
நட்சத்திரம் 12
இமைக்க மறந்து சிலையாய் நின்றுக் கொண்டிருந்த தாரிகாவின் கரம் பற்றி இழுத்து வந்த மகிழினி அவளைப் பார்வையிலே சுட்டெரித்தாள்.
“மஹி..” என்ற தீரனின் கர்ஜிக்கும் குரலில் அவன் புறம் திரும்பியவளின் விழி நீர் பெருக்கெடுக்க அவள் அவளாய் இருந்த அந்த ஒரு நொடியில் தன் மார்பில் அவளை சாய்த்துக் கொண்டவன்,
“மஹி..! எனக்காக வந்துருடி ப்ளீஸ், மஹி..! கம் அவுட் ஃபரம் தேட் ஹெல் (அந்த நரகத்திலிருந்து வெளியே வா)” மஹி மஹி என்ற தீரனின் ஒவ்வொரு அழைப்பில் அவள் அவனுள் புதைந்து போனாள்.
“மஹி என்னால உன்னை உணர முடியுது, வா வெளிய வா மஹி, இது நீ தான், என்கிட்ட பேசு மஹி எனக்கு ஒரு வழிய காட்டு” எனக் கெஞ்சலாய், அவள் நெற்றி வகிட்டில் முத்தமிட அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவளின் இமைகள் பூட்டியிருந்தது. அவளின் இமைகள் திறக்க துடித்துக் கொண்டிருய்த கணம் மெலிதாய் ஒலித்தது அந்தக் குரல்.
“தீரன்..! தீரன்..” மகிழினியின் அழைப்பு அந்தக் குரலுக்கு சொந்தக்காரி அவள் தான் . என் மஹி தான் என அவன் மனம் அடித்துச் சொல்ல,
“தீரன் என்னை சுத்தி இருட்டா இருக்கு, அது என்ன உங்க கிட்ட வர விட மாட்டேன்து, உங்களுடைய குரல் எனக்கு எப்பயும் கேட்டுகிட்டே தான் இருக்கு என்னை விட்டு விலகாதீங்க தீரன் உங்களை என்னால பார்க்க தான் முடியலை உங்களுடைய குரலையும் உங்களுடைய அருகாமையும் நான் உணர்ந்துகிட்டே தான் இருக்கேன் “ என மகிழினி இமை திறக்காமல் அனைத்தையும் சொல்ல,
“மஹி கண் திறந்து என்னைப் பாரு. அந்த அது யாரு மஹி சொல்லு” எனத் தீவிரமாய்க் கேட்டான்.
“நான் கண் திறந்தா அது வந்திரும் தீரன், அந்த அது ..?” என அவள் எதோ சொல்ல வர அவளிதழ் தானாய் உச்சரித்தது,
“துருவா..!” என்றவளைத் தாங்கி பிடித்தருந்தவன் அவளை உற்று நொக்கினான்.
விழிகள் திறந்திருக்க இதழ் மர்மமாய்ப் புன்னகைக்கத் தாங்கி பிடித்திருந்தவளை பொத்தெனத் தீரன் கீழே போட அங்கிருந்து வேகமாய் எழுந்தவள் விரைந்து ஓடி,
இவை அனைத்தையும் அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த தாரிகாவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
“மகிழ் ஸ்லீப்” என்ற குரல் வந்த மறு கணமே இமை மூடி சரிந்தாள் மகிழினி.
அவளைத் தாங்கி பிடித்தபடி தீரன் அதிரந்து நின்றவன் குரல் வந்த திசை நோக்கி தன் பார்வையைச் செலுத்த அங்குப் புன்னகைத்தபடி நின்றிருந்தான் தீபன்..
“ஹே தீப்ஸ் நீ இங்க எப்புடிடா, மஹி எப்படி உன்னோட ஆர்டரா பாலோவ் பண்ணுறா” என அதிசயித்துக் கேட்டான் பிரகதீரன்.
