
அடுத்த ஒரு வாரமும் தாயின் இறுதி மூச்சில் கூட அருகில் இல்லாது போன வேதனையிலேயே உழன்றாள் திலோத்தமா.
“திலோ ப்ளீஸ்… கொஞ்சமாவது அழுகையை நிறுத்து” தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தவளிடம் ஆடவனும் கெஞ்சினான்.
“அம்மாவுக்கு சரியாகிடும்னு தான் சொன்னாங்க விக்ரம்… இப்படி எதிர்பார்க்கவே இல்ல” எனத் தேம்பி தேம்பி அழுதவளை இழுத்தணைத்து சமன்செய்ய கூட இயலவில்லை அவனால்.
ஏற்கனவே தாயின் இழப்பில் துவண்டிருப்பவள், தான் அரவணைத்தால் உரிமை எடுத்துக்கொள்வதாக பயந்து விடுவாளோ என்ற கவலை அவனுக்கு.
விக்ரமின் கசங்கிய முகம் உணர்ந்த பிறகு தான், தானும் மெல்ல மெல்ல நிஜத்தை ஏற்றுக்கொண்டாள். சுந்தரத்தையும் பவித்ராத்யாவையும் கும்பகோணத்தில் தங்க வைத்து விட்டதாகவும், தனது வீட்டாரால் ஆபத்து இல்லையெனவும் திலோத்தமாவிற்கும் புரிய வைத்தான்.
இருவரும் ஹோட்டலில் தான் தங்கி இருந்தனர்.
ஆனால் அங்கேயே எத்தனை நாள்கள் இருக்க இயலும்? விக்ரமின் நண்பன் சென்னையில் இருந்ததால், அவன் மூலம் வேறொரு சிம் கார்டை உபயோகித்து, அக்னி வேந்தனிடம் பேசி விடத் துடித்தான் விக்ரம வேந்தன்.
ஆனால், அக்னி வேந்தனுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், குறுஞ்செய்தி அனுப்பியும் கூட பலனில்லை. எதற்கும் அவன் பதில் அனுப்பவில்லை. அவனது எண்ணிற்கு அழைத்து ஓய்ந்து விட்டான்.
“என்னாச்சு விக்ரம் அகி போன் எடுக்கலையா?” திலோத்தமா அழுது அழுது வீங்கிய முகத்துடன் கேட்க,
“இல்ல திலோ… இந்நேரம் துபாய்ல இருந்து வந்துருப்பான். ஆனா ஏன் எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டுறான்னு தெரியல. என் பிரெண்டை பார்க்க அனுப்பி இருக்கேன்” எனும்போதே அவனது நண்பன் கிஷோரிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு மச்சான்… அகியை பார்த்தியா?” விக்ரமின் ஆர்வத்தில் கிஷோருக்கு வருத்தம் மேலோங்கியது. விக்ரமின் பள்ளிக்கால தோழன். பல வருடங்களுக்கு முன்னே சென்னையில் செட்டில் ஆகி விட்டான். அவனுக்கும் இருவரது பிணைப்பும் நன்கு பரிட்சயம்.
“நான் கோயம்புத்தூர்ல தான் இருக்கேன் மச்சான். அகி ஊர்ல இருந்து வந்துட்டான். நான் உன்னைப் பத்தி அவன்கிட்ட தனியா பேசலாம்னு ட்ரை பண்ணேன். ஆனா முடியல. வேற வழி இல்லாம, உன் வீட்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போய்ட்டேன்.
அங்க எல்லாருமே ஹால்ல தான் இருந்தாங்க. அவன் உன்மேல ரொம்ப கோபமா இருக்குற மாதிரி இருக்கான். அதுவும் இல்லாம, நீ ஏதோ அவனோட பணத்தை எடுத்துட்டுப் போய்ட்டன்னு உன் அப்பா ஏத்தி விட்டுட்டு இருக்காரு” என்றதும் விக்ரம் குழம்பினான்.
“என்ன பணம்?” என்றபிறகே அவனுக்கு சுரீரென இருந்தது.
அவசரமாக தனது ஷோல்டர் பேகை சோதித்தவன், அதில் கற்றையாக வைத்திருந்த பணத்தைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டான்.
