30 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 30

கழுத்தில் கண்ணாடி துண்டை வைத்து அழுத்தியவனது மூடிய விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“என்னை மன்னிச்சிடு விக்ரமா… உன் முகத்தைப் பார்க்காமல் இந்த உலகத்தை விட்டுப் போகப் போறேன்… எனக்குத் தெரியும் இது உனக்கு எவ்ளோ வலிக்கும்னு ஆனால் எனக்கு வேற வழி தெரியல… என்னை மன்னிச்சிடு…” என்று மானசீகமாக விக்ரமனிடம் உரையாடினான் அதியன்.

அப்போது “அதியா” என்று பதட்டத்துடன் கதவை தட்டினான் விக்ரமன்.

வெளியே விக்ரமனின் குரல் கேட்டு ஒரு நொடி அதியனது கைகள் அப்படியே நின்றது. உதடுகள் வலியுடன் வளைய, கண்ணீர் சிந்திய கண்கள் கனத்துப் போனது.

“அதியா… டேய் அதியா கதவை திற…” என்ற விக்ரமன் கதவை ஓங்கி தட்டினான்.

அதியனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. வெளியே நின்ற அனைவரும் ஒரு வித பதைபதைப்புடன் நின்றனர்.

“சத்யா” என்று விக்ரமன் உரக்க அழைக்கவும் அங்கு வந்து நின்றான் அவன்.

“சொல்லுங்க சார்…” என்று சத்யன் கேட்க…

“ஜன்னல் ஓப்பன் பண்ண முடியுதா பாரு?” என்று விக்ரமன் கூற…

ஜன்னல் அருகே வந்த சத்யன் அதனைத் திறக்க முயற்சி செய்வதற்குள், அந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டது.

அதியன் தானே அந்தச் ஜன்னல் கதவுகளைத் திறந்திருந்தான்.

அதனைக் கண்டு அனைவரும் அந்தச் ஜன்னல் பக்கம் வர…

“அதியா…” என்று பரிதவித்த விக்ரமனது குரல் அதியனை ஏதோ செய்தது.

“உன்னைப் பார்க்காமல் போய்டுவேனோன்னு நெனச்சேன் விக்ரமா… நல்லவேளை உன்னைப் பார்த்துட்டேன்…” என்று வலியுடன் அதியன் உரைக்கவும்…

“என்னடா பேசுற? நீ முதலில் வெளியே வா, எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்று கூறிய விக்ரமன் ஜன்னல் வழியே அதியனின் கரத்தை பற்றினான்.

வலியுடன் அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்த அதியன்… விக்ரமனின் கரத்தில் இருந்து தனது கரத்தை மெல்ல உருவ முற்பட்டான்.

தனது கரத்தில் இருந்து அவனது கரம் நழுவுவதை உணர்ந்து கொண்ட விக்ரமன், “அதியா…” புரியாமல் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை உருவிக் கொண்டான் அதியன்.

“நான் போறேன் விக்ரமா… நான் போறேன்…” என்ற அதியன் அவனை விட்டு பின்னே நகர்ந்தபடி கூற…

“சத்யா… கதவை திறக்க ட்ரை பண்ணு” என்று சத்யனிடம் விக்ரமன் கூற… சத்யனும் மகிழனும் கதவை தள்ளி திறக்க முயற்சி செய்தனர்.

“அதியா முட்டாள் தனமா எதுவும் பண்ணிராதடா?” என்று வலி மிகுந்து கூறினான் விக்ரமன்.

“நான் முட்டாள் தானே விக்ரமா… வேற எப்படி நடந்துப்பேன்”

“அதியா கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளுடா எல்லாம் சரி ஆகிடும்”

“என்ன சரி ஆகும்… எதுவும் சரியாகாது நடந்த எதையும் உன்னாலையோ, என்னாலையோ மாத்த முடியாது. அவளோட இந்த நிலைமைக்கு நான் தானே காரணம்… எங்க உன் முகத்தைப் பார்க்காமல் போய்டுவேனோன்னு தான் பயந்துட்டு இருந்தேன். ஆனால் இப்போ உன்னையும் பார்த்திட்டேன்… இனி நிம்மதியா இந்த உலகத்தை விட்டு போவேன்”

“டேய் அதியா தப்பான முடிவு எடுக்காத… எந்தப் பிரச்சனைக்கும் இது தீர்வு இல்லை… நான் சொல்லுறதை கேளுடா… ப்ளீஸ் அதியா டோர் ஓப்பன் பண்ணு”

