
உணவை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற இரு பெண்களின் முகமும் களையிழந்திருந்தது. அதனை இருவருமே தங்களுக்குள் மறைத்துக்கொள்ள, பவித்ராத்யாவைக் கண்டதும் கண்களில் காதலை வழிய விட்ட அக்னி வேந்தனை நிமிர்ந்து பார்த்தாளில்லை.
இருவரும் இல்லத்தை அடைந்து விட்டபோதும் அக்னி வேந்தனின் பேச்சுக்கெல்லாம் ‘ம்ம்’ மட்டுமே கொட்டினாள்.
“ஆர் யூ ஆல்ரைட் ஆத்யா? உடம்பு சரி இல்லையா?” என்று அவள் நெற்றியில் தொட்டுப்பார்த்தான் அக்கறையாக.
கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியவள் “அதெல்லாம் இல்லையே நல்லா தான் இருக்கேன்…” என்றவள், “உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள்.
இருவரும் இன்னும் காரில் இருந்து இறங்கவில்லை.
“எத்தனை விஷயம் வேணாலும் பேசு…” மென்புன்னகை இதழ்களை அலங்கரிக்க அவள் கையைப் பற்றிக்கொள்ள முனைய, வெடுக்கென கையை பின்னிழுத்துக் கொண்டதில் அவனது புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
“இங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு ஸ்கூல்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணேன். அங்க வேலை கன்ஃபார்ம் ஆகிடுச்சு. சோ நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்… இன்னைக்கே யோகா கிளாஸை முடிச்சுக்கலாமா?” வெகு கடினப்பட்டு வார்த்தைகளைத் தேடி உபயோகித்தாள்.
அவளையே பார்வையால் அளந்தவன், “அதுக்கென்ன டைமிங் மாத்தி வச்சுக்கலாம். ஸ்கூல் முடிச்சுட்டு க்ளாஸ் எடு…” என்றான் கூர்மையாக.
“இல்லங்க அது சரிவராது.”
“என் வீட்ல யாரும் எதுவும் சொன்னாங்களா?” பட்டென கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள், “இல்லையே” என்றிட,
“அப்பறம் என்ன இந்தத் திடீர் முடிவு?” எனக் கேட்டான்.
ஏற்கனவே யோசிச்சது தான்…
“ஓஹோ! சரி உன் இஷ்டம். கொஞ்ச நாளைக்கு வெளில வேலைக்கு போனா உனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். பட், அதுக்கு அப்பறம் உனக்கு இங்கயே நிறைய வேலை இருக்கும் ஆத்யா. இங்க இருக்குறவங்களுக்கு வேலை வாய்ப்பு மேனேஜ்மெண்ட்டை உன்னைப் பார்த்துக்க வைக்கலாம்னு நினைச்சேன். சோ ரொம்ப நாள் எடுத்துக்காத… ஓகேவா?”
அவனது பேச்சிலேயே அவளை அவனது உயிரான இல்லத்தின் ஒரு பகுதியாக இணைத்திருப்பது புரிந்தது.
எச்சிலை விழுங்கியவள், “நான் ஏன் பார்க்கணும்?” எனக் கேள்வி எழுப்ப,
காரில் இருந்து இறங்க முற்பட்டவன் இக்கேள்வியில் நின்றான்.
“ஏன்னா? என் வைஃப் என்னோட பிசினஸை பார்த்துக்கணும் தான?” அழுத்தமாய் கூறினான் அக்னி வேந்தன்.
கீழுதட்டை அழுந்தக் கடித்தவள், “அதை நீங்க மட்டும் முடிவு பண்ணுனா போதுமா?” என நிமிர்ந்து முறைத்தாள்.
“வேற யார் முடிவு பண்ணனும்?”
“நான் பண்ணனும்!”
“உன் முடிவு என்னவோ?” நக்கலாய் கேட்டாலும் சினத்தில் கையை இறுக்கி மூடிக்கொண்டான்.