“விக்ரம் என்னாச்சு?” திலோ பதற,
“முட்டாள்தனம் பண்ணிட்டேன் திலோ. இந்த பேக்ல பணம் இருந்ததை பார்க்கவே இல்லை… கடவுளே!” என்று பல்லைக்கடித்தான். திலோத்தமா அத்தனை பணத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், தனியே சென்று மீண்டும் அலைபேசியை காதில் வைத்து, “அவன் என்னைத் தப்பா நினைக்க மாட்டான் மச்சான். நினைக்கல தான?” என நடுக்கத்துடன் கேட்ட நண்பனின் குரலில் அவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“அது எனக்கு தெரியலைடா. அவன் எதுவுமே பேசல. நீ ஆரம்பிக்கப் போற ஹோம பாதில இடிக்கப் போறதா சொன்னாங்க. அதுக்கு மட்டும் தான் அகி வாயைத் திறந்தான். அக்ரம் ஹோமை இனி அவன் தான் நடத்தப்போறதா சொன்னான். உன் அப்பா நீயாவது குடும்ப தொழிலை நடத்தணும்னு சத்தம் போட்டாரு. ஆனா உன் சித்தப்பா, ஏதோ கேம் ஆடுற மாதிரி தோணுதுடா. அவன் ஹோம் எடுத்து நடத்துறேன்னு சொன்னதும், உடனே சரி விடுங்க அவனே அண்ணன் ஏமாத்திட்டுப் போன சோகத்துல இருக்கான். கொஞ்ச நாளைக்கு அவனுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கட்டும்னு ரொம்ப ஆர்டிபிஷியலா பேசுனாரு.
எனக்கு என்னமோ அந்த ஆளு வேணும்னே உன்னை வீட்டை விட்டுத் துரத்த விட்டுருப்பாரோனு தோணுதுடா…” என்றான் யோசனையாக.
அத்தனையையும் விட்டு விட்டு, “நான் ஏமாத்திட்டுப் போனேன்னு சித்தப்பா சொன்னதுக்கு அவன் எதுவுமே பேசலையா மச்சான்…” என தம்பியின் மனநிலை ஒன்றையே பிரதானமாகக் கேட்டான் விக்ரம வேந்தன்.
கேட்கும்போதே கண்கள் குளம் கட்டி நின்றது.
“அவன் உன்னைப் பத்தி எதுவுமே பேசலைடா” கிஷோரின் கூற்றில் அதிகம் காயம் கொண்டது மனம்.
“டேய் அப்பறம் திலோத்தமா வீட்டு முன்னாடி ஆளுங்க நின்னுட்டே இருக்காங்கடா. அவங்க எங்க போனாங்கன்னு பக்கத்துல விசாரிச்சுட்டே இருக்காங்க. நீங்க சென்னை வந்த விஷயம் தெரிஞ்சா, ஹோட்டல்ல ரூம் போட்டது எல்லாம் தெரிஞ்சுக்க அவங்களுக்கு ரொம்ப நேரம் ஆகிடாது. இப்ப உன் பிளான் என்ன மச்சான். பேசாம நீ அந்தப் பொண்ணை கூட்டிட்டு கிளம்பி வந்துடு. அகிட்ட பேசு.”
“இல்லடா. நீ சொன்ன மாதிரி இதெல்லாம் தானா நடக்கல. அந்த சித்தப்பா தான் வேணும்னே கலவரம் பண்றாரு. கொஞ்சம் கேப் கிடைச்சா ஹோம இடிச்சுடுவாங்கடா. என் தாத்தா பாட்டிக்கு வேற நான் ஹோப் குடுத்துருக்கேன். அகி எப்படியும் அவங்களை விட மாட்டான் எனக்குத் தெரியும். ஆனா சித்தப்பா வேணும்னே என்னை வெளில துரத்துனது உண்மைன்னா, திரும்பி அங்க வந்தா சும்மா இருக்க மாட்டாரு. அவர் சொல்றதை கேட்க என் பாட்டியும் அப்பாவும் ரெடியா இருக்கும்போது, அவங்க என்னை கஷ்டப்படுத்துன மாதிரி அகியையும் ஏதாவது செஞ்சு கஷ்டப்படுத்துவாங்க. திலோ பேமிலி எங்க இருக்குன்னு தெரிஞ்சா குடைச்சல் கொடுத்துட்டே இருப்பாங்க . எனக்கு தெரியும் இவங்களை பத்தி…” என்று புலம்பித் தவித்தவன்,
“நான் ஓடிப்போனது ஓடிப்போனதாவே இருக்கட்டும் மச்சான்” என்றான் பெருமூச்சுடன்.
“டேய் என்ன பேசுற?” கிஷோர் பதற,
“மச்சான் ப்ளீஸ்… நான் இங்க இருக்குற விஷயத்தை தயவு செஞ்சு அவன்கிட்ட சொல்லிடாத. வீட்ல யாருக்கு தெரிஞ்சாலும் பிரச்சினை தான். இப்ப என்னை நம்பி ஒரு பொண்ணு வேற இருக்கா. தெரிஞ்சோ தெரியாமலோ அவளுக்கு நான் தாலி கட்டிருக்கேன். அவளை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் தீர்க்கமாக.
இந்தக் கலவரம் நடக்கும்போதே “டேய் டேய் அகி எனக்கு போன் பண்றான்டா… கான்பரன்ஸ் போடவா?” எனக் கத்தினான் கிஷோர்.