“வேண்டாம் விக்ரமா… உன் கண்ணீரை எனக்காக வீணாக்காத… அதுக்கு நான் தகுதி இல்லாதவன்… உனக்கு ஞாபகம் இருக்கா விக்ரமா? ஒரு நாள் நம்ம பாட்டி நமக்கு மகாபாரதக் கதையைச் சொல்லிட்டு இருந்தாங்க… அந்தக் கதையில் எனக்குக் கிருஷ்ணரை பிடிக்காது… ஏன்னா அவரு ஒரு பக்கமா ஒருத்தருக்கு சார்பாக நடந்துகிட்டாருன்னு எனக்குத் தோணிகிட்டே இருக்கும்… அதே தப்ப நீயும் பண்ணாத, நான் உன் தம்பி அப்படிங்குறதால என்னை மன்னிக்காத… சரத் பண்ணது தப்பு, மன்னிக்க முடியாத தப்பு… இருந்தும் என்னால அவனைத் தண்டிக்க முடியல… காரணம் அவன் மேல நான் ரொம்பப் பாசம் வச்சிட்டேன் விக்ரமா… உனக்கு அப்புறம் நான் நம்பின ஒரே ஆள் அவன் தான்… என்னால யாருக்கும் உண்மையா இருக்க முடியல… இங்க பாரு என்னால தான் என் வர்ஷாவுக்கு இந்த நிலைமை… அவள் இப்படி இருக்க நானும் ஒரு காரணம்… என்னால தான் எல்லாருக்கும் கஷ்டம், நான் உங்க எல்லாரையும் விட்டு போயிட்டா எல்லாம் சரி ஆகிடும். நான் யாருக்கும் உண்மையா இல்லை விக்ரமா… உனக்குக் கூட நான் உண்மையா இல்லை… சரத் உன்னைப் பத்தி தப்பா சொன்ன எல்லாத்தையும் நான் நம்பி இருக்கேன்… உன்னையே தப்பா நெனச்சு இருக்கேன்டா… அப்போ நான் உனக்கு உண்மையா இல்லைன்னு தானே அர்த்தம்… உன் மேல எனக்கு உண்மையான அன்பு இருந்திருந்தால் அவன் உன்னைப் பத்தி தப்பா சொன்னதை நான் நம்பி இருக்க மாட்டேன் இல்லையா? அவன் உன்னைப் பத்தி என்ன தான் தப்பா சொன்னாலும் என் விக்ரமன் அப்படிப் பண்ணி இருக்க மாட்டான்னு நான் அவன்கிட்ட சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அவன் சொன்ன எல்லாத்தையும் கண்ணை மூடிட்டு நம்பி இருக்கேன்… உன் அன்புக்கு தகுதியே இல்லாத நான் இவ்ளோ நாள் உன்னைத் தப்பு சொல்லிட்டு இருந்திருக்கேன். உன்னோட இந்த அன்புக்கும், கண்ணீருக்கும் நான் தகுதியே இல்லாதவன்டா… நான் பாவிடா… நான் பாவி… வாழ தகுதி இல்லாதவன்”

“அதியா நீ எந்தத் தப்பும் பண்ணலன்னு நான் சொல்லல, ஆனால் உன்னை மன்னிக்கிற தகுதியும் தண்டிக்கிற தகுதியும் இங்க யாருக்கும் இல்லை… உன்னை மன்னிச்சாலும் தண்டிச்சாலும் அதை வர்ஷா தான் பண்ணனும்…”

“ஆனால் அவள் தான் இந்த நிலைமையில் இருக்காளேடா… அதுக்கு நான் தானே காரணம்” என்று அதியன் வேதனையுடன் கூறினான்.

“டேய் அதியா வேண்டாம்டா நான் சொல்லுறதை கேளு… இன்னொரு முறை என்னால உன்னை இழக்க முடியாதுடா… ஒரு தடவை உன் கையை விட்டதுக்கே இத்தனை வருஷம் கலங்கி நின்னுருக்கேன்… மறுபடியும் ஒரு இழப்பை என்னால தாங்க முடியாதுடா. நீ என்கிட்ட பேசலன்னாலும் பரவாயில்லை என்கூட இல்லைனாலும் பரவாயில்லை.. ஆனால் நீ உயிரோட இருக்கணும்டா… என் தம்பி நீ உயிரோட இருக்கணும்டா.. சொன்னா கேளுடா அதியா” என்று தன்னை மறந்து தம்பி பாசத்தில் கண்ணீர் விட்டுக் கதறினான் விக்ரமன்.

அவனது கண்ணீர் கீர்த்தியை வெகுவாகப் பாதித்தது. அவனது கண்ணீரை கண்ட பெண்ணவளின் கண்களில் காரணமே இல்லாமல் கண்ணீர் வடிந்தது. அவனது வலியை அவளால் உணர முடிந்தது.

விக்ரமனது கண்ணீர் அதியனுக்கு வலியை கொடுத்தாலும்… தன்னவளின் இந்நிலைக்குத் தான் தான் காரணம் என்று எண்ணியவனால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

இங்கு அவர்கள் பேச பேச வர்ஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல விரல்கள் அசைந்தது. ஆனால் அது அங்கு இருக்கும் யார் கண்களுக்கும் தெரியவில்லை.

