பேரன்பின் பெருஞ்சலனமே_24

Loading

சலனம்-24

காலையில் என்ன மனநிலையில், நான் குழந்தையை அழைத்து வந்தேனோ, அதற்கு அப்படியே நேர்மாறான மனநிலையில் இருந்தேன் நான்.

 

‘பேசாமல் சமுத்ராவிடமே விட்டுவிட்டு வந்திருக்கலாம்!’ என நான் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், படப்பிடிப்பு தளத்திற்குள் ஆட்டோவில் வந்து இறங்கினாள் சமுத்ரா.

 

என் கண்கள் அவளில் மட்டுமே நிலைத்தது. அவளின் நீலநிறக் கண்களில் வழிந்தக் கோபத்தில் என்னை அறியாமலே, எனக்குள் பயம் சூழ்ந்தது. ‘இவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்?’ மனம் நடுங்க ஒருவித கலக்கத்துடனே அவளைப் பார்த்திருந்தேன் நான்.

 

என் வாழ்நாளில் நான் யாருக்கும் பயந்ததே இல்லை. ஆனால், இதோ என்னை நோக்கி வருகிறாளே, முதன்முறையாய் எனக்கு பயத்தைக் காட்டியவள் இவள் தான்.

 

ஏற்கனவே குழந்தையைக் காணவில்லை. இப்போது சமுத்ராவும் வந்துவிட்டாள். சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாய் சிக்கலாவதை உணர்ந்தேன். அவளை எதிர்நோக்கவும், அவள் கண்களைப் பார்த்துப் பேசவும், எனக்கு நிரம்பவும் தயக்கமாய் இருந்தது.

 

கொஞ்சம் கொஞ்சமாய் என் அருகே வந்தவள், சுற்றியிருந்த அனைவரின் முகத்திலும் பதற்றம் சூழ்ந்திருப்பதைப் பார்த்து,

 

“விக்ரம்! அவந்தி எங்கே? நீ தானே தூக்கிட்டு வந்த?”

 

“நீ இங்கே இருக்க? குழந்தை எங்கே?” வெளிவரத் துடித்தக் கோபத்தை முயன்று அடக்கியபடி அவள் கேட்டதை என்னால் உணர முடிந்தது.

 

நான் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் நின்றேன். சத்தியமாய் அவளுக்கு என் பதில் சொல்வது? எப்படி அவளைச் சமாளிப்பது? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. என் அமைதி அவளிடம் கோபத்தைத் தூண்டியிருக்க வேண்டும்.

 

“விக்ரம்! நான் உன்கிட்டே தான் பேசறேன். பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றால் என்ன அர்த்தம்?” எனக் கோபமாய் அவள் குரலுயர்த்த, சுற்றியிருந்த அனைவரின் பார்வையும், எங்கள் மீதே குவிந்திருந்தது.

 

“சம்யுக்தா மாதிரியே இருக்காங்களே?”

 

“நடிகை சம்யுக்தா, இறந்துட்டாங்கன்னு சொன்னது பொய்யா?”

 

“அவங்களை மாதிரியே வேற ஒருத்தங்களா?”

 

“குழந்தைக்காக சட்டையைப் பிடிக்கிறாங்க! இவங்க சம்யூவே தான்.!” என கூட்டத்தின் நடுவே கேட்ட குரல்கள் என் செவியில் விழுந்தது.

 

ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை.

 

“விக்ரம்! இங்கே என்னதான் நடக்குது. அவந்தி எங்கே? எதையாவது சொல்லித் தொலையேன்.!”

 

“சித்தார்த்! நீங்களாவது சொல்லுங்க! அவந்தி எங்கே?” என அவள் என்னை விட்டு சித்தார்த்திடம் அவள் கேட்ட அதே நேரம்,

 

“ஸாரி சமுத்ரா! ஐ அம் ரியலி ஸாரி!” என்ற வார்த்தைகளை நான் உதிர்த்திருக்க,

 

“எதுக்கு இப்போ ஸாரி கேட்ட? இங்கே என்ன நடக்குது? சொல்லித் தொலையேன்டா! கல்லு மாதிரி நிற்கிறே.? குழந்தையை நீ தானே தூக்கிட்டு வந்தே? குழந்தை எங்கேன்னு எனக்கு இப்போ தெரியணும்!” சட்டென முன் வந்து, என் சட்டையைப் பிடித்திருந்தாள்.