விக்ரமிற்கு செய்வதறியாத நிலை. இத்தனை நேரம் பேசத் துடித்தான் தான். ஆனால், சுற்றி இருக்கும் சூனியன்கள் எல்லாம் தங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள். அகியையும் ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயம் மேலெழும்ப, கண்ணை மூடி நிதானித்தான்.
“நான் சொல்றதை அப்படியே சொல்லு…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.
கிஷோர் தன்னை நொந்து, அக்னி வேந்தனுக்கு அழைத்தான் மீண்டும்.
“ஹலோ…”
“அண்ணா, நான் அக்னி” எவ்வித சலனமும் இன்றி உணர்வற்று வந்தது அவன் குரல்.
“ஹான் சொல்லு அகி” இயல்பாக பேச முயன்றான் கிஷோர்.
“நீங்க தான் சொல்லணும். அவன் எங்க?”
“அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணேன்னு சொன்னான் அகி. வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டேன்னு சொன்னான். ஆனா எந்த நாட்டுக்குன்னு அவன் என்கிட்ட கூட சொல்லல” என்றான் விக்ரம் சொன்னது போன்றே.
“உங்ககிட்ட சொல்லலையா? இல்ல என்கிட்ட சொல்ல கூடாதுனு சொன்னானா?”
எச்சிலை விழுங்கிய கிஷோர், “அவன் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டான். ப்ளீஸ் அகி, என்னை இதுல இன்வால்வ் பண்ணாத” என்றதில், “ஃபைன்…” என அழைப்பைத் துண்டிக்கப் போக,
“அகி…” என கிஷோர் அழைத்தான்.
“சொல்லுங்க. என்கிட்ட ஏதாவது சொல்ல சொன்னானா?” நொடி நேரத்தில் தனது ஆர்வத்தை வெளிக்காட்டினான்.
அதில் தயக்கம் கொண்டவன் எதுவும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
கிஷோரோ “ஒரே ஒரு தடவை அவன்கிட்ட பேசுடா விக்ரம்” என்று பிடிவாதம் செய்ததில், விக்ரம் மீண்டும் அக்னி வேந்தனுக்கு அழைத்தான்.
அந்நேரம் அவனது அலைபேசி அக்னியின் நண்பன் சந்தீப்பின் கையில் இருக்க, அவனது குரலை அடையாளம் கண்டு கொண்ட விக்ரம், “ஹலோ சந்தீப் நான் விக்ரம் பேசுறேன்” என்றான்.
எதிர்முனையில் கனத்த அமைதி.
“சந்தீப், அகி எங்க? நான் அவன்கிட்ட பேசணும்…” என்றதும், “ஒரு நிமிஷம் அண்ணா… அகி விக்ரம் அண்ணா உங்கிட்ட பேசணுமாம்…” என இடைவெளி விட்டு, “சும்மா பேசுடா” என சமாதானம் செய்யும் அரவமும் கேட்டது.
“அண்ணா அவன் உங்ககிட்ட பேச மாட்டானாம்…” என்றதும் விக்ரமின் மனம் புழுவாய் துடித்தது. கண்கள் கலங்கி இருக்க, “அவனோட பணம் என்கிட்ட இருக்கு சந்தீப்” என்றான் கமறிய குரலில்.
“கண்டவன் கை பட்ட காசுலாம் எனக்கு வேணாம்னு சொல்றான் அண்ணா…” வருத்தம் சுமந்த குரலில் கூறிய சந்தீப் அழைப்பைத் துண்டித்திருக்க, விக்ரமின் இதயத்தில் ஆழ்ந்த காயம்.
விக்ரம் தனியே சென்றாலும் திலோத்தமாவும் அவன் பின்னோடு சென்றிருந்தாள். ஆடவனின் கசங்கிய முகம் அவளுக்குள்ளும் தீரா வேதனையைக் கொடுத்தது.
“விக்ரம்?”
பெண்ணில் குரலில் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், “இனி செய்ய வேண்டியதை யோசிக்கலாம் திலோ. நம்ம இப்படியே மூவ் ஆன் ஆகணும்…” என்றான்.
“எப்படி விக்ரம்? அப்பாவுக்கும் பவிக்கும் பிரச்சினை வராதா?”
விரக்தி நகை புரிந்த விக்ரம், “என்னைத் துரத்துறது தான் என் சித்தப்பாவோட திட்டமே. நான் அவங்க கண்ல படாதவரைக்கும், உன்னையும் உன் குடும்பத்தையும் ஒன்னும் செய்ய மாட்டாங்க. சாரி திலோ… என்னால நீ ரொம்பவே கஷ்டப்படுறன்னு புரியுது… பட்…” எனத் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தவனை என்ன செய்து தேற்றுவதென்று தெரியவில்லை.
“விக்ரம் ப்ளீஸ்… இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. இனி என்ன செய்யலாம்னு யோசிங்க. இப்படியே தேங்கி நிக்கிறதுல பிரோயோஜனம் இல்ல” என அவனுக்காக தன்னைத் தேற்றி, சமாதானம் கூறினாள்.
