Loading

திமிர்-18

 

 

அந்தக் குளம்பியகத்தில் எங்கோ பார்த்து அமர்ந்தபடி, தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள் மேகவர்ணா. அவள் முகத்தில் இருந்த வாட்டமே அவள் மனக் கலக்கத்தை தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது.

 

 

 

 

“இந்தாரு மயிலம்மா! டீ தானே குடிக்கிறே? என்னமோ விஷத்தைக் குடிக்கிற மாதிரி மூஞ்சியை வச்சிக்கிறே?!” என அவளைப் பார்த்துக் கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

“ம்க்கும்! என்னைப் பெத்தவரு சொன்னாருன்னு, எதையுமே யோசிக்காமல் உன் பின்னால் கிளம்பி வந்துட்டேன். அங்கிட்டு என்ன தகராறு நடந்துச்சோ.. ஒண்ணும் தெரியலை. என் அண்ணேங்க மூணு பேரும், சாமி வந்தது கணக்கா ஆடி தீர்த்திருவாய்ங்க!”

 

 

 

 

“உங்க அப்பாதேன், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார் தானே?”

 

 

 

 

“அவரு நல்லா பார்த்துப்பாரு! என் அண்ணேங்களைப் பத்தி உனக்கு தெரியாது வீரா! நான் உன்கூடத்தேன் போயிருக்கேன்னு தெரிஞ்சுது அம்புட்டுதேன்.!”

 

 

 

 

“அதேன்! அன்றைக்கே நீ என்னோட வந்ததுக்கு உங்க அண்ணேங்க ஒண்ணும் சொல்லலையே..!?”

 

 

 

 

“இல்லை வீரா! எனக்கென்னவோ, மனசு படப்படன்னு அடிச்சுக்கிது. ஏதோ அங்கே நடந்திருக்கும்ன்னு தோணுது. ஏதோவொரு வழியில் உண்மை தெரிஞ்சுடுச்சோன்னு தோணுது.!” யோசனையோடு சொன்னபடி, தேநீரை பருகி முடித்துவிட்டு, கண்ணாடி கோப்பையை மேஜையின் மீது வைத்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது மேகா! என்னத்தையாவது மனசில் போட்டு உழப்பிக்காதே! அப்படி ஏதானும் நடந்திருந்தால், காக்காவிரட்டி சொல்லியிருப்பானே? இப்போ கொஞ்சம் முன்னே தானே அவனுக்கு ஃபோன் போட்டேன்.!” என அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் வீரபத்ரன்.

 

 

 

 

அவன் சொன்னதை அவள் ஏற்காவிட்டாலும் கூட, ஏனோ அவனின் மேகா என்ற பிரத்யோக அழைப்பு, அவளைக் கொஞ்சம் இதமாய் உணர வைத்தது. 

 

 

 

 

“நீ சொல்றதெல்லாம் சரித்தேன்! ஏதாச்சும் நடந்திருந்தால் தெரிஞ்சிருக்கும்தேன். ஆனாலும் பயமா இருக்கு. இன்னொரு பக்கம் இந்த பசுபதிக்குப் பயந்து, உன்னோட ஓடி வந்துட்டேனோன்னு தோணுது.!”

 

 

 

 

“இந்தாரு மயிலம்மா! நீ ஒண்ணும் என்னோட ஓடி வரலை! உன்னைப் பெத்தவரு சம்மதத்தோடதேன் என்னோட வந்திருக்கே! அதை முதலில் நெனைப்பில் வச்சிக்கோ!”

 

 

 

 

“ஆமா! இதை நான் வேற ஞாபகம் வச்சிக்கணுமாக்கும்? நீதேன் எங்க அப்பனுக்கு, இல்லாத பூச்சாண்டியெல்லாம் காட்டி, என்னைக் கூட்டிட்டு வந்துட்டே!” என யோசனையோடே சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

“நான் என்ன பூச்சாண்டி காட்டினேன் மயிலம்மா! நீதேன் எனக்கு பூச்சாண்டி காட்டுறே! விருப்பமும், நம்பிக்கையும் இல்லாமல்தேன் என்னோட வந்தியாக்கும்.?” எனக் கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

“ம்க்கும்! நீதேன், அந்த பசுபதி அங்கே நிற்கிறியான், இங்கே நிற்கிறியான்னு, உன் குட்டி விமானத்தைப் பறக்க விட்டு, சீன் காமிச்சு எங்க அப்பனை பயமுறுத்திட்டே!”

 

 

 

 

“ஆமா! ஆமா! நான் சொன்னதும், உங்க அப்பன் பயந்துருவாராக்கும்? அவர் என்ன பச்சைப் புள்ளையா?” என வீரபத்ரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மேகவர்ணாவின் கவனம் வேறெங்கோ இருப்பதை, உணர்ந்து, அவள் பார்வை சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தான் வீரபத்ரன். 

