
திமிர்-20
தன் அம்மா, பெரியம்மா, அப்பத்தா அங்கயற்கண்ணி, தன் ஆத்மார்த்தமான தோழியும், அண்ணியுமான கருவிழி மற்றும் மது என தன் வீட்டுப் பெண்களின் நடுவே அமர்ந்து சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் மேகவர்ணாவைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
தன் வீட்டில், தன் வீட்டுப் பெண்களுடன், கண்ணெதிரே அவள். காட்சியே அத்தனை அழகாய் இருந்தது. ஒரு நல்ல புகைப்படக் கலைஞனாய், இந்தக் காட்சியை அப்படியே மனதில் புகைப்படமாய் சேமித்துக் கொண்டான் வீரபத்ரன்.
“இந்த மயிலம்மாவுக்கு இம்புட்டு அழகா சிரிக்கத் தெரியுமா? நம்மகிட்டே மட்டும், எப்போ பார்த்தாலும், மூஞ்சியையும் மொகரையையும் காட்டுறது. சும்மாவே அழகா இருப்பா, இப்போ சிரிச்சால் இன்னும் கொஞ்சம் அழகா இருக்காளே..!” என அவன் சலித்துக் கொண்டாலும், அவன் கண்கள் அவளை இரசிப்பதை நிறுத்தவில்லை.
“ஏன் வர்ணா, உங்க அப்பனையும் கூட்டி வந்திருக்கலாமே? அவன் அங்கண ஒத்தையா கிடந்து என்ன செய்யப் போறான்?”
“இல்லை அத்தே! அப்பாவே, அண்ணேங்களுக்குத் தெரியாமத்தேன், என்னை உங்க மயன் கூட அனுப்பினார். அவிங்களுக்கு எப்படியும் தெரிஞ்சிருக்கும். இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்காய்ங்களோ தெரியலை.!”
“அப்படி என்ன செஞ்சிடப் போறாய்ங்க! நான்தேன் சொல்றேனே, எங்க மாமனார் செஞ்சது தப்புத்தேன். எனக்காக நான் வாக்கப்பட்ட வீட்டு வாசலில் வந்து நின்ன உங்க அப்பனை எங்க மாமனார் விரட்டுறதைப் பார்த்துட்டு இருந்தது என்னோட தப்புத்தேன். அப்போ இருந்த சூழ்நிலையில், இப்போ இருக்கிற தைரியமும், தெளிவும் இல்லாமல் போச்சு. என் தம்பியை விட்டுக் கொடுத்துட்டேனேன்னு இப்போவும் எனக்கு சங்கடமாத்தேன் கிடக்கு. ஆனால் உன் உடம் பொறாந்தவிங்களுக்கு இதெல்லாம் புரியாது வர்ணா. வயசு அப்படி! என்னால் புரிஞ்சுக்க முடியுது..!” என அரசி சொல்ல,
“அத்தே! எல்லாமே சரி ஆகிடுமா? அப்பாவே மனசு மாறிட்டாரு. ஆனால், எங்க அண்ணேங்க, முன்னால் நடந்ததையே பிடிச்சுட்டு தொங்குறாய்ங்க! அவிங்க நிலையில் இருந்து பார்த்தால், எங்க அப்பனோட, கஷ்டங்களை நேரில் பார்த்தவிங்க அவிங்கதேன். பத்தாக்குறைக்கு, ஒவ்வொரு நாளும் என்னைப் பெத்தவரும், இதையே பேசிப் பேசி அவிங்களுக்குக் கொம்பு சீவி விட்டுட்டாரு. அவரு மனசு ஆற்றாமையில் பேசினது, என் அண்ணேங்க மனசில் பதிஞ்சு போச்சு. ரெண்டு பக்கமும் தப்பும் இருக்கு. நியாயமும் இருக்கு. எந்தப் பக்கம் நிற்க? யாருக்காக நிற்கன்னு புரியவே இல்லைத்தே!”சங்கடமாய் சொன்னாள் மேகவர்ணா.
“புரியுது வர்ணா! நீ எதுவும் சங்கடப்பட்டுக்காதே! உன் அத்தே நான் இருக்கும் போது, நீ எதுக்காகவுமே சங்கடப்படக் கூடாது.!” என ஆறுதலாய், வர்ணாவிடம் அரசி சொல்ல,
“என்ன சின்னத்தே! உங்க மருவளைப் பார்த்ததும், கட்சி மாறிட்டீங்களாக்கும்? நானும் இங்கணதேன் இருக்கேன். அது மட்டுமில்லை, உங்க மூத்த மருமக நான்தேன். நினைப்பில் இருக்கட்டும்!”விளையாட்டாய் அரசியை சீண்டினாள் கருவிழி.
