பேரன்பின் பெருஞ்சலனமே-23

Loading

சலனம்-23

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நான் முயன்று இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த பொறுமையெல்லாம், காற்றில் கற்பூரமாய், கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தது.

 

 

சமுத்ரா இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அவள் பதில் சொல்வாள் என நான் மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவளோ, குழந்தை, அலுவலக வேலை என அவள் போக்கில் இருந்தாள். இப்படியே காத்திருக்க முடியாமல், இரண்டு நாட்களுக்கு முன்,

 

“சமுத்ரா! உன்னோட முடிவு என்ன? எதுவா இருந்தாலும், தயங்காமல் சொல்லு!” எனக் கேட்டேன்.

 

“இது ஒண்ணும் இன்ஸ்டன்ட் காஃபி இல்லை விக்ரம்! இது வாழ்க்கை! பொறுமையாய் யோசிச்சு தான் முடிவைச் சொல்ல முடியும்!” முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டாள்.

 

அவள் பதிலுக்காய் காத்திருப்பது எனக்கு பெரும் தலைவலியாய் இருந்தது. எப்படியாவது இவளைச் சமாளித்து குழந்தையை என்னுடனே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென நான் நினைத்தேன். சம்யூவின் மிச்சமாய், என்னிடம் இப்போதைக்கு இருப்பது, அவந்தி மட்டுமே, அவளையும் விட்டுவிட்டு, தனியாய் அநாதையாய் நிற்க, நிச்சயமாய் நான் தயாராய் இல்லை.

 

 

நிச்சயமாய் அவளுக்கு குழந்தையின் கஸ்டடி கிடைப்பதற்கு மட்டும் விட்டுவிடவே கூடாது. என்பதில் நிரம்பவும் உறுதியாய் இருந்தேன்.
என் மனம் திரும்பத் திரும்ப குழந்தையைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது? குழந்தையை எப்படி தக்க வைத்துக் கொள்வது? என்ற யோசனைகளே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்க, ஒருகட்டத்தில் தலை வலிக்கத் துவங்கியது. நானா? அவளா? பார்த்துவிடலாம்.

 

 

என் குழந்தையையே நடுவில் வைத்து விளையாடிப் பார்க்கிறாள். இவள் மட்டும், சம்யூவின் உருவத்தில் இல்லாமல் இருந்திருந்தால், அவந்தி அவளைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டாள். ஆனால் என்ன செய்ய? சம்யூவைப் போலவே உருவத்தைக் கொண்டு, இவள் பிறந்து தொலைத்துவிட்டாளே?

 

‘ஏன் இந்தக் கடவுள் இத்தனை இரக்கமில்லாதவராய் இருக்கிறார்.? என் சம்யூவின் உருவத்திலேயே இவளைப் படைத்து, என்னையே பகடையாக்கி, அதில் உருட்டி, உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். சம்யூ இல்லாமல், ஒருமாதம் குழந்தையைச் சமாளிக்கத் தெரிந்த எனக்கு, ஆயுள் முழுமைக்கும் சமாளிக்கத் தெரியாதா? என்ன?!’ என நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, குழந்தையை இடுப்பில் தூக்கியபடியே அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் சமுத்ரா.

 

‘என்ன முடிவு எடுத்திருக்கிறாள்? எதாவது சொல்வாளா?’ என அவள் முகத்தையே பார்த்திருந்தேன்.

 

அவளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விக்ரம் என்ற ஒருவன் இந்த வீட்டில் இல்லாததைப் போலவே நடந்துக் கொண்டாள். ஒட்டிப் பிறந்த உடன் பிறப்புகள் இருவரும், இந்த விஷயத்தில் மட்டும், ஒரே மாதிரி நடந்துக்கொள்கிறார்கள். சம்யூவும் இப்படித்தான், இந்த வீட்டில் அவள் மட்டுமே இருப்பது போல் நடந்துக் கொள்வாள்.இவளும் அப்படித்தான் இருக்கிறாள். எனக்குள் எரிச்சல்பட்டபடி நான் சமுத்ராவையே பார்த்திருக்க,

 

 

“பாப்பா சாப்பிடுறீங்களா? அம்மா மம் மம் தரட்டுமா?” என மேஜை மீது குழந்தையை அமர வைத்து, குழந்தைக்கென பிரத்யோகமாய் தயாரிக்கப்பட்டிருந்த, வேகவைத்து மசித்த காய்கறியை ஸ்பூனில் எடுத்து ஊட்டினாள். அவந்தியும் சமர்த்தாக இரண்டு, மூன்று வாய்கள் தானாகவே வாங்கிக் கொண்டாள்.