 

 

 

 

 

“யாரை இப்படி பார்க்கிற மயிலம்மா?” என்ற படியே, சுற்றும் முற்றும் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

 

“பசுபதி!” என தொலைவில் வரும் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னவள், அந்தக் கடையின் பக்கவாட்டில் இருந்த மறைவின் பின், வீரபத்ரனையும் இழுத்துக் கொண்டு நின்றுக் கொண்டாள்.

 

 

 

 

“என்னத்துக்கு இப்படி பயந்து, பயந்து ஒளியணும்? அவன் என்னத்துக்கு உன்னிய விரட்டுறான்னு அவன் கிட்டேயே கேட்டுடலாம்!” சிறிய சந்து போன்ற இடத்தில், நெருக்கமாய் நின்றிருந்த வண்ணம் மேகவர்ணாவிடம் கேட்ட வீரபத்ரனின் மூச்சுக்காற்று, எதிரே நின்றிருந்தவளின் முகத்தில் பட்டுத் தெறித்தது.

 

 

 

 

“நாம பேசினால் புரிஞ்சுக்கிற ரகம் பசுபதி இல்லை! அவனைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாது வீரா!” மிக நெருக்கத்தில் நின்றிருந்த அவன் மீது பார்வையைத் திருப்ப சங்கடப்பட்டவளாய், எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

 

“எனக்கு தெரியாது, தெரியாதுன்னு இப்படி நீயும் உங்க அப்பனும், ஒண்ணுமே சொல்லாமல் திரிஞ்சீங்கன்னா எனக்கு எப்படிடி தெரியும்? அந்த மொட்டைத் தலையன் யாருன்னு எனக்குத் தெரியாது. அவன் என்னத்துக்கு உன்னை துரத்துறான் அதுவும் எனக்கு தெரியாது. நீ என்னத்துக்கு அந்தப் பரதேசியைப் பார்த்து பயப்படுறே? எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், அந்த நெருப்புகோழி முட்டை மாதிரி, தலையை வச்சிருக்கிற மொட்டைத் தலையனால், உனக்கு ஏதோ ஆபத்துன்னு மட்டும், என் சிற்றறிவுக்கு புரியுது.!” எரிச்சல் மேலோங்கியக் குரலில் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

 

“தெரிஞ்சால் மட்டும், நீ என்ன பண்ண போற வீரா? உன்னால் என்ன பண்ணிட முடியும்? உன்னால் எதுவுமே முடியாது. எங்க கருப்பன் கிட்டே மல்லுக்கட்டவே உனக்கு தைரியம் இல்லை. இதில் நீ, அந்த பசுபதியோட மோதப் போறியாக்கும்?!”என அவள் நக்கலாய் சொல்ல,

 

 

 

 

 

“நான், அவனோட நேரடியாய் மோதுறேன், இல்லை அவன் கையால் அடிபட்டு சாகறேன். என்னமோ நடக்கட்டும். என்னால் எதுவும் பண்ண முடியாதுன்னு நீ எப்படி சொல்லலாம்?” எனக் குரலுயர்த்தி கோபமாய் பேசிய வீரபத்ரன் அவளுக்குப் புதிதாய் தெரிந்தான்.

 

 

 

 

 

“அப்படி சொல்லலை வீரா.. இது உனக்கு சம்மந்தமில்லாத பிரச்சனை. இதில் நீ ஊடால வராதே! பசுபதி போய்ட்டான்னு நினைக்கிறேன். வா, கிளம்பலாம்!” எனச் சொல்லிவிட்டு நகரப் போனவளைக் கரம் பற்றி இழுத்து நிறுத்தினான் வீரபத்ரன்.

 

 

 

 

 

 

“கையை விடு வீரா! வா, கிளம்புவோம்!” என அவள் சொன்னபோதும் கூட, அவனிடம் துளி மாற்றமில்லை.

 

 

 

 

 

“எனக்கு அவன் யாருன்னு தெரியணும். அவன் யாருன்னு சொல்லு, அப்பறம் புறப்படலாம். உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!” அவள் கரத்தினைப் பிடித்தப் பிடியைத் தளர்த்தாமல், அவள் விழிகளுக்குள் ஊடுருவி கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

“வீரா..!” என்ற அவளின் சங்கடமான அழைப்பு கூட, அவனைத் துளியும் அசைக்கவில்லை.