“ஏய் விழி! அப்போ நானு? நியாயப்படி பார்த்தால், எனக்கும் நெடுமாறனுக்கும் தான் முதலில் கல்யாணம் நடந்துச்சு! அப்போ நான் தானே மூத்த மருமகள்?” என இடையிட்டாள் பூங்கொடியின் ஒரே மருமகளான மதுரிமா.
“அடியேய்! சும்மா இருங்கடி! மூணுபேரும் இந்த வீட்டு மருமவளுங்கதேன். யாரும், பெரியவங்க, சின்னவங்கனன்னு இல்லை. எல்லாருமே ஒண்ணுதேன்.!” எனச் சொன்ன அரசி,
“ஏன்டா! வர்ணா இப்போதேன் முதல் தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்கா! இப்படி வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைக்காமல் புள்ளையை எங்கிட்டாவது கூட்டிட்டு போடா! ” என வீரபத்ரனிடம் முடித்தார்.
“ம்க்கும்! நான் கூப்பிட்டால், இந்த மயிலம்மா வந்தால் தானே? நீங்க என்னவாச்சும், நினைச்சுக்கிடுவீங்கன்னு வர மாட்டேங்குறா!” என அவளை ஆழ்ந்துப் பார்த்தபடியே பதில் சொன்னான் வீரபத்ரன்.
“இல்லைத்தே! நான் இங்கணையே இருக்கேன். ரொம்ப வருஷஞ்செண்டு வந்திருக்கேன். சொல்லப் போனால், இதுக்கு முன்னே இங்கே வந்திருக்கேனான்னு ஞாபகம் கூட இல்லை. உங்க எல்லோர் கூடவும் இருக்குறதுதேன் எனக்கு பிடிச்சுருக்கு.!” என அரசியின் கேள்விக்கு பதில் சொன்னாலும் வீரபத்ரனைத்தான் பார்த்திருந்தாள் மேகவர்ணா.
“இந்தாரு வர்ணா! இங்கண உட்கார்ந்து, இந்த அடுப்படியையும் சமையலையும், எம்புட்டு நேரம் வெறிக்க வெறிக்க பார்த்துட்டே உட்கார்ந்திருப்பே? சும்மா போய்ட்டு வா ராசாத்தி!” என அரசி சொல்ல, வேறு வழியில்லாமல், தலையசைத்திருந்தாள் மேகவர்ணா.
“இந்தாரு டென் ருப்பீஸூ.. காடு மேடெல்லாம் சுத்திக் காட்டிட்டு, அவளைப் பத்திரமா கொண்டார்ந்து சேர்த்துரு! அவள் எனக்குதேன் முதலில் ஃப்ரெண்டு! அதோட எனக்கு அவள் தங்கச்சியும்தேன். நல்லா நினைப்பில் இருக்கட்டும்.!” விரல் நீட்டி வீரபத்ரனை மிரட்டினாள் கருவிழி.
“என்னதேன் முதலில் மயிலம்மா கூட ஃப்ரெண்டா இருந்தாலும், எனக்குதேன் முதல் உரிமை! எங்க அண்ணே அழகருக்கும், உனக்கும் நடுவில் நான் வர மாட்டேன்.. அதே மாதிரி, எனக்கும் என் மயிலம்மாவுக்கும் இடையில் நீ வராதே..!” பதிலுக்கு கருவிழியை மிரட்டினான் வீரபத்ரன்.
“இது நல்ல கதையா இருக்கே.. நான்தேன் வர்ணாவை முதலில் கண்டு பிடிச்சேன். நான்தேன், அவள் உனக்கு மாமன் மவங்கிறதையும் கண்டு பிடிச்சேன். உனக்கெல்லாம் அம்மாப்பட்டி எந்த திசையில் இருக்குன்னு கூட, தெரியாதே பதிற்றுப்பத்து. இப்போ என்னடான்னா நான் ஊடால வரக் கூடாதா? அப்படித்தேன் வருவேன்.” எனக் கருவிழி சொல்ல,
“அம்மா தாயே.. படாதபாடு பட்டு இங்கண வரையும் கூட்டியாந்திருக்கேன். ஆரம்பத்திலேயே அத்து விட்டுடாதே ராசாத்தி. உனக்குப் புண்ணியமா போவும். இந்த டென்ருப்பீஸோடவே நிறுத்திப்போம், இந்த பதிற்றுப் பத்தெல்லாம் வேணாமே? இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆகுது!” எனக் கருவிழியின் காதுக்குள் இரகசியமாய் சொன்னான் வீரபத்ரன்.
