இருந்திருக்கும் போல, இல்லைன்னா நேத்தே வந்து இறங்கிருப்பான்!”என எதையோ சொல்லி சமாளிக்க முயன்றார் பூங்கொடி.

 

 

 

 

“உன் மயனை, பேசாமல் விஷேஷம் முடிஞ்சு புள்ளை பொறந்ததும் வரச் சொல்லு.!” என அங்கயற்கண்ணி சொல்ல,

 

 

 

“இதுக்குத்தேன், நாங்க சொன்னால் எங்கே கேட்குறீக? வெளியூருக்குப் போயெல்லாம், வேலை செஞ்சு கிழிக்க வேணாம்ன்னு சொன்னேன். நீங்கதேன் கேட்கவே இல்லை. ஆத்திர அவசரத்திற்கு, வர முடியுமா? போக முடியுமா? உங்க மருமகளுக பேச்சைக் கேட்டு ஆடுனீகன்னா இப்படித்தேன்.! பெத்ததே ஒத்தைப் புள்ளை, அவனையும் நினைச்சால் பார்க்க முடியாத தூரத்தில் கொண்டுபோய் உட்கார வச்சிட்டா! எல்லாம், வந்த மருமகளைச் சொல்லணும்” தன் மனைவி பூங்கொடியை முறைத்தபடியே சொன்னார் சரவணன்.

 

 

 

 

“இப்போ என்னத்துக்கு மதுவை வஞ்சிக்கிட்டு கிடக்கீக.? அவள் இல்லமல் போனால், உங்க பிள்ளை உருப்பட்டுருப்பானா? உங்களுக்கு அப்படி நெடுமாறன் மேலே பாசம் பொங்கி வழியுதுன்னா, நேரே மெட்ராஸூக்கு போய் பார்த்துட்டு வர வேண்டியது தானே? படிச்சு முடிச்சு வேலைக்குப் போற புள்ளையை, வீட்டில் உட்கார்ந்து பொங்கிப் போடுன்னு சொல்ல முடியுமா? அப்படியே இருந்தாலும், உங்க புள்ளையையும் சரி, அவ புள்ளையையும் சரி, அவ தானே பார்த்துக்கிறா! நீங்களா வடிச்சுக் கொட்டி ஆபீசுக்கு அனுப்பி வைக்கிறீக?”

 

 

 

 

“ஆமா, அப்படியே உன் மருமவ, சம்பாதிச்சு உன் கையில்தேன் கொடுக்குறா! அவ அப்பன் ஆத்தாளுக்கு கொடுக்குறதுக்கே நீ இம்புட்டு வாய் பேசுற, உன் மருமவ உன் கையில் வந்து கொடுத்தாள்ன்னா, உன்னைக் கையில் பிடிக்க முடியாது.!”

 

 

 

 

“அவ சம்பாதிக்கிறா! அவள் கொடுக்கிறா! அவள் கொடுத்தாள் உங்களுக்கு ஏன் நோகுதுங்கிறேன். ஏன் ரெண்டு வருஷம் முன்னே, கர்ப்பப்பை ஆப்பரேஷன் பண்ணி, நான் படுத்துக் கிடந்தப்போ, உங்க கைமேல், ரெண்டு லட்சம் கொண்டு வந்து வச்சாளே, அப்போ மட்டும், உங்க கண்ணுக்கு அவள் நல்ல மருமகளா தெரிஞ்சாளோ? எனக்கும் என் மருமகளுக்கும், ஆயிரம் இருக்கும். நாங்க அடிச்சுப்போம், கூடிப்போம். யாராவது என் மருமகளைப் பத்தி பேசுனீங்கன்னா அம்புட்டுதேன்.!” என பூங்கொடி நிறுத்தவும் வீரபத்ரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

 

 

 

 

‘ஐயய்யோ! இவனைக் காப்பாத்த தானே இம்புட்டு நேரம் பேசினேன். அதுக்குள்ளே உள்ளே வந்துட்டானா?’ என பூங்கொடி விழித்துக் கொண்டு நிற்க, அழகரை அழைத்து அலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு, மீண்டும் கூடத்திற்கு வந்திருந்தார் அரசி.