 

 

 

 

 

“சும்மா, பசுபதி, பசுபதின்னு சின்னப் பிள்ளைக்கு பூச்சாண்டி காட்டுற மாதிரி காட்டாதே டி! எனக்கு அவன் யாருன்னு தெரியணும்! அவன் அப்படி என்ன செஞ்சுட்டான்னு இப்படி குடும்பமே பயந்து சாவறீங்க?” அவள் அச்சப்படுவதன் காரணம் புரியாமல் கேட்டான் அவன்.

 

 

 

 

“ம்க்கும், கொலையைப் பண்ணிப்புட்டு, ஜெயிலுக்குள்ளே போய்ட்டு அங்கிருந்து தப்பிச்சு வந்தவனைப் பார்த்து பயப்படாமல், எதிரில் நின்னு நலமா விசாரிப்பாங்க? லூசு மாதிரி பேசிக்கிட்டு..!” என மேகவர்ணா வாய்க்குள் முனகினாலும், அது வீரபத்ரனின் செவிகளுக்குள் தெளிவாகவே விழுந்தது.

 

 

 

 

 

“என்ன மயிலம்மா சொல்ற?” அதிர்வாய்க் கேட்டவனின் கரம், தன்னால் அவள் கரத்தினை விட்டது.

 

 

 

 

“ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொல்றேன். நீ இப்படித்தேன் பயப்படுவன்னு எனக்குத் தெரியும். அதுக்குத்தேன் உன்கிட்டே சொல்லாமல் இருந்தேன்.!” சர்வ சாதாரணமாய் சொன்னாள் அவள்.

 

 

 

 

“அடியேய்.. எம் மாமன் மவளே.. அப்படி என்ன பஞ்சாயத்தைக் குடும்பமே இழுத்து வச்சிருக்கீங்க? ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தவன் விரட்டுற அளவுக்கு அப்படி என்னடி பண்ணித் தொலைச்சீங்க? குடும்பமே ஒட்டுக்கா சேர்ந்து முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளே மறைச்சுப்புட்டீங்களே டி?”

 

 

 

“ம்க்கும்! இவரு பெரிய மன்மதன்.

 உண்மையைச் சொல்லாமல் மறைச்சு, நாங்க மயக்கிப்புட்டோமாக்கும்.? எங்க குடும்பத்துக்கும், பசுபதிக்கும் பஞ்சாயத்துன்னு, ஒட்டுமொத்த ஊருக்குமே தெரியும். உனக்குத் தெரியலைன்னா நான் என்ன செய்யட்டும்? இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நான் பஸ் ஏறி, அம்மாபட்டிக்கு போயிருவேன். நீ மருதைக்குப் போய்ச் சேரும் வழியைப் பாரு!” எனச் சொன்னவளின் குரலில் இருந்த ஏமாற்றத்தையும், பயத்தையும், வீரபத்ரனால் உணர முடிந்தது.

 

 

 

 

“இந்தாரு மயிலம்மா! அப்படியெல்லாம் லேசில் விட முடியாது. என் தலை போற பிரச்சனையாய் இருந்தாலும் கூட, பிடிச்ச கையை விட மாட்டேன் மயிலாம்மா!” அவள் விழி பார்த்துச் சொன்னவன், மீண்டும் அவள் கரத்தினை இழுத்து தன் கரத்தினுள் பொதிந்துக் கொண்டான்.

 

 

 

 

“இப்போ கொஞ்சம் முன்னால்தேன் கையை விட்டே? இப்படி டைலாக்கெல்லாம் பேசி, டைரக்டருன்னு அடிக்கடி நிரூபிக்கிறியாக்கும்?” எனக் கேட்டபடியே, மறைவான இடத்திலிருந்து அவனுடன் வெளியே வந்தாள் மேகவர்ணா.

 

 

 

 

அவள் சொன்னதில், சிரித்துக் கொண்டவன்,.

 

 

 

 

“இந்த வாய் மட்டும் இல்லைன்னா அம்புட்டுதேன்! ஒருவேளை உன் அண்ணேங்க, என்னைக் கட்டிக்க சம்மதிக்கலைன்னா என்ன செய்வ மயிலம்மா!” இயல்பான பேச்சின் நடுவே, அவள் மனதை அறிந்துக் கொள்வதற்காய் கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

 

“இப்போ வரைக்கும், எனக்காக கல்யாணம் பண்ணிக்காமல், கட்டை பிரம்மச்சாரியா திரியிற என் அண்ணேங்க பேச்சை மீறி உன்னைக் கட்டுறது கொஞ்சம் இல்லை, ரொம்பவே கஷ்டம்தேன். ஆனாலும் உன் மச்சாய்ங்களை சமாளிக்கத்தேன் நீ இருக்கியே? வீரபத்ரன் இருக்க எனக்கென்ன கவலை?” எனச் சொன்னவள், தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

 

 

 

 

“சேதாரம் ரொம்ப அதிகமா இருக்கும் போல தெரியுதே..? உன் அண்ணேங்க மூணு பேரும் சமாளிக்கக் கூடிய ஆளா? நினைச்சாலே பயந்து வருது மயிலம்மா!”