“என்னால உங்க ப்ரோபோசலை அக்செப்ட் பண்ணிக்க முடியாது” பல்லைக்கடித்து கண்ணீரை அடக்கிக்கொண்டு கூறினாள்.
“ஏனாம்?” அந்த ஏளனக் கேள்வி அவளை உண்மையிலேயே கோபப்படுத்தியது.
“ஏன்னா? ‘உன்னை லவ் பண்றதே பெருசு. இதுல சூஸ் பண்ற உரிமையெல்லாம் உனக்கு யாரு குடுத்தது’ன்னு கேக்குறீங்களா?” அவனிடம் பொரிந்து விட்டாள்.
“லூசாடி நீ. பதில் தெரிஞ்ச என்கிட்டயே தப்பான பதில் சொல்ற? வேற எப்படி கேக்குறது” அவனும் கத்தி விட, அவளுக்கு கண்ணை கரித்தது.
பெருமூச்சை எடுத்து விட்டு தன்னை சமன்செய்தவன், மீண்டும் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“என்னாச்சுடா?” அவ்வொற்றைக் கேள்வி அவள் உயிரையே உருவும் வலியை கொடுப்பதை அவனுக்கு எப்படி புரிய வைப்பது!
“ஒண்ணுமே இல்ல. என் விருப்பத்தை சொன்னேன்” அவனை ஏறிடாது கூறினாள்.
“உண்மையிலேயே உன் விருப்பம் இதுவா இருந்திருந்தா ஓகே… ஆனா உன் விருப்பம் இது இல்லடி! என் பாட்டி எதுவும் சொன்னாங்களா?” அவளைத் துருவினான்.
“அந்தக் கெழவி என்ன சொல்றது? அதான் சொல்ல வேண்டியது எல்லாம் அன்னைக்கே சொல்லி முடிச்சுட்டாங்களே. ஒரே வார்த்தைல அனாதைன்னு… போதும்ங்க! ஆல்ரெடி உங்க குடும்பதுனால நான் எல்லாத்தையும் இழந்துட்டேன். இனியும் எதையும் இழக்க விரும்பல”
அக்னி வேந்தன் பேச வரும்போதே அவனைத் தடுத்தவள், “ஆமா உங்க மேல ஒரு சின்ன விருப்பம் இருந்துச்சு. ஆனா யோசிச்சு பார்த்தா, என் குடும்பத்தையே உருக்குலைச்ச குடும்பத்துல மருமகளா போக எனக்கு ஆக்வர்டா இருக்கு. ஒருவேளை என் அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தா கூட, அவங்களை நிம்மதியா இருக்க விட்டுருக்க மாட்டாங்கள்ல…
உங்க குடும்ப சவகாசத்தை என் அக்கா வேணும்னா பொறுத்துப்பா. என்னால எல்லா நேரமும் கடி வாங்கிட்டு, சண்டை போட்டுட்டு இருக்க முடியாது. என்னைக்கா இருந்தாலும், என் அப்பா அக்கான்னு எல்லாரையும் கஷ்டப்படுத்துனவங்க முகத்துல முழிக்க வேண்டியது இருக்கும். என்னால முடியாதுங்க…” என்று தீர்க்கமாக கூறி விட்டாள்.