 

 

 

 

“இந்தா வந்துட்டானே வீரபத்ரன்!” என்ற அங்கயற்கண்ணியின் குரல் கேட்டு அனைவரும், வாசலை நோக்கித் திரும்ப, தயக்கமாய் வீராவின் பின்னால் நின்றிருந்த மேகவர்ணா அனைவரின் பார்வையிலும் விழுந்தாள்.

 

 

 

 

“அப்பத்தா!” என அழைத்தபடியே, வீரபத்ரன் உள்ளே நுழைய,

 

 

 

“அங்கணையே, அப்படியே நில்லுடா!” என்ற கதிர்வேலின் அதட்டலான குரல் அவனை அப்படியே தடுத்து நிறுத்தியது. ஆனால், அவர் சொன்னதை எதையுமே கண்டுக்கொள்ளாமல், வீரபத்ரனை தாண்டி, வீட்டிற்குள் நுழைந்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“அத்தே! எப்படி இருக்கீக? அம்மாச்சி, நல்லா இருக்கீகளா?” என அவள் நலம் விசாரித்துக் கொண்டிருக்க,

 

 

 

 

“எம்மா, இந்தாம்மா! நான் பெத்த புள்ளையவே வீட்டுக்குள்ளே வர விடாமல், வெளியே நிறுத்தி வச்சிருக்கேன். நீ என்னம்மா பொசுக்குன்னு உள்ளார வந்து நிற்கிறே?” என அதட்டலாய், மேகவர்ணாவிடம் கேட்டார் கதிர்வேல்.

 

 

 

 

“நீங்க உள்ளே வர வேணாம்ன்னு உங்க மயனைத்தானே மாமா சொன்னீக? என்னைய எங்க சொன்னீக? அது மட்டுமில்லாமல், இது எங்க அய்த்த வீடு! நான் அப்படித்தேன் வருவேன்.!” சின்ன புன்னகையுடன் அழுத்தமாய் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

“இந்தாரு, இந்த சொந்தம் கொண்டாடுற வேலையெல்லாம் இந்தா நிற்கிறாளே, உங்க அய்த்தையோட நிறுத்திப்புடு! மாமா, நோமான்னு என்னைக் கூப்பிடுற வேலையெல்லாம் வச்சுக்கிட்டே அம்புட்டுதேன் சொல்லிட்டேன்.!” விரல் நீட்டி, மேகவர்ணாவை மிரட்டினார் கதிர்வேல்.

 

 

 

 

“அய்த்த புருஷனை மாமன்னு கூப்பிடாமல் சித்தப்பான்னு கூப்பிடவா முடியும்?” என அவள் கேட்க, அவளைக் கோபமாய் முறைத்தபடி நின்றிருந்த கதிர்வேலிடம்,

 

 

 

 

“ஏன்டா, வீட்டுக்கு வந்தப் புள்ளைகளை, வாசலில் நிற்க வச்சு பேசிக்கிட்டு! அந்தப்புள்ளை கேட்கிறதும் சரித்தேன். உன்னை மாமான்னு கூப்பிடாமல், சித்தப்பான்னு கூப்பிட சொல்லுறியா? கூறுக்கெட்டத்தனமா பேசிக்கிட்டு. ஏய்! வீரா! நீ உள்ளே வாடா! என்னமோ அப்பன் பேச்சுக்கு கட்டுப்பட்ட பிள்ளை மாதிரி பம்மிக்கிட்டு நிற்கிறே?” எனப் பேரனை உள்ளே அழைத்தார் அங்கயற்கண்ணி.