 

 

 

 

 

“செய்கூலி, சேதாரமில்லாமல், தங்கம் வாங்க முடியுமா? அப்படித்தேன் இதுவும். பொண்ணு வேணும்ன்னா, மச்சானுங்கக் கிட்டே அடியும் வாங்கணும். தேவைப்பட்டால் மாட்டையும் அடக்கணும். பொண்ணைப் பெத்தவிங்க இந்தா வச்சிக்கோன்னு தூக்கி கொடுத்துருவாய்ங்களா? இத்தனை வருஷமா சீராட்டி வளர்த்தவிங்களை விட்டுப்புட்டு நாங்களும் அம்புட்டு லேசில் வந்துட மாட்டோம். மனசில் வச்சிக்கோ. இப்போ என்னைப் பெத்தவரு, உனக்குக் கட்டி வைக்க சம்மதம்ன்னு சொல்லிட்டாரு. அந்த ஒரே காரணத்திற்காகதேன் நான் உன்னோட இருக்கேன். ஒருவேளை அவரு வேணாம்ன்னு சொல்லிருந்தாருன்னு வையி, எனக்கு உன்னைப் பிடிச்சே இருந்தாலும், நான் உன்னை திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன்.!” என அவள் சொன்னதும், அதிர்வு தாங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தபடி நின்றான் வீரபத்ரன்.

 

 

 

 

“என்னது மாட்டை அடக்கணுமா? யாரை அந்த அடங்காத பயபுள்ள கருப்பனையா? என்னைப் பார்த்தாலே துள்ளிக் குதிச்சுட்டு முட்ட வர்ரான். அவனை நான் அடக்கணுமா? அவன் என்னைக் குத்தி குடலை உருவாமல் இருந்தால் சரித்தேன்.!”

 

 

 

 

 

“கருப்பன் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டான் வீரா! என் மனசு அவனுக்குப் புரியும். எனக்கு ஆபத்து விளைவிக்கிறவங்க யாருன்னு அவனுக்குத் தெரியும். அவனைப் பொருத்தவரை நீயொரு பச்சைப் புள்ளை. சும்மா உன்கிட்டே விளையாடிப் பார்ப்பான் அம்புட்டுதேன். நான் வளர்த்த என் மூத்த மயன் என் கருப்பன்தேன். தங்கப் பிள்ளை அவன்.! நான் பாட்டுக்கு உன்னோட கிளம்பி வந்துட்டேன். என்ன செய்றானோ தெரியலை!” ஒரு தாயைப் போல், வாஞ்சையாய், பரிவாய், கவலையாய் அவள் பேசுவதையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

 

நாளுக்கு நாள், நாழிகைக்கு நாழிகை, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி, அவள் இன்னும் இன்னும் அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தாள். அழகு என்பது, நிறத்திலோ, உடையிலோ, ஆபரணங்களிலோ இல்லையே.. உடலால் மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிவதை விட, மனதால் அழகாக இருப்பதே சிறந்தது. அந்த வகையில் வீரபத்ரனின் கண்களுக்கு பேரழகியாய் தெரிந்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“நாளுக்கு நாள் உன்மேலே நான் பைத்தியமாகிட்டு இருக்கேன் மயிலம்மா! அப்படி என்னை என்ன தான்டி பண்ணினே? மனுஷனை கிறுக்காக்கி விடுறே!” எனச் சின்ன சிரிப்புடன் அவன் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் சொன்னவன்,

 

 

 

 

“உன்னைப் பார்த்துக் கொஞ்ச நாளுதேன் ஆகுது. நானே உம் மேலே பைத்தியமா சுத்தறேன். என்னை விட சீனியர் அந்த மொட்டைத் தலையன் பசுபதி. அதனால்தேன் உன் பின்னாடியே சுத்துறானோ? என்னவோ?”

 என வீரபத்ரன் எதேச்சையாய் சொல்ல,

 

 

 

 

 

“அது என்னமோ உண்மைதேன்.. நீ எப்படி எனக்கு அய்த்தை மயனோ, அதே மாதிரி, பசுபதி எனக்கு மாமன் மயன்தேன். முன்னெல்லாம் நல்லாத்தேன் இருந்தான். இப்போதேன் இப்படி கிறுக்குப் புடிச்சு சுத்தறான்.!” எனச் சாதாரணமாய் சொல்லிவிட்டு அவள் அவனைத் தாண்டிச் சென்றுவிட்டாள்.