 

“சொல்லு டா! அவந்தி எங்கே?”

 

“இப்போ சொல்லப் போறியா இல்லையா?” அவள் என்னை விடாமல் உலுக்கிக் கொண்டிருந்த அதே நேரம்,

 

“குழந்தையைக் காணோம்! அவளைத் தான் நாங்களும் தேடிட்டு இருக்கோம்!” என சித்தார்த் இடையிட்டு சொல்லியிருக்க, நொடி நேரத்தில், அவள் முகம் செக்கச் செவேலென சிவக்க, இடக்கண்ணிலிருந்து, கோடாய் ஒற்றைத் துளி கண்ணீர் சட்டென இறங்கியது.

 

“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. உன் இஷ்டத்திற்கு அவள் பொம்மை இல்லை. அவள் குழந்தை டா! அவந்திக்கு, நீயொரு நல்ல அப்பாவா இருக்க மாட்டே.. அட்லீஸ்ட், அவளோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிற நல்ல மனுஷனா கூட இருக்க மாட்டியா?” அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும், என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. அவள் கேள்வியில் என் கண்கள் தன்னால் கலங்கியது.

 

என்ன பதில் சொல்வது? இங்கே நான் தானே தவறு.. குழந்தையைக் கூட்டி வராமல் இருந்திருந்தால், அவள் சமுத்ராவோடு,

 

நன்றாகத்தானே இருந்திருப்பாள். நானே பார்த்துக் கொள்கிறேன் என வீராப்பாய் அழைத்து வந்து, அவளைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

 

எந்தப் பதிலும் சொல்லி என்னை நானே நியாயப்படுத்த முடியாமல், அமைதியாக நின்றேன்.

 

“நீ பதில் சொல்ல மாட்டே! ஏன்னா வேணும்ன்னே குழந்தையைக் கூட்டிட்டு வந்து தொலைச்சுட்ட இல்ல? குழந்தை இல்லாமல் போனாலும் பரவாயில்லை! ஆனால் எனக்கு கஸ்டடி கிடைச்சுடக் கூடாது! அதானே உன் எண்ணம்?!” என அவள் கேட்க,

 

“சமுத்ரா!”

 

என அதற்றலாய் அழைத்தேன் நான்.

 

“சும்மா கத்தாதே! என் பெயரைச் சொல்லக் கூட, உனக்கெல்லாம் தகுதியே இல்லை. குழந்தையை தொலைச்சுட்டு, கொஞ்சமும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் நிற்கிறியே.. அப்போவே உன்னைப் பத்தி முழுசா எனக்கு தெரிஞ்சுடுச்சு. முதலில் சம்யூவை தொலைச்ச, இப்போ அவந்தியையும் தொலைச்சுட்ட! இப்போ உனக்கு நிம்மதி தானே? இனிமே உனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.! நீ சுதந்திரமா அலையலாம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். அது தானே உன் திட்டம்.? நீ தான் சினிமா டைரக்டராச்சே.. எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம்! யாரு கேட்க போறா? உன் ப்ளானை செயல்படுத்திட்ட இல்ல?. நீ மனுஷனே இல்லை விக்ரம்! மிருகத்தோடு கூட ஒப்பிட தகுதியில்லாத ஜென்மம் நீ..!”

 

என என்னைத் தள்ளிவிட்டு, அவள் முன்னே நடந்த அந்த நொடி, படப்பிடிப்பு தளத்தின் ஒட்டுமொத்த மின்சாரமும் திடீரென தடைபட்டது.
மின்சாரம் தடைபட்ட அந்த நொடி நேர இடைவெளியில், குழந்தை அவந்திகாவின் அழுகைக்குரல், எங்கோ தூரமாய்க் கேட்டது.

 

“ஐயோ! குழந்தை!”