 

 

 

 

“இந்தாரும்மா! நீ செய்றது ஒண்ணும் சரியில்லை சொல்லிப்புட்டேன். ஒருத்தருக்குமே சொல்லாமல், அவன் இஷ்டத்திற்கு அம்மாப்பட்டியில் உட்கார்ந்து ஆட்டம் போட்டுட்டு வாரான். பாத்தாக்குறைக்கு இந்தப் புள்ளையை வேற கூட்டிட்டு வந்துருக்கான். அவன் செய்ற எல்லாத்துக்கும், தலையாட்டுறது சரியில்லை சொல்லிப்புட்டேன்!” கோபமாய்க் கத்தினார் கதிர்வேல்.

 

 

 

 

“இப்போ என்னத்துக்கு கத்துறீக? என் தம்பி மக, கருவிழி விஷேஷத்திற்கு வந்திருக்கா! இப்போ அதுக்கு என்னங்குறீக?” எனக் கணவனைத் திருப்பிக் கேட்டார் அரசி.

 

 

 

 

“ம்க்கும் உன் திட்டமெல்லாம் எனக்கு தெரியாது பாரு.. நல்லா நாடகம் போடுற டி! இந்தப் புள்ளையை வீராவுக்கு கட்டி வைக்கத்தானே இம்புட்டும்.? பச்சைப்புள்ளை மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு நல்லா நடிக்கிறே! உன் நாடகத்தோட மெய்ன் ஆர்ட்டிஸ்ட், அந்த காக்காவிரட்டி பய எங்கே.? வரட்டும் அவன் காலை உடைச்சுப்புடுறேன்.!” என கதிர்வேல் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான் காத்தவராயன்.

 

 

 

 

“ஆத்தி! நம்மளைத்தேன் தேடிட்டு இருக்காய்ங்க! ஆசையாய் பொண்டாட்டியைப் பார்க்கலாம்ன்னு பாண்டி ப்ரதர்ஸ்கிட்டே இருந்து தப்பிச்சு வந்தால், இவிங்க வந்தும், வராததுமா நம்மளை வலைபோட்டு தேடுறாய்ங்களே..!” என மெதுவாய்ப் புலம்பியபடியே, மறைவாய் காத்தவராயன் நின்றிருக்க, 

 

 

 

“அண்ணே! எப்போ வந்தே? என்னத்துக்கு இப்படி மறைஞ்சு நின்னுக்கிட்டு.. உள்ளார போக வேண்டியது தானே? அழகரு இங்கே பாரேன், காக்காவிரட்டி அண்ணே வந்துருக்கு..!” என்றபடியே காத்தவராயனின் பின் வந்து நின்றாள் கருவிழி.

 

 

 

 

“ம்க்கும்! எம்மா தங்கச்சி, என்னை மாட்டி விடனும்ன்னே வந்தியா? உன் மாமன் அங்கண என்னைத்தேன் தேடிட்டு கிடக்காரு! நீ வேற மைக்கைப் போட்டு எல்லாருக்கும் சொல்லிப்புட்டியா? எல்லாத்துக்கும் நான்தேன் காரணம்ன்னு ஒட்டுமொத்தக் குடும்பமும், ஒட்டுக்கா சேர்ந்து என் உசுரை எடுப்பீக!” எனக் காத்தரவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

 

 

 

 

“எப்படி டா இருக்கே? பார்த்து எம்புட்டு நாள் ஆச்சு? ஒரு ஃபோன் போட்டு கூட பேச உனக்கு நேரமில்லையாக்கும்? அன்றைக்கு அம்மாப்பட்டி வந்தப்போ, நடந்த தகராறுக்குள்ளே.. தனியா ஒண்ணுமே பேச முடியலையே..” எனக் கேட்டபடியே, காத்தவராயனை இறுக அணைத்துக் கொண்டான் அழகர்.

 

 

 

 

“நல்லா இருக்கேன் அழகு! எங்கிட்டு, என் பொண்டாட்டிக்கிட்டே பேசவே டவரு கிடைக்க மாட்டேங்குது. உன் தொம்பி, அம்மாபட்டின்னு ஒரு அமேசான் காட்டுக்குள்ளே என்னை போய் உட்கார வச்சிட்டான்.!” என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, கையில் கருவிழியின் மருத்துவக் குறிப்புகளோடு உள்ளே வந்தார் தங்கமீனாட்சி.

