Loading

தணலை அள்ளி தன் தலை மீது எறிந்தவளின் மீது கோபம் கனன்றது அக்னி வேந்தனுக்கு.

என்ன வார்த்தை பேசிவிட்டாள்!?

நிராகரிப்பின் வலி, உள்ளமெங்கும் ஊடுருவி குடைச்சலைக் கொடுத்தது.

வீட்டினர் அவனுக்கு பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்க, நிவேதாவிற்கு பெரிய விருப்பமில்லை.

மகன் தான் ஏற்கனவே பெண்ணைத் தேர்வு செய்து விட்டானே என்ற அசட்டை அவருக்கு.

குடும்ப சகிதமாக பெண் பார்த்து முடித்து வரும் வழியில், “எனக்கு இந்த சம்பந்தம் திருப்தியா இருக்கு தம்பி” என்றார் சவுந்தரவல்லி.

மனோஜும், “ஆமா அகி. பொண்ணோட அப்பாவும் பெரிய பிசினஸ்மேன். அவருக்கு நீ நடத்துற ஹோம் பிசினஸ் மேல கூட ரொம்ப இன்டரஸ்ட். உன் கூட கொலாஜ் பண்ணி அதை இன்னும் பெரிய அளவு கொண்டு போக ஆசைப்படுறாரு” என்றதில், சிவக்குமார் பெருமூச்சு விட்டார்.

தனது தொழிலை இளைய மகனையாவது பார்த்துக்கொள்ள வைக்கலாம் என்று பார்த்தால், இவன் வேறு… என லேசாக எரிச்சலடைந்தார்.

சாலையின் மீது கவனமாக இருந்த அக்னி வேந்தனோ, “பொண்ணை எல்லாம் பிடிச்சுருக்கு தான் சித்தப்பா… ஆனா ஒரே ஒரு நெருடல்” என்றதில், இனியாவுக்கு சப்பென ஆனது.

இன்னும் எத்தனை நாளைக்கு இங்கு இருந்து கொண்டு பெண் பார்க்க அலைவது!

மனோஜை இங்கு அழைத்து வந்ததே சொத்தை பிரித்து வாங்கத்தான்.

தான் உயிருடன் இருக்கும் வரை சொத்தைப் பிரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே சவுந்தரவல்லி திட்டவட்டமாகக் கூறி இருந்தாலும், அவர்களது தொழிலில் அவ்வப்பொழுது சிவக்குமார் சந்திக்கும் பின்னடைவுகளை காரணம் காட்டி தொழிலை தங்கள் வாரிசுகளுக்கே வாங்கி விடும் திட்டம் இருந்தது.

சிவக்குமாரும் கூட, அக்ரம் சொகுசு இல்லத்தை அக்னி வேந்தன் இந்த அளவு சிறப்பாக நடத்துவானென்று அறியவில்லை. அப்படியும் பல விதத்தில் மறைமுகமாக குடைச்சல் கொடுத்திருந்தார். அதை எல்லாம் அவன் தூக்கி எறிந்து விட்டு, தற்போது அதனை இன்னும் மெருகேற்றப் போவதை அறிந்து அதிருப்தியே எழுந்தது.

இத்தனைக்கும், பண செழிப்புள்ள வயதானவர்களின் தங்கும் விடுதியாகத் தான் அது இருந்தது. கோவையில் அக்ரம் இல்லம் என்றாலே, அது வயதானவர்களின் சொர்க்கம் என்றே கூறுவர்.

இதனை மகன் சேவையாகவும் செய்யவில்லை என்றாலும், அங்கு தனது மாமனார் மாமியார் இருப்பது அவருக்கு உவப்பாக இல்லை.

“என்ன நெருடல்?” சிவக்குமார் கேட்டதில்,

“அவங்க விக்ரம் பத்தி கேட்டதுக்கு, ஏன் ஓடிப்போய்ட்டான்னு சொன்னீங்க” என நிறுத்த, “அவன் தான் தரங்கெட்டுப் போனவளோட எல்லாத்தையும் விட்டுட்டுப் போனானே…” என்று கடுகடுத்தார் மனோஜ்.

ஸ்டியரிங்கை விரல்களால் தட்டியவன், “நான் வேற என்னவோ கேள்விப்பட்டேனே சித்தப்பா!” என ஆழம் பார்த்ததில் மனோஜிற்கு வியர்த்து விட்டது.

“நீங்க  எல்லாரும் சேர்ந்து தான் வீட்டை விட்டு வெளில போக சொன்னதா எனக்கு தகவல் வந்துச்சே!”

சிவக்குமார் சற்றே தடுமாறி விட்டு, “அது… அவன் அந்தப் பொண்ணை விரும்புறதா என்கிட்டயே எகத்தாளமா பேசுனான். அதான் கோபத்துல போக சொன்னேன். அதுக்காக அவன் ஓடிப்போவானா? பிசினஸ், குடும்பம்னு எல்லாத்தையும் விட்டுப் போனது அவன் தப்பு தான. சரி என்ன இருந்தாலும் என் புள்ளையாச்சேன்னு தான் இப்ப கூட பொறுமையா இருக்கேன்…” என்றார்.