“பாவம் பார்த்து விடறேன்.. பொழைச்சுப் போ! என் தங்கச்சியை சூதானமா கூட்டிட்டுப் போய்ட்டு வா!”எனக் கருவிழி சிரித்துக் கொண்டே சொல்ல,
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்!” எனக் கைப் பிடித்து மேகவர்ணாவை அழைத்துப் போனான் வீரபத்ரன்.
“ஒரு கல்யாணம் ஆகாத வயசுப் பிள்ளையை இப்படி கையைப் பிடிச்சு இழுத்துட்டு போ! குடும்ப மானம் புயல் காற்றில், புழுதியாய் பறக்கட்டும்!” என்ற கதிர்வேலின் குரலில், கூடத்தைத் தாண்டிக் வீரபத்ரனுடன் நடந்துக் கொண்டிருந்த மேகவர்ணா, சட்டென வீரபத்ரனின் பிடியில் இருந்த தன் கரத்தை உதறிவிட்டு தயங்கி நின்றாள்.
“ம்ப்ச்! என்னத்துக்கு நிற்கிறே? நீ வா, மயிலம்மா!” என மீண்டும், வீரபத்ரன் அவளை இழுத்துப் போக முயல,
“நல்லா எம் மயனை மயக்கி வச்சிருக்கம்மா! நீ என்கிட்டே என்ன சொன்னே? விஷேஷத்திற்கு வந்தேன்னு தானே சொன்னே.? விஷேஷ வீட்டில் செயற காரியமா இது? அவன்தேன் ஆம்பிள்ளைப் பிள்ளை! நீ பொம்பளப்பிள்ளை உனக்காச்சும் அறிவு வேணாம்.?” எனக் கதிர்வேல் வேண்டுமென்றே மேகவர்ணாவைக் குற்றவுணர்விற்கு ஆளாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே பேசினார்.
“போதும் மாமா! நிறுத்துங்க! எங்க மனசில் கள்ளம் இருந்திருந்தால், உங்களுக்குத் தெரியாமல் ஒளிஞ்சு மறைஞ்சு போயிருக்க முடியும். நாங்க ஒண்ணும் தப்பு பண்ணலையே? தப்பு பண்ணுறவிங்கதேன், பயந்து ஓடி ஒளியணும். காதலை குற்ற லிஸ்ட்டில் எப்போ சேர்த்தாய்ங்கன்னு தெரியலையே? மனசுக்குப் பிடிச்சவங்களை விரும்பறது ஒண்ணும் கொலைக்குத்தம் இல்லை மாமா! அப்படிப் பார்த்தால், நீங்களும்தேன் அத்தையை விரும்பி கட்டிக்கிட்டீக! நீங்க செய்யும் போது சரியா தெரிஞ்சது, நாங்க செய்யும் போது தப்பாக மாறிடுச்சா மாமா? நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் உங்க மயனை விரும்புறேன்னு சொன்னது கிடையாது. ஆனால் இப்போ உங்கக் கிட்டேயே நேரடியாய் சொல்லிடுறேன்.. நான் உங்க மயனை என் உசிருக்கும் மேல விரும்புறேன். இப்போ கூட, உங்களுக்குத் தெரியப்படுத்திட்டுதேன், நானும் வீராவும் வெளியே போறோம்..!” எனச் சொன்னபடியே வீராவின் கரத்தை உரிமையாய்ப் பற்றியபடி அவள் வெளியேறியிருக்க, மேகவர்ணாவின் பேச்சில், அசந்து போய் அமைதியாய் நின்றார் கதிர்வேல்.
“நம்மளை அரட்டுற மாதிரியே, எல்லார்கிட்டேயும் அதட்டிக்கிட்டு திரிஞ்சால் வேலைக்கு ஆகுமா? இந்த மனுஷனுக்கு இதுவும் வேணும். இன்னுமும் வேணும். அந்தப் புள்ளையே, எம்புட்டு வருஷஞ்செண்டு வந்திருக்கு, அவள்கிட்டே போய், வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறார்.!” என அவர் காதுபடவே அரசி புலம்ப,
“எல்லாம் உன்னால் தான் டி! தகுதி, தராதரம் பார்க்காமல், என்னமோ உடம் பொறந்த தம்பி மாதிரி, என் மயனுக்குதேன் உன் மவளைக் கட்டுவேன்னு உளறிட்டு வந்திருக்கிறே? நீதேன் எல்லாத்துக்கும் காரணம்.!” எனக் கோபமாய் மனைவியைக் குற்றம் சாட்டினார் கதிர்வேல்.