 

 

“ம்மா! பாப்பா! ம்மா! பாப்பா!” என மழலை மொழியில் குழந்தை ஏதோ சொல்ல, புரியாமல் விழித்துக் கொண்டே நான் அமர்ந்திருக்க,

 

 

“நீயா சாப்பிடுறியா?” எனக் குழந்தையின் கையில் ஸ்பூனைக் கொடடுத்துவிட்டாள் சமுத்ரா.

 

‘இவள் என்ன செய்கிறாள்?’ என்ற யோசனையோடு நான் பார்த்துக் கொண்டிருக்க, குழந்தை தன் இடக் கையில் ஸ்பூனைப் பிடித்து, கிண்ணத்திலிருந்து எடுத்து உண்ண முற்பட, பாதிக்கு பாதி கிழே விழ, பாதி மட்டும் வாய்க்குள் சென்றது.

 

 

கொஞ்சமாய் தானே உணவை உண்டுவிட்ட மகிழ்ச்சியில், உற்சாகமாய் சமுத்ராவைப் பார்த்து, புதிதாய் முளைத்திருந்த ஒற்றைப்பல் தெரிய கெக்கலித்துச் சிரித்தாள் குழந்தை. குழந்தையின் சிரிப்பு, என் மனதையும் இலகுவாக்கி, என் உதடுகளிலும் சிரிப்பைப் படரவிட்டது.

 

 

“நீயே அள்ளி சாப்பிடு என் தங்கம்!”

 

என சமுத்ரா குழந்தையின் கன்னம் வழித்துக் கொஞ்ச, மீண்டும் ஒரு சிரிப்பு.

 

 

அவந்திகாவின் கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பில் ஒருநொடி உலகம் மறந்தது எனக்கு. மீண்டும், கடினப்பட்டு இடக்கையால் ஸ்பூனை இறுக்கிக் கொண்டு உணவை உண்ண முற்பட,

 

“அவந்திகா! அந்தக் கையில் சாப்பிடுங்க! ரைட் ஹேண்ட்!” என நான் சொல்ல, விருட்டென திரும்பி என்னை முறைத்துப் பார்த்தாள் சமுத்ரா.

 

‘எதற்காக என்னை முறைக்கிறாள்? நான் என்ன கெட்டதையா சொல்லிவிட்டேன்!’ புரியாமல் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தேன்.

 

 

“குழந்தை எந்தக் கையில் செய்றாளோ, அப்படியே செய்யட்டும்! எதுக்கு அவளை ரெஸ்ட்ரிக்ட் பண்ணுற? சம்யூவும் சாப்பிடும் போது, அதிகமா லெஃப் ஹேண்ட் தான் யூஸ் பண்ணுவா! இதைக் கூடத் தெரிஞ்சு வச்சுக்க முடியலை. பெருசா, நானும் லவ் பண்ணினேன்னு சொல்லிக்கிற! ஒரு சாதாரண விஷயத்தைக் கூட தெரிஞ்சு வச்சுக்கலை! இதுக்குப் பேர் லவ்வுன்னு நீயா சொல்லிக்க வேண்டியது தான்.!” எனக் கோபமாய் சொல்லிவிட்டு, கண்டுக்கொள்ளாமல், உணவை ஊட்டத் துவங்கியிருந்தாள்.

 

நானோ பித்துப் பிடித்தவன் போல், அமைதியாய் அமர்ந்திருநேதேன்.
நிஜமாகவே அவள் சொல்லிவிட்டுப் போன விஷயம் எனக்குத் தெரியாது தான். சம்யூ எந்தக் கரத்தைப் பயன்படுத்தி உணவு உண்பாள் என்பதைக் கூடவா நான் கவனிக்கவில்லை? சமுத்ரா சொல்வதைப் போல், அவளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லையா? சில வருடங்களாய் சம்யூவை எனக்குத் தெரியும்.

 

 

ஆனால், ஏன் நான் அவளைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கவே இல்லை. தெரிந்து என்ன ஆகப் போகிறது? என விட்டுவிட்டேனா? இல்லை ஆண் எனும் அகம்பாவமா? நன்றாக யோசித்துப் பார்த்தால், சில நேரங்களில், உணவை எனக்கு இடக்கையால் ஊட்ட முயன்று, பின் ஒரு சிறிய ஸாரியுடன் அவள் வலக்கையைப் பயன்படுத்தி ஊட்டியது நினைவிற்கு வருகிறது.