“முதல்ல ஹோட்டல் ரூமை காலி பண்ணிட்டு, என் வீட்டாளுங்க கண்டுபிடிக்க முடியாத இடத்துக்குப் போகணும் திலோ. என் சித்தப்பா விட்டாலும் என் அப்பா அவரோட வறட்டு கவுரவத்துக்காக என்னைத் தேடலாம். இல்ல தேடாம கூட விடலாம்… நம்ம இங்க கொஞ்சம் லோக்கலான இடத்துக்குப் போனா, அவங்க நம்மளை ரீச் பண்றதும் கஷ்டம். ஆமா உன் வேலை என்னாச்சு? நீ கேம்பஸ்ல செலக்ட் ஆகிருந்தியே?” விக்ரம் தவிப்பாகக் கேட்டான்.
“அது கோயம்புத்தூர்ல விக்ரம். ஆனா சென்னைல டிரான்ஸ்பர் கேட்டாலும் தருவாங்க தான். அப்படி அங்க நான் சேர்ந்துட்டா, அகி மூலமா அந்த ஆபிஸ்கு போய் நம்மளை கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கே”
“ஹ்ம்ம்…”
“வேற வேலை தேடிக்கலாம் விக்ரம். இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க வேணாம். அப்பாவும் பவியும் எவ்ளோ நாளைக்கு சமாளிக்க முடியும்னு வேற தெரியல” என்றவளின் நிலை புரிந்தது.
தன்னாலும் கூட கையிருப்பை வைத்து எத்தனை நாள்கள் சமாளிக்க இயலுமென்று தெரியவில்லை அவனுக்கு.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவன் வங்கிக்காக அலைந்து கொண்டிருந்ததால், அவனது முக்கிய சான்றிதழ்கள் எல்லாம் அந்த ஷோல்டர் பையிலேயே தான் இருந்தது.
தானும் சென்னையில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்று எண்ணி இருந்தான்.
அவர்களது திட்டத்தின் பெயரிலேயே, அடித்தள மக்கள் வாழும் இடத்திற்கு வந்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்தனர்.
திலோத்தமாவிற்கு இந்த சூழ்நிலை பழக்கப்பட்டது என்றாலும், விக்ரமிற்கு முதலில் மூச்சடைத்தது.
ஆகினும் அவளிடம் சிறிதேனும் காட்டிக்கொள்ளவில்லை.
அதிர்ஷடவசமாக, அடுத்த பத்து நாள்களிலேயே இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது. இருவருமே ப்ரெஷர் என்பதால் சம்பளம் குறைவென்றாலும் வேலை கிடைத்ததே திலோத்தமாவிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
விக்ரமிற்கோ இந்த சம்பளமெல்லாம் ஒரு நாள் செலவு அவ்வளவு தான். அவனுக்கே இந்தச் சம்பளம் தனது பொருளாதாரத் தேவைக்கு எத்துணை முக்கியமென்று புரிந்தது.
ஒரே வீட்டில் இருந்தாலும், திலோத்தமா அறையிலும் விக்ரம் ஹாலிலுமாக தான் இருந்தனர்.
வேலையில் சேர்ந்த பிறகு அதிகம் பார்த்துக் கொள்வதில்லை. அதிகம் பேசிக்கொள்ளவும் இயலவில்லை.
தினமும் உறங்குவதற்கு அவன் அதிகம் போராடுகிறான் என மட்டும் அவளுக்குப் புரிந்தது.
கையில் இருந்த பணத்தை வைத்து, அவனுக்கு உடையும், வீட்டில் அத்திவாசியத் தேவையான பொருள்களையும் வாங்கினான்.
திலோத்தமா முதல் மாத சம்பளம் வாங்கியதும் சிறிய தொகையை மட்டும் வைத்துக்கொண்டு தந்தைக்கு அனுப்பி விட்டாள். என்னவாகினும், யாருடைய தயவிலும் அவர் வாழ்வதில் விருப்பமில்லை அவளுக்கு.
அதனைப் புரிந்த விக்ரம், அவளை நோக்கி லேசர் பார்வை வீசினானே ஒழிய எதுவும் பேசவில்லை.
விக்ரமின் சம்பளத்தில் வீட்டு செலவைப் பார்த்துக் கொள்வதிலுமாக, மூன்று மாதங்களும் நகர்ந்தது.
அன்று அலுவலகம் விடுமுறை தினமாக இருக்க, விக்ரம் ஹாலில் தரையில் அமர்ந்து அலைபேசியில் தனது தம்பியின் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.
திலோத்தமா அறையை விட்டு வருவதும் பின் உள்ளே செல்வதுமாக இருக்க, சில நொடிகளில் மீண்டும் வெளியில் வந்து விட்டாள்.