“கூல் மேன்., பர்ஸ்ட் மகிழினியை பார்ப்போம் அப்பறம் நடந்ததை எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன், பை தி வே தாரிகா ஆல்சோ மை ப்ரெண்ட்” எனத் தீபன் சொல்ல,
சிறிது நேரத்தில் மகிழினியை தீக்ஷா மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்திருந்தனர் தீபனின் அறையில் பிரகதீரனும் தாரிகாவும் அமர்ந்திருக்க அங்கும் இங்கும் நடந்தபடி தீரனை பார்த்த தீபன்,
“நீ ஏன்டா அன்னைக்கே விசயத்தைச் சொல்லல, இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்குள்ள இருக்க எதோ ஒண்ணு இன்னும் அக்ரஸிவா ஆகியிருக்கும், இப்ப தாரிகாக்கு நடந்தது உங்க வீட்ல யாருக்காவது நடந்திருந்தா என்ன பண்ணிருப்ப?” எனத் திட்டியபடி தீரனைப் பார்க்க,
“அவ எதுவும் பண்ண மாட்டா, அவ ரொம்ப நல்லவ அவ என்னோட நக்ஷத்ரா” எனத் தீரன் சொல்ல,
“ அப்போ அவளுக்குள்ள வேற எதோ இருக்குன்றத தெரிஞ்சும் நீ வீட்ல வச்சிருந்திருக்க” என அவன் பேச அறையிலிருந்து விரைந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒட்டம் பிடித்தான் பிரகதீரன் அவனைப் பின் தொடர்ந்தபடி தாரிகாவும் தீபனும் செல்ல,
பிரகதீரனின் கால்கள் தடைபட்டு நின்றது அவளை அனுமதித்த அறையின் வாசலில்,
“பிரகா வேண்டாம் உள்ளே போகாதே” என அலறியபடி தீபன் வருவதற்குள் அறைக்குள் சென்றிருந்தான் பிரகதீரன்.
அறைக்குள் சென்றவன் அங்கே பிம்மபங்கள் தெரியும் அனைத்து கண்ணாடி சுவரையும் தீரைச்சீலை கொண்டு மறைத்தான் இதனை வினோதமாகப் பார்த்துக்கொண்டிருந்த இருவரின் கண்களுக்கும் பிரகதீரன் பைத்தியம் போலவே தெரிந்தான்.
பஞ்சு மெத்தையின் மேல் மென்மையாய் கண் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் அருகில் நெருங்கினான் பிரகதீரன், அவளின் கார் குழலை மெல்ல வருடியவன் “மஹி எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணுறேன்டி” எனச் சொல்லி அவளின் நெற்றியில் இதழ் பதிக்க,
“தீரன்” மென்மையாய் உச்சரித்தது மகிழியின் இதழ்கள், ஆழ்ந்த உறக்கத்திலும் அவன் பெயரை உச்சரித்தவளை தன்னவளை மீட்டெடுக்கும் பொருட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட,
பிரகதீரனை தன் அறைக்கு அழைத்து வந்தான் தீபன்.
“பிரகா உன் வொய்ஃப்க்கு என்ன பிரச்சனை தெரியுமா?” எனத் தீபன் கேட்க,
“தீபன், இதைத் தீரன்கிட்ட போட்டு காட்டுங்க “ எனத் தாரிகா சொல்ல தாரிகாவிடமிருந்த பென்ட்ரைவை வாங்கித் தன் லாப்டாப்பில் போட்டுக்காட்ட தீரனின் கண்கள் அகல விரிந்து அந்தக் காட்சிகளைப் பார்க்க தீரனுக்கோ உலகமே இருண்டது போலிருந்தது.
மஹியின் மாற்றங்களுக்கு நக்ஷத்ரா தான் காரணம் என நினைத்திருந்தவனுக்கு அந்த வீடியோ காட்சிகளில் கண்டது அனைத்தும் புதிராகவே இருந்தது என்ன தான் அது நக்ஷத்ரா இல்லை என்ற, யூகத்திலிருந்தாலும் அவளை ஆட்கொண்டிருக்கும் அந்தச் சக்தி யாரென்பது புலப்படவில்லை பிரகதீரனுக்கு.
அந்த வீடியோ காட்சிகளின் பதிவில் மகிழினி மெல்ல அந்த ஏரியின் அருகே நின்றுக்கொண்டிருக்க ஏரியின் நடுவிலிருந்து திடீரென ஊற்று பெருக்கெடுக்க அதைப் பார்த்து மகிழ்ந்தவள்,
“தாரி தாரி, ஒரு நிமிசம் இங்க வாடி என்னை நீ நம்பலைல இப்ப வந்து பாரு ஏரில தண்ணி வருது “ எனக் குரலெழுப்ப தாரிகா செவிகளில் அவள் பேசியது எட்டவில்லை என வருந்தியவள் ஏரியை பார்த்தபடி திரும்பி நிற்க அங்கு நடந்தேறியவற்றைத் தாரிகா மறைத்து வைத்திருந்த வீடியோ கேமரா பதிவு செய்துக்கொண்டிருப்பதை மகிழினியும் அறிந்திருக்கவில்லை அவள் பின்னே நின்றிருந்த அதுவும் அறிந்திருக்கவில்லை.