 

 

 

“வாடா! காக்காவிட்டி பயலே.. இப்பத்தேன் மருதைக்கு வழி தெரிஞ்சுதாக்கும்? உள்ளார வா!” எனச் சொன்ன மீனாட்சி, 

 

 

 

 

“அரசி! காக்காவிரட்டி பய வந்துருக்கியான் பாரு!” எனக் குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்துவிட, 

 

 

 

 

“குடும்பமாடா நீங்களெல்லாம்? என்னைப் போட்டு விடுறதிலேயே அம்புட்டு பேரும் குறியா இருக்கீங்கடா!” எனக் காத்தவராயன் புலம்ப,

 

 

 

“வாடா! பார்த்துக்கிடுவோம்!” என்றபடியே, தோள் மீது கையைப் போட்டு காத்தவராயனை உள்ளே அழைத்துச் சென்றான் துடிவேல் அழகர்.

 

 

 

*****

 

 

 

“டாக்டர் என்ன சொன்னாங்க மீனாட்சி? புள்ளை வளர்ச்சியெல்லாம் நல்லா இருக்கா?” என உள்ளே நுழைந்த மீனாட்சியைப் பார்த்துக் கேட்டார் அரசி.

 

 

 

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அரசி! இன்னும் ரெண்டு வாரத்தில் பிள்ளை பிறந்துரும்ன்னு சொல்லிருக்காக! விழியைக் கொஞ்சம் சூதானமா பார்த்துக்க சொல்லியிருக்காக! வளைகாப்பு முன்னமே வச்சிருக்கனுமோ? புள்ளை பொறக்குற நேரத்தில், விழியை ரொம்ப அலைக்கழிக்கிறோமோன்னு தோணுது. நாலு எட்டு சேர்ந்தாப் போல வைக்கிறதுக்குள்ளேயே, அவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போகுது.!” என மகளின் மீதுள்ள அக்கறையால் பேசினார் மீனாட்சி.

 

 

 

“இந்தாரு மீனாட்சி! எல்லாம் நல்லபடியா நடக்கும். மனசைப் போட்டுக் குழப்பிக்காமல், அந்த மருதை மீனாட்சி மேலே பாரத்தைப் போட்டுட்டு அமைதியாய் இரு. என்னத்தையாவது சொல்லி, விழியைக் குழப்பி விட்டுறாதே..!”என அங்கயற்கண்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழகர், மற்றும் கருவிழியுடன் உள்ளே நுழைந்தான் காத்தவராயன்.

 

 

உள்ளே நுழைந்ததும்,

“டேய், டென்ருப்பீஸூ.. எப்படிடா இருக்கே? எம்புட்டு நாளாச்சு பார்த்து?” எனக் கேட்டபடியே, வீரபத்ரனின் கரத்தினைப் பிடித்துக் கொண்டாள் கருவிழி.

 

 

 

“நான் நல்லா இருக்கேன் மைடப்பி! நீ சொன்னபடியே, உன் வளைகாப்புக்கு முன்னேயே வந்துட்டேன் பார்த்தியா?!” என அவன் கேட்க,

 

 

 

“ரொம்பத்தேன் சீக்கிரம் வந்துட்டே! நாளை மறுநாள் வளைகாப்புக்கு, இன்னைக்குதேன் வந்துருக்க. இந்த நெடு மாமா இன்னும் வந்து சேரவே இல்லை!” எனக் கோபமாய்ச் சொன்னாள் கருவிழி.

 

 

 

அதே நேரம்,

“அக்கா!” என்றபடியே முன் வந்து நின்றாள் மேகவர்ணா.