அப்போது தான் அவளைக் கவனித்த விக்ரம், “என்ன திலோ எதுவும் வேணுமா?” என வினவ,
“இல்ல கடைக்கு போயிட்டு வந்துடுறேன்” என்றாள் தயக்கமாக.
“திங்ஸ் வாங்கணுமா? என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வரேன்”
“இல்ல சும்மா தான். நானே போயிட்டு வந்துடவா?”
சற்றே சிந்தித்தவன், “சரி பார்த்துப் போ” என அனுப்பி வைத்து விட்டு, சில நிமிடங்களில் மனம் கேளாது தானும் சென்றான். அவளைத் தேடி சென்றவனுக்கோ அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறைந்து புன்னகை பிறந்தது.
மருந்தகத்திற்கு சற்று தள்ளி நின்று நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு நாப்கின் போலான தேவையான பொருளை எல்லாம் பவித்ராத்யா தான் வாங்கி வருவாள்.
இதற்காக அவள் எப்போதும் கடைக்குச் சென்றதில்லை. கூச்சமும் அதிகம் இருப்பதால், கடையில் ஆண்கள் இருந்தால் சுத்தமாக கேட்க மாட்டாள்.
தற்போது, கடையில் அதிக கூட்டம் இருந்ததால், அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.
வயிறு வேறு வலித்துத் தொலைக்க, அழுகையே வரும்போல இருந்தது.
அவளது முகபாவத்தையே ரசித்துக்கொண்டிருந்த விக்ரம வேந்தன் ஒன்றும் பேசாமல், அவளைத் தாண்டி சென்றான்.
விக்ரமைக் கண்டதும் திருதிருவென விழித்த திலோத்தமா ஃப்ரீஸ் மோடில் நிற்க, அவனோ அவளுக்குத் தேவையானதை நொடியில் வாங்கி வந்து விட்டான்.
அவளைத் தாண்டி வீடு நோக்கி சென்றபிறகும் அவள் அப்படியே நிற்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், முன்னால் கண் காட்டினான்.
ஆடவனின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு, தானாய் வீடு நோக்கி நடக்கத் தொடங்கியது அவளது கால்கள்.
வீட்டிற்கு சென்றதும், நாப்கினை கொடுத்தவன், “உனக்குத் தேவையானதை என்கிட்ட கேட்க மாட்டியா திலோ? கேட்க தேவையில்லைன்னு நினைச்சுட்டியா?” ரசனையை மீறியுமொரு ஆதங்கம் அவனிடம்.
“ஐயோ அதில்ல விக்ரம். பவி தான் இதெல்லாம் வாங்கிட்டு வருவா. எனக்கு கொஞ்சம் ஆக்வர்டா இருக்கும் அதான்…” என்றதில் அவளைப் புரிந்து கொண்டவன், “இதுல ஆக்வர்டா பீல் பண்ண என்ன இருக்கு? என் அம்மாவுக்கே நான் வாங்கி குடுப்பேன். இனி இப்படி ஹெசிட்டேட் பண்ண கூடாது ஓகேவா?” எனக் கண்டிப்பாய் கூற, வேகமாய் தலையாட்டினாள்.
அதில் முறுவலித்தவன் “சரி போ” என்றதும் சிட்டாய் அறைக்குள் பறந்து விட்டாள். ஆடவனின் முறுவல் தற்போது புன்னகையாக மாறியது.
பொதுவாய் அவன் அடுக்களைக்குள் வருவதில்லை. அந்த அடுக்களையே சின்னதாக இருக்க, அங்கு திலோத்தமா நின்று சமையல் செய்வதே கடினம். இதில், தானும் வந்தால் அவளுக்கு சங்கடமாக இருக்குமென்று எண்ணி அவள் இருக்கும்போது வரமாட்டான். ஆனால் அவள் அறைக்குச் சென்றதும், சிங்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, காய்கறி வெங்காயமெல்லாம் உரித்து வைத்து விடுவான்.
முதலில் “நான் பார்த்துக்கிறேன் விக்ரம்” எனத் தயங்கியவளிடம்,
“அப்போ நீ சமைச்சா நான் சாப்பிட மாட்டேன். நானும் பார்த்துக்கறேன்” என்றான் அசட்டையாக.
“ஏன் விக்ரம் இப்படி பேசுறீங்க?” அவள் தவித்து விட,
“பின்ன, நீ என்ன ஜாலியா சினிமாவுக்கா போயிட்டு வர்ற. எனக்கு இருக்குற வேலை தான் உனக்கும் இருக்கு. வீட்ல வந்தும் நீ அத்தனை வேலையும் பார்க்கணுமா? ஷேர் பண்ணிக்கலாம் திலோ” என்றான் மிருதுவாக.