 

 

 

 

‘என்னது அந்த மொட்டைத் தலையன் மயிலம்மாவோட மாமன் மயனா? இதென்னடா புது ட்விஸ்ட்டு.. போட்டி எதுவும் இல்லைன்னு நினைச்சேனே? அப்போ அந்த மொழு மொழு மொட்டை, எனக்குப் போட்டியாகத்தேன் வந்துருக்கானா?’ என யோசித்தபடியே அதிர்ந்து நின்றுவிட்டான் வீரபத்ரன்.

 

 

 

*****

 

 

 

 

“என்ன இம்புட்டு நேரமா கத்திக்கிட்டே கிடந்தாய்ங்க, சட்டுன்னு அமைதியாகிட்டாய்ங்க! என்ன நடக்குது? மழை பெய்ஞ்சு ஓய்ஞ்சு போயிருச்சா? இம்புட்டு நிசப்தமா இருக்கு!” என தனக்குள் புலம்பியபடியே திரும்பிப் பார்த்த காத்தவராயன் அதிர்ந்து நின்றிருந்தான்.

 

 

 

 

“ஆத்தி! மழை பெய்து ஓய்ஞ்சுருச்சுன்னு நினைச்சால், இங்கிட்டு புயலடிக்கப் போகுதே.. இடம், பொருள், ஏவல் எதையும் பார்த்துப் பேசாமல் இப்படி மாட்டிக்கிறோமோ? அடேய் அரசி மயனே.. கட்ட கடைசியில் என் வாயால்தேன் மாட்டியிருக்க டா!” எனப் புலம்பியபடியே எதிரில் நின்றிருந்த போஸ்பாண்டியையும், அவன் சகோதரர்களையும் பார்த்தான் காத்தவராயன்.

 

 

 

 

“அரசி மயனா? என்னடா சொல்றே? கேமிராவைத் தூக்கிட்டு திரியற இந்த வீரா பயதேன் அரசி மயனா? வாயைத் திறந்து சொல்லுடா!” மீண்டும் சட்டையைப் பிடித்து, காத்தவராயனைத் தூக்கியிருந்தான் போஸ்பாண்டி.

 

 

 

 

‘அடேய்! பொசுக்கு பொசுக்குன்னு இப்படி தூக்கி நிறுத்தினால், பயந்து வருது டா! பெரிய இரட்டினத்தோட உச்சியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கே? இது கையா? இல்லை தேக்கு மரக் கட்டையா?’ என தன் மனதிற்குள் புலம்பிய காத்தவராயன்,

 

 

 

 

“சார்! சார்! அப்போ இறக்கி விட்ட மாதிரியே, அலேக்கா இறக்கி தரையில் விட்டுருங்க சார். எனக்கு அரசியும் யாருன்னு தெரியாது. அரசி மயனும் யாருன்னு தெரியாது. தெரியாமல் என்னமோ பயத்தில் உளறிட்டேன் சார். என்னை இறக்கி மட்டும் விட்டுருங்க, ஓடியே மருதைக்குப் போய் சேர்ந்துருவேன்.!” எனக் காத்தவராயன் சொல்ல, எரிப்பதை போல் பார்த்து வைத்தான் போஸ்பாண்டி.

 

 

 

 

“ஐயோ சார், என்னத்துக்கு இப்படி முறைக்கிறீக? அப்படியே கொஞ்சம் இறக்கி விட்டுப்புட்டு, முறைச்சீகன்னா நல்லா இருக்கும்.!” என அவன் சொன்னதைக் கண்டுக்கொள்ளாமல், காத்தவராயனை இறக்கி விட்டான் போஸ்பாண்டி.

 

 

 

 

“ஆத்தாடி! இறக்கி விட்டுட்டாய்ங்க! அப்படியே ஓடிருவோம்! மூணு பேரும், மூணு பக்கம் ரவுண்டு கட்டி நிற்கிறாய்ங்களே.. எந்தப் பக்கம் போனாலும் கேட் போடுவாய்ங்களே.. எப்படி போறது?” என யோசித்தபடியே காத்தவராயன் நிற்க,

 

 

 

 

“பார்த்தீகளா! உங்க உடம் பொறவாத அக்கா மயன் பண்ணியிருக்கிற வேலையை? நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்துக்கிட்டு, நம்ம புள்ளையவே கூட்டிட்டு போயிருக்கான். நீங்க என்னடான்னா, சத்தம் காட்டாமல் நிக்கிறீக?” என நாச்சியப்பனைப் பார்த்து கேட்டான் போஸ்பாண்டி.