 

முதலில் பதறியது சமுத்ரா தான். நான் குழந்தையின் குரல் கேட்பதை உணரும் முன்னமே, குழந்தையின் குரல் வந்த திசையை நோக்கி ஓடத் துவங்கியிருந்தாள்.

 

 

“குழந்தை இப்படி அழறாளே! என்ன ஆச்சுன்னு தெரியலையே!” பாதற்றமாய் சொன்னவளின் வேகம் நொடிக்கு நொடி அதிகரித்தது. சமுத்ராவைப் பின்தொடர்ந்து நானும் ஓடினேன். குழந்தையை தங்க வைத்திருக்கும் அறையிலிருந்து தான் சத்தம் கேட்பதை உணர்ந்தேன்.

 

“சமுத்ரா! குழந்தை ரூமில் தான் இருக்கா! சத்தம் அங்கிருந்து தான் கேட்குது!” எனச் சொன்னபடியே, அறையை நோக்கிக் கரம் நீட்டினேன்.

 

வேகமாய் அறையை அடைந்தவள், கதவைத் திறந்து, குழந்தையின் குரல் வரும் திசையை அனுமானித்து, குளியலறைக்குள் அழுதுக் கொண்டிருந்தக் குழந்தையைத் தூக்கியிருந்தாள்.

 

அறைக்குள் ஆளில்லாத சூழ்நிலையில், என்னைத் தேடி குளியலறைக்குள் நுழைந்தக் குழந்தை, குளியலறைக்குள்ளேயே மாட்டிக் கொண்டுவிட்டாள் என்பது புரிந்தது.

 

எல்லா இடமும் குழந்தையைத் தேடிய நான் குளியலறைக்குள் தேட மறந்து போன என் முட்டாள்தனத்தை எண்ணி, என்னை நானே நொந்துக் கொண்டேன்.

 

இன்னுமும் குழந்தை அழுதுக் கொண்டே இருந்தாள். பயத்தில் மூச்சுவிடாமல், குழந்தை ஏங்கி, ஏங்கி அழுதுக் கொண்டிருக்க, சமுத்ராவோ சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள்.

 

“அவிம்மா! அம்மா வந்துட்டேன் தங்கம்! அழாதீங்க! அம்மா வந்துட்டேன்! பாப்பா பயந்துட்டீங்களா? அழாதடி தங்கம்!” ஏதேதோ வார்த்தைகளால் குழந்தையைச் சமாதானப் படுத்த முயன்றாள். என்னதான் முயன்றும், குழந்தை சமாதானமாகவே இல்லை. நானோ என்ன செய்வதெனப் புரியாமல், வேடிக்கைப் பார்த்தபடி அமைதியாய் நின்றிருந்தேன்.

 

ஆனாலும், இப்படியே நிற்க மனமின்றி,

 

“சமுத்ரா! குழந்தையை என்கிட்டே கொடு! நான் சமாதானப்படுத்தறேன்!”

 

என நான் சொன்னது அவள் செவிகளில் விழுந்ததா தெரியவில்லை. சொல்லப்போனால், அவள் என்னைக் கவனிக்கவே இல்லை.

 

 

அவள் குழந்தையோடு, ஒரு தனியுலகத்தில் உறைந்து போயிருந்தாள். குழந்தையின் அழுகையை நிறுத்துவது மட்டுமே அவள் மனதில் இருந்தது.

 

குழந்தையைத் தோளில் போட்டு தட்டினாள். ஜன்னல் வழியாய் வேடிக்கைக் காட்டினாள்.சிப்பரில் நீர் நிரப்பிப் புகட்ட முயன்றாள். எதற்கும் அவந்திகா சமாதானமாகவே இல்லை.

 

குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாது, கண்கள் கலங்க, குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். குழந்தையின் அழுகைக் கொஞ்சமாய்க் குறைந்தது. சமுத்ராவின் ஸ்பரிசத்தையோ, இல்லை அவளின் இதயத்துடிப்பையோ, எதையோ உணர்ந்து குழந்தைக் கொஞ்சம் அமைதியாகியிருந்தாள். குழந்தை கொஞ்சம் அழுகையை நிறுத்தி, மூச்சு வாங்குவது குறையவும், நான் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்றைச் செய்திருந்தாள் சமுத்ரா.