“ஏய் பைத்தியம் மாதிரி பேசாதடி. என் அண்ணனை கஷ்டப்படுத்துன யாரையும் நான் சும்மா விட மாட்டேன். எனக்குப் புரியுது… அவங்களுக்கு நடந்த கல்யாணத்துல அவங்களை விட நீ அதிகமா ஹர்ட் ஆகியிருக்க. என்ன இருந்தாலும் அம்மா, அப்பா இல்லாம அக்காவாவே இருந்தாலும் இன்னொருத்தர் வீட்ல இருக்குறது கஷ்டம் தான். பட், உன்னை நான் யார்கிட்டயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்டி. உன் வலிக்கும் சேர்த்து அவங்ககிட்ட இருந்து வசூலிக்காம விட மாட்டேன். உன்னை விரும்பாம போயிருந்தா கூட, என் திலோவோட தங்கச்சிக்காகவே இதெல்லாம் நான் செஞ்சுருப்பேன். ஆனா இப்ப நீ… நீ இங்க இருக்கடி” என இதயத்தைத் தட்டிக் காட்டியவன்,
“ஐ லவ் யூ ஆத்யா. என் அண்ணனை எந்த அளவு பிடிக்குமோ அதே அளவு உன்னையும் பிடிச்சுருக்குடி. எனக்கு கொஞ்சம் டைம் குடு. எல்லாத்தையும் நான்…” என அவன் பேச பேச அவளுள் ரத்தக்கண்ணீர் வந்தது.
“போதுங்க… எனக்காக யாரும் எதையும் செய்ய வேண்டாம். ப்ளீஸ்ங்க என்னை விட்டுடுங்க” என காரில் இருந்து இறங்க போக, அவனது பொறுமை பறந்தது.
அவளது கையை இறுக்கிப் பிடித்தவனின் விழிகளில் அனல் தெறித்தது.
அவன் பிடித்த இடம் வலியைக் கொடுக்க, தானாய் கண் கலங்கியது அவளுக்கு.
“வலிக்குது அக்னி!”
“உனக்கு மட்டும் தான் வலிக்கும்னு நினைக்காத!” சீறியவன் பிடியைத் தளர்த்தினான். அவனது கூற்றில் உடைந்தவளிடம்,
“உன் சாலரி செட்டில்மெண்ட்ட முடிச்சுட்டு கிளம்பு…” எனக் குளிர்கண்ணாடியை மாட்டிக்கொண்டு இயல்பாக இறங்கிச் சென்று விட்டான்.
தடுமாறிப்போனதென்னவோ பவித்ராத்யா தான்.
அவ்வளவு தானா!? வேற என்ன எதிர்பார்க்கிறாளென்று அவளுக்கும் தெரியவில்லை.
காரிலேயே அமர்ந்து ஒரு மூச்சு அழுதவள், நன்றாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கீழிறங்கினாள்.
அதற்குள் அவள் வகுப்பை முறித்துக் கொள்ளும் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியது.
“என்ன டார்லிங்… திடீர்னு க்ளாஸ் இல்லைன்னு சொல்ற?” குருமணி கேட்டதில்,
“அது வந்து அங்கிள்… ஸ்கூல்ல வேலைக்கு சேரலாம்னு இருக்கேன் அதான்…” என்றாள் தயக்கத்துடன்.
“அகிட்ட சொன்னா ஸ்கூலே ஆரம்பிச்சு தருவானே பவி?” ஜெயசுதா கிண்டலடித்தார். இத்தனை நாள்களில் இருவரது விழிப்பார்வையில் இல்லத்திற்கே அவர்களது உறவு தெரிந்திருந்தது.
வலுக்கட்டாயமாக முறுவலித்தவள், அதற்கு பதிலேதும் அளிக்கவில்லை.
தேவாரமும் ஏதோ பேசவர, அவரைத் தடுத்த விஜயா “எதுவும் பிரச்சினை இல்லையே?” என வினவியதில்,
“அதெல்லாம் இல்லையே… இனி அத்தானும் வந்துடுவாங்க தான இங்க. எனக்கும் ஒரு கேரியர் பில்ட் பண்ணனும்” என முடித்துக்கொண்டவளிடம் வேறன்ன கேட்பது.
“உன்னை மிஸ் பண்ணுவோம் பவிமா. அப்போ அப்போ வந்துட்டுப் போகணும்” ஜெயசுதா வருத்தமாகக் கூறியதில், அவளுக்கு மூச்சே முட்டியது.