“ம்க்கும்! ஆமா! நான்தேன் காரணம்! இப்போ என்னங்குறீங்க? இப்போ மட்டுமே நான் இதை செய்யாமல் விட்டேன்னா, எனக்குன்னு இருக்கிற ஒத்தை சொந்தமும் ஒண்ணுமில்லாமல் விட்டுப் போயிரும். அதனால், என் தம்பி மவதேன், இந்த வீட்டு மருமவ..!” என உறுதியாய் சொன்னார் அரசி.
“பெரிய மங்கம்மா மாதிரி சபதம் போடுறீகளோ? நானும் பார்க்கிறேன், என் மயன் கையால் தாலி வாங்கிட்டு, அவள் எப்படி இந்த வீட்டிற்குள் நுழையறாள்ன்னு பார்க்கிறேன்.! கருவிழி விஷேஷம் மட்டும் இல்லைன்னு வையி.. அவள் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வச்சப்போவே விரட்டி விட்டிருப்பேன்.” எனக் கதிர்வேல் சொல்ல,
“இன்னும், அந்த காலத்து ஆள் மாதிரியே யோசிக்காதீங்க! நம்ம பிள்ளையோட சந்தோஷம் எதுன்னு யோசிங்க! நீங்க வேற எந்தப் பொண்ணைப் பார்த்தாலும், அவன் தாலி கட்ட மாட்டான். ஏற்கனவே கல்யாணம் நின்னு போய், உடைஞ்சு உட்கார்ந்திருந்த என் மயன் முகத்தில், காணாமல் போன சிரிப்பை திரும்பவும் பார்க்க முடியுதுன்னா, அதற்குக் காரணம் அந்தப் பொண்ணுதேன். நம்ம புள்ளைக்கு நீங்க அப்பாங்க! வில்லன் இல்லைங்க! அதை முதலில் மனசில் வச்சிக்கோங்க!” எனச் சொல்லிவிட்டு அரசி அடுக்களைக்குள் நுழைந்துக் கொள்ள, மனைவி சொன்னவற்றை யோசித்தபடியே நின்றிருந்நதார் கதிர்வேல்.
*******
“என்னத்துக்கு மயிலம்மா, இப்படி பேசினே? அப்பா ரொம்ப சங்கடாப்பட்டுருப்பாக! என்ன நினைச்சாகளோ தெரியலையே? முதல் முதலில் உம் மேலே எதிர்மறையான அபிப்ராயம் விழுந்துடக் கூடாதுன்னுதேன் நான் அமைதியாய் இருந்தேன். நீ என்னத்துக்கு அவசரப்பட்டு பேசினே மயிலம்மா?” கொஞ்சம் நிதானமாகவே கேட்டான் வீரபத்ரன்.
“அங்கண உங்க அப்பாரு பேசினது என்னைப் பற்றி தானே? அப்போ நான் பதில் சொல்லித்தானே ஆகணும்? நான் உன்னை மயக்கிப்புட்டேன்னு சொல்றாரு.. நான் மயக்க நினைக்கிற அளவிற்கு நீ மன்மதனா என்ன? நான் உன்னை அம்மாபட்டிக்கு வரச் சொன்னேனா? இல்லை என் பின்னாடியே திரியச் சொன்னேனா? என்னமோ நான் திட்டம் போட்டு ஏமாத்தின மாதிரி பேசுறாரு? இந்தாரு வீரா.. என்னைப் பத்தி பேசினால், அதற்கான பதிலை நான் சொல்லத்தான் செய்வேன். உங்க அப்பாரு உன்னை என்னமும் சொல்லிக்கட்டும், திட்டட்டும், ரெண்டு அடி கூட அடிச்சுக்கட்டும். அது உங்க அப்பா பிள்ளைக்கு நடுவே இருக்கிறது. அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால், என்னை எதாவது பேசினால், என்னை விட்டுக் கொடுத்துடாதே வீரா. நானும் எங்க வீட்டில் எதாவது பேசினால் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் புரியுதா?” என அவள் சொல்ல, திருதிருவென புரியாமல் விழித்தான் வீரபத்ரன்.
“இப்போ என்னத்துக்கு இந்த முழி முழிக்கிறே?”
