
குளித்து முடித்துவிட்டு இரவு உணவை உண்ண வந்த மகளுடன் சேர்ந்து அமர்ந்தவர், தனக்கும் சேர்த்துப் பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினார்.
“அப்புறம் வைத்தி… எப்படி இருந்தது உன்னுடைய டே ?”
“வழக்கம் போலத்தான்…” என்று சலிப்பாகச் சொன்னவர், இன்று நடந்த சம்பவத்தைச் சொல்ல, அவளுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“அதென்ன வைத்தி… வீட்டு வேலை செய்யத் தெரியாத ஒரு பையனுக்கு நல்ல பொறுப்பான பொண்ணாப் பார்த்துக்கட்டி வைக்கிறாங்க? ஆனா, ஒரு வேலையும் செய்யத் தெரியாத பொண்ணுக்குப் பொறுப்பான பையனைக் கட்டித்தர மாட்டாங்களாமா? இதென்ன கொடுமையா இருக்கு? பொண்ணுங்க வீட்டு வேலை பார்க்கவே பிறந்து வந்திருக்காங்களா என்ன?” எனக் கேட்க, வைத்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்ன அமைதியா இருக்க வைத்தி, பதில் சொல்லு?”
“என்னத்தைச் சொல்லச் சொல்ற? அந்தக்காலத்துல சொல்லி வச்சுட்டாங்க… பொண்ணுங்க வீட்டு வேலை பார்க்கணும், பசங்க வெளி வேலை பார்க்கணும்னு. அதை நாம இன்னும் ஃபாலோ பண்றோம். இப்போ காலம் மாறிடுச்சு, அதுக்கேத்தபடி மாறினவங்களும் இருக்காங்க. சிலர் பழைய காலப்படியும் இருக்காங்க… அந்த அம்மாவைப் போல!” எனப் பெருமூச்சை விட்டார்.
“நீ எந்தக் காலப்படி இருக்க?”
“எனக்குத் தெரியல சம்மு பாப்பா… ஆனா, நம்மளை நாமளே பார்த்துக்கிறதுக்காகவாவது சில பேசிக் திங்க்ஸ் (Basic things) தெரிஞ்சு வச்சுக்கணும் இல்லையா? யாரையும் சார்ந்து இருக்காம, நமக்குத் தேவையானதை நாமே செஞ்சுக்கச் சில வேலைகளைத் தெரிஞ்சுக்கிறது நல்லதுதானே பாப்பா?” என்றார்.
“அப்போ… பேசிக் திங்க்ஸ் தெரிஞ்சவனா, என்னைச் சார்ந்து இருக்காம அவனையே அவன் பார்த்துக்கக்கூடிய ஒரு மாப்பிள்ளையாப் பார்த்து எனக்குக் கட்டி வை! நான் என் வேலையைப் பார்க்கிறேன், அவன் அவனோட வேலையைப் பார்க்கட்டும். என்ன ஓகேவா?”
“அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே?” என்று அவளுக்குக் கேட்காதவாறு முணுமுணுத்தார்.
“யோவ் வைத்தி! யாரை நீ பருத்தி மூட்டைன்னு சொல்ற?” என எகிறிய மகளைக் கண்டு பயந்தபடி, “ஐயோ பாப்பா… உன்னை இல்ல! பொதுவா காமெடி சொல்லுவாங்களே, அதைச் சொன்னேன். ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துக்கிறதுக்கு அப்புறம் கல்யாணம் எதுக்கு பாப்பா?”
“சரி! இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற?”
“இல்ல பாப்பா… நான் என்ன சொல்ல வர்றேன்னா?” என்று இழுத்தவருக்குப் பயம் உள்ளுக்குள் உருள, எச்சில் கூட்டி விழுங்கினார்.
“நீ கொஞ்சம் கொஞ்சமா இப்ப இருந்தே வேலை பார்க்கக் கத்துக்கணும்னு சொல்ல வர்றேன் பாப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்படாம இருப்பேல்ல…” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவருக்கு வியர்த்துவிட்டது.
அவளோ யோசனையோடு தந்தையைப் பார்த்தவள், “ஏன் திமிங்கிலம்? வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சுட்டுப் போனா மட்டும் நான் கஷ்டப்பட மாட்டேனா?” என நக்கலோடு கேட்க, அவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“என்ன வைத்தி, பதிலைக் காணோம்?”
“கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்பட மாட்ட பாப்பா…”
“அப்படியா? எப்படிச் சொல்ற?”