“நானும் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்… உங்க கூட பேசும்போது என் அம்மா, அப்பா கூட இருந்த மாதிரி இருந்துச்சு” என்றவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.
உடைந்து விடக்கூடாதென்றே கண்ணை சிமிட்டி கண்ணீரை அடக்கினாள்.
விஜயா தான், அவளை யோசனையாகப் பார்த்தார். வகுப்பை தானே துண்டித்தாள் பிறகேன் இத்தனை வலி அவளிடம்.
பெரியவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தவள், அக்னி வேந்தனின் அறைக்குத் தயக்கத்துடன் சென்றாள்.
மடிக்கணினியில் புதைந்திருந்தவன், அவளைச் சற்றும் நிமிர்ந்து பாராது, அவளது சம்பளத்திற்கான செக்கை அவள் புறம் வைத்தான்.
அதற்கு மேல் அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையென்பது போல மீண்டும் மடிக்கணினியிலேயே மூழ்கி விட்டதில் முகம் கறுத்து விட்டது பவித்ராத்யாவிற்கு.
அந்தப் பணத்தை வாங்க கூட விருப்பமில்லை. ஆனால், வாங்காது போனால் மீண்டும் இதை வைத்து அவன் வம்பு வளர்ப்பான் என்று புரிய, அந்த செக்கை எடுத்துக்கொண்டு விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள்.
நேராய் வீட்டிற்கு சென்று அறைக்கதவை அடைத்தபிறகு தான் அவளுக்கு மூச்சே வந்தது.
அவனை எதிர்கொள்வது அத்தனை வலியாய்!
தேம்பி தேம்பி அழுதாள்.
‘உன்னை யார்கிட்டயும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்டி’ அவ்வாசகம் ஒன்றே இப்பிறவிக்கு அவளுக்கு போதுமானதாய் இருந்தது. அத்தனை அழுத்தம்.. அத்தனை நேசம் அவ்வார்த்தையில்.
மாலை வரையிலும் அறைக்குள்ளேயே அடைந்திருந்தாள். நிவேதா திலோத்தமா இருவரும் மருத்துவமனையில் இருக்க, அவளது கண்ணீரை யாரும் அறியாமலே போயினர்.
மாலை தாண்டி ஹாலில் பேச்சு சத்தம் கேட்டபிறகு தான், முகத்தை நன்றாக கழுவி அழுந்த துடைத்துக் கொண்டவள், வெளியில் வந்தாள்.
சவுந்தரவல்லி, சிவக்குமார், இனியா, மனோஜ் என அனைவருமே சோபாவில் அமர்ந்திருக்க, அவர்களைக் கண்டதும் அவள் அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘இதுங்களை முதல்ல துரத்தி விடணும்’ பல்லைக் கடித்திருந்த சவுந்தரவல்லிக்கு மனோஜ் கண்ணைக் காட்டினார்.
நிவேதாவும் அக்னி வேந்தனும் மருத்துவமனையில் இருந்து அப்போது தான் வந்திருந்தனர்.
“தம்பி… இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போகணும்” சவுந்தரவல்லி ஆரம்பிக்க, நிவேதா முணுமுணுத்தார்.
‘அதான் உங்க பேரன் ஏற்கனவே பார்த்துட்டானே’
ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்த அக்னி வேந்தன், “போய்டலாம் பாட்டி. நான் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்.” எங்க? யார்? பொண்ணு என்ன பண்றா? கேரக்டர் என்னவென அரை மணி நேரத்திற்கு வளவளத்து பெரியவர்களுக்கு தொண்டை வலியையே ஏற்படுத்தி விட்டான்.
சிவக்குமாரோ, “எல்லாத்தையும் இப்பவே கேட்டுடணுமா அகி. பொண்ணை பார்த்து நேராவே பேசிட வேண்டியது தான” என சிரித்தவர், “அம்மா… நாளைக்கு விக்ரம் வீட்டுக்கு வந்ததும் போகலாமே” என ஆசையாக கேட்டார்.