ஏரி நிரம்பி வழிய அந்த நீரை தொட்டுப்பார்க்க மகிழியின் கரங்கள் ஏங்க, மெல்ல தன் கால்களைப் பதித்து ஏரியில் இறங்க முற்பட்ட போது அவள் பின்னே நின்றிருந்த அந்த வெளிச்சம் அவளைச் சுழற்றி தூக்கி வீசியது பயத்தில் அவள் அலற,
“நக்ஷத்ரா” அந்த வெள்ளை உருவம் அழைக்க,
“யார் நீ? அந்த அசரீரி நீ தானே” என எழுந்து நின்று மகிழினி பேச அவள் கண்களில் பயம் துளியும் இல்லை அவள் சுழற்றி அடிக்கபட்டதில் சிறு காயங்களும் சிராய்ப்பும் ஏற்பட்டிருக்க அவள் நெற்றியில் குருதி வழிந்தோடிய படி இருக்க,
“இன்னைக்கி வந்தா என் முகத்தைக் காட்டுறேன், என் கனவுக்கு அர்த்தம் சொல்வதாகவும், நீ யாருனு தெரியபடுத்துறேன் சொன்ன, இப்ப என்ன ஒளி உருவில் வந்திருக்க?” என மகிழினி பேச,
“ஹாஹா ஹாஹா., நான் சொல்வதை நம்பி எத்தனை முறை தான் ஏமாறுவாய் நக்ஷத்ரா இந்தப் பிறவியிலும் நீ மாறவேயில்லை” என அந்த உருவம் கர்வமாய்ச் சிரிக்க அவள் புரியாமல் நின்ற வேளையில் அவளை மறுபடியும் தாறுமாறாய் அது தாக்கிது,
“உன்னால என்ன எதுவும் செய்ய முடியாது, ஏன்னா உனக்கு நான் தேவை அது எனக்குத் தெரியும்” எனக் குருதி வடிய நின்றிருந்தாள் மகிழினி.
“இந்த அசட்டு தைரியமும் இன்னும் உன்கிட்ட மாறலைல நக்ஷத்ரா” என அது மறுபடியும் வித்தியாசமான குரலில் பேச அந்தக் காட்டிலிருந்து வெளியேற முயற்சித்தாள் மகிழினி அவள் ஓட ஆரம்பிக்க அவளைத் துரத்த வேண்டிய அவசியம் அதற்குத் தேவை படவேயில்லை.
அவளருகே வந்த அந்த வெளிச்சம் அவளின் குருதி வழியே அவளுள் நுழைய முழுவதமாய் ஆட்கொண்ட அந்த ஒளியில் சிக்கி தவித்தாள் மகிழினி, காயப்பட்டிருந்த அவளின் வதனம் தானாய் சரியாக வில்லதனமாய்ச் சிரித்தது அவளுள் சென்ற அந்த ஒளி, இருளின் ஒளி.