 

 

 

 

“அவரை ஏன் கேட்கிறண்ணே.? அவருக்கு தெரிஞ்சால் இப்படியா அதிர்ந்து போய் நிற்கப் போறாரு! இந்தா நிற்கிறானே, இந்தப் பயலைக் கட்டி வச்சு உரிச்சால், எல்லா உண்மையும் தன்னால் வெளியே வந்துரும்!” என முத்துப் பாண்டி கோபமாய், சொல்ல,

 

 

 

 

“முத்து சொல்றதுதேன் சரிண்ணே! இவனைத்தேன் உரிக்கணும். இங்கண என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்குதேன், இவனை மட்டும் விட்டுட்டு போயிருக்கான் அந்த வீரா பய.!” என தன் பங்குக்கு சொன்னான் இராஜபாண்டி.

 

 

 

 

‘ம்க்கும்! மூளைக் கெட்ட முட்டாப் பயலுங்க! ஒண்ணு முறைக்கிறாய்ங்க, இல்லைன்னா என்னை உரிக்கிறதிலேயே குறியாய் இருக்கிறாய்ங்க! இந்த. வீரபத்ரன் குடும்பமும் சரி, இந்த அணகோண்டா குடும்பமும் சரி, எல்லாத்திலேயும் அடிச்சுக்கிறாய்ங்க! ஆனால் நம்மளை வச்சு செய்றதில் மட்டும் சொல்லி வச்ச மாதிரி ஒண்ணு போல இருக்காய்ங்க டா!” எனப் புலம்பிய காத்தவராயன்,

 

 

 

 

“ஏன், உங்க அப்பன், வீரா யாருன்னு தெரியாததால் மட்டுந்தேன் அமைதியாய் இருக்கணுமா? எல்லாம் தெரிஞ்சும் அமைதியாய் இருக்கலாம் தானே?” என காத்தவராயன் சொன்ன அந்த நொடி, அண்ணன் தம்பிகள் மூவரின் பார்வையும்ஒருசேர, ஒரே நேரத்தில் நாச்சியப்பனை நோக்கித் திரும்பியது.

 

 

 

 

 

“அப்பாடா! பார்வையை அந்தப் பக்கம் திருப்பிட்டாய்ங்க! இந்த அணகோண்டா குடும்பத்துக்கிட்டே இருந்து தப்பிக்கிறது ஏம்புட்டு கடுப்பா இருக்கு. அடேய்! எவனும் இந்தப்பக்கம் திரும்பிடாதீங்க! நான் ஓடிப்போய்டுறேன்!” என முனகியபடியே அங்கிருந்து நழுவத் துவங்கியிருந்தான் காத்தவராயன்.

 

 

 

“இந்தக் களவாணி தனத்தில் நீங்களும் கூட்டா? அவன் உங்க அக்கா மயன்னு தெரிஞ்சுதேன், நம்ம பிள்ளையை அவனோட அனுப்பி விட்டீங்களாக்கும்?” எனக் கேட்ட போஸ்பாண்டியின் பார்வை நாச்சியப்பனை ஆழமாய்த் துளைத்தது.

 

 

 

 

 

“நான் சொல்றதைக் கேளுடா போஸூ.. நிலைமை புரியாமல் நீயும் முறைச்சுக்கிட்டு திரியாதே!” என்ற நாச்சியப்பனின் பதிலைக் காதில் வாங்காதவனாக,

 

 

 

 

“தெரிஞ்சுதேன் அனுப்புனீகளான்னு கேட்டேன். நான் வேற எதையும் உங்கக் கிட்டே கேட்கலை! உங்க விளக்கம், வெங்காயமெல்லாம் எனக்கு வேணாம். ஆமாவா.? இல்லையான்னு மட்டும் சொன்னால் போதும்!” அதீத கோபத்தின் விளைவாய் தந்தையையே முறைத்துக் கொண்டு நின்றான் போஸ்பாண்டி.

 

 

 

 

 

“நான்தேன் மயிலை, வீரா கூட அனுப்பி வச்சேன். இப்போ என்னங்குறே?” தன் எதிரில் நின்ற மகனுக்கு இணையாய் குரலை உயர்த்தினார் நாச்சியப்பன்.

 

 

 

 

 

“என்னத்துக்கு இந்த வெளங்காத வேலை? நம்ம வீட்டுப் பொண்ணை எவனோ ஒருத்தன் கூட அனுப்பி வச்சிருக்கீக? இந்த வேலைக்குப் பேர் என்ன தெரியுமா? அவள் விவரமில்லாத சின்னப் புள்ளைன்னு, அவளை ஏமாத்தி அனுப்பி வச்சுட்டீகளோ? உங்க உடம்பொறவா அக்கா குடும்பமெல்லாம் ஒரு குடும்பம்! அம்புட்டு பேரும், ஆதிக்கம் பிடிச்சதுங்க! நம்ம பிள்ளையை அங்கே நிம்மதியாய் இருக்க விடுவாங்கன்னு நினைக்குறீகளா? எந்த தைரியத்தில் மயிலை அங்கே அனுப்புனீக? நீங்க உடம் பொறந்த பொறப்பா நினைச்ச, உங்க அக்காவையே இம்புட்டு வருஷமா, இந்த வீட்டு வாசலை மிதிக்க விடலை. நம்ம பிள்ளை அங்கணப் போய் சீரழியனும்ன்னு நினைக்கிறீகளா?” என போஸ்பாண்டி குரலை உயர்த்த,