“அதெல்லாம் பிரச்சினை இல்ல விக்ரம். காலேஜ் போயிட்டு வந்து வீட்டு வேலை பாக்குறது எல்லாம் எனக்கு பழக்கம் தான். அம்மாவுக்கு கொஞ்ச நாளா முடியாததுனால நானும் பவியும் தான் பார்த்துப்போம்” எனும்போதே,
“அப்போ கூட உனக்கு ஹெல்ப் பண்ண பவி இருப்பா தான? வேலையை ஷேர் பண்ணிக்கிறதா இருந்தா, எனக்கும் சாப்பாடு செய். இல்லனா நான் கேன்டீன்ல சாப்ட்டுக்குறேன்” என்றவனிடம் வாதாட இயலவில்லை அவளுக்கு. அதனாலேயே அவன் விருப்பப்படி விட்டு விட்டாள்.
முடிந்தமட்டும் அடுக்களையை விட்டு வரும்போதே பாத்திரத்தை துலக்கி விடுவாள். பங்களாவில் ராஜாவைப் போல வாழ்ந்தவன், தனக்கு சேவகம் செய்வது என்னவோ போல இருந்தது அவளுக்கு.
ஆனால் அவனோ, பாத்திரத்தை துலக்கி விட்டாளென்ன என்று, அவள் ஊற வைத்திருந்த துணிகளைத் துவைத்துப் போடுவான்.
மாடியில் துணியை காயப்போட்டு, அவளுக்குத் தேவையான உடையையும் அயன் செய்து மடித்து வைத்து விடுவான்.
ஒரு கட்டத்திற்கு மேல், அவனிடம் வாதம் செய்வது வீணென்று புரிந்து கொண்டவள், இந்த வேலைப் பகிர்வை பழகிக் கொண்டாள்.
கடந்த மூன்று மாதங்களாக இதுவே தொடர்ந்தது என்றாலும், திருமணத்தைப் பற்றியும் இந்த உறவைப் பற்றியும் இருவருமே பேசிக்கொள்வதில்லை. இதை பற்றி பேசிவிடுவானோ எனப் பயந்தாளோ என்னவோ, அவளும் விக்ரமின் முன் அதிக நேரம் நிற்க மாட்டாள்.
தற்போது நாப்கினுடன் அறைக்குள் புகுந்து கொண்டவளின் நிலை புரிய, அவனே அடுக்களைக்குள் சென்று எதையோ உருட்டினான்.
சத்தம் கேட்டு அங்கு வந்த திலோத்தமா “என்ன விக்ரம் எதுவும் வேணுமா?” என வினவ, “எனக்கு எதுவும் வேணாம்… உனக்கு தான் சூப் செஞ்சேன். குடி” என கிண்ணத்தை கொடுத்தான்.
“எனக்கா?” அவள் திகைக்க,
“ம்ம்… இதைக் குடிச்சா ஸ்டமக் பெயின் குறையும் திலோ. குடிச்சுட்டு ரெஸ்ட் எடு. டின்னர் செய்றேன்னு வேலையை இழுத்துப் போட்டு பார்க்காத. நானே செய்றேன். சரியா?” என்றான் மென்மையாக.
அவனது அன்பில் தங்கையின் நினைவு வர, தானாய் கண் கலங்கிப் போனது அவளுக்கு.
பவித்ராத்யாவும் இப்படித்தானே! கஷாயம் என்று இந்த நேரத்தில் எதையாவது கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருப்பாள்.
அவளது முகமாற்றத்தில் பதறியவன், “என்னாச்சு திலோ?” என வினவ,
“ஒன்னும் இல்ல… பவி ஞாபகம்” என மனதிலிருப்பதை கூறினாள்.
அதில் முறுவலித்தவன், “எனக்கும் கூட… நான் கொஞ்சம் மனசளவுல வீக் தான். என் தம்பி தான் ஸ்ட்ராங். ஒருவேளை வீட்ல ரெண்டாவது பசங்க கொஞ்சம் போல்டா இருப்பாங்களோ?” என சந்தேகம் போல கேட்க, அவளுக்கும் புன்னகை மலர்ந்தது.
“இருக்கும்… அவளுக்கு வலிச்சா வெளிலயே காட்ட மாட்ட. ஆனால் என்னை கரெக்ட்டா கண்டுபிடிச்சுடுவா” என விழி விரிக்க, “இந்த அகி கூட இப்படி தான் திலோ. அவனோட அழுத்தம் தான் தெரியுமே உனக்கு” என்றான் சலிப்பாக.
“ம்ம்…”
இருவரிடமும் கனத்த மௌனம். துக்கம் தொண்டையை நிறைத்து நெஞ்சை அழுத்தியது.
உயிரானவர்களைப் பிரிந்த வேதனையை, ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
“கஷ்டமா இருக்கு விக்ரம்… யாருமே இல்லாம ஏன் இப்படி…” என பேச இயலாமல் நிறுத்திட, அவனுக்கும் விடை தெரியாத வலி.
அடுத்த மாதம், கையில் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்து விட்டு, முதல் வேலையாக அறையில் ஏசியைப் பொருத்தினாள் திலோத்தமா. கூடவே சிங்கிள் மெத்தையும் வாங்கினாள்.