“இத்தனை வருஷ அனுபவம் பாப்பா…” என்றவர், சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு நழுவப் பார்க்க, அவளுக்கு அவரது கூற்று திருப்தியளிக்கவில்லை.
வெளியே வந்தவரைப் பிடித்துக்கொண்ட சம்ருதி, “வைத்தி! எனக்குப் புரியல, நீ என்ன சொல்ல வர்ற?” என்றாள் கேள்வியாக.
“அது பாப்பா… உன்னை வச்சுட்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்குத் தெரியும். அதுபோல உன்னைக் கட்டிக்கப் போறவன் தான் கஷ்டப்படப் போறான், நீ இல்ல… அதான் சொ… ல்… ல வா… ர்… றே ன்…” என்று அவள் எதையோ தேடுவதைக் கண்டு, ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தவர், அவள் கட்டையைத் தூக்கியதும் ‘விடு ஜூட்’ என ஓட ஆரம்பித்தார்.
“யோவ் கிழவா… ஒழுங்கா நில்லு! என்னை வளர்க்கிறது கஷ்டமா இருக்குன்னு சொன்னதுமில்லாம, வரப்போறவனுக்காக ஃபீல் பண்றியா? இதுல உனக்கு அனுபவமா? ஓடாம நில்லுய்யா…” என்று அவளும் கட்டையோடு துரத்திக்கொண்டு பின்னால் சென்றாள்.
“உண்மைதான் சொல்லுறேன் பாப்பா… உன்னைக் கட்டிக்கிட்டு அந்த ஜீவன்தான் கஷ்டப்படணும், நீ இல்ல!” என நக்கல் செய்தவாறே வாசலுக்கு ஓட, அவளோ விடாமல் துரத்தினாள்.
“யோவ் வைத்தி… என்ன தைரியம் உனக்கு? ஓடாம நில்லுய்யா…” என அவள் துரத்தி வருவதற்குள், “ஓடிட்டேன்ல!” என்று வீட்டைத் தாண்டி ஓடிவிட்டார்.
“நீ வீட்டுக்குத்தானே வரணும்? அப்ப இருக்குடி உனக்கு…” எனச் சாலையில் ஓடியவரிடம் கத்திச் சொன்னவள், கட்டையைக் கீழே போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.
தந்தைக்கும் மகளுக்கும் நடந்த இந்தக் கூத்தைக் கண்டு வாயில் கை வைத்துத் திகைத்தார் கோமதி! பக்கத்தில் அமர்ந்திருந்த வளர்மதிக்கோ இது பழகிப்போன ஒன்று என்பதால் அசட்டையாக இருந்தார்.
“என்ன வளரு… அப்பாவை அடிக்கக் கட்டையைத் தூக்கிட்டுத் துரத்துறா! என்ன பொண்ணு இவ?” – சாதாரண விஷயத்தைக் கூடப் பெரிதாகப் பார்க்கும் குணம் கொண்ட கோமதி ஆச்சரியப்பட்டார்.
“அட, அவ அப்படித்தான் கா! இந்தக் கூத்தை தினமும் பார்த்துட்டுத்தானே இருக்கோம்…” என்றார் வளர்மதி சலிப்பாக.
“வாயா போயான்னு மரியாதை இல்லாமப் பேசிட்டு இருக்கா…”
“அவ அவங்க அப்பாக்கு மட்டுமில்ல, யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டா. இங்க இருக்கிற வயசானவங்க எல்லார்கிட்டயும் வாயா போயான்னுதான் பேசுவா. பெரியவங்களும் இவ சின்னப் பிள்ளைன்னு சகிச்சுட்டுப் போறாங்க… அதுவும் குழந்தைங்களோட சேர்ந்து இவ பண்ற கூத்து இருக்கே… இதெல்லாம் ஒரு பொண்ணுதானான்னு தோணும்…” என்று தன் பொறாமையினால் கோமதியிடம் அவளைப் பற்றித் தவறாகப் போட்டுக் கொடுத்தார் வளர்மதி.
இயல்பாகச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சம்ருதி நட்போடு பழகுவதைக் கூட வளர்மதி தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தார். அவரது மகனும் ஒரு மருத்துவர்தான். ஆனாலும், அங்கிருக்கும் மக்கள் சம்ருதியையே நாடிச் செல்வதால், இவருக்கு அவள் மீது அலாதி பொறாமை.
சம்ருதி, தன் வீட்டைச் சுற்றியிருக்கும் தெருக்களில் உள்ள மக்களுக்கு முடிந்தவரை இலவசமாகத்தான் மருத்துவம் பார்ப்பாள்; பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டாள்.