 

சத்தியமாய் நான் இப்படியென்றை எதிர்பார்த்திருக்கவில்லை. இது சம்யூவின் மீதிருந்த பாசத்தில் செய்ததா? இல்லை குழந்தையின் மீதிருந்த நேசத்தாலா? எனக்குப் புரியவில்லை. கண்கள் கலங்கியது எனக்கு.

 

 

என்னதான் உடன் பிறந்தவளின் குழந்தையாய் இருந்தாலும், இப்படியொன்றை எந்தப் பெண்ணும், செய்யத் துணிவாளா? என எனக்குத் தெரியவில்லை. என் கண்கள் அவள் முதுகை வெறித்தது. மனம் பாரமாகிப் போன உணர்வுடன், அறையிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

 

 

ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது. சம்யூ என்னை நம்பி குழந்தையை விட்டுச் செல்லவில்லை. அவள் சமுத்ராவை நம்பி மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறாள் என்பது புரிந்தது.

 

இன்னுமும் சமுத்ரா குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த காட்சியே எனக்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. ஆம்! சமுத்ரா தான் பெறாத பிள்ளையான என் மகள் அவந்திகாவிற்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். இது எப்படி சாத்தியம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் இது சாத்தியமில்லாததும் இல்லை. ஆனால், தான் பெறாதக் குழந்தைக்காக அவள் செய்த காரியம் எனக்குள் பேரதிர்வை ஏற்பத்தியிருந்தது. பெரிய பெரிய சுனாமிப் பேரலைகள் எழுவதைப் போன்ற அதிர்வு எனக்குள்.

 

 

சமுத்ரா அவள் வாழ்வைப் பற்றி சுயநலமாய் சிந்தித்திருந்தால் இப்படியொன்றை நிச்சயமாய் செய்திருக்க மாட்டாள். அவள் எதிர்காலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், என் குழந்தைக்காக இதையெல்லாம் செய்வது, நிச்சயம் சம்யுக்தாவிற்காக மட்டுமே என்பது எனக்குப் புரிந்தது.

 

சம்யூவிற்காக செய்திருக்கிறாள் எனில், அவர்கள் இருவருக்கும் இடையேயான பாசம் எப்படிப்பட்டது? தன் உடன் பிறந்தவள் வயிற்றில் வளரும் குழந்தையை தன் குழந்தையாய் நினைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம் என என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. சமுத்ரா என் குழந்தையின் மீது வைத்திருக்கும், அன்பிற்கும், அக்கறைக்கும் முன்னால், நானெல்லாம் நிற்கக் கூடத் தகுதியில்லாதவன்.

 

குழந்தையின் மீது இத்தனை தூரம் பாசம் வைத்திருப்பவளிடமிருந்து, குழந்தையைப் பிரிக்க முயற்சித்திருக்கிறேனே? என நினைக்கையில் குற்றவுணர்வு என்னைக் கொன்று தின்றது.

 

இதையெல்லாம் நான் எப்படி சரி செய்யப் போகிறேன். என் பார்வையில் சரியெனப் படட் அனைத்தும் இப்போது தவறாகத் தோன்றுகிறது. எல்லாமே என்னால் தான் நிகழ்ந்திருக்கிறது. நான் தெரிந்து செய்தேனா? தெரியாமல் செய்தேனா? எனக்குப் புரியவில்லை.

 

ஆனால் என்னால் இனி எந்தவொரு தவறான விஷயமும் நடந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தேன்.

 

********

 

எனக்குள் யோசித்தபடி நான் அறைக்கு வெளியே நின்றிருக்க, கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சமுத்ரா.

 

அவந்திகாவின் முகத்தில் காணாமல் போயிருந்த சிரிப்பு மீண்டு இருந்தது. குழந்தையின் முகத்த்தில் சிரிப்பைப் பார்த்ததும் தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

 

“தேங்க்ஸ் சமுத்ரா!”