 

 

 

 

“வர்ணா! நல்லா இருக்கியா? இந்த டென்ருப்பீஸு பத்திரமா கூட்டிட்டு வந்தானா? எதாவது ஏடாகூடம் பண்ணினான்னா சொல்லு.. வச்சு செஞ்சு விட்டுருவோம்.!” எனக் கருவிழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

“ம்க்ஹுஹும்!” என்ற கதிர்வேலின் தொண்டைச் செருமல் சத்தமாய்க் கேட்டது.

“நட்பு பாராட்டல் எல்லாம் முடிஞ்சுதா? அப்போ என்னையும், சரவணனையும் தவிர, இந்தப் புள்ளையை நம்ம வீட்டில் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு? எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு எங்களை ஏமாத்திருக்கீக, அப்படித்தானே?” எனக் கதிர்வேல் கேட்க,

 

 

 

“உங்க அப்பன் லேட் பிக்-அப் டா அழகு. இந்தப் புள்ளையை எல்லாருக்கும் தெரியும்கிறதையே இவரு இப்போத்தேன் கண்டு பிடிச்சிருக்காரு.!” என அழகரின் காதுக்குள் முனகினான் காத்தவராயன்.

 

 

 

 

“சத்தம் காட்டாமல் நில்லு! எங்க அப்பன் உன்னையத்தேன் டார்கெட் பண்ணுவாரு. வாயை வச்சிக்கிட்டு அமைதியாய் நில்லு.!” என எச்சரித்தான் அழகர்.

 

 

 

 

“ஆமா! அந்தப் புள்ளையை எங்க எல்லாருக்கும் தெரியும்தேன்! இப்போ என்னாங்குறீங்க! அந்தப் புள்ளை நம்ம வீட்டு விஷேஷத்திற்கு வந்திருக்கு. அவளைப் போய், நடுக்கூடத்தில் நிற்க வச்சு கேள்வி கேட்டுக்கிட்டு. உங்க மயன்கிட்டே சொல்லி வைங்க அத்தே! வர்ணா, என் தம்பி வீட்டு சார்பா வந்திருக்கா! அவளைஎதாச்சும் சொன்னாருன்னா அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.!” கணவனிடம் துவங்கி மாமியாரிடம் முடித்தவர்,

 

 

 

 

“விழிம்மா! நீ போய் ஓய்வெடு! டேய் வீரா! வர்ணாவை விழி ரூமிற்கு பக்கத்து ரூமிற்கு கூட்டிட்டு போ! அழகரு, வாரவங்களுக்கு, ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்குறதுக்கு சொல்லி இருந்தோமே, அது என்னன்னு பார்த்துட்டு வந்துருய்யா!” என ஒவ்வொருவரையும் அனுப்பியவர்,

 

 

 

“உன் பொண்டாட்டி, வீட்டுக்குப் பின்புறம் இருக்கா! ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டு அவளை எங்காச்சும் கூட்டிட்டு போய்ட்டு வா! என்னைக் கட்டினவர் கண்ணில் மாட்டாமல், ஓடிரு!” எனக் காத்தவராயனின் காதுக்குள் சொன்னார் அரசி.

 

 

 

 

“அரசிமா! ஐ லவ் யூ அரசி மா!” என உற்சாகத்தில் காத்தவராயன்,துள்ளி குதிக்க,

 

 

 

“கூறுகெட்ட குக்கரு பயலே.. உன் பொண்டாட்டிக்கிட்டே சொல்ல வேண்டியதையெல்லாம் என்கிட்டே சொல்லு! சீக்கிரம் கிளம்பு. வளைகாப்பு அன்றைக்கு வந்தால் போதும்!” எனச் சொல்லிவிட்டு, அரசி உள்ளே சென்றுவிட, கதிர்வேலின் பார்வையில் படாமல், மெதுவாய் நழுவ முயன்றவனின், கரத்தினை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தார் கதிர்வேல்.