 

 

அவள் எனக்காக சின்ன சின்ன செயல்களைக் கூட, மாற்ற முயன்றிருக்கிறாள். நான் தான் அவளுக்காக எதையுமே மாற்றவில்லை. அவளுக்கு என்ன பிடிக்கும்? எதை விரும்புகிறாள்? என்ன செய்ய ஆசைப்படுகிறாள்? எதையுமே தெரிந்துக்கொள்ள முற்பட்டதே இல்லை. அவளின் சினிமா ஆசையைக் கூட, திமிராகத்தானே நான் பார்த்திருக்கிறேன். ஏன் பெண்ணுக்கு சினிமா ஆசை இருக்கவே கூடாதா என்ன.? காதல் என்ற பெயரைச் சொல்லி, அவளைக் கட்டுப்படுத்தி, சிறைப்படுத்தி ஓர் சர்வாதிகாரியாகத்தான் இருந்திருக்கிறேன்.

 

 

ஜெர்மனியைத் தன் சர்வாதிகாரத்திற்குள் வைத்து, ஏகப்பட்ட மக்களைக் கொன்று குவித்த, ஹிட்லர் தண்டனைக்குரியவர் எனில், என் சம்யூவின் மனதைக் கொன்று, அவளின் மரணத்திற்குக் காரணமான நானும் தண்டனைக்குரியவன் தானே? உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா? அவள் உயிரோடு இருக்கையிலேயே அவள் மனதை வதைத்து, அணு அணுவாய் சித்திரவதை செய்து, உள்ளைத்தைக் கொல்வதும், என் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை ஒன்றுமில்லாமல் செய்ததும் கூட கொலை தானே?

 

நான் செய்தக் கொலையில், கத்தியில்லை, இரத்தமில்லை ஆனாலும் அவள் உள்ளம் மரித்துப் போக நானே காரணமாய் இருந்தேன். நான் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும், ஆயுதமாய் மாறி, அவளை உயிரோடு வதைத்திருக்கிறது.

 

எதையுமே அறியாமல், நான் எனும் அகந்தையோடு அலைந்திருக்கிறேன். என்னை நினைத்தே எனக்கு அவமானமாய் இருந்தது. கட்டிய மனைவியையே புரிந்துக்கொள்ளாமல், அவளை ஒட்டுமொத்தமாய் தொலைத்துவிட்டு நிற்கும் எனக்கு யார் தண்டனை தருவது? நானும் ஒருவகையில் குற்றவாளி தானே? ஒருவேளை சம்யூ என்னை விட்டுப் போனது தான், எனக்கான தண்டனையாய் இருக்குமோ?
அவந்தி இடக்கையில் உணவை உண்டது, மிகச் சிறிய விஷயம் தான். ஆனால் அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

 

சமுத்ரா சொன்னது சரி தான். சம்யூவைப் பற்றி இந்தச் சின்ன விஷயத்தைக் கூட அறியாத நான், எப்படி அவளை உண்மையாக விரும்பியிருக்கப் போகிறேன்.? அப்படியானால், சம்யூவின் மீதிருந்த உணர்வின் பெயர் என்ன? காதலா? வெறும் காமம் மட்டுமா? வெறும் காமமாக இருந்திருந்தால், அவள் போனதும், அவளை மறந்துவிட்டு, இன்னொருத்தியைத் தேடி போயிருப்பேனே? ஆனால் அவள் இல்லையெனத் தெரிந்த பிறகும், அவள் இறப்பை ஏற்க முடியாமல் மனம் தடுமாறி தவிக்கிறதே.? இப்போது நான் என் செய்ய? இதன் முடிவு தான் என்ன? சம்யூவின் மீது நான் வைத்திருந்த உணர்வின் பெயர் காதலோ..

 

இல்லை வேறு எதுவுமே.. அது எதுவாக இருந்தாலும், அவளை எனக்கு நிரம்பவும் பிடிக்கும். அவளை எவ்வளவு பிடிக்குமென வெளிப்படுத்தத் தவறியது தான் உண்மையில் நான் செய்த தவறு.

 

 

ஒருவேளை அவளை நான் சரியாகப் புரிந்துக் கொண்டு, என் மனதையும் அவளுக்கு புரிய வைத்திருந்தால், இன்று என் கண் முன்னால், அவள் உயிரோடு நடமாடியிருப்பாளோ? என்னவோ? என்னையே நான் புரிந்துக் கொள்ளாத போது, எங்கிருந்து அவளைப் புரிந்துக்கொள்வது.? இப்போதைக்கு இது தான் விதி என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்.