 

 

 

 

“சும்மா நிறுத்துடா! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் முன்னே, கொஞ்சமாவது யோசி! பொழுதுக்கும் கோபப்பட்டு, கோபப்பட்டு மூளை மழுங்கிப் போச்சு போல..! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதே போஸூ! உங்கக் கிட்டே கூடச் சொல்லாமல் தங்கச்சியை அனுப்பி வச்சிருக்கேன்னா என்னத்துக்குன்னு யோசிக்க மாட்டியா? கொட்டின வார்த்தைகளை ஒருநாளும் அள்ள முடியாது போஸூ.. வார்த்தையில் கவனம் ரொம்ப அவசியம்.!” என எச்சரிக்கும் தொனியில் பேசினார் நாச்சியப்பன்.

 

 

 

 

“என்னத்துக்கு அனுப்பியிருப்பீக, அத்துப் போன உங்க உறவைப் புதுப்பிக்க, எங்க தங்கச்சியை பகடைக்காயாய் மாத்திட்டீங்க! அதானே உங்க திட்டம்? சரியாய் நாங்க இல்லாத நேரமாய் உங்க திட்டத்தை அரங்கேற்றியிருக்கீங்க! எங்களுக்குத் தெரியாதா, எங்க தங்கச்சிக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையைப் பார்க்கணும்ன்னு. என்னமோ உலகத்திலே அவன் ஒருத்தன்தேன் ஆம்பிள்ளைங்கிற மாதிரி, அவன் பின்னால் அனுப்பி வச்சிருக்கீக?” போஸ்பாண்டி பேச வாயெடுக்கும் முன்னர், இராஜபாண்டியின் குரல் இடையிட்டிருந்தது.

 

 

 

 

“நல்லா கொண்டாந்து நிறுத்துவீங்க டா! பசுபதிக்கும் நமக்கும் உள்ள பஞ்சாயத்து தெரிஞ்ச பிறகு, ஒருத்தனாவது, உங்க தங்கச்சியைக் கட்டுறேன்னு முன்னே வந்து நின்னானா? அப்படி இருக்கையில், என் அக்கா மயனுக்கு நான் கட்டி வைக்கணும்ன்னு நினைக்கிறதில், என்ன தப்புங்கிறேன். விட்டுப் போன உறவைப் புதுப்பிச்ச மாதிரியும் ஆச்சு. எம் மவளை சொந்தத்திலேயே கொடுத்த மாதிரி ஆச்சு. என் மனசுக்கு இதுதேன் சரின்னு பட்டுச்சு. அதனால்தேன் அந்தப் பயலோட அனுப்பினேன். நீங்க என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்கோங்க டா! ஆனால், நான் முடிவெடுத்ததுதேன் நடக்கும். எம் மவ, அரசி வீட்டுக்குத்தேன் மருமவளாகப் போகப் போறா! இதை எவன் நினைச்சாலும் மாத்த முடியாது!” தெளிவாய், தீர்க்கமாய், மகன்களைப் பார்த்துச் சொன்னார் நாச்சியப்பன்.

 

 

 

 

 

“நல்லா கதையளக்குறீங்க! இன்னும் கொஞ்ச நாளில் தூக்கில் தொங்கி சாகப் போற, பசுபதி பேரைச் சொல்லி பயங்காட்டப் பார்க்குறீகளாக்கும்? இந்த திட்டமெல்லாம் உங்க உடம் பொறவா பொறப்பு போட்டுக் கொடுத்த திட்டமா? ஒருநாள்.. ஒரேயொரு நாளுதேன்.. வளைகாப்புக்கு அழைக்கிறேன்னு வந்துட்டு போனாக! ஒரே நாளில், ஒட்டுமொத்தமா, உங்க மண்டையைக் கழுவிட்டு போய்ட்டாகளா?” எனக் கோபமாய்க் கேட்டான் போஸ்பாண்டி.

 

 

 

 

“எனக்குத்தேன் நீங்க பொறந்தீகளாடா? மூளை கெட்ட முட்டாளுங்களா.? திட்டமிட்டு பழிவாங்க, மயிலு ஊரான் வீட்டுப் பிள்ளையாடா? என் மவடா! நான் பெத்த எம் மவளோட வாழ்க்கை அழியணும்ன்னு நானே எப்படி நினைப்பேன்? உங்களை விட அதிகமா எம் மவ மேலே எனக்கு அக்கறை இருக்கு டா!”