“இன்னைக்கு நல்ல நாள் சிவா…” சவுந்தரவல்லி மறுக்க,
அக்னி வேந்தனும், “ஆமாப்பா…விக்ராண்ணா ஹாஸ்பிடல்ல வந்துட்டு உடனே எல்லாம் அலைய முடியாது ரெஸ்ட் வேணும்ல… நாமளே பார்த்துக்கலாம்” என்ற நேரம் கையில் காபி ட்ரேயுடன் அங்கு வந்த பவித்ராத்யா அங்கு வெறும் பார்வையாளராக நின்றிருந்த நிவேதாவிடம் நீட்டினாள்.
அவளுக்கு முறுவலை கொடுத்து விட்டு அனைவர்க்கும் காபியை கொடுத்திட, பவித்ராத்யா தான் ‘இவன் பண்ற இந்த லுலுவாய் பொண்ணு பார்க்க இத்தனை கேள்வி கேட்குறான்’ என சலித்தாலும் இம்முறையுடன் காரணம் சொல்லித் தட்டிக் கழித்ததும் சவுந்தரவல்லியின் முகம் போகும் போக்கை எண்ணி சிரிப்பு வந்தது.
அவளை ஓரக்கண்ணில் பார்த்திருந்த அக்னி வேந்தனுக்கு அவளது எண்ணமெல்லாம் அத்துப்படி.
“ஆனா பாட்டி…” என இழுத்தவனை சவுந்தரவல்லி திகிலாகப் பார்த்தார்.
ஏற்கனவே பவித்ராத்யாவும் அவனும் ஒன்றாக பேசி சிரிப்பதெல்லாம் அவர் அறிந்த ஒன்று.
“என்னப்பா?”
“இன்னைக்கு அம்மாவையும் கூட்டிட்டுப் போகலாம்” என்றவனை நிவேதா வியப்பாகப் பார்க்க, பவித்ராத்யாவிடம் சிறு அதிர்வு.
“அவ எதுக்கு?” எரிச்சலுற்ற பாட்டியிடம்,
“அதில்ல பாட்டி… இந்த தடவை ஓகே சொல்ற மைண்ட்செட்லேயே போகலாம். எனக்கும் பொண்ணு பார்த்து பார்த்து போர் அடிச்சுடுச்சு. சோ அம்மாவையும் கூட்டிட்டு போய்ட்டா ஒரே வேலையா முடிஞ்சுடும்” என்று திட்டம் கூறிட, அவருக்கும் சரியென பட்டதில் அமைதியாகி விட்டார்.
‘எந்த பொண்ணை நான் ஓகே சொல்லுவேனோ அங்க மட்டும் தான் அம்மாவை கூட்டிட்டுப் போவேன்’ ஆடவனின் வாசகம் காதில் எதிரொலித்து இம்சை செய்தது.
வேண்டுமென்றே தன்னை வெறுப்பேற்றுகிறானா? என்ற ரீதியில் அவனை ஆராய, அவனோ காபியில் மட்டுமே கவனத்தைப் பதித்ததில், நொந்து போனாள். அவளது பார்வையை உணர்ந்து அவனும் நிமிர்ந்து தனது கூர்விழிகளால் அவளைக் காயம் செய்ய, அக்கூர்மையில் சிக்குண்டு சில நொடிகள் திகைத்திருந்தவள், சட்டென பார்வையை மாற்றிக்கொண்டாள்.
இதற்கு மேல் இங்கே இருந்தால், அவளை மீறியும் அவளது நயனங்கள் ஆடவனை தீண்டி விடும். மனதை மறைக்க ஈரத்துணிகளை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்.
அவள் பின்னோடு அக்னியும் வந்ததில் தவித்துப் போனாள்.
“எனக்குப் பொண்ணு பார்க்க நீ வரல?”