 

 

விதியை மதியால் வெல்லும், வித்தையெல்லாம் எனக்குத் தெரியவில்லையே..!
எனக்குள் என்னையே நொந்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

 

நான் அமைதியாய் அமர்ந்திருந்தாலும், மூளை அதன் போக்கில் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. அதே நேரம், குழந்தைக்கு உணவு ஊட்டி முடித்து, முகம் துடைத்து, உடை மாற்றி என் கரத்தினில் தந்தாள் சமுத்ரா.

 

“விக்ரம்! டைம் ஆகிடுச்சா? கொஞ்ச நேரம் குழந்தையை வச்சிக்கோ! நான் குளிச்சுட்டு வந்துடுறேன். பாப்பாவை வச்சிட்டு குளிக்க முடியலை. இப்போவெல்லாம் தொட்டிலிலிருந்து பெட் மேலே இறங்கி, கீழே இறங்கிடுறா! தூங்க வச்சிட்டு போறதுக்கும் பயமா இருக்கு. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸில் வந்துடுவேன்!” நான் பதில் சொல்லும் முன்னமே என் கரத்தினில் தந்துவிட்டு ஓடிவிட்டாள்.

 

குழந்தையோ மடியில் அமர்ந்து அண்ணாந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

 

“ப்பா!”

 

என மீசையைப் பிடித்தாள். அவள் பிஞ்சுக் கரத்தில் மீசையால் குறுகுறுப்பூட்டினேன். தன் செப்பு இதழ் திறந்து கிளுக்கிச் சிரித்தாள்.

 

அவந்திகாவின் சிரிப்பு எனக்கு சம்யூவை ஞாபகப்படுத்தியது. சம்யூவும் இப்படித்தான் நன்றாக ஈறு தெரியச் சிரிப்பாள். ஆனால் இப்போது அவந்தியின் சிரிப்பைப் பார்க்கத்தான் அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை என நினைக்கையில் நெஞ்சம் வேதனையில் விம்மியது.

 

சம்யுக்தாவிற்காகவாவது அவந்தியை நான் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவந்தியின் இதழ்கள் உதிர்க்கும் இந்தப் புன்னகை, எப்போதும் வாடாது இருக்க வேண்டும். ஒரு நல்ல தகப்பனாய், என் மகளை வளர்ப்பது என் பொறுப்பு மட்டும் தான். சம்யூவிற்கும் சேர்த்து நான் பாசத்தைக் கொட்டி வளர்க்க வேண்டும். சமுத்ரா என்னதான், சம்யுக்தாவின் உடன் பிறப்பாய் இருந்தாலும், என் சுயநலத்திற்காக அவளைப் பயன்படுத்திக்கொள்வது, தவறு என்பதைத் தாமதமாய் உணர்ந்தேன் நான்.

 

 

என் பொறுப்பை, நான் செய்ய வேண்டிய கடமையை இன்னொருவர் தலையில் சுமத்திவிட்டு, நான் சுதந்திரமாக அலைவது சரியில்லை. எதையுமே யோசிக்காமல், சமுத்ராவிடம், திருமணத்திற்குக் கேட்டதை நினைக்கையில், என் மனம் கூனிக் குறுகியது.

 

 

எவ்வளவு பெரிய சுயநலவாதியாய் இருந்திருக்கிறேன். இந்தத் தெளிவெல்லாம் கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கக் கூடாதா? காலம் போன கடைசியில் எல்லாம் வந்துத் தொலைக்கிறது.

 

என் மனமும் எதிரில் நிற்பவரைப் பற்றி யோசிக்காமல், என்னைப் பற்றி மட்டுமே யோசித்துத் தொலைக்கிறது. பிறந்ததிலிருந்தே என்னை முன் நிறுத்தியே, நான் மட்டுமே முக்கியம் என்றே வாழ்ந்து பழகிவிட்டேன். சட்டென மாற்றிக்கொள்வது கொஞ்சம் கடினம் தான்.

 

********

 

இனி சமுத்ராவைக் கஷ்டப்படுத்திவிடக் கூடாதென யோசித்த பின், நான் அதிகமாக யோசிக்கவெல்லாம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நானே பார்த்துக் கொள்ளலாம் என முடிவும் செய்துவிட்டேன். ஒருமாதம் நான் தானே தனியாய்ப் பார்த்துக் கொண்டேன் என்றக் குருட்டு தைரியமும் இருந்தது.