ஒருநாள் அவள் இல்லாத நேரத்தில், அவசரமாக ஒரு நோயாளி வளர்மதியின் மகன் மருத்துவர் என்று தெரிந்து அவனிடம் சென்றார். அவனும் அவரைப் பரிசோதித்துவிட்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தான். வந்தவர் சம்ருதி என்று நினைத்துப் பணம் எதுவும் எடுத்து வரவில்லை. ஆனால் வளர்மதியோ, அந்த அவசர நேரத்திலும் பணம் வசூலிப்பதிலேயே குறியாக இருக்க, அன்றிலிருந்து யாரும் அவர் வீட்டுப் பக்கம் மருந்துக்குக்கூடச் செல்வதில்லை.
எல்லாரும் சம்ருதியைத் தேடிச் செல்லவே, வளர்மதிக்குப் பொறாமையும் வன்மமும் கூடிப்போனது. அன்றிலிருந்து அவளைப் பற்றி யாரிடமாவது தவறாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குக் குற்றமாகவே தெரிந்தது; அவள் சேவை செய்வது அவருக்கு எரியூட்டியது. அவளைப் பற்றி ஏதாவது குறை சொன்னால்தான் அவரது வாய்க்குத் தீனி கிடைத்தது போலிருக்கும்.
அதற்கேற்றவாறு இப்போது கோமதி கிடைக்கவே, அவரிடம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி, கோமதியையும் தன் கண்ணோட்டத்திற்கு மாற்றியதோடு, சம்ருதியைப் பற்றித் தவறாகவும் சித்தரித்துவிட்டார்.
இருவரும் அவளைப் பற்றிப் புறணி பேசிக் கொண்டிருக்க, வெளியே சென்ற மாறன் அப்போதுதான் வீட்டிற்கு வந்தான். வண்டியை நிறுத்தியவன் காதில் அவர்களது புறணிப் பேச்சு விழுந்தது. சலிப்புடன் அவர்களைப் பார்த்தவனுக்கு ஏகப்பட்ட கடுப்பு ஏற்பட்டது.
நன்றாக இருக்கும் தன் தாயைக் கெடுப்பதே இந்தச் சித்திதான்! முன்பு இருந்த வீட்டில் எல்லாருமே நன்றாகப் பழகக்கூடியவர்கள். ஆனால், அவர்களிடமும் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துக் கூறுவார் வளர்மதி. அதை அப்படியே நம்புவார் கோமதி. அதுதான் மாறனுக்குப் பிடிக்காத ஒன்று.
அதற்காகவே இத்தனை வருடங்களாகச் சித்தி வீட்டிற்கு அருகே வீடு பார்க்காமல், கொஞ்சம் தள்ளியே தனியாக இருந்தார்கள். ஆனால், சித்தியும் அம்மாவும் ஒற்றைக் காலில் நின்று, சித்தி வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலேயே தங்களைக் குடியேற வைத்துவிட்டனர். அவர்கள் இருவரும் ஒன்று சேருவது இவனுக்குப் பெரிய தலைவலியாக முடிந்தது. வேறு வழியில்லாமல், தாயின் உடல்நிலையைக் கருதி அவர்கள் முடிவுக்கு ஒத்துக்கொண்டு வீடு மாறி வந்துவிட்டான்.
விபத்தில் தந்தையை இழந்து, உடல்நிலை மோசமாக இருந்த தாயைத் தேற்றி, அவரது உடல்நலனை முன்னேற்றிக் கொண்டு வர மாறன் மிகுந்த சிரமப்பட்டான். வீட்டில் சமையல் வேலையிலிருந்து அனைத்தையும் அவனே பார்க்கத் தொடங்கினான். இப்போது அவரது உடல் தேறி நன்றாக இருந்தபோதிலும், கோமதியை அவன் வேலை செய்ய விடுவதில்லை; அவனே அத்தனையையும் பார்த்துக்கொள்வான்.
அதன் காரணமாகவே, கல்யாணத்திற்குப் பின் மகனையும், தன்னையும், வீட்டையும் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு மருமகளைத்தான் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் கோமதி. ஆனால், அவரது எண்ணத்தை நினைத்து விதி கேலி செய்து சிரித்தது.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போதுதான் விபத்து நடந்தது என்பதால், அன்று ஏற்பட்ட மோசமான அனுபவத்தின் காரணமாக, மகன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாலே கோமதிக்குப் பயம் சூழ்ந்து கொள்ளும். ஆயிரம் முறை ‘பத்திரம்’ என்று சொல்லி வழியனுப்பி வைப்பவர், அவன் கடைக்குச் சென்று அலைபேசி வழியே ‘வந்துவிட்டேன்’ என்று சொன்ன பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுவார். அதுவரை உள்ளுக்குள் பல கற்பனைகளைச் செய்து துடித்துக் கொண்டிருப்பார்.