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க” என்ற அதியன் கண்களை மூடி ஒரு முடிவு எடுத்தவனாகத் தனது கழுத்தை அறுக்கப் போகவும்… வர்ஷா கடினப்பட்டுத் தனது உடலை அசைக்க முயற்சி செய்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்… அதை முதலில் பார்த்தது கீர்த்தித் தான்…

“ஐயோ அவங்க கீழே விழுந்துட்டாங்க” என்று அவள் கூற…

“தேவா” என்று விக்ரமன் பதறி அழைத்தான்… அந்தச் சத்தத்தில் கண் திறந்து பார்த்த அதியன்… அவர்கள் பார்வையை உணர்ந்து கட்டிலை பார்க்கவும்… அங்கு வர்ஷா கீழே விழுந்து கிடக்க… தூக்கி வாரி போட்டது அவனுக்கு… விரைந்து வர்ஷா அருகில் அதியன் வரவும்… சத்யன் கதவை உடைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

விக்ரமன், மகிழன் தொடர்ந்து அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

கீழே விழுந்து கிடந்த வர்ஷாவின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்ட அதியன்… “வர்ஷா… வர்ஷா…” என்று அவளது முகத்தைச் சொல்ல முடியாத கலக்கத்துடன் பார்த்தான்.. அவள் உடல் முழுவதும் மெல்லிய நடுக்கம் பரவி இருக்க… வலி மிகுந்து கண் இமைகள் மெல்ல மெல்ல அசைய ஆரம்பித்தது.

“வர்ஷா… என்னைப் பாருடி…” என்று அதியன் கண்ணீருடன் அவளிடம் வேண்ட… அவர்களைச் சுற்றி அனைவரும் நின்று கொண்டிருக்க… சத்யனோ அருகில் இருந்த சுவரில் தலையைச் சாய்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அதியன் அவளை மடி தாங்க ஏனோ இவனது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதியன் மடி சாய்ந்திருந்த வர்ஷாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்த சத்யனுக்கு… கதறி அழ வேண்டும் போன்று இருந்தது.. நெஞ்சம் வரை வந்த அந்தக் கண்ணீரை உதடு கடித்து உள்வாங்கிக் கொண்டவனது உதடுகள் வலியுடன் வளைந்து கொண்டது…

“உன் கரம் சேர மட்டும் அல்ல… உனை கவனித்துக் கொள்ளும் தகுதியையும் இன்று இழந்துவிட்டேனடி பெண்ணே… உன் விதியில் நான் இறுதிவரை பார்வையாளன் தானோ?”

அதியன் வர்ஷாவை எழுப்ப முயலவும்… அவனது மடியில் இருந்து வர்ஷாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான் விக்ரமன்.

மீண்டும் அதியன் அவள் அருகில் வர பார்க்கவும், அவனைக் கை நீட்டி தடுத்தான் விக்ரமன். அதியனோ அவனைத் தவிப்புடன் பார்க்க…

“அவளை விட்டுட்டு போகணும்னு தானே நினைச்ச இப்போ மட்டும் என்ன? போ இன்னும் அந்தக் கிளாஸ் பீஸ் கீழ தான் கிடக்குது எடுத்து அறுத்துக்கோ…” என்று ஆத்திரம் பொங்க கூறிய விக்ரமன்.. எதிரில் தலை குனிந்து நின்ற அதியனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அதியனோ அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவன் கொடுத்த அடிகளை எல்லாம் அமைதியாக நின்று வாங்கிக் கொண்டு இருந்தான்.

“இப்போ நீ செத்துட்டா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா? ஒரு பிரச்சனை வந்தால் அதை எப்படிச் சமாளிச்சு வெளியே வரணும்னு பார்க்கணுமே தவிர அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கிறதுக்குத் தற்கொலையை வழியா நினைக்கக் கூடாது. இப்போ நீ செத்துட்டா… வர்ஷாவுக்குச் சரி ஆகிடுமா… இல்லை சரத் பண்ணது தான் சரின்னு ஆகிடுமா? இல்லை இவ்ளோ நாள் நீ அவன் பேச்சை கேட்டு இவளை பத்தி தெரிஞ்சுக்கக் கூட முயற்சி பண்ணாமல் இருந்தியே அது எல்லாம் சரி ஆகிடுமா? அப்போ மட்டும் இல்லை இப்பவும் நீ தப்பு தான் பண்ணுற… நீ ஓடி ஒளிஞ்சதால வந்த பிரச்சனை தான் இது எல்லாம்… இப்பவும் ஓடி ஒளிய தான் பாக்குற? இந்த மாதிரி நேரத்தில் தான் நீ அவள் கூடவே இருக்கணும்… இதுக்கு முன்னாடி நீ அவளைக் காதலிச்சது பெரிய விஷயம் இல்லை… அழகுக்காகப் பார்த்தா ஆயிரம் பேர் மேல ஆசை வருமேடா அது காதல் இல்லை… இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீ அவளுக்குத் துணையா இருக்கணும்… அவளுக்குத் தாயா, தகப்பனா, நண்பனா அவளுக்கான எல்லாமாவும் நீ இருக்கணும்… அது காதல், எதையும் எதிர்பார்க்காத காதல், உண்மையான காதல்…” என்று அதியனிடம் கூறிய விக்ரமனின் கண்கள் அங்குச் சுவரில் கண்மூடி சாய்ந்து நிற்கும் சத்யனின் மீது பதிந்து மீண்டது.