“தீரன் உங்களுக்கு அது என்னனு தெரியுமா மகிழினி இதைபத்தி எதாவது பேசியிருக்காளா..?” எனத் தாரிகா கேட்க,
“இது நான் எதிர்பார்த்தது தான் தாரிகா, ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்கல, என்னோட மஹி இப்போ கஸ்டபட்டிட்டு இருக்கா அவளை நான் மீட்டெடுக்கணும், அவளுக்கு முற்பிறவி நினைவுகள் வருமென எதிர்பார்த்து தான் அந்த ஏரிக்கு அவளைக் கூட்டிட்டு போனேன் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல, எனக்கு என்னோட மஹி வந்தா போதும் நக்ஷத்ராவோட நினைவுகள் தேவையில்லை நானும் அவளுக்குத் தீரனாவே இருந்திட்டு போறேன், மஹியின் தீரனாவே இருந்திட்டு போறேன், என்னால தான் என்னோட மஹிக்கு இவ்ளோ வேதனை” எனத் தீரன் வருந்தி பேச
“ஹே பிரகா.! நீ நினைக்குற மாதிரி பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை, நான் எதுக்கு இருக்கேன், இது பல்வகை ஆளுமை நோய் (multiple personality disorder) மருத்துவ ரீதியில் நான் குணப்படுத்துறேன் “ எனத் தீபன் சொல்ல,
“இது மருத்துவத்தால குணப்படுத்த முடியாது தீப்ஸ், இதுக்கு வேற முறை இருக்கு” எனப் பிரகதீரன் உறுதியாய் நிற்க,
“இதை உளவியல் சிகிச்சை (psychotherapy) மூலம் சரி செய்யலாம், நான் இருக்கேன்டா” எனத் தீபன் சொல்ல,
“இல்லை தீப்ஸ் அவளை இந்தச் செந்நிலவு வரும் வரை மட்டும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்க எனக்குச் சில வேலைகள் இருக்கு அவளைக் கண்ணாடி மட்டும் பார்க்க விடாத” எனத் தீரன் சொல்ல,
“அப்போ அவ கூட நான் இருக்காவா..? தாரிகா கேட்க”
“இது என்னோட பிரச்சனை நானே பார்த்துக்குறேன் இதில் நீங்க யாரும் காயப்படுவதை நான் விரும்பவில்லை“ எனச் சொல்லி கிளம்பினான் தீரன்.
**********
அந்தி மாலைப் பொழுதில் அடர்மஞ்சள் வானில் மேற்கே மறைந்து கொண்டிருந்த ஆதவனும் அன்றைய செந்நிலவுக்குக் காத்திருக்க, மல்லி மணம் காற்றில் வீச மயில் தோகை இமைகளை அசைத்து, கார்குழலை சரி செய்தபடி படியிறங்கி வந்தாள் மகிழினி மருத்துவமனையிலிருந்து இன்று தான் வீட்டிற்கே வந்திருக்கிறாள் மகிழினி இந்த இரவுக்காகவே அவளை அழைத்து வந்திருந்தான் தீரன், அவள் உடம்பில் இருப்பது வேறு சக்தியாக இருந்தாலும் அதைத் தெரிந்தது போல் அவன் ஒரு கணம் கூடக் காட்டிக்கொள்ளவில்லை.
“ஹாப்பிப் பர்த்டே மஹி” எனத் தீரன் அவளை அணைக்க,
“துருவா..!” அவளழைக்க,
“மஹி இந்தப் பிறந்த நாள் உனக்கு மறக்க முடியாத நாளா மாத்த போறேன்” எனத் தீரன் அவளருகே வர,
“துருவா என்ன வீட்ல யாரையும் காணல, எங்கே போனாங்க” என அவள் சாதாரணமாய்க் கேட்க,
“மஹி இன்னக்கி உனக்குப் பிறந்த நாள்ல சிறப்புப் பூஜைக்கு நம்ம குலதெய்வ கோவிலுக்குப் போயிருக்காங்க எல்லாரும், நம்மளை தனியா விட்டு” என அவள் காதுகளில் கிசுகிசுக்க,
“ஆஹான் அப்படியா.? துருவா” என்றவள் அவன் தோள்களில் கைகோர்த்தபடி அவன் விழியை நோக்க,
அவளின் உற்று நோக்கும் பார்வையும் அவள் மீதிருந்த ஒரு வீத நறுமணமும் அவனை எரிச்சலடைய செய்யப் பட்டென விலகியிருந்தான் தீரன்.
“என்னாச்சு துருவா ஏன் விலகிப் போறீங்க, இன்று தானே செந்நிலா.?” கேள்வியாய் அவன் விழியை அவள் மறுபடியும் ஆழ்ந்து நோக்க,
“ஏய் மஹி ராத்திரி ஒரு மணிக்கு தான் பௌர்ணமி ஆரம்பம் அப்போ தான் செந்நிலவும் ஆரம்பம் , ஏன் இது உனக்குத் தெரியாதா.? பூர்வ ஜென்ம நினைவு உனக்கு வந்துச்சா இல்லையா?” என அவன் பேச,
“ஹான்! நினைவிருக்கு துருவா” என அவள் சொல்லி அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டாள்.
மகிழினி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிலிருந்து அவளை ஆழ்நிலை உறக்கத்தில் வைத்தபடியே பார்த்துக்கொண்டான் தீரன், தீபனின் உதவியுடன் அவள் உறக்கத்தில் இருக்கும் போது அந்தத் தீயசக்தியால் அவளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதை அறிந்தே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான் தீரன்.