 

அவள் முகத்தைப் பார்த்துச் சொன்னேன். என் எதிரே நின்று சில நொடிகள் அமைதியாய் என்னைப் பார்த்தவள், ஓங்கி என் கன்னத்தில் அறைந்திருந்தாள். கன்னம் தீயாயய் தகித்ததிலிருந்தே சமுத்ராவின் கோபத்தின் அளவு புரிந்தது.

 

“தேங்க்ஸ்! மண்ணாங்கட்டின்னு என் முன்னால் வந்து நிற்க உனக்கு வெட்கமாவே இல்லையா? நீயெல்லாம் எதில் தான் பொறுப்பா இருப்ப? பிறந்ததிலிருந்து சாகும் வரை, நான்.. நான்ன்னு உன்னை மட்டுமே யோசிப்பியா? குழந்தையைத் கூட்டிட்டு வர்ர இடமா இது? சரி, கூட்டிட்டு வந்தே குழந்தையை உன்னால் பார்த்துக்க முடிஞ்சுதா? எதையாவது யோசிச்சு செய்றியா? எல்லாத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்ற. அதில் வர்ர பின் விளைவுகளை நீ அனுபவிக்கிறியோ, இல்லையோ.. உன்னைச் சுத்தி இருக்கறவங்க தான் அனுபவிக்கிறாங்க! லிவ் இன் வாழ்க்கைன்னு சம்யூவை உன் வாழ்க்கைக்குள்ளே கொண்டு வந்த, அவளையாவது நிம்மதியாய் இருக்க விட்டியா? கல்யாணம் அது இதுன்னு அவள் வாழ்க்கையையும் அழிச்சுட்ட. உன் வாழ்க்கைக்குள்ளே வர்ர பொண்ணும் உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கணும். அவளைப் பத்தி எதுவுமே யோசிக்கக் கூடாது. அவளுக்குப் பிடிச்சது எதையும் செய்யக் கூடாது. உன் மூளை என்ன 1960லேயே நின்னு போய்டுச்சா? இந்தப் பழைய மூளையைக் கழற்றி வச்சிட்டு கொஞ்சமாவது காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறப் பாரு!”

 

என அவள் சொல்வதைக் கேட்டு, எனக்கு வேதனையாய் இருந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நான் என்னைப் பற்றி மட்டுமே யோசித்திருக்கிறேன்.

 

பதில் சொல்லத் திராணியற்று வெட்கி தலை குனிந்து அமைதியாய் நின்றேன்.

 

“இப்படி அமைதியாய் நின்னுட்டு இருந்தால் எல்லாம் சரியாகிடுமா? நான் உன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைச்சுடாதே விக்ரம்! இவ்வளவு தூரம் ஆன பிறகு, குழந்தையை நிச்சயம் உன்கிட்டே தர மாட்டேன். இவள் என் குழந்தை! என் குழந்தை மட்டும் தான். சர்ட்டிஃபிகேட்ஸை பொருத்தவரை நான் இவளுக்கு கார்டியனா இருக்கலாம். வெறும் பேப்பர்ஸ் எங்க உறவை முடிவு பண்ணிட முடியாது. நான் இவளுக்கு எப்போவும் அம்மா தான்!”

 

உறுதியாய் தீர்க்கமாய் சமுத்ரா சொன்ன நொடியில், புரிந்தோ புரியாமலோ, கிளுக்கிச் சிரித்தாள் குழந்தை.

 

சிரித்தக் குழந்தையை ஆசையாய் தூக்குவதற்காய் நான் கரம் நீட்ட, சமுத்ரா குழந்தையை என்னைத் தொடவிடாமல் பின்னால் நகர, குழந்தையோ என்னைப் பார்த்து பயந்து, சமுத்ராவின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, முகத்தை அவள் தோளில் புதைத்திருந்தாள்.

 

 

சில நிமிடங்களுக்குப் பின், சமுத்ராவின் தோள் வளைவிலிருந்து, தலை நீட்டி எட்டி, நான் சென்றுவிட்டேனா? என எட்டிப் பார்த்தாள் குழந்தை அவந்திகா.