“அவள் குணமாகி திரும்ப வந்து என் அதியன் எங்கன்னு கேட்டால் அவளுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்? நீங்க இருந்தும் அவனை ஏன் சாக விட்டீங்கன்னு கேட்டால் நான் என்னடா பதில் சொல்லுவேன்? சொல்லு… எங்க எல்லாரையும் அவள் முன்னாடி குற்றவாளியா நிறுத்திட்டு நீ மட்டும் சந்தோஷமா சாகப் போறியா? எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போகலாம்னு நினைச்சிட்ட இல்லை இதுக்காகவா மூணு வருஷம் உன்னைத் தேடி அலைஞ்சேன்… சொல்லுடா” என்று வேதனையுடன் கேட்ட விக்ரமனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த அதியன்…

“தப்புப் பண்ணிட்டேன் விக்ரமா என்னை மன்னிச்சிடு” என்று கூறி அடுத்த நொடியே அவனை அணைத்திருந்தான்… பல வருடத்திற்குப் பிறகான அந்த அணைப்பில் விக்ரமனது கண்கள் கலங்கி போனது… மனதில் ஒரு நிறைவான உணர்வு… தான் தொலைத்த பொருள் ஒன்று மீண்டும் கரம் சேர்ந்த சந்தோசம் அது.

********

வர்ஷாவை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இப்போது மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை அவள் உடல் ஏற்க தொடங்கி இருந்தது.

கண்களிலும், கைகளிலும் சிறிய அசைவுகள் தென்பட்டது.

நாளை தான் அர்ஜுன் வழக்கின் கடைசி ஹியரிங் என்பதால்… அர்ஜுன் தரப்பில் வழக்கிற்குத் தேவையான அனைத்து ஆதாரத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

அதனைக் கொண்டு வாதம் செய்த வழக்கறிஞரின் திறமையான வாதத்தால் அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் சில காரணங்களுக்காக மேலும் பதினைந்து நாள் அவர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

கோர்ட்டில் அவர்கள் ஒப்படைத்த அந்த ஒப்பந்த பத்திரத்தின் அடிப்படையில் சரத்தையும், நந்தினியையும் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

சரத்தும், நந்தினியும் கைது செய்யப்பட்டனர்.

அதியனே தன்னை வெறுத்து விலகி செல்கிறான் என்பதைத் தாங்கி கொள்ள முடியாமல் தவித்த சரத்… தானே முன் வந்து அந்தத் தண்டனையை ஏற்க துணிந்தான். நந்தினியோ தப்பிச் செல்ல வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்டாள்.

மகிழன் வீட்டினர் நந்தினிக்குத் துணையாக எந்தச் செயலையும் செய்யவில்லை.

அர்ஜுன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சரத்துக்கும், நந்தினிக்கும் அவர்களது குற்றத்திற்கு தகுந்தாற் போல நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பானது.

சிறைக்குச் செல்லும் முன் காவலர்கள் முன்னிலையில் விக்ரமனிடம் பேச வந்தான் சரத்…

“நினைச்சதை சாதிச்சிட்ட போல” என்ற சரத்தின் பார்வை அங்கு நின்ற அதியனின் மீது படிந்தது. சரத்தின் முகத்தைப் பார்க்க விரும்பாத அதியன் பின்னால் திரும்பி நின்று கொண்டான்.

“இப்பவும் நீ எனக்கு எதிரி தான்…” என்று கூறிய சரத்தை பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான் விக்ரமன்.

“இருந்தாலும் நீ என் அதியனை நல்லா பார்த்துப்பன்னு நான் நம்புறேன். அவன் நல்லா இருந்தால் எனக்குப் போதும்… வர்ஷா கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு. நான் திரும்ப வருவேன் என் அதி சந்தோஷமா வாழுறதை பார்க்க கண்டிப்பா நான் திரும்ப வருவேன்” என்ற சரத் அதியனை அடிபட்ட பார்வை பார்த்தபடி நகர, காவலர்கள் அவனை அழைத்துக் கொண்டு செல்ல.. அதனை வேதனையுடன் பார்த்த அதியனின் கண்களில் இருந்து அவனையும் மீறி கண்ணீர் வழிந்தது.