“இல்லை.. அது வந்து.. நீ பேசினதைப் பார்த்து ஒருவேளை நமக்கு கல்யாணம் ஆகிட்ட மாதிரி ஃபீல் வந்துடுச்சு. ஆனால் ஒண்ணு மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை மயிலம்மா.. என்னைப் பெத்தவரு சொன்ன மாதிரி, நீ என்னை மயக்கித்தேன் வச்சிருக்கிறே!” என அவன் சொன்னதைக் கேட்டதும், சட்டென அவளை அறியாமலே நாணத்தில் முகம் சிவக்க, அவன் தோளில் மெல்லமாய் அடித்தவள்,
“லூசு..!” எனச் சொன்னபடியே முன்னோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
“இப்படியே வெட்கப் பட்டுக்கிட்டே பொடி நடையாய் போய்டலாம்ன்னு எண்ணமா? வந்து வண்டியில் ஏறு மயிலம்மா!” என அவன் சொல்ல,
“உன்னைப் பார்த்து வெட்கம் வேற வருதாக்கும்?” எனக் கேட்டபடியே, அவன் கிளப்பி தயாராய் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் பின் ஏறி அமர்ந்தாள் மேகவர்ணா.
“நீ இல்லைன்னு மறுத்தாலும், உன் வெட்கம் ரொம்ப அழகா இருக்குது மயிலம்மா!” என அவன் சொன்னதைக் காதில் வாங்காதது போல், அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாலும், அவளின் கள்ளத்தனமான சிரிப்பு, பக்கவாட்டுக் கண்ணாடி வழியாய் இவன் கண்களில் விழுந்தது. அவளின் சிரிப்பை வைத்தே அவள் மனதைப் புரிந்துக் கொண்டவன், புன்னகையுடனே வாகனத்தைக் கிளப்பினான்.
அவள் முகத்தில் விரியும் புன்னகை இவன் மனதிற்குள் என்னவோ செய்தது. கண்ணுக்கே தெரியாத புன்னகையாய் இருந்தாலும், தன் அருகில் அவள் சந்தோஷமாய் இருக்கிறாள் என்ற உணர்வே அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
“நாம எங்கே போறோம்?” சிலபல நிமிடங்கள் கடந்தபின் அவன் தோளில் தட்டி கேள்வி கேட்டாள் மேகவர்ணா.
“உனக்குப் பிடிச்ச இடத்திற்கு..!”
“அதைத்தான் எங்கேன்னு கேட்டேன்.!”
“நாம போனதும் தெரிஞ்சுடும் மயிலம்மா..!”
“அப்படி என்ன சொர்க்கத்திற்கா கூட்டிட்டு போகப் போற? காடு கரையைச் சுத்திக் காட்டுறதுக்கு இம்புட்டு பில்ட்-அப் வேற!” என அவள் சலித்துக் கொள்வதற்கும் வாகனம் நிற்கவும் சரியாய் இருந்தது.
வாகனம் நின்றதும், மெதுவாய் இறங்கி, சுற்றிலும் பார்வையை திருப்பியவளின், கண்கள் அகலமாய் விரிந்துக் கொண்டது. எங்கே பார்த்தாலும் பச்சை பசேலென பார்வைக்கு குளிர்ச்சியாய் இருக்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திராட்சைகள் கொத்துக் கொத்தாய் தொங்கிக் கொண்டிருந்தது. கருஞ்சிவப்பும், கருநீலமும் பச்சையுமாய் எந்தப் பக்கம் திரும்பினாலும், திராட்சைப் பந்தல் மட்டுமே அவள் கண்ணில் பட்டது.
“எம்புட்டு அழகா இருக்கு தெரியுமா? நான் இம்புட்டு திராட்சை பந்தலையும் ஒட்டுக்கா பார்த்ததே இல்லை. உள்ளே போய் பார்க்கலாமா?” எனக் கேட்டவள், அவன் அனுமதிக்கும் முன்னமே, திராட்சை பந்தலுக்குள் இறங்கி நடக்கத் துவங்கியிருந்தாள்.
சரியாய் ஐந்திலிருந்து, ஐந்தரையடி உயரத்திற்கு கம்பியில் பந்தல் அமைக்கப்பட்டு, கொடிகள் படர்ந்திருக்க, கொத்துக் கொத்தாய் திராட்சைகள் கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
“வீரா.. எனக்கு வேணும்ன்னா பறிச்சுக்கலாம் தானே?” எனச் சத்தமாய் கேட்டாள் மேகவர்ணா.
“பறிச்சுக்கோ மயிலம்மா!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அடேய்.. அரசி மயனே..! என்னடா இந்தப்பக்கம்.? அந்தப் புள்ளையையும் இழுத்துக்கிட்டு, ஊரைச் சுத்தக் கிளம்பிட்டியாக்கும்?” எனக் கேட்டபடியே வந்து நின்றான் காத்தவராயன்.