 

 

குருட்டு தைரியம் எப்போதும் கைக்கொடுக்காது என்பதை யோசிக்கும் நிலையிலெல்லாம் நான் இல்லை. குழந்தையை அவளுக்குரிய பேபி சீட்டில் அமர்த்தி, சீட்பெல்ட்டை போட்டுவிட்டு, வாகனத்தைச் செலுத்தினேன்.

 

வாகனத்தைச் செலுத்தியபடியே, என் அன்னைக்கும் அழைப்பெடுத்தேன். நெடுநேரம் அழைப்பு சென்று, துண்டிக்கப்படும் நேரம் அழைப்பை ஏற்றார் என் தாய்.

 

“என்னம்மா! ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா? உடம்பு எதுவும் சரியில்லையா?”

 

எப்போதும் உடல்நிலை சரியில்லையென்றால் என்னிடம் சொல்லாது மறைப்பது என் அன்னையின் வழக்கம். மகன் வெளியூரில் இருக்கிறான். ஏதாவது சங்கடப்படுவன் என்பது அவர்களின் நினைப்பு.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை விக்ரம். என்ன அதிசயமா ஃபோன் போட்டுருக்க? என்ன சங்கதி?” எனக் கேட்ட என் தாயின் குரலில், எனக்கு ஏதோ வித்தியாசமாய் பட்டது.

 

“என்னம்மா! குரல் ரொம்பவும் வித்தியாசமாய் இருக்கு? எதையாவது என்கிட்டே மறைக்கிறியா? அப்பா எங்கே? அவர்கிட்டே கொடு!”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா! நீ என்ன விஷயமா ஃபோன் போட்ட? அதைச் சொல்லு முதலில்!” நானும் என் அன்னையும் பேசிக்கொள்வது, ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருக்க, தலையை ஆட்டி, ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவந்திகா.

 

 

“ம்மா! சொல்றியா? இல்லையா?” எனது அதட்டல் கொஞ்சம் வேலை செய்தது.

 

“ஒண்ணும் இல்லை டா! அப்பாவுக்கு உடம்பு சரியில்லை! ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு! உன்கிட்டே சொன்னால், நீ சங்கடப்படுவ. அதுக்குத்தான் உன்கிட்டே சொல்லலை! சுகர் கூடிப் போச்சுன்னு சொன்னாங்க! இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நீ ஒண்ணும் சங்கடப்பட்டுக்காதே!” எனச் சொன்னார் என் தாய் ஆனந்தி.

 

“நான் உடனே கிளம்பி வரேம்மா! நீ கவலைப்படாமல் இரு!”

 

“வேணாம் விக்ரம்! பச்சைப் புள்ளையை வச்சிக்கிட்டு, நீ இங்கெல்லாம் வர வேணாம். அதோட அந்தப் புள்ளையைக் கூட்டிக்கிட்டு இந்தப் பக்கம் வர வேணாம். யாரைச் சொல்றேன்னு தெரியுதா?நம்ம சொந்தக்காரய்ங்களுக்கு, பதில் சொல்ல முடியாது. இங்கே எல்லாமே கவி பார்த்துக்கிறா! அதனால்தேன் உனக்கு சொல்ல வேணாம்ன்னு அப்பா சொன்னாங்க!” என என் தாய் சொல்லவும்,

 

“ம்ம்ம்!”

 

என்ற ஒற்றைக் குரலோடு அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
சமுத்ராவைத் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காக, என் அன்னையை வரச் சொல்லிவிடலாம்.

 

 

பகலில் குழந்தையை அவர் பார்த்துக் கொண்டால், இரவில் நான் பார்த்துக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் அவரை அழைத்தேன். ஆனால், என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவரை இங்கே அழைப்பது சரியாக இருக்காது. அதோடு நான் அங்கே செல்வதும் சரியாக இருக்காது.

 

சம்யுக்தாவையும், அவந்திகாவையும் பற்றி நிறைய பேசுவார்கள். ஜாதி, மதம், இனம், சினிமா என நிறைய கேட்க வேண்டியிருக்கும்.

 

 

உறவினர்கள் என்ற பெயரில், இருக்கும் நிம்மதியையும் கெடுக்கவென்று ஒரு கூட்டம் கிளம்பி வரும்! அதோடு நில்லாமல், அடுத்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சும் எழும். இதெல்லாம் நடக்காமல் இருக்க, நான் அங்கே செல்லாமல் இருப்பதே நல்லது. எல்லாவற்றையும் விட மேலாய், சம்யூவை சினிமாக்காரி என்று பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

 

அங்கே சென்றால், தெளிந்த என் மனம், நிச்சயம் குழம்பிய குட்டையாகிவிடும். மதுரைப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாதென உறுதியாய் நினைத்துக் கொண்டேன்.