 

 

 

 

 

“உங்க அக்கறையைத்தேன் பார்த்தோமே, இரகசியமா உங்க அக்கா மயனோட எங்க தங்கச்சியை அனுப்பி வச்சிட்டீகளே..?” எனக் கேட்ட முத்துப்பாண்டி,

 

 

 

“போஸூ! இதெல்லாம் சரி வராது. நாமளே நேரில் போய், மயிலைக் கூட்டியாந்துருவோம். அந்தக் கெரகம் பிடிச்ச வீட்டில் நம்ம தங்கச்சி அரை நிமிஷம் கூட இருக்கக் கூடாது. இவரு வேணும்ன்னா பட்ட அவமானத்தை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு, அக்கா, தொங்கச்சின்னு பாசப் பயிரை வளர்க்கட்டும். நமக்கு, அப்படியொரு உறவே தேவையில்லை.!” என முடித்திருந்தான்.

 

 

 

 

 

“நீ சொல்றது சரித்தேன். இராஜபாண்டி, நீயும் புறப்படு! இன்னைக்கு பஞ்சாயத்து ஆனாலும் பரவாயில்லை! நாமளே போய் தங்கச்சியைக் கூட்டியாந்துருவோம்!” என்ற போஸ்பாண்டியின் குரலைக் கேட்டு, அண்ணன் தம்பிகள் மூவரும் கிளம்ப முற்பட, 

 

 

 

 

“நில்லுங்கடா! தோளுக்கு மேலே வளர்ந்து தொலைச்சுட்டீங்க கையை நீட்ட வேணாம்ன்னு பார்க்கிறேன். மயிலு அங்கணயே ரெண்டு நாளைக்கு இருக்கட்டும். நீங்க போறதா இருந்தால், விஷேஷத்து அன்றைக்கு போங்க! இன்னைக்கெல்லாம் எவனும் எங்கேயும் போகக் கூடாது.!” நறநறத்த பற்களின் நடுவே கோபமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார் நாச்சியப்பன்.

 

 

 

 

“அப்படி என்ன அவசியம்ங்கிறேன்.? நம்ம வீட்டுப் பிள்ளை அங்கண போய் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வயசுப் பிள்ளையை எப்படி அந்தப் பயலை நம்பி அனுப்புனீக? நீங்க சொல்றதையெல்லாம், கேட்டுட்டு நாங்க இங்கண நிற்கப் போறதில்லை. நாங்க போகத்தேன் போறோம்!” தந்தைக்கு சற்றும் குறையாத உறுதியுடன் பேசினான் போஸ்பாண்டி.

 

 

 

 

“அவனை நம்பி அனுப்புறதுக்கு, அவன் அரசி மயன் அப்படிங்கிற ஒத்தைக் காரணம் போதும்! அப்பறம் தங்கச்சியை என்னத்துக்கு அனுப்பினேன்? என்னத்துக்கு அனுப்பினேன்னு குதியாய் குதிக்கிறீகளே.. நான் ஒண்ணும், ஜெயிலுக்குள்ளே இருக்கிற பசுபதியை சொல்லி பயம் காட்டலை. ஜெயிலுக்குள்ளே இருந்து பசுபதி தப்பிச்சு வந்து நாளாகிருச்சு. அவன் நம்ம ஊரில்தேன் தங்கியிருக்கான்னு உறுதியா தெரிஞ்சும் போச்சு!” இதுவரை சொல்லக் கூடாதென கடினப் பட்டு மறைத்து வைத்திருந்தவற்றை வேறு வழியில்லாமல், நாச்சியப்பன் மகன்களிடம் சொல்லியிருக்க, பசுபதி என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போய், அசையாமல் நின்றிருந்தான் போஸ்பாண்டி.

 

 

 

 

‘இனி என்ன நடக்கப் போகிறது? இ வன் இப்படி தப்பித்து வந்திருப்பான் என நான் யோசிக்கவில்லையே? நிச்சயமாய், பசுபதி இரத்தம் பார்க்காமல் போக மாட்டான்! இனி நடக்கப் போகும் விபரீதங்களை எப்படி தடுத்து நிறுத்துவது?’ என யோசித்தபடியே தந்தையை நிமிர்ந்து பார்த்த போஸ்பாண்டி,

 

 

 

“ஏன்ப்பா இப்படி செஞ்சீக?” 

 

 

 

எனக் கேட்டான். ஆனால் நாச்சியப்பனின் கருத்த உதடுகளில், அடர்த்தியான மௌனம் மட்டும் பதிலாய் நிலைத்திருந்தது.

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்