அப்படிப்பட்ட தாயிடம், ‘பைக் ரேஸில்’ கலந்துகொள்ளும் தன் பேராசையைப் பற்றிக் கூறாமல், அவருக்குத் தெரியாமலேயே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான் மாறன்.
அவர் மருந்தின் வீரியத்தில் நன்றாக உறங்கிப் போன பிறகு, தன் நண்பன் விஷாலை வரவழைத்து, குறிப்பிட்ட இடத்தில் சாகசங்கள் செய்வான். அவனுக்கென்று தனியாக ஒரு ‘கே.டி.எம்’ (KTM) பைக் இருப்பது கூடக் கோமதிக்குத் தெரியாது. அவன் இரவில் இவ்வாறு சென்று சாகசம் செய்வது தெரிந்தால் அவர் உயிரே விட்டுவிடுவார் என்பதால், அவருக்குத் தெரியாமலேயே இந்தக் கூத்து நடந்து வருகிறது.
காலையில் கோமதியின் பேச்சைக் கேட்கும் நல்ல பையனான ‘வெற்றி’யாக இருக்கும் அவன், இரவில் அவனுக்குப் பிடித்தது போல ‘மாறனாக’ மாறுகிறான்.
மகனை விட்டுக் கொடுக்காத கோமதி, தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரிடமும் தன் மகனைப் புகழ்ந்து தள்ளிவிடுவார். மகன் தன் நெஞ்சில் இடியை இறக்கப் போகிறான் என்று அறியாமலேயே, எப்போதும் அவனது புகழாரத்தைத் தான் பாடிக் கொண்டிருப்பார்.
மகன் வரும் வரை வளர்மதியின் பேச்சைத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், மகனைக் கண்டதும் அவரது கவனம் அவன் மீது திரும்பியது. இது வழக்கம் தான் என்பது போலச் சலிப்புடன் அக்காவைப் பார்த்தார் வளர்மதி.
“வளரு, நாளைக்குப் பேசுவோம்… என் புள்ள வந்துட்டான்.”
“அது வழக்கம் தானே!” – வளர்மதி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
“ஏம்மா… உனக்கு நல்லாப் பொழுது போகுமே!” என்றவனை பார்த்தவருக்கு, அவருக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. மாறனோ சலிப்புடன் உள்ளே சென்றான்.
காலையில் வைத்த சாம்பார் மீதம் இருக்க, இருவருக்கும் தோசை ஊற்றினான் மாறன். இரவு உணவை முடித்துவிட்டு, கோமதி சாப்பிட வேண்டிய மாத்திரைகளைக் கையில் கொடுக்க, அவரும் அதை வாங்கிப் போட்டுக் கொஞ்ச நேரத்திலேயே கண்ணயர்ந்தார்.
அவர் நன்றாக உறங்கிய பின் வெளியே வந்த மாறன், அந்தத் தெருவை நோட்டமிட்டான். அங்கிருக்கும் நாய்களுக்கு ரொட்டி வாங்கிப் போட, அவைகளும் சாப்பிட ஆரம்பித்தன. கைகள் ரொட்டியைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாலும், அவனது பார்வை என்னவோ தெருக்களில்தான் இருந்தது.
தோழியிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே வெளியே வந்த சம்ருதி, மாறனின் செய்கையைக் கவனித்தாள். அவனது பார்வை போகும் திசையை அவளும் கூர்ந்து நோக்கினாள்.
சிலர் வீட்டில் கேமரா இருப்பதையும், சிலர் வீட்டில் இல்லாமல் இருப்பதையும் அவன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு தெருவுக்குள்ளும் நுழைந்துவிட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து நாய்களுக்கு ரொட்டி போட்டான். அவனது செய்கைகள் யாவும் சந்தேகப்படும்படியாகவே இருந்தன!
‘என்ன பண்றான் இவன்? இவன் பார்வையும் பண்றதும் எதுவும் புரியலையே… ஒருவேளை திருடனா இருப்பானோ? என்னன்னு தெரியலையே…’ எனச் சந்தேகத்துடன் சம்ருதி வீட்டுக்குள் சென்றுவிட, அவனும் கொஞ்ச நேரத்தில் உள்ளே சென்றுவிட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