 

வாகனத்தைச் செலுத்தியபடியே, அவந்தியைத் திரும்பிப் பார்த்தேன். அமர்ந்தவாக்கிலேயே உறங்கிப் போயிருந்தாள் குழந்தை.

 

 

வர வேண்டிய இடத்திற்கு வந்ததும், குழந்தையின் உறக்கம் கலையாது, அவளை ஒற்றைக் கரத்தால் தூக்கிக் கொண்டு, வாகனத்தை லாக் செய்துவிட்டு உள்ளே நுழைந்தேன். கையில் குழந்தையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த என்னை அதிர்ச்சியுடன் பார்த்தான் சித்தார்த்.

 

 

சித்தார்த் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரின் பார்வையும் என்னை வியப்பாய் தொட்டு நழுவியது. குழந்தையை நாங்கள் புக் செய்திருந்த அறையில் கிடத்திவிட்டு, பக்கத்திலிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தேன்.

 

“டேய் விக்ரம்! என்னடா இது? குழந்தையை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த? அவந்தி சின்னக் குழந்தை டா! இன்ஃபெக்ஷன் எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுவ? குழந்தை இப்போ தான் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கா! சமுத்ரா கிட்டே விட்டுட்டு வர வேண்டியது தானே?” கொஞ்சம் அழுத்தமாகவே கடிந்துக் கொண்டான் சித்தார்த்.

 

 

“ம்ப்ச்! இனிமே சமுத்ராவை சிரமப்படுத்த வேணாம்ன்னு நினைக்கிறேன் டா! நானே பார்த்துக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.!”

 

“பைத்தியமா டா நீ? அவந்தி ஒண்ணும் பொம்மை இல்லை. அவ குழந்தை! குழந்தையை எப்படி ஹேண்டில் பண்ணணும்ன்னு உனக்குத் தெரியாது. சமுத்ரா என்ன சாப்பாடு கொடுத்து பார்த்துக்கிட்டாள்ன்னு உனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது, எந்தத் தைரியத்தில் குழந்தையைத் தூக்கிட்டு இங்கே வந்த? நீ ஷூட்டிங்கை பார்ப்பியா? குழந்தையைப் பார்ப்பியா? என்னதான்டா நினைச்சுட்டு இருக்கே?”

 

“ம்ப்ச்! சித்தார்த்! முதலில் குழந்தைக்கு ஒரு கேர் டேக்ரை அரேஞ்ச் பண்ணு! மத்ததெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். கேர் டேக்கர் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கட்டும். அடிக்கடி நானும் போய் பார்த்துக்கிறேன்.!”

 

“நிஜமாவே உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுக்கிச்சு விக்ரம்! இது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை. முன்னே பின்னே தெரியாத கேர் டேக்கரோட எப்படி குழந்தை அட்டாச் ஆகும்.? அதுவும் இல்லாமல், ஷூட்டிங் எவ்வளவு நேரம் போகும்ன்னு நமக்கே தெரியாது. ஒவ்வொரு சீனுக்கும் டேக் அதிகமாச்சுன்னா ஷுட் முடிய லேட் ஆகும். அதுவரை குழந்தை இங்கேயே இருக்கறது சரி வராது டா! நீ சமுத்ராவை சிரமப்படுத்த வேணாம்ன்னு நினைக்கிறதெல்லாம் சரிதான். ஆனால், எந்த ப்ளானிங்கும் இல்லாமல், குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்ததை என்னால் ஏத்துக்கவே முடியாது. ஏன்டா எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எல்லா முடிவையும் எடுக்கிறே? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?”

 

“வேற என்னை என்னதான்டா பண்ண சொல்ற? என்னால் முடியலை டா சித்தார்த். அவபாட்டுக்கு என்னை தனியா விட்டுட்டு போய்ட்டா! ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் சித்திரவதைப்பட்டு செத்துட்டு இருக்கேன் டா! சம்யூ இல்லாத வேதனை ஒருபக்கம். அவந்தி ஒருபக்கம்.. சம்யூ மாதிரியே இருக்கிற சமுத்ரா இன்னொரு பக்கம்.. நான் என்னதான்டா செய்றது? சமுத்ரா சம்யூவைப் பத்தி சொல்ற ஒவ்வொரு விஷயமும் எனக்குப் புதுசா இருக்குடா! சம்யூவே நேரில் நின்னு என்னைக் கை நீட்டி குத்திக்காட்டுற மாதிரி தோணுது. ஒண்ணுமே இல்லை.. ஒரு சின்ன விஷயம். சம்யூ லெஃப்ட் ஹேண்ட் தான் அதிகமா யூஸ் பண்ணுவாள்ன்னு கூட எனக்குத் தெரியலை. நான் எப்படிப்பட்ட மனுஷனா இருந்திருக்கேன்.”