“அம்மா எங்கனையாவது கூட்டிப் போகச் சொன்னாங்க காக்காவிரட்டி! உனக்குதேன் தெரியுமே.. எனக்குப் பிடிச்ச இடம் இதுதேன்னு..!” எனச் சொன்னான் வீரபத்ரன்.
“அதேன் எனக்கு தெரியுமே.. நீதேன் பந்தல் கட்டும் வரை கூட பொறுக்க மாட்டியே.. பொழுதுக்கும் இங்கணையே தானே அலைவே.. சரி, அதெல்லாம் இருக்கட்டும், நம்ம வீடு இங்கணதேன். வந்துட்டுப் போங்க ரெண்டுபேரும்!”
“எம்மா தங்கச்சி, வீட்டுக்கு வந்துட்டு போம்மா!” என மேகவர்ணாவையும் சேர்த்தே அழைத்தான் காத்தவராயன்.
“என்ன ரெண்டு பேரும், அமைதியாய் இருக்கீங்க! வந்துட்டுதேன் போவணும். கயலு கூட, நான் வந்துருக்கேன்னு உங்க வீட்டுக்குப் போகாமல்தேன் இருக்கா! வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டுருவோம் வாங்க!” என காத்தவராயன் வலுக்கட்டாயமாய் அழைத்த போதும்,
“இல்லை, காக்காவிரட்டி! இப்போதேன் உன் தங்கச்சியைக் கூட்டிட்டு வெளியவே எட்டி பார்த்திருக்கிறேன். இன்னும் சுத்திக்காட்ட நிறைய இருக்கு. இன்னொரு நாள் நாங்க சேர்ந்தே வாரோம்!” எனச் சொன்னவன் மேகவர்ணாவை அழைத்துக் கொண்டு தடந்தான்.
நன்கு கனிந்திருந்த திராட்சைப்பழக் கொத்தை பறித்து அவள் கையில் கொடுத்தவன், பந்தல் தலையில் இடிக்காத வண்ணம் குனிந்தே நடந்தான்.
“கழுவிட்டு பிறகு சாப்பிடு மயிலம்மா! நம்ம பயிரிட்ட பன்னீர் திராட்சைதேன், இனிப்பு தேனாட்டம் இருக்கும்.!” என அவன் சொல்ல,
“அவங்க வீட்டுக்குப் போய்ட்டே வந்திருக்கலாமே.. ஏன் அவசரமா வேணாம்ன்னு சொன்னே?” அவன் ஒன்றை சொல்ல, இவளோ வேறொன்றைக் கேட்டாள்.
“புரியாத மாதிரி நடிக்கிறியே மயிலம்மா! இம்புட்டு நாளும், ஃபோட்டோ பிடிக்கன்னு என்னோட சுத்தி திரிஞ்சுட்டு இப்போதேன் பொண்டாட்டியைப் பார்க்க வந்திருக்காரு! அவிங்களைப் போய் தொந்தரவு பண்ணச் சொல்லுறியாக்கும்?!”என பதில் சொன்னான் வீரபத்ரன்.
“நான் கூட, உன்னை என்னமோ நினைச்சேன். ஆனால், உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு!” என்றபடியே நடந்தவள், அருகில் கிணற்றிலிருந்து, தொட்டியில் பாய்ந்துக் கொண்டிருந்த நீரில், திராட்சைப் பழங்களை கழுவி உண்டபடியே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஆனாலும் உனக்கு ஏத்தம்தேன் மயிலம்மா! இது கூட தெரியாத கூமுட்டையாகவா இருப்பாய்ங்க?”
“உன்னைக் கூமுட்டைன்னுதேன் நான் நினைச்சேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீரபத்ரனின் செல்பேசி செல்லமாய் சிணுங்கியது.
அலைபேசியை சட்டைப் பையிலிருந்து எடுத்து, யாரழைப்பது என நோக்கியவன்,
“உங்க அப்பாதேன் மயிலம்மா! என்னத்துக்கு எனக்கு ஃபோன் போடுறாரு? உன் ஃபோன் எங்கே?!” எனக் கேட்டபடியே அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
“அச்சோ! உங்க வீட்டில் ஃபோனை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்!” எனச் சொன்னவள் அழைப்பை ஏற்று பேசத் துவங்கினாள்.
“ப்பா.. எப்படி இருக்கீக? சாப்பிட்டீகளா? மருந்து மாத்திரையெல்லாம் போட்டீக தானே?” என அக்கறையாய் வினவினாள் மேகவர்ணா.
“நல்லா இருக்கேன் மயிலு! நீ எப்படி ராசாத்தி இருக்கே? நீ போனதினால் அங்கண ஒண்ணும், தகறாரு எதுவும் இல்லையே?”