 

 

 

 

“ஐயய்யோ! இவருக்கிட்டேயா மாட்டினேன். மனுஷன் பேசசியே கொல்லுவாரோ..!” என அவன் புலம்பியபடியே, திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க,

 

 

 

 

“அப்படியே நழுவி ஓடிடலாம்ன்னு பார்த்தியாக்கும்? எப்போடா என்கிட்டே சிக்குவேன்னு தானே பார்த்துட்டு இருந்தேன். இங்க நடந்த அம்புட்டு சங்கதிக்கும், நீதேன் காரணம்ன்னு எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லு, இதெல்லாம், எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்காளே.. என் பொண்டாட்டி, அவளோட திட்டம் தானே.?” எனக் கேட்டார் கதிர்வேல். நொடிக்கு நொடி காத்தவராயனை அவர் பிடித்திருந்த கரத்தில் அழுத்தம் கூடிக் கொண்டே போனது.

 

 

 

 

“ம்க்கும்.. ஆமா, நாங்கதேன் திட்டம் போட்டு உங்க மயனை அம்மாப்பட்டிக்கு அனுப்பினோமாக்கும்? உங்க மயன்தேன் வீடியோ பிடிக்கப் போறேன்னு பிடிவாதம் பிடிச்சி நின்னான். எதுவா இருந்தாலும் உங்க மயன்கிட்டே கேளுங்க! பொழுதுக்கும் என்னையவே குத்தம் சொல்லிக்கிட்டு. உங்கக் குடும்பத்திற்கு இதே சோலியா போச்சு. எவன் ஏமாளின்னு பார்த்து அவன் தலையிலேயே பழியைப் போடுறது. நான் உங்க மயன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும். கையை விடுங்க! பொழுதன்னைக்கும், என் கையையே பிடிச்சு இழுத்துக்கிட்டு.. ஒட்டுமொத்தக் குடும்பமும், என்னையவே உத்துப் பார்க்கிறதும், கையைப் பிடிச்சு இழுக்கிறதும் சரியில்லை சொல்லிப்புட்டேன்.!” எனக் காத்தவராயன் கோபமாய் சொல்ல,

 

 

 

 

“அப்போ எம் மயந்தேன் அந்தப் பிள்ளையை விரும்பினான்னு சொல்றியா?” என ஒருமாதிரியானக் குரலில் கேட்டார் கதிர்வேல்.

 

 

 

 

“ஆமா! அப்படித்தேன் வச்சிக்கோங்க!” எனச் சொல்லிவிட்டு காத்தவராயன் ஓடிவிட, கதிர்வேலின் முகம் யோசனையைத் தத்தெடுத்திருந்தது.

 

 

 

 

“ஆத்தாடி! எம்புட்டு நேக்கா தப்பிச்சு வர வேண்டிருக்கு. எங்குட்டு போனாலும் கேட்டைப் போட்டால் நானும் என்னதேன் பண்ணுறது? கோபப்படுறமாதிரி சீனைப் போட்டதும் மனுஷன் ஏமாந்து விட்டுட்டாரு. இன்னைக்கு தப்பிச்சிட்டேன், என்னைக்கு சிக்கி சின்னாபின்னமாகப் போறேனோ, தெரியலையே? அடேய்.. அரசி மயனே! உன் காதலை ஊட்டி வளர்க்க, என் உசிரை எடுத்துருவீங்க போலடா! வந்து இம்புட்டு நேரம் ஆகுது, என் பொண்டாட்டி கயலைப் பார்க்க முடியலை. கல்யாணம் பண்ணியும் கட்ட பிரம்மச்சாரியா சுத்த விடுறீங்களேடா!” எனப் புலம்பியபடியே, வீரபத்ரனின் அறையை நோக்கிப் போனான் காத்தவராயன்.