 

“என் குழந்தை தான் அவந்திகா.. ஆனால் அவள் எப்போ சம்யூ வயிற்றில் வந்தாள்? எப்போ குழந்தையோட முதல் அசைவு தெரிஞ்சுது? எதுவுமே எனக்குத் தெரியலை. முதலில், சமுத்ராவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாமே சரியாகிடும்ன்னு தோணுச்சு. ஆனால் இப்போ, சம்யூ வாழ்க்கையை அழிச்ச மாதிரி, சமுத்ராவையும் என் ஈகோவால் கொன்னுடுவேனோன்னு பயமா இருக்கு டா! சமுத்ரா வந்து கிட்டத்தட்ட ஒருமாசம் ஆகப் போகுது. இத்தனை நாளில், குழந்தையைப் பற்றிக் கவலையில்லாத சொகுசு மனநிலைக்கு பழகிட்டேன் டா சித்தார்த். இந்த நிலையே தொடர்ந்தால், கண்டிப்பா சமுத்ராவை கட்டாயக் கல்யாணம் பண்ணவும் தயங்க மாட்டேன். அதனால் தான், சமுத்ராவை விட்டு விலகி, என் குழந்தையை நானே பார்த்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.!”

 

சித்தார்த் நெகிந்து என் பக்கத்தில் வந்து என்னை அணைத்துக்கொள்ள, வெகுநாட்களின் பின் அவன் தோள் சாய்ந்து மனம்விட்டு அழுதிருந்தேன்.

 

 

மனம்விட்டுப் பேசுவதற்கு மட்டுமல்ல, மனம்விட்டு அழுவதற்கும் நண்பன் தேவையாக இருக்கிறான்.

 

என் நிலையைப் பார்த்த சித்தார்த், அதன் பின் ஒன்றுமே பேசவில்லை.? தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து, குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காய் கேர் டேக்கர் பெண்மணி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தான். எனக்குத் தெரிந்தவரை குழந்தை என்னவெல்லாம் சாப்பிடுவாள் என்பதைத் தெரிவித்துவிட்டு, அந்தப் பெண்ணைக் குழந்தையோடு அறையில் விட்டுவிட்டு, படப்பிடிப்பைக் கவனிப்பதற்காய் சென்றுவிட்டேன்.

 

 

“எல்லாம் சரி ஆகிடும் விக்ரம்! கவலைப் படாதே! என் அம்மாவை வரச் சொல்லியிருக்கேன். ஆஃப்டர்நூன் வந்துடுவாங்க! குழந்தையை அவங்கப் பார்த்துப்பாங்க!” என சித்தார்த் ஆறுதலாய் சொல்ல, அவனை நன்றியுடன், அணைத்து விடுவித்துவிட்டு, படப்பிடிப்பில் கவனத்தைச் செலுத்தினேன்.

 

 

சில காட்சிகள், ஒரே டேக்கில் படமாகிவிட, சில காட்சிகள் திரும்பத் திரும்ப ரீ-டேக்காகி எனக்குள் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இதற்கு நடுவே, சமுத்ரா வேறு, என் எண்ணிற்கும், சித்தார்த்தின் எண்ணிற்கும் மாற்றி மாற்றி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“விக்ரம்! சமுத்ரா தான் கால் பண்ணுறாங்க! குழந்தை இங்கே தான் இருக்காள்ன்னு சொல்லிடு! அவங்க பதறிப் போய் தான் கால் பண்ணுறாங்க!”

 

“வேணாம் டா! அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும்! என் குழந்தையைப் பார்த்துக்கிறேன்னு அவள் வாழ்க்கைக் கெட்டுப் போறதை நான் விரும்பலை!” என சித்தார்த் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல, பதிலேதும் பேசாமல் அமைதியாகிப் போனான் சித்தார்த்.

 

 

காலை நேரத்திற்கான படப்பிடிப்பு முடிந்து, மதிய உணவிற்கான இடைவேளையின் போது, குழந்தையைப் பார்ப்பதற்காக அவசரமாய் அறைக்கு விரைந்த எனக்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே குழந்தையையும் காணவில்லை! குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காய் வந்த பெண்ணையும் காணவில்லை. எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

 

இதயம் அதி வேகமாய் துடிக்க, பதற்றத்தில் வியர்த்து வழியத் துவங்கியிருந்தது.