அது உடலில் இருப்பதை மகிழினியால் உறக்கத்திலும் உணர முடிந்ததையும், அதை நினைத்து அவள் வருந்தி கண்ணீர் விட்டதையும் அவனால் உணர முடிந்தது, மஹியின் உடலில் இருக்கும் வரை தான் அதன் சக்திகள் வேலை செய்கிறது என்பதையும் தீரனால் தெளிவாக உணர முடிந்தாலும், மஹி உறக்கத்தில் இருக்கும் பொழுதே தைரியத்தையும் அவளை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு பிரியேன் எனச் சொல்லி வைத்திருந்தான்.
தாரிகாவும் தீரனுக்கு உறுதுணையாய் நிற்க இப்படி ஒரு தோழி மகிழினிக்கு கிடைத்திருப்பதை நினைத்து பெருமையும் கொண்டான் தீரன்.. அதே சமயம் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழினியின் நிலையைத் தெளிவாய் விளக்கியிருந்தவன் அவளிடமிருந்து குடும்பத்தை விலக்கி வைக்க நினைத்து அனைவரையும் விஜயலட்சுமியின் வீட்டில் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான்..
அவள் உடம்பில் ஆட்கொள்ளும் தீய சக்திக்கு மகிழினியின் பயமே பலமாய் இருப்பதை உணர்ந்திருந்தான் தீரன், அன்றைய பௌர்ணமி நிலவே அத்துனை குழப்பங்களுக்குத் தீர்வு தரும் இரவாக அமைய போவதை எண்ணி ஒரு புறம் நிம்மதியடைந்தாலும், மகிழினியின் உடலும் மனமும் இதைத் தாங்குமா அதன்பின் மஹி தன்னை ஏற்றுக்கொள்வளா என்ற பயமும் சேர்ந்து வர, அவன் மனதில் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்திருந்தான் பிரகதீரன்.
அவள் உடம்பில் இருக்கும் தீய சக்தி யாரென்பதை அறிய அவன் இதைச் செய்தே ஆக வேண்டும் இதில் மகிழினிக்கு பெரிய ஆபத்து இருக்கிறது என்று அறிந்திருந்தாலும் பிரகதீரன் அந்த அக்னி பரீட்சையைச் செய்தே ஆக வேண்டும் மறுபடியும் இருவரும் உயிரோடு வருவது அரிது என்பதை அறிந்தவனுக்கு மரணத்தையும் தன்னவளுக்காக ஏற்க தயாராக இருந்தான் பிரகதீரன்.
என்ன தான் முன் ஜெனம்ம தேடலில் அவனின் மஹியை கண்டெடுத்திருந்தாலும் இப்பொழுதெல்லம் நக்ஷத்ராவை விட மஹியை அவன் அகம் அதிகம் தேட ஆரம்பித்துள்ளது, துறு துறு கண்களும், வெடுக்கெனப் பேசும் அவளின் பேச்சையும் மனம் கேட்க ஏங்கி தவிக்க, அவனின் மஹியை காண கண்கள் ஏங்க தன் அறைக்குள் விரைந்து புகுந்தான் பிரகதீரன்.
“மஹி ..! உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திக்கிட்டு இருக்கு கிளம்பலாமா” கேள்வியாய் அவள் விழி பார்த்தான் துருவன்.
“இந்த நாளுக்காகத் தானே துருவா., இத்தனை ஜென்மங்கள் கடந்த தவம்” என மகிழினியின் உடலில் ஆட்கொண்டிருந்த அது பேச,
“அப்போ அதுவரைக்கும்“ எனச் சொன்னவன் கையில் வைத்திருந்த சிவப்பு நிற துணியைக் கொண்டு அவள் கண்களைக் கட்ட,
“துருவா என்ன பண்ணுற..?! கட்டில் இருந்து என்னை விடுவி” என்றாள் அவள்.
“கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ மஹி” என்றவன் அவளைக் கைகளில் ஏந்தி நடக்க ஆரம்பித்தான்.
காரின் முன்னிருக்கையில் அவளை அமரவைத்தவன் “நான் சொல்லுற வரைக்கும் இந்தக் கட்ட நீ அவிழ்க்கக் கூடாது” எனச் சொல்லி அவளிடமிருந்து விலகியவன்
ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க சீறிபாய்ந்த வாகனம் அந்தத் தேக்கு மரமும், பனைமரமும் சூழ்ந்த காட்டில் வந்து நின்றது.