“இல்லைப்பா! எல்லாத்தையும் அரசி அத்தையே சமாளிச்சுட்டாக! மாமா மட்டுந்தேன் பார்க்கிற நேரமெல்லாம் எரிஞ்சு விழறாக!”
“உங்க அத்தையை நம்பித்தானே, இம்புட்டு தூரம் உன்னை அனுப்பி வச்சிருக்கேன். அதெல்லாம் அவள் பார்த்துப்பா!”
“அதெல்லாம் விடுங்கப்பா! அண்ணேங்களுக்கு தெரிஞ்சுபோச்சுன்னு காக்காவிரட்டி அண்ணே சொன்னிச்சு. அண்ணேங்க என்ன சொன்னாய்ங்க! நான் பாட்டுக்கு இங்கண வந்துட்டேன். மனசு படபடன்னு கிடக்கு.!” வருத்தமான குரலில் சொன்னாள் மேகவர்ணா.
“நான்தேன் உன் அண்ணேங்களை நிறுத்தி வச்சிருக்கேன் மயிலு! எப்படியும் விஷேஷத்திற்கு அங்கண வந்துருவாய்ங்கன்னு நினைக்கிறேன். அங்கண வந்து என்ன ஏழரையை இழுக்கப் போறானுகளோ? உன்னைய நல்லபடியா கரையேத்திடனும்னு நினைக்கிறேன். அது இந்த பயலுகளுக்கு புரிய மாட்டேங்குது.!”
“என்னைய கரையேத்தணும்ன்னு நீங்க ஊடால இருக்கிற பசுபதியை மறந்துட்டீங்கப்பா!” என அவள் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், நாச்சியப்பனின் பின்னால் இருந்து கருப்பன் அலறும் சத்தம் தெளிவாக இவள் செவிகளில் விழுந்தது.
“அப்பா! கருப்பன் என்னத்துக்கு கத்துறான். அவன் குரலே சரியில்லையே? என்னாச்சுப்பா அவனுக்கு?” பதற்றமாய் நடுக்கத்துடன் வெளிப்ட்டது அவள் குரல்.
“ஒண்ணும் இல்லை மயிலு! நீ விஷேஷத்தை முடிச்சுப்புட்டு பொறுமையாய் வா! நான் வைக்கட்டுமா?” அவசரமாய், அவர் இணைப்பைத் துண்டிக்க முயல்வது அப்பட்டமாய் தெரிந்தது.
“அப்பா! வைக்காதீங்க! கருப்பன் என்னத்துக்கு கத்துறான். இப்போ மட்டும் நீங்க சொல்லலை, விஷேஷம் கிடக்கட்டும்ன்னு கிளம்பி வந்துருவேன் பார்த்துக்கோங்க!” நிச்சயமாய் செய்து முடிக்கும் தோரணையுடன் உறுதியாய் சொன்னாள் மேகவர்ணா.
“நான்தேன் ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல்ல மயிலு! அவனுக்கு என்ன? அவன் பொழுதுக்கும் கத்திக்கிட்டேதேன் கிடப்பான்.!” அவர் மீண்டும் சமாளிக்க முயல, இங்கே மேகவர்ணாவின் விழிகளில் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.
“இந்தாரு மயிலம்மா! என்னத்துக்கு அழறே? உன் கருப்பனுக்கு ஒண்ணும் ஆகாது. கருப்பனுக்கு என்னதேன் ஆச்சுன்னு சொல்லுங்களேன் மாமா..?” அவசரமாய் இடையிட்டு கேட்டான் வீரபத்ரன்.
“என் கருப்பனுக்கு என்னமோ ஆகிருச்சு, அவன் குரலே வேற மாதிரி இருக்கு. ஏன்ம்ப்பா என்கிட்டே மறைக்கிறீங்க?” அழுகைக் குரலில் மேகவர்ணா கேட்கவும், நீரிலிட்ட கல்லுப்பாய் கரைந்து போனது பெற்றவர் மனது.
“ஒண்ணுமில்லைத்தா! நீ இல்லாமல், ஆகாரம் தண்ணி இல்லாமல் கிடக்கான்மா! நானும் உன் அண்ணேங்களும் எம்புட்டோ சமாதானப் படுத்திப் பார்த்துட்டோம், பிடிவாதமாய் ஒத்தை வாய் தண்ணீ குடிக்க மாட்டேங்குறான். இப்போ என்ன செய்றதுன்னு தெரியலை. விஷேஷத்திற்கு உன்னை அனுப்பி வச்சிட்டு, பாதியில் கூப்பிடவும் மனசு வரலை. ரோசனை பண்ணாமல் அனுப்பிட்டோமோன்னு சங்கடமா கிடக்கு ராசாத்தி!” என அவர் சொல்ல, ஒட்டுமொத்தமாய் உடைந்து அழத் துவங்கியிருந்தாள் மேகவர்ணா.