“விக்ரம் நீங்க ரூம்ல தூங்குங்க. நான் ஹால்ல படுத்துப்பேன்” என்றவளுக்கு அதற்கு மேலும் அவனை கட்டாந்தரையில் படுக்க வைக்க மனமில்லை. இதற்காகவே முதல் மாத சம்பளத்தில் இருந்து சின்ன சின்னத் தொகையாக சேர்த்து வைத்திருக்கிறாள்.
“இதுக்காக தான் முழு சம்பளத்தையும் அங்கிளுக்கு குடுக்காம வச்சுருந்தியா?” விக்ரம் கூர்மையாக கேட்க,
“ம்ம்… நீங்க இங்க வந்தன்னைல இருந்தே, தரையில படுக்குறது பார்க்க கஷ்டமா இருக்கு விக்ரம். இருந்தாலும் அவசரப்பட்டு வாங்கிட்டு, தேவைக்கு பணம் வேணும்னா என்ன செய்றது அதான் தனியாவே வச்சுருந்தேன்…” என்றவளின் நிதானமான அன்பு அவனை வியப்பில் ஆழ்த்தியது.
தன்னை இந்த அளவு கவனித்து இருக்கிறாள் என்பதே அவனுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.
“வாங்குனது தான் வாங்குன, டபிள் பெட் வாங்கியிருக்க வேண்டியது தான?”
அவள் பேந்த பேந்த விழித்து, “உங்களுக்கு இது பத்தாதா விக்ரம்?” என்றாள் பரிதாபமாக.
“எனக்கு மட்டும்னா பத்தும். நீயும் சேர்ந்து படுக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்” என்றதில் திகைத்துப் போனவளுக்கோ காரணமே இன்றி கையிலுள்ள பூனை முடிகளெல்லாம் சிலிர்த்து எழுந்தது.
“நா… நானா?”
“ம்ம், நீயும் ரூம்குள்ள படுத்துக்கோ. ரெண்டு பேரும் வேலையை ஷேர் பண்ணிக்கிற மாதிரி ரூமையும் ஷேர் பண்ணிக்கலாம்…” என்றான் கண்சிமிட்டி.
நெஞ்சம் தடதடவென துடிக்க, “அயோ அதெல்லாம் வேணாம். எனக்கு ஏசி எல்லாம் தேவைப்படாது…” என அவள் மறுக்க,
“ஏன் நீ என்ன குளிர்பிரதேசத்துல பிறந்த ஐஸ்கட்டி பொண்ணா. சென்னை ஹீட்ல உனக்கு மட்டும் குளுகுளுன்னு தூக்கம் வருதாக்கும்” என்றான் நக்கலாக.
கோயம்பத்தூரில் இருந்து விட்டு சென்னை வெய்யில் அவளை பயமுறுத்தியது தான் என்றாலும் அவனுடன் எப்படி ஒரே அறையில் தங்குவது என்று தயங்கினாள்.
அவளது மனநிலையை உணர்ந்த விக்ரம், “நான் உன் ஹஸ்பண்ட் திலோ” என்றான் அழுத்தம் திருத்தமாக.
என்னவோ அந்த வார்த்தை அவளது உயிர்வரை ஒரு இனிமையைத் தந்து சென்றது.
அலுவலகத்திலும் கூட, அவளைத் தனது மனைவி என்று கூறி இருக்கிறான் தான். ஆனால் இந்த அழுத்தம் அவளை என்னவோ செய்தது.
அவளது அமைதியைப் பிடித்தமின்மை எனத் தவறாகப் புரிந்து கொண்டவன், அமைதியாகி விட்டான்.
அன்று இரவும் ஹாலில் படுக்கச் சென்றவனை தயக்கமாகப் பார்த்த திலோத்தமா, “ரூம்ல போய் தூங்குங்க விக்ரம்” என்றாள்.
அவளுக்கு பதில் கூறாதவனாக தரையில் பாயை விரித்துப் படுத்தவன், மல்லாக்கப் படுத்து கையைக் கட்டிக்கொண்டு அவளை ஏறிட்டான்.
அவளோ சுண்டிய முகத்துடன் கையைப் பிசைந்த படி நிற்க, “நம்ம இன்னும் மேரேஜ ரெஜிஸ்டர் பண்ணல. பண்ணலாமா?” கேள்வியும் ஆர்வமுமாக கேட்டான் விக்ரம்.
திலோத்தமா பதில் கூற வழியற்று சிலையாக நின்றாள்.
அவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதா? அப்படி செய்தால், அவன் பிழை செய்ததாக அவனது குடும்பத்தார் எண்ணியது உண்மை என்றாகிவிடும் தானே!
அக்னி வேந்தன் தமையனை வெறுத்து விட மாட்டானா? தோழி என பழகியதற்காக துரோகம் செய்து விட்டதாக எண்ணி விட்டால்? எப்படித் தாங்க இயலும்.