பாசத்திற்காக அவனை மன்னிக்கவும் முடியாமல்… காதலுக்காக அவனைத் தண்டிக்கவும் முடியாமல்… இரண்டுக்கும் இடையில் அதியனது இதயம் தவித்துக் கொண்டிருந்தது.

நந்தினியை காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்ல.. நந்தினி, சத்யனை முறைத்து பார்த்தபடி கடந்து சென்றாள். அவளை எந்த வித உணர்வும் இன்றிப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் சத்யன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு..

உடல் நலம் பெற்று பழையபடி பேச ஆரம்பித்திருந்தாள் வர்ஷா…

அனைவரும் அவளைச் சுற்றி நின்று கொண்டிருக்க, அவளது கண்கள் முதலில் அழைத்தது அங்கு ஓரத்தில் நின்ற சத்யனை தான்.

ஈர விழிகளால் அருகே வரும்படி சத்யனை அழைத்தாள் வர்ஷா.

அவளைச் சுற்றி இத்தனை பேர் இருக்கத் தன்னை ஏன் அவள் அழைக்கிறாள்? என்று குழப்பத்துடன் அவள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவனது கரத்தில் தனது நடுங்கிய கரத்தினை வைத்தவள், “நான் சரி ஆகிட்டேன் உனக்குச் சந்தோஷம் தானே… நீ பேசினது எல்லாம் எனக்குக் கேட்டுச்சு சத்யா” என்று மெதுவாக உரைத்தவளை விழி விரித்துப் பார்த்த சத்யனின் விழியோரம் உவர் நீர் கசிந்தது.

“உண்மையா உனக்குக் கேட்டுச்சா?” என்றவன் அங்கு நின்ற விக்ரமனை பார்த்து, “சார் நான் சொன்னேன் தானே… அவளுக்குக் கேட்டு இருக்கு பாருங்க” என்று சொன்னவனைப் பார்த்து மெல்ல தலை அசைத்தான் விக்ரமன்.

“சந்தோஷமா இருக்கேன்டா” என்று சந்தோசத்துடன் வர்ஷாவை பார்த்து உரைத்தான் சத்யன்.

பின்னர் “விக்ரமா” என்று அழைத்து அவனைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள்… அடுத்து அங்கு நின்ற அதியனை கண்களால் தன் பக்கம் வரும்படி அழைத்தாள்.

அதியனோ தளர்ந்த நடையுடன் அவள் அருகில் வந்தான்.

“என்னை ஏன் பார்க்க வரல?” என்று அவள் வேதனையுடன் கேட்க…

“இல்லடி அது என் தப்பு தான்… ஆனால் நீ தானே போறேன்னு சொன்ன?” என்று குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு அதியன் பேச, மென்மையாகச் சிரித்தாள் வர்ஷா.

“போறேன்னு சொன்னேன்… திரும்பி வர மாட்டேன்னு சொன்னேனா?” என்று உரைத்தவளை சுற்றம் மறந்து கண்ணீருடன் அணைத்து இருந்தான் அதியன்.

ஆறு மாதத்திற்குப் பிறகு…

வர்ஷாவால் கை, கால்களை நன்றாக அசைக்க முடிந்தது… ஆனால் இன்னும் அவளது முதுகு தண்டு பலம் அடையாமல் இருக்க… அவளால் எழுந்து அமர முடியவில்லை… மருத்துவரும்.. கொஞ்சம் கொஞ்சமாகச் சரி ஆகிவிடும் என்று கூறி இருக்க அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு அவளைப் பழைய வர்ஷாவாகக் காண காத்திருந்தனர்.

சத்யன் வர்ஷாவிற்காக ஜூஸ் செய்து கொண்டிருந்தான்.

தனக்கு எதிரே அமர்ந்து இருந்த அதியனை இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் வர்ஷா… அவளது பார்வை உணர்ந்து மென்னகை பூத்தவன், “என்ன” என்று புருவம் உயர்த்திக் கேட்க…

அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு தன் இடம் அறிந்து வெளியே வந்தான் சத்யன்.

வெளியே வந்த சத்யனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைக் கண்டு கொண்ட விக்ரமன் அவனது தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்தான்.

அப்போது அவர்களை நோக்கி வந்த பரதன், “அண்ணா அன்னைக்கு ஒரு நம்பர் கொடுத்துக் கண்டுபிடிக்கச் சொன்னீங்க இல்லை அது அதியனோட நம்பரா?” என்று கேட்டான்.