“நான்தேன் கொஞ்சம் கூட ரோசனை பண்ணாமல் இங்கண வந்துட்டேன் வீரா! எனக்கு இப்போ என்ன செய்றதுன்னு தெரியலை. என் கருப்பன் நான் இல்லாமல் சாப்பிடாமல் கிடக்கான். நான்தேன் தப்புப் பண்ணிட்டேன். பசுபதி வந்து என்னைக் கொன்னா கொன்னுட்டு போவட்டும்ன்னு அங்கணையே கிடந்திருக்கனும்.!” அப்படியே மடங்கி அமர்ந்து அவள் அழத் துவங்க, செய்வது அறியாது புரியாமல் நின்றான் வீரபத்ரன்.
“மயிலு! ராசாத்தி! இதுக்குதேன் உன்கிட்டே சொல்லியிருக்கக் கூடாது. நானும் அண்ணேங்களும் பார்த்துக்கிறோம். நீ விசனப் படாத ராசாத்தி!” என்ற நாச்சியப்பனின் குரல் அலைபேசி வழியே கேட்டுக் கொண்டே இருக்க,
“நான் பார்த்துக்கிறேன் மாமா! நீங்க மேகாவைப் பற்றி கவலைப் படாதீங்க..!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவன், தரையில் மடங்கி அமர்ந்திருந்த மேகவர்ணாவின் கரம் பற்றி எழுப்பினான்.
“இந்தாரு மயிலம்மா! இப்போ என்னத்துக்கு அழறே! உன் கருப்பனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ என்னை நம்புறியா? இல்லையா?!” என அவள் விழிபார்த்துக் கேள்வி கேட்டான் வீரபத்ரன்.
“நான் பண்ணினது தப்பு தானே வீரா? நான் ஏன் உன் கூட உன்னை நம்பி வந்தேன்? எனக்கு ஏன் உன்னைப் பிடிச்சது? நான் உன்னைப் பார்த்திருக்கவே கூடாது. நான் உன் வீட்டுக்கு வந்து இருக்கவே கூடாது. என் அண்ணேங்களையும், என்னைப் பெத்தவரையும், முக்கியமா என் கருப்பனையும் விட்டுட்டு வர முடியாது வீரா. இந்த சமூதாயம் உருவாக்கி வச்ச சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, என்னால், உன் வீட்டுக்கு வர முடியாது. நான் உனக்கு வேணாம் வீரா! நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. நானே என் வீட்டை விட்டு வரத் தயாராய் இல்லாதப்போ, உன்னை என் வீட்டுக்கு வந்துடுன்னு கூப்பிடுறது தப்புத்தானே? வேணாம்! எதுவும் வேணாம்! நான் போறேன்.. நான் என் வீட்டுக்கே போறேன்..!” கருப்பனின் உருவம் மட்டும் கண்முன்னே வந்து நிற்க, தன்போக்கில் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருந்தாள் மேகவர்ணா. இத்தனை நாளாய் தைரியமானப் பெண்ணாய் அவன் கண்களுக்குத் தெரிந்தவள், சட்டென உடைந்து அழுவதைப் பார்க்க முடியாமல்,
“இப்போ என்னத்துக்கு லூசு மாதிரி பேசுற மயிலம்மா? இந்த உலகத்தில் சரி செய்ய முடியாத பிரச்சனைன்னு எதுவுமே இல்லை!” என அவன் சொன்னது அவள் செவிகளில் விழுந்தாலும் கூட, அவள் சிந்தையில் பதியவே இல்லை.
எங்கோ பார்த்தபடி, ஏதோ யோசனையில் இருந்தவளின், முகத்தை தன் இரு கரத்தால் பற்றி, தன்னைப் பார்க்க வைத்தவன்,
“இங்கே பாருடி! என்னை நம்பறீயா? இல்லையா?”
என மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். தலையாட்டி பொம்மையைப் போல், அவள் தலை அவளறியாமலே அசைய, இதழோரம் துளிர்த்த சின்ன புன்னகையுடன்,
“இந்த அய்த்த மயனையும் கொஞ்சம் நம்பு மயிலம்மா!” எனச் சொன்னவன், அவளின் ஈர இதழ்களில் தன் உதடுகளை அழுத்தமாய்ப் பொருத்தியிருந்தான்.
தித்திக்கும் 🔥
இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும் டியர்ஸ்..