தற்போதும் அவளது அமைதி அவனை அதிகம் தாக்கியது.
“நாளைக்கு ஆபிஸ் போகணும். நைட்டு முழுக்க இங்கயே நின்னுட்டு இருக்க போறியா?” கடினத்தன்மையுடன் வந்த அவனது வினவளில் வேதனை கொண்டவள் அவனுக்கு பதில் கூறாது உள்ளே சென்று விட்டாள்.
எப்போதும் அவனுக்கு வேலை அதிகம் என்றால், அவளும் அலுவலகத்தில் இருந்து விடுவாள். இருவரும் இணைந்தே வீடு வந்து விடுவர்.
அன்று மதியமே விக்ரம் அவளிடம் கூறி விட்டான்.
“இன்னைக்கு எனக்கு நைட்டு லேட் ஆகிடும் திலோ. நீ வேலை முடிஞ்சதும் கிளம்பிடு” என்று.
“ஏன் விக்ரம்… நான் வெய்ட் பண்றேன்”
“எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியல. எனக்காக நீ வெய்ட் பண்ண தேவையில்ல” எனப் பட்டென கூறி விட்டதில், அவளுக்கு உள்ளம் உடைந்து விட்டது.
தனது வேலை நேரம் முடிந்ததும் கேபில் வீட்டிற்கு வந்து விட்டவளுக்கு, விக்ரம் இல்லாத இந்த சில மணித்துளிகளின் தனிமை கூட அதிகம் தாக்கியது.
நள்ளிரவு நேரமும் வந்து விட, வெளியில் மழை வெளுத்து வாங்கியது.
விக்ரமின் எண்ணிற்கு அழைத்தும் கூட எந்த பதிலும் இல்லை.
மெல்ல மெல்ல பயப்பந்துகள் அவளைச் சூழ, அவளது எண்ணமோ எங்கெங்கோ பறந்தது.
மழையில் மாட்டிக்கொண்டாரா? அவரது சித்தப்பா அவரைக் கண்டறிந்து எதுவும் செய்து விட்டாரா? ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க நெஞ்சம் பதறியது.
வீட்டினுள் இருக்க நிலைகொள்ளாமல், கீழே வந்து விட்டாள்.
தெருவோரத்திலேயே அவனது வரவை எதிர்பார்த்து நின்றவளுக்கு அவனைக் கண்ணால் ஒரு முறை பார்த்து விட்டால் போதுமென்ற நிலை தான்.
மழைத் துளிகளைத் தாண்டியும் கண்ணீர்த் துளிகள் அதிகம் அவளது கன்னத்தை நனைத்தது.
‘விக்ரம் ப்ளீஸ் வந்துடுங்க… பயமா இருக்கு விக்ரம்’ எனத் தனக்குள்ளேயே தவித்து மருகியவளின் கண்ணிற்கு விருந்தானான் விக்ரம வேந்தன்.
வேலையை முடிக்கவே அதிக நேரம் ஆகி இருக்க, அலுவலக கேபும் அப்போது கிடைக்காமல் போனதில், பேருந்தில் வந்திருந்தான்.
என்னவோ மனம் எதிலும் இலயிக்கவில்லை. தனக்கு திலோத்தமாவின் மீதிருந்த சின்னதொரு ஈர்ப்பு கூட அவளுக்கு தன்மேல் இல்லை என்ற உண்மை உறைக்க, முதன்முறை அவளுக்கு தாலி கட்டி தவறிழைத்து விட்டோமோ என்றிருந்தது அவனுக்கு.
அவளுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத் தனது சுயநலத்திற்காக கெடுக்கக் கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்துக்கொண்டவனுக்கு, ஏனோ அவளை இழக்கப் போகிறோம் என்ற நினைவே உள்ளத்தை வருத்தியது.
குடும்பத்தை இழந்த போதும், அவளுக்காக தன்னைப் புதிப்பித்துக் கொண்டான். தற்போது அவளும் இல்லையென்றால், நடைபிணமாகிடுவானே!
மழையென்றும் பாராது, அதில் நனைந்தபடியே மெதுவாக நடந்து வந்தவனைக் கண்டுகொண்ட திலோத்தமா “விக்ரம்” என அழைக்க, வீட்டிற்கு கீழ்த்தளத்தில் நின்றிருந்தவளைக் கண்டு திகைத்தான்.
“என்ன திலோ… இங்க நின்னுட்டு இருக்க. வீட்டுக்கு யாரும் வந்தாங்களா? உனக்கு ஒன்னும் இல்ல தான” என ஒரே நொடியில் ஓராயிரம் பயம் நிறைய பதறி துடித்து விட்டான்.
அவனது அச்சத்தை புரிந்துகொண்ட திலோத்தமா, பதில் பேச கூட வார்த்தையற்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
47
+1
2
+1