“அடடா ரொம்பச் சீக்கிரமா கண்டு பிடிச்சிட்ட போல… செம்ம வேகம்… இந்த வேகத்தில போனால் நீ சீக்கிரமா முன்னேறிடுவ… கீப் இட் அப்…” என்று கூறி விக்ரமனும், சத்யனும் சிரிக்க… அவர்களைத் தொடந்து பரதனும் சிரித்துக் கொண்டான்.

ஜோதியின் நினைவு நாளையும், காப்பகத்தில் இறந்து போன அந்தப் பத்து குழந்தைகளின் நினைவு நாளையும் ஒரே நாளாக நினைவு கூர்ந்தனர் அர்ஜுன் குடும்பத்தினர்.

ஜோதியின் போட்டோவை பார்த்த வர்ஷாவின் கண்களிலும், விக்ரமனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது…

அப்படியே அந்தப் பத்து குழந்தைகளின் புகைப்படத்தை வரிசையாகப் பார்த்த வர்ஷாவின் கண்கள் ஒரு புகைப்படத்தில் நிலைத்து நின்றது. அவளது கண்களில் இருந்து தன்னிசையாக ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

அந்தப் பெண் வர்ஷாவின் பிறந்தநாள் அன்று காப்பகத்தில் அவளைக் கீழே விழாமல் பிடித்துத் தாங்கிய அதே பெண் தான். அந்தப் பெண்ணிற்கான அஞ்சலியாக அவளது கண்ணீர் துளிகள் இருந்தது.

பூபாலன் மற்றும் தேவனது தந்தை ராஜன், தங்களது தவறை உணர்ந்து அர்ஜுனை அவர்களது வீட்டிற்கு அழைக்க மறுத்து விட்டார் அர்ஜுன். அப்போதும் இப்போதும் அவர்களது சொத்தின் மீதும் சொந்தத்தின் மீதும் அவருக்குப் பிடிப்பு இல்லை.
************

ஒரு வருடத்திற்குப் பிறகு…

அம்பிகாவின் தொடர் வற்புறுத்தலால் லேகாவை திருமணம் செய்து கொண்டான் மகிழன். லேகாவும், மகிழனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர்.

பரதன், நந்தினியின் கேஸ் விஷயமாக விசாரணை செய்கிறேன் என்று வினோதினியை அழைத்து விசாரணை செய்தான் அவன்… விசாரணை என்ற பெயரில் காதல் தான் செய்தான். அந்தக் காதலை பற்றிப் பரதன் விக்ரமனிடம் கூற… விக்ரமன் அர்ஜுனிடம் கூற… பரதனுக்கும், வினோதினிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது.

பரதன், வினோதினியின் கழுத்துல தாலி கட்டுவதைப் பார்த்த கீர்த்தி… அங்கு நின்ற விக்ரமனை முறைத்து பார்த்தாள். அவளது கோபம் உணர்ந்து வேண்டுமென்றே அவளைச் சீண்டும் பொருட்டுக் கண் சிமிட்டினான் விக்ரமன். அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இன்னும் இரண்டு நாளில் அதியனுக்கும், வர்ஷாவுக்கும் திருமணம் என்ற நிலையில் சத்யன் ஒரு முடிவை எடுத்து இருந்தான்.

நந்தினிக்கு இந்த ஒன்றரை வருட சிறை வாசம், வாழ்க்கை என்றால் என்ன என்று அவளுக்குப் புரிய வைத்து இருந்தது.

தனிமை அவளை உயிருடன் வதைத்தது. வாழ்க்கை என்றால் என்ன என்று இப்போது தான் உணர ஆரம்பித்தாள். தனது உறவுகளுக்காக ஏங்கினாள். அவள் ஏங்கும் நேரம், அவளுக்காக அங்கு யாரும் இல்லை என்பது தான் விதியின் விளையாட்டு.

யாரோ நந்தினியை பார்க்க வந்திருப்பதாக ஜெயிலர் கூற… “என்னைப் பார்க்கவா?” என்று ஆர்வமாகக் கேட்ட நந்தினியின் கண்களில் இருந்து கண்ணீர் அளவில்லாது சிந்தியது.

“மாமாவா தான் இருக்கும்… எனக்குத் தெரியும்… கண்டிப்பா கீர்த்தியும் வந்து இருப்பாள்… பாவம் அவளை நான் அடிச்சிட்டேன்… அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்… அக்காவை மன்னிச்சிடு கீர்த்தி… இனி அக்கா உன்னை அடிக்க மாட்டேன்டி” என்று பைத்தியகாரி போலப் புலம்பியவள் வேகமாக வந்தாள்.

ஆனால் அங்கு அவளுக்காகக் காத்திருந்தது மகிழனோ, கீர்த்தியோ அல்ல சத்யன்…

அவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.