 

‘குழந்தை எங்கே போயிருப்பாள்.? தவழ்ந்து தத்தி தத்தி தானே நடப்பாள்.. தனியாக குழந்தை எங்கேயும் சென்றிருக்க வாய்ப்பில்லையே?’ யோசித்தபடியே

 

“சித்தார்த்! சித்தார்த்!” எனச் சத்தமாய் அழைத்தபடி ஓடினேன்.

 

“குழந்தையைக் காணோம் டா! அந்த லேடியையும் காணோம் டா! நானே பார்த்துக்கிறேன் வீம்பா தூக்கிட்டு வந்துக் குழந்தையைத் தொலைச்சுட்டேனே டா!” என் குரல் என்னை அறியாமல் உடைந்தது.

 

“சாப்பாடு ஊட்டறதுக்கு எதுக்காகவாவது தூக்கிட்டுப் போயிருப்பாங்க டா! குழந்தை எங்கேயும் போயிருக்க மாட்டாள். தேடுவோம் இரு!” என சித்தார்த் சமாதானமாய் சொன்னாலும், அவன் குரலிலும் பதற்றம் தெரிந்தது. படப்பிடிப்பு தளம், நாங்கள் புக் செய்திருந்த அத்தனை அறைகளிலும் தேடியும் குழந்தையைக் காணவில்லை.

 

 

எனக்குள் பதற்றமும், படபடப்பும் அதிகரித்தது. குழந்தையை என்னால் பார்த்துக் கொள்ள முடியுமென்கிற குருட்டுத் தைரியத்தில், முட்டாள் தனமான காரியம் செய்துவிட்டதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் நான்.

 

சித்தார்த் அவசரமாய், கேர் டேக்கராய் வந்த அந்தப் பெண்மணிக்கு அழைத்துப் பார்த்தான்.

 

“ஏம்மா! குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லித் தானே உன்கிட்டே சொன்னோம்! குழந்தை எங்கே?”

 

“சார்! ரெண்டு மணிநேரத்துக்கு தானே சார் சொன்னீங்க? குழந்தை தூங்கிட்டு இருந்துச்சு. ரெண்டுமணி நேரமாகியும் யாரும் வரலை. எனக்கு ரெகுலரா போற வீட்டில் வேலை வந்துடுச்சு! அதனால் நானே கிளம்பி வந்துட்டேன் சார். குழந்தை ரூம்குள்ளே தான் இருந்துச்சு சார்!”

 

என அந்தப் பெண்மணி சொல்ல, என் உயிர்க்கூடு ஒட்டுமொத்தமாய் நடுங்கத் துவங்கியது.

 

‘ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டேன்? என் குழந்தை எங்கே போனாள்? நானே அவளைத் தொலைத்துவிட்டேனே? இப்போது என்ன செய்யப் போகிறேன்? எங்கே போய் தேடுவேன்?’ என எனக்குள் நான் மருகிக் கொண்டிருந்த அதே நேரம், படப்பிடிப்பு தளத்தில், ஆட்டோவில் வந்து இறங்கினாள் சமுத்ரா. சமுத்ராவைப் பார்த்த நொடி, இத்தனை நேரமாய் இருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தது. உள்ளுக்குள் பயப்பந்துகள் உருளத் துவங்கியது. அவள் கோபமாய் என்னை நோக்கி வந்தாள்.

 

“குழந்தை எங்கே டா.? இங்கே எதுக்கு குழந்தையைத் தூக்கிட்டு வந்தே? உன் சினிமாவில் நடிக்க வைக்க ப்ராப்பர்ட்டியா என் அவந்தியைத் தூக்கிட்டு வந்தியா? சொல்லித் தொலைடா குழந்தை எங்கே?” என அவள் என் சட்டையைப் பிடித்து ஆக்ரோஷமாய் உலுக்கவும், படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் தடைபடவும் சரியாக இருக்க, மின்சாரம் தடைபட்ட அந்த நொடி நேர நிசப்தத்தில், எங்கோ வீறிட்டு அழும் குழந்தையின் சத்தம் கேட்டது.

 

“ஒருவருடைய தயவு தேவைப்படும்
வரை.. அவரை நாமோ, அல்லது அவர்,
நம்மையோ சொல்லிக்கொள்கிறோம்
நேசிப்பதாக..!”

(யுகபாரதி)

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்