 

குழந்தை என்னைப் பயத்துடன் பார்த்த அந்த நொடியிலேயே செத்துவிட்டேன் நான். இப்படியே இந்த நொடியே என் உயிர் போய்விடாதா.? என் மகள் பெற்றத் தகப்பனான என்னைப் பார்த்து பயப்படுகிறாள்.

 

சின்னக் கண்களை உருட்டி மிரள்கிறாள். இத்தனையும் பார்த்துக் கொண்டு இன்னுமும் உயிருடன் இருக்கிறேனே? இந்த பூமி என்னை இப்படியே திறந்து விழுங்கிக் கொள்ளாதா? கண்சிமிட்டும் நேரத்தில் மண்ணோடு மண்ணாய் மட்கிப் போய்விட மாட்டேனா.? பெற்ற மகளே என்னைப் பயத்துடன் பார்க்கையில் எதற்காக இந்த வாழ்க்கை? எதற்காக இந்த உயிர்? யாருக்கும் உபயோகமில்லாத இந்த உயிர் இப்போதே பிரிந்து விட்டாலென்ன? முதன்முறையாய் எனக்கு நானே பாரமாய் உணர்ந்தேன். எனக்கு நானே பாரமாய் இருக்கையில் பூமிக்கும் நான் பாரம் தானே? எனக்கே என்னைப் பிடிக்காமல் போனது.

 

கண்கள் கலங்கிப் போய் என் மகளைப் பார்த்தபடியே நான் நின்றிருக்க, குழந்தையைத் தூக்கிக் கொண்டு என்னைத் தாண்டிச் சென்றிருந்தாள் சமுத்ரா.

 

இந்தமுறை நான் அவளைத் தடுக்கவில்லை. தடுக்கவும் முயற்சிக்கவில்லை. அவந்திகா, சரியான இடத்தில், சரியான நபருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை எனக்குள் முதன்முறையாய் எழுந்தது.

 

“டேய் விக்ரம்! என்னடா இப்படி நிற்கிறே? எனக்குத் தெரிஞ்சு, குழந்தை சமுத்ராகிட்டே இருக்கிறது தான்டா நல்லது.!” என்றபடி வந்து நின்றான் சித்தார்த்.

 

“அதனால் தான் டா போக விட்டுட்டேன்!” எனச் சொன்ன என்னை வித்தியாசமாய்ப் பார்த்தான் சித்தார்த்.

 

“நீ பண்ணினதும் தப்புத்தானே விக்ரம்? குழந்தை எவ்வளவு நேரமா அழுதாளோ? அந்தக் கோபத்தில் தான் சமுத்ரா உன்னை அடிச்சுட்டாங்க! அவங்க அடிச்சுட்டாங்களேன்னு சங்கடப்படுறியா விக்ரம்?”

 

“அவள் அடிக்காமல் இருந்தால் தான் டா ஆச்சர்யம். இதில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், இவள் இப்படி கைநீட்டி அடிக்கறது தான், இவள் சம்யூ இல்லைன்னு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துது! மச்சீ! இந்த சமுத்ராவிற்கு சம்யூவே பெட்டர் டா. இவள் எதற்கெடுத்தாலும் கையைத் தான் நீட்டுறா!” என நான் சொன்னதைக் கேட்டு சித்தார்த் சிரித்துவிட்டான்.

 

ஆனால், நான் தான் சிரிக்கும் மனநிலையில் இல்லை. என் மனம் முழுதும் சாமுத்ராவும் குழந்தையும் மட்டுமே இருந்தார்கள். என் மனம் எதையும் யோசிக்க மறுத்தது.

 

 

இனி படப்பிடிப்பில் என் கவனம் செலுத்த முடியுமா தெரியவில்லை. ஒரு இயக்குநருக்கு கவனம் சிதையாது இருப்பது மிக அவசியம். அதோடு மனமும் ஒருநிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் எதிர்பார்த்தபடி பலன் அதாவது அவுட் புட் கிடைக்காது என்பது என் தனிப்பட்டக் கருத்து. கண்டிப்பாய் கவனம் எதிலும் செல்லாது என்பது புரிந்தது. அதனால் படப்பிடிப்பை அதோடு நிறுத்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தேன்.