“அது சரி… என்ன தான் ஓடிப்போனாலும் அவன் உங்க பையன் தான. அதுல மாற்றுக்கருத்து இல்லையே. உங்க பிசினஸை எடுக்காம அவன் ஹோம் ஆரம்பிச்சது தான பிரச்சினை. இனி அவன் ஹோமை பார்த்துக்கட்டும், உங்க லெதர் பிஸினஸை நான் பார்த்துக்கிறேன்” என்றதும் மனோஜும் இனியாவும் திருதிருவென விழித்தனர்.

சவுந்தரவல்லியோ, “அவன் கூட ஒட்டிட்டு இருக்குறவளை அத்து விட்டா தான், அவனுக்கு இந்தக் குடும்பத்தோட சொத்தும் தொழிலும் கிடைக்கும்” என்று அகங்காரமாக கூற, “அப்போ நிலாவை என்ன பண்ணுவீங்க?” என்றான் ஏளனமாக.

“கண்டவ பெத்துப் போட்டதுக்கு எல்லாம் நம்ம உரிமை குடுக்க முடியாது” மனோஜ் நெருப்பை உமிழ, சுள்ளென ஆத்திரம் சூழ்ந்ததில் ஸ்டியரிங்கை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன், கோபத்தை அடக்கினான்.

தனது பேத்தியை தவறாகப் பேசிய மனோஜின் மீது நிவேதாவிற்கும் கோபம் வந்தாலும், அமைதி காத்தார்.

அவன் பெண்பார்க்க கிளம்பும் முன்னே சொல்லி இருந்தான், காரில் எது நடந்தாலும் பேசவேண்டாமென்று.

“சரி, அவனை விடுங்க நான் உங்க பேச்சை தான கேட்குறேன். அப்போ எனக்கு பிசினெஸ்ல ஹையஸ்ட் ஷேரிங் குடுங்க…” என்றதும் குடும்பமே அவனை விழித்துப் பார்த்தது.

“அது எப்படிப்பா?” சவுந்தரவல்லி கேட்டதில்,

“சிம்பிள், உங்க ஷேரயும் அப்பாவோட ஷேரையும் சேர்த்தாலே எனக்கு 60 பெர்சென்ட் வந்துடுமே! தென் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…” எனத் தோளைக் குலுக்கினான்.

சிவக்குமார் சற்றே மௌனமாகி விட்டு, “சரி என்னோட ஷேரை அவனுக்கு கொடுக்குறேன்” என்றதும் மனோஜ் பதறி விட்டார்.

“அனுபவமே இல்லாதவனுக்கு எப்படி நீங்க பொறுப்பை குடுக்க முடியும்?”

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே, பிசினஸை பார்த்துக்கன்னு சொன்னப்ப மட்டும் எனக்கு அனுபவம் இருந்துச்சா என்ன?” அக்னி வேந்தனின் பேச்சில் திமிர் தூக்கலாகவே தெரிந்தது.

சவுந்தரவல்லியோ, “முதல்ல அவன் ஹாஸ்பிடல்ல இருந்து வரட்டும். பார்த்துக்கலாம்…” என அப்போதைக்கு பேச்சை முறிக்க முயல,

“தேவையான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நான் ரெடி செஞ்சு தான் வச்சுருக்கேன். நாளைக்கு விக்ரம் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் ஷேர்ஹோல்டரா இருக்கனும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்க பெரியவர்கள் அதிர்ந்து விட்டனர்.

“உடனே எப்படி முடியும் அகி” சிவக்குமார் தடுமாற,

“நாளைக்கு செஞ்சு குடுத்தா, உங்க விருப்பப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லைன்னா… நானும் வீட்டை விட்டு போய்டுவேன்” என அழுத்தமாக மிரட்ட, சவுந்தரவல்லி பதறி விட்டார்.

“வேணா அகி. நானும் வேணும்னா என் ஷேரை தரேன். அந்த ஹோமை ஒழிச்சு விட்டுட்டு நம்ம குடும்பத்துக்கு பெருமை சேரு” என வாயை விட, மனோஜ் “இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்…” என்றார்.

சொல்லும்போதே அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அதில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தே விட்டார்.

இவர்களது குடும்பத் தொழிலான லெதர் தொழிற்சாலை தொடங்கி ஷோரூம் வரை, அனைத்துமே சவுந்தரவல்லி, சிவக்குமார் மற்றும் மனோஜின் பங்குதாரர்களை கொண்டது.

மனோஜிற்கு உடம்பு வளைத்து உழைக்க சிரமம். எனவே தொழிற்சாலையில் சிவக்குமாரை தள்ளி விட்டு, ஷோரூம்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார். பெங்களூரில் ஷோரூம் தொடங்குவதாகத் தான் குடும்பத்துடன் தனியாக சென்றதும்!

அங்கு முழுக்க முழுக்க தானே பார்த்துக்கொள்வதாக, முதன்முதலாக குடும்ப தொழில் இருந்து தனித்து சென்றவர், பெங்களூரில் இருக்கும் இரு பெரும் ஷோ ரூம்களின் இலாபங்களை அவரே அனுபவித்து வருகிறார்.

தொழிற்சாலையில் இருந்து அவருக்கு பொருள்கள் எல்லாம் இலவசமாகவே வந்து விட, மற்றைய பங்குகளும் அவருக்கு சுமூகமாக வந்து சேர்ந்து விடும்.