 

 

 

 

“என்ன மயிலம்மா! எப்படி இருக்கு? இதேன் நம்ம ரூம்.!” நம்ம என்ற வார்தையில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

 

“ம்க்கும்! நம்ம அறையா? நானெல்லாம் எங்க வீட்டை விட்டு வரமாட்டேன் சாமி! எங்க அண்ணன், எங்க அப்பா, முக்கியமா என் கருப்பனையெல்லாம் விட்டுப்புட்டு வரமுடியாது. ஒரு மாறுதலுக்கு நீ எங்க வீட்டுக்கு வந்துரு வீரா!” எனத் தெளிவானக் குரலில் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

“ம்க்கும்! உன் கழுத்தில் தாலி கட்டும் முன்னேயே இம்புட்டு அக்கப்போரா கிடக்கு. இதில் உன் வீட்டில் இருக்கப் போறேன்னு கேட்டேன்னா அம்புட்டுதேன்.!”

 

 

 

 

“எல்லா விஷயங்களும் நம்மளை தேடி வராது.. நாமதேன் சில விஷயங்களைத் தேடிப் போகணும்.!”

 

 

 

 

“என்னமோ சொல்ற மயிலம்மா! ஆனால் எனக்குதேன் ஒண்ணும் புரியலை. இப்போ நம்மளைத் தேடிட்டு இருக்கவன் அந்த மொட்டைத் தலையன் பசுபதிதேன்.!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

 

“ஏன்டா, உங்க அம்மா இந்தப் புள்ளையை, கருவிழி ரூமிற்கு பக்கத்து ரூமில் தானே, தங்க வைக்கச் சொன்னிச்சு. நீ இங்கே என்ன செய்றே?” என்றபடியே வந்தான் காத்தவராயன்.

 

 

 

 

“சும்மா சுத்திக் காட்டலாம்ன்தேன் காக்காவிரட்டி..!”

 

 

 

 

“ம்க்கும்! உன் ரூம் பெரிய இங்கிலாந்து பேலஸ்.. சுத்திக் காட்ட வந்தாராம். எல்லா அறையைப் போலவும் இங்கேயும் நாலு சுவரு மட்டுந்தேன் இருக்கு. இதில் சுத்திக்காட்ட என்ன இருக்கு? அங்கே அம்மாப்படியில், அம்புட்டு பேரும் உன்னைத் தேடிட்டு கிடக்காய்ங்க, நீ என்னடான்னா, இந்தப் புள்ளைக் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியாக்கும், ரொமான்சு..!” எனக் காத்தவராயன் சொல்ல,

 

 

 

“என்ன காக்காவிரட்டி சொல்ற?”

 

 

 

“என்ன அண்ணே சொல்றீக?” என வீரபத்ரனும், மேகவர்ணாவும் ஒருசேர அலறியிருந்தனர்.

 

 

 

 

“ஆமா! நீதேன் அரசி மயன்னு தெரிஞ்சு, இந்தப் புள்ளையோட அண்ணேங்க ஒருபக்கம் தேடிட்டு கிடக்காய்ங்க! இன்னொரு பக்கம் அந்த மொழு மொழு மொட்டை பசுபதி தேடிட்டு கிடக்கான். யார் கையில் மாட்டினாலும், நீ குருமாதேன் ராசா! புரோட்டாவைப் பிச்சுப் போடுற மாதிரி, பிச்சுப் போட்டுருவாய்ங்க! யார் கையில் மாட்டப் போற? அணகோண்டா அண்ணனுங்க கையிலா? இல்லை அந்த பசுபதி கையிலா? நல்லா ரோசணை பண்ணிக்க! ஆனால் ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன், எங்கே மாட்டினாலும், என்னை மட்டும் கோர் dத்து விட்டுடாதே ராசா!”

 

 

 

 எனக் காத்தவராயன் வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருக்க, அவன் சொன்ன சங்கதியில், ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து, உறைந்து போய் நின்றிருந்தனர் வீரபத்ரனும் மேகவர்ணாவும். பசுபதியைப் பற்றி எதுவுமே அறியாத வீரபத்ரன், காத்தவராயனைப் பார்த்தபடி நிற்க, பசுபதியைப் பற்றி அறிந்திருந்த மேகவர்ணாவோ, அதீத பயத்தில், வார்த்தைகளற்று, இரத்தப்பசையற்று, வெளுத்து வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்தாள்.

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்