 

நான் வீட்டிற்குள் நுழைந்த போது, சமுத்ராவும், அவந்திகாவும் சிரிக்கும் சத்தம் தான் என்னை வரவேற்றது. வாகனத் தரிப்பிடம் வரையிலும் மென்மையான சிரிப்பு சத்தம் கேட்டது. கேட்பதற்கே அத்தனை இனிமையாய் இருந்தது. மெதுவாய் மின்தூக்கியில் ஏறி, சத்தமில்லாமல் மேல் தளத்திற்குச், சென்று, லேசாய்த் திறந்திருந்த கதவிடுக்கின் வழியே பார்த்துக் கொண்டு நின்றேன். குழந்தை எங்காவது போய் மறைந்துக் கொள்வதும், கண் முன்னே நிற்கும் குழந்தையைக் காணதது போல்,

 

“அவந்தி எங்கே? பாப்பாவைக் காணோம். தூங்கிட்டாளோ? அவிம்மா! அவிக்குட்டி! எங்கே இருக்கீங்க?” எனத் தெரியாததைப் போல், குழந்தையைத் தவிர, மற்ற இடங்களில் அவள் பார்வையைத் திருப்ப,

 

“ப்பூபூபூ!”

 

எனச் சொன்னபடி சிரித்துக் கொண்டே அவள் காலைக் கட்டிக் கொண்டது குழந்தை. சமுத்ராவோ குழாந்தையைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தையின் குண்டுக் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள்.

 

அந்தக் காட்சியைக் காண அத்தனை அழகாய் இருந்தது. சமுத்ரா குழந்தையின் சிற்றன்னை எனச் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு, சமுத்ராவிற்கும், அவந்திகாவிற்கும் இடையேயான பிணைப்பு அழகாக, இயல்பாக இருந்தது.

 

குழந்தையுமே சமுத்ரா வந்த சில நாட்களிலேயே, கொஞ்சம் புஷ்டியாய் அழகாய் மாறியிருந்தாள். களையில்லாது வாடியிருக்கும் அவள் முகத்தில் இப்போதெல்லாம் சிரிப்பு தென்படுகிறது. ஒரு ஆரோக்கியமானக் குழந்தையாய் சமுத்ரா வந்த சில நாட்களிலேயே மாறியிருந்தாள் அவந்திகா.

 

மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். இருவர் பார்வையிலும் படாமல் அறைக்குச் சென்று உடைமாற்றிவிட்டு, வெளியே வந்தேன்.

 

தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு, சேனலை மாற்றுவதற்காய் ரிமோட்டை தேடினேன். டீப்பாயின் கீழ் மறைவாக வைக்கப்பட்டிருந்த பாதி தீர்ந்து போன நிலையில் மாத்திரை அட்டைகள், மருந்துச் சீட்டோடு என் கண்ணில் பட்டது. ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையோடு குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவே எடுத்துக் கொள்கிறாள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

 

இதுவே பழைய விக்ரமாக இருந்திருந்தால், கண்டிப்பாக, என் குழந்தையை என்னை மயக்கப் பார்க்கிறாள் என்று தான் நினைத்திருப்பேன். ஆனால் இப்போது, அவளின் மனதும் கொஞ்சம் புரியத் துவங்கவும், அவள் என்னை மனிதனாகவே நினைக்க மாட்டாள் அப்படியிருக்கையில் மயக்க வேறு செய்வாளா? என்று தான் தோன்றியது. மாத்திரையை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, ரிமோட்டை எடுத்து அலைவரிசையை மாற்றினேன்.

 

அனைத்து செய்தி சேனல்களும், எனக்கும் சமுத்ராவிற்குமான உறவைப் பற்றி ஆளுக்கொரு கதையாய் புனைந்து சொல்லிக் கொண்டிருந்தன. நான் எழுதும் ஸ்க்ரிப்டை விட, அபத்தமாய் இருந்தது இவர்கள் காட்சிப்படுத்திய கதைகள். சம்யூ உயிரோடு இருப்பதாகவும், நான் அவள் இறந்து விட்டாள் எனப் பொய் சொல்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

எனக்கு இவர்களின் கதையைக் கேட்டு சிரிப்பாகத்தான் வந்தது. நானும் சமுத்ராவும், வளைதளங்களில் சென்ஷேஷ்னல் நியூஸாக மாறிக் கொண்டிருந்தோம். ஒரு அரசியல்வாதி செய்வதை மக்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, ஒரு சினிமாக்காரன் செய்யுமே ஒவ்வொரு விஷயமும் ஆழ்ந்துக் கவனிக்கப்படும்.