அவளை நிதானமாகப் பார்த்த சத்யன், “நான் ஒன்னும் உன்னை வெறுப்பேத்தி பார்க்கவோ? உன் நிலைமையைக் குறிப்பிட்டு உன்னை வேதனை படுத்தவோ வரல? அது என் குணமும் இல்லை… நீ எவ்வளவோ தப்பு பண்ணி இருக்க… ஆனால் உன் வாழ்க்கையில் நான் ஒரு தப்பு பண்ணி இருக்கேன். அந்தத் தப்புக்காகத் தான் இப்போ வந்தேன். என்னன்னு யோசிக்கிறியா? என்ன இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன்னு பொய் சொல்லி உன்கிட்ட பழகி இருக்கக் கூடாது. அது இப்பவும் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு. எனக்குத் தெரிஞ்சு நான் பண்ண தப்பு அது மட்டும் தான்.. இன்னும் ஒரு வாரத்தில் நான் வெளிநாட்டுக்கு போயிடுவேன். அதுக்கு அப்புறம் இங்க வருவேனான்னு கூட எனக்குத் தெரியல. அது தான் இப்பவே சொல்லிடலாம்னு முடிவு பண்ணி வந்தேன். நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி உன்கூடப் பொய்யா பழகினதுக்கு என்னை மன்னிச்சிடு” என்றவன் அவள் முகம் பார்க்காமல் திரும்பி நின்றான்.

“உண்மையா அது எல்லாம் பொய் தானா?” என்று முதல் முறையாக தன்னிலை விட்டு கீழிறங்கி நந்தினி கேட்க…

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த சத்யன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

செல்லும் அவனை வேதனையுடன் பார்த்த நந்தினி அப்படியே கீழே அமர்ந்து கண்ணீர் வடிக்கத் தொடங்கி இருந்தாள். அவளது கண்ணீரை துடைக்க இப்போது அங்கு ஒருவரும் இல்லை.

அள்ளி அணைக்கத் தாய் இல்லை. ஆறுதல் கூற மாமனும் இல்லை. தலைவருடி பிள்ளை முத்தம் கொடுக்கத் தங்கையும் இல்லை. அவள் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது அல்லவா? விதி யாரை விட்டது..

**********

அதியன் வர்ஷாவிடம் காதலை சொன்ன அதே கோவிலில் இன்று அவர்கள் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதியன் வர்ஷாவின் கழுத்தில் தாலி கட்ட… அதனைக் கண்ட கீர்த்தி எப்போதும் போல விக்ரமனை பார்த்து முறைக்க… அவனும் எப்போதும் போல அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தான்.

அதியனுக்கும், வர்ஷாவுக்கும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்த சத்யனின் கண்களில் இருந்து அவனையும் மீறி ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

அதனைக் கண்டு அவனது தோளில் கை போட்டான் விக்ரமன். விக்ரமன் கவனிப்பதை உணர்ந்து வேகமாகத் தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட சத்யன், “அது தூசி சார்” என்று கூறி அங்கிருந்து செல்ல பார்த்தான்.

“யார் கிட்ட வேணும்னாலும் நடி… ஆனால் என்கிட்ட நடிக்காத… நந்தினியை பார்க்க போனியா?” என்று விக்ரமன் கேட்க…

“ம்ம்ம் போனேன்… நீங்க சரத்தை பார்த்துட்டு வந்தீங்க போல?”

“ஆமா… அதியன் கல்யாண விஷயத்தைச் சொல்லிட்டு வந்தேன்… சந்தோசப்பட்டான்…”

“நான் சும்மா… அவள் கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும் நினைச்சேன் அதைச் சொல்லிட்டு வந்தேன்…” என்று கூறிய சத்யனை பார்த்தவன்…

“மத்தவங்களுக்காக வாழுறது தப்பு இல்லைடா ஆனால் மத்தவங்களுக்காகன்னு மட்டுமே வாழுறது தான் தப்பு… கொஞ்சம் உனக்காகவும் வாழ பாருடா…” என்ற விக்ரமனை பார்த்து மென்மையாகச் சிரித்த சத்யன்.

“யாருக்காக வாழ்ந்தா என்ன சார்… எல்லாரும் நல்லா இருந்தா போதும்… நான் சந்தோஷமா இருக்கேன் சார்… எனக்குன்னு யோசிக்க எதுவும் இல்லை… என் வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டேன் சார்… அழகான காதல்… அதோட நினைவுகள்… இது போதும்… இன்னொரு முறை சிரிக்கவோ! அழவோ! உடல் அளவிலும் தெம்பில்லை… மனசு அளவிலும் தெம்பில்லை… போதும் சார் உண்மையா எனக்கு இது போதும் நான் சந்தோஷமா இருக்கேன்.” என்ற சத்யன், “உங்க ஆள் வருது” என்று கூறி கீர்த்தியை கண் காட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.