“நான் எதுக்கு வரணும்?” பவித்ராத்யா முணுமுணுக்க,
“பிடிச்ச பொண்ணை செலக்ட் பண்ண தான்” என்றான் அசட்டையாக.
“உங்களுக்குப் பிடிச்சா போதும்ல. எனக்கு ஏன் பிடிக்கணும்?” துணியைக் காயப் போட்டபடி கேட்டாள்.
“எனக்கு மட்டும் பிடிச்சா போதுமா?” வினவளுடன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, வேகமாய் பின்னே நகர்ந்தவள் துணி வைத்திருந்த வாளியில் கால் தடுக்கி விழப் போனாள்.
அவளது இடையைப் பற்றி விழாமல் பிடித்துக் கொண்டவன், “அப்போ உனக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்லையா?” என்றான் இரட்டை அர்த்தத்துடன்.
“இல்ல… விடுங்க” என அவனது கைகளில் நெளிந்தவளை தொம்மென கீழே விட்டான்.
“ஐயோ” என இடுப்பைப் பிடித்துக் கொண்டவள்,
“ஏன் விட்டீங்க?” என முறைத்திட,
“நீ தான ஆத்யா விட சொன்ன” என்றான் நல்ல பையனாக.
“விட சொன்னா விட்டுருவீங்களா?” வாளியில் இருந்த நீர் முழுதும் அவள் மீது பட்டதில் நனைந்திருந்தாள்.
“அப்போ நீ விட சொன்னா, நான் விடக் கூடாது ரைட்?” ஆடவனின் இரு புருவங்களும் வில்லாய் வளைந்திட, பவித்ராத்யா பேச்சற்றுப் போனாள்.
“நீங்க விதண்டாவாதம் பண்றீங்க…” உடையில் இருந்த நீரை உதறியவள், அவன் முன்னே ஈரத்துணியில் நிற்க இயலாமல் நகரப்போக, அவளது இடையை இறுக்கிப் பிடித்தான்.
“அக்னி ப்ளீஸ்…” கண்ணில் நீர் நிறைந்து விட்டது.
“கடைசியா கேட்குறேன். உன் மனசுல இருக்கறதை ஒத்துப்பியா மாட்டியா?”
“நான் என் மனசுல இருக்குறதை ஏற்கனவே சொல்லிட்டேன்…” குரல் கம்மியது அவளுக்கு.
“அப்போ விட்டுடவா?” ஆடவனின் ஆழ்குரல் என்னவோ செய்தது.
நீர் திரையிட்ட அவளின் நயனங்கள் கூறுகிறதே அப்பட்டமான காதலை.
அவளின் தவிப்பு அடங்க அவ்விழிகளில் அழுத்த முத்தமிட்டான்.
புழுவாய் துடித்து நகன்றவள், “உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? நான் தான் உங்களை பிடிக்கலைன்னு சொல்றேன்ல. ஏன் இப்படி பண்றீங்க? யாரும் இல்லாத அனாதைன்னா, உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க உங்க இஷ்டத்துக்கு தப்பா நடந்துப்பீங்களா?” என அவனைத் தடுக்கும் வழியறியாது கத்தி விட, சுறுசுறுவென சினம் மிகுந்தது அவனுக்கு.
ஆத்திரம் பீறிட, தன்னை மீறியும் அவளை அறையக் கை ஓங்கியவன், பயத்தில் கண்ணை மூடி நின்றவளின் தோரணை கண்டு முயன்று அடக்கிக் கொண்டான்.
“இனி நீயே விடவேணாம்னு சொன்னாலும், என் மூச்சு காத்து கூட உன் பக்கம் வராது” ஒட்டு மொத்த வெறுப்பையும் ஒற்றை வரியில் உமிழ்ந்து விட்டு புயல் போல சென்றவனை இமைக்க கூட இதயம் மறுக்க கனத்த இதயத்துடன் வெறித்திருந்தாள் பவித்ராத்யா.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
54
+1
2
+1
1