 

சினிமா துறையிலிருக்கும், ஒரு நடிகரோ, நடிகையோ, இயக்குநரோ யாராக இருந்தாலும், அவர்கள் திருமணம் செய்வதிலிருந்து, குழந்தைப்பேறு, விவாகரத்து, இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் எல்லாமே கண்காணிக்கப்படும்.

 

ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், சமூக வலைதளங்களில் கன்டென்ட் ஆக மாற்றப்படும். நானும் சமுத்ராவும் அன்றைய பொழுதின் கன்டென்ட்டாக மாறிப் போயிருந்தோம்.

 

இதைப்பற்றி சாமுத்ரா எதுவும் கவலைப்படுவாளோ? என்று தோன்றியது. அவள் பார்வையில் படாமலே இருக்கட்டும். என நினைத்து அவளையும் குழாந்தையையும் ஒரு பார்வை பார்த்தபடி தொலைக்காட்சியை அணைத்தேன். தொலைக்காட்சியை அணைத்த மறுநொடியே சித்தார்த் என்னை அலைபேசியில் அழைத்தான்.

 

“டேய் விக்ரம்! டி.வி, ஸோஷியல் மீடியான்னு எந்தப்பக்கமும் போகாதே! உன்னையும் சமுத்ராவைம் வச்சு மீம்ஸ் போட்டு வைரல் பண்ணிட்டு இருக்கானுங்க! பத்தாதக்குறைக்கு, சமுத்ரா உன்னை அடிச்ச வீடியோவும் வெளியாகியிருக்கு.!”

 

“கண்ணா! ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு மீம் போட்டுருக்காங்களா? லென்ஸ் போட்டால் சம்யுக்தா! லென்ஸ் போடலைன்னா சமுத்ரான்னு போட்டுருக்கானுங்களா?” என சித்தார்த்திடம் கேட்டேன்.

 

“ஏன்டா பார்த்தே? இது ரொம்ப வைரலாக போய்ட்டே இருக்கு. நாம இதுக்கு நம்ம பக்கத்திலிருந்து விளக்கம் கொடுக்கணும் விக்ரம்!” என சித்தார்த், சொல்ல,

 

“நான் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கத் தயாராய் இல்லை. விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை! இன்டர்வ்யூ யாராவது கேட்டால் நோ சொல்லிடு.!” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

 

என் வாழ்க்கையில் நடந்தது, நடக்கிறது என்னவென எனக்குத் தெரிந்தால் போதும். யாருக்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது விளக்கம் கொடுத்தால், என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் நான் விளக்கம் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

 

உண்மையைச் சொல்லப் போனால், யாருக்கும் விளக்கம் கொடுக்கும் மனநிலையில் நான் இல்லை. என் மனதிற்குள் வேறொன்று ஓடிக்கொண்டிருந்தது. நான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன். என்பது எனக்குப் புரிந்தது.

 

நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், குழந்தையை எந்த வகையிலும், பாதிக்காததாக இருக்க வேண்டும், என்பதில் மட்டு நான் தெளிவாக இருந்தேன். மூளைக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டே இருந்தது. என் கண்கள் விளையாடிக் கொண்டிருக்கும், குழந்தையின் மீதும், சமுத்ராவின் மீதும் பதிந்தது.

 

அவளைப் பார்த்தபடியே என் மனதிற்குள் உறுதியான முடிவொன்றை எடுத்திருந்தேன்.

 

“பிடித்திருந்த கையை
எளிதாய் உதறிச் செல்ல முடியுமென்றாலும்..
கையை விடு
என்றுக் கெஞ்சிக்கொண்டிருப்பதே
பிரியம் வாங்கி வந்த சாபம்..!”

(யாத்திரி)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்