“துருவா,ஏரிக்கு தானே வந்திருக்கோம்” கட்டை அவிழ்க்காமலே அவளால் உணர முடிந்தது.
“எப்படிச் சரியாகச் சொன்ன மஹி” எனத் தீரன் கேட்க,
‘நான் அடைப்பட்டிருந்த இடம் எனக்குத் தெரியாதா என்ன, கண்ணைக் கட்டி விட்டால் உலகமே இருண்டு விடுமா என்ன.?’ என அது நினைக்க,
“ஹே மஹி .! வெயிட் நான் சொல்லுற வரைக்கும் கட்டை எடுக்கக் கூடாது” எனச் சொன்னவன்,
தன் கைகளில் அவளை ஏந்தி ஏரியை நோக்கி நடந்தான் தீரன்.
“துருவா..!” அவள் உச்சரிக்கும் போதெல்லாம் தன்னவள் இவள் இல்லை என்ற எண்ணமே அதிகமாய்த் தோன்ற பதிலெதும் சொல்லாமல் அமைதியாய் நடக்க ஆரம்பித்திருந்தான் தீரன்.
“துருவா, என் கண்களையும் கட்டிவிட்டாய்., இப்படிப் பேசாமல் மௌனம் காப்பது ஏனோ, தங்களின் குரல் என் செவிகளில் இந்த ஜென்மம் நிறைவேறும் தருணம் வரையிலும் கேட்டுக்கொண்டே என் உயிர் பிரிய வேண்டும், எதாவது பேசுங்கள் “ எனச் சொல்லிக்கொண்டே இருந்தது மகிழினியை ஆட்கொண்டிருந்த சக்தி பேச,
“மஹி உனக்கு நினைவிருக்கா, இதே செந்நிலவு நீயும் நானும், இதே மின்னும் நட்சத்திர ஏரியில் “ என அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“துருவா .. இதெல்லாம் இப்போ தேவையற்ற பேச்சு, அப்படி என்ன தான் எனக்கு ஆச்சரியம் தர காத்திருக்கிறாய்..?” அது கேட்க,
“மஹி இதோ உனக்கான ஆச்சரியம்” என்றவன் கையில் ஏந்தி வைத்திருந்தவளை அப்படியே அங்கு நிரம்பி வழிந்திருந்த ஏரியில் தொப்பென்று போட கண்கள் கட்டிய வண்ணம் நீரிக்குள் அவள், முழ்குவதைப் பார்த்து வில்லத்தனமாய்ச் சிரித்தான் பிரகதீரன் சிரித்தபடி அவனும் அந்த நீருக்குள் குதித்தான்.
‘ஆம் நாங்கள் இனி சொர்கத்திலாவது சேர்வோம் மஹியின் உடலில் இருந்து அந்தச் சக்தியை வெளியேற்ற இது ஒன்றே வழி மஹி நானும் உன்னுடன் வருகிறேன் உன் தீரனாய் , துருவனாய் அல்ல’ என அவன் மனம் நினைக்க அவன் இமைகள் மெல்ல தாழிட அவன் கைகளில் அகபட்டிருந்தது மஹியின் கைகள்.
“இன்னொரு ஜென்மத்திலாவது நம் காதல் சேருமா என் மஹி” என அவள் விழிகளில் கட்டியிருந்த துணியைக் கழற்றவும்,மெல்ல இமைகள் திறந்து தன்னவனைப் பார்த்தவள்
“தீரன்” என்றாள் தீரனின் மஹி.
அவளது அந்த மெல்லிய அழைப்பு, அவனது ஆன்மாவைத் தொட்டு மீட்டியது. அங்கே பூர்வ ஜென்மத்தின் பாரமோ, துருவனின் தேடலோ இல்லை. தன் உயிரைத் தனக்காக ஏந்தி நிற்கும் பிரகதீரன் மட்டுமே நிறைந்திருந்தான்.
அலைகளைக் கிழித்துக் கொண்டு இருவரும் கரையேற, வானத்துச் செந்நிலவு தன் அடர் சிவப்பை இழந்து தூய வெண்மையாய் மாறியது.
நடுங்கும் உடலோடு தழுவியவளை அள்ளித் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் தீரன்.