அண்ணன் மகன்கள் தொழிற்சாலைக்கு வந்து விட்டால், இனாமாக பொருள்களை கொடுக்க மாட்டார்களே! பெங்களூருவில் இருந்தும் பங்கு கேட்கலாம் அல்லது அதனைத் தனியாக எடுத்துக்கொண்டதில் மற்றைய பங்குகளை துண்டித்து விடலாம் என்ற பேராபத்துகள் இருக்க, அதன் காரணமாகவே விக்ரமை துரத்தி விட்டதும்.

அக்னி வேந்தனும் தனி பாதையில் செல்ல அவர் தனிக்காட்டு ராஜாவாக பிள்ளைகளை வளர்த்து விட்டு, இப்போது முதலாளித்துவதையும் தனக்கே எடுத்துக்கொள்ளும் ஆசையில் தான் இங்கு வந்திருந்தார்.

இது முதலுக்கே மோசமாகி விடுமே! என திகைப்புறும் போதே பெங்களூருவில் இருக்கும் ஷோரூம்களை வருமான வரி சோதனை அதிகாரிகள் முற்றுகை இடப்போவதாக தகவல் வர இடிந்து போனார்.

சவுந்தரவல்லி தான், “அதுனால என்ன மனோ… நம்ம பேக்டரிக்கே எத்தனை தடவை வந்துருக்காங்க. வந்துட்டு போகட்டும்” என கூற, மனோஜ் எச்சிலை விழுங்கினார்.

“இன்கம்டேக்ஸ் கட்டலைன்னா, வந்துட்டு தனியா போக மாட்டாங்க பாட்டி. உங்க பையனையும் சேர்த்தே கூட்டிட்டுப் போய்டுவாங்க…” கண்ணாடி வழியே வியர்த்து வழிந்த சித்தப்பாவின் முகத்தை நக்கலாகப் பார்த்தபடி கூறினான் அக்னி வேந்தன்.

“என்னது இன்கம்டேக்ஸ் கட்டலையா?” சிவக்குமாரும் அதிர, மனோஜ் “அதுவந்து அண்ணா…” எனத் தடுமாறினார்.

“அங்க முடிச்சுட்டு, நேரா நம்ம பேக்டரிக்கு தான் வருவாங்கப்பா…” வில்லப்புன்னகை அவனிடம்.

“நான் பேப்பர்ஸ் எல்லாம் கரெக்ட்டா தான் வச்சுருக்கேன்” சிவக்குமார் கர்வமாகக் கூற, “இல்லையே… நான் கேள்விப்பட்டவரை, உங்க ஆடிட்டர் ஏதோ சொதப்பி வச்சுட்டாராமே…” என்றபிறகே பயம் வந்து அவரது ஆடிட்டருக்கு அழைக்க, அவரோ அழைப்பை ஏற்காது சோதித்தார்.

அவரது செகரட்ரிக்கு அழைக்க, அவரோ “சார் நீங்க பல வருஷமா டேக்ஸ் கட்டலைன்னு ஆடிட்டர் பைல் ரெடி பண்ணிருக்காரு. மார்னிங் ஆபிஸர்ஸ் வர்றதா வேற தகவல். அது மட்டும் இல்லாம…” என இழுத்தவரிடம், “என்னனு முழுசா சொல்லு கண்ணன்” எனப் பொறிந்தார்.

“நம்ம பேக்டரி கழிவை எல்லாம் சரியான முறையில டிஸ்போஸ் பண்ணாம என்விரான்மெண்ட் டேமேஜ் பண்றோம்னு நம்ம மேல கம்பளைண்ட் வந்துருக்கு. பொலியூஷன் கண்ட்ரோல் போர்ட் இன்ஸ்பெக்ஷன்க்கு எந்த நேரமும் வரலாம் சார்…” என்றதில் சிவக்குமாருக்கு பயப்பந்து உருண்டது.

“காசை குடுத்து சரி பண்ண வேண்டியது தான?” பல்லைக்கடித்தார்.

“யாரோ ஸ்ட்ராங் எவிடன்ஸ் குடுத்துருக்காங்க. நிலைம சரி இல்லை சார்…ஜெர்மனி கிளையண்ட் நம்மளோட எல்லா ஆர்டரையும் ஹோல்ட் பண்ணிட்டாங்க. பொலியூஷன் என்கொய்ரி க்ளியர் ஆகுற வரைக்கும் ஷிப்மென்ட் வாங்க மாட்டோம்னு மெயில் அனுப்பிருக்காங்க” என்றதில், “சரி அப்பறம் பேசுறேன்” என அலைபேசியை அணைத்து விட்டார்.

“என்ன ஆச்சு சிவா?” தாயின் கேள்வியில், “இன்கம்டேக்ஸ் ஆபிசர் வர்றாங்களாம்மா வேற ஒன்னும் இல்ல” என்றவர் இந்த விஷயத்தை மறைத்து விட்டார்.

“என்னப்பா பண்றது இப்ப” சவுந்தரவல்லி தவித்துப்போக, “பிரச்சினை பண்ணாம ஷேர் எனக்கு எழுதி குடுங்க. பெங்களூர் ஷோரூம்ல கணக்கை எல்லாம் நான் டேலி பண்றேன். இல்லன்னா ஜெயிலுக்கு தான் போகணும்…” என வெளிப்படையாகவே மிரட்டிட, இனியா படபடத்தார்.

“இங்க அதுக்குன்னே ஆடிட்டர் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க” என்று திமிராய் கணவனிடம் ஆடிட்டருக்கு அழைக்கச் சொல்ல, அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்.

“நீங்க ஆடிட்டரை பிடிக்கிறதுக்குள்ள போலீஸ் விஷயம் தெரிஞ்சு உங்களை பிடிச்சுடுமே!” என்றதும் கணவன் மனைவி இருவருமே துடித்து விட்டனர்.

“நாங்க உடனே ஊருக்குப் போகணும்” எனக் காலில் சுடுதண்ணீர் கொட்டாத குறையாது குதித்தனர்.

“எனக்கு தேவையான சைன் எல்லாம் போட்டுட்டு தாராளமா போங்க” என்றவன் வீட்டிற்கு சென்றதும் இரவோடு இரவாக, தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தாள்களில் எல்லாம் மனோஜிடம் கையெழுத்தை வாங்கி விட்டான்.

அதாவது சிவக்குமாரும் சவுந்தரவல்லியும் அவர்களது பங்கை அக்னி வேந்தனுக்கு கொடுக்க, அவருக்கு சம்மதம் என்று.

இருந்த பதற்றத்தில் அவர் கவனியாத விஷயங்கள் பல. அதே பத்திரத்தில், இனி அவரது ஷோரூமிற்கு தொழிற்சாலையில் இருந்து இனாமாக எந்தப் பொருளும் செல்லாது என்பதை குறிப்பிட்டிருந்தான்.

“டோன்ட் வொரி சித்தப்பா… உங்க ஆடிட்டர் போன் எடுத்தாலும் சரி, இல்லைனாலும் சரி பெங்களூருக்கு போயிட்டு எனக்கு கணக்கு வழக்கை எல்லாம் அனுப்புங்க. நீங்க பேக்டரில இருந்து பணம் குடுத்து பொருள் வாங்குன மாதிரி நான் எல்லாம் ரெடி பண்ணி தரேன். காலைல ஆபிஸர்ஸ் வர்றதுக்குள்ள எல்லாமே முடிச்சிடலாம்…” எனக் கண் சிமிட்டிட, “சரிப்பா பார்த்து பண்ணிடு” என்ற மனோஜ் இனியாவை அழைத்துக்கொண்டு பெங்களூர் விமானத்தைப் பிடிக்க அரக்க பறக்க ஓடினார்.

“நீங்க எப்படி? இப்பவே சைன் போடுறீங்களா? இல்ல…” எனும்போதே சவுந்தரவல்லி கையெழுத்தைப் போட்டு விட்டு “சிவா நீயும் போடு” என்று அவரைத் தூண்டினார்.

சிவக்குமாருக்கு எதுவோ உறுத்தியது. தனது பங்கை கொடுத்தாலும் அவரது எம். டி போஸ்ட் மாறப்போவதில்லை தான். அதிகாரம் அவருக்கு இருக்கும் தான். ஆகினும்…?

அவரை சவுந்தரவல்லி மேலும் யோசிக்க விடவில்லை.

“என்ன சிவா யோசிக்கிற. சீக்கிரம் போடு. அவன் பேக்டரி கணக்கை எல்லாம் சரி பண்ணட்டும். உன் தம்பி வேற போலீஸ்ல மாட்டக்கூடாது.” என்றவருக்கு சின்ன மகனுக்கு என்ன ஆகுமோ என்ற பயம்.

அவர் கொடுத்த நச்சரிப்பில் குழப்பத்துடன் கையெழுத்திட்டார்.

“தேங்க்ஸ்பா…” என்று அவர் கன்னத்தில் தட்டியவன், “நான் இப்பவே போய் எல்லாமே செட்டில் பண்றேன்” ‘எல்லாமே’ என்பதை அழுத்திக்கூற, அவரது புருவம் சுருங்கியது.

நிவேதா தான், மகனின் அலும்புகளை சாவகாசமாக ரசித்துக் கொண்டிருந்தார்.

மறுநாள், மதியம் தாண்டும் வரை அக்னி வேந்தனும் மருத்துவமனைக்கு வரவில்லை.

நிவேதா மட்டுமே விக்ரமுடன் இருந்தார்.

“என்னமா அகி, திலோ, பவி யாரையுமே காணோம்?” விக்ரம் கேட்டதில்,

“அகி நைட்டே பேக்டரிக்கு போனவன் தான் இன்னும் வரலை விக்ரா. இன்னைக்கு பாப்பா ஸ்கூல்ல ஏதோ மீட்டிங்காம். அதுனால திலோவும் பவியும் போயிருக்காங்க” என்றார்.

“ஓ… திலோ என்கிட்ட எதுவும் சொல்லலையே” என்ற விக்ரம், “இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆச்சே. சீக்கிரம் வீட்டுக்கு வரலாம்னு பார்த்தேன்” என்றான் ஆர்வமாக.

“அகி உன்னை வந்து கூட்டிட்டுப் போறதா சொன்னான்…” எனும்போதே அக்னி வேந்தன் அங்கு வந்து விட, “டிஸ்சார்ஜ் பார்ம் எல்லாம் வந்துடுச்சாமா…?” எனக் கேட்டு அந்த வேலைகளை கடகடவென முடித்தான்.

“எவ்ளோ நேரம்டா வெய்ட் பண்றது” விக்ரம் செல்லமாக கோபித்துக் கொள்ள, “சில சட்ட நடவடிக்கைக்கு நேரமாகிடுச்சுடா” என்ற அக்னியின் கூற்று புரியாது, இருவருமே விழித்தனர்.

பின், நிவேதாவும் அக்னியுமாக விக்ரமை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீடே கடும் அமைதியுடன் காட்சியளித்தது.

“இன்னும் திலோ வரலையா?” உள்ளே நுழைந்ததும் அவன் கேட்ட கேள்வியே திலோ தான்.

“வந்துடுவா விக்ரா. ஸ்கூல்ல லேட் ஆகிடுச்சோ என்னவோ…” நிவேதா சொன்னபடி அவனுக்கு பழச்சாறை கொடுக்க,

“நீ உன் ரூமுக்கே போறியாண்ணா. இல்ல கீழ அரேஞ்சு பண்ணலாமா?” தம்பியின் கேள்வியில் “மாடி ஏறிடுறேன் அகி…” என்றவனின் கவனம் எல்லாம் அலைபேசியிலேயே நிலைத்திருந்தது.

“எப்ப வருவ திலோ?” என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருந்த தமையனின் தவிப்பில் புன்முறுவல் பூத்தவனின் விழிகள் தானாய் பவித்ராத்யாவின் அறைக்கதவை வருடியது.

கூடவே கடும் கோபமும் நிலைக்க, விக்ரம் தனது அறைக்குச் சென்றான்.

மனைவி மகளல்லாத இந்த சின்ன இடைவெளியும் அவனது மனநிலையை அதிகம் குலைத்தது.

மருத்துவர் சொன்ன உடற்பயிற்சியை மெல்லமாக செய்துகொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது அக்காகிதம்.

ட்ரெஸிங் டேபிளின் மீது எப்போது வேண்டுமானாலும் பறக்க காத்திருந்த பெண்ணின் மனது அது.

ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த கரம் தான். அக்கடிதத்தின் கனம் தாளாது அதிகம் நடுங்கியது.

“விக்ரம்…” திலோவின் கையெழுத்தே தான்.

மனமும் நடுங்கித் தொலைத்தது.

“விக்ரம்… ஐ ஆம் சாரி. நா… நான்… நம்ம பிரியுறது தான் சரினு தோணுது விக்ரம். சந்தர்ப்பவசத்தால கல்யாணம் நடந்துடுச்சு. அதுக்கு அப்பறம் எல்லாமே கனவு மாதிரி… இந்த வாழ்க்கையை சூழ்நிலைக்காக ஏத்துக்கிட்டோம் தான். ஆனா, கடைசி வரை சூழ்நிலைக்கு சாதகமாவே வாழ வேண்டியது இல்ல விக்ரம். இப்ப உங்க குடும்பம் உங்களுக்கு கிடைச்சுடுச்சு. இனி, இங்க… இந்த உறவை தொடர எனக்கு விருப்பம் இல்ல… சாரி விக்ரம். பிசியோ விடாம பண்ணுங்க”. இறுதிக் குறிப்பு வேறு.

வெகுநேரம் சிலைபோல நின்றிருந்தான் விக்ரம வேந்தன்.

‘உங்களுக்கு சரி ஆகலைன்னா இங்க இருந்து போய்டலாம் விக்ரம்…’

‘இந்த உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் நல்லாருக்கணும்’

கடைசி சில நாள்களாக அவள் உரைத்த ஒவ்வொரு வாசகத்திற்கும் அர்த்தம் புரிந்தது இப்போது.

போக வேண்டுமென எண்ணியவள், தான் முடமாக இருக்கும்போதே சென்றிருக்கலாமே?

கண்ணில் நீரணை எப்போது வேண்டுமானாலும் உடையத் தயாராக இருந்தது.

கையில் காகிதத்தைப் பிடித்துக்கொண்டு சிலையாக நின்றவனை குழப்பமாக பார்த்தபடி வந்த அக்னி, “என்னடா?” என வினவ, அவனோ அப்போதும் அசைந்தானில்லை.

அக்னி அந்தக் கடிதத்தை படித்துப் பார்த்து விட்டு, பின்னந்தலை கேசத்தை அழுந்தக் கோதினான்.

“டேய் அண்ணா?” அவனை உலுக்க,

“அவ… அவ இல்லாம நிஜமா என்னால முடியலடா. அஞ்சு வருஷமா அவளைத் தவிர வேற எதையும் யோசிச்சு எனக்கு பழக்கமே இல்ல. அவளைத் தாண்டி இந்த லெட்டரை கூட என் மூளைக்குள்ள ஏத்திக்க  முடியல.” மொத்தமாக உடைந்து குரலில் வலிமை இழந்து தேய்ந்த முகத்துடன் நின்றிருந்த தமையனைக் காணவே பிடிக்கவில்லை அக்னிக்கு.

“ஏண்டா இப்படி? என்னவாம் அவளுக்கு? என்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணுவாளே…” உள்ளம் உருக்குலைந்தது.

“எல்லாமே பண்ணிருக்காளா?” அக்னி கூர்மையாக கேட்க,

“எல்லாமே தான்…”

“கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை மாதிரி அவளும் உன்னை விரும்புனதை சொல்லிருக்காளா?” தம்பியின் கேள்வியில் திகைத்திருந்தான்.

“சரி அதை விடு. உனக்கு ஆக்சிடென்ட் எப்படி ஆச்சுன்னு சொன்னாளா? யாரால ஆச்சுன்னு சொன்னாளா?” என இறுக்கத்துடன் கேட்க,

விக்ரம் அதீத குழப்பத்துடன் தலையசைத்தான்.

“சரி அதையும் விடு. அவள் பிரக்னன்ட்டா இருக்கும்போது என்கிட்ட பேசுறேன்னு சொல்லிருக்க. திடீர்னு ஏன் முடிவை மாத்திக்கிட்ட?” சம்பந்தமே இல்லாத கேள்வியில் விக்ரம் தலையைப் பிடித்தான்.

“அது ஏண்டா இப்போ?”

“சொல்லு. சும்மா தெரிஞ்சுக்க தான்.”

“அதுவந்து… ஒரு தடவை நானும் திலோவும் படம் பார்த்துட்டு இருந்தோம். அதுல இன்டர்கேஸ்ட் மேரேஜ்னு பொண்ணும் பையனும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்பாங்க. அழகான லைஃப் அன்பான குழந்தைன்னு வாழும்போது, அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருந்து எல்லாரும் அவ வீட்டுக்கு வந்துருப்பாங்க. நல்லா பேசிட்டு, அவ முன்னாடியே அந்த பையனையும் அவ குழந்தையையும் கொன்னுடுவாங்க. பயமா இருந்துச்சுடா… பாட்டி சித்தப்பா அப்பான்னு எல்லாரும் சேர்ந்து அவளையும் பாப்பாவையும் ஏதும் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு. இப்ப கூட உன்மேல இருக்குற நம்பிக்கைல மட்டும் தான், இங்க வந்தேன்.

அதுக்காக அந்த நம்பிக்கை அப்போ இல்லையான்னு கேட்காத. உன்னைப் பார்க்காத வரைக்கும் மனசுக்குள்ள பல குழப்பம் சஞ்சலம். உன்னைப் பார்த்தப்பறம் நீ இருக்கன்ற தைரியம் தானாவே வந்துடுச்சு. இப்.. இப்போ தி.. திலோ உண்மையாவே போய்ட்டாளா இல்ல… யாரும் அவளை…” என்றவனுக்கு பேச கூட மூச்சு வாங்கியது.

தமையனின் மனநிலை துல்லியமாகப் புரிந்தது அவனுக்கு.

விக்ரமோ “எனக்கு ஆக்சிடெண்ட் யாரால ஆச்சு?” எனப் பதைபதைப்புடன் கேட்க,

ஓர் நொடி அமைதி காத்த அக்னி, “ஆக்சிடென்ட் உனக்காக நடக்கல. திலோவுக்காக நடந்துருக்கு” என்றதில், விக்ரமிடம் பேரதிர்வு.

“யா யாரு… சித்தப்பாவா? பாட்டியா?” நடுங்கிய மனதுடன் வினவ, அந்நேரம் கீழிருந்து சிவக்குமார் குரல் கொடுத்தார்.

“அகி இங்க வா” என்றவரின் அழைப்பிலேயே அனல் தெறித்தது.

“வா!” தமையனையும் வரச் சொல்லி விட்டு அமர்த்தலாக படி இறங்கிய அக்னி வேந்தனிடம் சிவக்குமார் சீறினார்.

“உன் சித்தப்பாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு. அவன் பிராடாக்ட்ல ஃபோர்ஜரி பண்ணிட்டான்னு எவிடன்ஸ் குடுத்து இருக்க. எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்லி தான ஷேர் வாங்குன…”

“அய்யயோ என்னப்பா சொல்ற. மனோ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கானா” சவுந்தரவல்லி பரிதவித்தார்.

“சொன்னேன் தான்பா. ஆனா, இப்ப ஷேர் என்கிட்ட இல்லையே” என உதட்டைப் பிதுக்கினான் அக்னி வேந்தன்.

“இ… இல்லையா?” சிவக்குமார் அதிர,

“ஆமா, என்னோட ஷேர நான் இன்னைக்கு மார்னிங்க்கே விக்ராண்ணா பேருக்கு மாத்திட்டேன். இனி அவன் தான் அங்க ஹையஸ்ட் ஷேர்ஹோல்டர். ஏன் எம். டி-யாகவும் சான்ஸ் இருக்கு” என்றதில் இம்முறை விக்ரமும் அதிர்ந்தான்.

“அகி என்னடா இது?” தவிப்பாக கேட்டவனிடம்,

“அந்த பிசினஸ்ல நீ தலையிடக்கூடாதுன்னு தான சித்தப்பா உன்னை பிளான் பண்ணி வெளில அனுப்பி விட்டாரு. இப்ப அவரு இல்ல, செத்துப்போன தாத்தாவே வந்தாலும் உன்னை மீறி அங்க ஒரு ம****யிரைக் கூட புடுங்க முடியாது…” என்றவனின் அழுத்தம் நிறைந்த உறுதியில் கண்ணிமைக்கவே மறந்து போனான்.

சவுந்தரவல்லியோ, “உன்னை நம்பி தான நானும் எழுதி குடுத்தேன். இப்படி பண்ணலாமா அகி” என்று எகிற,

“என் அண்ணனை வீட்டை விட்டு துரத்துனதும், என் அம்மாவையும் தாத்தா பாட்டியையும் கஷ்டப்படுத்துனது மட்டும் சரியோ? எல்லாத்துக்கும் மேல ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணுங்களை இந்த வாய் என்ன பேச்சு பேசுச்சு” எனும்போதே அவர் ஆத்திரத்துடன் பேச வர, “உஷ்.. மூச்சு!” என குரல் உயர்த்தி கர்ஜித்திட சவுந்தரவல்லிக்கு சர்வமும் அடங்கிய நிலை.

“வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசுனீங்க… இருக்க இடமாவது இருக்கும். இல்ல, பாவமெல்லாம் பார்க்க மாட்டேன். நேரா சுடுகாட்டுல போய் புதைச்சுட்டு வந்துடுவேன். அம்மாவும் மகனும் சேர்ந்துக்கிட்டு என்னென்ன வேலை பார்த்துருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?” நெருப்பாக சிவந்த விழிதனில் ஆத்திரம் கக்கியது.

“அகி!” ஓர் அளவிற்கு மேலே பெரியவர்களை எதிர்த்து பேசியதை நிவேதாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

தாயை திரும்பி முறைத்தவன், பேயறைந்தது போல நின்றிருந்த சிவக்குமாரிடம் வந்தான்.

“உங்களுக்கு விக்ரமுக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரியாதா?”

“தெ தெரியாதே!”

“அப்பறம் எப்படி கரெக்ட்டா அவனுக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு நீங்க சென்னைக்கு போயிருக்கீங்க. அதுவும் அவன் இருந்த ஹாஸ்பிடலுக்கு” நக்கலாய் கேட்டதில் அவருக்கு தொண்டை வற்றியது.

விக்ரம வேந்தனின் முகத்தில் பல அதிர்வுகள்.

“ஹாஸ்பிடலுக்கு வந்தீங்களாப்பா?” ஏமாற்றம் மிகுந்தது அவனிடம்.

“அப்போ மட்டும் இல்ல விக்ரா. அதுக்கு முன்னாடியே பல தடவை எனக்குத் தெரியாம சென்னைக்கு வந்துருக்காரு. இதோ இந்த பெரிய மனுஷங்களும் சேர்ந்து தான்…” என்று சவுந்தரவல்லியை காட்டத்துடன் ஏறிட, இரு பெரியவர்களுக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை.

“அப்போ விக்ரமுக்கு ஆக்சிடென்ட் ஆனது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா. ஏங்க சொல்லல” நிவேதா தவிப்பாகக் கேட்க,

“எப்படி சொல்லுவாரு? அவர் விரிச்ச வலை அவரோட மருமகளுக்காச்சே. அதுல விக்ரம் வந்து சிக்கிட்டான்” என்றதில் நிவேதாவும் விக்ரமும் சிலையாகி விட்டனர்.

சிவக்குமாரோ, “அவள் எனக்கு மருமகள்னு நான் எப்போ சொன்னேன். ஏதோ ஒரு குப்பைல இருந்து வந்தவ, இந்த வீட்ல என் பையனுக்கு… நினைக்கவே அருவருப்பா இருக்கு.  கேவலம், உன் பையன் ஒரு லோ க்ளாஸ் பொண்ணோட ஓடிப்போய்ட்டானாமேன்னு போற  வர்றவன் எல்லாம் காறி துப்புறான். என் முன்னாடி தலை நிமிர்ந்து பேச பயந்தவன் கூட, ஏன் உன் சித்தப்பா கூட, இவன் போனதுக்கு அப்பறம், பெங்களூர் ஷோ ரூம் அவன் பேர்ல இருக்கணும்னு அடம்பிடிச்சு மாத்தி வாங்குனான்.

நீங்க ஒழுங்கா இருந்திருந்தா எனக்கு இந்த அவமானம் எல்லாம் வந்துருக்குமா.  அவளை ஊரை விட்டு துரத்தாம, அப்பவே கொன்னு போட்டுருக்கணும். மனோஜ் மட்டும் குழப்பாம இருந்திருந்தா, விஷயம் தெரிஞ்சதும் அமைதியா அவளைக் கொன்னு போட்டுட்டு இருந்துருப்பேன். எவ்ளோ நாளைக்கு இவன் அவளை நினைச்சுட்டு இருக்க முடியும்…” என நாக்கில் நரம்பின்றி பேசியவரை சிவந்த விழிகளால் வெறித்தான் விக்ரம்.

“அப்படி ஏதாவது நடந்துருந்தா, அமைதியா உங்களை நான் கொன்னுருப்பேன்…” ஆடவனின் உறுமலில் சிவக்குமார் திகைத்தார்.

“இப்ப அவளை என்ன பண்ணீங்க? எங்க அவ?” அவரது சட்டையைப் பிடித்த விக்ரமைத் தள்ளி விட முயற்சி செய்ய, அவரால் அவனை நகற்ற கூட இயலவில்லை.

“என்னைக்கா இருந்தாலும் அவள் இந்த வீட்டுக்கு மருமகளா ஆக முடியாது.”

அவரது பேச்சில் இருந்த தீவிரம் அவனைப் பயமுறுத்தியது. “என்னையா பண்ணுன அவளை?” பங்களா அதிர கத்தினான்.

“ஓடிகாலி தான, எங்கயோ ஓடிட்டா. முடிஞ்சா போய் தேடு” சிவக்குமாரும் எகிறியதில்,

“அண்ணா, முதல்ல அவளைத் தேடலாம் வா…” அக்னி தந்தையின் மீது நெருப்பை உமிழ்ந்தபடி கூற,

“அதான் கூப்புடுறான்ல போ…” என விக்ரமை தள்ளி விட்டவர், அக்னி வேந்தனின் முன்னே விரல் நீட்டி எச்சரித்தார்.

“அந்த ஷேரை எல்லாம் எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும்”

“ஓஹோ தெரிஞ்சா சரி தான்” நக்கலாய் பார்த்துச் சென்றவனின் பார்வை அவரை லேசாய் அலற வைத்தது.

திலோத்தமாவிற்கும் பவித்ராத்யாவிற்கும் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல இரு எண்களுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கலவரத்தில் பவித்ராத்யாவும் இல்லாதது அப்போது தான் அக்னி வேந்தனுக்கும் உறைக்க, அவசரமாக நிவேதாவிற்கு அழைத்தவன், “ம்ம்மா அந்த அறிவு கெட்ட பைத்தியக்காரி அவள் ரூம்ல லெட்டர் எதுவும் வச்சுருக்காளா பாருங்க” என்றிட, அவரும் வேகமாய் பவித்ராத்யாவின் அறையில் பார்த்தார்.

“எதுவும் இல்லையே அகி… மூணு பேரும் பாதுகாப்பா தான இருப்பாங்க” என்றவரின் குரலில் பயம் வேறு.

“ம்ம்…” என அழைப்பைத் துண்டித்தவன், மீண்டும் தனது எண்ணில் இருந்து பவித்ராத்யாவிற்கு அழைத்தான்.

கோவைக்கு வந்தபோது தனது தோழியின் அறையில் தான் தங்கி இருந்தாள்.

அன்று காலையிலேயே திலோத்தமா அவளை அங்கு இறக்கி விட்டிருக்க, அவளைப் பிரியும் வலியுடன் காதல் வலியும் இணைந்து துளைத்தது.

“பத்திரமா இரு பவி” திலோ தவிப்பாக கூற,

“அத்தான்கிட்ட சொல்லாமலே வந்துட்டேனேக்கா கோச்சுக்க போறாங்க” என்றாள் வருத்தமாக.

“நான் சொல்லிக்கிறேன் பேபி. அப்பறம்… வந்து… உன் அத்தான் போன் பண்ணுனா ஒரு ரெண்டு நாளைக்கு எடுக்காத…” எனத் தயங்கி தயங்கி கூற, ஏனென புரியாது பார்த்தாள்.

“அது கோபமா எதுவும் பேச போறாங்க அதான்… நான் புரிய வச்சுட்டு சொல்றேன்” என்றவளின் தடுமாற்றத்தை அப்போது தான் உணர்ந்தவளுக்கு, எதுவோ சரியில்லை என்று பட்டது.

“நீ ஓகே தான?” கடந்த சில தினங்களாக விசித்திரமாக நடந்து கொண்ட தமக்கையின் செயல்கள் அவளுக்கும் பயமளிப்பதாய்!

“நான்… நான் ஓகே தான் பேபி. எல்லாம் செட் ஆகவும், உனக்கு கால் பண்றேன். நீ கிளம்பி வந்துடு” என மொட்டையாக கூற,

“இல்லக்கா, மறுபடியும் அந்த வீட்டுக்கு வர எனக்குப் பிடிக்கல. நீ அங்க செட் ஆகிட்டாலே போதும்” என்றவள், தனது மடியில் அமர்ந்திருந்த மகளுக்கு ஆழ்ந்த முத்தமொன்றை கொடுத்து விட்டு, “சமத்தா இருக்கணும் அகி…” என சொல்ல வந்தவள் ‘அகி ‘ என்ற வார்த்தையில் தவித்து மருகினாள்.

பின் இருவரையும் பாராது விறுவிறுவென உள்ளே சென்று விட, திலோத்தமா உணர்வற்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

“அடுத்து எங்க போகணும் மேம்…” கேப் ஓட்டுநர் கேட்டபிறகே நிகழ்விற்கு வந்தவள், “ரயில்வே ஸ்டேஷன்…” என்றாள்.

“அப்பாட்ட போவோமாமா” அக்னிலா மழலைக் குரலில் கேட்க, பார்வையை மறைத்த நீர்தனை அழுந்த துடைத்தவள் மகளின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாய் தந்தாள்.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 70

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
57
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்