“இவள் வேற…” என்று விக்ரமன் சலித்துக் கொள்ள… அவனை இடித்துக் கொண்டு வந்து நின்றாள் கீர்த்தி.

“என்னடி” என்று அவன் கேட்க…

“எனக்கு எப்போ தாலி கட்டுவீங்க?” என்று கேட்டாள் கீர்த்தி.

அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளைப் பார்க்க…

“இங்க பாருங்க இப்படிச் சிரிச்சு சிரிச்சு என்னை ஏமாத்த பார்க்காதீங்க” என்று மூக்கு சிவக்க கூறியவளின் மூக்கை பிடித்துத் திருகியவன்…

“அப்படித் தான்டி சிரிப்பேன் என்னடி பண்ணுவ?” என்று விதண்டாவாதம் பேசினான். பொங்கி விட்டாள் குட்டி காதலி…

“நீங்க என்னை ஏமாத்த பாக்குறீங்க… அன்னைக்குக் கூட அங்க வச்சு எனக்கு முத்தம் எல்லாம் கொடுத்தீங்க… கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா மட்டும் கசக்குதா?” என்று கேட்டவளின் வாயை பொத்தியவன்,

“அடியே மெதுவா பேசு, ஏன் இப்படிக் குதிக்கிற? வயிற்றில் இருக்கக் குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுது” என்றவனை முறைத்து பார்த்தாள்…

இருவரும் கடந்த ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டனர்… ஆனால் கீர்த்திக்கு அவன் தாலி கட்டவில்லை… அவனைப் பொறுத்தவரை அவள் கழுத்தில் இன்றும் தொங்கி கொண்டிருக்கும் அந்த v செயின் தான் தாலி… ஆனால் அவளுக்கோ அது எல்லாம் தெரியாது அல்லவா? அதனால், “தாலி கட்டுங்க… தாலி கட்டுங்க…” என்று புலம்பி கொண்டே திரிவாள்…

அவளை இப்படிப் புலம்பவிட்டுப் பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட விக்ரமன்… இப்போது வரை அவள் கழுத்தில் தாலி கட்டவில்லை.

தாலிகட்டவில்லை ஆனாலும் அவள் தான் விக்ரமன் அபிமன்யுவின் மனைவி என்று ஊருக்கே தெரியும். நடிகனின் மனைவி அல்லவா?

என்ன தான் இருந்த போதிலும் பெண்களுக்கே உரித்தான அந்தத் தாலி என்ற ஒன்றை அவனிடம் எதிர்பார்த்து தான் காத்திருந்தாள் கீர்த்தி.

முரண்டு பிடித்த அவளின் கழுத்தில் தொங்கும் v செயினைப் பற்றி முன்னாள் இழுத்தவன், “கோபமா?” என்று கேட்க..

“இல்லையே சும்மா… நான் வர்ஷா அக்காகிட்ட போறேன்… பாய் அங்கிள்” என்று கூறிவிட்டு ஓடி சென்றவளை பார்த்து…

“அடிங்க… அங்கிளா? இருடி உன்னை நைட் பார்த்துக்குறேன்” என்று சிரிப்புடன் கூறிக் கொண்டவன் தன் போனை எடுத்து சத்யனுக்கு ஒரு குறுஞ்செய்தியினை அனுப்பினான்.

அந்தக் குறுஞ்செய்தியை படித்த சத்யனின் உதடுகள் தானாக விரிந்து கொண்டது.

“தான் விரும்பிய ஒன்றுடன் இணை சேர முடியவில்லை எனில் தன்னை விரும்பும் ஒன்றுடன் இணைவதில் தவறொன்றும் இல்லையே…

வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே அதை உடனில்லாத ஒருவரின் நினைவுகளுக்குக் கொடுத்து வீணாக்காமல்… உடன் வர விரும்புபவற்கு இடமளித்து அழைத்துச் செல்லுங்கள்…

இன்பமோ துன்பமோ இணையுடன் வாழ்வின் இறுதிவரை வாழ்ந்து தான் பாருங்களேன்…” என்று விக்ரமன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு சத்யனின் பதில் புன்னகையாக மட்டுமே இருக்க… அவன் புன்னகைக்கும் போதே அங்கிருந்த அனைவரையும் தன் போனில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டான் விக்ரமன்… அதில் அதியன், வர்ஷா, சத்யன், அர்ஜுன், பரதன், மகிழன் மற்றும்  கீர்த்தி என அனைவரது முகத்திலும் புன்னகை நிரம்பி இருந்தது.

அவர்களது புன்னகையைக் கண்ட விக்ரமனின் இதழ்களும் தானாகச் சிரித்துக் கொண்டது.

“மாயோன் அவன் தீட்டிய
மலரோவியமாய் அவர்கள்”

… மாயோனின் மலரோவியம்…

கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றி ❤️

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment